இலக்கியத்திற்கான நோபெல் பரிசினைப் பற்றியும், ஹான் காங் பற்றியும் இரு கட்டுரைகள் (ஜெகதீஷ் குமார், பானுமதி) சொல்வனத்தில் பரிசு அறிவிக்கப்பட்ட நாளிலேயே வெளியாகி இருந்தாலும், இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாம் எனத் தோன்றியதால் இந்தக் கட்டுரை.
எட்டு நாவல்கள், குறு நாவல்கள், கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்புகள் ஏற்கெனவே வெளி வந்திருந்த போதிலும், நோபெல் அவருக்கு மீண்டும் எழுதும் உற்சாகத்தைத் தந்துள்ளது எனச் சொல்கிறார் அவர்.
வாழ்க்கையின் விடையில்லா கேள்விகளுக்கான பதில்களை தன் பாத்திரங்கள் மூலம் தேடுகிறார் இவர்.

Europa, 2019, என்ற சிறுகதையில் வரும் நாயகி ஒரு கேள்வி கேட்பார் “நீ விரும்பியபடியே வாழ முடிந்ததென்றால், நீ, அந்த உன் வாழ்வை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்?” கதை சொல்லியால் இதற்கு பதில் சொல்ல முடியாமல் போகும். “பரிகாரம் செய்வதற்கோ, நிறைவு கொள்வதற்கோ இங்கே ஏதும் இல்லை.” பிறப்பதும், இருப்பதும், இறப்பதும் பொருள் அற்றவையாகிவிடுகின்றன.
வன்முறையும், அழகும் கலந்திருக்கும் இவ்வுலகில் அப்பாவித்தனத்தின் சாத்தியம்/சாத்தியமற்ற தன்மை பற்றிய அவரது புரிதல்களைக் காட்டிய நாவல் என்று 2016ல் மேன்புக்கர் பரிசு பெற்ற அவரது ‘வெஜிடேரியனைச்’ சொல்லலாம். முப்பாகமாக வெளியான இதில், குடும்ப நெறிமுறைகள், பெண் உடல் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறைகள், அவளைப் புரிந்து கொள்ளாமல் அவள் மனசிதைவிற்கு ஆளானவள் என்று சிகிச்சை செய்வது போன்றவை காட்சிப்படுத்தப்படுகின்றன. முதல் பாகம், யோங்-ஹேயின் கணவரின் பார்வையில், இரண்டாம் பாகம் அவள் மைத்துனர் சொல்வதாக மூன்றாம் பாகம் அவளது சகோதரியின் பார்வையாக வருகிறது. யோங்-ஹே, தன்னுள் தானே இறுக்கமாகிறாள், பிளவு படுகிறாள், அசைவம் சாப்பிட மறுக்கிறாள், மார்புக் கச்சையை துறக்கிறாள், கணவனிடம் ஆசையற்ற உடல் உறவின் மூலம் தன் வெறுப்பைச் சொல்கிறாள். இந்த செயல்களெல்லாம் அவள் எதிர் கொண்ட வன்முறைக்கு ஒரு வடிகாலாகக்கூட அவள் நினைத்திருக்கலாம். ஆனால், அவளது செயல்கள் சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்படாமல், அவள் ஒரு மன நோயாளியாகக் கருதப்படுகிறாள்.
பட்டினியால் உடல் இளைத்து, கன்ன எலும்புகள் துருத்தியிருக்கும் அவள் மீது மைத்துனனுக்குக் காமம் வருகிறது. அவளது வெற்றுடல் மீது பூக்களையும், கிளைகளையும் வரைந்து அவன் தன் விருப்பத்தை அவ்விதமாக நிறைவேற்றிக் கொள்கிறான். மருத்துவமனையிலிருந்து அவளை மீட்டு வீட்டிற்குக் கொண்டு வரும் சகோதரியாலும் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. யோங்-ஹே சொல்வாள்:” நான் ஒரு கனவு கண்டேன். அதில் நான் என் தலையில் நின்றேன். என் உடலில் இருந்து இலைகள் வளர்ந்தன, என் கைகளிலிருந்து வேர்கள் துளிர்விட்டன. அதனால் நான் பூமியில் தோண்டினேன். அன்றும் என் யோனியில் இருந்து பூக்கள் பூக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், அதனால் நான் என் கால்களை விரித்தேன், அவற்றை அகலமாக விரித்தேன்….” அவள் தாவரமாக இருக்க விரும்புகிறாள்- இயற்கையாக, எந்த வன்முறைக்கும் ஆளாகாமல், எந்தத் தீங்கும் செய்யாமல், விலங்கான மனித இனத்திலிருந்து விடுபட்டு, நிலை பெற்று நின்று, பூத்துக் குலுங்க விழைகிறாள். நுட்பமான ஒன்று, ஆனால் முரணானதுமாகும். பெண் மற்றொரு உயிரை தன் உள்ளே தாங்கி நிற்கும் வல்லமை படைத்தவள். பிறப்பு அவளிடம் தானே ஏற்படுகிறது? மனிதன் என்னும் விலங்கைப் படைக்க அவள் விரும்பவில்லை போலும்.
சகோதரிக்கு, தன்னுடன் தந்தையின் அடக்கு முறைகளுக்கு ஆளாகி வளர்ந்தவளா இந்தப் பெண் என்று எண்ணமும், பொறாமையும் வருகிறது. தன் குழந்தைப் பருவத்தை, ஹையுடனும் மிருகத்தனமான தந்தையுடனும் கழித்த அவளது சகோதரிக்கும் ஹையின் நடத்தைகள் குழப்பத்தைத் தருகின்றன..
“ஹை அவளுக்கு நினைவூட்டும் எதையும் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளால் தன்னால் ஒருபோதும் கடக்க முடியாத எல்லைக்கு மேல் தனியாக உயர்ந்ததற்காக ஹையை மன்னிக்க முடியவில்லை. ஹையின் அசாத்தியமான பொறுப்பற்ற தன்மையை அவளால் மன்னிக்கவே முடியவில்லை. ஹை தன்னை ஒரு கைதியைப் போல் தனியாக விட்டு விட்டு வேறெங்கோ வசித்துக் கொண்டிருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறைக்கம்பிகளைப் போலிருந்த சமூகம், திருமணம், உடல், பாலுறவு, கலை போன்றவற்றின் மாயையை ஹை உடைத்திருக்கிறாள். அவற்றை உடைக்கு முன்பு, அந்தக் கட்டுக்கள் அங்கு இருந்ததையே அவளது சகோதரி அறிந்திருக்கவில்லை.”
சமுதாயத்தில் பல பெண்கள் தங்கள் நிலையை உணராமல், பெண்ணிற்கென ஆண்களால் வகுக்கப்பட்டு, உறவுகளால் பரிபாலிக்கப்படும் சிறைக்குள், சிறகுகள் வெட்டப்பட்ட பறவைகளென உலா வருகிறார்கள் என்பதை ஹையின் சகோதரி பாத்திரம் எடுத்துக் காட்டுகிறது.
இந்த நாவல் வெளியான 2007லிருந்து 9 மொழிகளில், மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தாலும் (தமிழில் கவிஞர் திரு. சமயவேல் செய்துள்ளார்- மரக்கறி) , ஆங்கிலத்தில் வந்த பிறகுதான் அவர் உலகப் புகழ் அடைந்தார்.
இவர் கவிஞர், கவித்துவமாகவும், குறியீடுகளாலும் தன் கதைகளைச் சொல்கிறார். ஆனாலும், கொரிய மொழியிலும், ஆங்கிலத்திலும் இதைப் படித்தவர்கள், மூலத்திற்கும், மொழி பெயர்ப்பிற்கும் முக்கியமாக வேறுபாடு ஒன்றைச் சொல்கிறார்கள். அது டெபோரா ஸ்மித்தின் ஒலிக்கும் குரல். ஹான் அடங்கிய தொனியில் சொன்னதை, மொழி பெயர்ப்பு செய்தவர், அலங்காரமாகச் செய்துள்ளார். அவரே ஒரு பேட்டியில் சொல்கிறார்: “ஹானின் எழுத்து ஒரு குறிப்பிட்ட காட்சித் தரத்தைக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது, அதை நான் வரையறுப்பது கடினம். அவரது விவரிப்பு கூரான கத்தியைப் போன்றதும், கண் முன்னே எழும் காட்சி போன்றதுமாகும். நான் இடையிடையே செய்துள்ள சொந்த செருகல்கள் அந்த உரை நடை தந்த சித்திரத்தின் வெளிப்பாடுகள் – “ஒரு மென்மையான கண்ணாடிச் சுவருக்கு எதிராக கைகளை வளைத்து நீட்டும் சோகமான தீப்பிழம்புகள்”, “ஆச்சரியமான கண்ணைப் போல அகலமாக” திறக்கும் புல்லட் துளை.
இந்த நாவலின் விமர்சனங்களை மட்டும் வைத்துக் கொண்டு, இதை நவீனத்துவ நாவல், பின்- நவீனத்துவ நாவல், இப்போது முழங்கும் பின்-பின் நவீனத்துவ நாவல் என்று சொல்ல முடியாது எனத் தோன்றுகிறது. புத்த தர்மத்தின் சில கூறுகள் வருவதால், தொன்மையைத் தொட்டுக் கொண்டு வளர்வதாகக் கருதலாம்.
முதல் பகுதி – திருமணம், சமூகம், குடும்பம்
2-ம் பகுதி – பெண்ணுடல், பாலுறவு, கலை
3-ம் பகுதி – இயற்கை, மரணம்.
கிரேக்கப் பாடங்கள் என்ற நாவலைப் பற்றி சிறிது பார்ப்போம்.
இரு தனி நபர்கள்- பாதிக்கப்பட்டவர்கள்- அதிக பாதிப்புக்கும் உள்ளாகக் கூடியவர்கள் Greek Lessons நாவலில் இடம் பெறுகிறார்கள். அச்சுறுத்தும் தொடர் நிகழ்வுகளால் பேசும் திறனை இழந்த இளம் பெண்ணிற்கும், புராதன கிரேக்க மொழி ஆசிரியருக்கும் இடையே ஏற்படும் அசாதாரணத் தொடர்பு இந்த நாவலின் பேசு பொருள். உருவகங்களால் மெருகேறிய ஒன்று. அந்த ஆசிரியரோ கண் பார்வை இழக்கும் நிலையில் இருக்கிறார். இருவரின் உடற்குறைகளின் அடி நாதத்தில், மெலிதான, உடையக்கூடிய காதல் உணர்வு அரும்புகிறது. அன்பு, நெருக்கம், இழப்பு, மொழியின் போதாமை அனைத்தும் இந்த நாவலுக்கு எழில் கொடுக்கிறது.
இந்தப் பெண்ணின் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட பிறழ்வு ஒரு வெளிநாட்டு மொழியின் ஒலிமூலம் மூலமாகத் தீர்க்கப்பட்டது. அந்த வழியிலேயே கிரேக்க ஆசிரியருடான மொழியாடல் மூலம், இப்பெண்ணின் இழந்த பேச்சுத் திறனை மீட்டெடுக்கலாம் என்றும் நம்புகிறார்கள். அவர் அவளிடம் மிகுந்த மென்மையுடன் நடந்துகொள்கிறார். ஒரு கட்டத்தில், அவரது பார்வை கூட அவளைத் தொடுவதற்கு முன் பணிவுடன் அனுமதி கோருவது போல் தெரிகிறது என்று அவள் குறிப்பிடுகிறாள். ஆண், பெண் மற்றும் சிறு கதாபாத்திரங்களின் புலனுணர்வு மற்றும் உடல் நிலைகள், உலகில் நாம் தொடர்பு கொள்ளும் வகையை ஆராயவும், உரசிப் பார்க்கவும் காங்கிற்கு உதவுகின்றன. நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் திறன்களை அகற்றுவதன் மூலம் அல்லது குறைப்பதன் மூலம், காங் அவற்றின் தாக்கத்தை பெரிதாக்குகிறார். “மௌனம், கூச்சம் தயக்கம் மற்றும் அடங்கிய சிரிப்பின் எதிர்வினைகள்,” “வகுப்பறைக்குள் காற்றை மெதுவாக சூடாக்கி, மெதுவாக குளிர்விக்கும்” என்று எழுதுவதில் ஒரு தேர்ந்தத் தெளிவைப் பார்க்கிறோம். “ஆணும் பெண்ணும், தனித்திருக்கிறார்கள், தனிமைப்படுத்தப் பட்டதாகவும் நினைக்கிறார்கள்.” அகவயத் தனிமையும், தனித்திருத்தலும், அவற்றிற்கான குரல்களில் மெதுவாக ஒலிக்கின்றன. இந்த இரண்டு உடைந்த ஆன்மாக்களும் ஒன்றிணைவது ஒரு மயக்கமான காதல் விவகாரமாக மாறுகிறது, தொடுதல் இன்றி ஒரு நெருக்கம் அற்புதமாக இருக்கிறது. கிரேக்கப் பாடங்களில் உள்ள தொடர்பு , எழுத்து மற்றும் பார்வைகளால் ஒரு மொட்டு சத்தமின்றி மலர்வதைப் போல இருக்கிறது. அமைதியே அதைச் சொல்லும் சாதனம். இந்த சிகிச்சையின் மூலம், அவள் பேசும் திறனை மீண்டும் பெறுகிறாள், இருப்பினும் அவள் தற்காலிகமாக மட்டுமே பேசுகிறாள். அவரது உள்ளங்கையில் எழுத்துக்களைக் கண்டுபிடித்துக் கொள்கிறாள். இது கிட்டத்தட்ட ஒரு புதிய மொழியாகும். மொழியின் போதாமைகளை இந்த நாவல் சொல்கிறது. மொழி, போர்ஹேஸின் கூற்றுப்படி, பிரிக்கவும், வேறுபடுத்தவும் மற்றும் வரையறுக்கவும் ஆற்றல் கொண்ட ஒரு வாள். இது மொழிக்கு முந்தைய பொதுமக்களிடமிருந்து, பொருட்களை வன்முறையாகப் பிரிக்கிறது. “ஒலிகள் அந்தப் பெண்ணின் செவிப்பறைகளில் “சிதறல்களை” ஏற்படுத்துகின்றன. அவளுக்கு அதில் எதுவுமே விருப்பமாக இல்லை. மென்மையாக, காதுகள் நோகாவண்ணம் அவள் பேசுவாள், அதற்கு வழி இல்லாத போது அவள் பேசவே விரும்பவில்லை. இத்தகைய ஒரு கதாபாத்திரத்தை ‘பூர்வா’ என்ற சிறுகதையில் திரு லா ச ரா எப்போதோ காட்டிவிட்டார். “நான் இவளை மணந்தேனா அல்லது இவளது மௌனத்தை?” மௌனித்திருப்பதும், மென்மையாக இருப்பதும் ஒன்று என்று ஹான் நினைக்கிறாரோ எனவும் தோன்றுகிறது. மனிதர்களுக்கெதிரான செயல்பாட்டில், தன் பங்கினை, கதையின் நாயகி பேச்சுத் திறனை இழப்பதன் மூலம் காட்டிவிடுகிறார். ஆனால், இதுவும் ஒரு வகை வன்முறை எனப் படவில்லையா? அழகாக எழுதப்பட்ட, ஆனால், சரியான புரிதல் அற்று சொல்லப்பட்ட கருத்தோ எனவும் தோன்றத்தான் செய்கிறது. அந்த மௌனமே ஒரு பெருமிதத்தையும், அதிகாரத்தையும் கொண்டு வந்து விடுமே?
2002ல் வந்த நாவல் ‘Your Cold Hands’ சிறந்த கவனம் பெற்றது. அவரது கலையார்வம் இதில் காணக்கிடைக்கிறது. பெண் உடலை பூச்சு வார்ப்புகள் செய்யும் ஒரு காணாமல் போன சிற்பியின் கையெழுத்துப் பிரதியாக நாவல் உருவெடுக்கிறது. மனித உடற்கூறு வடிவம், ஆளுமை, அனுபவம் இவைகளின் உள்விளையாட்டின் ஆர்வத்தில், அந்தச் சிற்பியின் படைப்புகளில் ஒரு முரண் கேள்வி எழுகிறது “உடல் எதைக் காட்டுகிறது, எதை மறைக்கிறது?” அந்த நாவலின் இறுதி வரிகள் “நாம் அனைவரும் கழைக்கூத்தாடிகள் போல, படுகுழியின் மேலே வளைந்திருக்கும் கயிற்றில் ஆடுகிறோம். இதுதான் வாழ்க்கை.”
The White Book, 2017 நாவல் அவரது கவித்திறனிற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. இது சொல்பவரின் மூத்த சகோதரிக்காக எழுதப்பட்ட இரங்கற்பாவாக இருக்கக்கூடும். அந்த சகோதரி பிறந்த சில மணி நேரங்களில் இறந்து விடுகிறார். வெள்ளை நிறப் பொருட்களைக் கொண்டு சிறு குறிப்புகளாக துக்கத்தின் நிறம் வெளிப்படுகிறது. இது நாவலாக அல்லாமல் ‘மதச் சார்பற்ற பிரார்த்தனையாக’ வருகிறது. அப்படித்தான் விவரிக்கப்பட்டும் இருக்கிறது. கதை சொல்லி சொல்கிறார் ‘இந்தக் கற்பனை சகோதரியை வாழ அனுமதித்திருந்தால், இவள் உருவாவதும் கூட அங்கீகரிக்கப்படாது போயிருக்கும்.’ “அந்த வெண்மைக்குள்ளே, வெள்ளையான அத்தனைப் பொருட்களுக்குள்ளும் சுவாசிக்கிறேன். நாவலில் அனைத்து வெண்மைப் பொருட்களும் குறியீடுகளாகின்றன- உப்பு, சர்க்கரை, பால், பஞ்சு. கொரிய இலக்கியத்திற்கும், மேலை இலக்கியத்திற்கும் துக்கத்தின் நிறம் எத்தனை வேறுபாடு கொண்டுள்ளது! சிலரை இழப்பது நம் உடலின் ஒரு பாகத்தை இழப்பது போலத்தான். இறந்தவள், இருந்திருந்தால், தானே இல்லை என்பதும் அவள் விட்டுச் சென்ற காற்றை, தான் சுவாசிக்கிறோம் என்பதிலும் தத்துவ ஆழம் காணப்படுகிறது.
Human Acts, 2016 நாவல், அவர் வளர்ந்த பிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறைகளை, 1980ல் கொரிய இராணுவ அத்துமீறல்களால் மாணவர்களும், ஆயுதமில்லா குடிமக்களும் கொன்று குவிக்கப்பட்டதை ஆழமாகச் சொல்கிறது. வரலாற்றிற்கு இரையாகிப் போன மனிதர்களின் குரலாய் அரசே கட்டவிழ்க்கும் அராஜகத்தை அது கேள்வி கேட்கிறது. சாட்சி இலக்கிய வகையைக் காட்டும் எழுத்தாக மிளிர்கிறது. ஆயினும், அந்த வகைமைக்குள் முழுதும் அடங்கவில்லை. இதில் அவரது தெளிவான கண்ணோட்டமும், சுருக்கமாகச் சொல்லும் திறனும் தென்படுகிறது. இறந்தவர்களின் உடலையும், ஆன்மாவையும் அவர் பிரித்து, இறந்தவர்கள் தங்கள் உடலை, தாங்கள் அழிக்கப்படுவதைக் காணுமாறு செய்கிறார். புதைக்க முடியாத அடையாளமற்ற சடலங்களைக் காண நேர்கையில். நாவல், Sophocles’s Antigoneனின் அடிப்படை மையக் கருவிற்குப் போய் விடுகிறது. (ஆன்டிகனி, சட்டத்தை மீறி, தன் சகோதரனை, நல்லடக்கம் செய்கிறாள். இது கிரேக்க துன்பியல் நாடகம்.) நமது தர்ம சாத்திரங்கள் சொல்வது ஒன்று உண்டு- நற் செயல்களுக்கான பலன் தனியாகவும், தீச்செயல்களுக்கான பலன் தனியாகவும் மனித வாழ்வில் கிடைக்கும். ஒன்றை ஒன்று சமன் செய்யும் என்ற கோட்பாடே இல்லை. நடு நிலை என எண்ணிக் கொண்டு மனிதர்கள் ஆற்றும் செயல்கள், மென்மையாக, வன்மையாக உருவெடுப்பதை ஹான் மையப்படுத்துகிறார். அதே நபர்கள் தான் செய்கிறார்கள்- ஆனால், ஒன்றையொன்று மாற்றாது, ஒன்றிற்கு ஈடாக மற்றொன்று என்றாகும் குருதிப் புனல்.
“We Do Not Part” நாவலில் இடம் பெறும் வலியின் வேதனை வெள்ளை புத்தகத்தை ஒத்து இருந்தாலும், இது 1940களில், தென் கொரியாவின், ஜீஜூ தீவில் நடந்த படுகொலைகளைக் காட்டுகிறது. பல்லாயிரக் கணக்கான குழந்தைகளும், முதியவர்களும் கூட அரசு விரோத கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்ற ஐயத்தின் பேரில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கதைசொல்லியும், அவரது நண்பரான இன்சியனும், தங்கள் உறவினர்களுக்கு நேர்ந்த அகால மரணங்களை, பல்லாண்டுகளுக்குப் பின்னரும் வேதனையோடும், வலியோடும் நினைவு கூறுகிறார்கள். துல்லியமாக, அடர்த்தியான நினைவுகள். உண்டாக்கும் தாக்கங்கள் பேசப்படுகின்றன. நிகழ் காலத்தின் மீது கடந்த காலத்தின் சக்தி வலுவானது என்று காட்டுகிறார் ஆசிரியர். அதே நேரம் முயற்சியில் மனம் தளராமல், பொது மக்களின் ஞாபக மறதியை அகற்றி, கலை திட்டத்தின் மூலம், நிகழ்வுகளை மக்கள் முன் காட்சிப்படுத்தும் தனது நண்பரையும் அவர் கொண்டாடுகிறார். ஆழமான நட்பு, வழிவழியாய்த் தொடரும் உறவினர்களின் அகால மரண நினைவுகள் என்று பின்னப்பட்டுள்ள இந்த நாவல், தன் அசல் உருவால், அது தரும் மறுக்க முடியாத சாட்சியங்களால் மேன்மை பெறும் சாட்சி இலக்கியமாகிறது. கனவுகள் தரும் பதட்டங்கள், உண்மையைச் சொல்வதற்கான சாய்மானங்கள் என்று விரவி வருகிறது. சிறப்பான சொற்களால் வாழ்வின் முட்களைக் காட்சிப்படுத்த அவர் தேர்வு செய்யும் களம் மிக உதவிகரமாக இருக்கிறது.
ஹான் காங்கின் எழுத்துக்கள், உடல் மற்றும் மன வேதனையின் இணைப்பை, அவற்றின் வெளிப்பாட்டை. கிழக்கிய சிந்தனைகளை ஒட்டி வெளிப்படுத்துகின்றன. Convalescence 2013, நாவலில் காலில் உள்ள புண் உருவகமாக வருகிறது. அது குணமாவதில்லை. அதைப் போல முக்கியக் கதாபாத்திரத்திற்கும் அவரது இறந்து விட்ட சகோதரிக்குமான உறவு சொல்லப்படுகிறது. ஆறாத அந்தப் புண், அடிப்படையான இருத்தலின் அனுபவமாக உருவெடுக்கிறதே தவிர கடந்து செல்லும் இரணமாக இருக்கவில்லை. வெஜிடேரியன் நாவலில் சிறிய எளிய விளக்கங்கள் தரப்படவில்லை. ஆனால். இதில், விதிப்படியோ, தெய்வச் செயலாலோ, படீரென்று வெடித்துக் கிளம்பும் ஒன்று, போக மறுத்து நிலை கொள்கிறது. நாயகன் அமைதி காப்பதைத் தவிர வழி ஒன்றுமில்லை.
வரலாற்றுப் பேரச்சங்களையும், புலப்படாத விதிமுறைகளையும், ஹான் தன் படைப்புக்களில் துணிவாகக் காட்டுகிறார். தன் அனைத்துப் படைப்புகளிலும், உறுதியற்றதும், உடையக்கூடியதுமான மனித வாழ்வைச் சொல்கிறார். ஆன்மாவிற்கும், உடலிற்குமான இணைப்பு, வாழ்வோருக்கும், இறந்தவருக்குமான பிணைப்பு இவைகளைப் பற்றிய தனிச் சிறப்புக் கண்ணோட்டம் இவருக்கு இருக்கிறது. சமகால உரை நடையாளர்களில், கவித்துவமும், பரிசோதிக்கும் எழுத்து நடையும் கொண்டு புதுத் தன்மையோடு எழுத்தாளராக உருவெடுத்துள்ளார்.
உசாவிகள்
தமிழ் மொழிபெயர்ப்பும் சிறப்பு. கவித்துவ நடையிலான இந்த நாவலை மொழிபெயர்க்க, சீரிய இலக்கியக் கவிஞரான சமயவேல் சரியான தேர்வு. ஆனால், சிற்சில இடங்களில் சிறு குறைகள் தென்பட்டன. செப்பனிட்டிருக்கலாம். உதாரணமாக, தூரிகைத்தட்டு மற்றும் ப்ரஷ்களை (ப.108) என்னும் வாசகத்தில் உள்ள ப்ரஷ்களை என்னும் சொல். சில வரிகளுக்கு முன்னோ பின்னோ அப்படி இருந்தாலும் அவ்வளவாகத் தெரியாது. தூரிகைத்தட்டு என்று சொல்லிவிட்டு, ஒரு வார்த்தைக்கு அடுத்ததாகவே ப்ரஷ்களை என்று சொல்வது மிக உறுத்தல். தூரிகைகளை என்று எழுதியிருக்கலாமே! இது போல ஆங்காங்கே சில இடங்களில் ஓரிரு குறைகள் இருக்கும். அது பரவாயில்லை
https://rasamattam.org/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4/
https://lareviewofbooks.org/article/what-we-talk-about-when-we-talk-about-translation
https://www.compactmag.com/article/the-anti-humanism-of-han-kang
https://www.asymptotejournal.com/criticism/han-kang-human-acts
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.


மொழிபெயர்ப்பாளர் ஓவியர்கள் பற்றி தமிழ்வெளி இதழில் தொடர்ந்து எழுதி வருபவர். இவர் ஏன் ‘தூரிகை’ என்ற சொல்லைத் தவிர்த்திருக்கிறார் என்று யோசிக்க வேண்டும். கொரிய மொழியிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி, இந்த நாவலில் தேய்வழக்குகள் கவனமாக தவிர்க்கப்பட்டுள்ளன. பத்து முறைகளுக்கு மேல் சரி பார்க்கப்பட்ட பிரதி ‘மரக்கறி’. ‘தூரிகை’ என்ற சொல் தமிழ் திரைப்படப் பாடல்களில் பெண் உடல் குறித்த வரிகளில் வரும் தேய்வழக்கு. எந்த விருதும் பெறும் முன்பே ‘The Vegetarian’ நாவலைக் கண்டுபிடித்து வாசித்து ஹான் காங்கிடம் நட்பு கொண்ட ஒருவரே சமயவேல்.
சிறந்த மொழியாக்கம் உங்களது, போற்றுதலுக்குரியது. ‘மரக்கறி’ புதினத்தின் சிறப்பை முன்னரே அறிந்திருந்த ஒரு சிலரில் நீங்கள் முதன்மையானவர்.