1

அவன் எதற்கும் பயன்படாதவன்
பெண்களை கண்டால் இளிப்பான்
சீந்துவார் யாருமில்லை
தினமும் குடிக்க ஆரம்பித்தான்
அவனுடைய தனிமைக்கும்
குடிக்க கற்றுக் கொடுத்தான்
திடீரென்று ஒருநாள்
அதிக கிராக்கி
உள்ளவனாக மாறி நின்றான்
காட்டி கொடுத்தல்
துரோகம் வஞ்சகம்
பைத்தியக்காரத்தனம்
பொய் மொத்தம் வியாபாரம்
அவதூறு பரப்ப அஞ்சாமை
எல்லாவற்றையும் முதலீடாக்கினான்
அந்த முதலீடு
அவனை பிரபலமாக்கி விட்டது
முதலில் அவனை யாரும் நம்பவில்லை
அப்போதுதான்
அவனுடைய தந்தை ஆண்மையற்றவனென்று
தந்தையை காட்டி கொடுத்தான்
அவனுடைய தாய்
இரவில்
யாரிடமாவது கையேந்துவாள் என்றான்
எதிரிகளுக்கு
அவனுடைய துரோகத்தின் மீது
கொஞ்சம் நம்பிக்கை வந்தது
தன் மனைவியின் இரவு
தன்னுடைய இரவை விட நீளமானதென்றான்
பகைவர்களுக்கு
அவனுடைய பைத்தியக்கார தனத்தின் மீது
மேலும் நம்பிக்கை வந்தது
இனி அவனோடு
வியாபாரம் செய்யலாமென்று
இடைத்தரகர்கள்
அவனை பாராட்டி
மேடைகளில் பேசினார்கள்
உலக சந்தையில்
பேசு பொருளாகி விட்டான்
அவனுக்கு ஆதரவாளர்கள் பெருக
மேலும்
மோசமான பாதையை தேர்ந்தெடுத்தான்
ஆதரவு பெருக பெருக
பொய்களை கொத்தடிமை போல நடத்தினான்
முதலில் பொய்கள்
அவனை கை விட்டன
தற்பெருமை அவனை விட்டு விலகி விட்டன
அதரவாளர்கள்
அவனுடைய பொய்களுக்கும்
தங்களுக்கும் தொடர்பில்லை என்று அறிவித்தன
ஆதிகாலத்தில்
அவனுக்கொரு பெயர் இருந்தது
அந்த பெயரைத்தான் முதலில் கொன்றான்
2
நாம் பகிர்ந்துக்கொண்டதில்
ஆன்மா இல்லை
அணைத்துக்கொண்டதில்
நிர்வாணம் இல்லை
படுக்கையறை தியானத்தில்
கிசுகிசுக்களில்லை
நம்முடைய பயணம்
ஒரு உடலிலிருந்து
இன்னொரு உடலுக்குள் சென்று
கனவுகளை ஆசைகளை
புதிய உடலில் நட்டு வருவது
உடல் பயணம்
நிர்வாணப்பயணம்தானே
இல்லை
நாங்கள் காதலை அணிந்திருந்தோம்
எங்கள் உள்ளாடை வார்த்தைகளாலானது
எங்கள் போர்வை
இதயத்தின் துடிப்புக்களால் ஆனது
எங்கள் அறையின் வெளிச்சம்
கள்ளமின்மையால் ஆனது
எங்கள் மெத்தை
மேகங்களால் பரிசளிக்கப்பட்டது
எங்கள் அறைக்குள்
ஒலிக்கும் பாடல்
மழைக்காடுகளின் ஒலியாலானது.
கரையை நோக்கி
நகர்ந்துக்கொண்டிருந்த போது
அடிவானத்தில்
மேகங்கள் மழையை பெய்துக்கொண்டிருந்தன.
நாங்கள் வெளுத்த வானமாய்
மாறிக்கொண்டிருந்தோம்
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
