தொலைந்து போன பொருள்

வங்காள மூலம் : சீர்ஷேந்து முகோபாத்யாய்

தமிழாக்கம் : சீதாலட்சுமி விஷ்வநாத்

பொடி டப்பியை சுதன்யா எங்கு தான் வைத்தாரோ, எத்தனை தேடியும் கிடைக்க மாட்டேன் என்கிறது. மூக்கிலிருந்து தண்ணீர் தண்ணீராக வருகிறது, கொண கொண என்கிறது, ரொம்பவும் அவஸ்தையாக இருக்கிறது. வைத்திருக்கக் கூடிய இடங்கள், இருக்க வாய்ப்பில்லாத இடங்கள் எங்கும் தேடி விட்டார். ஓரிரண்டு தடவை முனகிக் கொண்டே அவர் மனைவி ஹேமந்த பாலாவையும் கேட்டுவிட்டார். பதில் கிடைக்கவில்லை. ஹேமந்த பாலா கோபமாய் இருக்கிறாள். சின்னப் பெண் பூஞ்சி பழைய புளியின் கடைசி உருண்டையையும் திருடிக் கொண்டு போய் விட்டால். பழைய புளி வைத்து ஒரு துவையல் பண்ணுவதற்காக ஹேமந்த பாலா புளி உருண்டை, கொத்தமல்லி, வெள்ளம், மிளகாய் எல்லாம் ஒழுங்காய் எடுத்து வைத்திருந்தாள். பழைய புளி வைத்துச் செய்யும் இந்தத் துவையல் அவளுக்கு மிகவும் பிடிக்கும். எல்லாம் அப்படியே விழுந்து கிடக்கிறது. – கொத்தமல்லி, மிளகாய், வெல்லம்,– புளி ஒன்று தான் இல்லை. கொஞ்ச நாழி முன்னால் ஃபராக்கின் மடிப்பு நிறைய முட்டைப்பொரி எடுத்துக் கொண்டு சமையற்கட்டிலிருந்து வெளியே வந்தாள் இந்த நாடோடிப் பெண். அவளுடைய வேலை தான். அப்பொழுதிலிருந்து ஹேமந்த பாலா யாருடைய கேள்விக்கும் ஒரு பதிலும் சொல்வதில்லை.

சுதன்யாவுக்கும் நிறைய கேள்வி கேக்கும் தைரியம் இல்லை. இளவயதில் இந்தப் பொடியினால் நிறைய அமைதியற்று  இருந்திருக்கிறார். 

முதலிரவன்று மனைவியுடன் முதன்முதல் சந்திப்பு ஏற்படும் முன்னர் சுதன்யா ஒரு சிட்டிகை பொடி உறிஞ்சி, தன நரம்புகளை சரியான நிலையில் வைக்க முயன்றிருக்கிறார். புது மனைவி ஹேமந்த பாலா முதன் முறையாக அருகில் வந்து மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டாள். ‘நீங்கள் பொடி போடுவீர்களா?’ வெட்கமடைந்த சுதன்யா சொன்னார். ‘நடுநடுவே கொஞ்சம் போடுவேன்.’ 

‘சீ சீ! வெட்கக் கேடு! சிகரெட் பிடிக்க முடியாது உங்களால?’

சுதன்யா அடித்தாற்போல் விழுந்துவிட்டார். புதுமனைவிக்குப் பொடி என்றால் வெறுப்பு.. ஆனால் அவரால் என்ன செய்ய முடியும்? பள்ளிக்கூடத்தில் சின்ன வகுப்பிலிருந்து உண்டான மயக்கம். விடவும் முடியாது. 

அப்படியும் புதுமனைவியின் வெறுப்பைப் பார்த்து, திருமனத்திற்குப் பின் கொஞ்ச நாட்கள் பொடியை விட்டு சிகரெட்டைப் பிடித்துக்கொண்டார். ஆனால் இதனால் கண்களில் நீர் வர, தொண்டை கரகரவென்றாகி விட்டது. போதை வருவதும் இல்லை. இதைத் தவிர பொடி இல்லாமையால் நாள் முழுவதும் மூக்கிலிருந்து தண்ணீரும் தும்மலும் வர, தலை சுற்ற ஆரம்பித்தது. ஒரு சிட்டிகை பொடிக்காக உயிர் அமைதியற்று இருந்தது. 

ஹேமந்த பாலா சொல்லிக்கொண்டிருந்தாள். பொடி போடும் ஆண்கள் மிகவும் கேவலமானவர்கள் என்று.

சுதன்யாவுக்கு கேவலமானவராக இருக்க விருப்பம் இல்லைதான். ஆனால் ஆண்தன்மையை வைத்து பொடியை மேற்கொண்டு ஜெயிக்கமுடியவில்லை. அவருடைய அவஸ்தையைப் பார்த்துக் கடைசியில் அவரது தாயார் இவரைக் கூப்பிட்டு, ‘மகனே! பொடி போடாமல் உன்னால் உயிர் வாழமுடியுமா? நாள் முழுதும் உன் கண்ணும் முகமும் எப்படி தண்ணீல முழுகினவன் மூஞ்சி போல இருக்கு! புதுமனைவி கோச்சுண்டா கோச்சுக்கட்டும்; பொண்ணுங்க எப்போதும் பெரிய கோபசாலைகளாகத் தான் இருப்பாங்க. அதையெல்லாம் மனசுல வெச்சுண்டு நடக்கக் கூடாது. தலைல ஏறி ஒக்காந்துருவாங்க. நீ ஆம்பிளை. ஆணைப்போல நட. பொடி போடு திரும்பவும். இல்லாட்டா ஒடம்பு கெட்டுடும். பழக்கத்த அவ்வளவு சீக்கிரமா விட்டுட முடியுமா?’

அம்மாவின் கட்டளையின் பேரில் சுதன்யா மறுபடியும் பொடி போட ஆரம்பித்தார். பொடியை ஆரம்பித்து மூச்சுமுட்டலிலிருந்து தப்பித்தார். உண்மைதான், ஆனால் ஹேமந்த பாலா ஒரு வாரம் முழுவதும் அவரிடம் பேசவில்லை. அதன்பின் மறுபடியும் பேச ஆரம்பித்தபொழுதும் பேச்சு எரிமலையின் முகத்திலிருந்து வழிந்து வரும். எரிமலைக் குழம்பு போல இருந்ததன்றி வேறொன்றும் இல்லை. அப்பொழுதும் சுதன்யாவால் எப்படி பொடியை விட முடியவில்லையோ அதுபோலவே ஹேமந்த பாலாவால் தன் கணவனை விடமுடியவில்லை. ஆனாலும் பொடி அவர்களது மணவாழ்க்கையில் ஒரு நிரந்தரமான அமைதியின்மைக்குக் காரணமாக அமைந்து விட்டது. இதன்பின் ஹேமந்த பாலா சுதன்யாவின் பொடிக் கைக்குட்டையையும் தோய்த்துக் கொடுத்தாள் தான். ஆனால் இந்த வயதான காலத்திலும் இவருக்குப் பொடியின் காரணமாகப் பல வார்த்தைகள் கேட்க வேண்டி வருகிறது. கோபம் வந்தால் இப்பொழுதும் சுதன்யாவின் பொடி டப்பியை வெளியில் எரிந்து விடுகிறாள். எத்தனை முறை புது டப்பா வாங்க வேண்டிவந்துள்ளது!

இன்று காலை கூட நிறைய தடவை பொடி போட்டார். இப்பொழுதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே போடுகிறார். இப்பொழுது வேலையிலிருந்து ஒய்வு பெற்று விட்டார். கையில் வேலை இல்லை. ஓய்வான நாட்கள். நேரமும் அதிகப்படியாகவே இருக்கிறது. இத்தனை நேரத்தை எப்படிக் கழிப்பது என்ற சிநதனையிலேயே சிட்டிகைக்கு மேல் சிட்டிகையாகப் பொடி போட்டார். அவர் நன்மையை விரும்புவோர் பலர் சொல்லக் கூடச் செய்தார்கள் – தலையில் பொடி சேர்ந்தால் என்னமோ மனிதன் செத்து விடுவானாம். 

சுதன்யா யோசித்தார் – அப்படித்தான் ஆகப் போகிறது. சிகரெட், புகையிலை இவற்றால் புற்றுநோய் வருகிறது. மதுவால் கல்லீரலில் கல்லீரல்நோய் வருகிறது. அபினி சாப்பிட்டாலும் ஏதாவது ஆகிறது. மயக்கம் வந்தாலே இவையெல்லாம் இருக்கவே செய்யும்………..

பொடி டப்பியைத் தேடிக்கண்டு பிடிக்க முடியாமல் பெருத்த அவஸ்தையாய் இருக்கிறது. படுக்கையில் மெத்தையைத் தூக்கிக் கீழே பார்த்தார்; கட்டிலின் கீழே பார்த்தார்; பரண், அலமாரி எல்லா இடத்திலும் தேடினார். ஓரிடத்திலும் இல்லை. வாழ்க்கை முழுதும் தனக்காக ஒரு வீடு மட்டுமே அவரால் கட்டி முடிக்க முடிந்தது. பேட்டை நகரம் என்பதனால் நிலத்திற்கு அதிக விலையாகவில்லை. சுண்ணாம்பு, செங்கல் பொடி, வீடு கட்டும் கல் இவற்றிற்கான செலவும் குறைவாகத் தான் ஆகியது. இரண்டே அறைகள் தான், நடுவில் ஒரு முற்றம்; அந்தப்புரத்தில் சமையலறை. குளியலறை எல்லாம். ஒன்றுமேயில்லை. அப்படியும் இத்தனை செய்வதற்கே ரொம்ப கஷ்டமாகிவிட்டது. சுவர் எழுப்பினால் சீலிங் எழும்பாது; சீலிங் எழும்பினால் சிமிட்டி மிச்சமாகி விடும்; அதுவும் முடிந்தால் வராந்தாவில் சிமிட்டி போடுவது பாக்கி நின்றது. அது ஒரு போராகவே இருந்தது. போர் முடிந்தபொழுது வயதும் முடியும் காலம் வந்து விட்டது. வீட்டை அனுபவிக்கும் நாட்கள் இன்னும் கொஞ்சம் தான். அப்படி இருந்தாலும் கொஞ்சம் திருப்தி; கடைசியில் முடிந்து விட்டதே என்று பூரா வாழ்க்கையிலும் ‘சொந்த வீடு’ என்று சொல்வதற்கேற்ப எதோ ஒன்று முடிந்ததே!

வேறு சிந்தனைகளுடன் டப்பாவைத் தேடிக்கொண்டே வாசல் நோக்கி இருக்கும் அறைக்கு வந்தார். ஜோடியாய் இருந்த படுக்கையில் பூஞ்சியும் அவளது அக்கா ஷேஃபாலியும் தூங்குவார்கள். இரண்டுமே பெண்கள் தான் சுதன்யாவிற்கு. வயதானபிறகு அடுத்தடுத்து இரண்டு பெண்கள் பிறந்தன. கல்யாணம் பண்ணிக் கொடுக்க நேரம் இருக்குமோ என்னவோ? பெரிய பெண் ஷேஃபாலிக்கு இருபது வயது நடக்கிறது. பூஞ்சிக்கு பன்னிரண்டு.  ஷேஃபாலிக்காக எல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டும். கையில் ஒன்றுமில்லை என்பதால் உற்சாகமும் ஏற்படுவதில்லை. பெண்ணும் ரொம்ப அழகு என்று ஒன்றுமில்லை, மிகவும் செல்லமாக வளர்ந்திருக்கிறாள்.

இந்த அறையில் தான் மண்ணெண்ணெய் மரத்திலான படிக்கும் மேஜை இருந்தது. மலிவான, துணிகள் வைக்கும் ஸ்டாண்டும் புத்தக அலமாரியும் கூட. விருந்தினர்களுக்காக நாலைந்து இரும்பு நாற்காலிகளும். அவற்றின் மேல் ஷேஃபாலி மற்றும் ஹேமந்த பாலாவின் கைவேலைகள் எல்லாம் உறைகளாக வந்திருந்தன. சுவரில் ரவி தாகூர் மற்றும் கோபாலனின் ஃபோட்டோ. படிக்கும் மேஜையின் மேலே ஒரு மலிவான ட்ரான்சிஸ்டர் ரேடியோ; ஏற்றி அணைக்கக் கூடிய ஒரு அரிக்கேன் விளக்கு, அங்குமிங்கும் சிதறி நின்ற சில கடிதங்கள், புத்தகங்கள் எல்லாம் இருந்தன. எல்லாவற்றையுமே தடவித் தேடித் பார்த்துவிட்டார், சுதன்யா. ஆயினும், மறுபடியும் இன்னொரு தடவை தேடித் பார்த்தார். அரிக்கேனுக்குக் கீழே மூக்குப் பொடி டப்பா இருப்பது அசம்பாவிதம் தான். ஆனாலும் ஏன் சந்தேகத்தோடு இருக்க வேண்டும் என்று எண்ணி சுதன்யா அரிக்கேனுக்குக் கீழேயும் பார்த்தார்.

மூக்கு கணகண என்கிறது; தண்ணீர் வருகிறது. நீண்ட நாற்பது வருடங்களுக்கும் மேல் உள்ள பழக்கம். பொடி இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்தாற்போல் இருக்கிறது. 

சுவரின் ஆணியில் சிவப்பு அலங்காரப் பை ஒன்று தொங்குகிறது. ஷேஃபாலியினுடையது. இப்பொழுதெல்லாம் ஏழை வீட்டுப் பெண்களிடமும் இவை எல்லாம் இருக்கின்றன – வானிட்டி பாக், லிப்ஸ்டிக், கடிகாரம் போன்றவை அவரது பெண்களிடமும் இருக்கின்றன. தம் வாழ்நாள் பூராவும் நிலத் தீர்மானம் ஆபீசில் கிளார்க்காக இருந்தார். வயது காலத்தில் ஓய்வடைவதற்கு முன்னாள் கொஞ்ச நாட்களுக்காக பெரிய மனிதர் ஆக்கியிருந்தார்கள். ஆனால் பழைய ஆபீசிலேயே பெரிய மனிதராகி விட்ட காரணத்தினால் உடன் வேலை செய்த பழைய உத்தியோகஸ்தர்கள் அவருக்கு அப்படியொன்றும் பிரமாதமான மதிப்போ மரியாதையோ கொடுக்கவில்லை; கொடுக்க வேண்டும் என்பதை ஏற்கவும் இல்லை. ஆனாலும் பெரிய மனிதர் ஆகியிருந்தார். ஆனால் உடம்பிலிருந்து அந்த ஏழை மணம் மட்டும் ஒரு பொழுதும் போகவில்லை. மூக்குப் பொடி மணம் போல உடம்பிலேயே தங்கி விட்டது. அப்பொழுதும் மனைவிக்கோ பெண்களுக்கோ என்றும் அப்படியொன்றும் கஷ்டம் கொடுத்ததில்லை, அவர். முடிந்தவரை இல்லாமையைத் தவிர்த்து வந்திருந்தார். எத்தனை நாட்கள் அம்மா உயிரோடு இருந்தாரோ அத்தனை நாட்கள் அவரையும் சுகமாக வைத்திருந்தார். எப்படிப்பட்ட பிரச்னை வந்தாலும் அதைத் தன் மேலேயே ஏற்றிக்கொண்டு தாங்கிக் கொண்டார்.

கணக்கெடுப்பு மற்றும் தீர்வு ஆணையர் ஆபீசில் வேலை பார்ப்பவர்களுக்கு மேல்வருமானம் உண்டு. அது ஒன்றும் அப்படி அதிகமல்ல. சுதந்யாவிற்கும் இருந்தது. இந்த வீடு கட்டும் கொத்தன் வேலையில் எல்லாமே திரிதிரியாகி விட்டது. கையில் அப்படியொன்றும் இருக்கவில்லை.

வானிட்டி பைக்குள் டப்பா போக வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் அவர் ஷேஃபாலியினுடைய டம்பப்பையை ஆணியிலிருந்து எடுத்துக் கொணர்ந்தார். ஆனால் திறக்க முடியவில்லை அவரால். இந்த சமயத்தில் தான் ஷேஃபாலி அவளது தோழி வீட்டிற்கோ எங்கோ படிக்கப் போவாள். இந்தத் தடவை பார்ட் 2 பரீட்சை எழுதப் போகிறாள். அருகில் ஒருவரும் இல்லை. பையின் வாயைப் பூட்டிய இணைப்பை அவர் பல விதமாக நெடு நேரம் நகத்தால் தள்ளியும் அழுத்தியும், பல விதமாக முயற்சி செய்தும், திறக்க முடியவில்லை.

அதற்குப் பின் தடாரென்று இழுத்ததும் எளிதில் திறந்து கொண்டது. உள்ளே அதிகம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் சில்லறை, லிப்ஸ்டிக், ஒரு சின்ன வட்டக் கண்ணாடி, கல்லூரியின் சம்பளத்தின் ரசீதுப் புத்தகமும் பென்சில் மேலும் ஒரு ஜோடி பாதுகாப்புக் கண்ணாடிகள், டப்பா இல்லை. கல்லூரி ரசீதுப் புத்தகத்தினுள்ளிருந்து மடித்து வைக்கப்பட்ட ஒரு கடிதம் எட்டிப் பார்த்தது.

இப்பொழுதெல்லாம் நேரம் போவதே இல்லை. இதனால் தான் கடிதத்தைப் பார்த்து குஷியடைந்தார். பெண்ணுக்கு அப்படியென்றால் கடிதம் எல்லாம் வருகிறது. பார்ப்பதற்கு ஒன்றும் பெரிய அழகு இல்லை. அதனால் பெண்ணுக்கும் கடிதம் வருவது சுபசகுனம் தான். பையன் ஒரே ஜாதியைச் சேர்ந்தவனானால் உற்சாகத்துடன் உடனேயே திருமணம் பண்ணி வைத்து விடலாம்.

கடிதத்தைப் பிரித்து கண்ணாடியை நன்கு பொருத்திக்கொண்டு பார்த்தபொழுது ஏமாற்றமடைந்தார். காதல் கடிதம் இல்லை. 

அப்படியென்றாலும் இல்லை என்றும் சொல்ல முடியாது. அமல் என்ற பையன் ஒருவனின் கடிதம். அவன் பலாஷியை விட்டுக் கல்கத்தா போய் விட்டான். அங்கிருந்து மனத்தை – என்னவோ பண்ணும் ஒரு கடிதத்தில் – பலாஷியின் பற்பல மனிதர்களைப் பற்றி செய்தி அறிய விரும்பியிருந்தான். கேஷ்டநகர் கல்லூரியில் சேர்ந்து படித்தனர் போலும். சமகாலத்தவர்கள். கடிதத்தின் முடிவில் ‘காதலுடன்’ என்பதற்குப் பதிலாக ‘அன்பும் நல்வாழ்த்துக்களும்’  தெரிவித்திருந்தான். சுவாரசியமற்ற கடிதம். நிறைய எழுத்துப் பிழைகள் கூடக் கண்களில் பட்டன. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பையன் போலும். ‘பாடி’ (வீடு) என்ற எழுத்துக்களை ‘பாரி’ என்று எழுதி இருந்தான். 

இருந்த இடத்திலேயே கடிதத்தை வைத்தார். டப்பா இன்னும் கிடைக்கவில்லை. எங்கே தான் வைத்தாரோ அல்லது ஹேமந்த பாலா விட்டெறிந்தாளோ தெரியவேயில்லையே. மறுபடியும் புது டப்பாவும் மூக்குப் பொடியும் வாங்கவேண்டும் என்றால் மார்க்கெட் வரைக்கும் ஓட்டம் பிடிக்க வேண்டும். சுத்த பேஜார் பிடிச்ச வேலை. 

பலாஷியில் வீடு கட்டினது பெரிய தப்போ? இந்தப் பிரதேசம் உண்மையில் பலாஷி இல்லை; இதன் பெயர் மீராபஜார். உண்மைப் பலாஷி இன்னும் வெகு தூரத்தில் இருக்கிறது. அங்கே சர்க்கரை ஆலையொன்று ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது.

அக்கம்பக்கத்தில் கரும்புத் தோட்டம் இருப்பதால் சிராஜ்ஜித்தௌலா சண்டையிட்ட யுத்தகளம் இப்பொழுது காடுமேடாகிக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. அந்த மாம்பழத் தோட்டமும் இல்லை. இருந்தாலும் பலாஷி என்ற பெயர் மிகவும் சரித்திரப் புகழ் பெற்று விட்டது. ஸ்டேஷனுக்கு அருகே இந்த மீராபஜாரும் அந்தப் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. கல்கத்தாவிற்கு நான்கு மணி நேர வழி லாங்கோலா பாசஞ்சரில். கேஷ்டநகர் போகாமல் நல்ல பொருள் கிடைப்பது மிகவும் கஷ்டம். கல்லூரியும் கேஷ்டநகரில்தான். அங்குதான் சுதன்யா வேலையும் செய்தார். முப்பது ரூபாய் வாடகை வீட்டில் வசித்தார். அதன் பின்னர் நண்பர் சுதீர் பாண்டுஜ்ஜேயின் தூண்டுதலினால் மீரா பஜாரில் வீடு கட்ட நிலம் வாங்கினார். ஒரு மண்ணும் புரியவில்லை. எத்தனை ரூபாய் இந்த வீட்டில் முடங்கி நின்றது! சிலர் இன்னும் கொஞ்சம் அறைகள் கட்டி வாடகைக்கு விடும்படி அவருக்கு அறிவுரை வழங்கினர். அதைப் பண்ணாமல் நல்லதே செய்திருந்தார். ஏனென்றால் வாடகை எடுத்துக்கொள்ள மனிதர்கள் சேர்ந்திருக்க மாட்டார்கள். மீரா பஜாரில் இன்னும் யார் இருப்பதற்கென்று வரப் போகிறார்கள். அதனால்தான் இங்கு வீடு கட்டியதே தப்போ என்று யோசிக்கிறார். முப்பது ரூபாய் வாடகையில் வருடத்தில் முந்நூற்றி அறுபது ரூபாய் இழுத்துக் கொண்டு போனாலும் கையில் மிச்சம் மீதி ஏதாவது இருந்திருக்கும். 

ஷேஃபாலிக்குக் கல்யாணம் செய்து கொடுத்திருக்க முடியும். பூஞ்சிக்கும் ஒரு வழி பிறந்திருக்கும். 

பூஞ்சி எங்கோ விளையாடப் போயிருந்தாள். நாள் முழுவதும் ஊர் சுற்றி விட்டு, வியர்த்து விறுவிறுத்த உடம்புடன் மூச்சிரைக்க ஓடிக்கொண்டே வந்தாள். படுக்கையின் மெத்தையிலிருந்து ஒரு கிழிந்த பொம்மையை எடுத்துக் கொண்டு திரும்பிப் போய்க் கொண்டிருந்தாள். ஹேமந்த பாலா தயாராக இருந்தவள் எழுந்து வந்து கூப்பிட்டாள்: ‘பூஞ்சி!’

பூஞ்சி ஓடினாள். 

ஹேமந்த பாலாவின் கையில் ஒரு ரொட்டிக் குழவி. அதைக் கையில் பிடித்துக் கொண்டு அவளும் ஓடிக் கொண்டே வெளியே போனாள்.       – ‘பூஞ்சீ-இ!’

சுதன்யாவுக்குப் பொழுது போகவில்லை. 

அவரும் ஓட்டப் பந்தயம் பார்ப்பதற்காக வெளியே வந்தார். ரொம்பவும் அருமையான  ஓட்டம் தான். பூஞ்சி மான்போல் ஓடுவது சரிதான்; ஆனால் ஹேமந்த பாலாவினால் இந்த வயதிலும் இத்தனை வேகமாக ஓட முடியும் என்பது சுதன்யாவிற்குத் தெரிந்திருக்கவில்லை.

அருகிலேயே ஒரு திறந்த மைதானம், அதற்குப் பின் ரோடு. பூஞ்சி ரோட்டில் இறங்கிய பின்பும் சிறிது கூட மன்னிப்பு கிடைக்கவில்லை. ஹேமந்த பாலா புடவையைப் பிடித்துக் கொண்டு மிகவும் வேகமாக ஓடி பூஞ்சிக்கு நாலைந்து முழங்கை தூரத்தில் வந்து விட்டாள்.

பூஞ்சி ஒரு தடவை திரும்பிப் பார்த்த பொழுது ஏறக்குறைய பிடிபட்டு விட்ட நிலையில் இருப்பதை அறிந்து ஆச்சரியப்படாமல் என்ன செய்வாள்? ஒரேயடியாக ஒரு நூலிழையில் தப்பினாள். ‘அடியம்மா!’ என்று கத்திக்கொண்டே மறுபடியும் பிடிக்கும் தூரத்திற்கு வெளியே ஓடிப் போனாள்.

ஹேமந்த பாலா கடம்ப மரத்தின் கீழேயே நின்று மூச்சு வாங்கினாள். 

சுதன்யாவுக்குக் கஷ்டமாக இருந்தது. 

ஹேமந்த பாலா பரிதாபகரமான குரலில் கூச்சலிட்டாள். ‘ஏ பூஞ்சி!’

பூஞ்சி தள்ளி நின்று கொண்டு ‘ஹி ஹியென்று சிரித்தாள். 

ஹேமந்த பாலா ஏறக்குறைய அழும் குரலில் ‘பூஞ்சிமா! உன்னோட கடமை என்ன இதத்தான் சொல்லறதா? என்ன, உன் தர்மம் இது தானா?’

என்ன பரிதாபகமான வேண்டுதல்! கேட்கும்போது சுதன்யாவிற்கே கூட பாவமாக இருக்கிறது.

ஆனால் ஹேமந்த பாலாவிங் தொண்டையின் ஸ்வரம் திடீரென்று மாறி விட்டது. கையிலிருந்த குழவியைத் தூக்கி போலீஸ் போல ஆட்டிக் கொண்டே சுற்றுப் புறத்தையே கலக்கி விடும் முரட்டுக்குரலில் கத்த ஆரம்பித்தாள். ‘வரட்டும் இன்னக்கி. சாதத் தட்டுலே சாம்பலப் பரப்பி வைக்கிறேன். சாப்பிட மாட்டியாடி, பூஞ்சி, என்ன? சாப்பிட வருவியோன்னோ? அப்போ பாருடி!’

இதைச் சொல்லிக் கொண்டே ஹேமந்த் பாலா திரும்பி வந்து கொண்டிருந்தாள். இந்த சமயத்தில் நேருக்கு நேர் பார்ப்பது அவ்வளவு சரியல்ல. அனுபவபூர்வமாக சுதன்யாவுக்குத் தெரியும். பெண்களின் மேல் ஹேமந்த் பாலாவுக்குக் கோபம் வந்தால் அதே மாதிரி சுதன்யாவின் மேலும் காரணமில்லாமலேயே எரிச்சல் வருமென்று.

சுதன்யா வீட்டின் பின் பக்கத்தில் உடம்பை மூடிக்கொண்டு இருந்தார், சிறிது நேரத்திற்கு.

ஹேமந்த பாலா முற்றத்தைக் கடந்து சமையலறைக்குள் நுழைந்த பொது தான், சரியாக இந்த நேரத்தில், திருட்டுப்பூனை ஒன்று, இரண்டு மீன்களை வாயில் கௌவிக்கொண்டு சபா மரத்தின் கீழே வந்து அமர்வதைப் பார்த்தார், சுதன்யா. அவர் மிகவும் வேதனையடைந்தார். வாரத்தில் மூன்று முறைதான் மீன் சமையல். கால் கிலோ காயா மீன் வாங்க அவருக்கு இரண்டு ரூபாய் செலவாகியது.. அந்த இரண்டு ரூபாயும் இதோ இந்தப் பூனையின் வயிற்றுக்குள் போய் விட்டது. 

பூனையைத் துரத்திக்கொண்டு சுதன்யா போகவில்லை. பூனை வாய் வைத்து விட்ட மீனை ஹேமந்த பாலா இனி அவளது சமையற்கட்டில் எடுக்க மாட்டாள். மீனாவது சாப்பிடுகிறதே, சாப்பிடட்டும்.

ஹேமந்த பாலாவின் கூக்குரல் சிறிது நேரம் கழித்தே கேட்டது. கண் மூடித் திறப்பதற்குள்ளேயே இரண்டு மீன்கள் காணாமல் போய் விட்டன. பூஞ்சியுடைய அப்பாதான் கொஞ்சமாவது கண் வைத்திருக்கக் கூடாதா? வீடா என்ன இது! எங்கே போய்த் தொலைஞ்சான் இந்த ஆள், ஆ ?

மூக்குப் பொடி டப்பி இன்னும் கிடைக்கவில்லை. சுதன்யாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பூஞ்சி வீட்டுக்குத் திரும்பி வந்த பிறகு இன்று அம்மாவிடமிருந்து நன்றாக அடி வாங்கப் போகிறாள்.

பகலில் கல்கத்தா செல்லும் வண்டி ஸ்டேஷனில் வந்து நுழைந்தது. அருகிலிருந்த திறந்த வெளியைக் கடந்து வேட்டியணிந்த இரண்டு பேர் வண்டியைப் பிடிக்க முயன்று ஓடுகின்றனர். மிகவும் வேகமான ஓட்டம். கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார், சுதன்யா. ரயிலைப் பிடித்து விடுவார்களா என்ன? இல்லை, …… பிடுத்து விடுவார்கள். ஸ்டஷனுடைய வாசல் வரை ஏறக்குறைய அடைந்து விட்டார்கள். மணி அடிக்கிறது, ரயில் காவலர் விசில் கொடுக்கிறார். இஞ்சின் கூட சப்தம் போடுகிறது. எல்லாம் நியமப் படி தான் நடக்கிறது. பிள்ளைப் பிராயத்திலிருந்து அவரும் பார்த்துக் கொண்டு வருகிறார். சரியாக ஒரே மாதிரி தான் ரயில் போகிறது. அந்த இரண்டு ஆட்களில் ஒருவர் சிக்னலுக்கு அருகே தடுக்கி விழ இருந்தவர், சுதாரித்துக் கொண்டு எழுந்து போனார். நடப்பனவற்றை எல்லாம் சுதன்யா வாயைத் திறந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார். 

ஷேஃபாலியினுடைய குரல் கேட்டது. ‘அப்பா!’

சுதன்யா பதில் சொல்லவில்லை. எங்கேயோ பார்த்துக்கொண்டிருக்கிறார். இதோ, இல்லை. ஆ பிடித்து விட்டார், அந்த முதல் ஆள். ரயில் காவலருடைய ரூமிலேயே ஏறி விட்டார். எரிக் கையைத் தொங்க விட்டு அந்த இரண்டாம் ஆளையும் ஓடுகிற வண்டியில் தூக்கி இழுத்து விட்டார். 

‘பொழைச்சுட்டாங்க.’

‘அப்பா! வாயப் பொளந்துண்டு என்னப்பா பார்க்கறீங்க?’

‘உம்?

மனது சந்தோஷமாக இல்லை. பூஞ்சி ஏன் புளியைத் திருடிக்கொண்டு போனாள்? இன்று பகலில் சாப்பிட வீட்டுக்கு வந்தால், அம்மாவிடமிருந்து நன்றாக அடி வாங்கப் போகிறாள்.

கடைசிப். பெண் எத்தனை தான் துஷ்டையாக இருந்தாலும், அவளது அழுகையைக் கேட்டால் சுதன்யாவில் நெஞ்சில் என்னவோ செய்யும். அவள் பேரில் அவருக்கு அத்தனை பிரியம். 

‘என்ன பார்க்கறீங்கப்பா?’ ஷேஃபாலி மறுபடியும் கேட்டாள். 

‘ரெண்டு பேர் ஓடி வந்து ட்ரெயினைப் பிடித்தார்கள். அதைதான் பார்த்துண்டிருந்தேன். இப்போதெல்லாம் வேறென்ன இருக்கு எனக்கு, பார்க்க? கண் முன்னால என்ன வருதோ அதைத்தான் பார்க்கிறேன்.’

ஷேஃபாலி சாதாரணமாகவே ரொம்பவும் சாந்தமான பெண். ஆனால் பெரிய பிடிவாதக்காரி. கோபக்காரியும் கூட. அதைத் தவிர அப்பாவென்று தனியாகக் கவனிப்பதும் இல்லை. ரொம்பவும் செல்லம் கொடுத்தால் இதுதான் நேரிடும் போலும்! யார் செல்லம் கொடுக்கிராகளோ அவர்களைப் பற்றிய மதிப்பு இவர்களிடம் குறைந்து போய் விடுகிறது!

ஷேஃபாலிக்கு திருப்தி ஏற்படவில்லை. ‘அப்பா! கேளுங்களேன்! எங்க பயோ சைன்ஸ் டிபார்ட்மென்ட்லேருந்து ஸ்பெசிமன் கல்லெக்ட் பண்ண மகாராஷ்ட்ராவுக்கு அனுப்பறாங்க. ஏறக்குறைய இருபது பேர் கொண்ட டீம் போகப்போகிறது.’

‘ஓ!’

காலேஜிலிருந்து ஒரு கிராண்ட் தராங்க. போகவர செலவும் அவர்களுடையதுதான். இருப்பதற்கும் சாப்பாட்டிற்கும் தான் நாம செலவு செய்யணும். தலக்கி ஒரு நூற்றி அம்பது ரூபாய் வருகிறது.’

‘ஓ!’

‘என்னையும் செலெக்ட் செஞ்சிருக்காங்கப்பா!’

சுதன்யா பேசாமல் இருந்தார். 

‘அப்பா! ரூபாய் தருவீங்களாப்பா?’

‘ரூபாயா?’

‘மொத்தம் நூற்றைம்பது ரூபாய் தாம்பா!. சரி. அப்படி இல்லையென்றால் நீங்கள் இன்னும் கம்மியாகவே குடுங்க. நூறு ரூபாயிலேயே நான் பார்த்துக் கொள்கிறேன். ஒரு புது எடத்தச் சுற்றிப் பார்த்தது போலும் இருக்கும்.’

சுதன்யா பெருமூச்சு விட்டார். எப்படிக் கொடுப்பது? ஆனால் கொடுக்காமல் எங்கே போக முடியும்? இதுவரை கொடுத்துக் கொண்டு தான் வந்திருக்கிறார்.

பூஞ்சி இன்று நன்றாக அடிபடப் போகிறாள். பூனை இரண்டு மீன்களைக் கொண்டு போய் விட்டது; மொத்தம் ஐந்திலிருந்து இரண்டு. ஷேஃபாலி நூறு ரூபாய்க்காக இடித்துத் தள்ளுகிறாள். வீட்டில் எத்தனை ரூபாய் முடங்கி இருக்கிறது! பிள்ளையும் இல்லை அனுபவிப்பதற்கு! எத்தனை பெரிய ஓய்வு கிடைத்திருக்கிறது! 

மூக்குப் பொடி டப்பா எப்பொழுது எப்படி கையில் வந்தது என்று யாருக்குத் தெரியும்! ஜாலவித்தைக்காரனைப் போல சரியாக, எங்கும் ஒன்றுமில்லை; ஆனால் கையைத் திறந்து பார்த்தால், மூக்குப் பொடி டப்பா சிரிக்கிறது. 

மிகவும் மகிழ்ச்சியடைந்தார் சுதன்யா. கடவுள் எத்தனை அருள்மயமானவர்!  சுதன்யா இந்தப் பூமியை மறந்து மூக்குப் பொடி டப்பியின் வாய்க்குள் நுழைந்து விடுகிறார். மிகவும் பலமாக ஒரு சிட்டிகை எடுத்துக்கொள்ளப் போகிறார்.

தமிழில் இந்திய இலக்கியம்

வக்கீலின் கடிதம்  உங்கள் கதை [ என்னுடையதும் ]

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.