இலக்கியத்திற்கான நோபல் விருது தென் கொரியரான 2024 ஹான் காங் (Han Kang) பெற்றார்
மேலை நாட்டினர் மீது விழும் ஒளி இந்த முறை ஆசியாவின் தென் கொரிய நாட்டின் எழுத்தாளர் ஹான் காங் மீது விழுந்திருக்கிறது. 1970ல் க்வாங்க் ஜூவில் (Gwangju) புகழ் பெற்ற எழுத்தாளத் தந்தைக்கு மகளாகப் பிறந்தார் இவர். தற்சமயம் சியோலில் வசிக்கிறார். கலை, இசை ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டுள்ளவர்- அந்த ஆர்வம் அவரது படைப்புகளில் காணக் கிடைக்கிறது.

1993ல் Literature & Society இதழில் பல கவிதைகளை வெளியிட்டார். நோபல் பரிசுக் குழு தலைவர் குறிப்பிட்டதைப் போல இவரது மொழி கவித்துவமான உரை நடையைக் கொண்டிருக்கிறது. பின்னர் சிறுகதை தொகுப்புகள் வெளி வந்தன.
2002ல் வந்த நாவல் ‘Your Cold Hands’ சிறந்த கவனம் பெற்றது. அவரது கலையார்வம் இதில் காணக்கிடைக்கிறது. பெண் உடலை பூச்சு வார்ப்புகள் செய்யும் ஒரு காணாமல் போன சிற்பியின் கையெழுத்துப் பிரதியாக நாவல் உருவெடுக்கிறது. மனித உடற்கூறு வடிவம், ஆளுமை, அனுபவம் இவைகளின் உள்விளையாட்டின் ஆர்வத்தில், அந்தச் சிற்பியின் படைப்புகளில் ஒரு முரண் கேள்வி எழுகிறது “உடல் எதைக் காட்டுகிறது, எதை மறைக்கிறது?” அந்த நாவலின் இறுதி வரிகள் “நாம் அனைவரும் கழைக்கூத்தாடிகள் போல, படுகுழியின் மேலே வளைந்திருக்கும் கயிற்றில் ஆடுகிறோம். இதுதான் வாழ்க்கை.”
மூன்று பாகங்களாக கொரிய மொழியில் 2007ல் வெளியான இவரது நாவல், ‘The Vegetarian’ 2015ல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அகில உலக அளவில் இவருக்குப் புகழை அள்ளித் தந்தது. கதா நாயகியான யங்-ஹை(Yeong-Hye) மாமிசம் எடுத்துக் கொள்ள மறுக்கிறார். அவரது கணவனாலும், அதிகாரம் செலுத்தும் தகப்பனாலும், அவளது உணவு விருப்பம் வலுக்கட்டாயமாக நிராகரிக்கப்படுகிறது. அவளது செயலற்ற உடலில் ஆர்வம் கொண்டு, அழகியல் சார்ந்தும், காமம் சார்ந்தும் காணொலிக் கலைஞனான மைத்துனன் அவளை அடையப் பார்க்கிறான். அவளை மன நோய் மருத்துவ மனையில் சேர்க்கிறார்கள். அவளது சகோதரி அவளை மீட்டு, ‘இயல்பான வாழ்க்கைக்குத்’ திருப்புகிறாள். எனினும் விட்டில் பூச்சிகள் விளக்கால் கவரப்பட்டு வீழ்வதைப் போல நாவலின் இறுதியில், கவர்ச்சியும், ஆபத்துமான ‘எரியும் மரங்கள்’ இடம் பெறுகிறது.
‘The Wind Blows,Go’ என்ற நாவல் நட்பை, கலையை, துயரை, ஏக்கத்தை பெரும் நாவலாகச் சொல்கிறது.
இரு தனி நபர்கள்- பாதிக்கப்பட்டவர்கள்- அதிக பாதிப்புக்கும் உள்ளாகக் கூடியவர்கள் Greek Lessons நாவலில் இடம் பெறுகிறார்கள். அச்சுறுத்தும் தொடர் நிகழ்வுகளால் பேசும் திறனை இழந்த இளம் பெண்ணிற்கும், புராதன கிரேக்கத்தில் இருக்கும் அவளது வயதான ஆசிரியருக்கும் இடையே ஏற்படும் அசாதாரணத் தொடர்பு இந்த நாவலின் பேசு பொருள். உருவகங்களால் மெருகேறிய ஒன்று. அந்த ஆசிரியரோ கண் பார்வை இழக்கும் நிலையில் இருக்கிறார். இருவரின் உடற்குறைகளின் அடி நாதத்தில், மெலிதான, உடையக்கூடிய காதல் உணர்வு அரும்புகிறது. அன்பு, நெருக்கம், இழப்பு, மொழியின் போதாமை அனைத்தும் இந்த நாவலுக்கு எழில் கொடுக்கிறது.
Human Acts, 2016 நாவல், அவர் வளர்ந்த பிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறைகளை, 1980ல் கொரியன் இராணுவ அத்துமீறல்களால் மாணவர்களும், ஆயுதமில்லா குடிமக்களும் கொன்று குவிக்கப்பட்டதை ஆழமாகச் சொல்கிறது. வரலாற்றிற்கு இரையாகிப் போன மனிதர்களின் குரலாய் இந்த அராஜகத்தை அது கேள்வி கேட்கிறது. சாட்சி இலக்கிய வகையைக் காட்டும் எழுத்தாக மிளிர்கிறது. ஆயினும், அந்த வகைமைக்குள் முழுதும் அடங்கவில்லை இந்த நாவல். இதில் அவரது தெளிவான கண்ணோட்டமும், சுருக்கமாகச் சொல்லும் திறனும் தென்படுகிறது. இறந்தவர்களின் உடலையும், ஆன்மாவையும் அவர் பிரித்து, இறந்தவர்கள் தங்கள் உடலை, தாங்கள் அழிக்கப்படுவதைக் காணுமாறு செய்கிறார். புதைக்க முடியாத அடையாளமற்ற சடலங்களைக் காண நேர்கையில். நாவல், Sophocles’s Antigoneனின் அடிப்படை மையக் கருத்திற்கு திரும்புகிறது.
The White Book, 2017 நாவல் அவரது கவித்திறனிற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. இது சொல்பவரின் மூத்த சகோதரிக்காக எழுதப்பட்ட இரங்கற்பாவாக இருக்கக்கூடும். அந்த சகோதரி பிறந்த சில மணி நேரங்களில் இறந்து விடுகிறார். வெள்ளை நிறப் பொருட்களைக் கொண்டு சிறு குறிப்புகளாக துக்கத்தின் நிறம் வெளிப்படுகிறது. இது நாவலாக அல்லாமல் ‘மதச் சார்பற்ற பிரார்த்தனையாக’ வருகிறது. அப்படித்தான் விவரிக்கப்பட்டும் இருக்கிறது. கதை சொல்லி சொல்கிறார் ‘இந்தக் கற்பனை சகோதரியை வாழ அனுமதித்திருந்தால், இவள் உருவாவதும் கூட அங்கீகரிக்கப்படாது போயிருக்கும்.’ “அந்த வெண்மைக்குள்ளே, வெள்ளையான அத்தனைப் பொருட்களுக்கும் உள்ளே, நீ வெளியிட்ட கடைசி சுவாச மூச்சை நான் சுவாசிக்கிறேன்.”
“We Do Not Part” நாவலில் இடம் பெறும் வலியின் வேதனை வெள்ளை புத்தகத்தை ஒத்து இருந்தாலும், இது 1940களில், தென் கொரியாவின், ஜீஜூ தீவில் நடந்த படுகொலைகளைக் காட்டுகிறது. பல்லாயிரக் கணக்கான குழந்தைகளும், முதியவர்களும் கூட துரோகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்ற ஐயத்தின் பேரில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கதைசொல்லியும், அவரது நண்பரான இன் சியனும், தங்கள் உறவினர்களுக்கு நேர்ந்த அகால மரணங்களை, பல்லாண்டுகளுக்குப் பின்னரும் வேதனையோடும், வலியோடும் நினைவு கூறுகிறார்கள். துல்லியமாக, அடர்த்தியான நினைவுகள். நிகழ் காலத்தின் மீது கடந்த காலத்தின் சக்தி வலுவானது என்று காட்டுகிறார் ஆசிரியர். அதே நேரம் முயற்சியில் மனம் தளராமல், பொது மக்களின் ஞாபக மறதியை அகற்றி, கலை திட்டத்தின் மூலம், நிகழ்வுகளை மக்கள் முன் காட்சிப்படுத்தும் தனது நண்பரையும் அவர் கொண்டாடுகிறார். ஆழமான நட்பு, வழிவழியாய்த் தொடரும் உறவினர்களின் அகால மரண நினைவுகள் என்று பின்னப்பட்டுள்ள இந்த நாவல், தன் அசல் உருவால், அது தரும் மறுக்க முடியாத சாட்சியங்களால் மேன்மை பெறும் சாட்சி இலக்கியமாகிறது. கனவுகள் தரும் பதட்டங்கள், உண்மையைச் சொல்வதற்கான சாய்மானங்கள் என்று விரவி வருகிறது.
ஹான் காங்கின் எழுத்துக்கள், உடல் மற்றும் மன வேதனையின் இணைப்பை, அவற்றின் வெளிப்பாட்டை. கிழக்கிய சிந்தனைகளை ஒட்டி வெளிப்படுத்துகின்றன. Convalescence 2013, நாவலில் காலில் உள்ள புண் உருவகமாக வருகிறது. அது குணமாவதில்லை. அதைப் போல முக்கியக் கதாபாத்திரத்திற்கும் அவரது இறந்து விட்ட சகோதரிக்குமான உறவு சொல்லப்படுகிறது. ஆறாத அந்தப் புண், அடிப்படையான இருத்தலின் அனுபவமாக உருவெடுக்கிறதே தவிர கடந்து செல்லும் இரணமாக இருக்கவில்லை. வெஜிடேரியன் நாவலில் சிறிய எளிய விளக்கங்கள் தரப்படவில்லை. ஆனால். இதில், விதிப்படியோ, தெய்வச் செயலாலோ, படீரென்று வெடித்துக் கிளம்பும் ஒன்று, போக மறுத்து நிலை கொள்கிறது. நாயகன் அமைதி காப்பதைத் தவிர வழி ஒன்றுமில்லை. Europa, 2019, என்ற சிறுகதையிலும் இதைப் பார்க்கலாம். அதில் ஒரு ஆண் கதைசொல்லி, தன்னை மறைத்து பெண்ணாக வருவார் (அவ்வை ஷண்முகி?) அவர் ஒரு புதிரான பெண்ணின் பால் ஈர்க்கப்படுவார். அந்தப் பெண்ணோ நடக்க இயலாத திருமணத்திலிருந்து பிரிந்தவர். அந்தப் பெண் கதைசொல்லியிடம் ஒரு கேள்வி கேட்பார்: “நீ விரும்பியபடியே வாழ முடிந்ததென்றால், நீ, அந்த உன் வாழ்வை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்?” கதை சொல்லியால் இதற்கு பதில் சொல்ல முடியாமல் போகும். “பரிகாரம் செய்வதற்கோ, நிறைவு கொள்வதற்கோ இங்கே ஏதும் இல்லை.”.
வரலாற்றுப் பேரச்சங்களையும், புலப்படாத விதிமுறைகளையும், ஹான் தன் படைப்புக்களில் துணிவாகக் காட்டுகிறார். தன் அனைத்துப் படைப்புகளிலும், உறுதியற்றதும், உடையக்கூடியதுமான மனித வாழ்வைச் சொல்கிறார். ஆன்மாவிற்கும், உடலிற்குமான இணைப்பு, வாழ்வோருக்கும், இறந்தவருக்குமான பிணைப்பு இவைகளைப் பற்றிய தனிச் சிறப்புக் கண்ணோட்டம் இவருக்கு இருக்கிறது. சமகால உரை நடையாளர்களில், கவித்துவமும், பரிசோதிக்கும் எழுத்து நடையும் கொண்டு புதுத் தன்மையோடு எழுத்தாளராக உருவெடுத்துள்ளார்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “எரியும் மரங்கள்”