வான் கருங்கூரையென கவிழ்ந்திருக்க அவற்றின் மீது தெளித்து விட்டனபோல் விண்மீன்கள் பரவிக் கிடந்தன. எங்கோ விழுந்துக் கொண்டிருந்த அருவியின் ஓசை இரவில் சீராக ஒலித்துக் கொண்டிருந்தது. ஓடையில் நீரருந்திக் கொண்டிருந்த மானுக்கு நீர் அதனுருவை காட்ட நிலவு அதனை இரசித்துக் கொண்டிருந்தது. பறவைகள் சிந்தையால் வானை நோக்கியபடி மரக்கிளைகளிலும் பொந்துகளிலும் கூடுகளிலும் அடைந்துக் கிடக்க, அதன் குஞ்சுகள் கிளைகளின் ஊசலாட்டத்தில் மயங்கிக் கிடந்தன.
மைத்ரேயி அவ்வட்ட வடிவ குடிலின் படலைத் திறந்து வெளியே வந்தாள். மண்ணாலான தரையும் வட்டமான மூங்கில் சுவரும் அடக்கி வைத்திருந்த குளிரை வெளி வெளிச்சமிட அதை அனுபவிப்பவள் போல வாயை திறந்து மூச்சு விட அது பெருமூச்சு போன்று ஒலித்தது. குடிலின் இருபுறமும் அமர்வதற்கேற்ப அமைக்கப்பட்டிருந்த நீள்பீடங்கள் காற்றில் சில்லிட்டிருந்தன. திண்ணை சிறு மண்டபம் போல் நீட்டப்பட்டு மரத்துாண்களால் நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளிருந்ததை விட வெளிப்பார்வைக்கு குடில் இன்னும் இருண்டிருந்தது. இருள் என்பது குறைந்த ஒளி என்று யாரோ உச்சரித்த சொற்கள் அவள் நினைவில் எழுந்தன. மாணக்கர்களின் குடில்கள் குந்தி அமர்ந்திருக்கும் வேழம் போன்றும் மலைகள் பெற்றெடுத்த சிறுகுன்றுகள் போன்றுமிருந்தன. புதர்களை காற்று தழுவிக் கொண்டபோது அவை சிம்மம் போல பிடறி சிலிர்த்தன. பிருகதாரண்யகம் என்றழைக்கப்படும் அவ்வேதவனம் இரவை தான் அமைந்திருந்த அடர்வனத்திடம் ஒப்படைத்து விட்டு வேத ஒலிகளற்ற அமைதிக்குள் ஆழ்ந்திருந்தது.
அவள் குளிரை தணிப்பதுபோன்று கைகளை முன்புறம் கட்டிக் கொண்டு வேள்வி மண்டபத்தை நோக்கி நடந்தாள். அகன்ற பாதை ஈராள் செல்லும் வழியென குறுகியிருந்தது. அதன் கால்படாத பாகமெங்கும் புல்லின் விதைகள் முளைக்கும் முனைப்புடனிருந்தன. மழை அதன் தருணம். வேள்விக்குண்டங்களில் குவிந்திருந்த சாம்பலில் அணையாதிருந்த நெருப்பு கங்குகள் சிவந்த மூக்குடன் எட்டிப் பார்த்தன. குண்டங்களை தழுவி எழுந்த காற்று லேசான வெதுவெதுப்பிலிருந்தது. அமமண்டபத்தின் நீள்அரங்கில் அமைக்கப்பட்டிருந்த குருபீடத்தில் ஒளிர்ந்த நெய்விளக்கு பறவையின் கூட்டுக்குள் மாட்டிக் கொண்ட மின்மினிப்பூச்சியென மினுக்கியது. பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்டிருந்த தரையின் மீது இரவை நழுவ விடக்கூடாத தவிப்பில் கரையான்கள் விறுவிறுப்பாகப் பரவிக் கொண்டிருந்தன. அவள் பாறையில் வடியும் வெண்ணிற அருவியை பிய்த்தெறிந்தது போன்று விரவிக் கிடந்த விண்மீன்கள் நிறைந்திருந்த வானை நோக்க, அது நள்ளிரவு என்றது. யாரோ தன்னை நோக்கும் உணர்வு தோன்ற அவள் திரும்பியபோது திடுக்கிட்ட அவ்விழிகள் நீண்டு மான் உருக் கொண்டன. அது தன் பின்னோடு வந்ததா? அல்லது அங்கேயே நின்றுக் கொண்டிருந்ததா? உற்று நோக்கியபோது அதன் உருளை விழிகள் மருண்டன. அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது எங்கோ ஓடி மறைந்தது. உயிரச்சம் கொண்டதோ? பொருளில்லாத பெருக்கில் இருப்பென்ன இறப்பென்ன இயல்வதுதான் என்ன?
பிருகதாரண்யகத்தில் அதன் முதலாசிரியரின் மெய் தேடலானது அவளது கணவர் யாக்ஞவல்கியரால் தொகுக்கப்பட்டு கல்வியாக கற்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு அவர் தன் மனைவி காத்யாயினியோடும் மகன்களோடும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் மைத்ரேயி தன்னையும் அப்பயணத்தில் இணைத்துக் கொண்டிருந்தாள். அவர்களின் மையக்குடில்களை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த மாணக்கர்களின் குடில்களில் விடியல் தொடங்கும் முன்பே அலுவல் தொடங்கி விடும். கிழக்கில் கதிரவன் எழுகையில் பசுக்களின் பால் மடிகள் வற்றியிருக்கும். கழனிகள் நீர் கண்டிருக்கும். ஆதவன் ஓடை நீரில் செம்மஞ்சளென படர்ந்து, குன்றின் பின்னிருந்து ஒளிர்ந்து பின் எழுந்து தன்னை வெளிக்காட்ட துவங்கும் முன் கல்வி பயிலுவதற்காக நகர்களிலிருந்து மாணவர்கள் வரத் தொடங்கி விடுவர். அரசசபைகளிலிருந்து ரிஷிகளுக்கு அழைப்போ குருநிலைக்கு நன்கொடைகளோ ஏந்தி கொண்டு தேர்கள் அங்கு வரலாம். தங்கள் குரு மரபை நிலைநிறுத்த வேற்று மரபிலிருந்து ரிஷிகள் வருவதும் குருவை மறுத்து அவரிடம் முரண்பட்டு இங்கிருக்கும் கல்வியை ஏற்க மாணக்கரும் வரலாம்.
அவள் இருளில் ஆழ்ந்திருந்த கண்களை மீட்டுக் கொண்டாள். இத்தனை இருளும் பகலொளியில் எங்கு சென்று தன்னை ஒளிந்துக் கொள்கின்றன? கரிய கோடுகளென தெரியும் மலைகளை மினுக்க வைக்கும் பகலொளி இரவுகளில் எங்கு செல்கிறது? மலர்களும் மலைகளும் விண்ணும் மண்ணும் நதியும் காடும் ஏந்திக் கொண்டு வரும் வண்ணங்கள் இவ்விருளுக்குள் எங்கிருக்கிறது? இருளென்றும் ஒளியென்றும் ஏதுமில்லையெனில் அன்றிருந்ததும் இன்றுள்ளதும் வந்துறுவதும்தான் என்ன?
“மைத்ரேயீ…”
யாரோ அழைத்தது போலிருந்தது. அது அவளுள் எழுந்த ஒலி. அவள் தன்னை குனிந்து நோக்கிக் கொண்டாள். மரவுரி தரித்த உடலில் இன்னும் இளமை தீர்ந்து விடவில்லை. ஏவலும் காவலும் காதலும் சூழ்ந்த உலகியல் ஏன் தன்னுடன் என்னை அணைத்துக் கொள்ளவில்லை? அதற்காக அவள் மணம் துறந்தவளும் அல்ல. மனைவியும் மைந்தர்களும் கொண்ட தந்தையின் வயதையொத்த யாக்ஞவல்கியர் என்ற புகழ்பெற்ற ரிஷியுடன் எது தன்னை இணைத்தது? எனது மெய்ஞான தேடலா? நான் சந்நியாசம் தேடியே இல்லறத்தை அடைந்தேனா? அவள் ஆழுள்ளத்தை கூர்ந்து நோக்கினாள். நான் வருந்துகிறேனா? அப்படியானால் எது என்னை வருத்துகிறது? முடிக்காமல் வந்து விட்ட உலகியல் கடமைகளா? இக்கேள்வி இவ்வளவு காலம் கழித்து இப்போது ஏன் என்னுள் எழுகிறது? யாக்ஞர் இங்கிருந்து செல்லவிருக்கிறார் என்பதனாலா? எனில் அவரை மட்டுமே வாழ்வென கொண்டிருந்தேனா? அதுதான் உண்மையா? அவ்வுண்மைதான் என் உறக்கத்தை போக்கி விட்டதா? இருள் மெல்ல அசைந்தது. காத்யாயனி அங்கு வந்திருந்தாள்.
“உறங்கவில்லையா மைத்ரேயீ… நீ எழுந்து வருவதை கண்டேன். திரும்பி விடுவாய் என்றெண்ணி காத்திருந்தேன்”
“ம்ம் அக்கா”
“நம் கணவர் துறவறம் மேற்கொண்டு இவ்விடம் நீங்கி செல்லவிருப்பதாக கூறியது உன்னை வருத்துகிறதா?”
மைத்ரேயிக்கு தமக்கையின் இயல்பான மனநிலை சற்று ஆச்சர்யமாக இருந்தது.
“ரிஷிப்பத்தினிகளுக்கு இது ஒன்றும் புதிதல்லவே பெண்ணே” என்றாள் ஆறுதலாக.
”ஆம் அக்கா..”
“பிறகேன் எதையோ சிந்தித்துக் கொண்டே இருக்கிறாய்”
“அது எதை என்றுதான் சிந்திக்கிறேன்” லேசாக புன்னகைத்தாள்.
“நான் கூறட்டுமா? கணவர் நம் இருவருக்குமானவர் என்றாலும் நான் பிரவிருத்தி மார்க்கம் ஏற்று இல்லறம் கொண்டு மகன்களை பெற்றவள். நீயோ நிவிருத்தி மார்க்கத்தை தழுவியவள். இறுதிக்காக மைந்தர்களைப் பெறவில்லை என்று வருத்தம் கொண்டிருப்பாய். அல்லது மனிதனின் இந்த உடம்பு பிளந்த வேர்க்கடலையின் பாதியை போன்றது. ஒருபாதி ஆண் என்றால் மறுபாதி அவனது மனைவியாலேயே நிரப்பப்படுகிறது என்று கூறிய அவர் பாதி கடலைகளை இங்கே விட்டு விட்டு செல்வது குறித்து கவலைக் கொண்டிருப்பாய்” படபடப்பாக பேசி விட்டு “அப்படிதானே பெண்ணே…” என்றாள்.
“இரண்டுமே இல்லை அக்கா. நான்தான் மெய்வழிநோக்கும் என் பயணத்தை இளமையிலேயே வகுத்துக் கொண்டு விட்டேனே”
“விதேகத்தின் மாமன்னர் ஜனகரும் மெய்ஞானிதான். ஆயினும் ஞானம், கர்மம் என்ற இரண்டு வாள்களையும் சேர்த்து சுழற்றவில்லையா?”
“அக்கா… ஒருவரை போல் ஒருவர் இருக்க முடியாதல்லவா… மாமன்னர் ஜனகரின் அவையில் நடைபெறாத மெய்தேடல்களா? ஆனால் அங்கிருக்கும் அமைச்சர்களோ மற்றவர்களோ அதனுள் ஆழவில்லையே? லௌகீகம் சார்ந்த இன்பங்களுக்கு குறைவற்ற எனது இல்லம் கூட என்னை எந்த வகையிலும் கவரவில்லை. நம் கணவர் தான் உருவாக்கிய இந்த குருநிலையையும் மாணவர்கள், மைந்தர்கள், நீங்கள், நான் என அனைத்தையும் உதறி விட்டு செல்ல எண்ணுகிறார் எனில் அதை விடவும் வேறேதோ உயர்ந்த ஒன்றை கண்டுக் கொண்டிருக்கலாம் அல்லவா?”
“உதறுவது அவருக்கு புதிதல்லவே மைத்ரேயி? தனது குரு வைசம்பாயரையே உதறி விட்டு வந்தவரவல்லவா அவர்?” என்றபோது காத்யாயினியின் வார்த்தைகளில் கனம் கூடியிருந்தது. அவள் அகமறிந்து கலவி கொண்டவர் ஆழமறிந்து கல்வி கற்பிக்க எண்ணம் கொள்ளவில்லை என்ற ஏக்கமிருந்தது.
“குருவிடமிருந்து கல்வியை பெறுவது என்பது அதை அங்ஙனமே மனனம் செய்வதல்ல. அதனை புள்ளியென கொண்டு அதிலிருந்து சித்திரத்தை எழுப்புவது அல்லவா? சித்திரங்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையே. மாறுபட்ட தன்மைகளோடு அவை இணைந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வைசம்பாயனரே கௌஷீதக குருநிலையில் முரண்பட்டு விலகி வந்தவர்தானே? யாக்ஞர் தன் குருவிடமிருந்து தான் பெற்றவற்றையும் கற்றவற்றையும் உதறி விட்டு பிறிதொன்றில்லாத மெய்மையை தேடி குருவையடைந்ததில் உருவானதுதானே இந்த பிருகதாரண்யகம்” வார்த்தைகள் படபடப்பாக விழுந்தன.
“என் மீது கோபம் கொண்டு விட்டாயா மைத்ரேயி?” எதையோ மறைக்க எதற்குள்ளோ ஆழ்ந்தது போன்றோ யாரிடமோ கேட்க வேண்டிய கேள்வியை வேறு யாரிடமோ கேட்பது போன்றோ இருந்தது காத்யாயனியின் குரல்.
“அக்கா.. இறைவன் என்ற மாபெரும் ஜோதியிலிருந்து தோன்றிய சுடர்கள்தானே நாமனைவரும். இதில் நான் நீங்கள் என்ற பேதமெல்லாம் ஏது அக்கா”
காத்யாயினி மைத்ரேயியின் அருகே நெருங்கி அமர்ந்து அவள் கையை எடுத்து தன் தொடை மீது வைத்துக் கொண்டாள்.
“பின் ஏன் வருந்துகிறாய் மைத்ரேயீ? நானும் உன்னை போல உலகியலின் மீது நாட்டமின்றியே இருந்தேன். இவரை மணக்கும்போது கூட மனைவி என்ற நிலையை விட மாணவி என்ற நிலையையே விரும்பினேன். ஆனால் நினைப்பதனைத்தும் நடந்து விடுமா என்ன? சரி.. அதிருக்கட்டும். நீ அவரை முதன்முதலில் எங்கு சந்தித்தாயாடீ பெண்ணே?” குரல் கிசுகிசுப்பாக ஒலித்தது.
உருளை விழிகள் அவர்களை விழித்து நோக்கின. காத்யாயினி நாவை மடக்கி மெல்லிய ஓசையெழுப்ப, மான் அவளை உரசிக் கொண்டு வந்து நின்றது. அவள் அதன் கழுத்தை தடவிக் கொடுக்க அது உடல் குழைத்தது.
“அக்கா… ஜனகரின் அவையில் பிரம்மவாதினியான கார்க்கி வாசக்னவீயுடன் நடந்த மெய்விவாதத்தின்போது தான் அவரை முதன்முதலில் அணுகி நோக்கினேன். எது எதனை வியாபித்துள்ளது என்பதை பற்றிய கார்க்கியின் கேள்விகள் ஸ்துாலமான பூமியில் தொடங்கி சூட்சுமத்தை நோக்கி நுண்ணியதாகிக் கொண்டே வர அவருடைய பதில் பிரம்மலோகத்தில் வந்து முடிந்தது. விவாதம் என்னவோ அத்தோடு முடிவடைந்து விட்டது. ஆனால் அவர்கள் விடையென ஆகவியலாததும் வினாவென எழவியலாததுமான மெய்மையை உணர்ந்திருந்திருக்க வேண்டும்”
காத்யாயனியின் கை தடவலை நிறுத்தியிருந்தது.
“அவர் அந்த மெய்மையை நோக்கி தன்னை செலுத்திக் கொள்ள விழைகிறார் என்று நினைக்கிறேன். அதை அறிந்துக் கொள்ளும் ஆவல் என்னை உந்துகிறது அக்கா”
“நீ அவருடன் செல்ல விழைகிறாயோ?”
“இல்லறம் துறக்கும் ஒருவர் தன் துறவுநிலைக்கு மனைவியையும் துணைக்கழைத்துக் கொண்டார் என்று நீங்கள் கேள்வியுற்றதுண்டா”
“அவர் துறவு நிலைக்கொண்டபின் இக்குருநிலைக்கு ஆசானென மீள மாட்டார் என்று கருதுகிறாயா மைத்ரேயீ?”
அவரும் அதையேதான் கூறினார். இருள் பிரியாத அந்நேரத்தில் யாக்ஞவல்கியரின் குடிலில் ரிஷியும் அவரது பத்தினிகளும் கூடியிருந்தனர். பீடத்தின் மீது விரிக்கப்பட்டிருந்த தர்ப்பையாலான விரிப்பில் ரிஷி அமர்ந்திருக்க அவரெதிரே பெண்கள் இருவரும் நீளமாக விரிந்திருந்த தர்ப்பை பாயில் அமர்ந்திருந்தனர். பின்னிருந்த மாடத்தில் ஒளிர்ந்த நெய்விளக்கு அவருக்கு ஒளி வட்டமிட்டது. அவர் அன்பே உருக்கொண்டவர் போலிருந்தார்.

பெண்களே… இதுநாள்வரை என்னையும் இக்குருநிலையையும் எவ்வித பிறழ்வோ பிசகோ இன்றி நீங்கள் இருவரும் கவனித்துக் கொண்டீர்கள்” அவர் இவ்வார்த்தைகளை ஏற்கனவே முடிவு செய்தவர் போல பேசினார். குரல் கனிந்திருந்தது. பொருத்தி வைத்தது போன்ற நீண்ட நாசி அவருக்கு. அளவான காதுகளும் இதழ்களை பாதியளவுக்கு மறைத்து நெஞ்சு வரை வளர்ந்திருக்கும் நீள்தாடியுமாக அமர்ந்திருந்தவரின் கண்களில் கருணை ஒளியென பொருந்தியிருந்தது.
“உங்கள் அன்பிற்கும் அக்கறைக்கும் நான் வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டவன் எனினும் நான் இங்கிருந்து அவற்றை நிறைவேற்ற முடியாத நிலையிலுள்ளேன்”
குடிலை சாத்தியிருந்த படலிலிருந்து எழுந்த பசும்புல்லின் மணம் அறையை நிறைத்திருந்தது.
“நான் என் வாழ்வின் இந்நிலையை விட்டு விட விரும்புகிறேன். இங்கிருந்து செல்ல விழைகிறேன். அவர் சற்று நிறுத்தி விட்டு, “அதன் பொருட்டு நான் பராமரித்து வந்த செல்வத்தை உங்கள் இருவருக்கும் பிரித்து தர வேண்டும். கணவனாக இது என் கடமை என்று கருதுகிறேன்” மீண்டும் பேச்சை நிறுத்தி விட்டு அவர்களை கூர்ந்துக் கவனித்தார்.
“செல்வம் என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் யக்ஞரே?” என்றாள் மைத்ரேயி.
“இங்கு பயிலும் மாணவர்கள், அவர்களின் பராமரிப்புக்கான அளிக்கப்படும் செல்வம், அவர்களது குடில்கள், இங்கிருக்கும் கழனிகள், பசுக்கள், அரசர்களின் ஆதரவு…”
அவரை முடிக்கவிடாது குறுக்கிட்டு “இவற்றையெல்லாம் எங்களுக்கு பிரித்தளிக்க எண்ணுகிறீர்கள். அப்படிதானே?” என்றாள் மைத்ரேயி.
“ஆம் பெண்ணே… நானில்லாத நிலையில் இனி இவையே உங்களை காக்கும். உங்கள் முதுமை சிறக்க இச்செல்வம் தேவைப்படும் என்பதை நான் அறிவேன்”
“நீங்கள் ஈட்டியவற்றை எங்கள் முதுமைக்காக அளித்து விட்டால் உங்களின் இறுதியை நீங்கள் எப்படி கழிப்பீர்கள்? உழைத்து வருமானம் ஈட்டும் வயதையெல்லாம் நீங்கள் கடந்து விட்டீர்கள் அல்லவா?” என்றாள் காத்யாயனி.
“காத்யாயனி.. என் அன்பே… நான் உழைத்து பிழைக்கப் போவதில்லை. இச்செல்வமும் எனக்கு தேவையில்லை. இல்லறம் துறந்து தவவாழ்வில் ஈடுபடபோகும் எனக்கு அழியக்கூடிய இச்செல்வம் பெரும் தடைகளே”
“அப்படியானால் அழியக்கூடிய இச்செல்வத்தை எங்களுக்களித்து விட்டு அழிவற்ற ஒன்றை நீங்கள் தேடி செல்ல போகிறீர்களா யக்ஞரே?” இடைபுகுந்தாள் மைத்ரேயி.
“ஆனால் இவைகளற்ற வாழ்வு உங்களுக்கு துயரளிக்கக் கூடியதல்லவா?”
காத்யாயினி “நீங்கள் இங்கிருந்து நீங்குவதும் துயரளிக்க கூடியதே” என்றாள்.
“எவ்வகையிலாவது அது நிகழ்ந்துதானே ஆக வேண்டும் காத்யாயினி”
“யக்ஞரே… நீங்கள் அழியும் தன்மைக் கொண்ட இச்செல்வத்தை விட, எங்கள் மீது கொண்டிருக்கும் அன்பை விட உயர்ந்த ஒரு நிலையை உணர்ந்திருக்க வேண்டும். அதுவே உங்களை வேறிடம் செலுத்துகிறது. நான் கோருவதும் அதையே. எது அழியவியலாத பெருநிலையை அளிக்குமோ அதை எங்களுக்கு அளியுங்கள் சுவாமி”
யாக்ஞவல்கியர் பரிவுடன் அவளை நோக்கி விட்டு, “மைத்ரேயி… பிரபஞ்சத்தின் துாண்டுசக்தியே அன்புதான். ஆனால் யாரும் யாருக்காவும் நேசிக்கப்படுவதில்லை என்பதை அறிவாயா நீ?” என்றார்.
எங்கிருந்தோ வந்த பறவையொன்று கூரையின் இடைவெளிக்குள் புகுந்து குறுக்குக்கழியில் அமர்ந்துக் கொண்டது. சிவந்த நீள்மூக்கும் தலையின் மையத்தில் வெண்ணிற பொட்டும் மஞ்சள் பூசிய மேற்புறச் சிறகும் சாம்பல் வண்ண உடலுமான அதன் மீது விளக்கொளி ஆழ்மஞ்சள் பூசியிருந்தது.
“இவ்வுலகம் ஒன்றின் மீது ஒன்று கொண்டிருக்கும் நேசமென்பது அவ்வொன்றின் மீதானதல்ல. ஏன்… நீங்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பும் நான் உங்கள் மீது கொள்ளும் அன்பும் கூட ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பல்ல. இங்கு அளிக்கப்படுவதும் பெறப்படுவதுமான அன்பு அனைத்தும் ஆன்மாவின் பொருட்டே. ஆன்மாவிற்காகவே அனைத்தும் நேசிக்கப்படுகின்றன. இசைக்கருவிகளில் அதனதன் ஆதாரநாதமின்றி அதில் ராக ஆலாபனைகள் செய்ய முடியாததுபோல ஆன்மா என்ற ஆதாரமின்றி படைப்புகள் எதுவும் நிகழ முடியாது. ஆன்மாவிலிருந்து ஒரு பொருளைப் பிரித்து அதனிடம் பற்றுக் கொண்டால் அப்போதே அதற்கொரு பிரதிச்செயல் வந்து விடும். அதன் விளைவு துன்பமும் துயரமும்தான். கடலில் கரைந்து விடும் உப்பை போன்று இறைவனும் பிரபஞ்சப் பொருள் எல்லாவற்றுள்ளும் பிரிக்க முடியாதப்படி கலந்திருக்கிறார். மைத்ரேயி… இந்த பிரபஞ்சம் முழுவதும் அவரிடமிருந்து தோன்றி அவரிடமே ஒடுங்குகிறது. இதற்கப்பால் அறிவோ அழிவோ மரணமோ இல்லை”
“யக்ஞரே… தனித்துவங்களாக உள்ள ஒவ்வொன்றின் உள்ளேயும் பரம்பொருளே ஒளிர்கிறார் எனில் தீமைகள் ஏன் நிகழ்கின்றன?”
“மைத்ரேயி… குழந்தைப் பருவத்தில் நீ தீயை நெருங்கும்போது உன் தாயார் என்ன சொல்வார்?”
“நெருங்காதே… சுட்டு விடும் என்பார்”
“இன்று வேள்விக் குண்டங்களில் வளர்க்கப்படுவதும் அதே நெருப்புதானே? அதனை நீ நெருங்கவில்லையா? குழந்தை பருவத்தில் நாம் நல்லது என்று எண்ணிய எத்தனையோ பொருட்கள் உண்மையில் தீயவையாக இருந்துள்ளன. தீயவை என்றெண்ணுபவை அவ்வாறில்லாமல் போவதுமுண்டு. நன்மை தீமை என்பன கருத்தில் ஏற்படும் மாறுபாடு மட்டுமே. உண்மையே நிலையானது. எப்போது அறியாமையை களைந்து ஆன்மாவின் இனிமையை காண்கிறோமோ அப்போதே நாம் உண்மையை உணர்ந்தவர்களாவோம். பொறிகள் சிதறுவதைப் போல் நாம் இறைவனிடமிருந்து தோன்றியுள்ளோம். அவரை அறிந்ததும் அவரிடமே கலந்து விடுவோம். நாமேதான் எங்கும் நிறைந்த பொருள்”
“யக்ஞரே… இவ்வுணர்வை அடைந்த பிறகு தனிப்பட்ட உணர்வு ஏதும் இருப்பதில்லையா?”
“ஆன்மாவை அறிந்த ஒருவன் ஆன்மாவாகவே ஆகி விட்ட பிறகு தனி உணர்வு எழுவது எங்ஙனம்? எதை அறிவது? எந்த ஒன்றால் இந்த அனைத்தும் அறியப்படுகிறதோ அதனை எதனால் அறிவது? அவர் நிறுத்தி விட்டு தொடர்ந்தார், என் அன்பே… அறிவழிந்து அறிவென அமர்ந்திருப்பவனே அறிபவன். அவனை எதனால் அறிவது?”
இடைக்கழியில் அமர்ந்திருந்த பறவை தலையை சாய்த்துக் கொண்டு நோக்கியபோது அதன் கண்கள் பளபளத்து தெரிந்தன. காடு வண்ணம் கொள்ள காத்திருக்க கரிச்சான்களும் கணவாய்களும் அதனை வரவேற்க மென்வாய் திறக்கத் தொடங்கியிருந்தன.
“யக்ஞரே… இந்த அறியாமையிலிருந்து விடுதலை பெறுவது எங்ஙனம்?”
“அன்பே மைத்ரேயி… தனித்துவங்களாக உள்ள ஒவ்வொன்றின் உள்ளேயும் அவற்றின் மூலமாகவும் எல்லையற்ற பரம்பொருளே ஒளிர்கிறார் என்ற அறிதலின் வழியே அனைத்தும் ஆன்மாவின் வெளிப்பாடுகளே என்றுணர்ந்துக் கொள்வதே விடுதலை”
“யக்ஞரே… அந்த அறுதி ஆன்மீக நிலையை அடையும் மெய்யான செல்வத்தை எங்களுக்கும் அளித்திடுக” மைத்ரேயி அவரை குனிந்து வணங்கினாள்.
“அன்பே… நன்மை தீமை என்ற பிரிவினையின்றி உலகில் தோன்றியுள்ள அனைத்தும் அவரே. உடலின் எல்லா ஆற்றலிலும் இருப்பதும் அவரே. புலன் அனுபவங்கள் அனைத்தும் அவரே. தன்னொளியாக உடலில் திகழ்பவர் அவரே. அவரே அனைத்தும். அவரே ஆன்மா. தன்னொளி கொண்டவரும் அழிவற்றவருமான அவரே இந்த உலகின் ஆனந்தம். அவரே பிரம்மம்”
“எனில்…” மைத்ரேயியின் குரல் தடுமாறியது.
அவர் உபதேசித்தார். “ஆம்… நானே பிரம்மம்… நான் கடவுள். அஹம் பிரம்மாஸ்மி”
”குருவே… குருவே…” கூப்பிய அவளின் கரங்கள் நடுங்கின.
வழக்கத்திற்கும் மாறாக முன்னரே வந்து விட்ட ஆதவன் படலின் இடுக்குகளில் நுழைந்து குடிலுக்குள் தலை நீட்ட, ஒளியைக் கண்டதும் அப்பறவை ட்டுரூ… என்று மகிழ்ச்சியொலி எழுப்பிக் கொண்டு பறந்து விட்டதை தவிர அங்கு வேறு ஓசை ஏதும் எழவில்லை.
கணங்கள் நழுவிக் கொண்டிருந்தன. அவள் நிமிர்ந்தபோது அவர் கண்கள் மூடி அமர்ந்திருப்பதைக் கண்டாள். கேட்க எண்ணிய கேள்வியை வாய்க்குள் விழுங்கிக் கொண்டாலும் மனம் உச்சரித்துப் பார்த்தது. குருவே… பிரம்மம் நாமெனில்… குருவே… நீங்கள் எதை தேடி எங்கு செல்ல விழைகிறீர்கள்…?
அவள் அவரை உற்று நோக்கியபோது அவரது மூடிய இமைகளுக்குள் விழிகள் நிலையற்று உருள்வதைக் கண்டாள்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
