I sought, somehow, to untie
The knot of History,
For in our shade I knew
That only the Truth is true,
That life is only the act
To transfigure all fact,
And life is only a story
And death is only the glory
Of the telling of the story,
And the done and the to-be-done
In that timelessness were one, Beyond the poor being done.
வரலாற்றின் முடிச்சை
எவ்வாறாயினும் அவிழ்க்க நினைத்தேன்,
நாமிருக்கும் நிழலில் நானறிவேன்
மெய்ம்மையே உண்மையென,
நடந்ததை உருமாற்றவல்ல
செயலே வாழ்வென.
வாழ்வும் ஒரு புனைவனெ,
அக்கதை சொல்லலின்
உச்சம் சாக்காடென,
நிகழின் பரிதாபத்துக்கு அப்பால்
நடந்ததும் நடக்கவிருப்பதும்
அக்காலமின்மையில் ஒன்றென.
From Promises II, Court-Martial, RPW
“அறிவுதான் மனிதனின் இலக்கு, ஆனால் அவனால் அறிய முடியாத ஒன்று இருக்கிறது. அறிவு அவனைக் காப்பாற்றுமா அல்லது கொல்லுமா என்பதை அவனால் அறிந்து கொள்ள முடியாது. அவன் கொல்லப்படுவான், சரி, ஆனால் அவனிடமிருக்கும் அறிவால் கொல்லப்பட்டானா அல்லது அவனிடம் இல்லாத அறிவாலா, அவ்வறிவு இருந்திருந்தால் அது அவனைக் காப்பாற்றி இருக்குமா என்பதையெல்லாம் அவனால் அறிய முடியாது.”
ஆல் த கிங்ஸ் மென், ராபர்ட் பென் வாரன்

ராபர்ட் பென் வாரன் (Robert Penn Warren) தமிழ் இலக்கிய வட்டங்களில் ஒரு நாவலாசாரியராகவோ கவிஞராகவோ அதிகம் பேசப்படாதவர். அவ்வப்போது, New Criticism என்ற விமர்சன இயக்க சகாப்தத்தின் அழகியல் அடிப்படைகளை நிறுவிய குழுவின் நபராக அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆலன் டேட், கிளியாந்த் ப்ருக்ஸ், “ரெட்” வார்ன், அவர்களின் கென்யன் கல்லூரி ஆசிரியரான ஜான் க்ரோ ரான்சம் உள்ளிட்ட பல முக்கியமானவர்கள் அக்குழுவின் உறுப்பினராக இருந்தனர் (Allen Tate, Cleanth Brooks, “Red” Warren & John Crowe Ransom.) கிளியாந்த் ப்ருக்ஸுடன் அவர் இணைந்து எழுதிய “Understanding Poetry” என்ற கவிதையைக் குறித்த அந்த மகத்தான பாடப்புத்தகம் வழியேதான் நான் அவரை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஆங்கிலக் கவிதையின் முறைசார் வடிவம் சார்ந்த அம்சங்களின் முக்கியத்துவத்தை எனக்குக் கற்றுத் தந்ததற்காக நான் அப்புத்தகத்துக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். (அப்பிரபலமான புத்தகத்துக்குப் பிரபலமான ஒரு ஜோடியும் உண்டு, Understanding Fiction. அதுவும் அதே அளவுக்குச் சுவாரசியமாகவும், அருமையாகப் பாடம் புகட்டுவதாகவும் இருக்கும்.) இருபத்தோராம் நூற்றாண்டின் தொலைவிலிருந்து மதிப்பிட்டாலும் அருமையானது பெருமையானது என்று பாராட்டத்தக்க வாரனின் கணிசமான விமர்சன அருமை பெருமைகளைப் பற்றிப் பேசுவது இந்த அறிமுகத்தின் நோக்கமல்ல. ஆனால் ஒரு முன்னோட்டமாக இதை மட்டும் குறிப்பிடுகிறேன்: 1930-களிலேயே வில்லியம் ஃபாக்னரின் (William Faulkner) முக்கியத்துவத்தைப் பிரஸ்தாபித்தவர் வாரன்தான். அமெரிக்காவின் பெரும் “தெற்குப் பிராந்திய” எழுத்தாளர் என்பதைக் காட்டிலும் அவருக்கு ஒரு உலகளாவிய முக்கியத்துவத்தை முதன் முதலில் கோரியவர்களில் அவரும் ஒருவர். முக்கியமான கட்டுரையொன்றில் ஃபாக்னரின் படைப்பின் நிலையான அறம்சார்ந்த மையத்தை அவர் சுட்டிக் காட்டினார். அது “எந்த ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே பொருத்தம் என்று வரையறுக்க முடியாத மானுட முயற்சி மற்றும் சகிப்புத்தன்மையை மகிமைப்படுத்தவதில்” இருப்பதாக வாரன் அடையாளப்படுத்தினார். இந்த அம்சமே ஃபாக்னரை “தெற்குப் பிராந்தியம்” என்ற குறுகிய வட்டத்துக்கு வெளியே கொணர்ந்து அவரை எல்லோருக்கும் எக்காலத்துக்குமானவராக மாற்றியது. ஆக, நான் சொன்னது போல் கணிசமான விமர்சன அருமை பெருமைகள்…ஆனால் சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன், நான் இங்கு, அந்த அரிதிலும் அரிதான இலக்கியக் கண்டுபிடிப்பு என்று சொல்லத்தக்க, ஒரு பகுதி அரசியல் த்ரில்லரைப் போலிருக்கும், அவ்வகைப் புனைவுகளின் விறுவிறுப்பை அளிக்கவல்ல ஒரு இலக்கிய நாவலும், ரெட் வாரனின் (அவரது தலைமயிரின் நிறத்தைச் சுட்டும் செல்லப்பெயர்) தலைசிறந்த நாவலான All the King’s Men-இன் இன்பங்களைப் பற்றியே பேச விரும்புகிறேன். ஒரு பகுதி என்று ஏன் கூறினேன் என்றால் விறுவிறுவென்று பக்கங்களைப் புரட்ட வைக்கும் அவ்வரசியல் பகுதிகள் உலக இலக்கியத்தின் மறக்க முடியாத (குறைந்தபட்சம் இந்த வாசகரைப் பொறுத்தமட்டிலாவது) காதல்நவிற்சி தோயந்த பகுதிகளும் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதால். இதைச் சற்று வேறுவிதமாகக் கூறுவதானால், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியின் லூயீசியானா அரசியல் இழிமைகளை த கிரேட் காட்ஸ்பி (The Great Gatsby) நாவலின் கதைசொல்லி நிக் கேரவே (Nick Carraway) விவரித்தால் எப்படி இருக்கும், All the King’s Men அப்படிப்பட்ட ஒரு விசித்திர அனுபவத்தை நமக்களிக்கிறது.
ஆல் த கிங்ஸ்மென்-இன் கதைசொல்லியான ஜாக் பர்டனின் (Jack Burden) குரல் கிரேட் காட்ஸ்பி-இன் அற்புதமான ஏக்கமும் விரக்தியும் தோய்ந்த குரலின் வாரிசுதான் (அந்த முன்னோடி நாவலைப் படித்திருப்பவர்களுக்குப் புரியும் இது எவ்வளவு பெரிய புகழாரமென்று). காட்ஸ்பி நாவலின் கடைசி வரியை நினைவுகூரும் வகையில் ஜாக் அவன் கடந்தகாலத்துக்குள் “இடையறாது சுமந்து செல்லப்படுகிறான்”, இதுவே அவன் பெயர் சுட்டும் “சுமை” (Burden). இது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு, தன் குரலின் ரொமாண்டிசிஸம் தோய்ந்த தொனியை மறைத்துக்கொள்ளும் பொருட்டு அதற்கு அமெரிக்க நுவார் (noir) நாவல்களில் வரும் துப்பரிவாளர்களின் (சாம் ஸ்பேட், ஃபிலிப் மார்லோ இத்யாதி) ஏளனம் தோய்ந்த கடுமையைத் தருவித்துக் கொள்கிறான். இப்பிளவே, அதாவது நாவலின் பேசுபொருளுக்கும் அது விவரிக்கப்படும் விதத்துக்குமிடைய இருக்கும் இடைவெளியும் இருமையுமே நாவலின் விசித்திரமான இசைக்குக் காரணம். ஏனெனில் அமெரிக்கப் புனைவின் ஆகச்சிறந்த அரசியல்வாதிப் பாத்திரமான, தான் அடியாளாக வேலை செய்யும் லூயீசியானாவின் ஆளுநரான வில்லி ஸ்டார்க்கின் (வில்லி டாலோஸ், அதன் திருத்தியமைக்கப்பட்ட பதிப்பை வாசித்தீர்களானால், அதையே வாசியுங்கள் என்று இங்கு பரிந்துரைக்கிறேன், Willie Stark / Talos) கதையை விவரிப்பதோடு மட்டுமல்லாது ஜாக் தன் கதையையும் உடன் விவரிக்கிறான். அவனை அடியாள் என்று அடையாளப்படுத்துவதும் நாம் ஜாக்-க்கு இழைக்கும் அநீதியே, ஏனெனில் அவன் அடியாளைக் காட்டிலும் சுதந்திரத்தையும், சுயேச்சையையும் வெளிப்படுத்துகிறான். வில்லி பாத்திரத்தைப் பொறுத்தவரையில், அது 1928-1932 வரை லூயீசியானாவின் ஆளுநராக இருந்த, 1932இல் அமெரிக்கக் காங்கிரஸில் செனட்டரான, 1935இல் படுகொலை செய்யப்பட்ட, பிரபல விவசாயப் பேச்சுவாதியான ஹியூயி லாங்கின் (Huey Long) அரைப்-புனைவு வடிவம். இப்பாத்திரத்தின் சுவாரசியம் நாவலைப் பூதாகாரமாக ஆக்கிரமிப்பதே நாவலைப் பிரச்சினைக்குரியதாக ஆக்கியது. ஏனெனில் அந்த ஆகிருதியின் தாக்கத்தால் மட்டுமே அந்நாவல் பெரும்பாலும் வாசிக்கப்பட்டதால், அதை அமெரிக்க நியோ-ஃபாசிஸத்துக்கான கரிசனமான புனைவஞ்சலி என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாக்கியது. ஆனால் இது ஹியூயி லாங்-க்கும் அவரது புனைவாக்கமான வில்லிக்கும் இழைக்கப்பட்ட அநீதியே ஆகும்.
வில்லியின் கதாபாத்திரத்தை உருவாக்குவதற்கான அடிப்படை மூலப்பொருட்கள் ஹியூயியின் வாழ்க்கை வரலாற்றில் தெளிவாக உள்ளன: வறிய, அதிகாரமில்லாத வடக்கு லூயீசியானாவில் ஒரு பட்டிக்காட்டு ‘ஹிக்’ (hick) ஆகப் பிறந்தது, ப்ராட்டஸ்டன்ட் வளர்ப்பு, பட்டப் படிப்பு பெற வாய்ப்பில்லாமல் போனது, ஊர் ஊராகப் பயணிக்கும் விற்பனையாளராக வேலை செய்து சட்டம் பயில்வதற்காகப் பணம் சேமித்தது, 1917இல் இருபத்தோறு வயதில் பொதுப் பணி பதவி ஏற்றது, பதினொரு ஆண்டுகளுகளில் 1928இல் கவர்னர் பதவியை வென்றது, அப்பதவியில் “முழுமையான அதிகாரம் முற்றிலும் பாழ்படுத்தும்” என்ற சொலவடைக்கு உதாரணமாகி, லஞ்சம், மிரட்டல் போன்றவற்றைப் பயன்படுத்தி சட்டமன்றத்தை தன் சித்தத்துக்கு அடிபணிய வைத்து லூயீசியானாவைக் கிட்டத்தட்ட ஒரு போலீஸ் ராஜ்யமாக மாற்றியது, ஆனால் அதே சமயத்தில் அவரது “ஹிக்” சகோதரர்களுக்கு நெடுஞ்சாலைகள், மருத்துவமனைகள், நலன்புரி கட்டமைப்புகள், அனைத்துக்கும் மேலாக உலகளாவிய கல்வி வரம் அளித்தது இத்யாதி. முட்டைதோசை சுட முட்டைகளை உடைத்தாக வேண்டும் என்று அனைத்து நவ-ஃபாசிஸ்டுகள் கூறுவது போல்…இதைத்தான் வில்லியும் ஜாக்கிடம் வேறு விதமாகக் கூறுகிறான்: “கெட்டதைக் கொண்டுதான் நல்லதைச் செய்தாக வேண்டும், ஏனெனில் கெட்டது மட்டுமே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.” அல்லது “அரசியல் ஊழல் என்பது உலகின் சக்கரங்கள் கிரீச்சிடாமல் இருப்பதற்காக நாம் உபயோகிக்க வேண்டிய எண்ணெய்ப் பசை.” ஒரு விதமான வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதி அணுகுமுறையை வில்லி அறநெறிகளுக்குப் பயன்படுத்துவது போல் இருக்கிறது. கிட்டத்தட்ட அதைப் போன்ற ஒன்றைத் தான் அவனும் மொழிகிறான்: “ஆற்றல் இழப்பு இல்லாத ஒரு இயந்திரத்தை மனிதன் இதுவரையில் உருவாக்கவில்லை, நிலக்கரிக் கட்டியில் இருக்கும் ஆற்றலை ஒப்பிடுகையில் அதைக் கொண்டு இயக்கப்படும் நீராவி டைனமோ அல்லது இஞ்சினிலிருந்து நமக்கு எவ்வளவு ஆற்றல் கிடைகிறது?” என்று அவன் ஜாக்கிடம் சப்பைக்கட்டு கட்டுகிறான். அருந்ததி ராயின் God of small things நாவலின் அற்புதமான வரியொன்று நினைவுக்கு வருகிறது: “அவர் முட்டையை உடைத்தார், ஆனால் ஆம்லெட்டை எரித்துவிட்டார்!” உடைந்த முட்டைகளுக்கும் எரிந்த ஆம்லெட்டுகளுக்கும் இடையே ஒரு மெல்லிய இழைக்கோடொன்றே இருக்கிறது. “மேடைப்பேச்சு” அரசியல்வாதிகள் அதை எப்போதுமே கடக்கிறார்கள். வில்லி “இம்ப்பீச்” ஆகும் அபாயத்தில் இருக்கையில் ஜாக் தன் காட்ஃபாதர் ஜட்ஜ் இர்வினின் வீட்டுக்குச் செல்கிறான், அவரை அதிலிருந்து பின்வாங்க வைப்பதற்காக. அப்போது ஜட்ஜ் இர்வினும் இக்கோடு கடக்கும் வாதத்தையே முன்வைக்கிறார்: “ஆம்பளயா நிக்கறவன என்னாலயும் மதிக்க முடியும். அவன் ஒரு ஆம்பள. ஒரு காலத்துல ஜன்னல் கண்ணாடிகள உடச்சு கொஞ்சம் புது காத்த உள்ள வர வெச்சான்கறதுக்காக நானும் அவன வரவேத்தேன். ஆனா… வீட்டயே இடிச்சுருவானோன்னு பயப்பட ஆரம்பிச்சேன். எல்லாத்துக்கும் மேல அவன் பயன்படுத்தற வழிமுறைகள்…” கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்க அரசியலும் இவை எல்லாவற்றையும் கூர்மையாக நினைவுபடுத்துகிறது.
ஆனால் வில்லி டாலோஸ் – ஸ்டார்க்கைக் காட்டிலும் இப்பெயரே எனக்கு உவப்பாக இருந்தது; வாரனுக்கும் உவப்பாக இருந்தது, நாவலின் முந்தைய நாடக வடிவமான Proud Flesh-இலும் அவர் அப்பெயரையே தேர்வு செய்திருந்தார் என்பதற்காக மட்டுமல்ல, அதன் கிரேக்கத் தொன்மச் சுட்டுதலுக்காகவும் (டாலோஸ் என்ற க்ரீட்டின் காவலன் அதனைப் படையெடுக்க வரும் கப்பல்கள் மீது பாறைகளை வீசுகிறான்), ஆங்கிலத்தில் அதன் வெளிப்படையான “நக” (Talon/nail) மேலோட்டங்களுக்காகவும் (தன்னை எதிர்ப்பவர்களைக் கண்டிப்பாகத் தோற்கடிப்பேன் என்று வில்லி உறுதிபூண்கையில், “பற்றுவதற்குத் தேவையான இறுக்கத்துடன் வளைந்திருக்கும் விரல்களைக் கொண்ட வெறுங்கைகளால் அதை செய்யவேண்டி வந்தாலும்கூட” என்று சேர்த்துக் கொள்கிறான்) – வில்லி டாலோஸ் என்ற அப்பட்ட விருப்புறுதி கொக்கி போட்டோ திருட்டுத்தனமாகவோ, தடவிக் கொடுத்தோ பிராண்டியோ தனக்கு வாய்க்கும் சந்தர்ப்பங்களைப் பற்றிக் கொள்கிறது என்று அப்பட்டமாகவே கூறலாம்! ஆனால் பிரச்சினை என்னவென்றால் வில்லி ஒரு நிர்வாணச் சித்தம் மட்டுமாகவே இல்லாது ஒரு சிடுக்குகள்மிக்க மனிதனாகவும் இருக்கிறான். சொல்லப்போனால் அவன் முதலில் பொதுஜனத்தைத் தரவுகளையும் எண்ணிக்கைகளையும் கொண்டு வசப்படுத்த முனையும் ஒரு இலட்சியவாதியாகவே தொடங்குகிறான். அனால் அவர்களுக்கோ அவற்றைக் காட்டிலும் ஜனரஞ்சகமான பிறிதொன்று தேவைப்படுகிறது என்பதை அரசியல் உலகம் அவனுக்கு மூர்க்கமாகக் கற்றுத் தருகிறது. ஜாக்-க்கும் வில்லிக்கும் இடையை நிகழும் அருமையான உரையாடலொன்று முதல் அத்தியாயதில் இடம்பெறுகிறது. இருவரும் வேலி மீது சாய்ந்தபடி, அங்கொன்றும் இன்கொன்றுமாக சிவப்புச் சோள தானியங்களும் சில உமித் துகள்களும் கிடக்கும் உலர்ந்த பன்றித் தொட்டியைக் கண்ணுற்றிருக்கிறார்கள்:
“இங்கல்லாம் மாத்தம்னு சொல்லிக்குற மாதிரி எதுவும் பெரிசா நடந்துதாது” என்று பாஸ் கூறினார். பதிலை எதிர்பார்த்து அவர் கூறவில்லை என்று தோன்றியது. அதனால் நானும் பதிலளிக்கவில்லை.
“ஏதோ ஒரு காலத்தில், அதோ, அந்தத் தொட்டியில் குறைந்தபட்சம் பத்தாயிரம் கேலன் கழிவுநீரையாவது மொண்டு ஊத்தியிருப்பேன், பந்தயம்கூட வைக்கத் தயார்” என்று கூறினார்.
தொட்டியில் மீண்டும் துப்பினார். “ஐநூறு பன்னிகளாவது இந்தத் தொட்டிலேந்து நான் மொண்டு ஊத்தின கழிவு உணவுநீர குடிச்சிருக்கும். கடவுளே அதத்தான் இன்னமும் செஞ்சுகிட்டு இருக்கேன். இன்னமும் கழிநீரத்தான் மொண்டு ஊத்திகிட்டிருக்கேன்.”
“அதனாலென்ன, கழிநீர்லதான அவங்க வாழ்ந்துகிட்டிருக்காங்க, இல்லயா?” என்று நான் கூறினேன். அதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை.
உடைந்த முட்டைகளோ அல்லது கழிவுநீரோ, உங்கள் கைகளை அழுக்காக்க வேண்டும் என்று உலகம் ஒற்றைக் காலில் நிற்கிறது, இக்கசப்பான நிதர்சனத்துடன் வில்லி சமரசம் செய்துகொண்டு விட்டான். அவனுக்கு எதிர்துருவில் இருக்கும் ஜாக்கின் பால்ய நண்பன் டாக்டர் ஆடம் ஸ்டாண்டனோ (Dr. Adam Stanton) உலகின் வற்புறுத்தல்களையும் மீறி தன் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான். ஜாக்கின் மத்யஸ்தம் இவ்விரு உலகப் பார்வைகளையும் இணைக்கிறது. அவன் ஆற்றில் ஒரு காலையும் சேற்றில் ஒரு காலையும் பதித்தபடி கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்படுகிறான். அவனுக்குக் கைகளும் சுத்தமாக இருக்க வேண்டும், அதே சமயத்தில் உலகின் சக்கரங்கள் நன்றாக எண்ணெயிடப் பட்டு கிரீச்சிடாமல் இருக்க வேண்டும். இவ்விரு பாத்திரங்கள் வழியே கட்டமைக்கப்படும் முரணை, கதை ரீதியில், அவ்விருவரையும் தீர்த்துக்கட்டி நாவல் முடித்து வைக்கிறது என்றாலும் ஜாக்கின் போதத்தில் இம்முரணுக்கு எவ்வாறு தீர்வு காணப்படுகிறது என்பதே நாவலில் பிரதான இலக்கு. இவ்விலக்கே அதை வில்லி என்ற அரசியல்வாதியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பேசும், அரசியல் வாழ்வைப் புனைவாக்கும் முயற்சி என்பதோடு நின்றுவிடாமல் (அது அபாரமாகவே இருந்தாலும்கூட) அதை முற்றிலும் வேறொன்றாக, ஜாக்கெனும் யாத்ரிகனின் ஆன்மீகப் பயணமாக மாற்றி விடுகிறது. அப்பயணத்தில் அவன் உன்னதமான ரொமாண்டிசிஸம், பிடித்த முயலுக்கு மூன்று கால் வகையான நாற்காலி இலட்சியவாதம், அடுத்தவர் செயலின் வழியே தனது இலட்சியங்களைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு வகையான கபடவாதம் என்று பல சிலுவைப் பாதை நிறுத்தங்களைக் கடந்து கடினமாக ஈட்டப்பட்ட ஒரு சமரசத்துக்கு இறுதியில் வந்து சேர்கிறான். உலகின் மக்கையும் அதன் குளறுபடிகளையும் எதிர்கொண்டு தன் செயல்களுக்கான தார்மிகப் பொறுப்பை ஏற்கத் துணிகிறான்.
பல தசாப்தங்களுக்கு முன்பு நான் அதை முதன்முதலில் படித்தபோது என்னை முழுமையாக அலைக்கழித்த நாவலின் ரொமாண்டிசிஸப் பகுதிகளைப் பேச வேண்டிய நேரம் இது. சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஒரு பொது அம்சமுண்டு, அவை மொழியின் ரசவாதத்தின் மூலம் முற்றிலும் தன்னிறைவான உலகங்களை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. வாசகனின் காலம் இடைநிறுத்தப்பட்டு அவன் அப்புனைவுலகின் நிகழ்கணம் எக்காலத்துக்கும் நீடிக்க வேண்டும் என்று ஏங்குகிறான். All the King’s Men-இல் இது இளம் காதல் மற்றும் நட்பின் சொல்லப்பட்ட / சொல்லப்படாத மர்மங்களால் நிறைந்த ஒரு நீர் உலகமாகும்; இதில் அற்புதமான ஆன் ஸ்டாண்டன் (Anne Stanton, ஆடமின் சகோதரி) டென்னிஸ் விளையாடுவது, தொடர்ச்சியான துணிச்சலான டைவ்கள் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை நாம் ஆராதிக்கும் கண்களால் பார்க்கிறோம். பலப் பல இடங்களை என்னால் உதாரணம் காட்ட முடியும், அவற்றின் சுவையை மீண்டும் சுவைப்பதற்காக நான் இங்கு சில சோற்றுப் பதங்களை முழு மேற்கோள்களாகத் தர விரும்புகிறேன்:
அக்கோடையில் ஆன் டைவிங் மீது பித்தாக இருந்தாள். வெகு உயரத்துக்கு ஏறிச் செல்வாள்… அங்கு, வெய்யிற் கதிர்கள் சூழ அவள் பலகையின் நுனியில் நின்று கொண்டிருப்பாள். அதன் பின், அவள் கரங்களை உயர்த்திய போது, என்னுள் ஏதோ உடையவிருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். நீண்ட கால்களிரண்டும் இனிமையாக இணைந்தபடி, குறுகிய பின்பக்கம் வளைந்தபடி, கச்சிதமான மார்பகங்களை வலியுறுத்தும் வகையில் கைகளை அகல விரித்தபடி அழகான அன்னத்தை நினைவுறுத்தும் டைவ் ஒன்றில் அவள் கீழே பறந்து செல்வாள். வெளிச்சத்தினூடே அவள் பறந்து வருவாள், மற்றவர் எவறும் அங்கு இல்லாதது போல் நான் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பேன். என்னுள் உடையவிருப்பது உடையும் வரை நான் மூச்சைப் பிடித்திருந்தேன். ஒரு கத்தியைப் போல் நீரை அவள் துளைத்துச் செல்வாள். சிறு நுரை தெரிப்பு மலர்வளையமாக்கிய சிற்றலை வட்டத்துக்குள் அவளது இரட்டைக் குதிகால்கள் தடத்தை விட்டபடி மறைந்தன.
இது எவ்வளவு அருமையாக இருக்கிறதென்றால், அதை வாசிக்கையில் நம்முள்ளும் ஏதோவொன்று உடையவிருப்பது போல் ஒரு முடிச்சு அவிழ்கிறது. ஏனெனில் அதனால் உந்தப்பட்டு நாமும் நம் வாழ்வுகளின் படச்சுருள்களை ஓட விடுகிறோம். எலியட்ஸ் கடற்கரையில் ஒரு நங்கையை அணைத்தபடி தொடுவானத்தை ரசித்து கொண்டிருந்தது நாமா என்று சந்தேகிக்கத் தொடங்குகிறோம். அகத்தின் ஆழத்தில் புதைந்து, காலத்துக்கு வெளியே இருப்பது போல் தோற்றம் தரும் உறைந்த காலத்தின் இப்புகைப்படங்களே உலகைக் குறித்த ஜாக்கின் பார்வையை நிர்ணயிக்கின்றன. பின்னர், இதே போன்ற ஒரு டைவுக்குப் பிறகு, அவள் வாழ்வின் மிக உயரமான டைவுக்குப் பின்னர் நீர்பரப்பைத் “ஒரு சீட்டியைப் போல் துல்லியமாகத்” அவள் துளைத்துச் செல்கையில் ஜாக்கும் நீரினுள் பாய்கிறான். நமக்கு மீண்டும் ஒரு அபாரமான கணம் வாய்க்கிறது: நீரடியே நிகழும் ஓர் முத்தக் கணம்!
தம் பிடித்து ஆழத்துக்குப் பாய்ந்து அவள் எழும்பி வருகையில் அவளை நான் எதிர்கொண்டேன். கரங்களால் இடுப்பைச் சுற்றி அவளை என்னிடம் இழுத்து இதழ்களை ஒன்றாக இணைத்தேன். அவள் கரங்களைக் கீழே தளர்வாக தொங்கவிட்டு அசையாது இருந்தாள். நான் அவள் உடலை என்மீது இறுக்கியபடி அவள் முகத்தைப் பின்னால் சாய்த்தேன். நீரின் கருமை மற்றும் எழும்பிவரும் குமிழ்களின் வெள்ளியினூடே நாங்கள் மெதுவாகவும் சற்று அங்குமிங்குமாகவும் மேலே உயர்ந்தோம். கீழே எங்கள் பிணைந்த கால்கள் பின்தொடர்ந்தன. நாங்கள் மிக மெதுவாகவே உயர்ந்தோம் அல்லது அப்பொது எனக்கு அப்படித்தான் தோன்றியது. நான் மூச்சை அவ்வளவு நேரம் பிடித்துக் கொண்டிருந்ததால் தலைசுற்றிக் கிறுகிறுத்தது, என் நெஞ்சு வலித்தது. ஆனால் வலியும் கிறுகிறுப்பும் ஓர் எல்லைக்கோட்டைத் தாண்டி ஒரு விதமான பரவசமாகிவிட்டன. ஆனை முதன்முதலாக சினிமாவுக்கு அழைத்துச் சென்று அவள் வீட்டுக்குத் திரும்புகையில் என் வீட்டில் இடைநிறுத்தம் செய்தபோது ஏற்பட்ட அதே பரவசம். நீரின் மேல்பரப்பை அடையவே மாட்டோம் போலிருந்தது, அவ்வளவு மெதுவாக மேலே உயர்ந்தோம்.
இரண்டு பக்கங்களுக்குப் பிறகு அவர்கள் ஜாக்கின் வீட்டில் தனியாக இருக்கிறார்கள். நமக்கு அருமையான ஒரு சிறு இல்லறக் காட்சி படம்பிடித்துக் காட்டப்படுகிறது, அதில் ஆன் சாண்ட்விச்சுகள் தயார் செய்து கொண்டிருக்கிறாள், ஜாக் அவளுக்கு இரட்டை ஜடை பின்னிக் கொண்டிருக்கிறான். அதன்பின்னோ, பெண் பையனின் படுக்கையறையை வந்துசேர்வது, பையன் பெண்னின் ஆடைகளைக் களைவது போன்ற தவிர்க்கவியலாத காட்சிகள். அவற்றால் நம் எதிர்பார்ப்பும் ஒரு கொதிநிலைக்குக் கிளற்றப்பட்டு, நாம் அது வரையில் பல பக்கங்களாக, எதை அனுமானித்திருந்தோமோ, அது தற்போது நிறைவேறி பூர்த்தியாவதற்காகக் காத்திருக்கிறோம்.
“முன்பை விட இப்போது வானம் கருத்திருந்தது, ஒரு பச்சை-ஊதா சாயத்துடன். பழுக்கும் திராட்சையின் நிறத்துடன். வானம் இன்னமும் அதி உயர்த்தில் இருப்பது போல்தான் தோற்றமளித்தது. அதன் கீழ் பல காற்றுலகங்கள். எனக்கு நேரடியாக மேலே, ஒரு கடற்புறா அதன் குறுக்கே பறந்து சென்றது. பாய்மரத்தைக் காட்டிலும் அது வானத்தின் பின்புலத்தில் வெண்மையாக இருந்தது. என் கண்களுக்கு எட்டிய வானப்பரப்பை அது கடந்து சென்றது. ஆனும் அதைப் பார்த்திருப்பாளா என்று யோசித்தேன். நான் அவளைப் பார்த்த போது அவள் கண்கள் மூடியிருந்தன. அவள் கரங்கள் இன்னமும் அகலமாக விரிந்து கிடந்தன. அவள் தலைக்குப் பின்னே, அதைச் சுற்றி, அவள் கேசம் சுதந்திரமாக நீரில் அலைந்து நெளிந்தது. கீழ்த்தாடை உயர்த்தப்பட்டு, அவள் தலை பின்பக்கமாக வெகுவாக சாய்ந்திருந்தது.“
ஜாக் தன் நினைவகத்தில் பொதித்து வைத்திருக்கும் இந்த உன்னதப் படிமம் காலப்போக்கில் மங்குவதற்குப் பதிலாக அவனுக்கு மேலும் மேலும் புதுப்புது அர்த்தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவன் அவற்றையும் ஆதர்சமாக்கி காலத்தால் மெருகூக்கப்படும் அவற்றின் அர்த்தங்களுதுடனும் உலகம் உடன்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். படுக்கையறையிலோ இன்னமும் புடைப்புற்றிருக்கும் ஜாக் அந்த் ஆதர்ச முகத்தைப் படுக்கையில் கண்களை மூடிப் படுத்திருக்கும் முகத்துடன் பொருத்திப் பார்த்து தான் அவ்வளவு காலமாக ஏங்கிய அவ்விழைவைப் பூர்த்தி செய்யும் துணிவில்லாது செய்து முடிக்க வேண்டிய காரியத்திலிருந்து பின்வாங்குகிறான். திருமணத்துக்கு முன்னான உடலுறவு அப்படிமத்தைக் களங்கப்படுத்தி, ஆனை, அவன் பின்பு தன்னிடமே கூறிக்கொள்ளும் வார்த்தைகளில் சொல்வதானால், “உலகொழுக்கின் முழுமையான இருண்மைக்குள்” ஆழ்த்திவிடும்” என்று அவன் அஞ்சுகிறான். காதல் அலைகள் வெள்ளமாகத் திரண்டெழும் சமயத்தில் அதைக் கைப்பற்றத் தவறுவதால் அவன் வாழ்வு குட்டைகளில் உழன்றிருக்கும் துன்பக்கேணியாக மாறுகிறது. ஆன் கல்லூரிக்குச் செல்கிறாள், பிற ஜாக்குகளைச் சந்திக்கிறாள், அவர்களுக்கோ அவள் ஆதர்சங்களின் திரைகளைக் கிழித்தெறிவதில் எந்தத் தயக்கமும் இல்லை. இவையெல்லாம் ஜாக்கின் வினோதமான தத்துவ யாத்திரையைத் தொடங்கி வைக்கின்றன. ஆதில் அவன் ஐடியலிசத்தில் (வாழ்க்கை என்பதே நகர்வு, நீ அறிந்துகொள்ளாதது உன்னைக் காயப்படுத்தாது போன்ற விசித்திரங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு கதம்ப ஆதர்சவாதம்) ஆரம்பித்து, கிரேட் ஸ்லீப் – (Great Sleep, மகா துயில்) உலகம் அதனுடன் உடன்படாத போது அதிலிருந்து மீண்டும் மீணடும் தப்பித்துச் செல்ல முனையும் காலகட்டங்கள் என்று இதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் – அவற்றுக்கு இடைபட்ட காலத்தில் அவன் உலகுக்குத் திரும்பி தன்னை எது கவர்கிறதோ அதைப் பற்றிக்கொள்ளும் தப்புதல்வாதம் – உதாரணமாக ஒரு போகநாட்டக் கட்டத்தில் அவன் லோயிஸ்சை மணம் புரிந்துகொண்டு அவளை ஓர் “இனிய மணமிக்க, பசியைத் தூண்டி அதைத் திருப்திப்படுத்தும் இயந்திரம்” ஆகப் பாவித்துக்கொள்ளும் அளவிற்கு மாறிவிடுகிகிறான். பின்னர் அவளை அருவருத்து (துரதிர்ஷ்டவசமாக இயந்திரம் பேசவும் செய்கிறது என்பதால்) “குட்-பை, லோயிஸ், நான் உனக்குச் இழைத்த அனைத்திற்கும் நான் உன்னை மன்னிக்கிறேன்”, என்று அந்த அபாரமான மூர்க்க வரியின் வழியே சாலிப்சிஸம் போன்ற ஒரு விதமான தான்தோனித்தனத்துக்குள் தன்னை ஆழ்த்திக் கொள்கிறான். அது அவனை ஆனையும் லோயிஸையும், சமமாக பாவிக்கவல்ல (எவ்வளவு கொடூரம் என்று இவ்வாசகன் முணுமுணுத்தான் டிரைவ்வேயில் இதை வாசித்தபடி நடந்துகொண்டிருக்கையில்), ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்று, மற்றவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன, சாத்தான் கடைசி ஆளைப் பிடித்துக்கொள்ளட்டும் என்று சப்பைக்கட்டி, அனைத்தையும் தன்னிச்சையான பொறிமுறையாகக் கருதும் கிரேட் ட்விட்ச் (Great Twitch, பெரும் துடிப்பு)-க்கே இட்டுச் செல்கிறது.
இதெல்லாம் சற்று பரிதாபமானதுதான், ஏனெனில் தன் அப்பட்டமான பாசங்குத்தனத்தின் முகத்திரையைக் கிழிக்கும் அளவுக்கு அவன் புத்திசாலிதான்; தனது உன்னதமான மருத்துவமனையின் இயக்குநர் பதவியை ஏற்க ஆடமை ஜாக் உந்த வேண்டும் என்று வில்லி வலியுறுத்துகையில் ஜாக் மிகத் தெளிவாகவே ஆடமைக் கணிக்கிறான்: ஆடம் “உலகைக் குறித்த படமொன்றை தன் மூளையில் வைத்திருக்கிறான், உலகம் அதனுடன் ஒத்துப்போகாத பட்சத்தில் அவன் உலகைக் கடாச விரும்புகிறான். இது குழந்தையைக் குளிப்பாட்டிய நீரைக் கொட்டுகையில் அதனுடன் குழந்தையும் தூக்கி எறிவதற்குச் சமம் என்ற போதிலும். இம்மாதிரியான விஷயங்களில் குழந்தை எப்போதும் தூக்கி எறியப்படுகிறது என்பதே நிதர்சனம்” என்று அவன் கூறுகிறான். ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்று நமக்குச் சொல்லத் தோன்றுகிறது, ஜாக்தான் தன் செல்லக்குட்டியை, அவன் “பேப்”-ஐத் தூக்கி எறிந்துவிட்டான் என்பதை நாம் அறிந்திருப்பதால். ஆனால் இந்த உலகுக்கு எதிரான ஆதர்சம் இக்கட்டில் மாட்டிக்கொண்டு தவிப்பவன் ஜாக் மட்டுமல்ல. இந்நாவலில் வரும் “வழக்கமான சந்தேகத்துக்குறியவர்கள்” அனைவருமே அவர்கள் ஆதர்சத்தை விடாப்பிடியாக வலியுறுத்தியதற்காக தண்டிக்கப்படுகிறாரகள்:
“பாவத்தில் கருத்தரிக்கப்பட்டு மாசில் பிறக்கும் மனிதன் பீத்துணியின் நாற்றத்திலிருந்து சவத்துணியின் நாற்றத்துக்குப் பயணிக்கிறான்” என்ற கால்வினிய உலகநோக்கைக் கொண்டிருக்கும் செயல்வீரனான வில்லி உலகின் மக்காலும் அரசியலின் பிசுபிசுப்பாலும் கறைபடியாது அப்பழுக்கற்றதாக தனது மருத்துவமனை இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத ஒரு காரணத்துக்காக உயிர் துறக்கிறான்; அக்மார்க் தூய்மைவாதியான ஆடம் அத்தூய்மைக் கற்பிதத்துக்காக ஒரு ஆளையே சுட்டுக்கொள்ளத் துணிகிறான்; ஜாக்கின் தந்தை எல்லிஸ் பர்டன் தனது வழக்கத்துக்கு மாறான கிறிஸ்துவ இறையியலுடன் ஒரு சந்நியாசியைப் போல் “துரதிர்ஷ்டவசமானவர்களை”ப் பராமரித்தபடி தனித்து வாழ்கிறார்; அடிமைத்தனத்தை ஆதிபாவமாகக் கருதும், ஜாக் தனது முன்னோடியென நம்பிக்கொண்டிருக்கும் காஸ் மாஸ்டர்ன் (அவரது வரலாற்றைத்தான் ஜாக் தனது முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்து கொண்டிருக்கிறான், அதன் முடிபுகள் தன்னை நிந்திப்பதாக இருக்கும் என்ற அச்சத்தால் அதை முடிக்காமல் காலம் கடத்துகிறான்), இப்படிப் பல ரூபகங்களில் ஆதர்சவாதிகள் இந்நாவலில் வருகிறார்கள், அவர்கள் அனைவருமே வாரனின் ஆதர்சம் குறித்த பிரச்சினைகளுக்கான பிரதிநிதிகளோ என்று நாம் சந்தேகிக்கிறோம். அவரது கவிதைகளில் (அமெரிக்கக் கவிதையின் சாதனைகளுள் ஒன்று என்று இங்கு குறிப்பிட்டாக வேண்டும்) இச்சிக்கல் பல விதங்களில் நுட்பமாக ஆராயப்படுகிறது. “Walk by Moonlight in a small town” என்ற கவிதை நெகிழ்வூட்டும் வகையில் நமக்குப் பாடிக்காட்டுவது ஒரு சிறந்த உதாரணம்:
“Might a Man but know his Truth, and might
He live so that Life, by moon or sun,
In dusk or dawn, would be all one,
Then never on a summer night
Need to stand and shake in that cold blaze of Platonic light”
“உண்மையை ஒருவன் அறியக்கூடுமெனில்,
ஒளியிலும் இருளிலும், உதயத்திலும் அந்தியிலும்,
தன் வாழ்வு ஒன்றேயென சொல்லத்தக்க
வாழ்வை அவன் வாழக்கூடுமெனில்,
எந்தவொரு கோடை இரவிலும்
பிளாடோனிய ஒளியின் குளிரில் அவன் நடுங்கி நிற்க வேண்டாம்.”
ஆனால் தனக்கான உண்மையை ஒருவன் எவ்வாறு அறிவான்? ஞானத்தால். அஞ்ஞானத்தை அவன் எப்படிக் கண்டடைவான்? அனுபவத்தால். இதைச் சற்று மாற்றி விவிலியத்தின் மொழியில் கூறுவதானால்: ஞான விருட்சத்தின் கனியை உண்டபின் மனிதன் அனுபவத்துக்குள் “வீழ்கிறான்”. இவ்வீழ்ச்சிக்குப் பின் ஏதான் தோட்டத்தின் ஆதிக் களங்கமின்மைக்கு அவனால் திரும்பிச் செல்ல முடியாது. இதுவே ஜாக்கின் பிரச்சினை. இதனால்தான் அவனால் ஆன் ஸ்டான்டனுடனான அவனது காதலை அதன் இயல்பான உச்சத்தில் பூர்த்தி செய்யதுகொள்ள முடியவில்லை. புத்தகத்தின் தலைப்பு சுட்டும் ஹம்ப்டி டம்ப்டியின் நவீன மாதிரியைப் போல் அவன் மதில்மேல் எப்போதும் அமர்ந்திருக்கிறான். அவசர, திருட்டுத்தன உடலுறவுக்குப் பின்னான அவளது முகம் கதற்புறாக்கள் குறுக்காக விரையும் திராட்சை நிறத்து வானத்துக்கு எதிராக நீரில் மிதந்தபடி இமை மூடியிருக்கும் முகத்துக்கு ஒருபோதும் திரும்ப முடியாது என்பதால். அந்த முகமே அவனது ஆதர்சம். அவனது ஏதேன் தோட்டம். மதிலிலிருந்து “வீழ்ந்தால்” நொறுங்கிய அந்த ஆதர்சத்தின் துண்டங்களைத் திரும்பவும் ஒட்டவைக்க முடியாது என்பதால். ஆனால் வாரன் மற்றொரு களங்கமின்மையை முன்வைக்கிறார், பரிபூர்ண ஞானத்தின் வழியே நம் மீது கவியும் ஒரு “ஈட்டப்பட்ட களங்கமின்மையை”. ஞான விருட்சத்து ஆப்பிள் கனியை இரண்டாவது முறை கடிப்பதால் ஈட்டப்படும் ஞானம் என்று இதை நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். பிறழ்வுகளுடன் அனுபவத்தின் சாரத்தை ஏற்றுக்கொண்டு பொலியும் ஓர் களங்கமின்மை. அதிலிருந்து உடைத்துகொண்டு வெளியே வந்து மனிதனாகிவிட்ட பிறகு மீண்டும் முட்டையின் பாதுகாப்புக்குள் பதுங்கிக்கொள்ள முடியாது என்பது திண்ணம், ஆனால் செயலின் ஆற்றலால் வேறு சில முட்டைகளை உடைத்துப் பார்த்து, வேறொரு மனிதனாகும், முன்னைவிட மேன்மையானவனாகும் சாத்தியம் நமக்கு எப்போதும் இருக்கிறது. சில சமயங்களில் ஈட்டப்படும் இன்ஞானத்துக்காக ஒரு விலை கொடுத்தாக வேண்டியிருக்கிறது, நாவலின் இறுதியில் ஜாக் பர்டன் இதை உணர்ந்து கொண்டது நினைவுக்கு வருகிறது – “பெறுமானமுள்ள அனைத்து அறிவுமே குருதியை விலையாய்த் தந்து பெறப்பட்டத்தாக இருக்கலாம்” என்று அவன் சொல்கையில் நாம் ஆமோதிக்கிறோம், அவன் கொடுக்காத குருதியா, பட்டுத் தெரிந்தவனாயிற்றே! ஆடுபானைப் பற்றிய (Audubon, ஆமாம், அந்த பறவை ஆசாமிதான்) வாரனின் சிறந்த கவிதையொன்று பனியாற்றின் உறைந்த தெளிவுடன் இப்படி முடிகிறது:
…. They fly
In air that glitters like fluent crystal
And is hard as perfectly transparent iron, they cleave it
With no effort. They cry
In a tongue multitudinous, often like music.
He slew them, at surprising distances, with his gun.
Over a body held in his hand, his head was bowed low,
But not in grief.
He put them where they are, and there we see them:
in our imagination.
What is love?
Our name for it is knowledge.
.. அவை பறக்கின்றன,
ஒளி ஊடுருவும் இரும்பென இறுகி, ,
உருகும் கற்களென சொலிக்கும் காற்றினில்,
அதைப் பிளந்து செல்கின்றன
எந்த யத்தனமுமில்லாமல். கூவுகின்றன,
பல்குரல் நாவுகள் கொண்டு, இசைப்பன போல்.
அவற்றைக் கொன்றான், ஆச்சரியப்படுத்தும் தொலைவுகளில், தன் துப்பாக்கியால்.
தன் கரங்களில் ஏந்திய சடலம் மீது, அவன் சிரம் தாழ்ந்திருந்தது,
ஆனால் துயராலல்ல.
அன்பென்பது யாது?
நாம் அதை அறிவென்றழைக்கிறோம்.
நாம் காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையுடன் சமரசம் செய்து கொள்வதும் இந்த ஞானத்தின் ஒரு பகுதி என்பதை ஜாக் உணர்ந்து கொள்கிறான். நிகழைக் கடந்தகாலத்துடன் (வருங்காலத்துடனும்) தொடர்புபடுத்திக் கொள்ளமுடியவில்லை என்பதும் அவன் பிரச்சினை. கடந்தகாலத்தின் சுமையே அவனது கதையின் மையச் சுமை, நாவலில் அது தந்தை மற்றும் தந்தை பதிலிகளுக்கானத் தேடலாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது: எல்லிஸ் பர்டன், ஜட்ஜ் ஓவன், வில்லி டாலோஸ், தனது மூதாதயர் என்று அவன் நம்பிக்கொண்டிருக்கும் காஸ் மாஸ்டர்ன் என்று இப்பட்டியல் நீள்கிறது. மேலையத் தொன்மம், உளவியலுக்கு ஏற்ப இத்தந்தையுருப் பிரச்சினைகளைத் “தீர்த்துக் கட்டுவதன்” மூலமே அவன் தன் கையளவு ஞானத்தை ஈட்டுகிறான். கடந்தகாலத்துடன் (அதைப் புரிந்துகொள்வதன் மூலம்) சமரசம் செய்துகொள்ள, அதற்கான பொறுப்பேற்க இவ்வறிவு வழிவகுக்குகிறது. அதன்படி புத்தகத்தின் கடைசி வரியில் “உலகின் வலிமிகு நடுக்கத்துக்குள்ளும், வரலாற்றிலிருந்து வரலாற்றிற்குள்ளும், காலத்தின் பிரமிக்கவைக்கும் சுமையை ஏற்க” நாவலை விட்டுச் செல்கிறான். இச்சிந்தனையின் முழு பரிமாணத்தை உணர்ந்து கொள்ள நாம் மீண்டும், வாரனின் கவிதைளுக்கே செல்ல வேண்டியிருக்கிறது, ஜாக்கும் அவற்றைப் படித்திருந்தால், குருதியும் வேர்வையும் மிச்சமாகியிருக்கும். Brother to Dragons என்ற அந்த அபாரமான செய்யுட்கதையை ஜாக்கும் அவன் மனைவி ஆன் ஸ்டாண்டனும் படிப்பதைக் கற்பனை செய்து பார்க்கிறேன். அக்கவிதை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபெர்சன் (Thomas Jefferson) தன் கடந்தகாலத்தின் தீமை, வன்முறை, குறிப்பாக அவரது மருமகன் ஓர் அடிமையை கசாப்பு மேடையில் அறுத்துக் கொல்வதைக் குறித்த குற்றவுணர்வுடன் சமரசம் செய்துகொள்வதைப் பற்றியது. அதில் ஜெஃபெர்சன் ஆடம்ஸுக்கு (John Adams) எழுதிய ஓர் கடிதத்தை நினைவுகூறும் இந்த அழகான வரிகளை:
One day I wrote to Adams…
I wrote and said
That the dream of the future is better than
The dream of the past.
How could I hope to find courage to say
That without the fact of the past, no matter
How terrible, we cannot dream the future?
ஒரு நாள் நான் ஆதாம்சுக்கு எழுதினேன்
எழுதியபோது சொன்னேன்,
கடந்த காலம் பற்றிய கனாக்களைவிட
எதிர்காலம் பற்றிய கனாக்கள் மேலானவை என்று.
கடந்த காலத்தின் உண்மை இல்லாமல், எவ்வளவுதான்
மோசமாக இருக்கட்டுமே, எதிர்கால கனாக்கள் இல்லை
என்பதைச் சொல்ல எங்கிருந்து துணிச்சலைக் கொள்வேன் ?
ஜாக்கும் ஆனும் வாசித்து சில பக்கங்களுக்குப் பிறகு:
…nothing we had
Nothing we were
Is lost,
All is redeemed
In Knowledge.
.. நமக்கிருந்தது எதுவும்
நாமிருந்தது எதுவும்
தொலையவில்லை.
எல்லாம் அறிதலில்
மீட்கப்படுகின்றன.
என்று மெரிவெதருடன் (Meriwether) அமோதிப்பதை கற்பனை செய்தது இவ்விரெண்டாம் வாசிப்பின் இன்பங்களிலொன்று.
வேண்டுமென்றேதான் நாவலின் பெரும் பகுதிகளை இக்கட்டுரையில் பேசாமல் தவிர்த்திருக்கிறேன். கதையின் அடுத்த திருப்பத்தை அறியத் தூண்டும் அதன் பக்கங்களைப் புரட்டவைக்கும் சுவாரஸ்யமும் அதன் மிகப் பெரிய பலங்களில் ஒன்றென்பதால். கடந்த நூற்றாண்டு அமெரிக்க இலக்கியத்தில் கொடிகட்டிப் பறந்தவர்களில் வாரனும் ஒருவர். கவிதை, புனைவு என்று இரு வகைமைகளில் புலிட்ஸர் பரிசை வென்றவர், தேசத்தின் ஆஸ்தான கவியாக நியமிக்கப்பட்டவர், ஆங்கில விமர்சனத்தை திசைதிருப்பியவர் என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ஆல் த கிங்ஸ் மென் சர்வ நிச்சயமாக ஒரு அமெரிக்க கிளாஸிக். அவர் ஒரு சிறந்த நாவலாசிரியர், அதைக்காட்டிலும் சிறந்த கவிஞர், அவரது உரைநடை மறக்கமுடியாத விதத்தில் அமைந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த ப்ளாக்-பஸ்டர் நாவலின் (இரண்டு முறை படமாக்கப்பட்டிருக்கிறது) ஒவ்வொரு பக்கத்திலும் நின்று நிதானித்து அதன் அபாரமான வாக்கியக் கட்டமைப்பிலும் இசைத்தன்மையிலும் லயித்திருப்பதை நம்மால் தவிர்க்க இயலாது. அதன் காட்சி நுணுக்கங்களும், உருவக அடர்த்தியும் ஈடு இணையற்றவை. அவரது புனைவுகளையும் கவிதைகளையும நீங்கள் இன்னமும் இனங்காணாதிருப்பது ஒரு ஆச்சர்யமான விஷயம். சற்று அவலமானதும்கூட. ஆங்கில நாடகத்துறையில் ஒரு மூடநம்பிக்கை உண்டு, மேடை ஏறுவதற்கு முன் அதில் பங்கேறபவர்களிடம் பிரேக் எ லெக் (break a leg, காலை உடைத்துக் கொள்ளுங்கள்) என்று வாழ்த்துவார்கள், ஆல் த கிங்ஸ் மென்-இன் நாடக ஆரம்பத்துக்கும் அதன் தலைப்பில் பொதிந்திருக்கும் சுட்டுதலுக்கும் ஏற்ப, என்னுள் எப்போதுமே ஒளிந்திருக்கும் வார்த்தை விளையாட்டுக் குட்டிச்சாத்தானின் ஆசைப்படி, இக்கட்டுரையை போங்கள், கண்டிப்பாக இப்புத்தகத்தைப் படியுங்கள் என்பதற்குப் பதிலாக பிரேக் அன் எக், (break an egg!) முட்டையை உடைத்துப் பாருங்கள் என்று முடித்துக் கொள்கிறேன். உங்களுள் கண்டெக்கும் துண்டங்களை ஒட்டவைத்து முற்றிலும் புதியதோர் வாசகரை நீங்கள் உருவாக்கலாம்.
மூலநூல்கள் / மேலும் படிக்க:
- Warren, Robert Penn, All the King’s Men, Revised Edition, Harcourt, 2001
- Warren, Robert Penn, The Collected Poems of Robert Penn Warren, LSU Press, 1998
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
