ஆறு தாரகைகள்

டக்கே நடக்கும் இசைவிழாக்களுக்குப் போயிருக்கிறாயா கிருஷ்ணா?

என்று ஆர்வமாய்க் கேட்டாள் ஜோத்ஸ்னா.

      ஸவாய் கந்தர்வா விழாவுக்கு மட்டும் மூன்று முறை போயிருக்கிறேன்.

      எப்படி உணர்ந்தாய்!

      அபூர்வமான அனுபவம் ஜோ. தனிக் கச்சேரி கேட்பதுபோலில்லை,       இசைவிழாவில் தொடர்ந்து வெவ்வேறு கச்சேரிகளைக் கேட்பது.

      அதைச் சொல்லு. எதிரெதிர்ச் சுவர்களில் மோதிமோதித் திரும்பும் பந்துபோல ஆகிவிடும் மனம்!

      ரொம்பச் சரி. நாலு நாளில் சுமார் முப்பது கச்சேரிகள் கேட்பது       சாதாரண    விஷயமா என்ன!

      ஆஹா!

      முதல்முறை போய்விட்டுத் திரும்பும்போது, ரயிலில் என்னால் உறங்கவே   முடியவில்லை. பின்னந்தலைக்குள் ஓயாமல் ஒரு தபலா       ஒலித்துக்கொண்டே இருந்தது…

      பார்த்தாயா. முதன்முதலாக டோவர்லேன் இசைவிழாவுக்குப் போய்விட்டுத்      திரும்பும்போது அப்படித்தான் நானும் உணர்ந்தேன்…

வலது கையை உயர்த்தி ஹை-ஃபைவ் கொடுத்தாள்!

      …இத்தனைக்கும் ஒரேயொரு ஆள் வாசித்த பக்வாஜ் ஒலிதான் என்       மண்டைக்குள் சுற்றிச் சுற்றி வந்தது.

      அந்த விழா எந்த ஊரில்  நடப்பது?

      கொல்கொத்தா. பத்திரிகைப் பணியை முன்னிட்டுப் போயிருந்தேன்.      நான் நேற்றுக் குறிப்பிட்ட ஜயலட்சுமி அங்கேதான் ஸிட்டி பாங்க்       அதிகாரியாய் இருந்தாள். ‘பிரமாதமான ஸாரங்கிக் கச்சேரி இருக்கிறது ஜோ. உனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன் வா.’ என்று கூட்டிப்     போனாள்.

      ஓ.

      கச்சேரி முடிந்ததும் மிஸ்.ரிஹானாவைச் சந்திக்க வாய்த்தது.  உண்மையில்      நான் சந்திக்க விரும்பியது வேறு நபரை.

      யாரையோ!

பக்வாஜ் கலைஞன்  வீர்சிங் நாம்தாரியை… அந்தப் பெயரும், அதன் வாசிப்பும் எனக்குப் புதியவை அல்ல. புதிதாகப் பட்டது வேறு ஒரு விஷயம். சாதாரணமாக, ஸாரங்கிக்குப்       பக்கவாத்தியமாக தபலா இருந்துதான் கேட்டிருக்கிறேனா,       மிஸ்.ரிஹானாவுக்கு வலதுபுறத்தில் பக்வாஜுடன் அவன் இருந்ததே முதல்       ஆச்சரியத்தைக் கிளப்பியது. மேடையில் அவன் வந்து அமர்ந்த மாத்திரத்தில்,      ஒட்டுமொத்த அவையும் ‘பீரு, பீரூ…’ என்று கூவியது    இப்போதுபோல என் காதில் ஒலிக்கிறது. அவனும் அவ்வளவு உற்சாகத்துக்கு ஊற்றாகத் திகழும் அருகதை உள்ளவன்தான். அபாரமான மேடைப்   பிரசன்னம் உள்ளவன். பீமசேனன் போன்ற ஆகிருதி. விறைப்பான முதுகு. வழக்கமான சீக்கியத் தலைப்பாகைபோல இல்லாமல், வட்டமான உருமால். கருகருவென்ற தாடிமீசைக்குள் ஒளிந்திருந்து எட்டிப் பார்க்கும் ஓயாத புன்னகை. சிரிக்கும் கண்கள்…

      அடேயப்பா!

உள்ளூரக் கொஞ்சம் பொறாமையாய்க்கூட இருந்தது எனக்கு – நான் பார்த்தறியாத அந்த சர்தார்ஜி மீது! என் குரலில் இருந்த கேலியைக் கவனித்துவிட்டாள் ஜோத்ஸ்னா!

      வெறும் க்ரஷ் என்று நினைத்துவிடாதே கிருஷ்ணா. படு நிதானமாக,           யானையின் சாவகாச நடைபோலத் தொடங்கிய வாசிப்பு, துள்ளிப் பாயும்      மான் போலவும், அதைத் துரத்தும் வேட்டைநாய் போலவும் வேகமெடுத்து      நாலுகால்ப் பாய்ச்சலில்   முன்னேறியபோது,[1] யாருக்கு யார் பக்கவாத்தியம்      வாசிக்கிறார்கள் என்ற குழப்பம் மையத்தில் அமர்ந்து அபாரமாக  ஸாரங்கி வாசித்த மிஸ்.ரிஹானாவுக்கே ஏற்பட்டிருக்கும். அமர்த்தலான   தலையசைப்பும், வசீகரமான       சிரிப்புமாக அவனைத் தாண்டித்தாண்டி மேலேறினார். தனித்தனிப் பாதைகளில் ஓடிய பந்தயக் குதிரைகள் இரண்டும்   ஒரே சமயத்தில் வெற்றிக்கோட்டைத் தொட்டபோது, சபைக்குப் பைத்தியமே       பிடித்துவிட்டது. கரகோஷம் எவ்வளவு நிமிடங்கள் நீடித்தது என்கிறாய்!       ஐயோ, வாழ்நாளுக்கான அனுபவம் அது…

நீளமாக மூச்சிழுத்தாள் ஜோத்ஸ்னா.

…அப்புறம், மிஸ்.ரிஹானாவின் வாசிப்பைப் பற்றியும் சொல்லவேண்டும். பொதுவாகவே, ஆழமும் துயரமும் பிறப்பிலேயே கொண்ட வாத்தியமல்லவா     ஸாரங்கி. சரியான கலைஞர் வாசிக்கும்போது ஒலியும், ஒரு மாத்திரைகூட இடைவெளியின்றி அதைத் தொடரும் எதிரொலியும்  கேட்கும் நமக்கு. மிஸ் ரிஹானா வாசித்தபோது, ஒலியைவிட எதிரொலியின் கார்வையும் உணர்ச்சியும் கூடுதலாகக் கேட்ட மாதிரி உணர்ந்தேன். அன்றைய பிரதான ராகமாக அவர் தோடி வாசித்ததுகூடக் காரணமாய்     இருக்கலாம். புலப்படாத   ஏதோவொரு வியக்தியின் முன்னால் நின்று, முன்னங்கைகளை ஏந்தலாக நீட்டி இறைஞ்சும் பெண்ணுருவத்தின் சித்திரம் எனக்குள் இருந்துகொண்டே   இருந்தது கிருஷ்ணா. வீடு திரும்பும் வழியில் நானும் ஜயலட்சுமியும் ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை. கொல்கொத்தாவின் நெரிசல்மிக்க வீதிகளில் கார் மிதந்து நகரும்போது, அவரவர் ஜன்னல் வழி வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தோம். துயரத்தின் நிழல் படியாத ஒரேயொரு முகத்தைக்கூடப் பார்க்க வாய்க்கவில்லை எனக்கு. உபரியாக, அருகில் அமர்ந்து ஓயாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த தோழி. வீடு திரும்பி மிக நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிய பிறகுதான் சகஜநிலைக்குத்  திரும்பினாள், பாவம். சாப்பிட்டுவிட்டு என் படுக்கைக்குப் போய்ச் சேர்ந்து தலையணையில் தலை சாய்க்கிறேன் – மின் அதிர்ச்சிபோலத் தாக்கியது அந்தச் சித்திரம். இந்த முறை, இறைஞ்சும் பெண்ணின் முகம் துல்லியமாகத் தெரிந்தது கிருஷ்ணா – அது நானேதான்…. 

குரல் வெகுவாகத் தழுதழுத்திருந்தது. பல நிமிடங்கள் மௌனத்துக்குள் அமிழ்ந்திருந்தாள். தொட்டால் நீராகக் கரைந்து ஓடிவிடுவாள் என்று தோன்றியது. அத்தனை நாட்கள் உடன் இருந்ததில், ஜோத்ஸ்னா உணர்ச்சிமயமாக இருந்த ஒரே தருணம் அது…  அறைக்குத் திரும்பும்வரை மேற்கொண்டு எதுவுமே பேசாமல் வந்தாள்.

      காற்றுப்போல வருடிச் சென்ற மௌனத்தின் ஒவ்வொரு கணுவையும் ருசித்தபடி திரும்பி வந்தேன்.

இடையில், அந்த ஒற்றைக் குரங்கை எப்போது  மறந்தேன் என்று தெரியவில்லை  – நடை முடிந்து திரும்பி வரும்போது அது இருந்த இடத்தில் இல்லை. மொத்தக் கூட்டமுமே காணாமல் போயிருந்தது.  

      றைக்குத் திரும்பி, சாயங்கால நியமங்களை முடித்தபிறகு, எங்கள் வழக்கமான இடத்தில் சென்று அமர்ந்தோம். விட்ட இடத்திலிருந்து மிகக் கவனமாகத் தொடர்ந்தாள் ஜோத்ஸ்னா. அதுதான் ஜோத்ஸ்னா! சாயங்காலம் இருந்த உணர்ச்சிப் பரபரப்பும் இப்போது இல்லை. முகத்திலும் மொழியிலும் ஓரளவு சமநிலை திரும்பியிருந்தது…

நேற்று சஞ்சுக்தாவைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ரிஹானாவின் நினைவு குறுக்கே ஓடிக் கலைந்தது.  உன்னைக் குழப்பிவிடக் கூடாது என்று அந்தப் பக்கம் பாயாமல் தவிர்த்தேன். ஆனால், இரவு முழுவதும் அவர் நினைப்பு ஓடிக்கொண்டேயிருந்தது. அவரைவிட, ரிஹானாவின் தாத்தாவின் நினைவும், அவர் சொன்ன ஒரு வாக்கியமும் என்னைப் பீடித்திருந்தன. மிஸ் ரிஹானா வயலினைப் பற்றிக் கேட்டதும் அவர் சொன்னாராம்… இரு, அதை இப்போது சொல்ல வேண்டாம். உரிய தருணத்தில் சொன்னால்தான் கோவையாய் இருக்கும்!

என்று தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள். பிறகு,

ஆனால், அஞ்சனாவின் நினைவு எழும்போதே நான் பார்த்தறியாத அந்தக் கிழவரின் நினைவும் வந்துவிட்டது. பேத்தி அவருடைய தோற்றத்தைப் பற்றி வர்ணித்த சித்திரமும், எனக்குக் குறுந்தகடு பரிசளித்த பாகிஸ்தானியரின் தோற்றமும் முழுக்கமுழுக்க ஒன்றேதான். பார்த்தாயா, ஞாபகத்தின் கண்ணிகள் கோத்துக்கொள்ளும் மாயத்தை ஒருபோதும் புதிரவிழ்க்க முடியாது கிருஷ்ணா!

என்று முடித்தபோது, முழுக்கவே இயல்பாகிவிட்டிருந்தாள்.[2]

      ச்சேரி முடிந்தவுடனே, ஜயலட்சுமியை இழுத்துக்கொண்டு க்ரீன்ரூமைப் பார்த்து ஓடினேன். அதுதான் சொன்னேனே,  என்னுடைய நோக்கம், மிஸ் ரிஹானாவைப் பார்த்து ஓரிரு வார்த்தை பேசுவது அல்ல! தாளவாத்தியத்தையே முதன்மை வாத்தியம்போல  வாசித்து சொக்கவைத்தவனின்  விரல்களைப் பற்றிக் குலுக்க வேண்டும். அந்தப் புறாமுட்டைக் கண்களை நேருக்குநேர் பார்த்தபடி சில விநாடிகளாவது நிற்க வேண்டும். நந்திதேவரின் சீக்கிய அவதாரத்துடன் சில வார்த்தைகளாவது பேச வேண்டும்… அட, வாய்ப்புக் கிடைத்தால், ஒருமுறை தழுவிக்கூட விலகலாம். பொது இடம்தானே!

      ஆனால், கனவில் மினுங்கும் ரசகுல்லாவும், நாவில் சுவைக்கும் ரசகுல்லாவும் வெவ்வேறு அல்லவா! ஆமாம், புன்னகை பூத்த முகத்துடன் மேடையில் இருந்த  கலைஞன் இல்லை, திரையின் பின்புறம் பார்க்கக் கிடைத்தவன்.

      சிடுசிடுவென்று இருந்தான். ஒப்பனையறையின் பகுதியாக இருந்த குளியலறை நோக்கி  மாற்று உடைகளையும், தலைப்பாகையையும் எடுத்துக்கொண்டு போன உதவியாளனை முந்திக்கொண்டு வேகமாகப் பாய்ந்தான். தாளவகைககளையும் ராகங்களையும் அவன் சொன்னபடியெல்லாம் கேட்கும் பக்வாஜையும் சபை நிரம்பிய அடையாளமற்ற முகங்களையும் தவிர அவனுடைய உலகத்தில் வேறு எதுவுமே கிடையாதோ என்னவோ. விரல்களில் பெருக்கெடுக்கும் வித்தையின் சுனையேகூட  அவன் நிரந்தரமாகப் பேணிவரும் தனிமைதானோ என்னவோ…

      இதையெல்லாம் நானாகக் கண்டுபிடிக்கவில்லை. மறுநாள் சாவதானமாக சந்தித்தபோது மிஸ்.ரிஹானா சொன்னார். பல மேடைகளில் அவனுடன் வாசித்திருக்கிறாராம்; நிகழ்ச்சிக்கு முன்பும் சரி, பின்பும் சரி, வந்தனத்தையும் வணக்கத்தையும் தவிர, ஒருவார்த்தை இவரிடம் பேசியது கிடையாது.  பெண்களுடன் பேசுவதற்குக் கூச்சப்படுகிறவன் போல என்று இவராக சமாதானம் செய்துகொண்டாராம். புல்லாங்குழல் வித்தகரும், மிஸ்.ரிஹானாவின் நெருங்கிய நண்பருமான மனு சாவந்த்திடம் விளையாட்டாக இதைப் பகிர்ந்துகொண்டபோது, அவர் விளக்கியிருக்கிறார்: 

என்னுடைய அனுபவமும் அதுவேதான் அம்மா. மேடையில் பரிமாறிக்கொண்ட சில புன்னகைகள்   தவிர்த்து ஏதும் பேசியதில்லை! ஆனால், வாசிக்கும்போது நமது முதுகுபோல ஒட்டியிருப்பான்!!

உபரியாக ஒரு வாக்கியமும் கூறினாராம்:

      தனது மொழி பக்வாஜ் மட்டுமே என்று நம்புகிறான் போல. மத்திய வயதை     எட்டியும், மணமாகாதவனாக இருப்பதுகூட அவனுடைய மனோபாவத்துக்குப்       பொருத்தமாகத்தானே இருக்கிறது!    

ஆனால், நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்ய வருகிறவர்கள், வீர்சிங் நாம்தாரி பக்கவாத்தியம் வாசிக்கவிருக்கிறான் என்று சொன்னால் தமக்குள் அபூர்வமான சந்தோஷம் பெருகிவிடும் என்றார் மிஸ்.ரிஹானா!

அவன் விடுக்கும் சவால்களை எதிர்கொண்டு, தாண்டிப் பாய்வதில் கிடைக்கும் கிளர்ச்சி அலாதியானது! இத்தனைக்கும் ஒருமுறைகூட இருவரும் ஒத்திகைக்கென்று அமர்ந்ததில்லை!

சொன்னபோது, அவருடைய முகம் வெகுவாகச் சிவந்து, இன்னும் மெருகேறிப் பொலிந்தது…

      ங்களுக்கு உடனடியாய்த் திரும்பிவிட மனமில்லை. சூழ்ந்து நின்ற ரசிகர்களுடன் முகம் மலர்ந்து பேசிக்கொண்டிருந்த மிஸ் ரிஹானாவிடம் நாலைந்து வார்த்தைகள் பகிரத் தோன்றியது. என்னுடைய முறை வந்தபோது, அல்லது என்மீது அவர் பார்வை பதிந்தபோது, என்னையறியாமலே அந்தக் கேள்வி வந்து விழுந்தது:

      உங்களைச் சந்தித்து உரையாட முடியுமா மேடம்!

      நீங்கள்?!

சொன்னேன். முகத்தில் வெளிப்படையான தயக்கம் படிந்தது.  பத்திரிகையாளர் என்பதால் யோசிக்கிறாரோ என்று தோன்றியது.

      எதற்கம்மா, இந்த உலகத்துக்கு நான் தெரிவிக்க விரும்பும் சகலத்தையும் என் ஸாரங்கி வழியாகக் கூறிக்கொண்டுதானே இருக்கிறேன்!

      தொழில்முறைப் பேட்டிக்காக அல்ல, நட்பார்ந்த உரையாடலின் பொருட்டே கேட்கிறேன்; இதற்குத் தூண்டியதே இன்றைய உங்கள்  வாசிப்புதான் மேம்! என்று விநயமாகச் சொன்னேன். உண்மையும் அதுதானே. அவர் முகத்தில் சிறு இளக்கம் தென்பட்டது.

      அப்படியா! ஓட்டல் அறையில் சந்திக்கலாம்; காலை எட்டரை மணி       சுமாருக்கே வந்துவிட்டால் சௌகரியமாய் இருக்கும்.

 என்றார். மறுநாள் முன்னிரவில் தமக்கு விமானம் என்றார்.

      ஜயலட்சுமிக்கு அலுவலகம் போயே ஆகவேண்டிய நிர்ப்பந்தம். நான் மட்டும் சென்றேன்.

      திட்டமிடாமல், அந்த நேரத்து உந்துதலால் ஏற்பாடான சந்திப்பு; ஒருமுறை மட்டுமே சந்திக்கக் கிடைத்தது. மிஸ் ரிஹானாவுமே மிகமிகக் குறைவாக, தீர்க்கமாக யோசித்து, நிதானமாகப்  பேசியவர்.[3] தாம் உதிர்க்கும் வாக்கியங்களும் கருத்துகளும், இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் பொதுப் பார்வைக்குப் போகத்தான் செய்யும் என்ற கவனமும் அவருக்கு இருந்ததோ என்று பட்டது எனக்கு.

      பொதுவெளியில் பேசுவது குறித்து மிகுந்த கவனம் உள்ள பிரபலங்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். தமது மனத்தின் வெளித்தாழ்வாரம் வரை மட்டுமே நம்மை அனுமதிப்பார்கள். அவர்களுக்கு விருப்பமில்லாத ஒரேயொரு சொல் அல்லது வாக்கியம், ஏன் முகச் சலனம்கூடப் போதும், இறுக்கமாகக் கதவை மூடித் தாழிட்டுவிடுவார்கள். அப்புறம் எவ்வளவு நேரம், எத்தனை தடவை உடன் இருந்தாலும், சம்பிரதாயமான பதில்கள் தவிர வேறு எதுவுமே பெயராது!

      முதல் பார்வையில், அந்த வகையைச் சேர்ந்தவர்தான் மிஸ்.ரிஹானா என்றே நினைத்தேன். ஆனால், சந்தித்த பிறகுதான் தெரிந்தது, ஆத்மார்த்தமும் அணுக்கமும் கொஞ்சமும் குறையாத மனம் அது…

      உண்மையில், மனம்விட்டுப் பேச மாட்டார் என்று உறுதியாக நம்பியபிறகும், அவரைச் சந்திக்க ஏன் இத்தனை மெனக்கெடுகிறேன் என்று உறுத்திக்கொண்டே இருந்தது எனக்கு – அடுத்தநாள் வாடகைக்கார் எடுத்துக்கொண்டு அவருடைய தங்குமிடத்துக்குப் போகும் வழியில்கூட.

      இயல்பான ஆர்வத்தால்தான் சந்திக்க முற்பட்டேன்; ஆனால், சந்திக்கத் தயங்கும் அல்லது மறுக்கும் நபரைப் பிடிவாதமாகச் சென்று சந்திப்பதும், அவரைப் பேசவைப்பதை ஒரு சவாலாக மேற்கொள்வதும்  என் தொழில்புத்தியின் தினவைத் தணித்துக்கொள்ளத்தானோ என்று பின்னர் பலமுறை தோன்றியிருக்கிறது.

      இருந்தாலும், என் உள்ளுணர்வின் வலிமை பற்றி அறிந்துகொள்ளக் கிடைத்த இன்னொரு சந்தர்ப்பம் அவருடன் நிகழ்ந்த சந்திப்பு, கிருஷ்ணா. அல்லது, என் யூகத் திறன் பற்றிப் பெரிதாகப் பெருமிதம் கொள்ள வேண்டியதில்லை என்று தெரிந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பு!

      நான் உனக்குச் சொல்லும் கதைகளெல்லாம் சும்மா. மிஸ்.ரிஹானாபோலத் தத்ரூபமாகவும், உணர்ச்சிபூர்வாகவும் பேச்சில் நிகழ்த்திக் காட்டும்  இன்னொருவரை நான் இன்னும் பார்க்கவில்லை…

      இசைபற்றி ஏதேனும் விசேஷமாகச் சொன்னாரா என்பதையும் துலக்கமாக உணர முடியவில்லை. ஆனால், பெண்கலைஞர்களின் ஒரு பரிமாணத்தைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அப்புறம், தனியாய் இருக்கும் பெண்ணின் மனத்தில் இயல்பாகவே படிந்திருக்கும் இசைமை. அப்படியொன்று இருக்கிறதா என்ன, என்று கேட்காதே. தானும் தனது தனிமையும் அதன் அழுத்தமும் மட்டுமே பாய்ந்தொழுகுவதன் சீர்மையைச் சொல்கிறேன்.

மூன்றாவது வசீகரம், அவர் சொன்ன கதைகள். அதாவது, பேத்திக்குத் தாத்தா சொன்ன கதைகள்….


[1]அன்று பகலில்தான் அலிப்பூர் மிருகக்காட்சிசாலைக்குப் போயிருந்தேன். இந்த        உவமைகளெல்லாம் எனக்குத் தோன்றியதற்கு அதுகூடக் காரணமாய் இருக்கலாம். என்று ஜயலட்சுமியிடம் சொல்லிச் சிரித்ததாக என்னிடம் சொல்லிச் சிரித்தாள் ஜோ!      நகைச்சுவையுணர்வையும், மனம் திறந்த சிரிப்பையும் தவிர, அவளிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்த அம்சங்களில் இதுவும் ஒன்று – தான் உணர்வதைத் தானே பரிசீலிக்கும் புறவயத் தன்மை.  ‘மனித ஆளுமையை நேர்படுத்திக்கொள்ள அவசியமானவை மூன்று R கள்’ என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் விவரித்தாள் – Review, Revise and Rectify. மனித மேலாண்மை பற்றிப் பேசச் சொன்னாலும் அவளால் மணிக்கணக்காகப் பேசமுடியும் என்று எனக்குத் தோன்றியது!

[2] அவள் பொழிய ஆரம்பித்து நாலைந்து நிமிடங்கள் கடந்தபோது, எனக்குள் வேறொரு எண்ணம் உதித்தது – என்னிடம் சொல்வது மட்டும் அவளுடைய நோக்கமில்லை; தன் கடந்தகால நினைவுகள் பலவற்றையும் தேர்ந்தெடுத்து, வார்த்தைகளால் தனக்குத்தானே மீண்டும் நிகழ்த்திக்கொள்ள விரும்புகிறாள் போல என்று முதல் தடவையாய்த் தோன்றியது. அவற்றை ஒரு குறிப்பிட்ட விதத்தில் தொகுத்துக்கொள்ளவும் முயன்றாள் என்று இப்போது தோன்றுகிறது….

[3] எடுத்து எழுதும்போதுதான் அவர்களது சந்திப்பின் முழு நீளத்தையும் உணர முடிந்தது. மிகமிகக் குறைவான’ உரையாடலையே இவ்வளவு சொல்ல  முடியுமானால்… ஜோத்ஸ்னாவுக்குள் இருக்கும் பத்திரிகையாளரின்  முழு வீச்சும் புரிகிற மாதிரி இருந்தது. அவளுக்குள் நிலவிய அழுத்தத்தைப் பற்றியும்தான்.

  ஒரே விதமான தனிமைவாழ்வு இரண்டு நபர்களுக்குள் விளைவித்த தினவின் இரண்டு வகைமாதிரிகளுக்குள்தான் எத்தனை வித்தியாசம்!… ஒருவருக்கு தீராத மௌனம் என்றால், மற்றவளுக்கு ஓயாத பேச்சு! ஆமாம், வெளிப்படையாய்த் தெரிவிக்கவில்லையே தவிர, ஜோத்ஸ்னா தனியாக வாழ்பவள் என்பதில் எனக்கு இம்மியளவும் சந்தேகமில்லை…

~oOo~

யுவன் சந்திரசேகர் (1961)
இயற்பெயர் சந்திரசேகரன். மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலுள்ள கரட்டுப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கிறார். பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

  • Aaru Tharagaigal/ஆறு தாரகைகள்: நாவலில் இருந்து ஒரு பகுதி
  • எழுதியவர்: Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
  • விலை: Rs. 450.00
  • வெளியீடு: எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
  • ஆண்டு: 2024

ஹிந்துஸ்தானி இசையைப் பின்புலமாக வைத்து யுவன் சந்திரசேகர் எழுதும் மூன்றாவது நாவல் இது. இரண்டாவது நாவலான ‘நினைவுதிர் காலம்’ வெளியாகி, பதினொரு ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது.

இசையே பின்புலம் என்றாலும், முந்தைய நாவல்கள் சித்தரித்த உலகம் வேறு; இதில் நிகழ்வது முழுக்க வேறு. அவற்றின் நாயகர்கள் ஆண்கள். இது ஆறு பெண் கலைஞர்களைப் பற்றியது.

முதலாவது நாவல் ‘கானல் நதி’ வாழ்க்கை வரலாறுபோல அமைந்தது. இரண்டாவது நாவலின் வடிவம், முழு நேர்காணல். இந்த நாவல், தனித் தனிக் குறுநாவல்களின் தொகுப்புபோல அமைந்திருக்கிறது. ஒன்றிலொன்று பிணைந்த குறுநாவல்கள்.

இசை பற்றிய எண்ணங்களும், இசை வழங்கும் அனுபவங்களும், அதில் ஈடுபட்ட தனிமனங்களின் அல்லாட்டமும் நிஜம்போன்றே விவரிக்கப்படும் புனைவு. அந்த அளவில், முந்தைய நாவல்களை நினைவூட்டும் உள்ளோட்டமும், இடம்பெறும் அனைவருமே பெண்கள் என்பதால் தனித்துவமான உள்ளடக்கமும் கொண்டது.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.