சகுனங்களும் சம்பவங்களும் – 2

விக்கி என்பது கடல். அதில் ‘வசன இலக்கியம்’ கிடைத்தது. கன்னட இலக்கியமான வசன சாகித்தியத்தில் இருந்து பசவர் சரித்திரம் கிடைத்தது. பசவரின் தத்துவம், பாடல்கள், அரசியல், சாணக்கிய தந்திரம், லிங்காயத்துகள் எல்லாம் தெரிய வந்தது. மறந்து போன கன்னடத்தை தூசு தட்ட வைத்தது. எழுத்தாளர் பாவண்ணனைத் தொடர்பு கொள்ள வைத்தது. 

Banaras in Gray By Manu Parekh

1

ஹலதொரெகே பெல்லடனதஹ கெஸரு
சக்கரயந்தஹ மலாலு
தவராஜதந்தஹ நொரெ தெரகளு
இந்தாப்பா அட்யார வசனவிரலு வேற பவிய தொடி
உப்பநிரு சவிதன தயித்தய என்ன யுக்தி
நிம்ம வசனங்கள கேளடே
அன்ய புராணங்களே கேளி
கேட்டேனய்யா கூடலசங்கமதேவா

வெல்லம் போன்ற வண்டலும், சர்க்கரை போன்ற மணலும், அமுத நுரையும் கலந்த பசும்பால் நதி – சரண வார்த்தைகளை விட்டு விட்டு, வேறு கிணறு தோண்டி, உப்பு நீரை முழுங்குவது போன்ற அந்நியபுராணங்களைக் கேட்பது முட்டாள்தனம். 

லிங்காயத் தர்ம சம்ஹிதா வசன சாஹித்யா (ಲಿಂಗಾಯತ ಧರ್ಮ ಸಂಹಿತೆ ವಚನ ಸಾಹಿತ್ಯ): Comprehensive Vachana Volume-1, Vachana No.-171 (15 Comprehensive Vachana Volumes, Kannada Book Authority, Bangalore)

2

உள்ளவரு சிவாலய மாடுவரு நானேனு மாதலி படவனையா
என்ன காலே கம்ப தேஹவே தேகுல சிரவே ஹொன்ன களசவய்யா
கூடல சங்கம தேவ கேளையா ஸ்தாவரக்களிவுண்டு ஜங்கமக் களிவில்லா

(வசதி) உள்ளவர்கள் சிவாலயம் அமைப்பார்கள். நானோ ஒரு ஏழை, என் செய்வேன் ஐயா?

என் கால்களே தூண்கள், உடலே கோயில், தலையே தங்கக் கலசம் ஐயா!

கூடல் சங்கம தேவா, கேளையா! நிற்பவைக்கு அழிவுண்டு, ஆனால் அசைபவைக்கு அழிவில்லை!

பசவர், Speaking of Siva, by A. K. Ramanujan. Penguin. 1973. p. 1

3

இவனாரவ இவனாரவ இவனாரவனெண்டு எனிசடிரய்யா
இவ நம்மவ இவ நம்மவ இவ நம்மவனெண்டு எனிசய்யா
கூடல சங்கம தேவா நிம்ம மனெய மகனெண்டு எனிசய்யா

இவன் யாரவன் இவன் யாரவன் இவன் யாரவனென்று எனை எண்ணச் செய்யாய் ஐயா

இவன் என்னவன், இவன் என்னவன், இவன் என்னவனென்று எண்ணச் செய் ஐயா,

கூடல் சங்கம தேவா, நின் வீட்டில் நான் மகனென்று எண்ணச் செய் ஐயா!

பசவர், சைவம்.ஆர்க்

4

ஹொன்னு மாயே எம்பாரு
ஹென்னு மாயே எம்பாரு
மண்ணு மாயே எம்பாரு
ஹொன்னு ஹென்னு மண்ணு மாயே அல்ல
மானடா முந்தன ஆசையே மாயே கனா குஹேஸ்வரா?
அல்லமா பிரபு (ಅಲ್ಲಮಪ್ರಭು)

B-Girl Raygun of Team Australia competes during the B-Girls Round Robin – Group B on day 14 of the Olympic Games Paris 2024 at Place de la Concorde, on August 09, 2024

ஆட்டம் – வாதித்து, வீசி எடுத்த பாதம்

உடையும் இந்தியா (Breaking India by Aravindan Neelakandan and Rajiv Malhotra) கேள்விபட்டிருப்பீர்கள். உடைக்கும் நடனம் பார்த்ததுண்டா?

ஒலிம்பிக்ஸ் பார்ப்பதற்காக தொலைக்காட்சியைத் திருப்பும்போது ‘பிரேக் டான்ஸ்’ அகப்பட்டது. ஒவ்வொரு ஒலிம்பிக்சிலும் ஒவ்வொரு போட்டி கவனத்தை ஈர்க்கும். இசைக்கேற்ப உடற்பயிற்சி; இருவர் ஒரே மாதிரி தண்ணீரில் குதிப்பது; தண்ணீரில் பலர் ஒரே மாதிரி ஆடுவது; தண்ணீரில் தாள சுருதிக்கு ஏற்ற மாதிரி நடனமும் உடற்பயிற்சியும் கலந்து ஆடுவது – இதெல்லாம் காசு கொடுத்து யார் பார்க்கிறார்கள் என்பதும் எதற்காக விளையாட்டாக வைத்திருக்கிறார்கள் என்பதும் காற்றில் கலந்திருக்கும் 5ஜி போல் விளங்க முடியாதவை.

அந்தப் போட்டிகள் எல்லாம் ஏற்கனவே பார்த்துப் புளித்துப் போனதால் ‘ப்ரேக் ஆட்டம்’ முழுவதுமாகப் பார்க்கத் துவங்கினேன். சுவாரசியமாக இருந்தது. ஜிம்னாஸ்டிக்ஸ் போல் சாகசங்கள் செய்கிறார்கள். ஸ்கேட்டிங் போன்ற ஆட்டங்களின் காலணியைத் தொட்டுக் காண்பிக்கும் நுட்பங்களும் வைத்திருந்தார்கள். 

இவை எல்லாம் போட்டியா? கலை போல் அனுபவித்து மகிழ்வதை மதிப்பெண் போடுவது சரியா? கலைஞர்களில் என்ன வெற்றி, தோல்வி – எல்லோருமே அவரவர் அளவில் கலாபூர்வமாக சிறப்பாக மிளிரும்போது எப்படி, தங்கப் பதக்கம் கொடுப்பது!

அந்தக் கேள்விகள் இருக்கட்டும். 

டிஸ்கோ டான்சர் என்று பாடும் வானம்பாடி தமிழில் படமாக வந்தது. அது போல், ஆங்கிலத்தில் Style Wars, Wild Style, Beat Street, Freshest Kids, Rubble Kings, A Decade of Fire என்று எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இது பிரபலமடைந்தது. அதே போல் புத்தகங்கள்: ஜெஃப் சியாங் (Jeff Chiang) எழுதிய Can’t Stop Won’t Stop: A History of the Hip-Hop Generation; இமானி கய் ஜான்சன் (Imani Kai Johnson சுடச்சுட வெளியிட்ட Dark Matter in Breaking Cyphers: The Life of Africanist Aesthetics in Global Hip Hop. இந்தத் துறை ஒரு கடல்.

இருவர் மேடைக்கு வருகிறார்கள். இது ’சபாஷ்! சரியான போட்டி!’ என்று சொல்ல வைத்தது. ஆளுக்கு ஒன்றரை நிமிடம் மாறி மாறி ஆட நேரக்கெடு கொடுக்கிறார்கள். இரு சுற்றுகள். எவர் அதிக வாக்கு பெறுகிறாரோ அவர் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகிறார். ஒருவர் ஆடும் போது, இன்னொருவரும் அவரை குஷிப்படுத்துகிறார். சவால் விடுகிறார். ஆச்சரியக் குறி காண்பிக்கிறார். போட்டியில் வெல்ல வேண்டும் என்னும் கவனம் இருந்தாலும், புன்சிரிப்பும், கரகோஷமும், பின்னணிப் பாட்டிற்கேற்ப குதியும் கும்மாளமுமாக இனிதாக இருந்தது.

16 ஆண்கள்; 16 பெண்கள். இந்த ஆட்டம் முழுக்க முழுக்க ஆட்டக்காரரின் கற்பனையிலும் உடல்பலத்திலும் நளினத்திலும் திறமையிலும் உள்ளது. சடாரென்று பாதி ஆட்டத்தில் அப்படியே அந்தரத்தில் அதிரடியாக உறைந்து நிற்க வேண்டும். தலைகீழாய் ஒற்றைக் கையை வைத்துக் கொண்டு உடலைச் சுற்றுவது, வெறும் தலையில் அந்தர் பல்டி அடித்து ஆடுவது, பூமி மேலே இருப்பது போல் புவியீர்ப்பை மீறிய ஆட்டங்களை உடற்பயிற்சியோடு செய்வது என்று எல்லாமே தாளத்துடனும் சுருதிக்கேற்பவும் அமைய வேண்டும். ஆறு வகையாக மதிப்பெண் போடுகிறார்கள்: 

1. படைப்பாற்றல், 

2. ஆளுமை, 

3. உத்தி, 

4. பலவகை ரகம் / விதவிதம், 

5. செயல்திறன் மற்றும் 

6. இசைக்குறியீடு

தமிழகத்தில் ‘ஆடு பாம்பே’ பாடலுக்கு உடம்பை வில்லாய் வளைக்கும் அரசவை நடனக் கலைஞர் போல் ஆஸ்திரேலியாவில் இருந்து ‘ரே குன்’ என்பவர் அனுப்பப்படுகிறார். அவரின் இயற்பெயர் ரேச்சல் குன் – அதை சுருக்கி ‘ரேகுன்’ (Rachael ‘Raygun’ Gunn) என்றாக்கி ஆடுகிறார். ‘ரேகன்’ சிட்னியின் மெக்வாரி பல்கலைக்கழகத்தில் ஊடகம், தகவல் தொடர்பு, படைப்பாற்றல் கலை, மொழி மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் விரிவுரையாளராக உள்ளார்.

அவர் கங்காரு போலவும், நீர் தெளிப்பான் போலவும் ஆடுகிறார். அந்த ஆட்டத்தை நேரலையில் பார்த்தபோது எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இதைவிடக் கொடுமையான ஆட்டங்களை ஹிந்தி, தெலுங்கு, தமிழப் பட குத்தாட்டங்களில் பார்த்திருக்கிறேன். மேலும் அசல்தன்மை, மனிதனின் குணாதிசயங்களின் தொகுப்பு, பிரத்தியேக செய்நுட்பம் என்றெல்லாம் வேறு பிரலாபம் செய்ததால், இப்படியெல்லாம் வித்தியாசமாக ஆடுவதும் ‘பிரேக்கிங்’ ஆட்த்தின் சாமுத்ரிகா இலட்சணம் என்று நினைத்து பிரமிப்பில் இருந்தேன்.

ஆனால், கடந்த பத்து நாளாக அவரை வைத்து மொத்த இணையமும் கும்மியடிக்கிறது. கிண்டல் மீம் என்ன… வெறுப்பு வீடியோ என்ன… நக்கல் ட்ரால் என்ன… பாவம்.

Rachael Gunn – aka Raygun

ஏன்?

ரேகுன் கருப்பர் இல்லை. சிறுபான்மையினரின் குறீயீடான ஆட்டத்திலும் பெரும்பான்மை வெள்ளையர் ஆடினால் எப்படி?

இந்திய ஆடையைக் கூட அவரவர் பார்த்து பார்த்து அணிய வேண்டும். ஷாரூக் கான் லுங்கி டான்ஸ் ஆடினால் – அது ‘கலாச்சாரக் கைப்பற்றல்’ (cultural appropriation). லுங்கி கட்டி சூப் சாங் ஆட நடிகர் தனுஷிற்கு மட்டுமே உரிமம் உண்டு. இதில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி!?

ரேகனின் பிஎச்டி ஆய்வறிக்கை ’பாலினத்தின் குறுக்குவெட்டும் சிட்னியின் ப்ரேக் டான்ஸ் கலாச்சாரமும்’ (Deterritorializing Gender in Sydney’s Breakdancing Scene: a B-girl’s Experience of B-boying). அவரது ஆராய்ச்சி முடிவு வெளியீடுகளில் பின்வருவன அடங்கும்:

– கலாச்சார ஆய்வுகள் செய்வதில் ‘தொடர் ஓட்டங்கள்’ 

– பி-கேர்ள் பயிற்சியில் ‘உறுப்புகள் இல்லாத உடல்’ பரிசோதனை 

– இரவு நேர முரண்பாடு: எப்படி பிரேக்டான்ஸ் இரவின் சாத்தியங்களை வெளிப்படுத்துகிறது

– #பெண்கள் எங்கே? கலாச்சாரத்தை உடைப்பதில் (உள்ள) பார்வையின் அரசியல்

இப்படி எல்லாம் ஆய்வு செய்தால் என்ன ஆட்டம் ஆடினாலும் வலது காலைத் தூக்கும். திருவாலங்காட்டில் சிவன் இடது காலைத் தூக்கி ஆட்டத்தை வென்றது ரேகுன் அவர்களுக்குத் தெரிந்திருக்காது. 

அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரின் மாமமுகடு பேரும்- கடகம்
மறிந்தாடு கைபேரின் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றாது அரங்கு

காரைக்கால் அம்மையார்
Mounaragam – A 1986 Mani Ratnam movie – Actress Revathy

காதல், கல்யாணம், மறுமணம்

இது ஒரு விளையாட்டு.

ரேவதிக்கு பாண்டியனைப் பிடிக்கிறது – இது ”மண் வாசனை”..

ஆனால், முறை மாமன் உறவு தாலிக்கு பதில் சோகத்தில் முடிகிறது.

இந்த முடிவு உவக்காததால் ‘புதுமைப் பெண்’ வருகிறது.

ஆனால், அவன் ஆண் மகவிற்கு உரிய குணாதியங்கள் கொண்டிராததால், ‘வைதேகி காத்திருந்தாள்’ உருவாகிறது. 

காத்திருந்தது போதும்! சட்டத்தைக் கையில் எடுப்போம் என்பது ‘உதயகீதம்’. இங்கே பாண்டியன் போய் மோகன் வருகிறார். (கொடி அசைந்ததும் காற்று வந்ததா என்னும் மெட்டில் வாசிக்கவும்).

விட்ட குறை, தொட்ட குறையாக அவரே ‘மௌன ராகம்’ படத்தில் மணம் முடிக்கிறார். கம்பளிப் பூச்சி ஊற வைக்கிறார்.

அந்தக் கல்யாணம் + காதல் தோல்வி, ‘புன்னகை மன்னன்’ ஆகிறது. 

தாலி கட்டி வாழ்வது, தாலி கட்டும் போது கணவன் சாவது, ஊமை ஆவது, மண நாள் அன்றே கைம்பெண் ஆவது, கணவனே விளக்கு பிடிப்பது எல்லாம் பார்த்து, தாயம்மா ஆக, ‘கிழக்கு வாசல்’. – பழைய கார்த்திக்! புதிய உறவுமுறை!!

அம்மா ஆனால், குழந்தை வேண்டுமே – ‘அஞ்சலி’.

வாழ்க்கை ஒரு வட்டம். மீண்டும், ஊருக்காக, பஞ்சாயத்திற்காக, சாதிக்காக ஒரு மணம் – ‘தேவர் மகன்’.

இப்பொழுது, கொஞ்சம் நிஜம்; கொஞ்சம் நடுத்தர வயது சிக்கல் கொண்ட கலைஞரின் துணைவி – ‘மறுபடியும்’

இந்தச் சுற்றை ‘மகளிர் மட்டும்’ உடன் முடிப்பது நியாயம்.

ஆனால், தன் இயக்குநருக்காக, ‘தாஜ் மஹால்’ நடித்தது நிஜம்!

இந்த மாதிரி ஒருவரின் வாழ்வும் படங்களும் கிறுக்கோ, ”கிலுக்கமோ” – எல்லோருமே ‘அவதாரம்’!

Revathy: ‘Exploring the new and unusual is a challenge I love to undertake’ (Photo Credit – Tooth Pari: When Love Bites Poster )

முந்தைய பகுதி



Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “சகுனங்களும் சம்பவங்களும் – 2”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.