அப்பொழுதெல்லாம்
இரண்டு அடி அடித்து
திட்டி தீர்த்த பின்
ஏதோ ஒரு டப்பாவிலிருந்து
ஏதோ கையில் கிடைத்த
சில சில்லரைகளை கொடுத்து
எதாவது வாங்கி சாப்பிடு
என்று சமாதானம் படுத்துவாள் இப்பொழுதெனும்
நினைவுக்கு வருகிறது
யாரோ ஒருவர் கொண்டு
வந்து நீட்டிய
தேநீர் கோப்பைக்குள் மிதக்கும்
இனிப்பு சக்கரையாய் கரைகிறது
நிகழ் காலத்தின் நீட்சியில் அமர்ந்திருக்கிறது
கூன் விழுந்தும் பாடென பறந்த அம்மாவின் பழைய உருவம்..
தொலைதூரத்தில்
இருக்கிறதாம் தேடி
அலைந்தவனின் வீடு
நான் இங்கே
அவன் அங்கே
நீங்கள் எங்கே
இது இரவுக்கான நேரம்
நேரமோ ஏழு
இருட்டிய வானம்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பூக்க தொடங்குகின்றன
நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றாக
எண்ணிய படி நடந்தேன்
தொலைதூரம் அடைந்தேன்
அங்கேயும் அவனில்லை
நானோ அவனாகிவிட்டேன்
என்னையே வெறுத்து பார்க்கின்றன
என் முன் படர்ந்த நிலவின் நிழல்
உடைந்த பானை
ஓட்டின் துண்டொன்றை எடுத்து
ஆழ அள்ளிக் குளத்தில்
மீதே விட்டெறிந்தேன்
மூன்று முறையேனும்
மூழ்கி இக்கரையிலிருந்து
அக்கரை நோக்கி பாய்ந்தது
இப்பொழுது நானே எங்கிருக்கிறேன்
மழையில் நனைந்து
கொண்டிருக்கிறது நீர் குளம்
தலை கீழ் தொங்கும்
மாட்டுக் காலை
பந்து விளையாடும்
பேட்டென நினைத்து
வாங்கித் தர கேட்கிறான் மகன்
எப்படியேனும்
அவனுக்கு புரிய வைப்பேன் இப்படியேனும் சட்டென
சிறு சிறு துணுக்குகளாக வெட்டி
இஞ்சி பூண்டு கருவேப்பிலை
சேர்த்து வேகவைத்து
கடியென முன் நீட்டினேன்
கடி கடியென கடித்திழுக்கும்
சத்தத்திற்கு சமாதானம் ஆனது
நேற்று இரவு பெய்த மழை
வானத்தின் இடி சத்தம்
நமக்கேன் நிலமில்லை
என்று கேட்கிறாள் மகள்
படர்ந்து விரிந்த
தன் முதுகை காட்டி
அந்நிலமோ
இந்நிலமோ
எந்நிலமும்
எம்முடைய உழைப்புக்கு
ஈடாகுமோ என்று சொல்ல
முதுகிலிருந்து சொட்டு
சொட்டாய் ஒழுகும்
வியர்வை நீரில் நீச்சலடித்து
விளைந்து நிற்கிறது
நிலமுடையவனுடைய
நஞ்சையும் புஞ்சையும்
பேச்சு மூச்சில்லாமல்
ஊரடங்கிடக்கிறது தெருக்கள்
யாரேனும் ஒருவராவது
தென்படுவார்களா
என்று ஓட விடுகிறேன் விழியை யாரேனும் ஒருவரை
கூட காணவில்லை
அறை ஒதுங்கி கிடக்கலானேன்
சாத்தப்பட்ட அறைக்கு
வெளியிருந்து சத்தமிட்டு அழைக்கிறது
ஏதோ ஒரு முகம்
எப்பொழுதும் போலவே
இப்பொழுதும் ஜன்னல்கள்
வழியாக பார்க்கிறேன்
பறந்து விரிந்த வானத்தில்
ஒரு நிலா தோன்றியது
பல நட்சத்திரங்களும் கூட
கண்கள் கலங்க மீண்டுமாய்
என் அறை பார்க்கிறேன்
நிறைந்து கிடக்கின்றன கனவுகள்
அப்பா வந்ததாக
அக்கா சொன்னாள்
அம்மா வந்ததாக
தம்பி சொன்னான்
இப்பொழுதுக்கு
கனவுகளில் வருவதை தவிர
வேறென்ன செய்திட போகிறார்கள் நினைவுகாலத்தில் ,
யாரிடமும் சொல்லாமல்
மறைத்த கதையொன்றாய்
பழைய புகைப்படம்
ஒன்றில் அப்பா அம்மா
அக்கா தம்பியென
நான்கு பேருமாய்
நாங்கள் சிரித்தபடி
அவர்களோ அழுதபடியே
இப்பொழுதிலிருந்து
நாங்களும் அழுதபடியாய்

ஆளுக்கு ஒரு
செடி வளர்க்க சொன்னார்கள்
நானே எருக்கம் செடியை வளர்த்தேன்
வளர்ந்தது பூத்தது
கணக்கு பரிட்ச்சைக்கு
செல்லும் பொழுதெல்லாம்
தேறுவேனா என்று அவ்வப்போது வெடித்து பார்ப்பேன்
வெடிக்கவில்லை
தேறினேன்
அறிவியலில் ஐம்பது மார்க்
கனவிலாவது
கடவுள் வருவாரா என்றே
கண்ணயர்ந்து கனவுக்குள் நுழைந்தேன்
எப்பொழுதும் வராதவர்கள்
இப்பொழுது வந்தார்கள்
அம்மாவும் அப்பாவும் ஒன்றாய் ,
வா என்று வரவேற்று
உணவோடு உபசரித்து
சாச்சாங்கமாய் கால் விழுந்து வணங்கினேன்
நல்லா இரு சாமியென்று சொல்லியவாறு மீண்டும்
கண்களுக்குள் மறைய
நானே துடித்த எழுந்து அழத்தொடங்குகிறேன்
சாரையாய் ஒழுகும்
என் கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றிலும் இரு முகம்
அதுவோ நான் கண்ட
என் நிஜ சாமியின் முகம்
உழைத்துக் கொடுத்து
அறிவு புகட்டி
உதிரம் கடத்தி
உணர்வுகளால் தன்னை
உறுவாக்கி பசியால்
வயிறு சுருங்கி
இறந்து போன அப்பா
மீண்டும் வாசலில் வந்து அமர்கிறார்
ஒரு வேளை உணவுக்காக
காக்கையின் சாயலில்
விநாயகரை
தூக்க சொன்னார்கள்
நானும் சிறிது தூரம்
அவர்களோடு சேர்ந்து
தூக்கி சுமந்தேன்
“மோனியாரே எங்க மோனியாரே “
யென பாட்ஷா படத்தின் பாடல்
நினைவுக்குள் ஓடியது
சுமை கொஞ்சம்
எனக்குள் கணமாக தென்பட்டது
மரத்தடி நிழலில் இறக்கி வைத்து விட்டு சிறிது நடந்து மீண்டும்
திரும்பி திரும்பி பார்க்கிறேன்
விநாயகர் உருவத்தில்
வீற்றிருக்கிறார்
எங்க அரசமரத்தடி புத்தர்
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “கவிதைக்குள் அலையும் மனசு ….”