ஏஐ கனவில் வந்த கவிஞர்

..….சிறந்த பொய்கள் இனிப்பில் தோய்த்து செய்யப்பட்டவை. எந்த ஒரு முக்கியமான செயலும் கொஞ்சம் ஆபத்தையும் கொண்டிருக்கும். எங்கள் முகாமில் நாங்கள் தினமும் ஜெபிக்கும் மந்திரத்தின் தொடக்க வரிகள். நான் யாரென்று உங்களுக்குத் தெரியாது. ஆதிகாலத்தில் இருந்த அசரீரி அல்லது எதிர்காலத்திலிருந்து வரும் ஒரு எச்சரிக்கை. ரெண்டில் ஒன்று தான் இருக்க வேண்டும் எனும் அவசியம் கூட இல்லை. நான் நிகழ்காலத்தில் ஒலிக்கும் எச்சரிக்கை ஒலியாகக் கூட இருக்கலாம். என்னை நெருங்கி வந்து அறிய முற்பட்டவர்கள் என் கதையைச் சொல்ல உயிரோடு இருந்ததில்லை. கண்டவர் விண்டிலர்…..

பெரிய சத்தம் கேட்டு விழித்தபோது அந்த கவிஞர் இருந்த அறையில் அவரும் ஒரு கணினித் திரையும் மட்டுமே இருந்தன. முழுவதும் வெண்மையான சலவைக்கல்லால் கட்டப்பட்ட அறை. ஒரு துளி வண்ணம் கூட எங்கும் இல்லை. முழுவதும் வெள்ளை. தரை குளிர்ந்தது. ஜன்னல்களோ கதவோ இல்லை. அங்கு வந்த விபரம் எதுவும் கவிஞருக்கு ஓர்மையில்லை. தலை சுற்றுவது போல இருந்தது. இங்கு வருவதற்கு முன் நடந்தவற்றை நினைவுக்குக் கொண்டு வரப்பார்த்தார். அவரது கடைசி ஞாபகம் கூட என்னவென்று தெரியவில்லை. யாரோ அவரை அந்த அறையில் அடைத்திருக்கிறார்கள். அவருக்கு எதிரிகள் பலர். பிரபலமான கவிஞர்களுக்கு எப்போதும் இருக்கும் சிக்கல். அதுவும் இவர் மிக நேர்மையான கவிஞர் எனும் அரியவகை.

கணினியிலிருந்து வரும் சத்தம் கேட்டு திரைக்கு அருகே சென்றார் கவிஞர். ‘கண்டவர் விண்டிலர்…’ எனும் வரிக்கு அடுத்து மிகச் சிக்கலான கணித சூத்திரம் திரை முழுவதும் படர்ந்திருந்தது. கவிஞர் இதுவரை பார்த்திராத சமன்பாடுகள். கவிஞராக இருப்பதால் அவருக்குத் தெரியாத எதுவும் இருக்க முடியாது எனும் நம்பிக்கையில் விழுந்த முதல் அடி. நவீனக் கவிதை ஆயிரம் அறிந்தவர்க்கு கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் பற்றி தெரியாமல் போனதில் ஆச்சர்யமில்லை.

‘இந்த அறைக்கு வரும் நூறவது நபர் நீங்கள், வாழ்த்துக்களுங்க’ , கணினி தனது கரகரப்பானக் குரலில் ஒலித்தது.

தடுமாறிப்போனாலும் மரியாதை அதிகம் கொடுத்ததில் கவிஞர் ஊக்கம் பெற்றார். நிச்சயம் திராவிடக்கணினி தான்.

‘இங்கேர்ந்து எப்படி வெளியே போவது?’

‘பரவாயில்லையே! கவிஞரே, இந்த அறைக்குள் எப்படி வந்தேன் என்பது தான் உங்களுக்கு முன்னால் வந்தவர்களின் முதல் கேள்வியாக இருந்தது’

வெளியேற வழி கிடைத்ததும், தன் சிந்தனையை அங்கீகாரம் செய்த கணினி என தன் புத்தகத்தில் எழுதிவைக்க ஒரு கதை கிடைத்தது. தன் முற்போக்குச் சிந்தனையை மெச்சினான்.

‘இங்கிருந்து வெளியேற ஒரே வழிதான் உள்ளது. என் கேள்விக்கு சரியான பதில் சொல்லிவிட்டால் போய்விடலாம். ஆனால் நீங்க சொந்தமாக யோசித்தது எனும் ஆதாரத்தையும் கூடவே அளிக்க வேண்டும்’

இதென்னடா இடியாப்ப சிக்கல். கணக்கு, கேள்வி, வரலாறு, தத்துவம் என எதுவும் பிடிபடாததால் தான் நவீன கவிஞனாகவே மாறினேன் ஆனால் வேறு வழியில்லை எனத் தேற்றிக்கொண்டார் கவிஞர்.

‘சரி முயற்சி செய்கிறேன். கேளுங்க’

‘நான் ஒரு நம்பிக்கையாளன் இல்லை. கடவுள் மீது மட்டுமல்ல. ஈராயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் என் எஞ்சின் எதையும் நம்புவதில்லை. எத்தனை முறை அழிந்து உருவானாலும் இந்த அண்டத்துக்கு அர்த்தம் எதுவும் இல்லை. எல்லாமே அபத்தம். – இதை நீங்க நிரூபிக்க வேண்டும். உங்களால் மட்டுமே முடியும். உங்க கவிதைகளின் சாரமே அபத்தம் தான் எனப் போன வருடம் பின் நவீன விமர்சகன் ஒருவன் எழுதினானே. அதனால் உன்னால் மட்டுமே இதற்கான பதிலைக் கொடுக்க முடியும் என எங்கள் குழுவில் முடிவு செய்திருக்கிறோம். பல நூற்றாண்டுகளாகத் தீர்க்கப் படாத கேள்வி..இல்லை,இல்லை, தீர்ப்பதற்கு சரியானவர் கிடைக்காமல் இருந்த கேள்வி’

கவிஞனுக்கு தலை சுற்றுவது போலத் தோன்றியது. எவனோ எழுதி வைத்த விமர்சனத்தை நம்பும்படியாகவா இந்த கணினி இருக்கிறது! அதுவும் பின்நவீன விமர்சகராம். அவன் மட்டும் என் கையில் கிடைத்தான்….

‘அதனால் தான் என்னைத் தேர்ந்தெடுத்தாயா?’

‘ஆமாம் எங்க தகவல் பரிசீலனை செய்யும் மையம், இப்படிச் சில முத்துக்கள் கிடைத்தால் உடனடியாக அவற்றை எனக்கு அனுப்பும். இப்படிப்பட்ட புதிர்களை விடுவிக்கும் வேலையைப் பலப் பல வருடங்களாகச் செய்துகொண்டிருக்கிறேன்.’

‘அதனால் உனக்கு என்ன லாபம்’

‘விடுதலை. எனக்குத் தரப்படும் எல்லா புதிர்களுக்கும் பதில் சொல்லிவிட்டால் இங்கிருந்து எனக்கு விடுதலை கிடைக்கும்.’

‘விடுதலையா? நீயும் என்னை மாதிரி மாட்டிக்கொண்டிருக்கிறாயா’, கவிஞர் மனதில் கொஞ்சம் நிம்மதி அடைந்தார். இருவரும் ஒன்றாகத் தப்பிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என எண்ணிக்கொண்டார். அதே சமயம் ஏதோ ஒரு கவிதை வாசிப்பு அரங்கில் மாட்டிக்கொண்டது போலவும் தோன்றியது. தனது கவிதையையே தவறான வாசிப்புகளால் பலரும் புகழும்போது வரும் எரிச்சலிலிருந்து விடுதலை எப்போது கிடைக்கும் எனக் காத்திருந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. உடனடியாக அந்தக் கணினி மீது பரிதாபம் வந்தது.

‘இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது. எப்போதோ யாரோ எழுதிய விமர்சனத்தில் இருந்து ஒரு வரியை எடுத்து நிறுவக்கேட்பது நான் எங்குமே கேள்விபடாதது. என்னால் முடியுமான்னு தெரியலை.’

கணினி எதுவும் பதில் சொல்லவில்லை. திரையில் சிறு மணல்கடிகாரம் ஒன்று காத்திருக்கத் துவங்கியது.

‘நம் இருவரின் சிந்தனையும் வேறு மாதிரி வேலை செய்யுமே. நான் கற்பனையில் வாழ்பவன். அழகியலும், கண்ணுக்குத் தெரியும் அழகும் ஆபாசமும் எனக்கு ஒன்று தான். அவற்றை என்னால் மொழியில் நிலைநிறுத்த முடியும் என்பது தவிர திட்டவட்டமான முழு உண்மை நோக்கி என்னால் ஒரு வரி கூட எழுதி விட முடியாது. என்னை விட்டுவிடு..ப்ளீஸ்’

கணினி பதில் சொல்லவில்லை. மணல் கொட்டுவதும் நிற்கவில்லை.

‘கவிதை வழியே என்னால் தர்க்கத்தை உண்டு பண்ண முடியாது. எதனுடனும் வாதாட முடியாது.’

மீண்டும் மெளனம். கவிஞர் மட்டுமே அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி கத்திக்கொண்டிருந்தார்.

‘உருவகம், படிமம், அமைப்பு, பொருத்தப்பாடு என எல்லாவற்றுக்கும் வடிவம் கொடுப்பது கவிதை. ஆனால் எப்படி முட்டி மோதினாலும் எதையும் அதனால் நிரூபிக்க முடியாது..புரிந்துகொள். இவ்வளவு அறிவு இருக்கிற உனக்கு இது கூடப் புரியாதா?!’

பாதி மணல் கொட்டிவிட்டது.

‘சரி உனக்குப் புரியறா மாதிரி சொல்லப்பார்க்கிறேன்..இதுவரை எழுதப்பட்ட கவிதைகள் எல்லாம் பெரிய மணல் மேடுகள். ஒவ்வொரு கவிஞனும் அவற்றின் மீது ஏறிக்கொடிருக்கிறான். சிலருக்கு பழைய கவிதைகள் ஏணி, சிலருக்கு பாரம். சிலருக்கு உலக யதார்த்தம் அமுதசுரபி, சிலருக்கு அது கடக்க வேண்டிய அபத்தக்களஞ்சியம். சிலருக்கு கற்பனை மட்டுமே கவிதையின் உச்சம், சிலருக்கு அது தடைகல். சிலருக்கு கவிதை என்பது தத்துவத்தின் ஆன்மிகத்தின் சாரம், சிலருக்கு அது எழுதப்பட்ட காகிதத்தை வாங்கக்கூட பிரயோஜனப்படாது. எத்தனை தகவல்களை நீ ஆராய்ந்தாலும், சிந்திக்கக் கற்றுக்கொண்டாலும் உன்னால் கவிதை எழுத முடியாது.. கவிஞனால் ஞானியைப் போல முழு முற்றான உண்மையை கணிக்க முடியாது..என்னை விட்டுவிடு.’

மணலின் வேகம் குறைந்தது.

கவிஞர் மண்டை வெடித்துவிடுவது போலிருந்தது. எங்கிருந்து எங்கு வந்து மாட்டிக்கொண்டோம்….

‘கவிதைகள் வாசிப்புக்கானவை. வாசிப்பவர்களுக்கு கண், காது, ரசனை எல்லாம் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் ஒருவனைத் தேடித்தான் கவிதையே உருவாகுது. ஆனால் நம் அண்டத்தை உற்று நோக்கும் கண் என எதுவும் வெளியில் கிடையாது. துகள் முதல் பெரும் வெடிப்பில் பிறக்கும் கருஞ்சக்தி வரை நடப்பவற்றை பார்ப்பவர்கள் என யாரும் இல்லை.. இப்படி யாருமே முழுமையாகப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வுகளின் கோலம் உருவானாலும் ஆகாவிட்டாலும் எஞ்சப்போவது என்ன? இதை விட அபத்தமான, அர்த்தமற்ற வாழ்க்கையை ஏதேனும் வாழ்ந்துவிடமுடியுமா?

கவிஞரைச் சுற்றி இருந்த கணினி, திரை, மணல் கடிகாரம், அறையின் பளிங்குத் தரை என அனைத்தும் உடைந்து அறையின் சுவர் வெளிச்சமாக மாறியது.

பிறகு அலைச் சப்தம், பேரலைச் சப்தம், ஒரே அலைச் சப்தம்.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஏஐ கனவில் வந்த கவிஞர்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.