சுவர் கிறுக்கல்கள்

படுக்கையறை சுவற்றில்
குறுக்கும் நெடுக்குமாக
தான் வரைந்த
கலர் கலர் கோடுகளுக்குள்
வீட்டு மாடியில் ஆட்டம் போட்ட சூரியனையும்
டிவியில் வெடித்து சிதறிய எரிமலையையும்
கண்டு சிரித்தது, குழந்தை!
‘தோசையம்மா தோசை’யின்
தோசை பாப்பாவை
சுவற்றில் கோணலான
வட்டமாக இட்டது, குழந்தை!
எப்படி யோசித்தாலும்
மனதை விட்டகலாத
Z ஃபார் ஜீப்ராவை
பெரியதும் சிறியதுமாய்
அடுக்கடுக்காய் கோடுகளிட்டு
தோசைப்பாப்பாவுக்கு பக்கத்தில்
நடமாட விட்டது, குழந்தை!
அதற்குள்..
எரிமலை முச்சூடும் வெடித்து சிதறிவிட
‘ப்பூ ப்பூ’ என்று நெருப்பை ஊதியபடியே
ஓடிப்போய் கண்ணாடியிலிருந்த
அம்மாவின் ஸ்டிக்கர்பொட்டுக்களை
எரிமலைக்கோடுகளுக்கு மேலிட்டு
காட்டுப்பூக்களாக்கியது, குழந்தை!
இல்லாது போன எரிமலையை
கேலி செய்த சூரியனை
பாதியில் வெட்டி
தோசைப்பாப்பாவிடம் கொடுத்து
அடுப்பில் சுட்டது, குழந்தை!
தோசை வாசனை பிடித்துப்போக
ஆசையாய் இன்னொன்று கேட்ட
குழந்தைக்கு பூசை கொடுக்க
வந்த தோசையம்மாவிடமிருந்து
ஜீப்ராவில் ஏறி
காட்டுப்பூக்கள் வழி
அவசரகதியில் ஹாலுக்கு
தப்பிச்சென்ற குழந்தை,
இந்தமுறை
ஒரு பெரியக்கோடு போட்டு
குச்சிக்குச்சியாய் கைக்கால்களிட்டு
தானே அம்மாவாகி
“அம்மாவுக்கு நாலு .. இப்போ என்ன பண்ணுவீங்க”
என்றபடி
தோசை சூரியனை
அள்ளி சாப்பிட்டு
ஆர்ப்பரித்தது குழந்தை.
முப்பொழுதும் நீ
முதல் முதல் கலர் பலூனைப் பார்த்த
சிறு குழந்தையின் கண்களைப் போல்
விரிகிறது நம் கூடல் பொழுதுகள்
மீசை முடியில் இதழ் மாட்டி
உயிர்நாடி சில்லிட்ட வேளையில்
தப்பித்து பிழைத்தது தனி கதை
அடிக்கடி இமை மூடிக்கொள்வதால்
சரிவர பார்க்கக்கிடைப்பதில்லை என
கோபித்துக்கொள்கின்றன கண்கள்
கடிகாரமில்லாத காலமொன்றில்
நாம் ஓடிப்பிடித்து விளையாடிட
வேர்த்து விறுவிறுத்துப் போகிறது
அறைக்காற்றாடி
தாழிட்ட கதவின் பின்புறம்
நம்மை மறைந்து நின்று பார்ப்பது
நிலவா ?
நாம் என்றோ பாதியில் விட்ட பொழுதா?
‘விடியப்போகிறது’ என்று
நம் ஜன்னல் வழி
வேண்டுமென்றே செங்கதிர் விசிறி
சமிக்ஞை செய்யும் புலர்காலையோடு
இனி எனக்கென்ன பேச்சு?
உணவைப்போலவே
இன்று நாம் மிச்சம் வைத்த
கொஞ்சம் இரவை
நாளை நன்பகலில்
சூடாக்கி பகிர்ந்திட
வழி ஏதும் உண்டா?
விட்டுப்பிடித்து
தட்டிப்பறித்து
சுண்டியிழுத்து
தாங்கியணைத்து
சிறகு விரித்து
நீளும் இக்கணத்தின்
முடிவு தெரியாத பட்சத்தில்
வாரியெடுத்தும் தீராத நம் காதலும்
வார்த்தைத்தொடுத்தும் போதாத
இந்த கவிதையும்
எப்போதும் ஒன்று தானே!
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
