இடைவெளி
மிகச் சரியான இடைவெளியில்
நாங்களிருவரும் அமைக்கப்பட்டிருக்கிறோம்.
ஒரு நேரம்
நடுவில் குருவி ஒன்று சிறகடித்துச் சென்றது.
சிலநேரம் சிலபல மரங்கள் நின்றிருக்கும்.
நெரிசல்களில் மனிதர்களின் கூட்டம் மண்டியிருக்கிறது.
ஓடைகளும் சாலைகளும் அலைகளும் மலைகளும்
சமயத்தில்
நாங்களும்.
முந்தையநாள் பூனை ஒன்று
கடந்து போனது.
இல்லாத
அதிசயமாய் நேற்று இசைக்கு வழிவிட்டோம்..
அதனை தொடர்ந்து வந்த
வானம்
அமர்ந்துகொண்டு
அசையவேயில்லை
சிறகுலைப்பு

புறாவின் குறுகுதல் அடுக்ககத்து சன்னல்களை இன்னும் இறுக்குகிறது.
நெருக்கமாகவும் தனிமையாகவும்
அனைவரும் உலவுகிறார்கள்.
பாதை நீண்டு நீண்டு
தொலைக்காட்சி பெட்டியில்
சென்று சேர்கிறது.
ஒருத்தி வண்ண மணிகளின் பாதை ஒன்றை கோர்த்து கோர்த்து
சேர்க்கிறாள்.
வடாம் துணியை விரித்து விரித்து வெயிலின் பாதையில் ஏறி போகிறாள்
ஒரு கிழவி.
பூமரத்தின் குயில் குரலுக்கும்
இவளுக்குமான பாதையில்
ஒரு விமானம்
ஏறி சென்று அழிக்கிறது..
விமான இறகுகளில் இவளும்
குயிலுமாய்
ஊர் சுற்றுகிறார்கள்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

சிறப்பு இருகவிதைகளும் பல தளங்களின் இணைப்பை ஞாபகப்படுத்தியது. நன்றி.