பொற்குகை ரகசியம்- சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பு அனுபவம்

வம்சி பதிப்பக வெளியீட்டில் “பொற்குகை ரகசியம்” சிறுகதை தொகுப்பு வந்துள்ளது. 338 பக்கங்களைக் கொண்டுள்ளது. பதினைந்து  சிறுகதைகளும், மூன்று குறுங்கதைகளும் உள்ளன. இது எழுத்தாளர் ஜெகதீஷ்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும்.

இந்த சிறுகதைத் தொகுப்பு  காலம், செயல், அறிவு, ஆசை, தற்செயல் வழியாக மனித உயிர் கொண்டுள்ள எல்லைகளைக் காட்சிப் படுத்துகின்றது. கூர்மையான கவனிப்புகளால் கட்டப்பட்ட புறக்காட்சிகளும், உரையாடல்களும்  வாசிக்கும் நம்மை வெகுவாகக் கவர்கிறது. வாசிக்கும் வாசகனுக்கும் அவனது வாழ்வின் எல்லைகளை நோக்கிப் பார்க்கச் சொல்கின்றது. இந்தத் தொகுப்பின் கதைக் களங்கள் மாலத்தீவு, அமெரிக்கா, இந்தியா எனப் புவியியலில் உலகெங்கும் விரிகின்றது. ஜெகதீஷ்குமார் அனைத்து நிலங்களையும் தன் விவரிப்புகளில் நன்கு கைப்பற்றியுள்ளார்.

“அசைவும், பெருக்கும்”  கதையில் கதையின் நாயகன் தன் மனமெனும் விலங்கின் வேகத்தினால் தவிக்கின்றான். அறியப்பட்டவற்றிலிருந்து அறியப்படாததை அனுமானிப்பதை நம் மரபு ‘”அருந்ததி தரிசன நியாயம்’ என்று குறிப்பிடப்படுகிறது. தற்செயலாக அவன் சந்திக்கும் அறிஞர் ஒருவர்  ரிஷிகேஷத்தின் கங்கை அன்னையை நோக்கி இட்டுச் செல்கின்றார். அவர் அவன் அறியாத  வாழ்வினை மனதினை, கண் முன்னே தெரியும் கங்கையின் வழியே காணப் பயிற்றுவிக்கின்றார். “யதா இச்சஸி ததா குரு” என்னும் பாதையையும் தருகின்றார்.  அதைப் பெற்றுக் கொள்ளும் கௌதம் தன் முயற்சியால் கங்கையையும், அறிஞர் கொடுத்த பாதையையும் இணைத்துக் கொள்ள துவங்குவதோடு கதை முடிகின்றது. மனதின் விசையால், அசைவாலே அத்தனை செயல்களையும் நாம் செய்கின்றோம். நமக்கான பிரச்சனைகளை அர்த்தப்படுத்துவது, முக்கியப்படுத்துவது, புறம் தள்ளுவது எல்லாம் மனமே. அதன் அசைவினை நோக்கிய கேள்வியை, அதன் எல்லையை நோக்கிய கேள்வியைக் கதை வைக்கின்றது. ரிஷிகேஷத்தின் காட்சிகள் அனைத்தும் படிமங்களாகக் கதையில் விரிகின்றது. 

“அப்பாவின் மேஜை”  கதையில் சண்முகநாதன் தனக்கான இடம் இந்த உலகில் எதுவென காண இயலாது அமைதியற்று இருக்கின்றான். வாழ்ந்து கெட்ட குடும்பத்திலிருந்து வந்தவன். அதன் பின்னர் அவன் அண்ணன், தங்கை எல்லாம் மேல் எழும்பி விட்டார்கள். தனக்கென எதுவும் செய்து கொள்ள முடியாமல் வாழ்வில் நின்று விட்ட சண்முகநாதன் அப்பாவின் மேஜையை இறுக்கப் பிடித்துக் கொண்டுள்ளான். உயிர் தன் செயலால், உலக நடப்புகளின் ஒளியில் தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளலாம், துன்புறுத்திக் கொள்ளலாம், நிலை கொள்ளாமல் ஆடலாம், நின்று அமைதி கொள்ளலாம்.  செயலுக்கு அத்தனை இடம் வாழ்வில் உள்ளது. சண்முகநாதன் உலகினை அணுகுவது அனைத்தும் அவன் அமைதியை நிலை குலைப்பதில் முடிகின்றது. சண்முகநாதனுக்கு அப்பாவின் மேஜையை விற்று பணமாக்கும் வாய்ப்பு வருகின்றது. தற்செயல் வாழ்வில் விளையாடுவதைப் போல வேறு பெரும் அதிசயமில்லை. பணமாக்கும் வாய்ப்பினையும் இழக்கும் சண்முகநாதன் மேஜை படைப்பூக்கத்தால் மரப்பாச்சி ஆவதைக் காண்பதில் அமைதியுறுகின்றான். அப்பாவின் மேஜை அர்த்தப்படுவதில் தன் அகத்தினை அர்த்தப்படுத்திக் கொள்கின்றான். கதை முழுக்க சண்முகநாதனின் பார்வையில் சொல்லப்படுகின்றது. அவனது அக மொழியில் கதை விரிகின்றது. 

“பிறப்பொக்கும்” கதைத் தாய் தனது இரண்டு பிள்ளைகளை வெவ்வேறு விதமாக அணுகுவதைக் காட்சிப்படுத்துகின்றது. கால் முடியாமல் போனாலும் சொந்தமாகச் சம்பாதிக்கத் தெரிந்து குடும்பத்தினைப் பாதுகாக்கும் பிள்ளையொன்று, தன்னியல்பால் எதிலும் தங்காது , சம்பாதிக்க இயலாமல் குடும்பத்தினை அல்லல் கொள்ளச் செய்யும் பிள்ளையொன்று என இரண்டு பாத்திரங்கள் உள்ளது. கதை விவரிப்பு ஒரு சிறுவனின் பார்வையில் கதாசிரியர் அமைத்துள்ளார். அதனால் கதை சம்பங்களில் அந்த வயதுக்கும், அளவுக்கும் உட்பட்ட காட்சிப்படுத்தல்கள் வைத்துள்ளார், வாசகர்கள் சம்பவங்களைப் பெரியவர்கள் பார்வையில் தானே விரித்துக் கொள்ளவும் இடம் வைத்துள்ளார். அம்மாவின் கவனம் கட்டுக்கடங்காத பிள்ளையின் மீது அதிகம் உள்ளது. தானே உழைத்து சொந்தமாக நிற்கும் பிள்ளையிடத்தும் நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை அதிகம் கொண்ட பிள்ளை, அது போதாமல் கவனம் கேட்டால் என்ன நிகழும் எனக் கதையில் கேள்வி உள்ளது. 

“ஊனுடல்”,”நீலத்தழல்” இரண்டு கதைகளும் மாலத்தீவில் நிகழ்கின்றன. ஊனுடல் கதையின் கதைக்களம் புதியது. முழுக்க சுற்றுலா பொருளாதாரத்தினை நம்பியுள்ள ஒரு சூழலில் மானுட வாழ்வு அமைவதை காட்சி படுத்துகின்றது. சுற்றுலாத் தொழிலின் பலபகுதிகளை அழகாகச் சொல்லியுள்ளது. இந்திய சோசியலிச பொருளாதாரத்தில் பிழைக்க வழியின்றிப் பிழைப்பு தேடி வேறு நிலங்களுக்குச் செல்லும் தொழிலாளி ஒருவரின் பார்வையில் கதை உள்ளது. முதிரா இளமை, அந்த வயதுக்குரிய ஈர்ப்புகள் பக்குவப்படும் முன்னரே சம்பாதிக்கும் உலகில் புகுந்தாகி விட்ட சங்கமேஸ்வரன் இந்தக் கதையின் கதாநாயகன். மாலத்தீவினைச் சேர்ந்த ஐனியும் அந்தக் கதையில் வருகின்றார்.  சங்கமேஸ்வரன் பார்வையில் கதை உள்ளது. 

நீலத்தழல் கதையில் பிரசாத் மாலத்தீவில் ஆசிரியர் பணி புரிகின்றான். தீவு வாழ்க்கையின் எல்லைகளை, இன்பங்களைக் கதை காட்டுகின்றது. சலிப்புறும் மனதினால் அவதியுறும் பிரசாத்துக்கு நீலத்தழல் அறியும் சாகசம் நிறைவை கொடுத்திருக்குமா இல்லையா என வாசகனின் ஊகத்துக்குக் கதை விட்டு விடுகின்றது.  கதை குவாட்டாரிட்டிக் ஈக்குவேஷனின் டிஸ்கிரிமினண்டில் துவங்குகின்றது. அதை வைத்து ஈக்குவேஷனுக்கு ஒரு தீர்வா, ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வா , தீர்வே இல்லையா எனச் சொல்லலாம். கதையில் வாசகனுக்கு பிரசாத்தின் சலிப்புக்கு நீலத்தழல் தீர்வானதா இல்லையா என யோசனை எழும்பலாம்.

“பேராசிரியரின் கிளி”, “கர்மா” ஆகிய இரண்டு கதைகளும் அமெரிக்க வாழ்வின் மீதானவை. பேராசிரியரின் கிளியில் கிளி ஒரு படிமமாக நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ராமச்சந்திரன் என்ற பேராசிரியருக்கும் அவரது மாணவியான ஸ்ருதிக்கும் உள்ள உறவுச் சிக்கல்களைக் கதை காட்டுகின்றது. பேராசிரியர் என்னும் நிலையிலிருந்து மீறும் ராமச்சந்திரனும், அவரது குற்றத்தினைத் தடுத்து, மன்னிக்கும் ஸ்ருதிக்கும் உள்ள உறவு கதையில் உள்ளது. குற்ற உணர்வினைக் கையாள இயலாத பேராசிரியரும், மன்னிப்பைக் கடக்க இயலாத ஸ்ருதியும் தடுமாறுவது வருகின்றது. கடந்து செல்ல இயலாது காலத்தின் ஒரு நிகழ்வில் சிக்கிக் கொள்ளும் இடம் கதையில் உள்ளது. பேராசிரியரின் கிளியாக அவரது மனசாட்சியும் இருக்கலாம், பேராசிரியரின் கிளியாக ஸ்ருதியும் தன்னை காணலாம். 

“பொற்குகை ரகசியம்” கதை பாலு என்னும் சிறுவனின் பார்வையில் உள்ளது. கதைக்குள் பாத்திரங்கள் நமக்குப் பிறப்பொக்கும் கதையைக் கூட நினைவுபடுத்தலாம். கற்பனைகள் மானுட வாழ்வின் செயல்களுக்குக் கொடுக்கும் அர்த்தம் அதை முன்னோக்கிக் கொண்டு சென்றே இருக்கின்றது. கதையில் சிறுவன் பாலு, பாட்டி, பரிசுச்சீட்டு சீட்டு விற்கும் சித்தப்பா எல்லாருக்கும் பொற்குகை ரகசியமாக கற்பனை உண்டு. ஒரு விதத்தில் அதுதான் அன்றாடம் கொடுக்கும் சலிப்பினை மீறி வாழ்வினை வசப்படுத்துகின்றது. கற்பனையை மட்டுமாக வாழ்வாகக் கொள்ளக் கூடிய “கனவுகளின் உபாசகன்” கதையும் உள்ளது. அதன் பாத்திரம் கற்பனைக்கும்,நனவுக்கும் ஆன இடைவெளி இல்லாது வாழ்கின்றது. மரபில் உள்ள பட்டாம்பூச்சி ராஜாவாக கனவு கண்டு கொண்டு இருக்கின்றதா, ராஜா பட்டாம்பூச்சியாகக் கனவு கொண்டுள்ளாரா என்ற கேள்வியைக் கனவின் உபாசகன் நினைவுபடுத்தியது.

கதாசிரியரின் பல வரிகள் ரசிக்கும் படி உள்ளது. “ கொமாரப்பாளையத்தில் சங்கமேஸ்வரன் என்னும் பெயர் உள்ளவர்களை தேடுவது,  மாலத்தீவில் டூனா மீனை தேடுவது போலத்தான்”. “எந்த நேரமும் உடைந்து நொறுங்கி விழக் கூடிய கண்ணாடி பாத்திரத்தை போல நடமாடிக் கொண்டிருந்தாள் அம்மா”. “அந்த எழுத்துக்களை கவ்விக் கொண்டு ஒரு சிவப்புக் கழுகு இறகுகளை விரித்து மேலெழுந்துக் கொண்டிருந்தது”. “நீட்டலும், மழித்தலும் வேண்டா என்ற முதுமொழியை பின்பற்றும் வண்ணம் முள்ளாய் பரவிய  தாடியும், மீசையும் வைத்திருந்தார்”. “விருந்தினர் தரும் எதையும் ஏற்றுக் கொள்ளவே மரபு வலியுறுத்துகின்றது. குப்பைத் தொட்டிக்குள் குப்பையை வீசுகிற மாதிரி உங்கள் திசையில் வரும் எல்லாவற்றையும் தொண்டைக்குள் வீசி விட வேண்டியதுதான்” .  இந்த வரிகளில் ஓடும் இனிமை கதையை மேலும் சுவையாக்குகின்றது.

ஜெகதீஷ்குமாரின் கதைத் தொகுப்பு நல்ல விவரணைகள், சுவாரஸ்யமான காட்சிப்படுத்தல்கள், கவனிக்க வேண்டிய உரையாடல்கள் என அத்தனையையும் கொண்டுள்ளது. முதல் தொகுப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது. வாசிக்கப்பட வேண்டியது.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.