- உதயத்தில் ஓர் அஸ்தமனம்
- பிரம்மாஸ்திரம்
- ஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்
- விமான தளத்தை விற்ற சிறுவன்
- துக்கம்
- காளையும் காளை சார்ந்ததும்…..[அஸ்ஸாமிய சிறுகதை]
- என் தலைக்கான கொன்றை
- என் குழந்தைகளின் புகைப்படங்கள்
- வேட்டை நாய்
- வரிசையில் ஒரு சிநேகம்
- குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில்
- தீப்பெட்டி
- சௌவாலி
- டிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது
- வைரஸ்
- ஒரு பெண் பற்றிய சொற்சித்திரம்
- ஐந்து பெண்கள்
- நெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்
- மனிதர்கள் விளையாடுகிற விளையாட்டு
- காட்டு மல்லி
- குங்கும பரணி
- மர பொம்மைகள்
- வக்கீலின் கடிதம்
- தொலைந்து போன பொருள்
- உங்கள் கதை [ என்னுடையதும் ]
- கருப்பு எஜமானி
- ஹெட்மாஸ்டர்
- ஏழாவது மலர்
- விற்பனை
- இலக்கு – சேது
- பெருங்காய கச்சோடி
வங்காள மூலம் : சீர்ஷேந்து முகோபாத்யாய்
தமிழாக்கம் : சீதாலட்சுமி விஷ்வநாத்
‘ஒ மிச்ரி! உனக்கு ஒரு வக்கீல் கடிதாசு வந்திருக்கு பாரு.’ மிச்ரியின் அண்ணா நிதீஷ் கிளிக் கூட்டத்தை விரட்டிக் கொண்டே வயலில் இறங்கிச் சென்றான்.
கொசாபாவிளிருந்து இரண்டு படகுகள் நிறைய பல புது மனிதர்கள் இங்கு அகாலத்தில் வந்திருந்தனர். கவர்னரது ஆதிக்கத்தின் கீழ் வரும் பகுதிக்கு ஏதோ வேலை விஷயமாக எல்லாரும் போகிறார்கள். இந்த அகால வேளையில் அவர்களுக்கு கிசூரி செய்வதற்காக பெரிய கரிய அடுப்பை மூட்ட உட்கார்ந்திருந்தாள் மிச்ரி. நடுங்கிக் கொண்டே எழுந்தாள். அவளுக்கோ சலனப்படும் இளவயது. மனம் எப்பொழுதும் வேறொரு இடத்தில் சென்று விட, உடலால் மட்டும் அவள் இங்கிருந்தாள். இப்பொழுதெல்லாம் உடல் மிகவும் பாரமாகி விட்டதாக அவளுக்குத் தோன்றியது. சிறகில்லையே மனிதருக்கு என்று நினைத்துக் கொண்டாள்.
வக்கீலின் கடிதம் பற்றிக் கேட்டவுடன் உடனே அடுப்பை விட்டு விட்டு ஓடலாம் என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. அப்பா முற்றத்தின் நடுவில் பாயில் உட்கார்ந்து கொண்டு தம் கோழிக் கண்களை உருட்டிக் கொண்டே பார்க்கிறார். விழுந்து விழுந்து உபசரிக்க வேண்டிய பெரிய விருந்தினர்! யாராவது வந்து விட்டால் அவரது இடைவிடாத கூச்சலுக்கு அளவே இருப்பதில்லை. இதைத் தவிர தாத்தா, பாட்டி, அம்மா, சித்தப்பா, பெரியப்பாக்கள் எல்லோரும் சிதறி நாலாபக்கத்திலும். அவர்களுடைய கண்கள் உள்ளே வெளியே என்று எங்கும் பார்க்கக் கூடியன. இந்த சோம்பல் கூட்டத்தின் நடுவே, பிறர் சமைத்து சாப்பிடாத சில பிராம்மணர்களும் இருந்தனர். அவர்களுக்குச் சமையல் செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதுவும் ஒருவிதமான விடுதலை தான். அரிசி, பருப்பு எல்லாவற்றையும் அவர்களே குளத்தில் களைந்து கொள்கிறார்கள். பிணையில் வாளி கட்டி, இரண்டு வாளித் தண்ணீர் கொண்டு வந்து விட்டார்கள், அந்த மஞ்சள் காமாலைப் பேர்வழிகள். அடுப்பு கும்மென்று எரிய ஆரம்பித்ததும் மிச்ரி தள்ளிப் போய் மாமரத்தின் கீழ் நின்று கொண்டாள்.
நேற்றும் ஒரே புயலும் மழையுமாய் இருந்தது. இந்தத் தெற்குப் பக்கத்திலிருந்து திரள்திரளாய், குதிரைப் படையின் வீர்யத்துடன் புயல் மைதானத்தையே நடுக்கிக் கொண்டு வந்தது. மேகங்கள் ஓட முட்டையைப் போல் பெரிய மழைத் துளிகள் பெருத்த சத்தத்துடன் நாற்பக்கமும் பிளந்து நின்றன. இன்று காலை தான் பத்து கூடை ‘ஜாம்’ பழங்களை மிருதுவான தென்னை இலையில் சுற்றிக் கொண்டு வந்தனர். வீட்டில் கூரை வேயப் பட்டிருந்த வைக்கோல் எல்லாம் ஆங்காங்கே தாறுமாறாய் ஆகி இருந்தன. மண் சுவர் நீர் உறிஞ்சி உறிஞ்சி உறுதியற்று தொளதொள என்று ஆகி விட்டிருந்தது. இன்று இந்தக் கொளுத்தும் வெயிலில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உலர்ந்து கொண்டிருக்கின்றன. மாமரத்தின் கீழிருந்து நிதீஷ் அண்ணா கிளிக் கூட்டத்தை விரட்டிப் பறக்க விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். ‘கீச்கீச்’ என்று கத்திக் கொண்டே அந்தப் பச்சைக் கிளிகள் நதிக் கரையை நோக்கி பறந்து போய்க் கொண்டிருக்கின்றன. மனிதர்களுக்குச் சிறகில்லையே என்று மீண்டும் தோன்றியது.
வந்திருப்பவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களோ! நோயாளிகளைப் போல் பயந்த முகங்களுடன், வயிற்றில் பொத்தல் உள்ளவர்களைப் போன்ற உபவாசத் தோற்றத்துடன்! கொட்டு கொட்டென்று நாலாபக்கமும் ஆசையோடு பார்த்து விட்டுப் பின்பு வெட்கத்துடன் தாமாகவே கண்களைத் தாழ்த்திக் கொள்கின்றனர். அவர்களின் மத்தியிலிருந்து ஒரு அரைக் கிழவன் வந்து அடுப்பில் இரண்டு தடித்த விறகுகளை நுழைத்து விட, பூவாணத்தைப் போல வாரியடித்துக் கொண்டு விழுந்தன நெருப்பின் பொறிகள். பின் ஒரு விறகை வெளியே இழுத்து, பாதி எரிந்து போயிருந்த ஒரு பீடியைக் கொளுத்திக் கொண்டான் அவன். இந்த சூட்டிலும் உடம்பின் வியர்வை, அழுக்கு, எண்ணெய்ப் பிசுக்கு, எல்லாம் ஒன்று சேரக் கலந்து நின்ற அந்த பனியனை அவன் கழற்றவே இல்லை; மார்பின் விலா எலும்புகள் தெரிந்து விடும் என்ற வெட்கம் போலும். அவனைப் பார்த்து சிரிப்பு வந்தது மிச்ரிக்கு.
அந்த மனிதன் நாலாபக்கமும் நோக்கி விட்டு மிச்ரியைப் பார்த்து சில அடிகள் முட்டாள்தனமாக நடந்து சங்கோஜத்துடன் கேட்டான்: ‘காய்கறி ஏதாவது கிடைக்குமா?’
தோட்டம் முழுக்க காய்கறிகள். எப்படிக் கிடைக்காமல் இருக்கும்? மிசரி சொன்னாள், ‘இதோ வந்துடும். காய்கறி கொண்டார தோட்டத்துக்கு ஆளுங்க போயிருக்காங்க.’
‘கொஞ்சம் மஞ்சளும் மொளகா வத்தலும் கூட வேணுமே. அப்புறம் இருந்ததுன்னா கொஞ்சம் ஜீரகமும் வெந்தயமும் கூட… தாளிச்சுக் கொட்டறதுக்கு.’
இருந்ததுன்னாவாம்! இருந்து அப்புறம் என்ன ஆகுமாம்! கிசூரி பண்ண இதுவெல்லாம் வேணுமின்னு இந்த குடும்பத்தானுக்குத் தெரியாதா என்ன! அப்பாதான் மரத்தட்டில் எல்லாவற்றையும் தயாராக வைத்திருக்கிறாரே!
அந்த ஆளைப் பார்த்து மிச்ரி சொன்னாள். ‘எல்லாம் கொடுப்பாங்க. நீங்க மொதல்லே அரிசி பருப்பை களைஞ்சிட்டு வாங்க.’
அவன் ஒரு முறை வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்தான். மிகவும் சந்கோசமடைந்த குரலில் பேசினான். ‘ரொம்ப நேரம் ஆயிடுத்து.’
அந்தப் பேச்சினுள்ளே பசியின் மணம் மறைந்திருந்தது. நூறு தடவை முயன்றாலும் அவனால் பசித்தொல்லையை மறக்க முடியவில்லை. பனியன் போட்டிருந்தாலும் அவனது விலா எலும்புகளைப் பார்க்க முடிகிறது. யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்? எங்கு போகிறார்கள்? சின்னத் தங்கை சினி, மிச்ரிக்கு நேர் அடுத்தவளாக இல்லாமலிருந்தாலும் அக்கா தங்கைகளுக்குள்ளே மற்றவர்களைப் பரிகாசம் செய்வதில் அதிக ஒற்றுமை. ஃராக் அணிந்திருந்த சினி மூன்று தவளைக் குதி குதித்து மசாலா வைத்திருந்த மரத் தட்டை எடுத்துக்கொண்டு வந்து தடாலென்று அடுப்பின் பக்கத்தில் முற்றத்தில் வைத்து விட்டு, புதர் போன்ற தன முடிக்கற்றை நெற்றியிலிருந்து பின்னால் தள்ளிக்கொண்டே கத்த ஆரம்பித்தாள். ‘இதோ மசாலா கொடுத்திட்டுப் போறேன். எல்லாரும் பாருங்க. இல்லாட்டி சட்டி காஞ்சு போயிடும்.’
அந்த ஒல்லி ஆள் குடுகுடுவென்று முன்னால் வந்து மர்த்தட்டைக் குனிந்து பார்த்தான். ‘ஏயப்பா! இத்தன கரம் மசாலாவா? அப்பா, இதுன்னா க்ருஹஸ்தன் வீடுங்கறது!’
சினி அபிநயம் பிடிக்கிறார்போல இரண்டு அடி எடுத்து வைத்து விட்டு மிச்ரிக்கு அருகில் வந்து நாக்கை உருட்டிப் பேசினாள். ‘போக்கா! ஒனக்கு வக்கீல்கிட்டேருந்து கடிதாசு வந்திருக்கு. பெரிய வழக்குல மாட்டிண்டிருக்கே போ! கடிதாசை நனைச்சு, தூங்கரபோது பிழிஞ்சி தண்ணி குடி, தித்திப்பா இருக்கும்!’
பேசிக்கொண்டே கீழ்க்கிளையில் இருந்த ஒரு பழுத்த மாம்பழத்தை இரண்டு தடவை எம்பிக் குதித்து எகிறித் தள்ளினாள், சினி. கொம்பு வழியாக உறிஞ்சிக்கொண்டே மனம் போன போக்கில் நடந்து சென்றாள்.
வக்கீலின் கடிதம் என்றாலே எல்லாரும் பைத்தியமாகி விடுகிறார்கள். வழக்கென்றாலும் அப்படித்தான். இப்படிப்பட்ட வழக்கில் ஒருவரும் விழவில்லை போலும்.
மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து வெட்கப்பட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் மிசரி. அப்படியொன்றும் வெட்கப்படத்தக்க கேவல விஷயம் இல்லை. அப்பா வீட்டில் சிரித்து விளையாடிக் கொண்டே காலத்தைத் தள்ளிவிட முடியும். ஆனாலும் இந்தக் கடிதம் என்று வருகிறதோ அன்று எக்கச்சக்கமாக வேகம் வரும், கணவனின் கடிதம் கணவனேயாகி வந்ததைப் போல்.
மிச்ரியின் கணவன் வக்கீல்.
சின்னச் சித்தப்பா ஏறக்குறைய சமவயதுதான். ரித்தீஷ் அண்ணாவைக் காட்டிலும் ஆறு மாதம் சின்னவன். முன்னால் அவனைப் பெயர் சொல்லி ‘ஷாமா’ என்றே கூப்பிட்டு வந்தாள். ஆனால் அவனது கல்யாண தினத்திலிருந்து ‘சின்ன சித்தப்பா’ என்றே கூப்பிடுகிறாள்.
சின்ன சித்தப்பா மிச்ரியின் மூக்கு நுனிமுன்னால் இரண்டு தடவை கடிதக் கவரை ஆட்டி, பின் கைக்கெட்டாத உயரத்தில் பிடித்துக் கொண்டே கேட்டான். ‘தெனமும் எந்துணி தோய்க்க முணுமுணுப்பியே? இனிமே செய்வியா?’
வேறு சமயமாய் இருந்தால் மிச்ரி சொல்லியிருப்பாள். ‘செய்வேன் போ. உன்னிஷ்டம் போல் எது வேணாலும் செய்துக்கோ.’ இப்பொழுது அவ்வாறு ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்சம் சிரித்து விட்டுப் பின் சொன்னாள். ‘துணி தோய்க்க நா ஏன் முணுமுணுக்கணும்? ஒன் மூக்குப்பொடித் துண்டைத் தோய்க்கப் பிடிக்க மாட்டேங்குது, அதான்.’
‘ஒ பிடிக்கலையா? போ, அப்படீன்னா, கடிதாச ஒடச்சு எல்லாருக்கும் படிச்சுக் காமிக்கறேன், வா.’
‘சரி சரி, தோய்க்கறேன் தோய்க்கறேன்.’
‘இன்னம் என்னென்ன பண்ணுவே எல்லாத்தையும் இப்பவே சொல்லு. அண்ணி சமையலறையில சாகறா. நீ ஒண்ணும் பண்ணாம ஊர் முழுக்க சுத்தித் திரிஞ்சுண்டிருக்கே. இனிமே அப்டி பண்ணுவியா?’
‘மாட்டேன்.’
‘இனிமே நா கொறட்ட விட்டா, என்ன வந்து கிள்ளுவியா?’
‘சத்தியமா மாட்டேன்.’
‘மனசில இதெல்லாம் ஞாபகமிருக்கட்டும்.’ சித்தப்பா கடிதத்தை முகர்ந்து பார்த்து விட்டுச் சொன்னான். ‘ஏ பாரு. திரும்பவும் செண்டு தடவியிருக்கான்.’ சொல்லிக்கொண்டே கடிதத்தை அவளருகில் எறிந்தான். நிமிடத்தில் பறவை போல் பறந்து சென்று கடிதத்தை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக தோட்டத்திற்குள் போனாள்.
எத்தனை கஷ்டப்பட்டு இத்தனை தொலைவில் மனிதர்கள் வருகிறார்கள்; கடிதங்கள் வருகின்றன. ரயில் வண்டியில் ‘கேனிங்’ வரை வந்து, பின் மோட்டார்ப் படகில் கொசாபா, அதற்குப் பின் படகில் பிஜய்னகரின் படகுத்துறை. கடைசியில் நடந்து ஒற்றையடிப்பாதை வழியாக – ‘எம்மாந்தூரம் இருக்கு! எம்மாம் பெரிய தூரம்!’
கடிதக்கவரில் மேலே ஒரு ஓரத்தில் அழுத்தமாக கருப்பு ரப்பர் ஸ்டாம்பின் சின்னம். கருப்பு அழிந்து விட்டது. ஆனாலும் படிக்க முடிகிறது – ஃரம் வசந்த மித்தார், பி.ஏ. எல்.எல்.பி. அட்வகேட். அப்புறம் வங்காளத்தில், மிச்ரியின் பெயர், முகவரி எல்லாம் இன்னொரு ஓரத்தில். ரப்பர் ஸ்டாம்பின் இடத்தில் ஒரு சொட்டு ரோஜாப்பூ அத்தர் விட்டிருக்கிறார். நறுமணம் நெஞ்செங்கும் மலர மிகவும் சாவதானமாக, கவருக்கு வலிக்காமல் இருக்க வேண்டுமே என்று, ஜாக்கிரதையாக கவரைப் பிரித்தாள். இப்பொழுது தான் அவசரப்படக்கூடாது. மிகவும் சாவகாசமாக, மிருதுவான முறையில், அன்பான கண்களுடன் எல்லாம் செய்ய வேண்டும். அம்மா கூப்பிடுகிறாள். ‘ஏ மிச்ரி! காய் பறிக்க எத்தனை நேரம்? அந்த ஆளுங்கள கூப்பிட்டு சீக்கிரம் வரச் சொல்லு. பிபின் என்ன திரும்பவும் கஞ்சா குடிக்க ஒக்காந்துட்டானா பாரு!’
ரொம்பத் தொந்தரவுதான். அந்த மனிதர்களுக்கு நிச்சயமாக பசியெடுத்திருக்க வேண்டும். ஆகாயத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டு, முற்றத்தில் துரதிருஷ்டம் செய்தவரைப் போல் உட்கார்ந்திருக்கிறார்கள் எல்லாரும். அவர்களுக்குள் கொஞ்சம் மூத்தவர்கள் – தலைவராயிருப்பவர்கள் – தாத்தாவுடன் பாயில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமையற்காரன் பெரிய கொப்பரைச் சட்டியில் அரை லிட்டர் எண்ணெய் விட்டான்.
மிசரி வயலில் இறங்கி குயில் போன்ற குரலில் கூப்பிட்டாள். ‘பிபின் அண்ணா! வேலை ஆயிடுச்சா? சமையலுக்கு சட்டி வச்சாச்சு.’ அரஹர் மரத்தின் வரிசையில் ஒரு பக்கத்திலிருந்து பிபினின் குரல் வந்தது. ‘ஆம்பிள விஷம் குடிச்சா குறைச்சலாவா அடிக்கும். உம்னு சொல்றதுக்குள்ளே எல்லாம் ஆயிடுமான்ன? வரேன்னு சொல்லு, போ. இதோ ஆயிடுச்சி, வரேன்.’
மிச்ரி கடிதத்தைப் பிரித்தாள். நீல நிறத்தில் வரிக் காகிதம். காகிதத்தில் மேல் மறுபடியும் வசந்த மித்தாரும் அவன் வக்கீல் வேலையைப் பற்றிய விபரமும் அச்சில். தன சொந்தப் பெயரை அச்சில் பார்க்க அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.
சடாரென்று கடிதத்தைப் படிக்கக் கூடாது. கொஞ்சம் நில்லு. நாலு திசையிலும் பாரு. ஒரு கணம் வேற விதமாக யோசனை பண்ணு; அப்புறமா கொஞ்சம் கொஞ்சங் கொஞ்சமாப் படி. கிராமத்து மனுஷன் ஒருத்தன் மிகுந்த பிரயாசைப்பட்டு, கொஞ்சங் கொஞ்சமாக கடித்து பிஸ்கட் சாபிடறதைப்போல.
கடிதம் கையில், அதனால்தான் மிசரி கொஞ்சம் நிதானத்துடன் நின்று கொண்டிருந்தாள். பக்கத்திலிருந்த மைதானத்தில் ஒரு சின்ன குட்டையில் யாரோ ஒருவன் சேறு படிந்த கால்களைக் கழுவ இறங்கிக் கொண்டிருந்தான். தண்ணீரில் கால் வைத்த உடனேயே ஒரு நூறு அட்டைகள் நெளிந்துகொண்டே ஒரு நொடியில் வெளியே வந்தன. மைதானத்தில் உட்கார்ந்து கொண்டு கால்களிலிருந்து அவன் அட்டைகளைப் பிடுங்குவதை மிச்ரியால் பார்க்க முடிந்தது. வயலிலே மண்மேட்டுத் தட்டியின் மேல் எந்தத் தந்திரம் செய்தோ ஒரு பசு எப்படியோ ஏறி விட்டிருக்கிறது. இப்பொழுது தடாரென்று தோட்டத்திற்குள் இறங்கி வரும்.
இறங்கட்டுமே. எத்தனைதான் சாப்பிடும். தோட்டம் முழுவதும் காய்கறிதான். அபரிதமாக, முடிவில்லாததாய், இருபது ஏக்கர் நிலம். சாப்பிடட்டுமே.
வக்கீல் எழுதியிருந்தார். நெஞ்சிற்குள் நிலையாய் இருக்கும் ‘உயிர்ச்சிலையான என்…………..!’ அம்மாடி! இப்படிக் கடினமான வார்த்தைகளை எப்படித்தான் எழுத முடிகிறதோ இவரால்! எழுத மாட்டாரா பின்னே! எத்தனை படித்திருக்கிறார்!
மிச்ரியுடைய நெஞ்சிலிருந்து வேகமாக ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது. இவர்தான் எத்தனை படித்திருக்கிறார். ஆனால் வருமானத்திற்கு அதிர்ஷ்டமில்லையே! என்ன லக்ஷ்மி கடாக்ஷமில்லாத தலையெழுத்தோ அவர்களுடையது!
வக்கீல் எழுதியிருந்தார் – ‘தூங்கியும் விழித்திருக்கும்போழுதும் எப்படி உன்னைத் தேடுகிறேன்!’ கொஞ்சம் திடுக்கிட்டுப் போகிறாள், மிச்ரி. என்ன சொல்கிறார் அவர்? தூங்கியா? ‘தூங்கி’ என்றால் ஒன்றும் சரியாக வரவில்லையே. ஒருவேளை அவசரத்தில் ‘தூக்கத்தில்’ என்று எழுதுவதற்குப் பதிலாக ‘தூங்கி’ என்று எழுதிவிட்டார் போலும். போனால் போகட்டும். இப்படி எத்தனை தவறுகள் நடந்து விடுகின்றன, மனிதர்களிடத்தில்! இதையெல்லாம் சட்டை செய்யலாமா?
லேசான சூட்டில் எண்ணெயில் தாளித்துக் கொட்டினார்கள். பெருங்காயம் வதங்கும் மணம். சமையற்காரன் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான். ;இதோடு கொஞ்சம் நெய்யும் இருந்திச்சுன்னா, அப்புறம் பேசவே வேண்டாம்.’
பெரியப்பா சமாதானம் கூறும்வகையில் பேசினார். ‘ஆமாமாம். வேண்டாம் தான். ஏ மிச்ரி, கல்சட்டிலேந்து கொண்டு வா, பார்க்கலாம்.’
மிச்ரி எப்பவும் மிச்ரி. இதைத் தவிர எல்லார் வாயிலும் வேறு வார்த்தையே இல்லை. மிச்ரி நகரவில்லை. கடிதத்திலிருந்து கண்களை உயர்த்தி சோகமாக ஆகாயத்தைப் பார்த்தாள். மறுபடியும் இன்னொரு கிளிக் கூட்டம். நதியைக் கடந்து வருகிறது. வரட்டும்.
சின்ன சித்தப்பாவின் நண்பர், த்ரயம்பக் என்று ஒருவர். மிச்ரியின் கல்யாணத்திற்கு முன் இந்த வீட்டிற்கு அடிக்கடி வருவார். திருமணத்திற்குப் பின் வருதேயில்லை. ஏன் என்று சொல்லு பார்க்கலாம். மிசரி இருண்ட மனத்தோடு இருக்கிறாள். ஒருநாளும் த்ரயம்பக் அவளிடம் தன் மனத்தின் எண்ணங்களைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் அடிக்கடி அவளது பெயர் சொல்லி உரக்கக் கூப்பிடுவார். சிகரெட் பிடிப்பதற்காக பத்து தடவை நெருப்பு கேட்பார்.
ஏன் இவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன?
வக்கீல் எழுதியிருந்தார். ‘முப்பது ரூபாய்க்குள் கல்கத்தாவில் வீடு கிடைப்பதில்லை. நிறையத் தேடிவிட்டேன். நடுநடுவே பட்டிக்காட்டுக் கிராமத்துக்குப் போய் விடலாமா என்று தோன்றுகிறது. அங்கு ஒருவேளை எளிதில் ப்ராக்டீஸ் பண்ணவும் முடியலாம். வாடகையும் குறைச்சல் தான்.’
அப்படித்தான் போகவேண்டுமென்றால் போயேன். என்னால் இனிமேல் முடியாது. கல்யாணம் முடிந்து ஒரு வருடம் நான்கு மாதம் ஆகி விட்டது. சரியாக இன்னும் என்ன செய்ய முடியும். ஒ வக்கீல் பாபு! நீங்கள்தான் சொல்லுங்களேன். உங்களுக்குக் கல்நெஞ்சம். அதற்கும் மேலே, நீங்கள் ஆம்பிள. ஒரு குதி குதித்தால் உங்கள் நேரம் ஓடிவிடும். நானோ பெண். மிளகாய்ச் செடிக்குத் தண்ணீர் விட்டு எனக்கு நேரம் போகுமா என்ன? கண்ணின் உப்பு நீரில் சோளம் விதைக்கிறேன் தினமும். வக்கீல் பாபு, உங்கள் காலில் விழுந்து கெஞ்சுகிறேன்.’
உருளைக்கிழங்கு, பூசணிக்காய், வெண்டைக்காய், பொட்டல் எல்லாம் கலந்து இந்தக் கிசூரிச் சோற்றில் போட்டு விட்டு, அந்த ஒல்லி பிராம்மணர் மாமரத்தின் கீழ் ஓய்வேடுத்துகொண்டிருக்கிறார். கழுத்தில் குண்டான அழுக்குப் பூணூல் பனியனுக்கு வெளியே வந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. ரொம்பவும் ஒல்லி. அதனால் வியர்வையில் நனைந்து போய் விட்டாலும் பனியனைக் கழற்றாமலேயே இருக்கிறார். தன் எலும்புக் கூட்டு மார்பைப் பிறர் பார்த்து விடுவார் என்ற பயம் போலும். பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே சின்ன சித்தப்பாவிடம் சொன்னார். ‘பெண்டாட்டி பிள்ளைகளை ஸோநார்பூர் ஸ்டேஷனில் உட்காரவைத்துவிட்டு நாங்கள் வந்து விட்டோம். அவங்க எல்லாரும் கொஞ்ச நாளைக்கு பிச்சை கிச்சை ஏதாவது எடுத்துச் சாப்பிடுவார்கள். காட்டுக்கு அந்தப்புறம் நெலம் கெடச்ச உடனே வீடு கட்டி விட்டு, வயல்ல வேலை செய்யணமின்னு முடிவு செஞ்சிருக்கேன். சார், ஒரு இடத்துலேயும் இத்தனூண்டு எடம் கூடக் கெடக்கல. எங்களுக்கும் உசிரோட இருக்க வேண்டாமா!‘
சின்ன சித்தப்பா கேட்கிறார்.. ‘எத்தன தூரம் போகப் போறீங்க? அந்தப் பக்கத்திலயோ சுந்தர்பன்னோட காட்டிலாகா பகுதியும் உப்பு நிலமும் தான் இருக்கு. புலியோட பயமும் நிறையவே இருக்கு.’
அந்தாள் பீடியை உறிஞ்சி ஏமாற்றமடைந்த குரலில் சொன்னார். ‘இப்படி வந்துண்டே இத்தன தூரம் வந்தாச்சு. இன்னம் கொஞ்சம் போகத்தான் வேணும். புலிக்குப் பசி. எங்களுக்கும் பசி. ரெண்டு பேருக்குமே உசிரோட இருக்கணுமோல்லியோ?’
வக்கீல் பாபு இன்னும் என்ன எழுதி இருக்கிறார்? எழுதுகிறார். ‘என் தங்கமே! எங்க மூணு குடும்பத்திலும் ஒருத்தருமே இல்லை. இல்லாவிட்டால் உனக்கு அப்பா வீட்டில் இப்படி இருக்க வேண்டி வந்திருக்காது. என்ன ஆனாலும், இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பொறுமையாக இரு என்று தான் எழுதுகிறேன். எங்கேயாவது எப்பொழுதாவது ஏதாவது நடக்கத்தான் செய்யும். வக்கீல் தொழிலில் பெயரெடுத்து நிலைக்க கொஞ்சம் நேரமாகும்.’
எல்லாம் புரிகிறது., வக்கீல் பாபு, நன்றாகப் புரிகிறது. உங்களுக்குப் பெயரெடுத்து நிலைக்க எத்தனை நாட்கள் ஆகுமோ அத்தனை நாட்கள் நான் உயிரோடு இருப்பேனா? அப்படி நான் இறந்து போனால், உங்கள் பணக்கார வீட்டில் வேறு யாராவது பெண் பூதம் வந்து என் இடத்தில் கன்னாபினாவென்று சம்சாரம் பண்ண வருவாள். வளையல்கள் ஒலிக்க நல்ல காற்றை சுவாசிப்பாள். மீன் தலையைக் கடித்துக் கொள்வாள். வாய் முழுக்க வெற்றிலையைச் சுவைத்து வெள்ளித் தட்டில் எச்சில் துப்புவாள். அத்தனை நாள் நான் உயிரோடு இருப்பேனா வக்கீல் பாபு?
பிபின் வாழை இலையை நறுக்கி முற்றத்தில் வீசுகிறான். விருந்தினர்கள் கூட்டம் ஒரே கும்பலாகி விட்டது. தடாரென்ற சப்தத்துடன் இலையை இழுத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டார்கள். இலையின் இடது பக்கத்தில் ஐந்தாறு பச்சை மிளகாயையும் இலையின் ஓரத்தில் உப்பும் போடப்பட்டது. கிசூரியை இன்னும் அடுப்பில் இருந்து இறக்கவில்லை. பச்சை மிளகாயை உப்பில் தோய்த்துக் கடிக்கின்றனர்; காரம் தாங்காமல் ‘உஸ், உஸ், என்கின்றனர்.
வக்கீல் பாபு இன்னும் என்ன எழுதி இருக்கிறார்? நண்பரின் வீட்டில் இன்னும் எத்தனை நாட்கள் தான் இருக்க முடியும்? நன்றாக இருக்காது. கடனும் ஏகப்பட்டது ஏறிவிட்டது. வெட்கத்தில் தலை குனிந்துகொண்டே கேட்கிறேன் – கொஞ்சம் பணம் உன்னால் முடிந்தால் ………………..
சூடான கிசூரியை வாயில் போட்டுக்கொண்டு, ஒரு சின்னப் பையன், வாய் வெந்து போனதில் அலறுகிறான். வயதான கிழவர் ஒருத்தர் கூறுகிறார். ‘மெல்லப்பா! ஊதி ஊதி ஆற வைத்துச் சாப்பிடு, சரியா?’
‘ஊ .. ஏ அம்மா! இந்த ஹரிசரண் சமைத்திருக்கும் விதம் இருக்கிறதே…. கவர்னர் வீட்டில் சமையல் செய்தானாம், கவர்னர் வீட்டில்!…..’
மிச்ரி மாமரத்தின் கீழேயே நின்றுகொண்டிருக்கிறாள். காலை நீண்டு பகலாகி விட்டது. மரத்தின் கீழே இப்பொழுது நிழல் இல்லை. வெயிலின் உக்கிரம் தெரிகிறது.
கூட்டத்தின் தலைவன் மிச்ரியின் அப்பாவிடம் கேட்கிறான்: ‘அந்தப் புறம் போனா ஒரு நம்பிக்கையும் இல்லியா, பாபு? ஆஹா! இத்தன கஷ்டப்பட்டு இத்தன தூரம் வந்தாச்சு!…’
மிச்ரி வீட்டுக்குள் வருகிறாள். கண் எரிகிறது. மனத்தில் மிகுந்த துன்பம்.
பிற்பகலில் மிச்ரி அவளது வக்கீலுக்குக் கடிதம் எழுத உட்காருகிறாள். ‘நம்பிக்கையை இழக்கவேண்டாம்….. இந்தப் பரந்த பூமியில் நிறைய இடம் இருக்கிறது.’

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
