கவிஞர் பாசனின் ஸ்வப்ன வாசவதத்தா – 1

This entry is part 2 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

உவமானம் சொல்வதில் காளிதாசன் என்று சொன்னது போலவே, தண்டி என்றொரு கவி அவர் எழுத்து மிக எளிமையான பதங்கள், அடுக்கடுக்காக அழகிய சொற்றொடர்களாக அனேகமாக வசன நடையில், காட்டாறு பாறைகளின் மேல் துள்ளி குதித்து போகும் சமயம் வரும் சீரான நாதம் போல – பொருள் தெரியா விட்டாலும் கேட்டு கீதம் கேட்பது போல சொல்லின் நயத்தை ரசிக்க முடியும்.   தண்டின: பத லாலித்யம் என்பதன் பொருள்- தண்டி என்ற கவியின் பதங்களே நளினமானவை. . இவர் எழுதியது தச குமார சரித்திரம் என்ற சம்பூ என்று அழைக்கப்படும் கவிதையும், கட்டுரையுமாக அமைந்த காவ்யம்.

அடுத்தது பாரவி என்பவர் அவர் பொருள் பொதிந்த சொற்களுக்காக மதிக்கப் பட்டவர்.  கிராதார்ஜுனீயம் என்பது இவரது படைப்பு. அர்ஜுனனுக்கு ஈஸ்வரனின் அருள் கிடைத்த சரித்திரம், நாடகமாக உள்ளது. கடைசியில் இவை அனைத்தும் ஹர்ஷ கவியிடம் காணலாம் என்று அந்த ஸ்லோகம் முடியும். ஹர்ஷ கவி எழுதியது நள சரித்திரம்.  சிலர் மாக माघ -கவி என்பர்.  இவர்கள் தவிர பவபூதி என்பவர் உத்தர ராம சரிதம் எழுதி புகழ் பெற்றவர்.  பாஸ என்பவர் காளிதாசனுக்கும் முன் இருந்தவர் என்கிறார்கள், நிச்சயமாக சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவர் தன் பெயரைக் கூட தன்னுடைய காவியத்தில் குறிப்பிடவில்லை. வெகு காலம் தேடிய பின் தான்  நாடகமான அமைந்த அவரது படைப்புகளை கண்டு கொண்டதாகச் சொல்வர்.  காளிதாசன்  இவரைக் குறிப்பிட்டு சொன்ன விவரங்களே, இப்படி ஒரு கவி இருந்தார் என்பதற்கு சான்றாக இருந்தது. ஆனால் ஸ்வப்ன வாசவதத்தா என்ற இவரது நாடக கதை  இந்திய நட்டின் பல மொழிகளிலும் நாடகமாக  ப்ரசித்தமாக  ஆகியிருந்தது. இதற்கு முன்னோடியாக ப்ரதிக்ஞா யௌகந்தராயன் என்ற நாடகம் – இரண்டும் சேர்ந்தது தான் வாசவதத்தா என்ற  முழுமையான சரித்திர நாடகம்.

இவருடையது என்று 13 நூல்களை கேரளத்தைச் சேர்ந்த கணேச சாஸ்திரிகள் என்பவர் ஆராய்ந்து  ஆங்கிலேயர் காலத்திலேயே புத்தகமாக பதிப்பித்தார் .  Travancore publications  என்ற பெயரில் அவர் மகத்தான செயலைச் செய்திருக்கிறார்.  மகத ராஜ்யத்து கதையை கிமு 800 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் வடமொழியில் எழுதியதை கேரளத்தில் இருந்த ஒரு அறிஞர் வெளிக் கொணர்ந்தது என்பது ஆச்சர்யம்.   அனேகமாக அந்த நாள் எழுத்தாளர்கள் ராமாயணம், பாரதம் அல்லது பாகவதம் இவைகளிலிருந்து ஒரு சம்பவத்தை விவரித்து நாடகமாகவோ, கவிதையாகவோ எழுதியிருப்பார்.   சரித்திர,சமூக  கதைகள் என்று பார்த்தால் ஸ்வப்ன வாசவதத்தா  என்ற நாடகம் முக்கியமானது.  இதை எழுதிய பாச (Baasa) என்பவர் நிறைய எழுதியிருந்தாலும் அவர் காலமோ, இயற்பெயரோ கூட தெரியவில்லை. ராஜசிம்ஹன் என்ற அரசனை வாழ்த்துவதால் ஏதோ அரச சபையில் இருந்திருப்பார் என்ற வரை தெளிவு. 

நாடகத்தின் கதை

ஸ்வப்ன வாஸவ தத்தா என்ற இந்த நாடகம், அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த ஒரு கதையின் அடிப்படையில் எழுதப் பட்டது என்று அறிகிறோம். உதயனன், பத்மாவதி என்ற இருவரின் கதை இது. அவர்களின் சந்திப்பும், வாழ்க்கையுமே கதையின் அடிப்படை.   வத்ஸ என்ற ப்ரதேசத்து ராஜா உதயனன். அவன் மனவி வாஸவதத்தா. யௌகந்தராயன் என்ற மந்திரி.  இந்த நூலுக்கு முன்னோடியாக யௌகந்தராயன் என்ற பெயரில் ஒரு நாடகம் இந்த கவியே எழுதியுள்ளார்.  அதன்படி, உதயணன் என்ற சிற்றரரசன் . உஜ்ஜனியின் பேரரசனான ப்ரத்யோதன் என்பவரின் மகள் வாஸவத்தாவை விரும்புகிறான். அந்த பெண் அவனிடம் வீணை கற்றுக் கொண்டவள்.  இன்னும் விவரம் அறியாத சிறுமியே. ஆனாலும் யௌகந்த ராயன் என்ற மந்திரி, பேரரசர் சம்மதிக்க மாட்டார் என்று அறிந்திருந்தார்.  தன் அரசனை திருப்தி செய்ய, வாஸவதத்தாவை கடத்தி வந்து , அவர் முயற்சியில் அந்த விவாகம் நடக்கிறது. அவளுக்கு உதயணனிடம் தனிப்பட்ட ஈடுபாடு இல்லாத பொழுதிலும்  வாஸவதத்தா மணமான பின் கணவன் என்ற மதிப்பும், மரியாதையுடனுமே இருந்தாள். அவர்கள் தாம்பத்யமும் இருவருக்கிடையிலும் அன்யோன்யமான அன்புடனேயே இனிமையாகவே  இருந்தது. அவள் தந்தை இதை மிகவும் அவமானமாக எடுத்துக் கொள்வார் என்றும்  தன் அனுமதியின்றி விவாகம் செய்தான் என்று உதயணனிடம் கோபம் கொள்வார் என்றும் எதிர் பார்த்தனர்.  அந்த நாட்களில் பெண் மகவுகள் பெற்றோரின் பொறுப்பே. அவர்  மனம் ஒப்பி கையளித்து மணம் செய்து கொடுப்பது தான் வழக்கம்.  பெண் தானாக வரனைத் தேடிக் கொள்வதோ, உதயணன் செய்தது போல கடத்திச் செல்வதோ, தண்டிக்கத் தக்கவைகளாக கருதப் பட்டன. 

அந்த சமயம், ஆருணி என்ற எதிரி அரசன் வத்ஸ ராஜ்யத்தை தாக்க வந்து கொண்டிருந்தான்.  உதயணனோ, பொறுப்பின்றி கலை, சங்கீதம் என்று பொழுது போக்கிக் கொண்டிருந்தான். உஜ்ஜயினி அரசனிடமிருந்தும் உதவி கிடைக்காது. அரசனும் அவன் படைகளும் கூட  தயாராக இல்லை.  அந்த சமயம் யௌகந்தராஜன் வேறு ஒரு யோசனை செய்தார்,

மகத ராஜாவின் சகோதரி பத்மாவதி உதயனனின்  மனைவி ஆவாள் என்று ஜோதிடர்கள் சொன்னதாக கேள்விப் பட்டார். பத்மாவதி சிறந்த அறிவும், செயல் திறனும் உடையவள்.   சாமர்த்யமும் உள்ளவள். சுயமாக அரசை பொறுப்புடன் நடத்த தெரியாத அரசனுக்கு, அவளைப் போன்ற பெண் தான் தேவை. இந்த திருமணத்தை அவள் அண்ணன் மகத ராஜாவே முன்னின்று நடத்திக் கொடுத்தால் அரச முறையில் பல நன்மைகளும் கிடைக்கும்.  முக்கியமாக எதிர் கொள்ள இருந்த போர் முற்றுகையை சமாளிக்கலாம் என்ற வழியில் அவர் யோசனை சென்றது. ஏற்கனவே மணமான சிற்றரசனுக்கு மகத ராஜா சகோதரியைத் தர சம்மதிக்க வேண்டுமே. 

தெய்வமே உதவியது போல ஒரு செய்தி அவருக்கு கிடைத்தது.  அழகியான பத்மாவதி, உதயணனை விரும்பியதாகவும், ஏற்கனவே மணமானவன் என்பதால் அரசன் அந்த யோசனையை கைவிட்டதாகவும் அறிந்தார்.  இப்பொழுது யௌகந்த ராயனுக்கு வாய்ப்பை கை நழுவி போகாமல் இருக்க என்ன செய்வோம் என்ற சிந்தனை.  

யோசித்து யோசித்து வாஸவ தத்தாவிடமே வந்தார்.   அவள் தன் உயர் குல பெருமையை கை விடாதவள் என்பதும் அவர் அறிந்ததே. சகோதரி! ராஜ்யத்தின் நிலைமை சரியாக இல்லை. ஆக்ரமிக்க வருபவனும் பலசாலி. நம்மால் ஈடு கொடுக்க முடியாது என்று ஆரம்பித்து விவரமாக சொன்னார். தானே உபாயமும் சொன்னார். சில காலம் நீ உதயணனை பிரிந்து இருந்தால் நான் பத்மாவதியுடன் உதயணனின் விவாகத்தை ஏற்பாடு செய்ய முடியும்.  அதன் பின் உன்னையும் அவனுடன் சேர்த்து வைப்பேன். தன் திட்டத்தை விவரித்தார்.  குல வழக்கப் படி அவள் வெளி மனிதர்கள் முன் முகத்தை மறைக்கும் திரை இன்றி வருவதும் இல்லை, அதற்கு வெட்கப் படுபவள்.  மந்திரியின் யோசனை கேட்ட பொழுது தன் சுகத்தை விட அரசு காப்பாற்றப் பட வேண்டும் என்று சொல்லி சம்மதிக்கிறாள்.

மகாராணி திடுமெனக் காணவில்லை என்று அந்த:புரம் அல்லோல கல்லோலப் பட்டது. கடைசியில் எதோ ஒரு தீ விபத்து அதில் அவள் மாண்டிருக்கக் கூடும் என்று வதந்தி பரவியது. உதயணன் துடித்தான். அவளை நினைத்து வருந்தினான். மந்திரி யௌகந்த ராயன் இதற்குள் அவளை பத்மாவதியிடமே, கொண்டு வந்து சேர்த்தார். என் சகோதரி, சில காலம் உன்னிடம் பாதுகாப்பாக இருக்கட்டும். முக்யமான ஒரு வேலையை முடித்து விட்டு இவளை அழைத்து செல்கிறேன் என்றார்.   

ப்ரதிக்ஞா யௌகந்தராயன்

கவி பாஸன் எழுதிய சம்ஸ்க்ருத நாடகம் – மொழி பெயர்ப்பு

மஹாமஹோபாத்யாய கணபதி சாஸ்திரி அவர்களின் உரையின் உதவியுடன்

நாடக ஆரம்பம்: அறிவிப்பவன் (ஸூத்ர தாரன்)

வாஸவதத்தா, அவள் தந்தை அதி வீரனான மகா சேனன், வத்ஸ தேசத்து ராஜா, அவருடைய வலது கரம் போல செயல் படும் யௌகந்தராயன் அனைவரும் வாழ்க. (இவர்கள் தான் முக்கியமான கதா பாத்திரங்கள்)

கடவுள் வணக்கம்:  விக்ன ராஜனை, வாக்தேவியை வணங்குகிறேன். திரும்பத் திரும்ப வணங்குகிறேன். இவர்கள் அருளால் என் நாடகத்தை ரசிகர்கள் மனம் மகிழ்ந்து ரசிக்க வேண்டும்.

இவர்கள் அருளால்,  ஸ்ரீ பாசனின் இந்த ப்ரதிக்ஞா என்ற குறு நாவலுக்கு,  ரஸசரஸ்வதி என்ற என் உரையையும் ரசித்து படித்து மனம் மகிழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். 

நாடக ஆரம்பம். அறிவிப்பாளர் ஒரு பாடகியை அழைக்கிறார். 

ஆர்யே!  சபையை வணங்கும் விதமான உங்கள் பாடலுக்குப் பின் நாங்களும்  நாடகத்தை தொடங்குவோம். பாடுகிறாள்.

பாடகியிடம்: ஆர்யே! வழக்கம் போல இல்லையே.  உடல் நலம் சரியில்லையா?உதவிக்கு யாரையாவது அனுப்ப வேண்டுமா? முதன் மந்திரியிடம் சொல்லி வைத்யரை அனுப்பச் செய்கிறேன். 

மேடையின் பின் பேச்சுக்குரல் கேட்கிறது. 

முதன் மந்திரி யௌகந்தராயன், சாலகன் என்பவனும் வருகிறார்கள்.

யௌகந்தராயன்: சாலக, நீ தயாராக இருக்கிறாயா?

ஸாலகன்:  ஐயா, உங்கள் ஆணை, சொல்லுங்கள், செய்ய காத்திருக்கிறேன்.

யௌ: வெகு தூரம் போக வேண்டியிருக்கும். 

சாலகன்: அதனால் என்ன, சொல்லுங்கள்.   கடினமான செயலோ, வெகு தூரம் செல்ல வேண்டுமோ, ஆர்ய!  நீங்கள் சொல்லி மறுப்பேனா?

யௌ: காரியம் கடினமானது என்று அறியாமலேயே, இவன் நம்மிடம் உள்ள அன்பினாலும், நம்பிக்கையாலும் உடனே செய்வதாகச் சொல்கிறான்.   நம்பிக்கையானவர்கள், நம் நலனை பேணுபவர்கள், இவர்களையே கடினமான செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். மீதி தெய்வச் செயல். எடுத்த காரியம் பலன் தருவதோ, கை மீறிப் போவதோ நம் கையில் இல்லை.

வேணு வனம், எனும் அடர்ந்த காடு   நர்மதா நதியின் அருகில் உள்ள அடர்ந்த காடுகள்.  அங்கு மேலும் இருண்ட நாகவனம்- என்ற யானைகள் மிகுந்த மூன்று காடுகள்.  நாளை மறு நாள்,  நமது வத்ஸ தேச அரசன் உதயணன் அங்கு போக தீர்மானித்து இருக்கிறான்.  நீ முன்னால் சென்று நாகவனத்தின் அமைப்பு, என்ன வழிகள் சுலபமானது, எதில் ஆபத்து என்ற விவரங்களை சேகரித்துக் கொள்.  அரசனுக்கு அந்த இடம் புதிது. 

சாலகன்: ஆர்ய! ஆணையிடுங்கள். இந்த சரீரம் உங்கள் சேவைக்கே என்று உள்ளது.  எந்த வேலையானாலும் செய்யத் தயாராகவே இருக்கிறேன்.  காட்டில் நுழைய அனுமதி பத்திரம் தாருங்கள்.

யௌ: விஜயே!

விஜயா வருகிறாள். ஆர்ய! இதோ வந்து விட்டேன்.

யௌ: அரசரின் தாயார் அனுப்பிய கடிதமும் ஆசிர்வதித்து அனுப்பிய காப்புக் கயிறையும் கொண்டு வா. 

(தூர பிரதேசங்களுக்கு யாத்திரை போகும் சமயம் மூத்தவர்கள், மந்தரித்த கயிற்றை, கையில் காப்பு கட்டி, யாத்திரை நலமாக இருக்க ஆசீர்வதிப்பது ஒரு வழக்கம்)

யௌ: நீ இந்த தேசத்துக்குச் செல்லும் வழிகளை அறிவாயா?

சாலகன்: கேட்டிருக்கிறேன். போனதில்லை.

யௌ: விஷயம் ரகஸ்யமாக இருக்கட்டும். நாகவனத்தில் ஏதோ சதி நடக்கும் என எனக்கு விவரம் வந்துள்ளது. உஜ்ஜயினியின் மகா ராஜா ப்ரத்யோதன்- யானைகளை வைத்து நம் அரசனை ஏமாற்றி அபகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல். அதையறியாமல் நம் அரசன் தன் திறமையை நம்பி தவறாக எதுவும் செய்து விடக் கூடாது. அக்ஷௌஹிணி படைகள் உடைய மகாசேனன் – பெரிய சேனையை உடையவன் என்றே அவனுக்கு பெயர். வத்ஸ ராஜனிடம் ஏனோ இப்படி பயந்து வஞ்சனை செய்ய நினைக்கிறான்.  நேரடியாக யுத்தம் செய்ய பயமா? ப்ரத்யோதனின் உள் நோக்கம் தெரியவில்லை.

(பாண்டவ அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இருபத்தைந்தாவது சந்தானம் உதயணன். வாசுகி சகோதரன், வசுனேமி என்பவன் கொடுத்த கோஷவதி என்ற வீணையை வாசிப்பதில் நிபுணன், கஜ வசீகரம்- யானைகளை அடக்குவது என்ற கலையில் தேர்ந்தவன், இந்த உதயணன்  வத்ஸ தேசத்து அரசன். அவனுடைய முதன் மந்திரி  யௌகந்தராயன்.) 

ப்ரத்யோதன் என்ற உஜ்ஜயினியின் பேரரசன் தன் மகள் வாசவதத்தாவை உதயணனுக்கு கொடுக்க விரும்புகிறார். நேர் வழியில் தானே வரனை நிச்சயிக்க  ஒரு தடை இருந்தது.  குல,ரூப,சௌர்யம் என்ற குணங்களுடன் பல அரச குமாரர்களும் அவர் மகளை வேண்டினர்.   வலிமை மிகுந்த மற்ற அரசர்களின் போட்டியையும் தவிர்க்க ஒரு வழியாக தனது நாட்டின் எல்லையில் இருந்த கஜ வனத்தில் வஞ்சனையாக உதயணனை வென்றதாகச் சொல்லி தன் அரண்மனையில் மகள் வாசவதத்தாவுக்கு வீணை ஆசிரியராக நியமிக்கவும், குரு சிஷ்யைகளிடம் அன்யோன்யமான நட்பு என்ற காரணம் சொல்லி திருமணத்தை நடத்துவதாகவும் திட்டம் வகுத்தான்.   செயற்கையான ஒரு நீல வர்ண யானையை முன் நிறுத்தி,  அவன் தடுமாறிய சமயம் கடத்துவதாக திட்டம். இதை எப்படியோ அறிந்த யௌகந்தராயன் அதைத் தடுக்க முயன்றார்.   உதயணன் குருவான யௌகந்தராயணின் மதி நுட்பத்தால்,  பத்ரவதி என்ற  அந்த யானையை அடக்கி அதிலேயே வத்ஸ ராஜ்யம் வந்து சேர்ந்து விட்டான். )

விஜயா என்ற பணிப்பெண் வந்து கடிதத்தையும், கையில் கட்டும் காப்புக் கயிறையும் தருகிறாள்.

ஒரு அரண்மனை சேவகன் வந்து வணங்குகிறான். ஐயா, ஹம்சகன் என்பவன் திரும்பி வந்திருக்கிறான்.

யௌ: திடுக்கிட்டு- தனியாகவா வந்திருக்கிறான். அவனை அரசனுடன் அனுப்பி இருந்தேன். தனியாக வந்தது கவலையளிக்கிறதே.  தன்னைச் சார்ந்த குடும்பத்தில் ஒருவர் வெளீயூர் சென்று திரும்பி வரும் வரை ஒரு விதமான கலக்கம் இருந்து கொண்டேயிருக்கும்.  ஏன் என் மனம் சஞ்சலப் படுகிறது. அவன் கொண்டு வந்த செய்தி நல்லதா, கெட்டதா ?

ஹம்ஸகன் என்பவனும், நிர்முண்டகன் என்ற சேவகனும் வருகிறார்கள். 

சேவகன் வழி காட்ட, ஹம்சகன் வருகிறான். எங்கு இருக்கிறார்?

இதோ நிற்கிறார். உள்ளே போங்கள். அரசர் நலமாக இருக்கிறார் தானே. 

நேற்றே கிளம்பி விட்டார்.

யௌ கேட்டுக் கொண்டே வருகிறார். நலம் தானா என்று ஏன் கேட்டான்? அரசனை சிறை பிடித்து விட்டார்கள் போலும்.

ஹம்ஸகன்: ஆர்ய, தாங்கள் ஊகித்தது  சரியே. அரசனை சிறை பிடித்து விட்டார்கள்.

யௌ: பிடித்து விட்டார்களா? ஹந்த போ:! வருத்தம் தொனிக்க, ப்ரத்யோதன் கடினமான இந்த செயலைச் செய்தே விட்டானா? மந்திரிகள் என்று இருக்கும் நாங்கள் ,ருமன்வான், நான் மற்றும் பலர் அருகில் இருக்கையில் அரசனை சிறை பிடிக்க முடிந்ததா?  அரசனை பாதுகாக்கிறோம் நாங்கள் என்று ஸூழ்ந்து நிற்கிறோம்.  எங்கள் திறமைக்கே இது சவால். எங்கள் நற் பெயரும், புகழும்  அழிந்தன.  வரும் முன் காக்க வேண்டிய பண்டிதர்கள், கூர்மையான மதி நுட்பம் கொண்டவர்கள்,  என்று எங்களைச் சொல்வார்கள். உடன் சென்ற ருமன்வான், குதிரைப் படையை தலைமை தாங்கிச் சென்றானே.  அரசனின்  அருகிலேயே   இருந்திருக்க வேண்டுமே.  வினாடி நேரம் கூட கண்கள் அகலாமல் காவல் காக்கக் கூடியவன் தான் ருமன்வான். அதையும் மீறி இப்படி நடந்து விட்டதே. 

ஹம்ஸகன்: படை பலத்தோடு அரசர் சென்றிருந்தால் சிறை பிடிக்க முடிந்திருக்காது. தனியாக அல்லவா சென்றார். 

யௌ:  என்ன சொல்கிறாய் ? படை வீரர்கள் உடன் இருந்தனரே. 

ஹம்ஸகன்: கேளுங்கள். 

யௌ: உட்கார். வசதியாக அமர்ந்து சொல்.

ஹம்ஸகன்: விடிந்தும் விடியாததுமான அதி காலை. இருள் இன்னும் பிரியவில்லை. இளம் காற்று சுகமாக வீச, நர்மதா நதியின் குளிர்ந்த நீரில் காலை நனைத்தபடி கடந்து வேணு வனம் சென்றார்.  குடை ஏந்தி சென்றவர்கள், யானையை அடக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே உடன் இருந்தனர்.  யானைகள் நடந்து நடந்து அமைத்திருந்த பாதை வழி காட்ட, புலிகளின் மற்ற வன விலங்குகளின்  உல்லாசமான குரல் வழியெங்கும் கேட்டபடி இருக்க, நாகவனம் சென்று விட்டார்.   ஸூரியனின் முதல் கிரணங்கள்  ஒரு வில் தூரம் வானத்தை அலங்கரிக்கும் முன்  பல யோஜனைகளை கடந்து விட்டிருந்தார்.  

யௌ: அதன் பின்?

ஹம்சகன்: திடுமென கண்ணுக்குத் தெரியாமல் சென்று விட்டிருந்தார். நாங்கள் செய்வதறியாது திகைத்து நின்றோம். அதே சமயம் உடன் சென்ற சேனை வீரர்கள் பயத்துடன் அலறியதைக் கேட்டோம். ஏதோ ஆபத்து, என்ற மட்டும் அறிந்தோம்.

யௌ: இரு முதலில் இருந்து சொல். இரு மைல் தூரம் சென்றவர் மல்லிகை கொடி படர்ந்த சரீரம், நகமோ, பல்லோ, இல்லாத நீல வண்ண உருவைப் பார்த்தோம் என்று தானே சொல்லப் போகிறாய். 

ஹம்சகன்:  ஆர்ய, எப்படித் தெளிவாக வர்ணித்துச் சொல்கிறீர்கள். முன்னமே தெரிந்தும் இப்படி ஒரு இடர் வரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

யௌ: தெரிந்திருந்து கவனமாக இருந்தாலும் காலம் வலியது. அதன் பின்?

ஹம்ஸகன்:  அரசன் நூறு பொற்காசுகள் எங்களிடம் கொடுத்து, வீரர்கள் யாரும் உடன் வர வேண்டாம் என்றார்.    மகிழ்ச்சியுடன், ‘இங்கு நீல வண்ண குவலயம்(யானைத்)  தலைவன் இருப்பதாக நான் யானைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து படித்த காலத்தில் கேள்விப் பட்டிருக்கிறேன்.  நீங்கள் கவலைப் படாமல் இருங்கள்.   என் வீணையுடன் சென்று அதை கைப் பற்றிக் கொண்டு வருவேன், பயப்படாதீர்கள் என்றார். 

யௌ: ருமன்வான் அங்கு வந்தாரா? என்ன செய்தார்?

அவர் நிறைய சொல்லிப் பார்த்தார். வேண்டிக் கொண்டார்.   அரசனோ, என் மேல் சபதம் என்றார்.   வெய்யில் ஏறிக் கொண்டிருந்தது. சபதம் செய்த பின் அதை மீற முடியாது என்பதால், தன் சுந்தர பாடலம் என்ற குதிரையில் ஏறிக் கொண்டு உடன் வந்த இருபது வீரர்களுடன்  திரும்பிச் சென்று விட்டார். 

யௌ: நீல யானையை அடக்கி கொண்டு வர கிளம்பி விட்டாரா?  முன் நடந்த செய்திகளை மறந்து விட்டாரா? (ப்ரத்யோதனை வெற்றி கொண்டது). அதனால் அவன் வஞ்சமாக சிறை பிடித்துச் செல்லச் செய்த உபாயம் இது.   வருத்தத்துடன் – உதவிக்கு யாரும் இல்லாமல் தன்னத் தனியாக சென்றது சரியல்ல   

ஹம்ஸக, நமது போதாத வேளை. வேறு என்ன சொல்ல 

ஹம்ஸகன்: ஐயா, அந்த யானை ரூபத்தில் இருந்தது ஒரு யந்திரம். ஆயுதம் தாங்கிய வீரர்கள் அதனுள் இருந்தனர்.  உள்ளே வீரர்கள் ஆயுதங்களுடன் தயாராக இருக்க, எதிரியை ஏமாற்ற யானை உருவம்- 

யௌ: அதன் பின்?

ஹம்ஸகன்: இதைப் பார்த்தவுடன் புரிந்து கொண்ட நமது வத்ஸ ராஜன், பயப்படாதீர்கள். நம் குல ஜனங்கள்,ஆசார்யர்கள் மற்றும் நமக்கு சகாயமாக உள்ள அனைவரிடமும் நான் இதை முறியடித்து மீண்டு வந்து விடுவேன் என்று சொல்லுங்கள். இந்த வஞ்சனை ஆரம்பம் தான். அதை அதே போல வஞ்சனையாலேயே முறியடிப்பேன், என்று சொல்லி விட்டு, சிறை பிடிக்க வந்த அதிகாரிகளுடன் சென்று விட்டார். 

யௌ: தானே சரணடைந்தாரா?  ஆனால் வேறு என்ன செய்வார்? அது சரியான செயலே. தைரியசாலி. எதிர்த்து நின்று போரிட்டிருந்தால் வீரத்தைக் காட்டலாம். வஞ்சனை என்றால் அதை மாற்று வஞ்சனையாலேயே முறியடிக்க தீர்மானித்து விட்டார் போலும். தன் மானம் மிக்கவர். நிதானமாக சிந்திக்கத் தெரிந்தவர், மன உறுதியுடன் செயல்படும் ஸூரன்.  ஏதோ திட்டமிட்டிருப்பார். ஏமாறுகிறோம் என்பதையே தனக்கு அவமானமாக உணர்ந்திருப்பார்.

ஹம்ஸகன்: வெய்யில் கொளுத்தியது.  ஸூரியாஸ்தமன நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார். 

யௌ: எப்படி? ஏன்ன காரணம்?

எதிரி வீரர்கள் காட்டுக் கொடிகளுடனேயே மறைந்து இருந்திருக்கிறார்கள். அவைகளைக் கொண்டு சாதாரண பிரஜையை கட்டுவது போல சில காட்டு வாசிகள் கட்டினர். 

யௌ: காட்டு வாசிகளா? எப்படி இருந்தனர்.

ஹம்ஸகன்: பலசாலிகள், பருத்த உடல், மல் யுத்தர்கள் போல தினமும் பயிற்சிகள் செய்து திண்ணென்றிருந்தனர்.  உயர்ந்த ஜாதி யானைகளின் தும்பிக்கைகள் போல நீண்ட கைகள்.  பார்த்தாலே மரியாதை உண்டாகும் மல் யுத்த வீரர்கள். வில்லும் அம்பும் புஜங்களில் அடையாளமிட்டிருந்தன. சதா காலமும் காட்டில் மிருகங்களை வேட்டையாடுவார்கள் போலும்.  உற்றார் உறவினர்களை அன்புடன் பாலிக்கும் குணமும், அந்தணர்களை மரியாதையுடன் நடத்துபவர் எனவும் அறிந்தோம்.  பொதுவாக நல்ல குணவான்கள். கைகளாலேயே நம் அரசனை ஆலிங்கணம் செய்வது போல இறுக அணைத்து, அவருக்கு எந்த வித தேக அசௌக்யமும் இல்லாமல் அழைத்துச் சென்றனர். 

யௌ: மூர்ச்சை தெளிந்தது எப்பொழுது?  

ஹம்ஸகன்: அவர்கள் கைகளை விலக்கிக் கொண்டதும் விழித்துக் கொண்டு விட்டார்.

யௌ: அதுவும் முறையே. நல்ல நினைவுடன் இருக்கும் வீரனை, உடலளவில் கட்ட வேண்டும். அவன் வீரமோ, ஆற்றலோ குறையாமல் பந்தனம்- சிறை பிடித்தல் என்பது சில அரச விதிகளுக்கு உட்பட்டதே.  நல்ல வேளை அரசன் தானே விழித்துக் கொண்டதும், விடு பட்டதும் அவருடைய சுய மரியாதையும், உடல் ஆற்றலும் குறையவில்லை என்பதை காட்டுகிறது.

ஹம்ஸகன்:  மற்றொரு ஆச்சர்யமான விஷயம், அந்த வீரர்கள் தங்களுக்குள் ஒருவன் செய்ததைக் கண்டித்தனர். அவன் தானாக தாக்க முயன்றதையும் தடுத்ததோடு. அந்த கூட்டத்தின் தலைவன் போல இருந்தவன், தாக்கியவனை, மறுபக்கத்திலிருந்து வந்து  கேசத்தை பற்றி இழுத்து  வேகமாக வீசி விட்டான். அனாயாசமாக அப்படி வீசியதிலேயே அந்த வீரன் வெகு தூரத்தில் போய் விழுந்தான்.

யௌ: ஹம்ஸக, சற்று பொறு. நீ சொன்ன விஷயங்களைக் கேட்டு மனம் பதறுகிறது. சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்கிறேன்.  அரசனோ, யோசியாமலோ அல்லது தன் பலத்தில் அதீத நம்பிக்கையாலோ, நம் ராஜ்ய எல்லையை விட்டு ப்ரத்யோதனுடைய ராஜ்ய எல்லைக்குள் கால் வைத்து விட்டார்.  ஸூழ இருக்கும் எதிரி வீரர்கள் எப்படிப் பட்டவர்களோ, என்ன செய்வார்களோ.  வத்ஸ ராஜ்யத்தை பரி பாலித்த அரசன், ப்ரஜைகளின் அன்புக்கு பாத்திரமானவன்,  இந்த விபத்திலிருந்து அவரை  எப்படி மீட்டுக் கொண்டு வருவோம்? 

ஹம்சகன்:  முதலில் மல் யுத்த வீரர்களின் கைகளால் அடி பட்டு மூர்ச்சையானாலும் சமாளித்துக் கொண்டு விட்டாரா, அந்த சமயம் ப்ரத்யோத மகா ராஜாவின் மந்திரி சாலங்காயனன் என்பவர் வந்து என்ன நடக்கிறது, நிறுத்துங்கள் என்று சொல்லிக் கொண்டே அங்கு வந்து விட்டார். 

யௌ: அதன் பின்,

ஹம்ஸகன்: இதுவும் ஆச்சர்யமே. கேட்டதேயில்லை இப்படி நடக்கும் என்று. நம் அரசருக்கு வணக்கம் சொன்னார். உடல் கட்டுகளை நீக்கி விடுவித்து விட்டார். 

யௌ: ஆஹா, விடுபட்டாரா நமது அரசன், சாலங்காயன! சாது- நன்று செய்தாய்.  நன்று செய்தாய். இது உன் பெருந்தன்மையே. உயர் பதவியில் இருப்பவன் செய்ய வேண்டியது இதுவே. சத்ருவே ஆனாலும், விசாரனையின்றி தண்டிப்பதோ, மரியாதைக்குறைவாக நடத்துவதோ நீதியல்ல.  மனம்  நிம்மதி அடைந்து விட்டது. நியாயமாக இருப்பவர்களிடம் பயப்பட வேண்டாம். அதன் பின் என்ன நடந்தது?   

ஹம்ஸகன்: ஏதோ பேசிக் கொண்டே, வீரர்களுக்கு ஆனையிட்டு சாய்வான ஆசனம் கொண்டு வரச் செய்து அரசரை அழைத்துச் சென்றுவிட்டார்.   

யௌ: அழைத்துக் கொண்டு போனாரா? எதற்கு? இது என்ன புது அனர்த்தம்?

ப்ரத்யோத மகா ராஜாவின் உத்தேசம் என்னவாக இருக்கும்?  எதுவும் தோன்றவில்லை. ஏதோ பெரிய பலனை எண்ணி அரசரைக் காப்பாற்றி தங்கள் வலைக்குள் வைத்துக் கொண்டு என்ன செய்ய விரும்புகிறார் ? நல்ல வேளையாக நம் அரசர் சுய உணர்வோடு இருக்கிறார். தன்னை காத்துக் கொள்வார்.   தனியாக பிடித்து உஜ்ஜயினிக்கு கொண்டு சென்று விட்டார்கள். அணுக்க சேவகர்களோ, மந்திரிகளோ எதுவும் செய்ய இயலாதே.  அவர்கள் சத்காரம்-உபசாரம் செய்வார்களோ, தர்ஷணம்- அவ மரியாதை செய்வார்களோ, கடவுளே! 

உஜ்ஜயினியை ஆளும்  மகா ராஜா, அவருக்கு நம் அரசனிடம் என்ன தேவையாக இருக்கக் கூடும். இருவருமே சுய கௌரவம் மிக்கவர்கள். நம் அரசர் சரியானபடி பேசி, நடந்து கொள்ள வேண்டுமே.  உஜ்ஜயினி சென்ற பின்,  காரணமின்றி சிறை பிடித்தவர், எப்படி நடத்துவார் ? அவர் ஏதோ சொல்லப் போக நம் அரசர் கோபிக்கலாம். அரசனுக்குரிய மரியாதையுடன்  நடத்துவார்  என்றால் சிறை பிடிப்பானேன். 

காவல் காரி வருகிறாள்.

ஆர்ய! இதோ நீங்கள் கேட்ட காப்புக் கயிறு.

யௌ: இதை கேட்ட சமயம், ஆபத்து வரு முன் காக்கும், என்று நினைத்தோம். ஆபத்து வந்தே விட்டது,  இதற்கு இனி என்ன தேவை?  

பணிப் பெண்: மகா ராணி கேட்டால், என்ன சொல்வேன்?

யௌ: இப்படிச் சொல்.

பணிப்பெண்:  சொல்லுங்கள்.

யௌ: இனி தவிர்க்க முடியாது. சொல்லித் தான் ஆக வேண்டும். அவளுக்கு மட்டும்  கேட்கும் படி ரகசியமாக, நான் சொல்வதைக் கவனமாக கேள். எந்த விதமான உணர்வும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாதே. மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாம்,’ சொல்கிறார்.

விஜயா! போட்டு உடைத்தது போல சொல்லாதே. தாய் மனம் வருந்தும்.  மெதுவாக சொல்.  அவள் கண் கலங்குவதைப் பார்த்து மேலும் சொல்கிறார்.

முதலில் அரசர் சத்ரு தேசத்தின் எல்லைக்குள் சென்று விட்டார். அதன் பின் தெரியவில்லை. அவர்கள் சிறை பிடித்தார்களா,  இவர் அவர்களை வென்றாரா எதுவும் தெரியவில்லை.  இதற்கே  அந்த தாய் ஏதோ கஷ்டம் என்று ஊகித்து விடுவார். அந்த சமயம் அதிக பயங்கரமான செய்தியோ என்று கவலைப் படுவார். அதற்குப் பின்  எதிரியின் மந்திரி ஒருவர் வந்து ஆசனம் கொடுத்து அழைத்துச் சென்றார் என்பதைச் சொல்லு.  தான் கற்பனை செய்து எதிர் பார்த்த அளவு பெரிய ஆபத்து இல்லை என்று உணர்ந்தால், மனம் மெள்ள யோசிக்கும். 

ஹம்சகனிடம்: ஹம்சக! நீ ஏன் அவர்களைப் பின் தொடரவில்லை. 

ஹம்சகன்: அடுத்தடுத்து வேகமாக இவை நடந்து விட்டன. நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதற்குள், அழைத்துச் சென்று விட்டனர். அரசரின் முகத்தைக் கூட காண முடியவில்லை. ஏதாவது ஜாடையாக சொல்லியிருப்பார்.  எதுவும் இல்லை. அதனால் தானாக எதுவும் செய்யும் முன் உங்களிடம் யோசனை கேட்க வந்தேன். 

யௌ: சற்றுத் தள்ளி மறைந்திருந்தாவது எங்கு கொண்டு செல்கிறர்கள் என்று அறிந்து கொண்டிருக்க முயலவில்லையா?  அணுக்க சேவகன் நீ, அவர் நலம் நாடுபவன் தானே. 

ஹம்ஸகன்: வாஸ்தவம் தான்.  ஆனால், அரசர்  ஆணை. ‘போய்  முதன் மந்திரி யௌகந்தராயனிடம் சொல்’ என்றார். அவ்வளவே. என் கண்களை கண்ணீர் மறைத்தது. அதற்குள் வேகமாக மறைந்து விட்டனர்.

யௌ: அவர் சொன்ன படியே  அந்த வார்த்தைகளையே சொல்லு?

ஹம்ஸகன்:  யௌகந்தராயனை போய் பார் – அவ்வளவே.  இது அவரே சொன்னது.

யௌ: அது தான் கேட்டேன். மந்திரிகள் மண்டலத்தில் சொல்லச் சொல்லவில்லை. யௌகந்தராயணன் மட்டுமே அறியும் படி என்று சொல்லியிருக்கிறார். அது தானே. 

ஹம்ஸகன்: அதுவே

யௌ: இதை வெளிப்படையாக  அனைவரும் அறிய அறிவிக்காமல்,  நமக்குள் மட்டுமே என்ன நடந்தது என்பதை ரகஸ்யமாக வைத்துக் கொள்ள வேண்டும்.  அரசன் என்று இல்லாமல் ஒரு நல விரும்பியாக மட்டும் நான் செயல் பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஹம்ஸகன்: ஆமாம்.

யௌ: வஞ்சனையை அதே போல வஞ்சனையால் முறியடிப்போம். ப்ரத்யோதன் உத்தேசத்தை அறிந்து கொள்ள மாறு வேடமிட்டு அந்த நகரத்துக்குள் நான் போய் அரசரையும் யாருமறியாமல் சந்தித்து, மேற்கொண்டு செய்வதை தீர்மானிக்க வேண்டும் என்பது தான் அரசரின் உள் நோக்கம். அப்படித்தானே. 

வெளியிருந்து யாரோ – ஹா, ஹா நம் அரசன் ..பெண்களின் குரல் வேதனையோடு ஒலிக்கிறது.

காவல்காரி: ஆர்ய, ராஜமாதா வருகிறார்கள்.   உற்ற நண்பனாக அரசனைக் காப்பாற்றச்  சொல்கிறார்கள்.  நேருக்கு நேர் நின்று போர் புரியாமல் எதையோ  காரணமாகச் சொல்லி அரசனை பிடித்துச் சென்றதில் அரசனை துன்புறுத்தும் நோக்கம் இல்லை என்ற வரை ஊகிக்கிறார்கள்.   நீங்கள் அறிவீர்கள் என்றார். 

மேலும் ‘ புத்ரக, மகனே! என் மகனின்  உற்றத் தோழன்.   எனக்கும் மகன் தான் . முதன் மந்திரி என்பது அதன் பின் தான். உதயணனை சத்ருவிடமிருந்து மீட்டுக் கொண்டு வா, ‘என்றார்.

யௌ: ஆஹா, தேவியின் பெருந்தன்மை.  அரச குலத்தில் பிறந்தவர். மகா ராணியாக வாழ்ந்தவர் இப்படித்தான் பேசுவார். வீர வாக்யம் இது. சத்யமான சொல் இது.  என்னால் அரசனைக் காப்பாற்றி அழைத்து வர முடியும் என்ற அவரது நம்பிக்கையே எனக்கு பெரிய சன்மானம்.   அவரை தலை வணங்கி இந்த பொறுப்பை ஏற்கிறேன்.  தண்ணீர் கொண்டு வாருங்கள். அதைத் தொட்டு பிரதிக்ஞை செய்கிறேன். 

ராகு பீடித்த சந்திரன் போல,  என் தலைவன், வத்ஸ தேச அரசன், சத்ருக்களின் வசம் ஆகியிருக்கிறான்.  ராகுவின் பாதிப்பு வெகு நேரம் இருக்காது.  அது போல என் நண்பனும், அரசனுமான அவர் மகன் வெகு விரைவில் நலம் பெற்று அவரிடம் வந்து விடுவார் என்று சொல்.   என் பெயரில் சபதம் செய்கிறேன்.   அவரை அழைத்து வருவது  என்ற இந்த சபதத்தை  நிறைவேற்றாமல்  நான் யௌகந்தராயன் இல்லை. 

பணிபெண்: ஆர்ய! அப்படியே அவரிடம் சொல்கிறேன். (போகிறாள்) 

காட்சி மாறுகிறது

அரண்மனை பணியாளன் ஒருவன் வருகிறான்:.   ஆச்சர்யம்.  ராஜ மாதா ஆணையின் படி ப்ராயச்சித்த   பூஜைகள் நடந்தனவே.  முடிவில்  நிவேதனம்  செய்த உணவை யாரோ ஒரு புத்தி பிசகியவன் போல ஒருவர் வந்து தானே எடுத்து உண்டு விட்டார்.  பலமாக சிரித்துக் கொண்டு, மற்றவர்களையும் சாப்பிடு சாப்பிடு என்று சொல்கிறார். இனி பயமில்லை. வத்ஸ ராஜன்  வெகு காலம் எதிரிகளின்  வசம் இருக்க மாட்டான். நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது என்று சொல்லிக் கொண்டே சென்று விட்டான். 

ஒரு அந்தணர் வருகிறார்.  சிரித்துக் கொண்டே யௌகந்தராயனைப் பார்த்து.

மகா மந்திரி! இந்த வேஷம் பொருத்தமாக இருக்கிறது உங்களுக்கு. பகவான் த்வைபாயணனே (வேத வியாசரே) உங்கள் உடலில் புகுந்து விட்டது போல   துறவி வேஷம்

யௌ: அப்படியா, வியாச மகா ரிஷி போலவா இருக்கிறேன். 

அந்தணர்: ஆம்.

யௌ:  மற்றவர்கள் அறிகிறார்களா என்று சோதித்து பார்த்து விடுவோம்.  

(யாரோ, துறவி, என்று ஊர் ஜனங்கள் கடந்து செல்கிறார்கள்.)  நல்ல வேளை, என்னை எவரும் கண்டு கொள்ளவில்லை.

ஹம்ஸகா, நீ போகலாம்.

ஒரு பணிப் பெண்: ஆர்ய! மகாராணி உங்களை சந்திக்க விரும்புகிறார்.  சாந்தி க்ருஹத்தில் இருக்கிறார். 

யௌ: இதோ வருகிறேன்.

கூடியிருந்தவர்களூக்கு உபதேசம் செய்கிறார்:  மரத்தில் அக்னி இருக்கிறது, நாம் அறிவோமா, அதைக் கடைந்தால் தான் தீ இருப்பது தெரியும். பூமிக்குள் நீர் இருப்பது பார்த்தவுடன் தெரியுமா, மண்ணை தோண்டி எடுத்தால் தான்  நீர் ஊறி வரும். அது போலத் தான் உத்சாகம் உடையவர்கள் முயற்சி செய்வார்கள். அவர்களுக்கு முடியாதது என்று எதுவும் இல்லை. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.  முயற்சி தான் வேண்டிய பலனைத் தரும்.

ஸ்வப்ன வாசவதத்தா

கவி பாஸன் எழுதிய ஸ்வப்ன வாசவ தத்தா – 2 ஸ்வப்ன வாசவ தத்தா – 3

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.