
காலையில் ஷட்டரை திறக்கும் சத்தம் கேட்டு அங்கு இருக்கும் மொத்த வணிக கட்டிடமும் நிலநடுக்கம் வந்தது போல பயத்தில் இருந்தது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த நாட்டு நாய்கள் தலைதெறிக்க ஓடி தனது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டன.
வணிக வளாகத்தில் அதிரும் சத்தத்தில் டால்ஸ்டாய் புத்தகக் கடையை திறந்தான் அன்பு. நீண்ட நாட்களாக கிரீஸ் அடிக்காததால் சத்தம் காதை கிழித்தது.
காலை ஒன்பது மணிக்கு வழக்கமாக திறப்பது, சில நேரம் எட்டு,எட்டு முப்பதும் ஆகும். மக்கள் வருவார்கள் என்று அல்ல, குடும்பத்தில் இருக்கும் மனநிலையை பொறுத்து அது நடக்கும்.
வேலையை விட்டுட்டு புத்தக கடையை திறந்ததே குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சனைக்கு முதல் காரணம்.
படித்த நாவல்,சிறுகதைகள்,எழுத்தாளர் சுயசரிதை, அவற்றில் வரும் கதாபாத்திரத்தின் கஷ்டங்களை நினைத்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு, மனதிற்குள் இருக்கும் எண்ண ஓட்டத்தை யாரிடமும் வெளிகாட்டாமல் தனி ஆலமரம் போல கடையில் ஆசுவாசபடுத்திக் கொள்வான்.
எரிச்சலுடன் அன்பு கடையை திறந்து உள்ளே வந்தான்.
காலை வணக்கம் அன்பு, புக் ராக்கில் இருந்த டால்ஸ்டாய் சொல்ல அன்பு முதுகில் தொங்கவிட்டிருந்த பேக்கை டேபிளில் கழட்டிவிட்டு லைட் ,பேன் ஆன் செய்தான் .
வழக்கமான வேலையான தரையை பெருக்குவது புத்தக ராக்குகளை தூசி தட்டுவது கம்பியூட்டர் ஆன் செய்வது என கடமைகளை செய்துவிட்டு பேக்கில் இருக்கும் திலிப்குமார் எழுதிய கடவு சிறுகதைத் தொகுதியை டேபிளின் மேல் எடுத்து வைத்து உட்கார்ந்து மனதை ஒருநிலை படுத்தினான்.
புத்தகங்களுக்கு தனி தனியான ராக்குகள், தலைப்புகள் பெயரிட்டு, புத்தகங்கள் நகைக்கடையில் இருக்கும் நகைகளை போல அழகுபடுத்தி, ஒரு புத்தகத்தின் மேல் இன்னொரு புத்தகங்களை ஏற்றாமல் தனித்தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அழகே தனி. மனதிற்கு பிடித்த வேலை என்பதால் அதில் இருக்கும் மனநிறைவும் தனி. திறமையும் விருத்தி அடைந்து கொண்டேயிருக்கும்.
கம்பியூட்டரில் உட்கார்ந்து டொக் டொக்குனு கீ போர்டை தட்டி கதறவிட்டு கொண்டிருந்தான் அன்பு. புதிதாக வருகின்ற மேல் நாட்டு புத்தகங்கள் ,விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு,கட்டுரைகள் முக்கியமான புத்தகங்களை அலசி ஆராய்ந்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்து தான் தேர்ந்தடுத்த புத்தகத்தை வாசகர்கள் தேர்வு செய்து வாங்கும் போது அவன் உள்ளத்திற்குள் தோன்றும் ஆனந்தத்திற்கு அளவேயில்லை.
வாடிக்கையாளர் இல்லாத நேரங்களில் மஞ்சள் நிறத்தில் ஒரே ஒர் எல் இ டி லைட் எரியும் . அது சூரியன் மறையும் போது இருக்கும் ரம்மியமான ஒளி போல காட்சியளிக்கும்.
காலையில் கடைக்கு யாரோ வருவது ஷூகாலில் நடக்கும் சத்தம் கேட்க கீபோர்டை தட்டுவதை நிறுத்திவிட்டு அனைத்து லைட்டும் எரியவிட்டு கல்யாண வீடு போல காட்சியளிக்க செய்து எதிர் நோக்கினான்.
எழுத்தளார்கள் கண்களை விழித்துக் சோம்பல் முறித்து எழுந்து வாசகர்களை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். காலடி சத்தம் அருகில் வர வர வாசகனை வரவேற்க புன்முகத்துடன் எழுத்தாளர்கள் ஆவலுடன் இருந்தனர்.
கதவை திறந்து உள்ளே வந்தார்,ஆர்வத்துடன் எதிர் பார்த்த முகம் நெருப்பில் விழுந்த நெகிழி போல முகம் சுருங்கியது. ஆன் செய்த லைட்டை ஆஃப் செய்து மீண்டும் ஒரு எல் இ டி லைட் எரிய செய்தான்.
எழுத்தாளர்கள் முகத்தை அலட்சியமாக திருப்பி இவனா… என பழைய நிலைக்கு திரும்பினார்கள்.
வணக்கம் அன்பு…
பதிலுக்கு கையை தூக்கி வணக்கம் வைத்தான்
தோளில் இடது பக்கமாக தொங்கவிட்டு இருந்த லெதர் பேக்கை கழட்டி உள்ளே இருக்கும் திட்டில் வைத்தார்.
மூக்கு கண்ணாடியை சரி செய்து இறங்கிய பேண்டை தூக்கிவிட்டு சமீபத்துல என்ன வாசிச்சியிட்டு இருக்கிங்க அன்பு?
Milan kundera the unbearable lightness of being .
ஓ ஓ…
எல்லாம் தெரிந்தது போல தலையாட்டி பாவனை செய்து புக் இருக்கும் ராக்குகளை ஒரு வலம் வந்தார்.
காலைலயே ஒரே தலைவலி அன்பு. இன்னம் டார்கட் முடிக்கல வெக்கேஷன் டைம் வேற எல்லாரும் ஊரு சுத்த போயிருவாங்க. ஒருத்தனும் ஹாஸ்பிட்டலுக்கு வரமாட்றான். எப்படி முடிக்கிறதுனு தெரியல வாழ்கையை ஒரே துன்பமா இருக்கு.இதலாம் ஒரு பொழப்ப! வெக்கேஷன் நேரமா இருந்தாலும் மருந்து சாப்பிட்டுதானே ஆகணும்.
ஆஸ்பிட்டல நோயாளி படுத்தாதான் எனக்கு சேல்ஸ் ஆகும். நா விற்குறது எல்லாம் ஊசி மருந்து. இந்த சீசன்ல மக்கள் யாரும் ஆஸ்பிட்டலுக்கு வரது குறைவுதான்.
சிறிது நேரத்திற்கு பிறது காலடி சத்தம் மீண்டும் அதே போல கேட்டது.
அன்பு சுவரில் வலம் வந்து கொண்டு இருந்த கடிகாரத்தை பார்த்து இம்முறை லைட் போடவில்லை . எழுத்தாளர்களும் மணியை பார்த்து வருவது இன்னோரு புலம்பலா இருக்கும் என சலித்துத் கொண்டனர்.
வணக்கம் அண்ணா….
வணக்கம் முகிலன்
வந்து எல்லாம் புலம்பிட்டு போக இது என்ன புத்தக கடையா இல்ல குறை தீர்க்கும் மன்றமா டால்ஸ்டாய் தலையில் அடித்துக் கொள்ள மற்ற எழுத்தளார்களும் சிரித்தனர்.
அவன் மெடிக்கல். நீ பைனான்ஸ் உனக்கும் எவனையாவது அறுக்க கழுத்து வேணுமா?.வந்து சேர்றாங்க பாரு நமக்குனு.
இருவரும் மாறி மாறி புலம்புவதை அன்பு கடமைக்கு கேட்டுவிட்டு,பேசி பேசி களைத்து போன மெடிக்கல் ரெப் அங்கு சிகப்பு நிற பாட்டிலில் இருக்கும் தண்ணீரை குடித்து வயிற்றை நிரப்பி, க்ளாசிக் புக் இருக்கும் ராக்குக்கு சென்றார்.
எத்தனைவாட்டிதான் அசோகமித்தரன புரட்டி பார்ப்ப. வாங்கவும் மாட்ட, சும்மா புக்க வாங்குற மாதிரி வந்து எதையாவது தின்னுட்டு வந்து கையை தொடச்சிட்டு போகுறது,உனக்காலம் கோபமே வரதா அசோக, எப்ப பார்த்தாலும் ஒரே மாதிரி மூஞ்ச வச்சிட்டு இருக்க.
யோ! நீயெல்லாம் என் நாட்டுல இருந்துருந்தா அவன் அவன் வீட்டுல தெய்வமா கும்பிட்டுயிருப்பான். சாதுவான சுருங்கிய வெள்ளை முகத்தில் பற்கள் தெரியாமல் உதட்டை மட்டும் சுழித்து மௌனமாக சிரித்தார் அசோகமித்திரன்.
இவைங்க இரண்டு பேரும் பேசுறத பாரு நாலும் படிச்சி தெரிஞ்சி இவங்களுக்கு தெரியாதது ஒண்ணுமே இல்லாத மாதிரி பேசுறாங்க. இவங்க பேசுறத கேட்டா நம்பல்லாம் ஒண்ணுமே படிக்காத மாதிரில தோணுது.
என்ன கநாசு,பார்த்தா பெரிய கோபக்காரன் மாதிரி இருப்ப?
அப்படியே அமைதியா இருக்க. நல்ல வேள என் காலத்துல நீ இல்லையா,எவ்வளவு பெரிய கதையா இருந்தாலும் நூற்று இருபது பக்கத்துகுள்ளயே எழுதி முடிக்கணும்னு சொல்லியே என் உயிர எடுத்துருப்ப.
என்னைய நக்கல் பண்ணாம இருக்கமாட்டிங்களே நான் உண்டு என் வேலை உண்டுனு தானே இருக்கேன் என்று சலித்துக் கொண்டார்.
அன்புக்கு பல குழப்பங்கள் ஓடி கொண்டிருந்தன. இரண்டாவது பிள்ளை ஒரு வாரத்திற்குள் பிறந்துவிடும் என டாக்டர் சொல்லியது ஞாபகத்திற்கு வந்து வந்து போனது. டொக் டொக்னு கீபோர்டு அடிப்பதை நிறுத்திவிட்டு ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.
அவளிடம் காலைல மூஞ்சை காட்டியது மனதிற்குள் புழுக்கத்தை ஏற்படுத்தியது. உள்ளுக்குள் இருக்கும் மன அழுத்தத்தை யாரிடமாவது பேசி வெளிக்காட்டினால் நல்லாயிருக்கும் ஆனால் மற்றவர்களிடம் பேசினால் அவர்கள் காட்டும் அனுதாபம், அறிவுரை மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும்.
முதல் குழந்தை பிறந்தது முன்னணி தனியார் மருத்துவமனையில். ஏசி ரூம்,வெள்ளி கிண்ணத்தில் சாப்பாடு,மித மிஞ்சிய பழவகைகள், தீனி வகைகள். சளி காய்ச்சல் என்றால் உடனே தனியார் மருத்துவமனையில் காட்டுவது என வசதிகளுடன் இருந்தான். தேதியை பார்த்தான்.
இன்னும் இரண்டு நாட்கள் மீதம் இருந்தது . கடை வாடகை பதினாறு ஆயிரம் ரூபாய் தயார் செய்ய . கடை ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகியிருந்தது . மக்கள் அப்ப அப்ப மழைக்கு ஒதுங்குவது போல மக்கள் வருவதும் அதிகரிப்பது போல தோன்றியது. தனித்துவம் வாய்ந்த புக் செல்லராக திகழ அன்புக்கு உள்ளுக்குள் ஆசை. கடையிருக்கும் கட்டிடத்தில் மூன்று வகையான வங்கி, சில கம்பெனிகளின் போன் சர்விஸ் சென்டர்,சாப்ட்வேர் கம்பெனி இருந்தது.
மக்கள் கூட்டம் நடமாடும் பகுதி. ஆனால் பெரும்பலான மக்கள் புக் கடையில் வந்து கேட்பது, ஆதார் கார்டு பிழை திருத்தம் பண்ணனும், எங்கே பண்ணுவாங்க?
விவோ போன் சர்விஸ் சென்டர் எங்க இருக்கு?
ஜெராக்ஸ் இங்கே எடுக்கலாமா?
ஸ்டேஷனரி ஐட்டம் இருக்கா?
யாருக்கும் இங்கு என்ன இருக்கு என்பதை தெரிந்துக்க கூட நேரமும்,ஆர்வமும் இல்லாமல் வாழ்க்கை நாளையை நோக்கி சென்றுக் கொண்டுயிருந்தார்கள்.
ஆர்டர் செய்த பார்சல் புக்கை கொரியர்காரர் வந்து கொடுத்தார். ஆர்டரில் வந்த புத்தகத்தை ஆப்ரேசன் தியேட்டரில் மகப்பேறு மருத்துவர் நுணுக்கமாக தோலை அறுத்து குழந்தையை வெளியே எடுப்பது போன்று புத்தகத்தை நுணுக்கமாக பிரித்து பவ்வியமாக எடுத்தான்.
சுற்றி கூட்டமாக நின்று எழுத்தாளர்கள் எட்டி பார்த்து இந்த தலைமுறையில் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் எழுத்தாளன் யாரும் இருப்பானா என்ற பேராசையில் புத்தகத்தை எதிர் பார்த்துயிருந்தார்கள்.
அவர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கும்.
கடையில் அப்ப காமெடிகளும் நடப்பதுண்டு, ஒருநாள் மதிய நேரத்தில் அறுபது வயது இருக்கக்கூடிய நல்ல தோற்றம் உள்ள ஒருவர் வந்து வேலை எதுமிருக்குமா என கேட்டார்.
வேலை எதும் இல்ல சார்.
தானாகவே தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள முயற்சித்தார். பேங்க்ல கொஞ்சம் வேலையா வந்தேன். சமீபத்தில பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து பணி நிறைவு பெற்றேன். ஓய்வு ஊதியம் வருது. வீட்டில் சும்மா இருக்க கடுப்பாக இருக்கு. எதேச்சையாக கடைய பார்த்தேன். எதாவது வேலை இருக்குமானு கேட்டேன்.
சில நிமிடங்களுக்கு முன்பு தான் கண் விழித்தார் கநாசு. கடுப்பில் கொந்தளித்து முகத்தில் விழுந்த தலைமுடியை கையால் கோரி விட்டு கத்த ஆரம்பித்தார்.
வீட்டுல இருக்க கடுப்பா இருந்த சாவ வேண்டியது தானே. இன்னமும் பணம் ,பணம்னு தான் ஏன் அலையற? ஓய்வு ஊதியம் வருது.நல்ல செலவு பண்ணிட்டு வாழ வேண்டியது தானே. இல்லனா பிள்ளைங்களுக்கு இலவசமா படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டியதுதானே.
அன்பு.அந்த ஆள துரத்தி விடு. இவன்லாம் எதுக்கு ஆசிரியர் ஆனான்னு தெரியல. இன்னும் மனுசனுங்க பணம் சம்பாதிக்குற மெசினாக மட்டுமே இருக்கானுங்க.
அசோகமித்திரன் அந்த ஆள பார்த்து இரண்டு பல்லு தெரியும் மாதிரி மெளனமாக சிரித்தார்
இந்தாளுக்கு கோபமே வராதா என்ன ஜென்மமோ டால் ஸ்டாய் பொலம்ப…
வேற எங்கையாவது வேலை கேட்டு பாருங்க சார் அன்பு சொல்லி அனுப்ப முயற்சித்தான்.
போகும் போது அறிவுரை ஒன்றை கூறி அருகாமைல இருக்குற காலேஜ் போயி மாதத்தில் ஒருமுறை ஸ்டால் போட்டா மாணவர்களும் புத்தகத்தை வாங்குவாங்க. புத்தகம் படிக்க ஆர்வம் ஏற்படும்ல. சிரித்து கையில் வணக்கம் சொல்லி வழி அனுப்பினான் அன்பு.
எடு செருப்ப…மீண்டும் தலைமுடியை கோரி விட்டு கநாசு கொந்தளித்தார். புத்தக ராக்குகள் கீழே விழுந்துவிடும் அளவுக்கு ஆட்டம் காட்டியது. விடுயா விடுயா டால்ஸ்டாய் சமாதனம் செய்தார்.
இது போன்ற காமெடிகளும் அப்ப அப்ப நிகழும்.
ஒரே மாதிரியான வேலை சலிப்பை ஏற்படுத்தியது . ஆயிரம் இருந்தாலும் கழுத்தில் சங்கிலி கட்டப்பட்ட நாயாக எத்தனை காலத்திற்குதான் இருக்க முடியும்,ஒருநாள் கட்டப்பட்ட சங்கிலியை அறுத்துவிட்டு வெளியே வர எண்ணியிருந்தான்.
எ வி எம் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக இருந்த வேலையை விட்டு விட முடிவு செய்த போது குடும்பத்தில உள்ளவர்கள் உனக்கு கிறுக்கு எதும் பிடிச்சியிருக்கா?
மெண்டல் ஆகிட்டியா? குழந்தையோட எதிர்காலத்தப் பற்றி யோசிச்சியா? தினதோறும் பல கேள்விகள் நெஞ்சில் எறியப்படும் அம்புகளாக வந்த வண்ணம் அன்புக்கு இருந்தது.
அன்புவை அவன் மனைவி தனியாக ரூமுக்கு அழைத்து ஏக்கத்துடன் அவனை பார்த்து சொன்னாள். உனக்கு பிடிச்ச வேலைய செய்.இவங்க சொல்லுறத நினைச்சி மனச கொழப்பிகாதீங்க.
சில நாட்களில் வேலையை விடுவதற்கான ராஜினாமா கடிதத்தை கம்யூட்டரில் டைப் செய்து நிறுவனத்துக்கு மெயில் அனுப்பினான்.
ரோட்டில் வருபவர் போகுபவர் நண்பர்கள் உறவினர்கள் யாரை பார்த்தாலும் வேலையை விட்டதை பற்றிய பேச்சுகளாவே இருந்தது. தன் மீதும் தன் வாழ்க்கை மீது அதீத பற்று இருப்பதை வெளிக்காட்ட இந்த கேள்விகளும், அறிவுரைகளும் கேட்கப்படுவதாக நினைத்தான்.
எல்லாருக்கும் தன் வசதிகளை சுருக்கிக் கொள்ள கஷ்டமாகதானே இருக்கும். அடுத்து என்ன செய்ய போகிறான் என்ற பதபதைப்பு தினமும் எதிர் பார்த்து இருந்தனர். அடுத்த அடுத்த மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. ஒரு ஆள் வருமானத்தை நம்பி இருந்த குடும்பம் என்பதால் தேவைகளை சுருக்கி கொள்ளவும் கஷ்டப்பட்டார்கள். சில நேரங்களில் தவறாக முடிவு எடுத்து விட்டமோ என்று உணர்த்தும் அளவுக்கு அவர்களின் நடவடிக்கைகளும் இருந்தன.
அடுத்தகட்ட நகர்வை பற்றிக் தீவிரமாக ஆராய்ந்தான். இரவும் பகலும் தூங்காமல் சிந்தனைகள் பயணித்துக் கொண்டுயிருந்தது. அதே சமயம் அவனுடைய சேமிப்பும் அன்றாட செலவுக்கு கரைய தொடங்கியது. விரைவில் தொழில் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தான்.
இறுதியாக ஆராய்ந்து நம் ஊரில் தரமான பெரிய நகரங்களில் உள்ளது போல புக் ஷாப் ஒன்றை தொடங்குவதற்கான முயற்சிகளை ஆராய்ந்து இடத்தை தேர்ந்தெடுத்து தனித்துவமான அமைப்பில் புக் ஷாப்பை திறந்தான்.
இதுவரை பதைபதைப்புடன் இருந்தவர்களுக்கு மேலும் நெஞ்சை வெடிப்பது போல தோன்றியது .இதில் என்ன வருமானம் வர போகிறது, அம்மா தலையில் அடித்து சபித்துக் கொண்டாள். யானை தேய்ந்து கட்ட எறும்பு ஆன கதையாயிருக்கு அப்பா சலித்து கொட்டினார்.
இன்று காலையில் நடந்த வாக்கு வாதம் நினைத்து அவன் மனம் அமைதி ஆனது. எப்பொழுதும் அவனுக்குள் இயல்பாக தோன்றும் அவள் என் மீது காதல் செலுத்தும் அளவிற்கு என்னால் செலுத்த முடியவில்லையே என்று, திருமணத்திற்கு முன்பு காதல் செய்த காலத்தில் ஒருநாள் இரவு ஃபோனில் பனிரெண்டு வரை பேசிக்கொண்டிருந்த போது கடுமையான சண்டையில் முடிந்தது.
இப்ப யோசித்தாலும் அவனுக்கு பெரிய காரணம் ஒன்றும் இல்லை.
இத்தோடு சனியன் ஒழிந்தது என்று நினைத்தேன்.வழக்கம் போல 1 சிப்ட் என்பதால் ஐந்து முப்பது மணிக்கு கிளம்பி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நிறுவனத்திற்கு சென்றுக் கொண்டுயிருந்தான். சூரியன் பிரசவிக்க காத்துக்கொண்டுயிருக்கும் முழு பகலும் இல்லாத இருளும் இல்லாத காலையில் அவள் ஊரில் முதல் பேருந்தை பிடித்து வந்திருந்தாள் .இரவு முழுவதும் அழுது அழுது தூங்காமல் முகம் வீங்கி இரவு அணிந்த அதே சுடிதாரில் முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு ஐந்து மணிக்கெலாம் அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் வாசலில் காத்துக்கொண்டிருந்தாள்.
அவளை பார்த்த அதிர்ச்சியில் இதயத்தின் துடிப்பு இவனுக்கு அதிகரித்தது. அவளின் அருகில் சென்று சமாதானப்படுத்த முயற்சித்தான்.இரவு பணிகள் முடிந்து பணியாளர்கள் வெளியே வருவதும் பணியாளர்கள் உள்ளே சொல்லுவதுமாக பார்த்தும் பார்க்காதவாறு சென்றுக் கொண்டிருந்தனர். வார்த்தைகள் எதும் பேசாமல் பெரிய துளிகளாய் அவள் கண்ணீரை வடித்தாள்.
வீட்டை விட்டு ஓடி வந்துடாளா? சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.
அன்று வேலைக்கு செல்லாமல் அவளை சமாதானம் செய்து விட்டு, பஸ்ஸில் ஏற்றி அவளை ஊரின் எல்லையில் விட்டுவிட்டு வந்துவிட முடிவு செய்தான்.
ஆய் அப்பனுக்கு விஷயம் தெரிந்து இழிவான சொற்களை சொல்லியும் அடித்தாக சொன்னாள். எனக்கு அதலாம் பெரிய பொருட்டு இல்ல. நீதான் எனக்கு முக்கியம் என்று சொன்னாள்
தொழிற்சாலைகளின் சத்தங்களில் மெசினோடு உறவாடி வறண்ட அவனுக்கு அவளின் பரிசுத்த அன்பால் சில நிமிடங்கள் அவள் முன் ஐஸ்கட்டியாக உருகி போனான்.
கடைக்குள் எழுத்தாளர்கள் வழக்கம் போல விவாதிக்க தொடங்கி விடுவார்கள் .
இப்ப உள்ள படைப்புகள் எல்லாம் வாசகனுக்காக எழுதப்படுகிறது அப்பொழுது எழுதப்பட்ட படைப்புகள் படைப்புகளுக்காக எழுதப்பட்டது என்று டால்ஸ்டாய் சொல்லிக் கொண்டிருந்தார்…
எதோ சிந்தனையில் இருந்த கநாசு ஒரு சம்பவத்தை பற்றி பேச ஆரம்பித்தார். அனைவரும் கூர்ந்து கேட்க ஆரம்பித்தனர்.
ஒரு குழந்தையும் அப்பாவும் பக்கதுல இருக்குற பேங்கு வந்தாங்க அந்த குழந்தை எதேச்சையாக கடைக்குள்ளே ஓடி வந்து அசோகமித்ரனிடம் வந்துயிருந்துச்சி.
வாய நல்ல பொளந்து அப்பதான் அசோகமித்ரனும் சிரிச்சான்.
உடனே அப்பன்காரன் உள்ளே வந்து பதற்றம் ஆகி அத எடுக்காத அங்கேயே வை. அப்பா உனக்கு போன்ல கேம் வச்சி தாரேன்னு சொல்லி கையை பிடிச்சி இழுத்துட்டு கொண்டு தர தரனு இழுத்துட்டு போயிட்டான்.
குழந்தையின் கண்ணீர் தரையில் விழுந்து அவளின் வருகையை பதிவு செய்தது.
இதை கேட்ட எழுத்தாளர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
மாலை வெயில் சூரியன் ஆரஞ்சு நிறத்தில் பூமியை சூழ்ந்திருந்த போது பிரசவவலியில் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டோம்.
பதட்டத்தில் தகவல் சொல்ல மறந்துட்டோம் என்று போனில் அன்புக்கு தகவல் வந்தது. கடையை மூடிவிட்டு,வேகமாக குழந்தையை பார்க்க மருத்துவமனைக்குள் சென்றான். பெண் குழந்தை. குழந்தைகளை பார்க்கும் போது தானும் குழந்தையாகவே மாறிவிடுவதாக எண்ணினான்.
மீன் போன்ற கண்களால் கால்களை உதைத்துக் கொண்டு கைவிரல்களை மடக்கி வாயில் வைத்து புது உலகிற்கு வந்த உற்சாகத்தை வெளிப்படுத்திக் கொண்டுயிருந்தது. அருகில் சென்று ஆள்காட்டி விரலை குழந்தையின் உள்ளங்கையில் தொட்டான். இறுக்க மூடிக் கண்களை சிமிட்டாமல் சில வினாடிகள் பார்த்தது.
பெரிய பொண்ணு அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள். என் தங்ககுட்டி அப்பா வந்துருக்காரு பாரு…
மனைவியின் அருகில் அமர்ந்தான். நீல நிற தலையணையில் அவளின் கண்ணீர் சீனாவின் வரைப்பட வடிவில் விரிந்து இருந்தது.
குழந்தை பசிக்கு அழ தொடங்கியது. கண்களை துடைத்துக் கொண்டு மார்பை திறந்து பால் சுட்டி, சமாதானம் படுத்தினாள். குழந்தை அழுகை சத்தம் மெல்ல குறைந்து தூங்க ஆரம்பித்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.

Best wishes TG