ஸ்கின்ஷிப் – பகுதி 2

This entry is part 1 of 3 in the series ஸ்கின்ஷிப்

மூலம் : யூன் சோய்

தமிழாக்கம்: மைத்ரேயன்

அடுத்த வருடம், பள்ளியில் எட்டாவது வருடத்தில் இங்கிலிஷ் ஆனர்ஸ் வகுப்பில் இருந்த மாணவர்கள் த குட் எர்த் நாவலை, அத்தியாயம் அத்தியாயமாகப் படித்தார்கள். நாங்கள் முன் சென்று நாவலைப் படிக்கக் கூடாதென்றிருந்தது, ஆனால் யாருமே எப்படி முன்னே சென்று படிக்காமல் நிறுத்தி இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. புத்தகத்தின் துவக்கத்திலிருந்து, சீனக் குடியானவர் வாங் லுங் தன் திருமணத் தினத்தன்று விழித்தெழும்போதிலிருந்து, ஒரு நீல லங்கோட்டைத் தன் இடுப்பைச் சுற்றி முடிச்சுப் போட்டுக் கொண்டு, மற்றபடி நிர்வாணமான தன் உடலைக் குளிப்பாட்டிக் கொள்ளும் காட்சியிலிருந்து, அந்தப் புத்தகம் எதைப் பற்றியது என்று எனக்குத் துல்லியமாகத் தெரிந்திருந்தது.  “இந்த நாளன்று அவர் தன் முழு உடலையும் குளிப்பாட்டுவார். தன் அம்மாவின் மடியில் இருந்த குழந்தையாக அவர் இருந்த காலத்துக்குப் பிறகு, ஒருபோதும் வேறு யாரும் அவர் உடலைப் பார்த்திருக்க மாட்டார்கள். இன்று ஒருத்தர் காண்பார்,” என்ற வரிகளைப் படிக்கையில் நான் சங்கடப்பட்டு நெளிந்தேன். 

எங்கள் ஆசிரியர், கனம் லூக், இளைஞர், உயரமானவர், துடிப்பு மிக்கவர். வகுப்பறையின் பின்பகுதியில் ஒரு கிடாரை வைத்திருந்தார், தன் மேஜையில் ஒரு பேஸ்பாலை வைத்திருந்தார். மேஜை மீது அமர்ந்து கொண்டு, தொடர்ந்து பேஸ்பாலைப் பிடி மாற்றியபடி, எங்களுக்குப் புரியாத பலவற்றையும் சொல்வார், உதாரணமாக: ஜோனி மிச்செல் ஒரு மேதை. பாப் டிலன் ஓர் எத்தர். த ஸிம்ப்ஸன்ஸ் தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடரில் வரும் லீஸா சிம்ப்ஸன் பாத்திரம் இதுவரை படைக்கப்பட்டவற்றிலேயே உச்ச கட்ட பெண் பாத்திரம், என்றிப்படி. 

பெண் மாணவிகள் அவரைப் பெரிதும் நேசித்தார்கள். அவர் உற்சாகம் கொள்ளும்போது மிகக் கவர்ச்சியாக இருந்தாரென்று நினைத்தார்கள். 

ஒரு முன்மாலை நேரத்தில், கனம் லூக் மாணவர் இருக்கைகளிடையே நீள நடக்கத் தொடங்கினார், அந்தப் பந்தைத் தன்னிடமே தூக்கிப் போட்டுப் பிடித்தபடி. “இந்த நாவல் வாங் லுங்கின் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது. இதை நாம் மட்டுப்பட்ட படர்க்கை நிலை என்று சொல்வோம். ஆனால், இது வேறொரு நபரின் பார்வையில் எழுதப்பட்டால் என்ன ஆகும்? ஓ-லானின் பார்வையில் எல்லாவற்றையும் பார்த்தோம் என்று வையுங்கள், அப்போது என்ன கிட்டும்? அவள் என்ன நினைத்துக் கொண்டிருந்தாள், உணர்ந்தாள் என்பதை நாம் பார்க்க முடிந்தால் என்ன கிடைக்கும்? யாராவது சொல்வீர்களா?”

நான் என் கையை உயர்த்தவில்லை. ஆனால் உடனடியாக, என்னால் அதைக் கற்பனை செய்ய முடிந்தது. ஓ-லானை என்னால் பார்க்க முடிந்தது, சதுரமான, நேர்மை தெரியும் முகம், ஒளி மங்கிய சிறு கண்கள், கட்டி நசுக்கப்படாத பெரிய பாதங்கள் கொண்ட, குடியானவர் வருவதற்காக, தன் பெட்டியை எடுத்துக் கொண்டு, தன்னை பின்னே அழைத்துக் கொண்டு போவதற்காகக் காத்திருக்கும், சமையலறைக்கான அடிமை. 

கனம் லூக் நடந்தபடி இருந்தார். வகுப்பின் மௌனத்தால் அச்சுறுத்தப்படும் வகையான ஆசிரியர் இல்லை அவர். அப்போது என் நாற்காலிக்கருகே நின்றார். என் மேஜையின் மூலையில் பேஸ்பாலை வைத்தார். 

“சோ-யன்? ஏதாவது யோசனைகள் உண்டா?”

நான் என் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன். தோள்களை இல்லை என்பதாகக் குலுக்கினேன். 

“ஓ, கம் ஆன் நௌ. எங்கிட்ட அது செல்லாது. உன் கட்டுரைகளை நான் படிச்சிருக்கேன்.”

“அம்.,” என்றேன். 

கனம் லூக் என்னை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். பந்தை எடுத்துக் கொண்டார், நகர்ந்து போய் விட்டார். பிறகு அன்று நான் ரகசியமாக ஒரு கணக்கிட்டேன். 

நான் பார்க்க நன்றாக இருப்பவளோ அழகானவளோ இல்லை. 

மற்றவர்களுக்குக் கவர்ச்சியாகத் தெரிபவள் இல்லை. 

உடுப்புகள், தலையலங்காரங்கள் போன்றன எனக்குப் புரிவதில்லை. 

நான் ஒரு போதும் முத்தமிடப்பட மாட்டேன், யாருடைய கையையோ பிரியமாகப் பற்றவும் மாட்டேன். 

அனேகமாக நான் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். 

ஆனால் நான் நானாக இருந்தேன், லிம் சோ-யன். 

எனக்கு நான் நம்பகமானவளாக இருப்பேன்.

யாரும் என்னை வாயையோ, என் மனத்தையோ திறக்க வைக்க முடியாது.

சுய-நம்பகத்தன்மை ஒன்றுதான் நான் பற்றக் கூடிய சகவாசம். 

இரண்டு வருடங்கள் கழிந்த பின், நள்ளிரவுக்குப் பின்னர் தொலைபேசி மணி அடிக்கத் தொடங்கியது. என் அம்மா திடீரென்று படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தார். பெரிய படுக்கை அறை வாயிலில் நின்று விட்டாள், அவளை எதிர்பார்த்தது போல அந்த அறைக் கதவு திறந்தது. எங்கள் பெரியப்பா வெளியே வந்தார், அது என் அம்மாவின் கையை அவளது இரவு உடுப்பின் அடக்கமான கழுத்துப் பட்டியைப் பிடித்துக் கொள்ளும்படி செய்தது. அவர் கூடத்திற்குள் நகர்ந்து கொண்டு, அந்த அறைக்குள் நுழைய எங்களுக்கு வழி விட்டார். 

என் பெரியம்மாவை அங்கிருந்த உடுப்புகளுக்கான அகன்ற பெட்டி மீது இருந்த கண்ணாடியில் பார்த்தோம். அவர் மையத்தில் இருந்த பெரிய படுக்கையில் உட்கார்ந்திருந்தார், அலங்காரத் தலையணைகளும், வழுவழுப்பான சாட்டின் விரிப்புகளும் கொண்ட குன்று போன்ற குவியலின் மீது நீண்ட தொலைபேசிக் கம்பியின் முடிவில் இருந்த தொலைபேசியைக் கையில் பிடித்திருந்தார். என் அம்மாவைப் பார்த்ததும், தொலைபேசியை நீட்டினார். அழுது கொண்டே, “இது கொரியா,” என்றார். 

அடுத்த நாள் காலை, என் அம்மா எழுந்திருக்க மறுத்தாள், ஆனால் எங்கள் பெரியம்மா முகப்பூச்சுடன் சமையலறையில் நுழைந்தார். எங்கள் பாட்டியின் சாவிற்கு வருந்திக் கொண்டிருக்க அவருக்கு அவகாசம் இல்லை. அவருக்குச் செய்ய நிறைய வேலைகள் இருந்தன. ஒரு தோழியின் தோழியை, அவர் ஒரு பிரயாண முகவர், அழைத்துப் பேசினார். தன்னுடைய, ஸூஸியுடைய அமெரிக்கக் கடவுப் பத்திரங்களை அகழ்ந்தெடுத்தார், அவற்றில் இருந்த பழைய ஒளிப்படங்களைப் பார்த்து கிறீச்சிட்டார். அவர் சென்று பார்க்க வேண்டியிருந்த எல்லா உறவினர்களுக்கும் பரிசுப் பொருட்களை வாங்கினார்; ஃபோல்ஜர்ஸ் காஃபி, ஹெர்ஷீஸ் சாக்லெட்கள், நைகி ஸ்நீக்கர்கள், பியர் கார்டின் பேனா செட்கள். 

எங்கள் பெரியப்பா அவர்களோடு செல்ல மாட்டார் என்பது புரிந்து கொள்ளப்பட்ட விஷயம். அவரே சொன்ன மாதிரி, அவர் ஒரு நிர்வாகி, நிர்வாகி தனக்குத் தானே விடுப்பு நாட்களைக் கொடுத்துக் கொள்ள முடியாது. சி-ஓ, என் அம்மா, மற்றும் என்னைப் பொறுத்தவரை நாங்கள் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளப் போவது நினைத்துப் பார்க்க முடியாதது. விமானக் கட்டணம் பல ஆயிரக்கணக்கான டாலர்களாக இருக்கும். 

என் பெரியம்மாவும், ஸூஸியும் போன பின்னர் முதல் சில நாட்களுக்கு, என் அம்மா தன் அறையை விட்டு பெரும்பாலும் வெளியே வரவில்லை. அவரை நெருங்க எனக்குக் கூச்சமாக இருந்தது, அவரிடம் நான் எந்தக் கேள்விகளையும் கேட்கவில்லை. எஞ்சியது நாங்கள் மூவரே- பெரியப்பா, நான், சி-ஓ- மற்றும் மௌஸ்கா. சமையலறை மேஜையைச் சுற்றி நாங்கள் அமரும்போது, மௌனமாக ஒரு பொது வெளியை நாங்கள் பகிர்ந்து கொண்ட விதத்தில் அது ஒரு கஃபெடேரியாவின் மேஜை என்று கூடக் கருதப்பட்டிருக்கலாம். சில சமயம் என் பெரியப்பா பீட்ஸா அல்லது பர்கர் பைகளைக் கொணர்வார். சில நேரங்களில் நான் அரிசியை அரிசி குக்கரில் இட்டுச் சமைப்பேன், டப்பிகளில் அடைத்த கொத்திய பன்றி மாமிசத்தை (ஸ்பாம்) வறுத்துக் கொள்வேன். பிறகு எங்கள் பெரியப்பா பாத்திரங்கள் தட்டுகளை சமையலறைக் கழுவு தொட்டிக்குக் கொண்டு போவார், பூனைக்கழிவுப் பெட்டியைச் சுத்தம் செய்வார். 

ஓரிரவில் எங்கள் பெரியம்மா அழைத்தார், நான் தொலைபேசியில் பதில் சொன்னேன். “ஹாய், சோ-யன்! இங்க இப்பொ காலை!” என்று அறிவித்தார். 

இங்கே காலை. வேறு எதையும் விட, அந்த வார்த்தைகள் நான் எனக்குத் தெரிந்திருந்த வாழ்க்கையிலிருந்து எத்தனை தூரம் தள்ளி இருக்கிறேன் என்பதை உணர்த்தின. 

நான் தொலைபேசியை என் பெரியப்பாவிடம் கொடுத்தேன், அவர் இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தன என்று கேட்டார். நிறையப் பேர் வந்தார்களா? ஆனால் நான் மனத்தில் பார்த்தது என் பாட்டியின் வாயிலில் கம்பிக் கதவுள்ள சிறிய வீட்டின் மேலாக சூரியன் எழுந்து வரும் காட்சி. நான் அதற்குள் நுழைந்தேன். பழைய காலத்து மோஸ்தரில் காகிதத்தால் ஆன அதன் கதவுகள் கொண்ட அறைகளை நினைத்தேன். அவை திறந்து மூடும்போது செய்த சத்தங்கள்- என் பாட்டி சத்தமில்லாது நுழைந்து பின் வெளியே செல்வது, தன்னுடன் ஒரு ஈரத் துணியையும், உலர்ந்த துணியையும் கொண்டு வரும் காட்சி- அந்தக் காலை நேரங்களில் நாங்கள் மெதுவாக விழிப்போம், எங்கள் வீட்டில் நாங்கள் இல்லை என்பதை உணர்வோம். 

அடுத்த நாள், என் அம்மா தன் அறையிலிருந்து வெளியே வந்தார். அவர் சமையலறையில் நுழைந்த போது, சி-ஓ, என் பெரியப்பா, மற்றும் நான் தலையுயர்த்தி அவரைப் பார்த்தோம். அவர் இன்னும் தன் இரவு மேலங்கியை அணிந்திருந்தார், அது அவருடைய மாரெலும்புகளைக் கோடாகக் காட்டியது, தலை முடி இன்னும் வாரப்படவில்லை. ஆனால் அவரது சோகம் அவருக்கு ஒரு அதிகாரத்தைக் கொடுத்திருந்தது. என் பெரியப்பா கூட அதை உணர்ந்ததாகத் தெரிந்தது. அவர் தன் நாற்காலியைப் பின்னே இழுத்தார், ஏதோ என் அம்மாவுக்கு அதை அளிப்பவர் போலத் தெரிந்தார். அவர் முழுதும் எழுந்திருக்கவில்லை, ஆனால் அமர்ந்திருக்கவே தீர்மானித்ததாகவும் தெரியவில்லை. 

அவ்வளவுதான் அங்கு நடந்தது. அன்றிலிருந்து சாப்பாட்டு நேரத்தில் அம்மா தன் முகத்தைக் காட்டத் துவங்கினார். சமையலறையில் எல்லாப் பரப்புகளையும் துடைத்துச் சுத்தம் செய்தாள். துணிகளைச் சலவை செய்தாள். இரவுகளில் அவர் வழக்கமாக வேலைக்குப் போகிறதைத் தொடர்ந்து செய்தாள். ஒரு முழு பின்மதிய நேரத்தையும், பூச்செடிகளின் ஒழுங்கைப் பராமரிப்பதில் செலவிட்டாள், எங்கள் பெரியம்மா ஆர்வக் கோளாறால் க்ரோகரிலிருந்து வாங்கிய எல்லா இம்பேஷன்ஸ் செடிகளையும்- வாடிக் கொண்டிருந்த சிவப்பு, இளஞ்சிவப்புப் பூக்களையும்- கத்திரித்துக் குறைத்தாள். ஒன்பது நாட்கள் கழித்து, பெரியம்மாவும், ஸூஸியும் திரும்பினார்கள். 

 “என்னால் நம்பவே முடியல்லை, என்னால் நம்பவே முடியல்லை,” என்று என் பெரியம்மா சொன்னபடியே இருந்தார். “எண்பத்தி எட்டு ஒலிம்பிக்ஸுக்குப் பிறகு அங்கெ எல்லாம் எவ்வளவோ மாறிடுத்து!”

அவர் ஏகப்பட்ட பொருட்களைக் கொண்டு வந்திருந்தார். பொடிகள் இருந்த பைகள், பருப்புகள், கிழங்குகள், மற்றும் கடல்பாசி. ராயல் ஜெல்லி என்ற தேனீக்களிடமிருந்து பெறும் பொருள். முலாம்பழ ருசியோடு மிட்டாய். பெட்டிகளிலிருந்து பொருட்களை எடுத்துக் கொடுத்தபடியே இருந்தார், என் அம்மாவும், நானும் அவற்றை சரக்கு அறைக்கு அல்லது பனிப்பெட்டிக்கு எடுத்துப் போனோம், அல்லது காலியான கடலை வெண்ணெய் ஜாடிகளில் கொட்டி வைத்தோம். 

“வேறென்ன நடந்ததுன்னு நினைக்கிறீங்க?” என் அம்மாவிடம் கருப்பு எள்ளு இருந்த பை ஒன்றைக் கொடுத்தபடி அவர் கேட்டார். “நான் அவரைப் பார்த்தேன். குழந்தைகளோட அப்பாவை.”

என் அம்மா அந்தப் பையின் முடிச்சை அவிழ்ப்பதில் கவனமாக இருந்தார். 

“எத்தனை அழகா இருக்கார்,” என்றார் பெரியம்மா, என் அம்மாவை நோக்கிக் கள்ளமாகச் சிரித்தார். “அதோட உசரம் வேற. அந்தப் படத்தில வர நடிகன் மாதிரி. நல்ல நண்பர்கள் வளர்ந்து ரொம்பவே வித்தியாசமான வாழ்க்கைகளை வாழ்வாங்களே அந்தப் படம், உனக்குத் தெரியுமே அது. அந்த அரசு வழக்கறிஞர் இல்லை, அந்த ரௌடி. சோய் மின் -ஸூ.”

என் அம்மா எள் விதைகளை ஒரு ஜாடிக்குள் கொட்டத் தொடங்கினார்- சீராக, நேர்த்தியான கொட்டுதல். ஜாடியில் அவற்றின் உயரம் கூடி வருவதைப் பார்த்திருந்த பெரியம்மா மேலும் யோசித்தார். “அவருக்கு அதே மாதிரி முகம். அது மூக்கிலெயும், புருவத்திலெயும்தான் இருக்கு. ஒரு மாதிரி கெட்டவனாத் தெரியறார். தப்பாப் புரிஞ்சுக்கப்பட்டவர்.”

“அதனாலெதான்,” என்றார் அம்மா, கொஞ்சம் புதிரான விதமாக. 

“அதனாலெ நான் ஒண்ணு செஞ்சேன்,” என்றார் பெரியம்மா. “அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தேன். அவர் கேட்கல்லை. நான் தான் கொடுக்கறேன்னு சொன்னேன். அது முழுக்க என்னோட யோசனைதான். வீட்டையும், கிழக்குக் கடைத்தெருவில அம்மா வாடகைக்கு விட்டிருந்த கடையையும் வித்த பணத்திலேர்ந்து அவருக்குக் கொஞ்சம் கொடுத்தேன்.”

ஜாடியின் மூடியை இறுக்கி மூடிய அம்மா எதுவும் சொல்லவில்லை. 

“நான் செய்தது சரியானதுதான்,” என்றார் எங்கள் பெரியம்மா. “அது சரீன்னு எனக்கு நிச்சயமா இருக்கு. என்ன நடந்ததுன்னு நீ எதையும் பேசறதில்லெ, ஆனா என்னால ஊகிக்க முடியும். புருசன் பொண்டாட்டிக்கு நடுப்பற இந்த மாதிரி ஏதாவது நடக்கிறது ஒண்ணும் புதுசு இல்லை. அது எனக்குத் தெரியும்னு நீ நினைக்கல்லியா?”

நான் மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தேன். என் அம்மா எப்படி மறுவினை செய்வாரென்பதைப் பார்க்கும் வரை நான் எதை நம்புவது, என்ன உணர்வது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவளிடம் எந்தத் தாக்கமும் புலப்படவில்லை. அவர் நிலை பிறழாமல் சாதாரணமாக இருந்தார் வேறெதுவும் காட்டவில்லை. 

என் பெரியம்மாவோ விமரிசையாக உணர்ச்சி வசப்படத் துவங்கினார்.  “இதை கேளு,”என்றவர் கண்களில் நீர் மல்கி வந்தது, “நீயும் நானும். அப்பா இல்லாம வளர்றதுன்னா என்னன்னு நமக்குத் தெரியும். சோ-யனும் சி-ஓவும் மறுபடியும் அப்பாவைப் பெறலாம். நீங்க எல்லாம் ஒரு குடும்பமா இருக்கலாம். நீயும் அதைத்தானே விரும்பற?

“நான் இன்னொன்னும் சொல்லப் போறேன். இருபது வருஷம் ஆச்சு. நான் அம்மாவை இருபது வருஷமாப் பார்க்கல்லை. அந்த வருஷத்தில எல்லாம், நான் எனக்கே சொல்லிக்கிட்டிருந்தேன். சீக்கிரமா, அவங்களைப் போய்ப் பார்க்கப் போறேன். சீக்கிரமா. அமெரிக்காவுக்கு என்னைப் பார்க்க அவங்களை கொண்டு வரப் போறேன். என் தங்கை நீ, உன்னைக் கேட்கறேன். நான் ஏன் காத்துக் கொண்டிருந்தேன்?”

என் அம்மா பதில் சொல்லாதபோது, என் பெரியம்மா காகிதத் துவாலையில் ஒரு துண்டைக் கிழித்தார், மடித்தார், தன் கண்களை மேலே உருட்டிக் கொண்டு, கீழ் இமையில் இருந்த கண்ணீரை ஒத்திக் கொண்டார். 

“நான் என்ன நினைக்கிறேன்னு உனக்குத் தெரியுமா? குடும்பம். அம்மாக்கள், பெண்கள், சகோதரர்கள், சகோதரிகள், கணவன்மார், குழந்தைகள். நாம எல்லாம் ஒண்ணா இருக்கணும். நம்மளை நாமே மன்னிச்சுக்கணும்.”அவர் காகிதத் துவாலையைத் திறந்தார், அதில் இருந்த ஒப்பனையின் கரிய கோடுகளைச் சோதித்தார். கோணலான, சிறு புன்னகை ஒன்றைச் சிந்தினார். “சோல் நகரில் இப்போது நிறைய ஒயிலான கொங்க்லிஷ் பதங்களெல்லாம் இப்ப இருக்கு. ‘பெ-ப்பு’ன்னு சொல்றது ‘பெஸ்ட் ஃப்ரெண்ட்’டுக்கு. இல்லென்னா ச்- பே. அது இருக்கட்டும், எனக்கு ஒரு வார்த்தை ரொம்பவே பிடிச்சுது. ஸ்கின்ஷிப். அதுதான் எத்தனை கச்சிதமா இருக்கு, இல்லையா? அது ரொம்பவே முக்கியமானது: ஸ்கின்ஷிப். அது முக்கியம்.” 

எங்கள் அம்மா கண் கலங்காமல் இருந்தார். ஜாடியை தலைகீழாகக் கவிழ்த்தார், பிறகு நேராக்கினார், அதன் மூடி சரியாக அடைத்துக் கொண்டிருக்கிறதா என்று சோதிப்பது நோக்கம். பிறகு என் பெரியம்மாவிடம் சொன்னார்: “உன் வயிறு அத்தனை நிரம்பிப்போச்சு, இப்ப உன் வாய் கூட வார்த்தைகளால ரொம்பி வழியறது.” 

2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், என் அப்பா டல்லஸ் பன்னாட்டு விமானநிலையத்தில் வந்திறங்கினார். அவரை அழைத்து வரப் போன என் பெரியம்மாவின் பின்னே சமையலறையில் நுழைந்தார், ஒரு முற்றுகை நடத்தப் போகிறவரின் மனப்பாங்கோடு வந்திருந்தார். படபடப்பான முகமன்கள் நிரம்பியவராக, அந்த வீட்டின் அளவு குறித்து புகழ்பவராக இருந்தார். எங்கள் பெரியப்பாவை அயர வைக்கிற மாதிரி இரண்டு கைகளாலும் பிடித்துக் கை குலுக்கல். சி-ஓவைச் சிறிதே தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, அவனுடைய தோளுக்கு மேலாக என்னையும், அம்மாவையும் பார்த்தார். 

 அன்பளிப்புகளைச் சுமந்து வந்திருந்தார். சுங்கம் இல்லாத கடையிலிருந்து ஸ்காட்ச் என் பெரியப்பாவுக்கு. ப்ரீமியம் மூலிகை சோப் செட் ஒன்று பெரியம்மாவுக்கு. அம்மாவுக்கு கண்ணாடி மனிகளால் ஆன கை வளை. சி-ஓவுக்கு ஒரு பேனாக் கத்தி. 

“சோ-யனீ-ஈ,” என்றழைத்தார், “உனக்கு.” மரகதக் கல்லால் ஆன சிறு ஆமை. 

அவர் எப்படி என்னை,  ‘சோ-யனா-ஆ” என்று அழைக்காமல் ஒரு சிறு குழந்தைப் பெண்ணை அழைப்பது போல, “சோ-யனீ-ஈ” என்றழைத்தார் என்று யோசித்தேன். பார்வைக்கு நான் இன்னும் சிறு பெண்ணைப் போலத்தான் இருந்தேன், அதே முன் நெற்றியில் விழும் முடிகள் கட்டையாக வெட்டப்பட்டிருந்தன. மாறாது அப்படியே இருந்த என் உடல், நான் மௌனமாக நம்பிக்கையோடு குடியிருக்கக் கூடியதாக இருந்தது.  ஆனாலும், நான் எத்தனை சிறுமி போல பார்வைக்குத் தெரிந்தாலும், நான் ஒன்றும் வயதால் அத்தனை சிறுமியல்ல. 

எங்கள் அப்பா சிரித்தபடியே இருந்தார், காத்திருந்தார். அவர் எப்படி உணர்கிறார் என்பதோடு அந்த விசாலமான சிரிப்புக்கு ஒரு தொடர்பும் இல்லை என்று எனக்குத் தெரியும்; அவருடைய முகம் இயற்கையாகவே அப்படித்தான் பார்வைக்கு இருக்கும். இப்போதும், நான் அதை அவருக்கு எதிரான ஒரு அம்சமாகத்தான் எடுத்துக் கொண்டேன். 

 “சோ-யன் – ஆ, சீக்கிரமா வந்து அதை வாங்கிக்க,” என்று கனிவாக எங்கள் பெரியம்மா உந்தினார்.  “நீதான் பார்க்கிறியே, உன் அப்பா காத்துக்கிட்டிருக்கார்.”

என் அம்மா ஏதும் சொல்லவில்லை. 

என்ன? அப்படி எதை வாங்கிக் கொள்வது எனக்கு அத்தனை கஷ்டமாக இருந்தது? நாங்கள்தான் அவரைப் பின்னே விட்டு விட்டு ஓடி வந்து விட்டோம். ஆனால் இங்கே அவர் வந்திருக்கிறார், வசீகரமான தோற்றத்தோடு, கொஞ்சம் அசடு வழிந்தபடி, பொறுமையில்லாமல், எங்களை மகிழ்வானவர்களாக ஆக்கத் தேவையான அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாராக நிற்கிறார். அந்த கட்டத்தில் நாங்கள் குச்சிகளில் பொருத்திய டோநட்-ஹாட் டாக்ஸ்களைச் சாப்பிடுவோம் அல்லது ஒவ்வொருவர் கையிலும் பிடித்துக் கொண்ட பலூன் ஒன்று தலைக்கு மேலே மிதந்தபடி வீட்டுக்கு வருவோம். 

நான் அந்த செதுக்கப்பட்ட கல்லை வாங்கிக் கொண்டேன். அதை என் கையில் பெற்ற அதே கணம், பல வருடங்கள் ஆன எங்கள் பிரிவை ஒரு உண்மையாக உணர்ந்தேன். இப்போது நான் பதினைந்து வயதை எட்டிக் கொண்டிருந்தேன். இப்போது நான் சிறிதும் பொருட்படுத்தத் தயாரில்லாத ஏதேனும் ஒன்று இருக்குமானால் அது இந்த செதுக்கப்பட்ட உருவம்தான். அதை வைத்து நான் என்ன செய்ய? என்னுடையதாக நான் இன்னமுமே கருதாத அந்த அலமாரிகளில் காட்சிப் பொருளாக வைக்க வேண்டுமா? என் ஒன்றுவிட்ட சகோதரர்களின் உதிரிப் பொருட்கள் இன்னமும் இருக்கிற இழுப்பறைகளில் போட்டு வைக்க வேண்டுமா? 

 எங்கள் பெரியப்பா தொண்டையைக் கனைத்தார் – அருவருப்பான, எந்திர ஒலி- அப்போது பெரியம்மா சொன்னார், “என்னங்க, உங்க மச்சினருக்குப் பெட்டிங்களைக் கொண்டு வர உதவி செய்வீங்களா?”

என் பெரியப்பா ரொம்பப் பெரிதுமில்லாத, ரொம்பச் சிறிதுமில்லாத ஒரு பெட்டியைத் தூக்கினார். என் அப்பா குதித்து எழுந்து, சொன்னார், “இல்லை, இல்லை. நான் எல்லாத்தையும் பார்த்துப்பேன்,” ஆனால் எங்க பெரியப்பா அந்தப் பெட்டியோடு நிலவறைக்குப் போகிற படிக்கட்டின் மேல் படியை நோக்கிச் சென்றார். என் அப்பா இரண்டு பெரிய பெட்டிகளோடு திண்டாடியபடி பின்னே சென்றார். எங்கள் பெரியம்மா சொன்னார், “சி-ஓ, போய் உன் அப்பாவுக்கு உதவி செய்.” சி-ஓவும் போனான் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

என் அப்பாவின் வரவு பற்றிப் பெயர் சொல்ல முடியாத பல விஷயங்கள் எனக்கு மனத் தொல்லை கொடுத்திருந்தன, ஆனால் ஒரு கேள்வி மட்டும் எனக்குத் தெளிவாக இருந்தது. அவர் எங்கே படுத்துத் தூங்கப் போகிறார்? எங்கள் பெரியம்மா என்னை சி-ஓவுடைய அறைக்குப் போகச் சொல்வார், அப்போதுதான் எங்கள் அப்பா அம்மாவுடைய அறைக்குள் வசிக்க முடியும் என்று நான் கவலைப்பட்டேன். ஆனால், நடந்தவை வேறு, யாரும் இப்படிச் செய்ய யோசிக்கவில்லை என்று தெரிந்தது. 

என் அப்பா வருவதற்கு முந்தைய சனிக்கிழமை அன்று எங்கள் பெரியப்பா நிலவறைக்குப் போனார், அதுவரை அந்த இடம் பொருட்களைப் போட்டு வைக்கும் பெரிய பண்டக அறையாகத்தான் இருந்தது. அங்கே அவர் பெட்டிகளை எல்லாம் நகர்த்தி சுவர்களருகே வைத்தார். என் அம்மா, போர்வைகள் இருந்த அலமாரியிலிருந்து மெத்தைப் போர்வைகளை எடுத்து சி-ஓவிடமும் என்னிடமும் கொடுத்து அவற்றைக் கீழ்த்தளத்துக்குக் கொண்டு போகும்படி சொன்னார். 

நிலவறைக்குப் போவது, சி-ஓவுக்கும் எனக்கும் பிடிக்காத விஷயம். அங்கேதான் வெந்நீர் உலை இரைந்தது, ஆனால் எங்கள் பெரியப்பா அங்கிருந்து போன பின்பும் நாங்கள் அங்கே இருந்தோம். அங்கே எங்களுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களில் மூத்தவர்கள் பளு தூக்கும் உடற்பயிற்சிக்கான பெஞ்ச் விட்டுச் செல்லப்பட்டு இருந்தது. அதில் அமர்ந்து கொண்டோம். சில பளுக்களைத் தூக்கிப் பார்த்தோம், பெட்டிகளில் இருந்த பரிசுக் கோப்பைகள், டிவிடிக்கள், மற்றும் அவர்கள் துவக்கப் பள்ளி வருடங்களிலிருந்து பயன்படுத்திய பல காகிதங்கள் அடங்கிய பெட்டிகளைக் குடைந்தோம். 

“இதைப் பார்,” என்றான் சி-ஓ. டு கில் மாக்கிங் பேர்ட், ஜூலியச் ஸீசர், நம்பர் ஸ்டார்ஸ் ஆகிய புத்தகங்களைப் பற்றிய கட்டுரைகள், பள்ளி ஆசிரியர்களால் மதிப்பெண்களிடப்பட்டவை அவை. 

“யா, அதனால் என்ன?”

“என்னவா, மட்டிக் கழுதை,” இப்படித்தான் சி-ஓவும் நானும் இப்போதெல்லாம் பேசிக் கொண்டோம். “சரி விட்டுடு. வாய்ப்பு ஒண்ணு மூஞ்சில அடிச்சாக் கூட உனக்கு அதைப் புரிஞ்சுக்க முடியாது.”

“என் மூஞ்சில அடிச்சக்கவா? நான் உன் மூஞ்சில அடிப்பேன்! உன் நெஞ்சில குத்துவேன், உதைச்சுக் கீழே தள்ளிடுவேன்.”

“உனக்கு ஆத்திரம் வரது, ஏன்னா…”

“ஏன்னா என்ன?”

இப்போது நாங்களிருவரும் ஒரே உயரம்தான் இருந்தோம், சி-ஓ என்னை விட எடை கூடுதலாக இருந்தான். இருந்தும், என்னை ஒரு படி கீழிறக்க வேண்டுமென்று நினைப்பவனைப் போல இருந்தது அவன் பார்வை. 

“ஏன்னா டாட் வரப் போறார்.”

“அதனாலென்ன? எனக்கும் அதுதெரியும். நம்ம எல்லாருக்கும் தெரியும்.” பிறகு 

’டாட்’ என்பதை சி-ஓ சொன்ன விதத்தை நினைத்துப் பார்த்து,  “டாட்,” என்றேன், “நீ ஒரு இடியட்.”

 “நீ என்ன வேணாச் சொல்லிக்க, எனக்குக் கவலையில்லை,” என்றான் சி-ஓ, “உன் மேலெ எனக்கு அக்கறையில்லை.”

ஆரவாரமாக வந்து நுழைந்தவர், நிலவறையில் மறைந்து போனார் எங்கள் அப்பா. சுமார் ஒரு வாரம் நாங்கள் அவரை அனேகமாகக் காணவில்லை. பகல் பூராவும் உறங்கினார், இரவில் அலைந்து திரிந்தார். என் அம்மா அவருக்குச் சாப்பாட்டை வெளியில் வைத்துப் போகத் துவங்கினார், அதை ப்ளாஸ்டிக் விரிப்பில் மூடி வைத்திருந்தார். எங்கள் அப்பா எப்படி இருக்கிறார் என்று பார்க்க அவள் நிலவறைக்குள் போவதை நான் பார்க்கவில்லை, அல்லது இருவரும் அவசியமான ஒன்றிரண்டு வார்த்தைகளைத் தவிர வேறெதையும் பேசிக் கேட்கவில்லை. 

ஒரு தடவை, நடு ராத்திரியில் நான் விழித்துக் கொண்டேன், தூங்குகிற என் அம்மாவைச் சுற்றிப் போனேன், சமையலறைக்கு ஒரு கோப்பை தண்ணீரை வேண்டிப் போனேன். இருண்ட கூடத்தைத் தாண்டியதும் அங்கே நின்றேன். சமையலறை விளக்கு அணைக்கப்பட்டிருந்தது, ஆனால் என் அப்பாவைத் திறந்திருந்த மைக்ரோவேவ் அடுப்பின் ஒளியில் பார்த்தேன். அவர் ஒரு வெள்ளை உள்சட்டையையும், ஓடும்போது போடும் நைலான் கால்சராயும் அணிந்திருந்தார். அதோடு வீட்டுக்குள் போடும் ஸ்லிப்பர் ஒன்றையும் அணிந்திருந்தார், அந்தக் கொரியப் பழக்கத்தை அவர் விட்டு விடவில்லை. 

நான் இருந்த இடத்திலேயே நின்றேன், அங்கே நான் இருப்பதை அவர் அறிந்ததாகத் தெரியவில்லை. அந்த அடுப்பில் விசைகளைப் புரிந்து கொள்ள அவர் தடுமாறியதைப் பார்த்தேன். பவர், டீஃப்ராஸ்ட், டைம் குக் 1. நாங்கள் முதலில் வந்திறங்கியபோது நானும் அதே விசைகளால் அடர்ந்த குழப்பத்தில் திரிந்ததை நினைவு கொண்டேன். எதுவும், ஒரு விஷயம் கூட சாதாரணமாகவோ, சுலபமாகவோ அல்லது இயற்கையாகவோ அல்லது எட்டக் கூடியதாகவோ இருக்கவில்லை. இப்போது எனக்குத் தெரியும், பவர் விசையை ஒரு தடவை அழுத்தினால் உயர்ந்த வெப்பம் கிட்டும், 1:00 அல்லது :60  என்று அழுத்தினால் ஒரு நிமிடம் சூடுபடுத்தும். அது அந்த சுற்றும் மேடையைச் சுழற்றும், விசிறி ஒன்று வெப்பத்தை வெளியே கடத்தும். 

ஆனாலும் நான் இருண்ட கூடத்தின் பாதையில் நின்றேன். அவருக்கு உதவ நான் அசைந்து கொடுக்கவில்லை. 

அவர் தன் சூடாகாத கிண்ணியை வெளியே எடுத்தார். மைக்ரோவேவின் கதவை அடித்து மூடியவர், அது அந்த விளக்கை அணைத்து விடும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. வேறு ஸ்விட்ச்சைத் தேடித் துழாவினார். இப்போது உடனடியாக, வலி உண்டாக்கும்படி தீவிர வெளிச்சம் அங்கே பரவியது. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு முழு கவனத்தோடு நகர்ந்தவர், கூடத்தில் நான் நிற்பதை இன்னமும் கவனிக்கவில்லை. அவர் சமையலறையில் இங்குமங்கும் சென்றபோது, அவருடைய நைலான் கால்சராயும், பாதணிகளும் தேவையற்ற சத்தங்களை எழுப்பின. அவர் பல இழுப்பறைகளைத் திறந்ததைப் பார்த்தேன், ஒரு ஸ்பூனைத் தேடியிருக்கிறார். அவர் சாப்பிடுகையில், தன் குளிர்ந்த சாப்பாட்டின் மேல் குனிந்து அமர்ந்திருந்தவரைப் பார்த்தேன். அவர் அந்த ஸ்பூனைப் பிடித்த விதம் – மணிக்கட்டு பூட்டப்பட்டாற்போல இறுகி இருந்தது- அது நான் மறந்திருந்த ஒன்றை உடனடியாக எனக்கு நினைவுக்குக் கொணர்ந்தது. அந்தக் கிண்ணியில் இரவு உணவுக்கு எங்களுக்கும் கொடுக்கப்பட்ட மாட்டு வால் குழம்பு இருந்தது. மஜ்ஜை நிரம்பிய அந்த வடிசாறு, இந்நேரம் நிச்சயமாக திடமான கூழ் போல ஆகி இருக்கும். அனேகமாக அதன் மேல் மஞ்சள் திட்டுகளாகக் கொழுப்பு மிதக்கும். 

அப்போது நான் ஏதோ செய்ய வேண்டும் என்றானது. என் இரக்கமற்ற சிறிய செயலுக்கு நிஜமாக ஏதோ செய்து ஈடு கட்ட வேண்டியதாயிற்று. ஆனால் எனக்குத் தெரிந்திருந்தது நான் விட்டுக் கொடுத்து விட முடியாது, ஏனெனில் விட்டுக் கொடுப்பது என்பது மேன்மேலும் விட்டுக் கொடுப்பதிலேயே சென்று முடியும். பிறகு நான் எங்கே போவது? என் பயிற்சி கொடுக்கப்பட்ட சுயம்: அது ஒன்றுதான் என்னிடம் இருந்தது. அன்பு காட்டுதல் அல்லது மன்னித்தல் என்பது போல ஏதாவது தெரிந்தால், அதற்கு உடனே ஒரு திருத்தம் கொண்டு வந்து அதை நசுக்குவது ஒன்றுதான். 

……

(அடுத்த இதழில் நிறைவுறும்)

ஸ்கின்ஷிப் – பகுதி 3 – சொல்வனம் | இதழ் 334 | 12 ஜன 2025

ஸ்கின்ஷிப்

ஸ்கின்ஷிப் – பகுதி 1

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “ஸ்கின்ஷிப் – பகுதி 2”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.