குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட்(டு) உழுவயல் ஆக்கி – வளந்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோ(டு) என்றிவ்ஐம் பாற்படுப்பான்
ஏகும் சுவர்க்கத்(து) இனிது.
-சிறுபஞ்சமூலம் ( பதினெண் கீழ்க்கணக்கு நூல்)
விவசாய யுகம் என மானுட வாழ்வில் ஒரு காலம் உருவாகி இன்றைக்கும் அது வாழ்வின் ஓர் பகுதியாக உள்ளது. அந்த யுகத்தின் தலையாய அறத்தில் காடழித்து கழனியாக்கல் உண்டு. அக்கருத்தினை விவசாய யுகம் தழைத்த காலத்தில் எழுதப்பட்ட நீதி நூலான சிறுபஞ்சமூலத்தில் காணலாம்.
குளத்தைத் தோண்டி, சுற்றிலும் மரக்கிளைகளை வெட்டி நட்டு, மக்கள் நடக்கும் வழியைச் செதுக்கி, நிலத்தின் உள்ளிடத்தை வெட்டி செப்பஞ் செய்து, உழுகின்ற கழனியாகச் செய்து, அதில் வளம் உண்டாக்கி, கிணற்றை நிறுவுதல் சுவர்க்க லோகத்துக்குச் செல்லும் வழி என இப்பாடல் சொல்லும்.

விபூதிபூஷன் பந்தோபாத்யாய எழுதிய வனவாசி நாவல் சாகித்திய அக்கடெமி வெளியீடாக வந்தது. தமிழில் த.நா.சேனாபதி மொழிபெயர்த்துள்ளார்.398 பக்கங்கள் கொண்ட நாவல். பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது. இக்கதை எழுதப்பட்ட காலத்தினை இந்திய விவசாய யுகம் பெரிதும் இந்திய வாழ்வினை ஆட்கொண்டிருந்த காலம் எனலாம்.
1924-1930களில் விபூதிபூஷன் பந்தோபாத்யா கல்கத்தாவிலிருந்து கிளம்பிச் சென்று பீகார்-வங்காள எல்லையில் உள்ள வனப்பகுதியில் பணிபுரிந்தார். இந்தப் புனைவு அந்த அனுபவங்கள் மேல் எழும்பி முளைத்து வளர்ந்த நாவல் என தமிழ் விக்கி குறிப்பிடுகின்றது.
இந்த நாவல் முழுதும் சத்யசரண் என்னும் இளைஞனின் பார்வையில் சொல்லப்படுகின்றது. சத்யசரணின் குரலில்தான் முழு நாவலும் உள்ளது. அவனது அகக் குரல், அவன் மேற்கொள்ளும் உரையாடல்கள், அவன் காணும் காட்சிகள், அவனது அனுபவம் வழியே அவன் அடையும் பக்குவம் வழியேதான் வாசகர்கள் வனவாசியில் பயணிக்கின்றார்கள்.
அப்படியானால் சத்யசரண் யார்? சத்யசரண் கதை துவங்குகையில் முதிரா இளைஞன். கல்கத்தா நகரில் பிறந்து வளர்ந்தவன். நவீனக் கல்லூரியில் வக்கீல் படிப்பினை முடித்து இன்னமும் கால் ஊன்றாமல் நண்பர்களுடன் உரையாடல், நாடகம், சினிமா, இசை , நல்லுணவு எனப் புலன் வழி இன்பம் கொண்டு உலகை ரசிப்பதில், இன்பம் புசிப்பதில் ஈடுபாடு கொண்டவன். படித்த படிப்பு கொடுத்த வேலைக்குச் செல்ல வேண்டாமென முடிவு எடுத்தவன்.படிப்பு என்பது சமூக அந்தஸ்து கருவியாக, ஊர் பெரிய மனிதர் குடும்பம் தெரிந்து கொள்ள உதவும் கருவியாகின்றது. சத்யசரண் நினைவில் உணவும், இசையும் வருமளவுக்குச் சட்ட நுணுக்கங்கள் வருவதில்லை.
எல்லா முதிரா இளமைக்கும் வழக்கமாக வரும் சங்கடமான “பணத்துக்கு என்ன செய்வது” என கேள்வி வருகின்றது. ஜமீந்தாராக உள்ள நண்பரை அவரது இல்லத்தில் சந்தித்து மறைமுகமாக வேலைக்கு விண்ணப்பிக்கின்றான். அவர் சிபாரிசில் வேலை கிடைக்கின்றது. பல ஆயிரம் ஏக்கர் காட்டை விளைநிலமாக்கி ஜமீனுக்கு வருவாய் கொண்டு வரும் பெரும் வேலை. பெரும் மக்கள் குடியிருப்பினை உருவாக்கும் வேலை, பலரது வாழ்வில் பிள்ளையார் சுழி போடும் வேலை. கதைப்படி கிட்டதட்ட ஆறு, ஏழு வருடங்கள் நகர மனிதனான சத்யசரண் தனது வேலைக்காக வனவாசியாக வாழ்கின்றான்.
சத்யசரண் நகர நிர்மாணம் அறிந்தவன் அல்ல, நீர்வளம், நிலவளம் அறிந்தவன் அல்ல, விவசாயம் அறிந்தவன் அல்ல, விவசாயப் பொருள்கள் விற்பனை அறிந்தவன் அல்ல, அதற்கு முன்னால் அவன் செய்த வாத்தியார் வேலையைக் கூடச் செய்ய முடியாமல் விட்டு விட்டு வந்தவன். ஆனால் நேர்மையானவன், நிதானமானவன். நம்பிக்கையானவன், பிரச்சனைகளைச் சொன்னால் பிடித்துக் கொள்ளக் கூடியவன். சத்யசரணை வேலைக்கு எடுக்கும் ஜமீன்தார் இந்தக் குணங்கள் போதுமானது என நினைக்கிறார். ஆகவே பெரும் வேலைக்கு சத்யசரண் தேர்வு செய்யப்படுகின்றான்.
நாவலின் இறுதியில் வரும் வரிகள் கவனிக்கத் தக்கது.
“தானிய களஞ்சியங்கள் தெரிந்தன. காடாக கிடந்த இந்த இடத்தை சீர்திருத்தி, பயிர் நன்றாக விளைந்திட மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் ஊர்களாக மாற்றியது நான்தானே!, ஆறு, ஏழு ஆண்டுகளுக்குள் இதை செய்து முடித்து இருக்கின்றேன்! அன்று காலை எல்லாரும் இதையேதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்”
இது சத்யாசரனின் அக உரையாடல் என நிகழ்கின்றது. காட்டை கொடுத்து உதவிய வன தேவதைகளுக்கு தனது மன்னிப்பினையும், நன்றியையும் தெரிவிக்கின்றான்.
சத்யசரண் தான் இருக்கும் காலத்தில் வனத்தின் மீது மையல் கொள்கின்றான். அது தீராக்காதல் இல்லை. வேலை முடிந்து திரும்புகையில் தீரும் காதல்.அதற்குப் பிறகு அசைப்போடும் நினைவாக வாழ்வெங்கும் தங்கும் இடத்தில் அதனை வைத்துக் கொள்கின்றான். மையல் கொண்ட பெண்ணை வர்ணிக்கும் காதலன் போலக் காட்டினை வர்ணிக்கின்றான். அங்குலம் அங்குலமாக ரசிக்கின்றான். அதில் முழுக் கவனம் வைக்கின்றான். சத்யசரண் தன் எண்ணங்களால் காட்டின் ஒவ்வொரு மரத்தையும், பூவையும், நீர் நிலையையும், மலையையும் ரசிக்கின்றான். வனம் அங்கு வாழும் மக்களோடு பின்னி உறவாடுவதைப் புரிந்து கொள்ளத் தனது முழு மனதுடன் முயற்சி எடுக்கின்றான்.
கதையில் ஓர் இடத்தில் புலிக்கும், காட்டுப் பசுவுக்கும் அஞ்சாது தனித்து இரவில் காட்டினைக் காணக் காதலுடன் குதிரையில் செல்லும் காட்சி வருகின்றது. வனத்தின் மீதான அவனது நேசம் அத்தனை பெரியது. காடு அவனது ரசனையை கூர் படுத்துகின்றது. கல்கத்தாவில் முதலில் நாம் சந்திக்கும் முதிரா இளைஞன் கொஞ்சம் கொஞ்சமாக பக்குவப்பட்டு முதிர்ச்சி கொள்வதை காணலாம். காடு ஒரு இடத்தில் அவனுக்கு ஆன்மாவின் இரகசிய உருவத்தினை காணும் அனுபவத்தினை அளிக்கின்றது. அவ்விடத்தில் தனது அக வலிமையை உணர்கின்றான். வனம் அவனுக்கு மன ஒருமையை அளிக்கும் தியான பீடமாகின்றது. அவன் தன் மொழி நுட்பத்தினை, ரசனையை தன்னுள் கண்டெடுக்க உதவுகின்றது.
அழகானது , ரசிக்கத்தக்கது, ஆகவே காலமெல்லாம் வாழுமிடமா எனக் கேள்வி வருகையில் சத்யசரண் பயன்படுத்தும் அலகுகள் வேறு. அங்கு வாழ்க்கைத்தரத்தினை அலகாகக் கொள்கின்றான். தான் உருவாக்கிய இடத்தில் தனது எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வாழ்க்கைத்தரம் சாத்தியம் என அவன் நம்பவில்லை
சத்யசரண் நகரம் கொடுக்கும் வாழ்க்கைத் தரம் மீது நம்பிக்கையும், விருப்பமும் உடையவன். வனம் அழகாயினும் அது மானுட நாகரீகம் குறைவானது என்பதை கதை முழுதும் அவன் அகமொழியில் சொல்லிக் கொண்டே இருப்பதை காணலாம். அவன் காட்டை ஊராக்கியதில் ஈடுபட்டான்,ஆனால் ஊரை நகரமாக்குவதில் நம்பிக்கை இல்லாதவன். ஏற்கனவே நகரமாக இருந்த கல்கத்தாவே அவனுக்கு வசதியானது. எனவே இறுதியில் அவன் கல்கத்தாவுக்கு திரும்பி செல்கின்றான். அங்கு போய் காட்டை எண்ணி மருகி நிற்கின்றான்.
காட்டை ஊராக்குவதில் சத்யாசரனுக்கு பெரிய திட்டமிடுதல் இருந்ததாக கதை சொல்லவில்லை. பல நிகழ்வுகள் தற்செயலாகவே நிகழ்கின்றது. தற்செயல்களின் ஊடாக காட்டின் நிலத்தினை பிரித்துக் கொடுக்கும் வேலையை செவ்வனே செய்கின்றான். அதன் போக்கில் ஊர் உருவாகி வருகின்றது. உருவாகும் ஊரின் தெரு அமைப்புகள், புதிய ஊர்களின் நிர்வாக கட்டமைப்பு, அதன் வளங்களை மேம்படுத்தி பண்படுத்தும் செயல், சந்தைகள், வணிக வழிகளை உருவாக்குவது என என்றெல்லாம் புதிய பார்வைகளை கொண்டு இருக்கவில்லை.
தனது மேற்பார்வையில் உருவான ஊர்களை பற்றி சத்யாசரனின் எண்ணம் கீழ்கண்டவாறு உள்ளது.
“விவரிக்கவொண்ணாத எத்தகைய பேரெழிலை இந்தக் காட்டின் நடுவே அமைதி சூழ்ந்த இந்த இருண்ட இரவில் கண்டேன் தெரியுமா? ஆனால் இந்த நாடா காட்டு பிரதேசம் வெகுநாள் நீடிக்காது என்பதை எண்ணும்போது என் மனம் என்னவோபோல் ஆகிவிட்டது. இந்த இடம் எனக்கு எவ்வளவு பிடித்திருந்தது தெரியுமா? இதை நான் என் கையாலேயே பாழாக்க வேண்டியதாயிற்று. இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த இடமெல்லாம் குடியிருப்பு ஆகி, விகாரமான சிறு பேட்டைகளாகவும், குப்பை கூளம் நிறைந்த சேரிகளாவும் உருதெரியாதபடி மாறிவிட்டன! இயற்கை அன்னை தன் கையாலேயே நூற்றாண்டுக்கணக்கான அலங்கரித்து வந்த இந்த நாடா பிரதேசம், விவரிக்கவொண்ணாத இந்த காட்டின் எழில், தொலைவுவரை பரவியிருக்கும் வெளி எல்லாம் அடியோடு மறைந்துவிடும். இவற்றுக்கு பதிலாகக் கிடைக்க போகிறவை என்ன? விகாரமான பல மஞ்சம் புல் குடிசைகளும், மாட்டுக் கொட்டகைகளும், மக்காச் சோள வயல்களும், கயிற்றால் பின்னிய நீண்ட நாற்காலிகளும், அனுமான் கொடியும், சப்பாத்திக்கள்ளிப் புதரும், ஏராளமான புகையிலை சருகுகளும், கரித்தூளும், வாந்திபேதியும், வைசூரியுமே”.
இக்கதையில் வேதாந்தம் பற்றிய சிலக் குறிப்புகள் உள்ளன. வட்டிக்கடைக்காரரின் தொழில் வட்டிக் கொடுத்து வாங்குவது. தாவ்தால் ஸாஹு தொழில் தெரியாதவர். தொழிலை விட்டு விலகவும் தெரியாதவர். அவர் பணத்தினை கட்டிக் காக்க தெரியாமல், பெருக்காமல் செயலின்மை கொண்டு சிக்கி நிற்பதை சத்யசரண் வேதாந்தம் என்கின்றான். தாவ்தால் ஸாஹுவை பற்றிய சத்யாசரணின் எண்ண ஓட்டம் கீழே உள்ளது.
“பணத்தில் அக்கறை இல்லாமலும் பெரிய நஷ்டத்தினை கவனிக்காமலும் அசிரத்தையாக இருப்பது ஏதோ வேதாந்திகளுக்குத்தான் பொருந்தும், ஆனால் தாவ்தால் ஸாஹுவைப் போல் அசல் வேதாந்தியாக வருபவனை நான் பார்த்ததே இல்லை”
உழவுத் தொழில் செய்ய வந்து விட்டு அதில் முழு ஈடுபாடு கொள்ளாமல் பூஜையில் நேரம் செலவிட்டு, அதே நேரம் இறை பூசையில் முழு நிறைவுக் கொள்ளாமல் உழவுத்தொழில் ஒரு காலை வைத்துக் கொண்டு படாதபாடு படும் ராஜு பாண்டேயை கண்டதும் வேதாந்தியாக நினைவில் நிறுத்துகின்றான்.
ஆயினும் உலக இச்சைகளில் சுதந்திரம் பெற்று, யாரிடமும் எதுவும் கோரி நிற்காமல், தன்னில் நிறைவுடன் வாழும் ஜயபாலனை கண்டபொழுது அதை வேதாந்தத்துடன் தொடர்பு செய்யவில்லை.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், உலகில் இழக்கவும், சம்பாதிக்கவும் எதுவும் இல்லாமல் வனத்தில் அழகு செடி நடுவதையே தன் இலக்காக கொண்ட யுகல் பிரசாத் உள்ளான். வனத்தினை அழகுற செய்ய வேண்டுமென்னும் எண்ணம் ஓன்றினை மையமாக கொண்டவன். அவனை காண்கையில் சத்யாசரனுக்கு வேதாந்தம் நினைவு வரவில்லை. வேதாந்தம் என்பதை மேலை மரபின் அறிஞர் fatalistic தன்மையுடன் கூடிய வெற்று வாதம் என்பர். அண்மையில் ஒப்பன்ஹைமர் குறித்து வந்த பிபிசி குறிப்பில் கூட இதை நாம் காணலாம். அதே மனப்பான்மையை நாம் சத்யாசரனின் பார்வையிலும் காணலாம். வேதாந்தம் பற்றிய சரியான புரிதல் இல்லை.
1930களில் எழுதப்பட்ட இந்த நவீன வங்க நாவலில் விவேகானந்தரின் வேதாந்தப் பார்வை வரவில்லை என்பது தமிழகத்திலிருந்து வாசிப்பவனுக்கு வியப்பாகவே உள்ளது.
தோப்ரூ பன்னா பழைய மன்னர் குல வாரிசு. அவரோ வனத்தில் மாடு மேய்க்கும் தொழில் கொண்டு வாழ்ந்துக் கொண்டுள்ளார். அவரை சத்யசரண் சந்திக்கின்றான். மன்னர் குல வாரிசுக்கு தொழில், செல்வம், படை, அறிவு ஆகியவற்றை கட்டமைக்க வேண்டும், தொகுக்க வேண்டும், வேள்வியென வளர்க்க வேண்டுமென்ற எந்த செயல்நிலை எண்ணமும் இல்லை. அதையெல்லாம் விட்டு விட்டு ஊரில் சம்சாரியாக வாழ்ந்துக் கொண்டுள்ளார். அவரை சந்திக்கும் சூழலில் சத்யசரண் பாரவர்ஷத்தினை ஆரியருக்கும், பூர்வகுடிகளுக்கும் இடையே உள்ள முரணாகக் காணும் பார்வையைக் கொண்டுள்ளான்.
“நானும் வனோவாரியும் வெற்றி பெற்ற ஆரிய மக்களின் பிரதிநிதிகள். முதியவரான தோப்ரூ பான்னாவும், வாலிபனான ஜகரூவும், இளம்பெண்ணான பானுமதியும் தோல்வியுற்று நசுக்கப்பெற்ற மக்களின் பிரதிநிதிகள்! இரண்டு இனத்தினை சேர்ந்தவர்களும் அன்று மாலை ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருந்தோம்”
இந்தக்கதை எழுதிய பொழுது இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தது, கதாபாத்திரம் தன்னை காலனி ஆதிக்கத்தில் இருப்பவனாகவும், தானும், முதியவர் தோப்ரூ பான்னாவும் ஒரே இனமென்றும் உணரவில்லை. மாறாக ஆரிய இனவாத பார்வையில் தன்னை வெற்றி வீரனாக காண்கின்றார். தன்னை காலனி ஆதிக்க சக்தியில் ஒன்றாக காண்கின்றார். இந்த பார்வை இந்தியாவின் பெரும் அறிவாளிகள் அந்த காலக்கட்டத்தில் கொண்டிருந்த விசித்திரமான மனநிலையை காட்டுகிறது.
இந்த நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்?
வனம் ஒரு மானுட அகத்தில் புகுந்து மாயம் செய்யும் விதம் தெரிந்து கொள்ள இந்த நாவல் உதவும். அடுத்த முறை வனம் எதையும் காண்கையில் அதனை காவியமாக ரசிக்க சத்யசரணின் கண்கள் உதவும். பூ, மரம், செடி,மலை என அனைத்தினையும் ரசிக்க மொழி அமைத்து தருகின்றான். வனம் ரசனையை, மொழிக்கூர்மையை சத்யசரணுக்கு வரமாக அளிக்கின்றது. அந்த தவம் குறித்து அறிந்துக் கொள்ள வாசிக்கலாம்.
இந்தியாவில் காடுகள் வயலான கதை, வயல் விளைச்சலான கதை, விளைச்சல்கள் சம்சாரிகளைச் சென்றடைந்த கதை என்பது அனைத்து இந்தியரும் கேட்க வேண்டிய கதை. 1930களில் அது நிகழ்ந்த விதம் குறித்து இந்த நாவல் விரிவான சித்திரம் வைக்கின்றது. இக்கதையில் கல்கத்தா போன்ற பெரும் நகரொன்றினை சேர்ந்த நவீனக் கல்வி கொண்ட “கதை சொல்லி” பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ஊர்களை உருவாக்குகின்றான்.
ஒரு தேசத்தின் அறிவு சக்திகள், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய சக்திகள் தேசத்தின் தொழில் உருவாக்கத்தில், செல்வ உருவாக்கத்தில், ஊர் நிர்மாணத்தில் கவனமின்றித் தன்னை வெறும் ஜமீன் வரி சேகரிப்பவர் போல நினைத்து செயல் பட்டால் அதன் விளைவுகள் எப்படியெல்லாம் இருக்க வாய்ப்புண்டு என்பது பெரிய கேள்வி. சத்யசரண் அறிவு சக்தியாக, பாதுகாப்பு அளிக்க வேண்டிய சக்தியாக இந்நாவலில் உள்ளான். ஆயினும் அவன் மேற்பார்வையில் உருவாக்கிய ஊர்கள் ஜமீன் வரி செய்யும் நோக்கில் உருவானவை. ஊர்களை நாகரீகத்தின் முதுகெலும்பாக உருவாக்காமல் வெறும் வரி கிடைத்தால் போதும் பாங்கில் உருவாக்குவதைப் பார்த்து இன்றைய தலைமுறை கேள்வி கேட்கலாம்.அந்தக் கோணத்தில் இந்த நாவலை வாசிக்கலாம்.
மூல எழுத்தாளர்: விபூதிபூசன் வந்த்யோபாத்யாய
மொழியாக்கம்: த. நா. சேனாபதி
வெளியீடு: விடியல்
பக்கங்கள்: 328
ஆண்டு: 2011
பின்னட்டை:
பிபூதிபூஷன் பந்தோபாத்யாய் நவீன பெங்காலி இலக்கியத்தில் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர், அவருடைய சுயசரிதை நாவலான பதேர் பாஞ்சாலிக்கு மிகவும் பிரபலமானவர், இது பந்தோபாத்யாயின் மற்றொரு புத்தகத்துடன் சேர்ந்து சத்யஜித் ரேயின் உன்னதமான அபு முத்தொகுப்புக்கு அடிப்படையாக அமைந்தது. இந்த அரை சுயசரிதை நாவலில், சத்யசரண் 1920 களில் கல்கத்தாவில் ஒரு இளம் பட்டதாரி ஆவார், அவர் நகரத்தில் வேலை கிடைக்காமல், அண்டை நாடான பீகாரில் ஒரு பரந்த காடுகளின் ‘மேலாளர்’ பதவியை ஏற்றுக்கொள்கிறார். இயற்கையின் நேர்த்தியான அழகில் அவர் மேலும் மேலும் மயக்கமடைந்து மயக்கமடைந்ததால், இந்த நிலத்தை விவசாயத்திற்காக சுத்தம் செய்யும் வேதனையான பணியை அவர் சுமக்கிறார். பழங்கால மரங்கள் பயிரிடுபவர்களின் கோடாரிக்கு விழுந்ததால், பழங்குடியினர்-ஆயிரமாண்டுகளாக காடுகளில் வாழ்ந்தவர்கள்-தங்கள் பழமையான வாழ்க்கை முறையை இழக்கிறார்கள். ‘முன்னேற்றம்’ மற்றும் ‘அபிவிருத்தி’ என்ற வாக்குறுதியானது, நிலமற்ற தொழிலாளர்கள், வறிய பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பட்டினியால் வாடும் சிறுவர்களின் நனவோடைகளைக் கொண்டு வருகிறது. 1937-39 இல் எழுதப்பட்டது, ஆரண்யக் என்பது ஒரு அற்புதமான கலைஞரால் எப்பொழுதும் பாதுகாக்கப்பட்டு வரும் அழகு மறைந்து போகும் இடத்தில் கடினமான வாழ்க்கையின் மறக்க முடியாத பதிவு.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
