
தாயின் தாலாட்டுக்குப் பலவிதமாகப் பொருள் கூறப்படுகிறது. கர்ப்பவாசத்தை விட்டு வெளிவந்த குழந்தைக்கு தாயின் தாலாட்டு அவளின் அருகாமையை, அது தரும் பாதுகாப்பை உணர்த்துகிறது. குழந்தையைத் தூங்க வைக்கும் தூளி (ஏணை) கூடத் தாயின் பழம் புடைவையினாலேயே கட்டப்படும். இதுவும் அவளின் அருகாமையை, கதகதப்பை குழந்தை உணர வழிவகுக்கிறது எனலாம். இவையனத்தும் தாய் – சேய் உளவியலை அடிப்படையாகக் கொண்டவை.
தாயும் குழந்தைக்கு ‘ஆராரோ’ பாடும்போது, தன் கனவுகளை எல்லாம் சொற்களாக்கி, பாடல் வரிகளாக்கி அக்குழந்தைக்குப் பாடிக் கண் வளர்த்துகிறாள்.
‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே,’ எனும் பொருள்பொதிந்த வரிகளை நாம் திரையிசைப் பாடலாகக் கேட்டிருக்கிறோம். தாயின் வளர்ப்பும் அவள் கூறும் செய்திகளும்தான் ஒரு நல்ல மனிதன் உருவாவதற்கு அடிப்படை என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. ஒரு நல்ல, பொறுப்பான மனிதனை உருவாக்கி சமுதாயத்தில் உலவவிடுவதில் அவளுடைய பங்கு மகத்தானது. மகாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் தாயைவிட உயர்ந்த ஆசான் கிடையாது எனக்கூறப்பட்டுள்ளது.
தன் குழந்தைகளுக்குத் ‘தான் யார்?’ எனத் தன்னை உணர்ந்து கொள்ளுமாறு வளர்த்தவள் மதாலஸா எனும் உயர்ந்த ஞானம் படைத்த தாய். தாலாட்டு சிறு குழந்தைகளுக்காகப் பாடப்பாடுவது. இதில் என்ன தன்னை உணர்வது எனும் பெரிய தத்துவச் சொற்களெல்லாம் என்று கேட்கிறீர்களா?
மதாலஸா ஒரு புராணகாலத்துத் தாய் – மிகுந்த அழகி; அறிவாளியும் கூட. மார்க்கண்டேய புராணத்தில் மதாலஸா எனும் தாயைப் பற்றி மிக உயர்வாகக் கூறப்பட்டுள்ளது.
மதாலஸா எனும் பெண்ணரசி கந்தர்வர்களுடைய அரசனான ஸ்வேதகேதுவின் மகள். ப்ரமிக்க வைக்கும் பேரழகி, அழகுக்கேற்ற குணவதி, ஆன்மீகவாதி. பாதாளகேது எனும் அரக்கன் ஒருநாள் அவளை அவளுடைய அரண்மனைத் தோட்டத்தினின்று கவர்ந்து செல்கிறான். ரிதுத்வஜன் எனும் புகழ்வாய்ந்த ரகுவம்சத்து அரசன் அவளைக் காப்பாற்ற விரைகிறான். அவளை விடுவித்த அவனிடம் அவள் காதல் கொள்கிறாள். திருமணமும் நடைபெறுகிறது.
கால ஓட்டத்தில் ஸ்வேதகேது மரணமடைய, ரிதுத்வஜன் அரியணை ஏறுகிறான். மதாலஸாவிற்கு ஒரு மகன் பிறக்கிறான். அவனுக்கு விக்ராந்த் எனப் பெயரிட்டு வளர்க்கின்றனர். இந்தப் பெயர் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தாலும், மதாலஸாவிற்கு நகைப்பையே உண்டாக்குகிறது. அரசன் அவள் ஏன் சிரிக்கிறாள் என்று கேட்கிறான்.
அவள் சொல்வாள்: “அரசே, அழிவற்ற, பிறப்பற்ற ஆத்மாவிற்கு பெயர் சூட்டுவது ஒரு வேடிக்கைத்தனமான செயலாக அல்லவா இருக்கிறது? விக்ராந்த் என்றால் வென்று வாகை சூடுபவன் எனப்பொருள். எங்கும் நிறைந்துள்ளதும் எதனையும் கடந்து நிற்பதும் ஆத்மாவே. அது எப்படி முன்சென்று எதனை வெல்லும்? இதுவே எனக்குச் சிரிப்பை உண்டாக்குகிறது,” என்றாள்.
பிறந்த குழந்தை அப்போது அழத் தொடங்க, அவள் அதற்கு ஒரு தாலாட்டைப் பாடுகிறாள். உலகத்துத் தாய்மார்கள் பாடும் எளிய தாலாட்டல்ல அது. தத்துவ வேதாந்த உண்மைகள் பொதிந்த பாடல் அது. தன்னையே அறிய, உணர வைக்கும் தாலாட்டு.
शुद्धोऽसि रे तात न तेऽस्ति नाम कृतं हि तत्कल्पनयाधुनैव
पञ्चात्मकं देहमिदं न तेऽस्ति त्वं वास्य रे रोदिषि कस्य हेतोःசுத்தோசி ரே தாத ந தேஸ்தி நாம க்ருதம் ஹி தத்கல்ப நயாதுனைவ:I
பஞ்சாத்மகம் தேஹமிதம் ந தேஸ்தி த்வம் வாஸ்ய ரே ரோதிஸி கஸ்யஹேதோஹ:II
குழந்தாய்! நீ தூய்மையானவன். ஒன்றுடனும் சம்பந்தப் பட்டவனல்ல. இந்த உன் பெயர் இப்போது உனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உடல் ஐம்பூதங்களால் அமைந்தது; அதுவும் உன்னுடையதல்ல. இவ்வுலகில் நீ ஒரு பிரயாணி மட்டுமே. (உடல் எனும் அமைப்பில் ஆன்மாவைத் தாங்கியவன்) பின் எதற்காக அழுகிறாய்?
(மார்க்கண்டேய புராணம்- 23.11)
तातेति किञ्चित् तनयेति किञ्चिद्दवेति किञ्चिद्दयितेति किञ्चित्:I
ममेति किञ्चिन्नममेति किञ्चित् त्वं भूतसङ्घं बहुधा मा लपेथा:IIததேதி கிஞ்சித் தனயேதி கிஞ்சித்தவேதி கிஞ்சித்தயிதேதி கிஞ்சித்
மமேதி கிஞ்சிந்நமமேதி கிஞ்சித் த்வம் பூதசங்கம் பஹுதா மா லபேத
சிலநேரங்களில் ஒருவன் தந்தை என்றோ, மகன் என்றோ, கணவன் என்றோ, காதலன் என்றோ அறியப்படுவான். சில சமயங்களின் உறவினன் எனக் கொண்டாடப்படுவான்; மற்ற சமயம் யாரோ ஒருவன் என அறியப்படுவான். உடலின் தவறான அறிமுகங்களால் இவை ஏற்படுகின்றன, இத்தகைய மாயையில் நீ மூழ்கி அவஸ்தைப்படாதே!
(மார்க்கண்டேய புராணம்- 23.15)
தனது தாயின் இத்தகைய ஞானம், தத்துவம் நிறைந்த தாலாட்டினைக் கேட்டபடியே விக்ரந்த் வளர்ந்து இளைஞனாகிறான். உலகாயதமான செய்கைகள், பொருட்களிலிருந்து ஒருவிதமான பற்றற்ற மனப்பான்மையும், உயர்வான குறிக்கோள்கள் கொண்ட வாழ்க்கையும் அவனுடன் வளர்கின்றன. குடும்ப வாழ்க்கை அவனை ஈர்க்கவில்லை. மதாலஸாவிற்கு அடுத்தடுத்து இரு மகன்கள் பிறக்கின்றனர். அவர்களுக்கு சுபாஹு, சத்ருமர்தன என பெயரிடப்படும்போது மீண்டும் மதாலஸா சிரிக்கிறாள். அவர்களையும் மூத்த மகனைப் போலவே வளர்க்கிறாள். வளர்ந்த மகன்கள் மூவரும் வீடுபேற்றை (முக்தியை) அடையக் காட்டை நோக்கிப் பயணிக்கின்றனர்.
நான்காவதாக ஒரு மகன் பிறந்தபோது ரிதத்வஜன் அக்குழந்தைக்குப் பெயரிடுமாறு மதாலஸாவிடம் கூறுகிறான். அவள் அக்குழந்தைக்கு ‘அலார்கா’ எனப்பெயர் சூட்டுகிறாள். பின் அக்குழந்தைக்கு ஞானத்தை அளிக்கும் விஷயங்களைப் போதிக்க முற்படுகையில் அரசன் அவளிடம் வேண்டுகிறான்: “அவன் இந்த உலகிற்கும் பயன்படும் விதத்தில் அவனை வளர்ப்பாய். மனித சமுதாயத்திற்குத் தொண்டு செய்தபின்பு அவன் முக்தியை நாடட்டும்,” என்கிறான். அவளும் குழந்தையிடம், “மகனே, என் அரசரின் விருப்பிற்கேற்ப நீ வளர்வாயாக! இந்த உலக நன்மைக்காகச் செய்யும் செயல்களில் நீ வெற்றிபெற வேண்டும். நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். இந்த உலகை நீண்ட காலம் ஆட்சி செய்வாயாக. அமைதியும், சுபிட்சமும் நிலவச் செய்வாய், பின் மோட்சத்தை அடையக் கடவாய்,” என்கிறாள்.
सदा मुरारिं हृदि चिन्तयेथा तद्ध्यानतो त्वं षडरीञ्जयेथाः।
मायाप्रबोधेन निवारयेथा ह्यनित्यतामेव विचिन्तयेथाः॥சதா முராரிம் ஹ்ருதி சிந்தயேதா தத்யனாதோ த்வம் சதாரிண்ஜயேதஹ்
மாயாப்ரபோதேன நிவாரயேத ஹ்யானித்யாதமேவ விசிந்தயேதாஹ்
முராரியை (க்ருஷ்ண பகவான்) எப்போதும் சிந்தனை செய், ஏனெனில் நீ மானிடனின் எதிரிகளான அறுவரை (காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாற்சர்யம்) வெல்ல வேண்டும். மாயையின் பிடியினின்று உனது பகுத்துணரும் தன்மையினால் விடுபட வேண்டும். மனித வாழ்க்கையின் அநித்யத்தை எப்போதும் நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும்.
(மார்க்கண்டேய புராணம்- 23.58)
बालो मनो नन्दय बान्धवानां गुरोस्तथाज्ञाकरणैः कुमार।:I
स्त्रीणां युवा सत्कुलभूषणानां वृद्धो वने वत्स वनेचराणाम्॥:IIபாலோ மனோ நந்தய பாந்தவானாம் குரோஸ்ததாக்ஞகரணைஹி குமார
ஸ்த்ரீணாம் யுவா ஸத்குலபூஷனானாம் வ்ரத்தோ வனே வத்ஸ வனேசராணாம்.
குழந்தைப்பருவத்தில் உறவினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவாய்; இளம் பிராயத்தில் கீழ்ப்படிதலினால் உன் பெற்றோர்களைக் களிப்பில் ஆழ்த்துவாய். இளமையில் உயர்குடிப் பெண்களை மகிழ்விப்பாய். பின்பு வனம் சென்று, உன் வாழ்நாளின் இறுதிவரை தவம் செய்பவர்களுக்கு சேவைசெய்வாய்.
(மார்க்கண்டேய புராணம்- 23.61)
அலார்கா ரகுவம்சத்தின் ஒப்பற்ற ஒரு அரசனாக இருந்தான். அனைத்தினும் மேலாக வாய்மையை மதித்தான். குருடனான ஒரு சிறுவனுக்கு அவன் எதைக்கேட்டாலும் தருவேன் என்றுகூறித் தன் கண்ணையே பெயர்த்தெடுத்துக் கொடுத்தான் என வால்மீகி ராமாயணம் கூறுகிறது. மதாலஸா ஒரு அருமையான ஒப்பற்ற மகனைப் பெற்று வளர்த்தாள்.
(மார்க்கண்டேய புராணம் இன்னும் பல செய்திகளைக் கூறுகிறது. நாம் இப்போது அவற்றைக் காணப் போவதில்லை).
நான் யார் எனும் உண்மையை அறிந்துகொண்டு விட்டால் அதுவே வாழ்வின் பயன் என உணர்த்துகிறது இந்தத் தாலாட்டு. இதன் அழகான ஒலி வடிவை இந்த யூட்யூப் இணைப்பில் கேட்கலாம்.*
நீ என்பது இந்த உடலில்லை! அது வகிக்கும் உறவல்ல, பதவி அல்ல; அது உன் ஆன்மா மட்டுமே! என்று ‘நான்’ எனும் உலகாயதமான பற்றை ஒழிக்க அறிவுறுத்துகிறது இந்தத் தாலாட்டு. நமது ஸநாதன ஹிந்து தர்மத்தில் ‘நான்,’ ‘எனது,’ என்கின்ற எண்ணங்களை அறவே ஒதுக்கினால்தான் சமுதாயத்திற்குத் தொண்டு செய்ய இயலும் என்கிறார்கள். அதுவே உண்மையும்கூட!
பெரிய மகான்களும் இதனையே வலியுறுத்துகிறார்கள். கீதாஞ்சலியிலிருந்து ஒரு அருமையான உருக்கமான, ரவீந்திரநாத் தாகூருடைய ஒரு கவிதை:
Let only that little be left of me whereby I may name thee my all.
Let only that little be left of my will whereby I may feel thee on every side, and come to thee in everything, and offer to thee my love every moment.
Let only that little be left of me whereby I may never hide thee.
Let only that little of my fetters be left whereby I am bound with thy will, and thy purpose is carried out in my life—and that is the fetter of thy love.எனது ஒரு சிறு பகுதி மட்டுமே எஞ்சியிருக்கட்டும்- நான் உன்னை எனது எல்லாமென்று கூறுவதற்காக.
எனது ஒரு சிறு எண்ணம் மட்டுமே எஞ்சியிருக்கட்டும்- ஏனெனில் நான் உன்னை எல்லா இடங்களிலும் உணர்வதற்காக, உன்னிடம் எல்லாவற்றிற்கும் வருவதற்காக, உனக்கு என் அன்பை எல்லாப் பொழுதுகளிலும் சமர்ப்பிப்பதற்காக.
எனது ஒரு சிறு பகுதி மட்டுமே எஞ்சியிருக்கட்டும்- எனெனில் நான் உன்னை ஒளிக்காமல் இருப்பதற்காக.
எனது தளைகளிலொரு சிறிது மட்டுமே எஞ்சியிருக்கட்டும்; ஏனெனில் நான் உன் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டிருக்கவும், எனது வாழ்வில் உனது செயல்களை நிறைவேற்றவும்- அதுவே எனக்கான உனது அன்பின் விலங்காகும்.
~oOo~
அறிவில் சிறந்த பெரியோர்களால் ‘தன்னை அறிதல்’ என்பதற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதுவே மற்ற தொல்லைகளிலிருந்து விடுபடும் வழி; அமைதியாக வாழும் வழி; இறையன்பில் பூரண சரணாகதியாகும் வழி எனலாம்.
ஆன்மாவானது தன்னை அறிவுடையது என அறிந்தால் செய்கை, வடிவம் இவற்றுடன் தன்னைப் பொருத்திக்கொண்டு மாயையில் அழுந்த வேண்டாம். இதனை அறியாமல், அறியும் அறிவில்லாததனால், இந்தப் பிறவியில் ஆன்மா உழல்கின்றது. செய்கை, உடல் இவற்றுடனான தொடர்பின்றித் தானே எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் ஒளிவடிவு என்பதனை ஞானத்தால் அறிந்துகொண்டபின்பு தன்னை உலகத்தோர் வணங்கும் வடிவாகவே ஆகிவிடுகிறது. மதாலஸாவின் பாடல் கருத்தையே இதுவும் பிரதிபலிக்கின்றது அல்லவா? இக்கருத்துக்குச் சிறந்த உதாரணங்கள் மகா பெரியவர், பகவான் ரமணர் முதலானோர்.
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே
(திருமந்திரம்)
மாணிக்கவாசகர் திருக்கோத்தும்பியில் இக்கருத்தை இன்னும் சிறிது விரிவாக்கித் தன்னையே கேட்டுக்கொள்கிறார்: இறைவன் என்னை ஆட்கொண்டு அருளவில்லையானால், நான் யார், எப்படிப்பட்டவன், என் உள்ளம் என்பது எப்படிப்பட்டது, ஞானம் என்பது என்ன? என்னை (நானே அறிந்து கொள்ளாவிட்டால்) யார் அறிந்து கொள்வார்கள்?
நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்?
(திருவாசகம்- திருக்கோத்தும்பி)
இதில் தன்னைத் தானே அறிய முயற்சிக்க வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. நாம் இந்த உலக வாழ்வில் நமக்கான பட்டங்கள்- கணவன், மனைவி, தந்தை, தாய், மகன், கம்பனி டைரக்டர், பெரிய சினிமா நடிகர், அற்புதமான இசைவாணர், மந்திரி எனப்பலப்பல நிலைகளில் இருக்கிறோம்.இதுவெல்லாம் ஆன்மாவிற்கு அளிக்கப்படும் தற்காலிக உடைகளே. இதனையும் விஞ்சி நம்மை நாம் உணர்ந்து கொண்டால் உலகில் உள்ள சிறுமைகளும், தீமைகளும் அறவே ஒழியும். அதற்கு சிறிதாவது இறையருள் வேண்டும், அறிவு வேண்டும்; அதனைச் சிற்றறிவு, பேரறிவு எனத் தரம் பிரிக்கத் தெரிய வேண்டும். ஞானம் வளர வேண்டும். அகந்தை ஒழிய வேண்டும். இவற்றையெல்லாம் அடைய முயற்சியாவது செய்தல் வேண்டும். இதனால் தான் வள்ளலார் கீழ்க் கண்டவாறு பாடினாரோ என்னமோ?
தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே – ஒரு
தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே.
(வள்ளலார். – வெண்ணிலாக்கண்ணிகள்)
கேட்பதற்கு எளிதாகத் தோன்றுகிறது. தன்னையறிதல் என்பது மகாப்பெரிய செயல். நான் யார் என் உள்ளம் யார் என்று கூட சிந்தித்துப் பார்க்க நேரமின்றி உலகம் ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போதைய குறிக்கோல் பணம், புகழ், பதவி மட்டும்தான். இது அப்பட்டமான சுயநலம். மற்றபடி சிந்திப்பதுகூட முட்டாள்தனம் எனும் ரீதியில் இயங்கிக் கொண்டுள்ளோம். இதில் சிந்தித்துப் பார்க்கக்கூட (introspection) நேரமில்லை. எங்கிருந்து தன்னை அறிவதாம் (self-realisation)? அதனால்தான் மாந்தரை நன்கு எடை போட்டு வைத்திருந்த வள்ளலார் வெண்ணிலாவிடம் இதற்கு ஒரு தந்திரத்தைக் கேட்கிறாரோ?
சித்தர் சிவவாக்கியர் சொல்கிறார். கடவுளைத் தேடித்தேடி ஊர் ஊராக, கோயில் கோயிலாக அலைகிறாயே, அது உன்னுள்ளே கலந்த ஜோதி என உணர்ந்து கொள்ளவில்லையே என எள்ளி நகையாடுகிறார்.
ஓடிஓடி ஓடிஓடி, உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்,
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்,
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
(சித்தர் பாடல்கள், சிவவாக்கியர், 3)தத்வமஸி என்பது என்ன? நானே அது அல்லது அதுவே நான். பிரம்மம் எனப்படுவதில் ஆத்மாவும் இணைந்தது. இதுவே அத்வைதம். இதைப் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமில்லை; ஆனால் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்படுவதுதான் கடினமாகிறது. அவ்வப்போது ‘நான்’ எனும் அகந்தை தலைதூக்குகிறது. இந்த நான் எனும் எண்ணம் கிழங்காக வேரோடிக் கிடக்கிறது. ஆகவே அதனை அகழ்ந்து பெருமுயற்சி செய்துதான் சிதைக்க வேண்டும் எனப் பல பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள்.
பகவான் ரமணர் தன்னை அறியும் உபாயத்தைப் பற்றிக் கூறுகிறார்.
மனதில் ‘நான் யார்?’ எனும் கேள்வி உதித்ததும் அது பற்றிய சிந்தனையில் மற்ற சிந்தனைகள் அழிந்து போய்விடும். எப்படி ஒரு சிதையைக் கிளற உதவும் மரக்கிளை இறுதியின் தானும் சிதையுடன் எரிவதுபோல அந்தக் கேள்வியும் இறுதியில் அழிந்து போகும். அப்போது தன்னை உணரலாம்.
மற்ற எண்ணங்கள் எழும்போது அவற்றை ஒதுக்கிவிட்டு, யாருக்காக இவ்வெண்ணங்கள் எழுகின்றன எனக் கேட்டுக்கொள்ள வேண்டும். “எனக்கு’ எனும் விடை கிடைக்கும். அப்போது ‘நான் யார்?’ எனும் கேள்வி எழுந்தால் உள்ளம் அதன் ஆதாரத்திற்குப் போய்விடும். அமைதியாகி விடும். திரும்பத் திரும்பப் பயிற்சி செய்தால் உள்ளம் ஆதாரத்தில் நிலைகொள்ளும் வகையைக் கண்டுகொள்ளும்.
இதுவே பகவான் தன்னை அறிந்துகொள்ளக் கூறும் வழிமுறைகள். ஆனால் இத்துடன் இது நிறைவடைவதில்லை. இது இருவழியிலான ஒரு உடன்பாடு. ‘நான்’ எனும் எண்ணத்தை அதன் ஆதாரத்திற்குச் செலுத்தப் பழகிக் கொண்டால், ‘நான்’ அழியும்; தன்னை அறியும் வழி புலப்படும். இதனைப் பெரியதான விளக்கங்களுடன் கூறியுள்ளார் பகவான்.
ரூமி, கபீர், ஸ்ரீ அரவிந்தர் ஆகியோரும் இதற்கான வழிமுறைகளை அவரவர் அனுபவங்களுக்கேற்பக் கூறியுள்ளார்கள்.
ரூமி தனது கவிதைகளில் ஒன்றில் கூறுகிறார்:
‘ஒரு மாணிக்கம் அல்லது வைரம் தன்னை முழுமையாக
ஒப்புக்கொடுக்காவிட்டால் எப்படி அது ஒரு மோதிரத்தில் பதிக்கப்பட்டு ஆபரணமாகும்?
பிடிவாதமாக இருந்தபடி ‘நான்’ என்பது முட்டாள்தனம்,
‘தான்’ என்பதனை அழிக்கும் நேரம் நெருங்கிவிட்டது, அதனை விட்டுவிடு.’
ஆணவமும் அகந்தையும் நம்மை எங்கு கொண்டு சேர்க்கும்? Ozymandias கதையை நம்மில் பலர் அறிந்திருப்போம். ‘தன்’னை நிரூபித்துக்கொள்ள பலப்பல செய்தவன் ஒரு ப்ரம்மாண்டமான சிலையையும் செய்துவைத்தான். காலப்போக்கில் அதுவும் இயற்கையின் சீற்றாங்களால் சின்னாபின்னமாகி அவனுடைய ‘தன்’னின் அழிவைத்தான் உலகுக்கு எடுத்துரைத்தபடி உள்ளது.
Ozymandias – BY PERCY BYSSHE SHELLEY
I met a traveller from an antique land,
Who said- “Two vast and trunkless legs of stone
Stand in the desert . . . . Near them, on the sand,
Half sunk a shattered visage lies, whose frown,
And wrinkled lip, and sneer of cold command,
Tell that its sculptor well those passions read
Which yet survive, stamped on these lifeless things,
The hand that mocked them, and the heart that fed;
And on the pedestal, these words appear:
My name is Ozymandias, King of Kings;
Look on my Works, ye Mighty, and despair!
Nothing beside remains. Round the decay
Of that colossal Wreck, boundless and bare
The lone and level sands stretch far away.”ஓஸிமாண்டியஸ்- ஷெல்லி
நான் பழம்நாட்டிலிருந்து வந்ததொரு தேசாந்திரியைச் சந்தித்தேன்,
அவன் சொன்னான்:”கல்லாலான உடலற்ற இரு பெரிய கால்கள்
பாலைவனத்தில் நிற்கின்றன……. அருகில், அந்த மணலில்,
பாதி புதைந்து ஒருமுகம் கிடந்தது, அதன் முகச்சுளிப்பும்
சுருங்கிய உதடுகளும், இரக்கமற்ற அதிகாரத்தைக் காட்டும் வெறுப்பும்
சிற்பி அந்த உருவின் குணாதிசயங்களை அளந்து வைத்திருந்ததைக் கூறும்
உயிரற்ற சிலையில் அவை உயிரோடு இருப்பதனைக் காட்டும்
அவற்றைப் பழித்த கைகளும், அறிந்திருந்த இதயமும்;
அதன் பீடத்தில் இச்சொற்கள் காணப்பட்டன:
என் பெயர் ஓஸிமாண்டியஸ், அரசர்களின் அரசன்;
எனது சாதனைகளைக் காணுங்கள், வலிமையானவர்களே; வருந்துங்கள்!
அதன் அருகில் ஒன்றும் இல்லை; அந்த ப்ரம்மாண்டமான
அழிவைச் சுற்றி எல்லையற்ற வெறுமையான
தனித்து நிற்கும் மணல்வெளி பரந்து நீண்டிருந்தது.
ஆகக்கூடி ‘நான்’ என்பது முதன்மையாக இருந்தால்தான் பெரும் ஆபத்து என எல்லோரும் கூறுகிறார்கள். மனிதனாக இருந்தால் இதிலிருந்து தப்ப முடியாது. இதனைத் தவிர்க்க முடியாது. ஆனால் இதை அறிந்துகொண்டாலே, இது நம்மை ஆட்டிப் படைக்கிறது எனத் தெரிந்துகொண்டாலே பாதி உண்மை புரிந்துவிடும்.
கபீர் கூறும் உண்மையைப் பார்க்கலாம்: மனிதர்களான நாம் எப்போதுமே எதனுடனோ எவருடனோ தொடர்புடையதாகத்தான் இருக்கிறோம். அதனால் நம்மையே அறிந்துகொள்ளும் (தன்னையே அறியும்) ஒரே வழி- அந்த மற்றொருவருடனோ அல்லது மற்றொன்றுடனோ நமக்கு உண்டான தொடர்பின் விளைவுகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதனால் விளையும் பலன்களை எடைபோட்டுப் பார்க்க வேண்டும்.. அப்போது இந்த ‘நான்’ இவற்றின் விளைவே எனப் புரிந்து கொள்வோம். சுலபமாகத் தோன்றுகிறது; ஆனால் நடைமுறையில் எத்தனைபேர் இவ்வாறு சிந்திக்கிறோம்? இதனால் தான் தன்னையறிய சிறிது நேரம் ஒதுக்கி அமைதியாக தியானத்தில் ஆழ வேண்டும்.
அரவிந்த ஆசிரமத்து அன்னை கூறும் வழிமுறைகளும் இது போன்றதே:
தன்னை அறிந்து கொள்ளுதலே முதற்படி. அன்னை கூறுகிறார்:
“முதலில் தன்னை உணர்ந்துகொண்டு, தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.”
“தன்னைப் பற்றிய உணர்வு விழிப்பினைக் கொண்டிருந்தால்தான் அவற்றைக் கட்டுப்படுத்த இயலும்.”
ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்: “மனிதனின் தனிப்பட்ட குணம் என்னவென்றால் அவன் மனத்தால் இயக்கப்படுகிறவன்.” ஆகவே தன்னைப் பற்றிய ஆராய்ச்சியை அவனால் மனத்தில் செய்துகொள்ள முடிகிறது. நீண்ட பயிற்சிக்குப் பின்னரே ஒருவனால் தன்னைப் பற்றிய பல பிம்பங்களையும் தன்னுடன் தொடர்பு கொண்டிருப்பவை பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. இவற்றிற்குண்டான பெயர்களையும் வைத்து அவற்றின் பல இயல்புகளையும் பகுத்தறிய இயல்கிறது.
இதெல்லாம் வெகு சிலராலேயே முடியும். தானும் 24 வயதுவரை இதனைப் பற்றி அறியாமலிருந்து பின் யோக சாதனைமூலம் இதனை அறிந்து கொண்டதாகக் கூறியுள்ளர் பகவான் அரவிந்தர்.
தன்னை அறிதல் என்றால் நாம் யார்? நமது செயல்கள், அவற்றுடனான தொடர்புகள், அவற்றைச் செய்யும் நம் பிம்பங்கள் என்னவென்ன என அறிதலே! ஜைன, புத்த, இந்து, சைவ மதங்கள் இதனை வெவ்வேறு வகையில் விளக்குகின்றன. எல்லா நதிகளும் கடலில் கலப்பது போல, முடிவு ஒன்றே தான். அதுவே ‘தன்னை அறிதல்.’
இதனால்தான் மதாலஸா தன் குழந்தைகளுக்கு இதனைப் போதித்தாள் போலும்!
————————
கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம், ராஜயோகம் எனும் நான்குவிதமான யோகங்களினால் தன்னை அறியலாம் எனக் கூறப்படுகிறது.
கர்மயோகம் என்பது தொண்டு செய்யும் நோக்கமுள்ளவர்களுக்கானது. அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்துவிட்டு இயங்குவதனால் கடவுளே தன்னை இச்செயல்களைச் செய்ய வைக்கிறார் எனும் மனப்பான்மை தோன்றித் ‘தான்’ அழியும்.
பக்தியோகம் என்பது பக்தி செய்தும், வழிபாட்டில் ஈடுபட்டும் அன்பு செலுத்துபவர்களுக்கானது. தனது வழியில் தான் விரும்பும் கடவுளிடம் அன்பு செலுத்தி வாழ்பவர்களால் அடையக் கூடியது. மாணிக்க வாசகர் இதில் சேர்த்தி.
ஞானயோகம் என்பது நுட்பமதி வாய்ந்த அறிஞர்களுக்கும் தத்துவரீதியாக அனைத்தையும் அலசுபவர்களுக்குமானது. அறிவினால் ஆராய்ந்து தன்னையே தேடி தன்னில் இறைமையைக் காண்பதே தன்னை அறிதல். இதில் பகவான் ரமணரைச் சேர்க்கலாம். புத்தரையும் சேர்க்கலாம்.
ராஜயோகமானது இவையனைத்தையும் சேர்ந்து நமக்கு வழிகாட்டுவது. தவம் அல்லது ஆழ்ந்த மோனநிலையில் இருந்து தன்னைக் கண்டறிதல் எனலாம்.
அவரவர்களுக்கு எந்தப் பாதை தனக்கானது எனத் தோன்றுகிறதோ அதனையே வழியாகக் கொண்டு தன்னை அறிய முயலலாம்.
இதனையேதான் தனது மதிநுட்பத்தினால் தன்னை அறியும் வழிவகையை மதாலஸா தாலாட்டாகத் தன் குழந்தைகளுக்குப் போதித்தாள்.
மேலும்:
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
