
இந்த ஆண்டு கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக நானும், அனுவும் டொரோண்டோ சென்றிருந்தோம். எனக்கு மொழிபெயர்ப்பு விருது அறிவிக்கப்பட்டிருந்தது. பவா செல்லதுரையின் “சொல்வழிப் பயணம்” என்ற கட்டுரை நூலின் மொழியாக்கத்துக்காக இந்த விருது. நான் பெரிதும் மதிக்கும் தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரும், தமிழ் இலக்கியத்தோட்டத்தின் நிறுவனருமான அ. முத்துலிங்கம் அய்யாதான் இந்த விருது பற்றி எனக்கு அறிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு எனக்குத் தொலைபேசி உரையாடல் மூலமாக நெருக்கமான தொடர்பு உண்டு. புனைவுகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும்போது மொழிபெயர்ப்பாளர் தவறவிடும் இடங்களில் முக்கியமான ஒன்று, ஆங்கிலத்துக்கென்றே உள்ள இலக்கியப் புனைவு மொழியில் மொழியாக்கத்தைக் கொண்டு வரத் தவறுதல். என் மொழிபெயர்ப்பு ஏதேனும் ஆங்கில இலக்கிய இதழில் வெளியாகும் போது அதை உடனே வாசித்து விட்டு என்னை அழைப்பார். என் மொழியாக்கத்தில் நான் அதைச் சரியாகச் செய்து வருவதாக ஒவ்வொரு முறை என்னிடம் பேசும்போதும் சொல்வார். தொடர்ந்து எழுத்தில் ஈடுபட்டிருக்குமாறு வலியுறுத்திக் கொண்டே இருப்பார். சென்ற ஆண்டில் என்னுடைய இரண்டு மொழியாக்க நூல்களும், இந்த ஆண்டு என் தமிழ் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வெளியாகின. குறுகிய காலத்தில் இத்தனை எழுதியதற்கு அ.மு அய்யா கொடுத்த ஊக்கம் ஒரு மிகப்பெரிய காரணம். இயல் விருதுகள் தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த மதிப்பு வாய்ந்தவை. அந்த மதிப்பு விருதுகளுடன் அவர் பெயர் இணைந்திருப்பதாலேயே உருவாகிறது. அவர் என்னைத் தேர்ந்தெடுத்தது எனக்குப் பெருமிதத்தை அளித்த அதே கணத்தில் நான் செல்ல வேண்டிய தூரத்தையும் எனக்கு நினைவூட்டியது.
தமிழ் இலக்கியத் தோட்டத்தில் முறையான அழைப்புக் கடிதம் வந்தவுடன் அதை வைத்து எனக்கும், அனுவுக்கும் கனடிய விசாவுக்கு விண்ணப்பித்தோம். நாலே நாட்களில் பயோமெட்ரிக்ஸ் எடுக்கச் சொல்லி கடிதம் வந்தது. என் வீட்டிலிருந்து நாற்பது நிமிட கார் பயணத் தொலைவில் உள்ள சார்ல்ஸ்டனுக்குச் சென்று கைரேகையும், விழித்திரை ரேகையும் பதிவு செய்து விட்டு வந்தோம். முடித்த பத்து நாட்களில் கடவுச்சீட்டுகளை அனுப்பச் சொன்னார்கள். அனுப்பி ஒரு வாரத்துக்குள் விசா முத்திரை அடிக்கப்பட்டு கடவுச் சீட்டுகள் வீடு தேடி வந்து விட்டன.
விழா அக்டோபர் 20 அன்று. நாங்கள் பதினெட்டன்றே புறப்பட்டு டொரோண்டோ சென்று விட்டோம். அமெரிக்காவிலிருந்தே ஏர்பிஅன்பியில் ஒரு வீட்டைப் பதிவு செய்திருந்தோம். சமையலறை வசதியுடன் கூடிய தனி இடம். விமான நிலையத்திலிருந்து எங்களை அழைத்துச் செல்ல முரளிதரன் வந்திருந்தார். டொரோண்டோவின் பிசாசுத்தனமான போக்குவரத்துக்குள் எங்களை நெளிந்து, நெளிந்து அழைத்துச் சென்றார். எங்களுடன் உரையாடியபடியே – கதைத்தபடியே – வண்டி ஓட்டினார். அவருடைய தமிழைக் கேட்டபின் உள்ளபடியே தமிழில் அவருடன் உரையாடுவதற்கு எனக்கு மிகுந்த கூச்சமாகி விட்டது. ஆங்கிலக் கலப்பின்றி சரளமான தமிழில் தடையின்றி சொற்பொழிகிறார்! சில சொற்களுக்கு நான் அவரிடம் தயங்கியபடி அர்த்தம் கேட்க வேண்டியிருந்தது. பல சொற்களின் பொருள் அனுவுக்குப் புரியவில்லை. என்ன மாதிரி தமிழ்க்குடியில் பிறந்திருக்கிறோம் நாம் என்று எனக்கு ஒரே விசனமாகி விட்டது.
முரளி இலங்கையில் இனப்போரின் காலத்தில் மூன்று ஆண்டுகள் சிறையில் கழித்தவர். அங்கு நீண்ட காலமாக சமூக அரசியல் செயல்பாட்டாளராக இருந்திருக்கிறார். கனடாவில் அகதியாகத் தஞ்சம் புகுந்து இருபத்து ஏழு ஆண்டுகளாகிறது. “இப்போ என்னால நெனைத்தாலும் திரும்பி போக ஏலாது,” என்றார். “போனால் திரும்பி வர ஏலாது.” இங்கு அவருக்கு மனைவி, குழந்தைகள் (எல்லாம் வளர்ந்து திருமணமான குழந்தைகள்) என்று வளமாக வாழ்ந்தாலும், அவருக்குக் கனடாவில் குடியுரிமை கிடையாது என்றார். “எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை” என்று ஒரு கவிதைத் தொகுப்பும், இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் குறித்த இரண்டு கட்டுரை நூல்களும் வெளியிட்டிருக்கிறார். என்னுடைய அரசியல் ஆர்வம் பற்றிக் கேட்டார். எனக்கு அரசியலில் அவ்வளவாக ஆர்வமில்லை என்றேன். (எங்கள் ஊரில் ஏதாவது ஒரு கருத்தைச் சொன்னால் அந்தக் கருத்தின் நிறத்தை நம்மேல் பூசி, நம் நெற்றியில் அகலமாக முத்திரையிட்டு, போகுமிடமெல்லாம் துரத்தித் துரத்தித் துரத்துவார்கள் என்பதாலும், என் வீட்டிலேயே என் அப்பா, தம்பி, தங்கை கணவர் போன்றோர் என் அரசியல் கருத்துக்கு மாறான பார்வையைக் கொண்டிருப்பதால் அரசியல் பேச்சு குடும்பத்துக்கு ஆகாது என்பதாலும், அரசியல் ஈடுபாட்டைத் தவிர்க்கிறேன் என்பதன் சுருக்கமான வெளிப்பாடுதான், “எனக்கு அரசியலில் அவ்வளவாக ஆர்வமில்லை என்பது). “எனக்கு டிரம்ப் பிடிக்காது. வட கரோலைனா, கலிஃபோர்னியா, மிச்சிகன் இது மூன்றையும் பிடிச்சிட்டாள்னா நிச்சயம் அவள்தான் வின் பண்ணுவள்,” என்று கமலா ஹாரிஸைப் பற்றிச் சொன்னார். நவம்பர் ஐந்தாம் தேதி தேர்தலன்று எனக்கு விடுமுறை என்பது நான் நினைவில் வைத்துள்ள ஒரு அரசியல் செய்தி. அந்த அளவு அமெரிக்க அரசியல் ஈடுபாடு எனக்குப் போதும் என்று நினைக்கிறேன்.

வீட்டுக்குள் குடிபுகுந்தோம். தொலைக்காட்சி, வைஃபை என்று நல்ல வசதிகளோடு இருந்தது. நடந்து செல்லும் தொலைவிலேயே உணவகங்களும், மளிகைக் கடைகளும். டொரோண்டோவின் போக்குவரத்து நெரிசல் கருதி நான் வாடகைக் கார் எடுக்கவில்லை. எங்களை விட்டு விட்டு முரளி இரவு மீண்டும் வந்து உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டு இயல் விருதாளர் ஆர். பாலகிருஷ்ணைனையும் பிறரையும் அழைத்து வர விமான நிலையம் சென்று விட்டார். அவர் வந்து காரில் எங்களை கடைகளுக்கு அழைத்துச் செல்வார் என்று காத்தபடியே இருந்தோம். ஒன்பது மணி வரையிலும் வரவில்லை. தண்ணீர் பாட்டில்களும் எதுவும் வாங்கியிருக்கவில்லை. இரு முறை அவரை அழைத்தேன். அவர் பிற விருதாளர்களை அழைத்துக் கொண்டுவருவதில் சிக்கியிருந்தார். டொரோண்டோவின் போக்குவரத்து கொடுமையானது. இந்த மாதிரி போக்குவரத்தை ஆர்லாண்டோவிலும், நியூயார்க்கிலும் பார்த்திருக்கிறேன். ஆனால், இங்கு விதிகளை எல்லாரும் சற்றே மீற ஆசைப்படுவதைப் போலவே தெரிந்தது. வெளியே நடந்து போய் எதாவது உண்ண வாங்கி வரலாம் என்றால் இவர் வேறு வருகிறேன் என்று சொல்லி விட்டார். அதனால் காத்திருந்தோம்.
ஒன்பதரை மணிக்கு வந்தார். மூட எத்தனித்துக் கொண்டிருந்த ஒரு இலங்கை மளிகைக் கடைக்குள் எங்களைத் திணித்து, தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளச் சொன்னார். அவசர அவசரமாக பொருட்களை அள்ளித்திணித்துக் கொண்டு (சர்க்கரையை மறந்தோம்) வெளியே வந்தோம். ஒரு பஞ்சாபி தாபாவுக்குச் சென்று உணவை ஆர்டர் செய்தோம். உணவு தயாராக அரைமணிக்கும் மேலாகி விட்டது. வீட்டுக்குத் திரும்பும்போது மணி இரவு பத்தரை.
வந்தோமா? நாங்கள் போட்ட எண்களுக்குக் கதவு திறக்கவில்லை. பொருட்கள், சூடான உணவு எல்லாம் வாயிலருகில். முரளி எங்களை விட்டு விட்டுச் சென்று விட்டார். பலமுறை எண்களை முயற்சித்தும் கதவு திறக்கவில்லை. வெளியில் குளிர் பிடுங்குகிறது. ஏர்பிஅன்பியின் தளத்துக்குள் சென்று வீட்டு சொந்தக்காரருக்குச் செய்தி அனுப்பினோம். மூன்று மணி நேரத்துக்குள் பதிலை எதிர்பார்க்கலாம் என்று தளம் சொன்னது. நாங்கள் தங்கியிருந்தது பேஸ்மெண்டில் (பாதாள அறை என்று சொல்லலாமா?). மேல் தளத்தில் வீட்டு உரிமையாளர்கள் குடியிருப்பதாக சொல்லியிருந்தது. சுற்றிச் சென்று அவர்கள் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினோம். இரண்டாவது முறை. மூன்று. நான்கு. அந்தப் பக்கம் எந்த அசைவும் இல்லை. அன்று வெள்ளிக்கிழமை. இரண்டு வாய்ப்புகள்: ஒன்று அவர்கள் எங்காவது வெளியில் சென்று பார்ட்டி பண்ணிக் கொண்டிருக்கலாம். அதை ஆமோதிப்பது போல வீட்டின் வெளியில் இருந்த இரண்டு கார்களில் ஒன்றைக் காணோம். கதவைத் தட்டலாமா என்று யோசித்தோம். அமெரிக்காவில் அப்படி வீடுகளின் கதவுகளைத் தட்டி அழைத்து விட முடியாது. அவர்களது அலைபேசி எண்ணை ஏன் வாங்கி வைத்துக் கொள்ளவில்லை என்று என்னையே நொந்து கொண்டேன். பேசாமல் ஏதாவது ஒரு விடுதி அறையைப் பதிவு செய்து அங்கு போய் இரவு தங்கிக் கொள்ளலாம், வேறு வழியில்லை என்று அனு ஆலோசனை சொன்னாள். அங்கு கொண்டு போய் விடுவதற்கும் யாராவது காரில் வர வேண்டும். முரளிதான் ஒரே வழி. அவரை அலைபேசியில் அழைத்தோம். அவருக்கு அடுத்த நாள் காலை விருதாளர்களை நயகராவுக்கு அழைத்துச் செல்வதற்காக அதிகாலையில் எழ வேண்டும். போய்ப்படுத்தால் தூக்கம் வருமா என்று முன்பே எங்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார். நான் சேதி சொன்னதும் அதிர்ந்து விட்டார். சங்கேத எண்ணை நன்றாக பார்த்தீர்களா? இன்னொரு முறை போட்டுப் பாருங்கள் என்றார். வீட்டுக்காரரை இன்னொரு முறை அழையுங்கள் என்றார். கதவைத் தட்டிப்பாருங்கள் என்றார். அதை மட்டும்தான் இதுவரை செய்யவில்லை, பயத்தின் காரணமாக. தயங்காதீர்கள், தட்டுங்கள். அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக் கூடும், அழைப்பு மணியோசை அவர்கள் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. அப்படித் தட்டலாமா, தப்பில்லையா, என்றேன். அதெல்லாம் ஒன்றுமில்லை, தட்டுங்கள் என்றார். தட்டினேன். வலுக்கத் தட்டினேன். மூன்றாவது முறை மறுபக்கம் சற்றே அசைவு தெரிந்தது. எங்களுக்கு நெஞ்சு மீது வைக்கப்பட்டிருந்த பெரிய பீரோ நகர்த்தி வைக்கப்பட்டிருந்ததைப் போலிருந்தது. வீட்டுக்காரர் வந்து கதவின் அந்தப்பக்கம் நின்று கதவை நான் உள்ளிருந்து திறந்து விடுகிறேன் என்றார்.
இரவுணவை உண்ணத் துவங்குகையில் மணி பனிரெண்டு. கிட்டத்தட்ட ப்ரேக்ஃபாஸ்ட். வீட்டு விதிகளில் பத்து மணிக்கு மேல் அமைதி நேரம் என்று போட்டிருந்தது. ஒருவேளை அதனால்தான் எண் வேலை செய்யவில்லையோ என்று ஐயம். தகாத நேரத்தில் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டியதற்காக வருந்தி அவர்களுக்கு ஒரு செய்தியனுப்பினேன். சங்கேத எண்ணைப் பயன்படுத்தி கதவை எவ்வாறு சுலபமாகத் திறப்பது என்பது குறித்து விரிவான விளக்கம் பதிலாக வந்தது.

சங்கேத எண்ணைத் தவறாகக் கொடுத்ததற்காக அந்த வீட்டுக்காரர்கள் மீது எரிச்சலோடு இருந்தோம். மறு நாள் வெளியில் செல்லும்போது சங்கேத எண்ணை பரிசோதித்துப் பார்த்தோம். அப்போதும் அது வேலை செய்யவில்லை. தளத்தில் அந்த எண்ணே கொடுக்கப்பட்டிருந்தது. கதவைப் பூட்டாமலேயே செல்லப்போவதாக அவர்களுக்குத் தெரிவித்தேன். எண் ஏன் வேலை செய்யவில்லை என்று வியந்தார்கள். நான் பயன்படுத்திய எண்ணை அவர்களுக்கு அனுப்பினேன். இது எப்படி உங்களுக்குக் கிடைத்தது என்றார்கள். உங்களுக்குத்தான் எண்ணை தனிச்செய்தியாக அனுப்பியிருக்கிறோமே! என்று சொல்லி வேறு ஓர் எண்ணைக் கொடுத்தார்கள். செய்திப்பெட்டிக்குள் சென்று பார்த்தபோது புதிய எண்தான் இருந்தது. நாங்கள் பயன்படுத்தியது பழைய எண். தளத்தில் மாற்றாமல் விட்டிருக்கிறார்கள். ஒரு சின்ன எண் குழப்பத்தில் மளிகைபொருட்களையும், உணவுப்பொட்டலங்களை வைத்துக் கொண்டு நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்!
கனடா அமெரிக்கா மாதிரியே இருக்கிறது. மைல் கி.மீயாகவும், ஃபாரன்ஹைட் செல்சியஸாகவும் மாறியது போல ஒரு சில மாற்றங்கள் தவிர. காலநிலை எங்கள் ஊர் வால்டர்போரோ மாதிரியே இந்த அக்டோபரில் மிதமான குளிரில்தான் இருந்தது. நிறைய மேப்பிள் மரங்கள் சாயம் பூசிய பள்ளிப்பையன்களின் தலைபோல ஸ்கார்லட் நிறத்துக்கு மாறியிருந்தன. கனடாவுக்கு மேபிள் தேசம் என்றே பெயர். அவர்கள் கொடியிலும் மேபிள் இலை உண்டு. ஜனவரியிலிருந்து பனிப்பொழிவு துவங்கி மார்ச் இறுதி வரை நீடிக்கும் என்றார்கள். மைனஸ் முப்பத்தெட்டு டிகிரி வரை போகுமாம்.
நிறைய இலங்கைத் தமிழர்கள். பஞ்சாபிகள். பிற மாநிலத்து இந்தியர்கள். பாகிஸ்தானியர்கள். கனடாவின் வெள்ளை இனத்தவர் இங்கு ஐந்து விழுக்காடுதான் வாழ்கிறார்களாம். செல்லுமிடங்கள் எங்கும் இந்திய-இலங்கை-பாகிஸ்தானிய முகங்களைத் தரிசித்துக் கொண்டே இருந்தோம். கனடாவின் புகழ்பெற்ற டிம் ஹார்டன்ஸ் காஃபி (அ.மு இந்தக் காஃபி குறித்து எழுதியிருக்கிறார். டிம் ஃஹார்டன்ஸ் குடித்தே ஆக வேண்டும் என்று கனடாவில் சந்தித்த சில நண்பர்கள் வாய்மொழி உத்தரவு போட்டிருந்தார்கள்) கடை ஒன்று முழுக்க பஞ்சாபி இளைஞர்களால் நடத்தப்படுகிறது. அதனோடு இணைந்திருந்த பர்கர் கிங்கில் இரண்டு இஸ்லாமியர்கள் அமர்ந்து பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கனடாவில் உள்ள எல்லா உணவகங்களிலுமே ஹலால் இறைச்சிதான் வழங்கப்படுகிறது என்று எங்களுக்கு வாகனமோட்டிய அஹமது சொன்னார்.
சனி முழுக்கவும் அருகிலிலுள்ள கடைகளுக்கு நடந்து சென்று வந்தது தவிர வேறேதும் செய்யவில்லை. பிற விருதாளர்கள் நயாகராவுக்குச் சென்றார்கள். அவர்கள் காரில் இடம்போதவில்லை. அதனால் நாங்கள் விலகிக் கொண்டோம். ஊர் சுற்றுகிற மனநிலை ஒரு தனிப்பட்ட காரணத்திற்காக எங்கள் இருவரிலிருந்துமே விலகியிருந்தது. விழா முடிந்து அடுத்த நாள் நிகழ்ந்த விருதாளர்களின் சந்திப்பில் “நயகராவுக்கு ஏன் போகவில்லை?” என்று அ.மு. அய்யா கேட்டார். “கனடாவிலிருந்து பார்க்கும் நயகராதான் அழகு. அதை மிஸ் செய்து விட்டீர்கள்.” நாங்களே ஒரு காரை வாடகைக்கு எடுத்துச் சென்றிருக்கலாம்தான். நான் முன்பே சொன்னது போல, தோன்றவில்லை. கனடாவின் போக்குவரத்தும் இன்னொரு காரணம்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராகிய திருமூர்த்தி ரங்கநாதன், விழாவிற்கு எங்களை அழைத்துச் செல்வதற்காகத் தன்னைத்தான் நியமித்திருப்பத்தாகவும், ஆனால் என் நண்பர் கவிஞர் வெங்கட பிரசாத் விண்ட்ஸரிலிருந்து காரில் வருவதால் (நாலு மணி நேர கார் பயணம்) அவர் நேரே வந்து எங்களை அழைத்துச் சென்று விடுவார் என்றும் சொல்லியிருந்தார். மூவரும் குறுஞ்செய்தி அனுப்பி தகவலை உறுதி செய்து கொண்டோம். ஆனால் வழியில் ஏற்பட்ட ஒரு வாகன விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல். வந்து சேர ஆறுமணிக்கு மேலாகி விடும் (விழா ஐந்தரைக்கு. நான் ஐந்துக்கே சென்று விடலாம் என்று நினைத்திருந்தேன்.) எனவே இன்னொரு நண்பர் லக்ஷ்மண் தசரதன் வந்து எங்களை அழைத்துச் சென்றார். லக்ஷ்மண் கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். மென்பொருள் தொழிலபதிபர். ஃப்ளோரிடாவில் வசிக்கிறார். தனிப்பட்ட முறையிலும், நண்பர்களோடு இணைந்தும் அவர் புரிந்து வரும் இலக்கியப் பணிகள் அளப்பரியவை. இவ்விழாவிற்கு அ.மு அய்யாவின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் வந்திருந்தார். லக்ஷ்மண் எனக்கு மூன்றாண்டுகளாக இலக்கிய நண்பர். என் படைப்புகள் வெளியாகத் துவங்கிய காலத்திலிருந்து என்னை அழைத்து அவை குறித்து விரிவாகப் பேசுபவர். என் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு வந்திருக்கிறார். நான் கேட்டுக்கொண்ட ஒரே காரணத்துக்காக இந்தியாவிலிருந்து வரும்போது எனக்காக நிறைய புத்தகங்கள் வாங்கி வந்தார். என் இலக்கிய வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான தருணங்களிலும் லக்ஷ்மணின் இருப்பு என்னுடன் இருந்திருக்கிறது. இப்போதும் அப்படியே என்று நினைத்துக் கொண்டேன்.
ஜே.சி. பேங்க்வெட் ஹாலில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளே சென்ற அனைவரிடமும் பெயர் கேட்டு அவர்களை அழைத்துச் சென்று அவர்கள் பெயர் பொறித்த வட்ட மேஜையில் அமரவைத்தார்கள். நாங்கள் உள்ளே நுழைந்ததும் பார்த்தது அ.மு அய்யாவைத்தான். விழா மேடைக்கருகில் நின்றபடி எல்லாவற்றையும் (உண்மையிலேயே எல்லாவற்றையும்) மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் திரு நின்றிருந்தார். அவரிடம் ஆணைகள். விருதுகள் சரியாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றனவா என்ற விசாரிப்புகள். நான் அவரருகில் சென்றதும் என்னை அடையாளம் கண்டு கொண்டு மலர்ந்து புன்னகைத்தார். நான் குனிந்து அவர் பாதங்களைத் தொட்டேன். அவர் என் தோள்களைப் பிடித்து உயர்த்தி என்னை அணைத்துக் கொண்டார். என்னைத் தொடர்ந்து அனுவும் அவர் காலில் விழுந்தாள். என்னருகில் நின்ற லக்ஷ்மணைக் கண்டு மலர்ந்த புன்னகை மாறாமல், கைகுலுக்கி அணைத்துக் கொண்டார்.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜையில் சென்று அமர்ந்தோம். வட்ட வட்டமான மேஜைகளைச் சுற்றிலும் தமிழ் முகங்கள். ஈழத்தமிழ் சுற்றிலும் ஒலித்தபடியிருந்தது. எல்லாரும் குளிர்பானங்களும் கொறிக்கும் தீனிகளுமாக அமர்ந்திருந்தோம். விழா சரியாக ஆறுமணிக்குத் துவங்கியது (ஐந்தரை-ஆறு விருந்தினர் பதிவு செய்தல், மீட் அண்ட் க்ரீட்). விபி (வெங்கட பிரசாத்) நிகழ்வு துவங்கி பதினைந்து நிமிடத்தில் வந்து எங்களோடு இணைந்து கொண்டார்.
நேரடியாகவே விருதுகள் வழங்கும் நிகழ்வுக்குச் சென்று விட்டார்கள். “சற்றே பெரிய கதைகளின் புத்தக”த்துக்காக புனைவு விருது பெற்ற றஷ்மி, தான் எழுதிக்கொண்டிருக்கும் முப்பது ஆண்டுகளில் தான் பெறும் இரண்டாவது விருது என்று குறிப்பிட்டார். முதல் விருதை அவர் கல்லூரியில் படிக்கும்போது வாங்கினாராம். கண்கள் கலங்க விருதைப் பெற்றுக் கொண்டார். ஒலி, ஒளி ஊடகரான ப.விக்னேஸ்வரன் தனது “நினைவு நல்லது” நூலுக்காக அல்புனைவுப் பரிசைப் பெற்றார். விருதாளர் ஒவ்வொருவருக்கும் விரிவான அறிமுகம் வழங்கப்பட்டது. விருதைக் கொடுக்க ஒருவர், பணமுடிப்பு கொடுக்க ஒருவர், பூங்கொத்து கொடுக்க இருவர் என விருதாளரை திக்குமுக்காடச் செய்து விட்டனர். கை நிறைய விருதுப்பொருட்களை வைத்துக் கொண்டு, விருது கொடுத்தவர்களிடம் எப்படிக் கைகுலுக்குவது என்று தெரியாமல் விருதாளர்கள் திண்டாடினர்.
“எந்த கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?” என்ற கவிதை நூலுக்காக இளவாலை விஜயேந்திரன் பரிசு பெற்றார். இலங்கையின் மலையக நகரான நுவுரேலியாவில் பிறந்தவருக்கும் கங்கை என்ற நதியின் குறியீட்டுப் பாதிப்பு இருப்பதைக் கண்டு வியந்தேன். புனித நதிகள் என்ற கோட்பாடு இந்தியாவுக்கு மட்டும்தானா? பிற ஆசிய நாடுகளுக்குக் கூட இல்லையா? இவரும் தன் உரையாற்றும்போது மிகுந்த மனவெழுச்சியுடன் காணப்பட்டார்.
அப்புறம் நான் அழைக்கப்பட்டேன். எனக்கு விருது ஏற்புரையை எப்படி ஆற்றப்போகிறோம் என்று உள்ளே குறுகுறுத்தபடியே இருந்தது. ஓர் எழுத்தாளன் தேர்ந்த பேச்சாளனாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது அண்மைக்காலமாக எனக்கு திடமாகத் தோன்றிய கருத்து. ஆங்கிலத்தில் உரையாடும்போது என்னால் சரளமாக உரையாடிவிட முடியும். தமிழிலும் சரளமாக உரையாட முடியும்தான். ஆனால் முன்னால் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது அது. குறிப்பாக இலக்கிய வாதிகள் முன்பு உரையாற்றும்போது நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் எடைபோட்டுத் தரம் பிரிக்கிறார்களோ என்ற ஐயம் உள்ளே உறுத்திக் கொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியாது.
என் சிறுகதைத் தொகுப்பு “பொற்குகை ரகசியம்” வெளியீட்டு விழாவில் கூட அந்த உதறல் இருந்தது. ஒருவேளை தமிழ் இலக்கியச் சூழலில் இருந்து மிகத் தொலைவில் நான் வசிப்பதாக இருக்கலாம். இன்னொரு முக்கியக் காரணம், விழா மேடையில் ஜெயமோகன் அமர்ந்திருந்தது. அவர் இருக்கும் மேடையில் நாம் சொல்வதெல்லாமே உளறல் போலவே தோன்றும். ஒருவேளை அவர் முன்னிலையில் ஏதேனும் உளறி விடுவோமோ என்ற பதற்றமே நம்மை உளறவைக்கும். அவர் முன்னிலையில் பேசிய சில நண்பர்களும் இதே மன நிலை தங்களுக்கும் இருந்ததாக என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்கள். சரியான முறையில் உரையாற்ற முடியாததற்காக நான் வருந்தவில்லை. நான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் துறை புனைவெழுத்து. அதை ஒழுங்காகச் செய்தால் போதும் என்ற மன நிலைதான் எனக்கு.
மற்றபடி பேச்சு வராது என்றெல்லாம் இல்லை. நான் மொழிபெயர்த்த பவா செல்லதுரையின் “A Journey Through Words” வெளியீட்டு விழா திருவண்ணாமலையில் நடந்தது. அதில் நான் இறுதியில் ஒரு பத்து நிமிடங்கள் பேசினேன். நாலைந்து முறை கைதட்டல்கள். கிட்டத்தட்ட இருனூறு பேருக்குமேல் கூடியிருந்த அந்த கூட்டத்தின் மொத்த கவனமும் என் மேலிருந்து. இத்தனைக்கும் எந்தத் தயாரிப்பும் இல்லாமல், அங்கு எனக்குத் தோன்றியவற்றைத்தான் பேசினேன்.
விருது விழாவில் ஏற்புரைக்கு இரண்டு நிமிடங்கள்தாம் தரப்பட்டிருந்தன. எனவே உரையை எழுதி தயார் செய்து கொண்டேன். ஆனாலும் உரை முழுக்க மனதில் பதிந்திருந்தமையால் குறிப்புகள் எதுவும் இல்லாமல் பேச வேண்டுமென்றுதான் நினைத்தேன். ஆனால் விருதுச் சூழ்நிலையில் அமர்ந்திருந்த விருந்தினர்கள் சுத்தமான தமிழ், அவர்களுக்கென்றே உரித்தான சொற்களும், உச்சரிப்பு முறைகளும், என்னை வெகுவாகப் பாதித்திருந்தன. அந்தப் பாதிப்பில் மேடையில் பேசும்போது எதையாவது விட்டு விட வாய்ப்புண்டு. மேலும் ஒருவர் நீங்கலாக ஏற்புரை நிகழ்த்திய அனைவருமே குறிப்புகளைப் பார்த்துத்தான் வாசித்தார்கள். அந்த தைரியத்தில் நானும் பார்த்தே வாசித்து விட்டேன். நான் மொழிபெயர்ப்பாளர் என்பதனால், கடைசி சில செகண்டுகள் ஆங்கிலத்திலும் என் ஏற்புரையை ஆற்றினேன்.
இலக்கியம் மற்றும் சமூகப்பணிக்கான சாதனை விருது குடிபோதைக்கும், மன நோய்க்கும் இலக்கானவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கான அமைப்பான “வசந்த”த்தின் நிறுவனர் பார்வதி கந்தசாமிக்கு அளிக்கப்பட்டது. தனது ஏற்புரையில் இனப்போரில் மக்கள் பட்ட துன்பங்களையும், இவரும் இவரது குழுவும் எவ்வாறு மீட்புப்பணியில் ஈடுபட்டனர் என்றும் விரிவாகக் குறிப்பிட்டார். அவையில் சற்றே அமைதி நிலவியது.

இறுதியாக வாழ்நாள் சாதனையாளர் விருதான இயல் விருது சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. பாலகிருஷ்ணன் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்திய குடிமைப் பணித்தேர்வை 1984 ல் தமிழிலேயே எழுதி வென்றவர். ஒடிசா மாநிலத்தில் பல பத்தாண்டுகள் பணிபுரிந்து அங்கிருந்த முதலமைச்சருக்கு ( பிஜூ பட்நாயக்?) அணுக்கமாக இருந்தார். ஓய்வுக்குப் பின் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், Journey of a Civilization: Indus to Vaigai (தமிழில் – ஒரு பண்பாட்டின் பயணம் – சிந்து முதல் வைகை வரை) முதலான நூல்களின் ஆசிரியர்.
பளிச்சென்று உற்சாகமாக இருந்தார் பாலகிருஷ்ணன். தம்பதியர் இருவரையும் ஒருசேர நோக்கியதே மனத்துக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தான் எடுத்துக் கொண்ட பணியில் மிகுந்த ஆர்வத்தோடும், முனைப்போடும் அவர் ஈடுபட்டுக்கொண்டிருப்பது அவர் ஆர்வம் மிகுந்த கண்களிலும், உற்சாகமான உடல் மொழியிலுமே தெரிந்தது. எல்லாரிடமும் உற்சாகமாகப் பழகினார்.
மிகுந்த எழுச்சியோடு தன் உரையை ஆற்றினார் பாலகிருஷ்ணன். தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் மிகுந்த பணிச்சுமைக்கிடையிலும் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளைப் பற்றி எடுத்துரைத்தார். புற்றுநோயிலிருந்து தன்னை மீட்டெடுத்த தன் மனைவிக்கு அன்பையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டார். திராவிடக் கூறுகள் இந்தியாவெங்கும் சிதறிக்கிடப்பதற்கான ஆய்வு இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு முக்கியமானது என்று விரிவாகப் பேசினார்.
நிகழ்வு சரியாகக் குறித்த நேரத்தில் முடிந்தது. உணவு வரிசையில் நின்றபடி, உணவுண்டபடி என லக்ஷ்மணுடனும், விபியுடனும் பேசிக் கொண்டிருந்தேன்.விபி தன் குடும்பத்தோடு காரில் வந்திருந்தார். ஆனால் அவர்கள் பக்கத்திலிருந்த ஒரு மாலுக்கு சென்றிருந்தனர். இது அழைப்பிதழை அடிப்படியாகக் கொண்ட நிகழ்வு என்பதால் அவர்களை விழாவுக்கு அழைத்து வர அவர் விரும்பவில்லை. பின்னர் நாங்கள் வற்புறுத்தியதும் அவர்களையும் அழைத்து இணைந்து கொள்ளச் சொன்னார். விபியின் அழகான குழந்தைகளோடு சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அ.மு அய்யாவை நான் சென்று பார்த்திருக்க வேண்டும். ஆனால் அவர் விழா முடிந்த பரபரப்பில் இருப்பால் என்று நினைத்ததால் சென்று பார்க்கவில்லை. அவரே எங்கள் மேஜைக்கு வந்து, “நாளைக்கு விருதாளர்களுக்கு என்று ஒரு மதிய உணவு ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்களும் அவசியம் கலந்து கொள்ளுங்கள்,” என்று சொன்னார். எனக்கு ஒரே கூச்சமாகப் போய்விட்டது. இவ்வளவு பெரிய எழுத்தாளரை நாமல்லவா போய்ச் சந்தித்திருக்க வேண்டும் என்று. ஆனால் அவர் முகத்தில் உற்சாகமும், பரிவும் தான் காணப்பட்டனவே தவிர சோர்வோ, சலிப்போ சிறிதும் இல்லை.
திரும்பவும் வீட்டுக்கு லக்ஷ்மணே எங்களைக் கொண்டு விட்டார். மூவரும் உடனடி ஏலத்தேனீரை அருந்தியபடி சிறிது நேரம் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு அவர் கிளம்பிச் சென்று விட்டார். அவரால் மறுநாள் மதிய உணவுக்கு வர இயலாதென்றார். இந்தத் திட்டம் தெரியுமுன்னரே விமான டிக்கெட் பதிவு செய்து விட்டார். மிச்சிகனில் இருந்தபோது மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக காரில் டொரொண்டோ வந்து செல்வாராம்.
மறுநாள் ஊபர் பிடித்து 5ஸ்பைஸஸ் உணவகத்துக்குச் சென்றோம். உள்ளே நீண்ட உணவு மேஜைக்கருகில் நின்றபடி விருந்தினர்களுக்கான இடங்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தார் அ.மு அய்யா. எங்களைப் பார்த்ததும் முகம் மலர்ந்து சிரித்தார். “நல்ல வேளை நீங்கள் இன்று வந்தீர்கள். நேற்று உங்களுடன் பேச முடியவில்லை,” என்றார். நாம் சொல்ல வேண்டியதை இவர் சொல்கிறாரே என்று நினைத்துக் கொண்டேன். மேன்மக்கள் எப்போதும் மேன்மக்களே! தனக்கு எதிரிலேயே ஓர் இடத்தை எங்களுக்கு அளித்தார். சிறிது நேரத்தில் ஊர்சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த பிற விருந்தினர்கள் எங்களுடன் வந்து இணைந்து கொண்டனர். முரளிதான் அவர்களை அழைத்துச் சென்றிருந்தார். “இவரைச் சந்திச்சீங்களோ? லோக்கெல்லாம் நல்லா உடைப்பார்,” என்று சிரித்துக் கொண்டே முரளியைப் பற்றிக் குறிப்பிட்டார் அ.மு அய்யா.
நாங்கள் இப்போது ஊணுன்ன ஆரம்பித்து விட்டதால் பாம்பூ பிரியாணியில் துவங்கி பாம்ஃரே மீன்வறுவல் வரைக்கும் ஒரு வலம் வந்தோம். மைண்ட்ஃபுல்னஸ் தியானம் கற்பிக்கும் ஒரு நண்பர், இப்போது அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை, எங்களுக்கு எதை எதை எப்படி உண்ண வேண்டும் என்று அருகில் அமர்ந்தபடி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அய்யா என்னிடமும், அனுவிடமும் சின்னச் சின்னக் கேள்விகள் கேட்டு எங்களை இயல்பாக்கிக் கொண்டிருந்தார். “விழா எப்படி நடந்தது?” என்று என்னிடம் கேட்டார். எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். இது தமிழில் நடந்த ஒரு நோபல் விருதளிப்பு விழாவைப் போல இருந்தது என்றேன். பெருமிதத்துடன் புன்னகைத்தார். அவரது மகன் தன் குடும்பத்துடன் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவுக்குத் தவறாமல் வந்துவிடுவார் என்று சொன்னார். அவர் அமெரிக்காவில் தொழிலதிபர். இயற்கை ஆர்வலர். அமெரிக்க அதிபரிடம் நேரடியாக விருது வாங்கியவர். இம்முறை விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்த திருப்தியைத் அவர் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகச் சொன்னார். “என் மகனைச் சந்திச்சீங்களோ?” என்றார். இல்லையென்று குற்றவுணர்வுடன் தலையாட்டினேன். நான் சென்று சந்தித்திருக்க வேண்டும். “இந்த விழாவில் நீங்க கலந்து கொண்ட அனுபவங்கள் பற்றி எழுதுங்க,” என்றார் அ.மு.
பாலகிருஷ்ணன் அவர் அருகில். அவர் தனது ஒரிசா அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். கோவிடை ஒரிசா எப்படி எதிர் கொண்டது என்றறிய பிரமிப்பாக இருந்தது. முதல் மின்னணு இயந்திரம் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டபோது அந்தக் குழுவில் பாலகிருஷணன் இருந்திருக்கிறார்.
எல்லாரும் உணவுண்டு விடைபெற்றபின் கடைசியாகத்தான் அ.மு கிளம்பினார். நாங்கள் ஊபருக்காகக் காத்திருந்தோம். உணவுக்கான பில்லை அவரே செலுத்தினார் (Can I leave without paying?). எங்களுக்குப் பரிமாறியது கனடாவில் முதுகலை பயிலும் ஒரு தமிழ்ப்பையன். இவர் யார் தெரியுமா? என்று அ.முவைக் குறித்து அவனிடம் கேட்டேன். அவனுக்குத் தெரியவில்லை. விக்கிப்பீடியாவில் அ.மு பக்கத்தை எடுத்துத் திறந்து அவனிடம் காட்டுவதற்குள், ஏதோ ஆவணங்களில் கையெழுத்துப் போடுவதற்காகக் தன் கார் வரை சென்றிருந்த அ.மு திரும்பி வந்து விட்டார். “அடுத்து உங்களுடைய புனைவுதானே. தொடர்ந்து எழுதுங்கள். நிற்காதீர்கள்,” என்று புன்னகைத்தபடி எங்களுடன் விடை பெற்றார். விறு விறுவென்று நகர்ந்து தன் காரை நோக்கிச் சென்றார். உள்ளே ஏறி அவரே காரைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டார்.
கனடா-அமெரிக்கா இமிக்ரேஷன் பற்றிக் குறிப்பிட வேண்டும். மறுநாள் கிளம்பி இலங்கைத் தமிழ் நண்பரின் ஊபரில் பயணித்து விமான நிலையத்தை அடைந்தோம். (எல்லாருடைய வற்புறுத்தலுக்கும் இணங்க முதல் நாள் மாலையிலேயே டிம் பர்டன்ஸ் காஃபியை ருசித்திருந்தோம். எந்த காஃபியாயிருந்தாலும் பாலூற்றி, சர்க்கரை போட்டுக் கலக்குவதற்குள் ஆறி விடுகிறது. அப்புறம் அதைக் குடிப்பதென்பது ஒரு சம்பிரதாயத்தை நிறைவேற்றுவது போலத்தான்.) அமெரிக்காவின் இமிக்ரேஷன் டொரொண்டோ விமான நிலையத்திலேயே முடிந்து விட்டது. இமி.அதிகாரி என் கடவுச்சீட்டில் அமெரிக்க விசாவைக் காட்டுமாறு கேட்டார். அதைப் பார்த்து விட்டு ஐ-797 ஆவணம் இருக்கிறதா என்று கேட்டார். அதை நாங்கள் எடுத்துச் செல்லவில்லை. கடவுச்சீட்டில் முத்திரை இருந்தால் வேறெந்த துணை ஆவணமும் தேவையில்லை என்பது என்னுடைய அனுபவம். ஐ-797 இல்லை என்று தயங்கியபடியே சொன்னேன். “ஒருவேளை ஆவணத்தில் விசா காலம் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. அதனால்தான் கேட்டேன். அதையும் கூட வைத்துக் கொள்வது நல்லது,” என்றார். “நீங்கள் செல்லலாம்,” என்றார். “அமெரிக்கா சென்றதும் உள்ளே நுழைவதற்கு அந்த ஆவணம் தேவையென்று யாராவது சொல்வார்களா?” என்று ஐயத்தோடு கேட்டேன். தன் தோள் பட்டையிலுள்ள முத்திரையைக் காட்டி, “இங்கே என்ன பார்க்கிறீர்கள்? உங்கள் இமிக்ரேஷன் முடிந்து விட்டது. இனி யாரும் உங்களை இது குறித்துக் கேள்விகள் கேட்க மாட்டார்கள்,” என்றார். நிம்மதியோடு அவரை நோக்கிப் புன்னகைத்தேன்.
அங்கிருந்து அட்லாண்டா. இரண்டு மணி நேர இடைவெளியில் சார்ல்ஸ்டனுக்கு விமானம். விமான நிலையத்தின் வேன், நாங்கள் கார் நிறுத்தியிருந்த இடத்துக்கருகில் சென்று எங்களை விட்டது. அங்கிருந்து வால்டர்போரோ.
மேலும் இலக்கியத்துறையில் இயங்குவதற்கான உத்வேகத்தை இந்தப் பயணம் அளித்துள்ளது (பயணம் முடிந்து வந்தபின் எழுத்தில் தீவிரமாக ஈடுபடமுடியாததற்குச் சில தனிப்பட்ட காரணங்கள் இருந்தபோதும், அ.மு அளித்த தழல் பற்றிக் கொண்டுவிட்டது என்பதில் ஐயமில்லை). மொழிபெயர்ப்புக்காகத் தமிழில் அளிக்கப்படும் உலகளவிலான முக்கியமான விருது ஒன்று எனக்களிக்கப்பட்டிருப்பதில் எனக்கு பெருமிதமும், அதே நேரம் தொடர்ந்து செயல்படுவதற்கு உத்வேகம் தரும் கருவி மட்டுமே அது என்ற தெளிவும் எனக்குள் ஏற்பட்டிருக்கின்றது. இந்த விருது என்னைத் தலை நிமிர வைக்கவில்லை. மாறாகத் தலைகுனிந்து எடுத்த செயலில் இன்னும் தீவிரமாக ஈடுபடுவதற்கான தூண்டுதலையே அளித்திருக்கின்றது.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

இந்தக் கட்டுரை கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழாவுக்கான பயணத்தை மையமாகக் கொண்டது. கட்டுரை ஆசிரியர் மொழிபெயர்ப்புக்கான விருது பெற அழைக்கப்பட்டிருக்கிறார். அவரும் அவரது மனைவியும் டொரொண்டோ செல்கிறார்கள். அங்கு அவர்கள் தங்கியிருந்த வீட்டில் சங்கேத எண் குழப்பத்தால் கதவைத் திறக்க முடியாமல் குளிரில் நிற்கும் சம்பவம், விருது வழங்கும் விழாவில் பல்வேறு எழுத்தாளர்களைச் சந்திக்கும் அனுபவம், மறுநாள் விருதாளர்களுக்கான மதிய உணவு சந்திப்பு, புகழ்பெற்ற எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துடனான உரையாடல்கள், கனடாவின் புலம்பெயர் வாழ்க்கை குறித்த பார்வைகள் என பல்வேறு சம்பவங்கள் கட்டுரையில் விவரிக்கப்படுகின்றன.
இக்கட்டுரையை வாசிக்க வேண்டியதற்கான முக்கிய காரணங்கள் 3 உள்ளன.
1.இது வெறும் பயண அனுபவக் கட்டுரை மட்டுமல்ல. தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான தருணத்தை ஆவணப்படுத்துகிறது.
2.புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியலை நுட்பமாகச் சித்தரிக்கிறது.
3.எழுத்தாளர்களின் உள்ளுலகை வெளிப்படுத்துகிறது. அவர்களின் பயங்கள், எதிர்பார்ப்புகள், மகிழ்ச்சிகள் என அனைத்தையும் நேர்மையாகப் பதிவு செய்கிறது.
இலக்கிய ஆர்வலர்கள், புலம்பெயர் வாழ்வை அறிய விரும்புவோர், பயண இலக்கிய ரசிகர்கள் என அனைவரும் வாசிக்கலாம்.