பால்மாறி ஆடும் கவிதைகள்: கவிஞர் ந. ஜயபாஸ்கரனுடன் ஒரு கட்டுரையாடல்

ராஜமார்த்தாண்டன் தொகுத்தளித்த அபாரமான கொங்குதேர் வாழ்க்கை (இரண்டாம் பாகம்) என்ற கவிதைத் தொகுப்பில்தான் முதன் முதலில் ந. ஜயபாஸ்கரனை வாசித்தேன் என்று நினைக்கிறேன். நான் கவிதையின் சிக்கனமும் இசைத்தன்மையும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. பிறழ்ச்சி என்று தலைப்பிடப்பட்ட கவிதையில் எமிலி டிக்கின்சனை சந்தித்தது ஆச்சரியமளித்தது. அதே வருடம் விடுமுறைக்குச் சென்றிருந்த போது அர்த்தநாரி அவன் அவள் என்ற உயிர் எழுத்து பிரசுரம் பதிப்பித்த மெல்லிய தொகுப்பைச் சென்னைப் புத்தக் கடையொன்றில் கண்டெடுத்தேன். அதன் எமிலி கவிதைகள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தின. அவற்றுள் சிலவற்றை Traditionally Modern: or Emily Dickinson in the Temple Town of Madurai  என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். அதன்பின் நவம்பர் 2022-இல் சாய்மான வெளிச்சம் என்ற அவரது எமிலி டிக்கின்சன் கவிதை மொழிபெயர்ப்புப் புத்தகத்தின் வரைவை ஜயபாஸ்கரன் அனுப்பி வைத்தார். மொழிபெயர்ப்புகளைக் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கையில் அவரிடம் நட்புரிமை கொண்டாடும் அளவிற்குப் பரிச்சயம் ஏற்பட்டது. ஜனவரி 2023-இல் வெளிவந்த அவதரிக்கும் சொல் என்ற என் எலியட் புத்தகத்திற்கு அவர் முன்னுரை அளித்தார். வாட்ஸாப்பில் எங்கள் சம்பாஷணை தொடர்ந்தது.

ஜூலை 2024-இல் காலச்சுவடு பதிப்பிக்கவிருந்த “ந. ஜயபாஸ்கரன்: அரை நூற்றாண்டு கவிதைகள்” புத்தகத்தின் வரைவை அனுப்பி வைத்தார். அவற்றைப் பற்றி ஒரு அறிமுகக் கட்டுரை எழுதுவதாகத்தான் முதலில் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அனைத்துக் கவிதைகளை ஒருமூச்சில் வாசிக்கையில்,  அதுவரையில் சிந்தித்திராத ஒரு பொறி தட்டியது. அதன் வெளிச்சத்தில் கவிதைகளை மீள் வாசித்தது ஒரு நெகிழ்வூட்டும் அனுபவமாக இருந்தது. அப்பொறியின் யூகங்களை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்காக அவரைத் தொடர்பு கொண்டேன். இவ்வுரையாடலுக்கான சம்மதத்தையும் பெற்றேன். 

ஆனால் அதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. கவிஞர் ஜயபாஸ்கரன் நவீனத்துக்குள் வர மறுக்கும் ஒரு அபூர்வ உயிரி. கணினி, மின் அஞ்சல் போன்ற வசதிகள் இல்லாமல் இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் விசித்திர வீரர் அவர். இவை போதாதென்று தன்னடக்கம், சங்கோஜம் போன்ற தலைவலிகள் வேறு.  அதிர்ஷ்டவசமாக இக்கற்கால ஆழ்வாரின் கையில் எந்த புண்ணியவதியோ ஒரு ஸ்மார்ட் ஃபோனை திணித்து வைத்திருந்தது நான் செய்த புண்ணியம். எழுத்திலேயே இவ்வுரையாடலை  நடத்தி முடிக்க முடிவெடுத்தேன். அதில் சில உபாயங்களும் இருந்தன. இருவருக்குமே கருத்துகளைத் தொகுத்துக் கொள்ளும் அவகாசம் அனுகூலமாக அமைந்தது.  ஒன்று இரண்டு என்று தவணை முறையில் கேள்விகளை வாட்சாப்பில் அவருக்கு அனுப்பி வைப்பேன். தட்டச்சுவது சிரமமாக இருந்ததால் அவர் விடைகளைக் கையில் எழுதி அதைப் புகைப்படம் எடுத்து (மனைவியாரின் உபயம்!) எனக்கு அனுப்பி வைப்பார். நான் அதிலிருந்து பிரதியை ஒரு ஆப் வழியே என் கோப்பில் சேர்த்து,  திருத்திக் கொள்வேன். வாசிப்பின் லட்டைட்டிய இன்பங்கள் என்று தன் முதல் புத்தகத்தைத் தொடங்கிய ஒருவனுக்கு ஏற்ற தண்டனைதான் என்று நினைத்துக் கொண்டேன். காமம் ஊடுருவிச் செல்லும் உரையாடல் என்பதால் தண்டனையும் சுகமாகவே இருந்தது என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்!

இப்படியாக இரண்டு மாதங்களில் உருவான பிரதி இது. இது பேட்டியா, உரையாடலா  போன்ற சந்தேகங்களும், பதில்களை விடக் கேள்விகள் நீளமாக இருக்கிறதே போன்ற கேள்விகளும் எழுவது  நியாயமே. என் கேள்விகளை நான் எழுதவிருந்த கட்டுரையாகவே நான் அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். அது போல் அவரது விடைகளை என் கட்டுரையை விமர்சித்து, திருத்தி, விளக்கும் குறிப்புகளாகவும்  பதில் கட்டுரையாகவும் பாவித்துக் கொள்கிறேன். இனி வருவது ஒரு விதமான திரிசங்கு வகைமையில் அமைந்திருக்கும் எங்கள் கட்டுரையாடல்.

புற நிகழ்ச்சிகள் அதிகமற்ற, அகத்திலேயே பலவற்றையும் நிகழ்த்திக் கொண்ட என்னிடம், பகிர்வதற்கு விஷயங்கள் அதிகமில்லை. இருப்பினும் இருப்பதைப் பகிர்ந்து கொள்கிறேன் அந்தியில் உங்களிடம். 

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், கொங்கு மண்டலத்தில் திருப்பூர், அவிநாசி பகுதியைச் சேர்ந்த சிறு கிராமங்களிலிருந்து கும்பகோணம், திருச்சிராப்பள்ளி, மதுரை, சென்னை – போன்ற நகரங்களுக்குச் சிறு அளவில், பித்தளைப் பாத்திர உற்பத்தி- வியாபாரக் குழுக்கள் பெயர்ந்து சென்றன. எங்கள் பெரியப்பா அவருடைய தம்பிகளுடன் மதுரைக்குப் பெயர்ந்து வந்தார்; உழைப்பு, வியாபார சூட்சுமம், நம்பகத் தன்மை – இவற்றின் அடிப்படையில், குறிப்பிட்ட காலம் வரை அந்தந்த ஊர்களில் பாத்திர வியாபாரத்தை இவர்கள் நல்லபடியாக நடத்தி வந்திருக்கிறார்கள். கும்பகோணத்துக்குச் சென்று வேர் பிடித்த எங்கள் முதாதையர்களில் ஒருவரிடம், கு.ப.ரா. தமது சிரம தசையில் வீட்டுப் பாத்திரங்களை விலைக்குப் போட்டிருக்கலாம் என்பது என்னுடைய கற்பனையான ஏக்க-ஆறுதல் எண்ணம். 

2021 ஆம் ஆண்டு நகுலேஸ்வரத்தில் அப்பாவுக்கு திவசம் கொடுத்த போது, அறிந்தும் அறியாதவர் பாகத்தில் நகுலனைச் சேர்த்துக் கொள்ளத் தோன்றியது பூர்வீக உறவு என்ற சூட்சுமக் கயிற்றால் அவரோடு பிணைந்திருப்பது போல் ஒரு பாவனை. அப்படியே மணிபல்லவத் தீவுக்குப் போயிருந்தால், பூர்வ பிறப்புகளைப் பற்றி மணிமேகலா தெய்வம் தெரிவித்திருக்கக் கூடும்.

கிருஷ்ணன் நம்பியின் கதைகளில் வருகிற சிறுவர்களைப் போல பூஞ்சையான, பயந்த, சாமர்த்தியம் போதாத, தனிமையான, ஒரு அளவில் படிக்கக் கூடிய, பள்ளி நாடகங்களில் பெண் வேடம் போட்ட, ஒரு சராசரி மாணவன் நான். பிறழ் பாலுணர்வின் நுண்ணிய வேர்கள் ஒரு வேளை இங்கு ஆரம்பித்திருக்கலாம்.

பெரிய அளவில் பள்ளிக் கல்வி இல்லாத போதிலும், அப்பாவும் அம்மாவும் தொடர் வாசிப்பாளிகளாக இருந்திருக்கிறார்கள். அப்பா அந்தக் கால தினமணியின் ( ஏ.என். சிவராமனின்) தீவிர வாசகர். அம்மா கலைமகள் வாசகி. வீட்டில் அம்மா வாசித்து வந்த பெரிய எழுத்து திருவிளையாடல் புராணம் அளித்த வாசக அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது. தாய் வழிப் பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும், அவர்கள் எப்பொழுதாவது மதுரை வந்து தங்குகிற ஒருவார காலத்தில், ஒவ்வொரு நாளும் ஒருவர் ‘கலைமகளின்” ஒரு கதையை அவர்களுக்கு வாசித்துக் காண்பிக்க வேண்டும். நன்றாகப் படித்தால் மட்டுமே, ஒரு சில பாராட்டு வார்த்தைகள் கிடைக்கும். ஆனால் எனக்கும், என் சகோதரிகளுக்கும் அது ஒரு நல்ல பயிற்சி தான் என்று தோன்றுகிறது. மேலும் தமிழ்வழிக் கல்வியே உயர்நிலைப் பள்ளி முடிய என்பதால் படிப்பு பெரிய சுமையாக இருத்ததில்லை. தமிழ்ப் பாடத்தில் செய்யுள் பகுதிகளை விரும்பிப் படித்தது நினைவிருக்கிறது. கம்ப ராமாயணம், திருக்குற்றாலக் குறவஞ்சி, திருவருட்பா, தனிப் பாடல் திரட்டு – என்று ஒரு கதம்பமாக இருந்திருக்கிறது அந்தப் பகுதி.

சென்னை விவேகானந்தா கல்லூரியில் ஓராண்டு காலம் அறிவியல் படித்த காலத்தில், தமிழ்ப் பேராசிரியராக இருந்த சி.ஜெகன்னாதாசாரியாரின் தமிழ் – ஆங்கில – சமஸ்கிருதப் பாண்டித்தியமும், எளிவந்த தன்மையும் என்னிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. பின்னாளில் தமிழ் இலக்கியத்திலேயே இளங்கலையும் முதுநிலையும் மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த போது, சங்க இலக்கியத்திலும் சைவ இலக்கியத்திலும் அடிப்படை நூல்களைப் பாடம் கேட்க முடிந்தது, அவ்வை துரைசாமிப் பிள்ளை மனத்திலிருந்தே புறநானூற்றுப் பாடல்களை வருவித்துப் பெருமிதமான குரலில் கற்பித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அப்பொழுது மதுரைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்த தெ.பொ.மீ. ஒரு கருத்தை வலியுறுத்தி வந்தார். தமிழ் இலக்கியம் படிக்கிறவர்கள், ஆங்கிலத்திலும், ஓர் இந்திய மொழியிலும் – அது சமஸ்கிருதமாக இருந்தால் நல்லது – பயிற்சி உடையவர்களாக இருப்பது விரும்பத்தக்கது என்பது, அவரது கருத்து. தமிழ் இலக்கியப் படிப்பு முடிந்து ஏழு ஆண்டுகளில், அறிஞர் எஸ். ஆர். கே.யிடம் ஆங்கில இலக்கியம் கற்க நேர்ந்தது ஒரு பெரும் பேறுதான் எனக்கு. எமிலி டிக்கின்ஸன், ஜான் டண் – பொன்ற சாளரங்கள் திறந்தன. அனுபூதி என்ற பக்தி அனுபவச் சொல், இலக்கியத்துக்கும் பொருந்துவதை உணர முடிந்த கணங்கள்.

ஒரு கட்டத்தில் புலமையின் நேர்கோட்டுப் பாதையிலிருந்து விலகிக் கிளைப் பாதைகளில் பயணித்த போதுதான், காரைக்கால் அம்மையின் அமானுஷ்ய உலகக் கவிதைகளும், ஆண்டாளின் காமத்தீ உள்புகுந்து கதுவும் கவிதைகளும் புதையலெடுத்த தனமாய்க் கிடைத்தன . உணர்ச்சி மிகை, சொல் மிகை மலிந்திருந்த காலகட்டத்தில், சங்கக் கவிதையின் குரல் தணிவு பெருவியப்பை அளித்தது. அந்தக் குரல் தணிவே, கு.ப.ரா.வை நோக்கி என்னை ஈர்த்தது. தனக்கான அக மொழியைத் தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற லா.ச.ரா.வின் பிடிவாதம், உவப்பாக இருந்தது.

லா.ச.ரா, கு.ப. ராவுடன் புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ப.சிங்காரம் ஆகியோரும் என் கவிதைக்குள் வந்து போகிறார்கள். புனைவு வாசிப்பு ஒரு கட்டத்தில் வெகுவாகக் குறைந்து போனது. சில்லறைக் கடை இருப்பில், நீண்ட புனைவு கோரும் தொடர் வாசிப்பை என்னால் அளிக்க முடியவில்லை. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், ஆர். ஷண்முகசுந்தரம், ப.சிங்காரம், நகுலன் – நாவல்கள் காவிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தன. கவிதையில் மட்டும் ஓரளவு தொடர்ந்த வாசிப்பு இருந்து வருகிறது. “ஒன்றே என் உள்ளத்தின் உள் அடைத்தேன்” என்ற காரைக்கால் அம்மையின் வரியைச் சொன்னால் அது  நாடகியமாக இருக்கும் . இளைய தலைமுறையினரின் தொடர்பு சிறிது இருப்பது, இன்றையக் கவிதைக்குள் சுற்றுப் பயணிக்க உதவுகிறது..

நவீன தமிழ்க் கவிதை முன்னோடிகளாக  ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, சி.மணி, ஞானக்கூத்தன், பிரமிள் முதலானவர்களைச் சொல்லலாம் . “மதுரை மீனாக்ஷியின் கன்னிமை கழியும் போது” என்ற க.நா.சு.வின் கவிதைத் தொடக்க வரியே என்னை அதிர வைத்தது, சாதாரணச் சொற்களில் ஒரு அசாதாரண அனுபவத்தை அளிக்கும் சங்க அகக் கவிதையின் தன்மையை அதில் உணர முடிந்தது. அடங்கிய குரலும், உள்ளுறைப் பொருளும் குறுந்தொகையைக் கவிதை முன்னோடியாக ஆக்கிவிடுகின்றன. உணர்ச்சிப் பெருக்கை வழிய விடாமல் கவிதையாக மாற்ற முடிந்த ஆண்டாளும் ஒரு முன்னோடி; பிறகு எமிலி டிக்கின்ஸன், உரைநடையைப் பார்க்கிலும் சாத்தியங்கள் அதிகமுள்ள உலகமாக அவள் கவிதையைப் பார்த்தது, பிடித்துப் போயிற்று.

அகத்திணையியல் மரபு – சங்க அகப்பாடல் – ஆழ்வார்கள் ஏறிட்டுக் கொண்ட அகத்திணை மரபு – அதனைத் தன்வயமாக்கிக் கொண்ட ஈட்டு உரை- கடவுட்காமம் மீண்டும், மனிதக் காமமாகும் நவீனக் கவிதை மொழி என்று சிந்திக்கையில் சில கருத்துகள் திரண்டெழுந்து வருகின்றன.  

மரபு என்பது முற்றுப் பெற்றதல்ல என்று எளிமையாகச் சொல்லி விடுகிறார் மா. அரங்கநாதன். நேர்கோட்டுப் பாதையில் சென்று முடியாமல், வளையமாகச் சுழன்று வருகிறது தமிழ் அகத்திணை மரபு. சங்க அகப் பாடலின் உள்ளுறை, நம்மாழ்வாரின் திருவிருத்தத்தில் ஸ்வாபதேசமாக உருக் கொள்கிறது. பராங்குச நாயகியாக நம்மாழ்வார் பாடும் ‘நீ அலையே சிறு பூவாய்’ என்ற திருவாய்மொழிப் பாசுர ஈற்றடி, ஈட்டுரைக்காரரிடம் தனி அனுபவமாக மாறி விடுகிறது. பெரிய திருமலை நம்பி, தமது அந்திம தசையில் வெண்ணெய்க்கு ஆடும் கண்ணனுக்குத் திரு ஆராதனை சமர்ப்பிக்க சக்தியற்றுப் போன காலத்தில், ‘இனி உனது வாயலகில் இன்னடிசிலை வைப்பாரை நாடாயே’ என்று திருவாய்மொழி அடியையே சொல்லித் தண்டம் சமர்ப்பிக்கிறார். ஒரு அனுபவம் காலம் கடந்து இன்னொரு தனி அனுபவமாகிறது. அகப் பாடல் – பாசுரம் – ஈடு எல்லாம் கலந்த கடவுட் காமக் கலவை,  மனிதக் காமமாகவும் என்னுடைய திருவட்டாற்றுக் கவிதையில் பதுங்கியிருக்கிறது.

சி. மணி

‘மேலும்
அலைவுகளை விட்டுச் செல்வதை விட
சுவடற்று மறைவது மேல்’

என்ற சி.மணியின் கவிதை வரிகள், ஒரு கால கட்டத்தில் மனப் பரப்பில் மிதந்து கொண்டிருந்தன. அவரது பழைய இலக்கிய, இலக்கண அறிவும் வியப்பை அளிப்பதாக இருந்தது. நீள் கவிதை என்ற அளவில் அவரது ‘நரகம்’ (அதை அவர் வஞ்சித் துறையில் அடக்குகிறார் ) குறிப்பிடத்தக்கது என்பதற்கு அப்பால் சிந்தித்துப் பார்த்ததில்லை.

மீள் வாசிப்பில், 1962-66 கால கட்டத்தில் எழுதப்பட்ட சி.மணியின் மூன்று நீள் கவிதைகளையும் (‘நரகம்’ ‘வரும் போகும்’ ‘பச்சையம்’ ) புதுக்கவிதையின் ஆரம்பக் காலகட்டச் சாதனைகளாகவே எடுத்துக் கொள்ளத் தோன்துகிறது. முன்பு உறுத்தலாகத் ‘தோன்றிய ‘நரகம்’ கவிதையின் முடிப்பு வரிகள்,

“புணர்ச்சி மறத்தல் இன்றி
புறவொழுக்கம் உயிரினும் ஓம்பி
பேய்க்காற்று சீறும் போது
மொய்குழல் தொங்குமலராய்
வீழுந்தொழிந் தாக வேண்டும்;
தேய்புரிப் பழங்கயிறு
தாங்கவே தாங்காது”

மீள் வாசிப்பில் வேறு தோற்றம் கொள்கின்றன. ‘காமம் பல நோய் ஒரு மொழி’ என்ற வரி போல. சமுதாய விமர்சனம், அங்கதம் போன்றவை அந்தப் பழைய மொழிச் சாயலுக்குக் காரணங்களாக இருக்கலாம். ஆனால் இறுதி இரண்டு அடிகளே எனக்குப் போதுமானவை என்றும் தோன்றுகிறது.

பழைய இலக்கிய வரிகளைத் தன் கவிதைக்குள் பொருத்திக் கொள்வதும், ஒரு அடியை மீண்டும் மீண்டும் கவிதையில் மீட்டிக் கொள்வதும் – ஆன டி.எஸ். எலியட்டின் பாரிய பாதிப்புகளை சி.மணியின் நீள் கவிதைகளில் உணர முடிகிறது. என்னைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஒற்றை வரியோ அல்லது தொடரோ ஒரு மனநிலையை உருவாக்கப் போதுமானது. அந்த மனநிலை உருவான பின் தன் மொழியில் அதை மேலெடுத்துச் சென்றுவிடலாம். அல்லது அத்துடனேயே நிறுத்திக் கொள்ளலாம்.   

மரபை நவீனத்துக்குள் அழைத்து வருவது என்பது ந.பிச்சமூர்த்தி, சி.மணி, ஞானக் கூத்தன், இசை, கண்டராதித்தன்,- என்று தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த மரபுச் சுட்டுதல் என்பது, என் கவிதையில், நீங்கள் குறிப்பிடுவது போல், அகத்தைச் சார்ந்ததாகவே அமைகிறது. தனிப்பட்ட அனுபவத்துக்குச் சாய் கால் ஆகவே மரபின் வரிகளை, தொடர்களை அருகில் இழுத்துக் கொள்கிறேன். ஆனால் அதைப் பிறிதொன்றாக மாற்றுவதற்கு நான் முயற்சிப்பதில்லை. அதற்கான திறமையும் எனக்கில்லை என்றே தோன்றுகிறது. நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் கண்டராதித்தனின் கவிதையில் மிகவும் அபாரமாகவும் அசாத்தியமாகவும் இம்மரபுருமாற்றம் நிகழ்த்தப் பட்டிருக்கிறது. 

‘அவன்’ வந்து சேர்ந்தது. வியத்நாம் பற்றியும் தென்னாப்பிரிக்கா பற்றியும் தமிழில் எழுதுவதுதான் கவிதை என்ற தோற்றத்துக்கிடையில் காரைக்கால் அம்மையாரும் கழுவில் மாண்ட சமணர்கள் பற்றியும் நினைப்பவர்கள் இருக்கிறார்கள் என்று அறியும் போது என் வயது பல நூற்றாண்டுகள் பெருகுகிறது.

அ.மி 1989

ஹாப்கின்ஸைப் பேசுவதற்கு முன்னால் ஜான் டண்ணை பேசி விடுகிறேன். சில கவிஞர்கள், சில கவிதைகள் – என்ற அளவில் தான் என்னுடைய ஆங்கில இலக்கிய அறிவு இருக்கிறது .எமிலி, ஹாப்கின்ஸ், எலியட் போன்ற சிலரை மட்டும் மீண்டும் மீண்டும் வாசித்துக் கொள்கிறேன்.

எஸ்.ஆர்.கே.யின் வகுப்பில்தான் ஆங்கிலக் கவிஞர் ஜான் டண் எனக்கு அறிமுகமானார். பதினேழாம் நூற்றாண்டுத் தத்துவ விசாரக் கவிஞர்களில் முதன்மையானவரான அவரது ஆளுமையில் இருந்த முரண்கள் என்னைக் கவர்ந்தன. இளமையில் பகட்டார்வலராக இருந்தவர் முதுமையில் தேவாலயத் தலைவராக உருமாறியது வியப்பைக் கொடுத்தது. இந்த இரண்டு நிலைகளிலும் அவரது கவிதை தனித்தன்மை கொண்டதாக இருக்கிறது. சரளத் தன்மைக்கு மாறாக கரடு முரடானதும், கட்டுறுதி மிக்கதுமான அவரது கவிதை நவீனத்துவத்துக்கு நெருக்கமானது என்றே தோன்றுகிறது. உணர்ச்சியை அறிவு பூர்வமாக அதன் எல்லை வரை எடுத்துச் செல்லும் திடம், பலதுறை அறிவையும் வைக்கும் இடமாகக் கவிதையை மாற்றிய துணிச்சல், படிமங்களைக் குவிக்கும் ஆற்றல் – என்று பல நவீன கவிதைத் தன்மைகள் அவரிடம் இயல்பாகவே இருந்திருக்கின்றன.  பரபரப்பான கிழட்டுமுட்டாளாக சூரியனை விளிக்கும் காதல் கவிதையும், “திரித்துவக் கடவுளே என் இருதயத்தை தகருங்கள்”  என்று தொடங்கும் புனித ஸானட்டும் இருவேறு எல்லைச் சாதனைகள். இனி ஹாப்கின்ஸுக்கு வருவோம்.

தங்கள் கவிதைகள் தங்கள் வாழ்நாளில் பிரசுரமாவதைத் தவிர்த்து விட்டவர்கள் எமிலி டிக்கின்ஸனும், ஜெரார்ட் மேன்லி ஹாப்கின்ஸும்.  அத்துடன் தனிமையையும், ஆன்மீகத் தேடலையும் அவர்களுடைய பொது குணாம்சங்களாகச் சேர்த்துக் கொள்ளலாம். அளவில் மெலிந்தது என்றாலும், அடர்த்தி மிகுந்தது ஹாப்கின்ஸின் கவிதை. கிறிஸ்துவ மறைஞானமோ, ஆங்கிலக் கவிதையியல் அறிவோ அவ்வளவாக இல்லாத என்னால் ஹாப்கின்ஸின் கவிதைக்குள் முழுமையாகப் பயணிக்க இயலவில்லை. ஆனால் அவரது கவிதைகள் சிலவற்றை – குறிப்பாக அவரது இருண்ட ஸானட்டுகளை – எனக்கேற்ற வகையில் உணர்ந்து கொள்ளப் பார்க்கிறேன்.

“விழிக்கையில். காலையின் ஒளியை அல்ல, இருளின் கனத்தையே உணர்கிறேன்”
“என்னுடைய ஜீவிதத்தின் பிரபுவானவரே! என்னுடைய வேர்களுக்கு மழையை அனுப்பித் தாரும்” என்பது போல
வருகிற இருண்ட ஸானட் வரிகளை உலகின் எந்த மூலையில் இருக்கும் தனியனாலும் தனக்கான வரிகளாக உணரமுடியும்

’ஜான் டண்ணின் புனித ஸானட்டுகள்’ போல ஹாப்கின்ஸின் ‘இருண்ட ஸானட்டுகளும் தற்செயலாகத் தட்டுப்பட்டவையே. ஆனால் அந்த ஆறு அல்லது ஏழு ஸானட் சரம் என்னை மிகவும் அலைக்கழிய வைத்தது என்றே சொல்ல வேண்டும்.

உங்கள் வினா அபாரமானது . அதற்கு மேல், பதில் என்று ஒரு வார்த்தை கூட என்னால் சேர்த்துக் கட்ட முடியாது. ஹெரால்ட் ப்ளூமின் வரிதான் நினைவுக்கு வருகிறது: 

“Though he meant Whitman’s mode of metrical breakthrough, homoerotic elements certainly formed part of the attraction of the rough Walt for the withdrawn Jesuist Professor of Greek,”

இயேசு திருச்சபைத் துறவு நெறிக்கும், உணர்வுக் கூர்ப்பதம் உள்ள கவி மனத்துக்கும் இடையே உள்ள உறவு முரண், கவிதையாக உருக் கொள்வது ஒரு விசித்திர வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது. மிகச்சிறிய அளவில அதற்குள் என்னைப் பொருத்திக் கொள்ள முடிந்தது. அருட்காட்சி மறுக்கப் படுவதன் ஏக்கமும், அக்காட்சி தோன்றிப் பின் மறைவதன் துயரமும் ஒன்றல்ல தான். இருந்தாலும் ஒரு உணர்வு இணையைச் சில இடங்களில் யூகிக்க முடிந்தது. குறுகிய ஒரு பரப்புக்குள் தன்னை -தன் துயர அழுத்தத்தை – தனக்கான மொழியில் சொல்ல முடியும் என்பதும் தெரிய வந்தது. மோனையுடன் கூடிய வியப்பான சந்த லயத்தில் அவர் வெளிப்படுத்துகின்ற இயற்கை இறைக் காட்சி, திருவாய்மொழிப் பாசுரங்களை நினைவு படுத்தியது. அவர் உருவாக்கிய கவிதைக் கருத்தாக்கங்கள் ஆன, பிரத்தியேக அகவெளியையும் (இன்ஸ்கேப்), அகவெளி ஆற்றலையும் (இன்ஸ்ட்ரெஸ்) எனக்கேற்றவாறு தகவமைத்துக் கொண்டேன். என் கவிதைக்குள் ஹாப்கின்ஸை எனக்குப் புரிந்தபடி இருத்திக் கொண்டேன்.

ஹாப்கின்ஸ் கவிதைகளில் உங்களுக்கு இருக்கும் ஆழ் பரிச்சயமும், என்னுடைய சில கவிதைகளோடு அவற்றை இணைத்துக் காணும் பார்வை வீச்சும் பிரமிக்க வைக்கின்றன. ஒருபுறம் ஆச்சரியம், மறுபுறம் கிளர்ச்சி கலந்த மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல், மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் மலைக்குத் திரும்பும் போது, இயற்கையான – உற்பவித்துக் கொண்ட – பரவசத் திரளுடன், காமத்தின் உயிரியும் தண்டியலைப் பின் தொடர்கிறது. மாப்பிள்ளையை மூன்றுமாவடி வரை கொண்டு விட்டுத் திரும்புகிறார்கள் பட்டுநூல்காரர்கள் (சௌராஷ்டிரர்கள்). காமத்தின் உயிரியோ திருமாலிருஞ் சோலை வரை பின்சென்று வனத்தினுள் மறைகிறது.

Oh! The sots and thralls of lust என்ற ஹாப்கின்ஸின் வரியை நினைத்துக் கொள்கிறேன். 

சாய்மான வெளிச்சம்

எஸ், ஆர்.கே பற்றிய பதிவில் நான் குறிப்பிட்டிருப்பது போல, 12.03.1978 என்னைப் பொறுத்தவரை ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட ஞாயிறு என்றே உணர்கிறேன், அன்று மாலை எமிலி டிக்கின்ஸனை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து எஸ். ஆர்.கே. நிகழ்த்திய உரை  இரவு வரை நீண்டு சென்றது ‘ஆன்மா அவளுக்கான சமூகத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறாள் / பிறகு அடைத்து விடுகிறாள் கதவை’ என்று தொடங்கும் அவளது கவிதை ஏற்படுத்திய அதிர்வு இன்று வரை தொடர்கிறது. ‘உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது‘ என்ற ஆண்டாள் பாசுர வரியையே நினைத்துக் கொள்கிறேன். திகட்டல் தீண்டாத உறவு. கணக்கற்ற சாளரங்கள் உள்ள இல்லமாகத்தான் கவிதையைக் காண்கிறாள் எமிலி, அடைப்பதும் திறப்பதுமான அந்த ஜன்னல்கள்  இருளும் ஒளியும் கலந்த அவளது உலகத்தைக் காட்சிப் படுத்தவும் மறைக்கவும் செய்கின்றன, அவளது விருப்பத்துக்கு ஏற்ப. இந்த சுதந்தரம் கவிதையில் நிறைந்திருப்பதை அவள் மூலம் அறிந்தேன். தனிமையை அடைகாக்கும் எனக்கு, தோட்டமும் கவிதையும் என்றான அவளது உலகின் தனிமை மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது. ஒரு வேளை அந்தத் தனிமையை நான் மிகைப் படுத்திப் புரிந்து கொண்டிருக்கலாம், எனக்கு உவப்பான அளவில். மாடிக்குச் சென்று கதவை அடைத்துக் கொள்வதன் மூலம் எமிலி ஆகிவிட முடியாது என்பதும் தெரிகிறது. நகுலன் எழுதியிருக்கிறார், எமிலியின் கவிதைகளில் விரவிக் கிடக்கும் இடைகோடுகள், குரல் நிறுத்தத்தை உணர்த்துவது போல, என் கவிதைகளில் சொற்களுக்கு,  வரிகளுக்கு இடையே இருக்கும் வெளிகள், ஒருவித அகத்தயக்கத்தை உணர்த்துபவையாக இருக்கலாம் என்று. அது சரி என்றே படுகிறது எனக்கு.

விடைகளை உள்ளடக்கிய வினாக்களை மாணாக்கனிடம் கேட்கும் கருணை மிகுந்த ஆசிரியரைப் போல நீங்கள் இருக்கிறீர்கள். ‘நிகழில் நிகழ்த்திக் கொள்ளத் துணியாத உறவுக்கான மாற்றீடுதான் தான் என்னுடைய பல கவிதைகளும். எமிலியும், வான்கோவும் நான் அறியாமலேயே மதுரைக்கு வந்திருக்கிறார்கள், திருப்பூவணத்தில் (இன்றையத் திருப்புவனத்தில்) நகில்கள் பெரிதுடைய பொன்னனையாளைப் பார்த்த போது, அந்த மாலை மஞ்சளில் அவளோடு வான்கோவையும், எமிலியையும் சேர்த்து அணைத்துக் கொள்ளத் தோன்றியது. உத்தர வாகினியாய் ஓடும் வையைக் கரையில் அந்தியின் அருட்காட்சியாக அதைக் கற்பனை செய்து கொண்டேன். அந்த வேகத்தில்தான் எமிலியை வீட்டுக்கு அழைத்து வந்ததும். இறுக்கமும் பூடகமும் தவிர்த்த நெகிழ்ச்சியான உரைநடையில் தான் இதை எழுத முடிந்தது.

ஆம் / இல்லை .மூன்றாம் முலை தாங்கிய தடாதகை ஆகவே என்னை உணர்கிறேன், அவருக்காவது சிவனைக் கண்ட அளவில் மூன்றாம் முலை தணிந்தது. எனக்கோ இது ஆயுள் முழுதுமான நிறைவேறா விழைவு, தாளாத பாரம், வடிந்து விடாத பெருக்கு. கவிதைக்குள் தான் இது சாத்தியம். கிரேக்க வரலாற்றில் தன்னைப் புதைத்துக் கொண்ட – இன்றே அறிமுகம் ஆன- கவாஃபியின் கவிதையில் நிகழ்வது போல.

‘எஸ்’ என்ற ஒற்றை எழுத்தாலும் ‘சூசி’ (நகுலனின் சூசிப்பெண் நினைவுக்கு வருகிறாள்) ‘டாலி’ போன்ற செல்லப் பெயர்களாளும் எமிலியால் அழைக்கப்பட்ட சூசன் கில்பர்ட் . இளமைக்கால உயிர்த் தோழி. பின்னாளில் சகோதரன் ஆஸ்டினின் மனைவி. அதிகப்படியான கடிதங்களையும் கவிதைகளையும் எமிலியிடமிருந்து பெற்றவள்,

எனக்கான சூசனை
என் உடைமை ஆக்கிக் கொள்வது
அதனவில் பேரின்பம்

என்று ஒரு கடிதக் கவிதையில் எமிலி பரவசமடைகிறாள். பூடகமாகவே பலவற்றையும் உணர்த்துகிற- தூய்மைவாதம் நிலவிய பகுதியில் வாழ்ந்த – எமிலியின் கவிதையை நேரடியாக அர்த்தப்படுத்திக் கொள்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. சார்ல்ஸ் வாட்ஸ்வர்த், சாமுவேல் பௌல்ஸ், நீதிபதி ஓடிஸ் லார்ட் ஆகியோருடன் சூசன் கில்பர்ட்டையும் எமிலியின் மானசீகக் காதலர்கள் ஆகவே நான் கற்பித்துக் கொள்கிறேன்.

மனத்தில் தைத்துக் கொண்டிடுருந்த குற்ற உணர்வு முள்ளை ஆண்டாளின் பாசுர வனத்தில் வைத்துப் பிடுங்கி எறிந்தேன். தொடரும் உடல்மையத் துயரங்களிலிருந்து விடுபடக் காரைக்கால் அம்மையின் கவிதை உதவுக்கூடும் என்று  நம்புகிறேன். ‘விமரிசனக் கலை’ (1959) என்ற நூலின் இறுதியில் ‘காரைக்காலம்மையார்’ என்ற தலைப்பில் க.நா.சு எழுதியிருந்த அற்புதமான கட்டுரைதான், காரைக்காலம்மையை நோக்கி என்னைத் திருப்பியது. “அற்புதத்திருவந்தாதியை சுவர்க்கம் என்று சொன்னால், மூத்த திருப்பதிகத்தைத் தன்மை சிறிதும் மாறாத நரகம் என்று சொல்லலாம். ஆனால் மனித சங்காத்தம் இல்லாத நரகம் அது… வெறும் வார்த்தைகளால் விளைந்த நரகம்.” என்ற அவரது வரிகள், காரைக்காலம்மையின் கவிதை நிலத்தை வரைந்து காட்டின,  திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தையும், அற்புதத் திருவந்தாதியின் சில பாடல்களையும் நவீன கவிதையாகவே படிக்க முடிந்தது. இதைத் ‘துடி கொள்ளும் கவிதை மொழி’ என்கிறார் விக்ரமாதித்யன்.

தனக்கான கவிதைமொழியாக சிவன்  நடனமாடுதிற, பேய்கள் நடமாடுகிற மயான பூமியை அவர் சிருஷ்டித்துக் கொண்டது, எனக்கான கவிதை வெளியை நானே உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற போதத்தைக் கொடுத்தது. அதே சமயம் ‘நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக’ என்று அவர் கடிந்து கொள்வது, நூலறிவில் ஊரும் என் கவிதைக் கால்களை நடுங்கச் செய்கிறது. 

காரைக்காலம்மையார், ஆண்டாள், எமிலி – இவர்கள் மூவரும் ஏதோ ஒரு வகையில் என்னை, என் கவிதையைப் பாதித்திருக்கிறார்கள் .தனிமைத் துயருக்குத் துணையாக இருந்திருக்கிறார்கள். ‘பாக்கி சாக்கி வைக்கக் கூடாதுடா வியாபாரத்தில’ என்று இறுதிப் படுக்கையில் பெரியப்பா சொல்லிக் கொண்டிருந்தார். வியாபாரத்தில் மட்டும் இல்லை. எல்லாவற்றிலும் தான். இந்த முவர் கடனை எப்படித் திருப்பிச் செலுத்த?  எமிலியின் கவிதைகளில் மிகச் சிலவற்றைத் தயக்கத்துடன் மொழி பெயர்த்தேன். “திருவாலங்காடு” ‘என்று காரைக்கால் பேய் குறித்த என் அரற்றல்களைப்  பதிவு செய்து கொண்டிருக்கிறேன். ( அத்தலைப்பில் ஒரு பெரிய நாவலை எழுதிக் கொண்டிருந்ததை க.நா.சு. குறிப்பிட்டிருக்கிறார்.) ஆண்டாளுக்கு நான் பட்ட கடனை,உடையவர் நேர் செய்து விடுவார் என்று கற்பனை செய்து கொள்கிறேன்.

எந்த உரிமையில் என்னுடைய வாழ்க்கைக்
குவளையிலிருந்து நீ அருந்துகிறாய்
என் உதடுகள் அதைத் தீண்டுகையில்
என்னுடையதல்லாது அவை உன்னுடையவை ஆகி விடுகின்றன,

-நதானியல் ஹாதோர்னுக்கு ஹெர்மன் மெல்வில் எழுதிய வரிகள்.

பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பனுவலின் விதிகளின்படி ஒழுகும் வசீகரமான ‘ஓனகட்டா’ ஆன மாங்கிடு ஸனகாவை வெண்கலக் கடைத் தெருவில் வைத்துப் பார்த்த போது, மெல்வில்லின் வரிகளே என் முன் நகர்ந்து கொண்டிருந்தன. அவர் நீங்கிய பின் கடையை உள்முகமாய் அடைத்து, அடிதண்டாவைப் போட்டு தனிமையை உறுதி செய்து கொண்டு, குடும்பஸ்தன் ஆக, வியாபாரி ஆகப் புனைந்து கொண்ட ஒப்பனைகளை ஒவ்வொன்றாய்க் களைகிறேன். தடாதகையின் மூன்று முலைகளை ஏற்றுக் கொண்டு புதிய வேடத்தை – அல்லது இயல்பான இருப்பை – தொடங்குகிறேன், அகத்தின் இருளில் நிகழ்பவையே அனைத்தும்.

ஏறிட்டுக் கொள்ளுதல், பாவனை கூடப் பெறுதல், உணர்வு மடைமாற்றம் செய்து கொள்ளல். போன்ற வைணவ பரிபாஷை சொற்கள் பலபரிமாணம் கொண்டவை. விஷ்ணுசித்தனா, கோதையா, நான் யார் என்ற மயக்கம் இன்று வரை தீரவில்லை. பாணன்கள் இருவரும் (பிரபந்தம், விளையாடல் புராணம் ) என் சகாக்கள், தண்டிக்கப்படுபவர்கள் என்பதாலும், காரைக்கால் பேயும், ஆம்ஹர்ஸ்ட்டின் வெள்ளாடை ஆவியும் இரு சிறகுகள். அந்திமத் துணையாய் வந்து சேர்ந்தவர் அலெக்ஸாண்ட்ரியக் கவிஞர் கவாஃபி’ “பிரபஞ்சத்துக்கு எதிராக சற்று சாய்மானமாக சிறிதும் அசையாது நின்று கொண்டிருக்கும் கிரேக்க கனவான், (ஃபார்ஸ்டரின் வரி.) தேவ பாகமும், தேவி பாகமும் முயங்கிய திருச்செங்கோடு அர்த்தநாரியின் வெள்ளைப் பாஷாண வடிவம் தேய்ந்து கொண்டே வருகிறது. தாகம் தீர்க்கும் திருவடிச் சுனைநீர் மட்டும் வற்றுவதில்லை.

Portrait of Cavafy in Alexandria, from Illustrations for Fourteen Poems by C.P. Cavafy, David Hockney

கிரேக்கக் கவிஞர் சி.பி. கவாஃபி (1863-1933) நேற்றுத்தான் அறை வாசலில் நின்று கொண்டிருந்தார். இன்று யுவன் சந்திரசேகரின் ‘நிலவைச் சுட்டும் விரல்’ நூலில் ‘வரலாறு என்னும் வளைகோடு’ கட்டுரையில் எதிர்ப்பட்டார்.

“கான்ஸ்டாண்ட்டின் கவாஃபி அலெக்ஸாண்ட்ரியாவைச் சேர்ந்தவர். கிரேக்க வரலாற்றையும் தொன்மங்களையும் கவிதையில் இடம் பெறச் செய்தவர் . வரலாற்றையும் கேளிக்கைகளையும் ஒரே நேரத்தில் தழுவிக் கொண்டவர் என்று  மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுவதாக விக்கிப்பீடியா சொல்கிறது. ஆளால், வரலாற்றுத் தருணங்களை, அவற்றில் பொதிந்திருக்கும் மர்மத்தை விவரிக்கும் விதத்தில் ஒரு வகைத் தத்துவ நோக்கை வெளிப்படுத்தியவர் என்று சொல்ல வேண்டும்.” இவ்வாறு கவாஃபிவை அறிமுகப்படுத்திவிட்டு, அவருக்குப் பிடித்த ‘நீரோவின் காலக்கெடு’ என்ற கவாஃபியின் கவிதையைத் தமிழில் அளித்திருக்கிறார் யுவன். அவருடைய தீர்க்கமான பார்வைக்கும் அப்பால் இருக்கிற கவாஃபியின் நிலப்பரப்பு தான் என்னுடைய திணைப்பரப்பு என்று நினைக்கிறேன். அந்த நினைப்பு சரி தானா என்று கேட்பதற்குள் அறைவாசலிலிருந்து மறைந்துவிட்டார் கவாஃபி. 

நிழலுருவாய் அறையில் இருக்கும் கவாஃபியிடம் சில ஒப்புதல்களும், சில வினாக்களும்:

i) நீயாக இருக்க விரும்புகிற – ஆனால் முடியாத -என்னுடைய துயரின் கனத்தை நீயே உணரமுடியும்.

ii) சொக்கன், சுந்தரன், சுந்தர ராஜன், கூடலழகன், கள்ளழகன் – என்று வாய் நிறைய ஆண் அழகைப் போற்றும் ஆதி நகரத்தில், தன்பால் ஈர்ப்பாக இந்தப் பெயர்களை உச்சரிக்கையில் என் குரல் குழறுகிறது. இந்த மனத் தடையை நீ எப்பொழுது, எப்படிக் கடந்தாய்?

(iii) முதல் மறுதலிப்பிற்குப் பிறகு, முதல்அடி எடுத்துவைக்க என்னுள் இருக்கும் தயக்கம் தின்று விட்டது உறவை. தயக்கமும், குற்ற உணர்வும் ஆதிமனம் சார்ந்ததா?.

iv) குற்ற உணர்ச்சியின் முள்ளைப் பிடுங்கி எறிந்ததாய், நினைத்துக் கொள்கிறேன். ஆனால் ஆயுளுக்கும் இருக்கும் அந்த வலியை உன்னால் உணர முடியும் என்று நம்புகிறேன்.

v) ‘ஆசைகள்’ என்ற சிறு கவிதையில் நீ சொல்வது போல் இளம் வயதில் இறந்தவர்களின் அழகிய உடல்கள் போல, ஒரு இரவின் சுகமும், ஒரு வைகறையின் ஒளியும் அறியாத நிறைவேறா ஆசைகள், அவற்றின் வலிகள்.

(இன்னும் சில ஒப்புதல்களும், வினாக்களும்)

i)நீ நுழைந்தது என்னுடைய அறைக்குள் அல்ல; இதயத்தின் அந்தரங்கத்துள் என்று குழலிசைக் கலைஞர் ஹிமான்ஷு மித்ரா சொன்னதாக வயலின் வித்தகர் ஹரிசங்கர் தீட்சித் நினைவு கூர்கிறார்.

“சூழுந்ததனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே”

ii)அடைந்ததன் களிப்பு உன்னுடையது. அதற்குள் அடங்கி விட்டது என்னுடைய நிறைவேறாமையின் ஆற்றாமை.

iii) வரலாற்றை விரித்து உன்வசம் ஆக்கிக் கொள்கிறாய். புராணங்களில் மறைந்து கொள்ளவே விரும்புகிறேன் நான்.

iv)’அவனே தானே ஆகிய அந்நெறி…’

கவிஞன் என்றாலும் கவிதையியலைப் பேசுவது தயக்கமாகவே இருக்கிறது. கவிதையின் சொல் வரிசை, நிலப்பரப்பு இத்யாதி கவிஞனின் மொழியும் அகமும் இணையும் புள்ளியில் நிர்ணயிக்கப் படுகின்றன. சில சமயங்களில் கவிதை காட்சிப்படுத்தும் புறத்தின் உணர்வுத்தளங்களைச் சுட்ட அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பிறிதொரு நிலத்தின் சொற்களை  அதில் இருத்திவிட்டு கவிதைக்கு வெளியே வந்துவிடுகிறான் கவிஞன். இடவழுவையும் மீறி சொற்கள் தமக்குள் தாமே கிரியை செய்து கொள்ளத் தொடங்குகின்றன. கவிதைக்குள் ஒரு நொடிகூடக் கூடுதலாக நிற்கக் கவிஞனுக்கு அனுமதி இல்லை. அமெரிக்க இல்லத் தனிமகள் இருப்பைச் சொல்லவரும் கவிதையில் (“வனத்தில் புதைந்த இல்லத்தில்”)

.”பார்வைக்கு அப்பால் ஆன / பதுங்கு நிலவறை” என்ற யாழ்ப்பாண நினைவுச் சொற்களை வைத்துவிட்டு வெளியே வந்து விட்டேன்.

உவமைகளை நான் அதிகம் பயன்படுத்துவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் அவை அத்தியாவசியமானவையும் அல்ல. ஒரு சொல்லின் உணர்ச்சிக் கூர்ப்பதம், ஒரு அசையிலும் இருக்கிறது. “பகலும் மாலை துணை இலோர்க்கே” என்ற மிளைப்பெருங்கந்தனின் குறுந்தொகைக் கவிதையின் ஈற்றடி உம்மையும், ஏகாரமும் பல்வேறு த்வனிகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளவை.

வின்சென்ட் வான்கோவின் துயரமும், படைப்புக் கிளர்ச்சியும் நிறைந்த இறுதிநாட்கள், ஒருவிதமான வதையுணர்வைக் கடத்திக் கொண்டிருந்தன. அவர் அறுத்து அனுப்பிய இடது செவிமடல், நிராதரவான மனித இருப்பின் படிமமாகவே எனக்குத் தோன்றியது. ஓவிய    நுண்ணறிவு என்னிடம் இல்லாத போதும், நான் இயைபு கொள்கிற சில சிறு துளிகளை, “என்னுடைய நெஞ்சகம் பால் சுவர்வழி” எழுதிக் கொள்கிறேன். இன்னொரு வகையில் சொன்னால், பெரிய வரைபடத்திலிருந்து என்னோடு உறவுடைய ஒரு சில சிறு பகுதிகளைக் கத்தரித்து என் கவிதையில் ஒட்டிவைத்துக் கொள்கிறேன். ஒரு வெட்டி ஒட்டல் புத்தகம் போன்றது தான் என் கவிதை.

படித்துவிட்டுப் பாத்திரக் கடைக்குள் நிரந்தரமாக வந்த போது, கசப்பின் துளி அகத்தில் உறைந்திருந்தது. களிம்பேறிய பித்தளை நாட்கள் அவை. அந்த ஒவ்வாமை நீங்கச் சில ஆண்டுகள் ஆயின. தன்மையப் பார்வை சற்றுக் குறைந்து,  சுற்றியிருந்த சிறு உலகத்தைச் சிறிது அவதானிக்க முடிந்தது. வெண்கலம், பித்தளை, தாமிரம் – ஆகிய உலோகங்களின் வசீகரம் புரிகிற காலத்தில், அவற்றின் பயன்பாடு குறையத் தொடங்கி விட்டது. ‘அக்ரஹாரம்’ என்ற இட ஆகு பெயர் சுட்டிய கனமான வெண்கல உருளிகளும், வெண்கலப்   பானைகளும் புழக்கத்திலிருத்து மறைந்து விட்டன. சுத்தமான வெண்கல முறிக் கும்பாக்களையும், கறிக் கும்பாக்களையும் விலைக்குப் போட்டு விட்டு எவர்சில்வர் பிளேட்டுகனை வாங்கிச் சென்றார்கள் கிராமவாசிகள். நிலக்கோட்டை அங்கணப் பத்தர் கொண்டுவந்த வெண்கல மாடக்குழி. விளக்குகளில் இருந்த கிளிகள், அவர் மகன் கொண்டு வந்த விளக்குகளில் காணாமல் போய் விட்டன. தொழில் சுத்தமும், கறார்த்தன்மையும் கொண்ட ஆசாரிகளின்  பட்டறைகள் அடைபடத் தொடங்கின.`தண்ணீ’ரில் மிதக்க ஆரம்பித்தார்கள்  பாலீஷ் பட்டறைக்காரர்கள். ஒரு தலைமுறை மாறிக் கொண்டிருந்தது. 

ஆனால் கிராமத்து வாடிக்கையாளர்  பலரும், பரபரப்பான வியாபாரத்தின் நடுவே அப்பாவிடம் பகிர்ந்து கொண்ட குடும்ப அந்தரங்கங்களை, குறைவாகப் பேசுகிற  என்னிடமும் பகிர்ந்து கொண்டது ஆச்சரியத்தை அளித்தது. துறுதுறுப்பான, கண் பார்த்தால் கைவரையக் கூடிய சித்திரக்காரப் பெயர்வெட்டி இளைஞன் (அவனது கைப்பையில்தான் எத்தனை வகைச் சிற்றுளிகள்!) இருபது வயதில் தூக்கில் தொங்கி விட்டதன் ஆத்மாநாமியத் துயரம். இத்தனைக்கும் மத்தியில், கடைக்கு வெளியே வரிசை போட்டிருக்கும் பித்தளைப் பாத்திரங்களிலும், திருவாசியிலும் பட்டுத் தெறிக்கும் மாலைச் சூரியனின் ஒளி, ஒரு மாய மஞ்சள் உலகத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது.

1940 களில் அப்பா தனியே நிறுவிய பாத்திரக்கடை, கீழ்ச்சித்திரை வீதியில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு மிக அருகில் இருந்தது. நீண்டகாலம் அங்கிருந்த கடையை 2004ல் வெண்கலக்கடைத் தெருவுக்கு மாற்ற நேர்ந்தது. வியாபார நலிவும், தனிமையுமான அந்தக் காலகட்டத்தில், ஓவியர் வான்கோவும், அவரது மஞ்சள் வண்ணமும் வெங்கல மஞ்சளுடன் புணர்வதை உணர முடிந்தது. துயர மஞ்சள் கவிதையில் சிந்திப் பரவத் தொடங்கியது. நீங்கள் குறிப்பிடும் இத்தனை வகை மஞ்சள் சாயைகள் கவிதையில் படிந்திருப்பதை உணரும் போது அது வான்கோ என்னுள் நிகழ்த்திய ரசவாதம் என்றே உணர்கிறேன். 

‘எவர் சில்வர்’ (எப்பொழுதும் வெள்ளி) என்ற பகட்டுப் பெயருடன் நுழைந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என்ற உலோகத்தின் பளபளப்பு ஒரு ஒவ்வாமையையே என்னிடம் உண்டு பண்ணியது. ‘ஆசையும், குற்ற உணர்ச்சியும் சமமாய்ப் பிய்த்துத் தின்ற என்னுடைய விகார முகத்தை எவர்சில்வர் பாத்திரப் பளபளப்பு பிரதிபலித்ததைக் கேலியின் இருண்ட கணமாக உணர்ந்தேன். 

அவர் காலத்திய ஹிந்தி நடிகைகளில், மதுபாலா, வைஜயந்திமாலா போன்ற அழகி இல்லை வஹீதா ரெஹ்மான். மீனாகுமாரி, நூதன் போல் உணர்ச்சிகரமான நடிகையும் அல்ல. ஆனால் அவரிடமிருந்த மிகை தவிர்த்த நளினம் என்னைக் கவர்ந்தது. நசரீன் முன்னி கபீர், ‘வஹீதா ரெஹ்மானுடன் உரையாடல்கள்” நூலில் குறிப்பிடுவது போல, உரத்து ஒலிக்காத மெல்லிய கிசுகிசுப்பு போன்றது வஹீதாவின் நடிப்பு. குருதத் கரிசனத்துடன் உருவாக்கிய,  வி.கே.மூர்த்தியின் இருளும் வெளிச்சமும் புணர்ந்த ஒளிப்பதிவு கட்டி எழுப்பிய எழில் உருவம்.ப்யாஸா, காகஜ் கே பூல், சாத்வீன் கா சாந்த் போன்ற திரைப்படங்களில் குருதத்துக்கும், வஹீதாவுக்கும் இடையே இருந்த நிறைவேற முடியாத நேசம், ஒரு துணைப் பிரதி போல ஓடிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. ராஜ்கபூர் – நர்கீஸ், தேவ் ஆனந்த் – சுரய்யா, தீலீப்குமார் – மதுபாலா காதல் போல பெரிதுபடுத்தப்பட்ட உறவு இல்லை அது. தனிப்பட்ட உறவுகள் பொதுப் பார்வைக்கானவை அல்ல’ என்று நசரீன் முன்னி கபீரிடம் தெரிவிக்கிறார் வஹீதா ரெஹ்மான். 

பொதுவாக அந்தக் காலத்துக் கீழ்நடுத்தர வர்க்கத்தினர், மேல் தட்டினரை நகலித்த விஷயங்களில் ஒன்றாகக் கிரிக்கெட் ஆர்வமும் இருந்திருக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரை எல்லாமே, ஆண்டாளின் கனவுத் திருமணம் போல், அகத்தில் நிகழ்த்திக் கொண்டவையே. வெளியே போய் விளையாடாது, வீட்டினுள் ஒடுங்கிய அடைகோழியின் சிறகடித்தல் தான் எல்லாம். ஹிந்து நாளிதழில் முகமற்ற நிருபரின் நிறமற்ற கிரிக்கெட் ஆட்டப் பதிவுகளும், ஹிந்துவின் துணை வெளியீடான ‘விளையாட்டும் பொழுது போக்கும்’ இதழின் கட்டுரைகளும் அளித்த தகவல் அறிவுதான் என்னுடையது. அந்தப் பத்திரிகையில் தொடராக வந்த ‘லார்வுட் கதை’ போருக்குப் பிந்தய கிரிக்கெட் வீரர்கள்’ போன்றவற்றை விரும்பிப் படித்தேன். ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் ரே லிண்ட்வால் பற்றிய கட்டுரையில் “ஒரு கவிதையின் இயக்கம் போன்றது லிண்டவாலின் வேகப்பந்து வீச்சு” என்ற வரிமட்டும் என் மனத்தில் பதிந்து விட்டது . பின்னாட்களில் பி.எஸ். சந்திர சேகரின் சுழல்பந்து வீச்சில் இருந்த ஒரு மாயத்தன்மை மனத்தைக் கவர்ந்தது. நேர்முக வர்ணனையாளர்கள் பெர்ரி சர்வாதிகாரி, டிக்கி ரத்னாகர், பியர்சன் சுரிட்டா போன்றவர்களின் குரல் மீதிருந்த மயக்கம் வேறு. ஆனால் கல்லூரிப் பருவத்துடன் கிரிக்கெட் ஆர்வமும் வடிந்து விட்டது. ‘விளையாட்டும் பொழுதுபோக்கும்’ இதழும் நின்று விட்டது.

வாச்சியப் பொருளை விரித்துரைப்பது கவிஞனின் வேலை இல்லை என்றே எண்ணுகிறேன். திரைச் சிலையை விலக்கிச் சற்று உற்றுப் பார்த்துவிட்டு, மீண்டும் திரைக்குள் மறைந்து விடவே விரும்புகிறேன். திரையை விலக்கிச் சில அடிகள் வெளியே கைப்பிடித்து அழைத்து வந்ததற்கு நன்றி. என்னுடைய மிகச்சிறிய உலகத்தை மீள் பார்வையாகக் கண்டுகொள்ள அது உதவியது. அந்த அனுபவத்துக்குப் பின், திரைக்கு அப்பால் அக அரங்கில் ஒரு காட்சி விரிகிறது. அர்த்தநாரியும் கிரேக்கக் கடவுளும், அரியும் அரனும், ரைம்போவும் வெர்லைனும் இயல்பான மகிழ்ச்சியுடன் ஆலவாய் வீதிகளில் வலம் வருகிறார்கள். கண்டிக்கும் பார்வைகளும், குற்ற உணர்வின் அழுத்தங்களும் பொருட்படுத்தப்பட வேண்டாதவை ஆகின்றன. கவாஃபியின் கரத்தினுள் பாதுகாப்பாக இருக்கிறது என் கரம். 

புரிதலுக்கு அப்பால் ஆன அமைதி.

அறையில் நிகழ்த்திக் கொண்டதை மீண்டும் அம்பலத்தில் நிகழ்த்த வேண்டுமா என்ற தயக்கம் என்னுள் இருந்தது உண்மை தான். ஆனால் தீவிரமான வாசிப்புத் திறனும், ஆழ்ந்த புரிந்துணர்வும் கொண்ட உங்களுடன் இந்தக் கட்டுரையாடலை நிகழ்த்தத் தொடங்கியபின், எனது மனத்தடைகள் சிறிது சிறிதாக உடைந்து வருவதை உணர முடிந்தது. குற்ற உணர்வும், அச்சமும், துயரமும், தன்னிரக்கமும் குறையத் தொடங்கின. இதற்காக எல்லாம் உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.அனைத்துக்கும் மேலாக, நீங்கள் அறிமுகப்படுத்திக் கொடுத்த கவாஃபியின் கவிதை உலகத்துக்கு.

மூலநூல்கள் / மேலும் படிக்க

ந.ஜயபாஸ்கரன், ந. ஜயபாஸ்கரன்: அரை நூற்றாண்டு கவிதைகள், காலச்சுவடு, 2024

எமிலி டிக்கின்ஸ்ன்,  சாய்மான வெளிச்சம்,  மொழிபெயர்ப்பு ந.ஜயபாஸ்கரன், காலச்சுவடு, 2022


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “பால்மாறி ஆடும் கவிதைகள்: கவிஞர் ந. ஜயபாஸ்கரனுடன் ஒரு கட்டுரையாடல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.