கானல் குருதி

சூரியன் காரைக்குடியை அளவுகடந்து காதலித்து கொண்டிருந்தது. வரும் வழியிலேயே, பேருந்து வெயிலில் உருகியிருக்குமோ, வெகுநேரமாய் காத்துக்கொண்டிருந்த விமலுக்கு அப்படித்தான் தோன்றியது. மதியம் சாப்பிட்ட நல்லி எலும்பு ரசமும், முரல்மீன் வறுவலும் தூக்கத்தை கிளப்பி நிற்க முடியாமல் சாமியாடிக் கொண்டிருந்தான்.  கோவையில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்ததால், வீட்டு சாப்பாடு விருந்தாகிவிட்டது. அசைபோட்டு படுத்துகிடந்த மாடுகளைப் பார்த்தபடி கிறங்கி நின்றான். வழக்கத்தைவிட தாமதமாகவே வந்து சேர்ந்தது பேருந்து. பஸ் இராமேஸ்வரத்திலிருந்து வந்ததால், உட்கார இடமே இல்லை. நடத்துனர் இருக்கையில் கூட ஆள் இருந்தது, ஆனால், அதன் பக்கத்தில் அமர்திருந்த பெரியவர், விமலை கண்டதும் எழுந்து இடம் கொடுத்தார், உண்ட மயக்கத்தில் படக்கென அமர்ந்துவிட்டான். பின்னர் தான் உறைத்தது, நேர்மாறாக ஒரு வயதானவர், இளையவனான நமக்கு சீட் கொடுக்கிறாரே என. ஓரவாயில் சிரித்தபடி “நீங்க உக்காருங்க” என எழுந்தான். பெரியவர் பரவாயில்லப்பா… என்றபடி அவனைவிட்டு தள்ளிப்போனார். அங்கிருந்த அனைவரும் அவனை கேவலமாக பார்ப்பது போல் அவனுள் கிலி கிளம்பியது. போதாதென்று அந்த கண்டக்டர் வேறு, கண்களால் காரித்துப்பியபடி அவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

முடியற்ற முன் தலை, நீள கிருதா, தலைகீழான ‘ப’ வைப் போல அடர்ந்த மீசை. பட்டையை பன்னீர் தொட்டு அடித்திருப்பார் போல, இன்னும் அழியாமல் இருந்தது. “எங்க போணும்…“ பொன்னிற ஃப்ரேம் கண்ணாடியை ஏற்றிவிட்டபடி கேட்டார். “கோயமுத்தூர்” என்றான் விமல். டிக்கெட்டை கிழித்து கொடுத்தபடி “செல்போனு, தண்ணி பாட்டிலெல்லாம் பத்திரம்” பக்கத்தில் இருப்பவனை கண்களால் சுட்டி காட்டியபடி “இப்பதா அந்த ஐயாவோட போன பறிச்சு ஒடச்சு போட்டான், சூதானமா இருங்க.” விமலுக்கு இப்போதுதான் ஐயா சொன்ன பரவாயில்லப்பா வின் அர்த்தம் புரிந்தது. எழுந்து வேறு இடம் பார்க்கலாமென்றால், அதற்குள் நான்கைந்து பேர் ஏறிவிட்டனர். இடைப்பட்ட நேரத்தில் ஐயா, படியில் வெற்றிலைகூடை பாட்டியுடன் செட்டில் ஆகியிருந்தார், “உள்ள போங்க, இங்கயெல்லா ஒக்கார கூடாது” என அதட்டி உள்ளே போக வைத்தார் கண்டக்டர். காலை நகர்த்த கூட இடமில்லை, அடை போட்டிருக்கும் கலர் கோழிகுஞ்சுகள் போல், அங்கங்கே அப்படியே உட்கார்ந்துவிட்டனர். இனி என்ன செய்ய, ஒன்று, இந்த பைத்தியத்திற்கு பக்கத்தில் உட்கார்ந்து ஊர் போய் சேரவேண்டும், இல்லை, ஏழு மணி நேரம் நின்று தொலைய வேண்டும். வயிற்றுக்குள்ளிருந்து முரல்மீன் “அப்படியே கண்ணைமூடி தூங்கு, கோயமுத்தூர் வந்ததும் எழுப்புகிரேன்” என்றது. அருகில் இருப்பவனும் அவ்வளவு பைத்தியம் போல் தெறியவில்லை, பிரதான அடையாளமான, சட்டை கூட கிழியாமலிருந்தது, இவனுக்கும் தன் வயதுதான் இருக்ககூடும்,  இருவரும் ஒன்றாக படித்திருக்ககூடும், ஒன்றாக பைக்கில் சுற்றியிருக்ககூடும், உயிர்நண்பர்களாக இருந்திருக்ககூடும், ஓரே பெண்னை காதலித்திருக்ககூடும், என கற்பனை விரிய தூங்கிப்போனான்.

செல்போன் மணியடித்து விழிக்கும் போது பேருந்து, திண்டுக்கல்லை தாண்டியிருந்தது. அரைத்தூக்கத்தில் போனை எடுத்து பேச காதோரம் வைக்கும் போது “போன் பேசதாடா” என கத்தியபடி போனை பிடுங்கி வீசினான் பக்கத்தில் இருந்தவன். நல்லநேரமாய், போன் சொத்தென வெற்றிலைகூடையில் விழுந்தது, கொஞ்சம் தவறியிருந்தாலும் போன் பணால் ஆகியிருக்கும். விமல் கன்னத்தில் அந்தப் பையனின் நகம் பட்டு லேசான கீறல், தொட்டு பார்த்தான் லேசாய் எரிந்தது. போனை எடுத்துக் கொண்டு அவனை “ஏய்…” என அடிக்கப் பாய்ந்தான். அவனோ “போன் பேசுனா அம்மா செத்துறும்டா லூசு” என விகாரமாய் கத்தினான். விமலுக்கு கருக்கென இருந்தது. பஸ்லிருந்த அனைவரும் அவனைத்தான் பார்த்துகொண்டிருந்தனர். கொஞ்சம் நிதானித்து, இந்த பைத்தியத்தை அடித்து என்ன வரப் போகிறது என தள்ளிப்போய் நின்றுகொண்டான்.

கண்டக்டர் எழுந்து விமலுக்கு அமர இடம் கொடுத்து பதிலுக்கு, பைத்தியத்தின் அருகில் அமர்ந்து கொண்டார். “பாத்து உக்காருங்க காசு பைய புடுங்கி வீசிடப் போரான்” விமல் கண்டக்டரை பார்த்து கடுப்போடு கூறினான். அவர் சட்டை செய்யவில்லை சரிடா என்பதுபோல் தலையசத்தார் அவ்வளவே. செல்போனை பறிகொடுத்த ஐயா “கோயாமுத்தூர்ல பைத்தியம் இல்லனு காரக்குடிலேருந்து எஸ்போர்ட்டு பன்றீகலோ…” என்றார். “உங்க போனுக்குண்டான காசு கொடுத்தாச்சில்ல, அப்பறம் என்ன பேச்சு” கண்டக்டர் உரக்கக் கேட்டதும், பதிலுக்கு ஐயா, ”கூறுகெட்டவனையெல்லாம் பஸ்ல ஏத்திட்டு என்னயா வேல பாக்குற நீ, கூட தொணைக்கு கூட ஓரு ஆள் வராம, இவன பஸ்ல ஏத்தலாமா, இப்போ அந்த தம்பி போனும் போயிருக்கும், நல்ல சமயமா நாச்சியம்மா கூடையோட வந்திச்சு…” என அந்தப் பக்கம் திரும்பி அழகுநாச்சியை பார்த்து முன்புறுவல் பூத்தார். ஐயாவின் அறசீற்றத்திற்கான காரணம் விளங்கியது.

கண்டக்டர் அந்த பையனிடம் “அமைதியா வரனும். எதாவது கரச்சல் கொடுத்த அங்கனயே எறக்கி விட்ருவே கேட்டுக்கோ.” என கத்தினார். அவன் எதையும் கவனிக்காமல் ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அதன் பிறகான அமைதியை சுமந்து, பெருமாள் கோவில் அல்லி குளத்தில் தண்ணீர் பாம்பை போல், நீந்தி கொண்டிருந்தது நெடுஞ்சாலையில் பேருந்து. வ்ர்ர்வோம்ம்ம்… என எங்கிருந்தோ வந்த சத்ததில் பஸ்லிருந்த அனைவரும் அதிர்ந்து எழுந்தனர். முன்னால் ஒரு குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்தது. எல்லோரும் சத்தம் வந்த பக்கத்தில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்கள். ஒரு இளைஞன், அவனைவிட மூன்று மடங்கு பெரியதாயிருந்த பைக்கில், இரண்டு கால்களையும் சீட்டின் மீது வைத்தபடி, மின்னல் வேகத்தில் கடந்து சென்றான், அதை கேமராவில் படம்பிடித்தபடி பின்னே இருவர் பைக்கில் சென்றனர்.  அந்த வேகமும், சத்தமும் ஏற்படுத்திய அதிர்வில் அனைவரும் மிரண்டு போயிருந்தனர். திரும்பி பார்ப்பதற்குள் எங்கோ சென்று இரு புள்ளிகளாய் மறைந்தனர். தனக்கு பிடித்த பைக் என்பதால், எட்டிக் கொண்டு பார்த்தான் விமல், அந்த வேகத்திற்கும், சுதந்திரத்திற்கும் அவன் மனம் ஏங்கிகொண்டிருந்தது.   திடீரென “ஏய்…. போகாதடா என சத்தம். பைத்தியத்தை கட்டிப் பிடித்தபடி இருக்கையில் அமர வைக்க போராடிக் கொண்டிருந்தார் கண்டக்டர்.

அந்த பையன் பற்களை கடித்தபடி திமிறிக் கொண்டு, “போகாதடா…. அதுல போகாதடா….” என மீண்டும் மீண்டும் சாலையை பார்த்து கத்தினான். கண்டக்டர், “சும்மா இருடா…” என உரக்க கத்தி உட்கார வைத்தார். “அதுல போக வேணானு சொல்லுப்பா, சொல்லுப்பா..” மீண்டும் கத்தி அழுதான். ஒரு நிமிடம் சிலையாகிப் போனார் “அப்பா… அப்பாவ தெரியுதாடா கதிரு” என்று கட்டிகொண்டு அழுதார். பஸ்லிருந்த அனைவரும் எதோ படம் பார்ப்பதை போல அவர்களை பார்த்து கொண்டிருந்தனர். விமல் பாட்டிலை திறந்து இருவருக்கும் குடிக்க தண்ணீர் கொடுத்தான். கதிரை குடிக்க வைத்து பின், அவரும் கொஞ்சம் குடித்தார். விமல் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை, அப்போதைக்கான தேவை அமைதி மட்டுமே.

பல்லடத்தில் வண்டி நின்றபோது, ஐயா, கண்டக்டரின் பையில் பணத்தை திணித்தார். கண்டக்டர் “வேணாய்யா, எம் மகன் உங்க போன உடச்சிருக்கான் , நீங்க இத கொண்டு சரிபண்ணுங்க”.  ஐயா மறுத்து, “என் செல்போன நா சரி பண்ணிக்கறேன், நீங்க ஏதும் கவலப்பட வேணா, எல்லா சரியாடும்” என்றபடி இறங்கி சென்றார். பேருந்தில் பாதி கனம் குறைந்திருந்தது, கண்டக்டர் நோட்டுகளை எண்ணி பையில் வைத்து கிளிப்பை செறுகினார். விமல் செல்போன் கேமராவால் முகம் பார்த்து, நகக்கீறலை தடவிக்கொண்டிருந்தான். அதை பார்த்த கண்டக்டர் அவனருகில் வந்து, “நகம் பட்டுடுச்சாய்யா, மன்னிச்சுக்கயா, அவனுக்கு… கொஞ்சநாள் முன்னம், தலைல அடி பட்டுப்போச்சு” என நிறுத்தி பெருமூச்சு விட்டார். “அதெல்லா ஒன்னுலில்லங்க, உக்காருங்க என கண்டக்டரை தன் பக்கத்தில் அமர்த்தினான். இருக்கையில் பூனை போல சுருண்டு படுத்திருந்தான் கதிர்.

கண்டக்டர், கண்ணாடியை கழட்டி உறைக்குள் வைத்துவிட்டு, தன் மகனைப் பார்த்தபடி “அப்பானு சொல்ல கேட்டு ரெண்டு வருசமாச்சுயா, நா வாங்கி தர மாட்டேனுதா சொன்னே, கேக்கலியே, சாப்பிடல, பேசல, ரெண்டு நாள் ரூம விட்டு வெளியவே வராம இருந்து சாதிச்சான். விமல் தயக்கத்துடன், “பையன் என்ன கேட்டான்” என்றான். “எல்லா அந்த நாசமாப் போன பைக் தான்” தலையில் அடித்துக் கொண்டார், “அதே பைக்கு தா வேணும்னு ஒத்த கால்ல நின்னான், கொஞ்ச சின்னதா வாங்கேண்டா சொன்னமே, கேட்டானா… எல்லா நேரமும் ஒண்ணு போல இருக்குமா சொல்லு, நாப்பதஞ்சி கிலோ இருக்கிறவனால, இருநூறு கிலோ கொண்ட பைக்க எப்படியா அடக்க முடியும். அன்னிக்கு இதே ரூட்டுல டுயுட்டில இருந்தப்போ, எனக்கு பஸ்லருந்து விழுந்து வலதுகை முறிஞ்சுபோச்சு, ட்ரைவர், என் வீட்டுக்கு தகவல் சொல்லப் போய், அவனும், அவங்கம்மாவும் பதறிபோய், அந்த பைக்குல வந்தாங்க, வாங்குனதுலேருந்து, பின்சீட்டு உயரமா இருக்குனு பயந்துகிட்டு, அவ அதுல உக்காரவே இல்ல. பதட்டத்துல அன்னிக்குதான் எப்படியோ சமாளிச்சு ஏறியாந்திருக்கா. சிலரு, பையன் போன் பேசிட்டு போனானு சொன்னாங்க, சிலரு, ஹேண்டில்பார, லாரிகாரன் தட்டிட்டானாங்க…. என்ன பேசி, என்ன ஆக, ரெண்டு பேருக்கும் தலைல பலமான அடி. பொறந்த கொழந்தய அப்பன் கையில கொடுத்துட்டு, பிரசவத்துல இறந்து போவாங்களே, அன்னைக்கி அப்படித்தாய்யா அவள பறிகொடுத்துட்டு நின்னேன். மூச்சை இழுத்து, சிங்காநல்லூர் தான் கடைசி, காந்திபுரம் போகாது, எல்லாரும் இறங்குங்க”. சட்டென குரலை உயர்த்தி கத்தினார்.

விமலுக்கு கெட்டகனவிலிருந்து விழித்தது போலிருந்தான். பேருந்து நின்றது, மீதமிருந்தவர்கள் நிழல்களாய் கடந்துகொண்டிருந்தனர். கண்டக்டர் கைகுட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டார், வியர்வை போய், துயரம் துலங்கியது. சில நொடி மௌனத்திற்கு பிறகு, எனக்கு பொழப்பே ரோட்ல தான்,  சின்ன சின்னப்பயலுக, கைப் போயி, கால் போயி, அரஉசுரா அழுதிட்டு கிடக்கும் போது, எனக்கு எம்மகன் தான்ய்யா நெனப்புக்கு வரான், இவனும் அன்னைக்கு அப்படித்தான அழுதிருப்பான். இனி அந்தமாறி யாரையும் பாத்துரக்கூடாதுனு தான் தினமும், அந்த குன்றகுடி முருகன வேண்டிக்கிட்டு வண்டில ஏறுரேன். இந்த பைக்குனு ஒன்னு எதுக்கு… ஒரு எடத்துலேர்ந்து மறு எடத்துக்கு போகவும் வரவும், வேற ஒரு மண்ணுக்கும் கிடையாது. எம்மவன நாலு சொவத்த விட்டு வெளிய கொண்டாரவே ரெண்டு வருசமாய் போச்சு. வீட்ல ஒரு நாள் அடங்காத பையன், பூட்டியே வச்சு பாக்க மனசு கேக்காம இன்னக்கிதா கூட்டியாந்தய்யா. எங்க தொலச்சமோ அங்கதான தேடனும். பாப்போம். வாடா கதிரு, கண்டக்டர் எழுப்பியதும், எழுந்து தன் தந்தையுடன் சென்றான். விமலுக்குத் தான் கொஞ்சம் நேரமானது.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “கானல் குருதி”

  1. சிறப்பு தாய் தகப்பனை வற்புறுத்தி துன்பத்துக்குள்ளகாக்குவது தற்காலத்தில் அதிகரித்து வருகிறது அதை சுட்டும் இக்கதை தளம். நன்று

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.