வாழ நினைத்தால் வாழலாம்

தமிழகத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் திரு லா. ச.ரா எழுதியிருக்கிறார்: “உயிர் அழிவற்றது. தன் உச்சரிப்புக்குத் தானே திரும்பத் திரும்ப உருவைத் தேடுகிறது.

திரும்பத்திரும்ப உச்சரணையே உயிரின் ஆதாரம்
திரும்பத்திரும்ப உருவே தொடர்பின் ஆதாரம்
திரும்பத் திரும்ப தொடர்பே முயற்சியின் ஆதாரம்
திரும்பத் திரும்ப முயற்சியே விமோசனத்தின் ஆதாரம்
திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப (புத்ர)

“தான்” உண்டாக்கிய நெருப்பில் “நான்” திருப்பித் திருப்பி தன்னையே காய்ச்சிக் கொள்கிறது.  “நாம் இறக்கவில்லை. ஏனெனில் நம்மால் இறக்க முடியாது. உயிர் பிறந்தது, எப்படியோ, ஏனோ பிறந்துவிட்டது. பிறந்த பின் அதனால் இறக்க முடியவில்லை. இருந்துதான் ஆக வேண்டும்.. ஆனால் சரியாய் இருக்கும் முறையைத் தேடித்தேடி இருந்து இருந்து மாற்றி மாற்றி, மாறி மாறித் தவித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் நம் தவிப்பு. வித்திலிருந்து மரத்தில் இருந்தொரு வித்து. ஆனால் வித்தெல்லாம் வித்தல்ல. ஒரு நாள் முத்தானதொரு வித்து ஒரே முத்து.” (ஜமதக்னி)

அனைத்து உயிரிகளுக்கும் தம் இனம் பெருக வேண்டும் என்றும், தான், தன் சந்ததி வழியாக இந்த உலகில் நிலைபெற வேண்டுமென்றும் கட்டுக்கடங்காத ஆவல் இருக்கிறது, அது நிறைவேறவும் செய்கிறது. அப்படித் தொடரும் சந்ததி, தான் இல்லையே, அவனோ அல்லது அவளோ சில வேற்று அம்சங்களையும் கொண்டிருக்கிறார்களே, நான் நானாகவே நீடித்த ஆயுளுடன் வாழ வழி என்ன? தன்னுயிர் தொடர்ந்து இந்த உலகில் இருக்க வேண்டுமென்ற பலரும் விழைகிறார்கள். சிக்கல் எங்கே எழுகிறதென்றால், அவர்கள், தத்தம் உயிர்கள் தத்தம் வடிவிலேயே தொடர வேண்டுமென எதிர்பார்ப்பதுதான்.

இக்கேள்விக்கு பதிலை பணமும், தொழில் நுட்பமும் சொல்கின்றன. 

ப்ரையன் ஜான்சன் (Bryan Johnson) என்றொரு தொழில் நுட்ப வல்லுனர், மிகப் பெரும் கோடீஸ்வரர். அவர் தன் வயதைக் குறைக்கும் முயற்சியின் மூலமாக நீண்ட ஆயுளைப் பெறலாம் என்ற எண்ணத்தில் மரபணு சிகிச்சையில் குறிப்பிட்ட ஒன்றான  Follistatin 1 சிகிச்சையை ஹான்டுராஸ் நாட்டில் (Honduras) உள்ள ரோடன் (Roatan) தீவில் எடுத்துக் கொண்டார். தன் தசைகள் வலுவாக இருப்பதற்கும், தன் உடல் நிறை, எதிர்காலத் தேய்மானங்களைத் தாங்கும் விதத்தில் இருப்பதற்குமான சிகிச்சை என்று அவர் சொல்கிறார்.

Bryan Johnson

‘ப்ராஸ்பெரா’ (Prospera) என்ற ஒரு மண்டலத்தை புதுயுக தொழில் நுட்பப் பரிசோதனைகளுக்காக அந்த நாடு ஒதுக்கித் தந்துள்ளது. இங்கேதான் ‘மினிசர்க்கிள்ஸ்’(Minicircles) என்ற மரபணுக் குழுமம் செயல்படுகிறது. அதன் நிர்வாக இயக்குனர் இந்த ஃபாலிஸ்டேடின் வழிமுறை நல்ல பலன் தருவதாகச் சொல்கிறார். மனிதன் அதிக பட்சமாக 120 ஆண்டுகள் வாழ முடியும் என்றாலும், அதை மேலும் நீடிக்க முடியுமா என்பதற்கான முயற்சி இது. Jeanne Calment என்ற பெண்மணி இதில் உலக சாதனை செய்தவர்; அவர் 122 வருடங்கள், 164 நாட்கள் வாழ்ந்து 1997ல் மரணமடைந்தார். நம் ஜான்சனுக்கு அதைத் தாண்ட வேண்டும் எனும் விருப்பம். இந்த சிகிட்சை முடிந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் தசைகளின் நிறை 7%ம், உடல் எடை 5%ம், மூன்றே வாரங்களில் ஃபாலிஸ்டேடின் அளவு 160%ம் அதிகரித்துள்ளன.

இவர் முன்னரும் ஸ்டெம் செல் சிகிச்சை எடுத்தவர் என்பதும், அவரது தந்தை தன் முதுமைக் காலத்தில் மூளையின் சரியான செயல்பாட்டிற்காக ஸ்டெம் செல் சிகிச்சை எடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தூங்கு மனிதா, வேண்டும் வரை தூங்கு

இன்றைய மருத்துவ அறிவியலில் சில நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ‘அல்கோர் வாழ்வு நீடிப்பு அமைப்பு’ ‘க்ரையோனிக்ஸ்’ (cryonics) என்ற துறையில் முன்னிலை வகிக்கிறது. மரணத்தை வெல்லவும், வாழ்தலை நீடிப்பதற்கும் உதவும் துறை க்ரையோனிக்ஸ். மிக மிகக் குறைந்த தட்ப வெப்ப நிலையில் மனித உடல்களைக் குளிரூட்டி, பின்னர் தேவையான போது மீண்டும் உயிர்த்தெழச் செய்யும் தொழில் நுட்பத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். “இன்று இறக்கும் நிலையில் உறைவோம், எதிர்காலத்தில், எங்கள் நோய்களுக்கான தீர்வுகளை மருத்துவ அறிவியல் கொண்டு வரும், நாங்கள் உயிர்த்தெழுவோம்; மரணத்தை, வயதாவதை வென்று விடுவோம்” என்ற நம்பிக்கையில் 233 நோயாளிகள் இந்தச் செயல்முறைக்கு ஒத்துக் கொண்டு உறை நிலையில் உள்ளார்கள். சில வலைத்தளங்கள் 500 நபர்கள் என்றும், சுமார் 4000 நபர்கள் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் என்றும் சொல்கின்றன.


இந்த க்ரையோனிக்ஸ் செயல் முறை என்ன? 2Vitrification தான். உடலின் குருதியை க்ரையோபாதுகாப்பான் (Cryoprotectant) கொண்டு மாற்றுகிறார்கள். அவ்வாறு செய்யவில்லை என்றால், பனிப்படலங்கள், திசுக்களை, செல்களை, பாழாக்கிவிடும். பனிப்படலம் எங்கிருந்து வந்தது? உடலை படிப்படியாக குளிரூட்டி -1960 செல்சியற்குக் கொண்டு வர வேண்டும். மிகு குளிர் நிலையில் பனிப்படலங்கள் இப்படி உருவாகும். அந்த உடலை ஒரு உலோக உருளையில் வைத்து பாதுகாக்க வேண்டும். அந்த உலோக உருளை, வெற்றிடக் காப்புடன் இருக்கும். அந்த உருளைக்குள் திரவ நைட்ரஜன் நிரப்பப்பட்டு இருக்கும்.

உடல் உறங்கும் உருளையிலிருந்து, மனிதனை விழித்தெழச் செய்வது எப்படி? இன்றைய நிலையில் இதற்கான வழி முறைகள் இல்லை. 

ராஜ்கோட்டின் எய்ம்ஸ் மருத்துவ அமைப்புடைய உடற்கூற்றியல் துறை மருத்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள்: “நாளைய அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றம், உடற்காப்பு செய்கையில் ஏற்படும் சேதங்களைப் போக்கக்கூடிய சாத்தியங்களைத் தரலாம். இன்றைய நிலவரத்தில் க்ரையோ காப்பு முறை உடலை மீட்டு உயிருடன் உலவ விடும் என்பது ஒரு அறிவியல் சுவாரசியம்.” அல்கோர் குழுமம் நேனோ தொழில் நுட்பத்தையும் (NanoTechnology) அதில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்களையும், மீளுருவாக்க மருத்துவத் துறையின் (Regenerative Medical Science) எதிர்காலப் பாய்ச்சலையும் மனதில் கொண்டு,  குளிரூட்டப்பட்ட உடல் தேவையான நேரத்தில், இவ் உலக வாழ்விற்கு தயாராகிவிடும் என்று திண்ணமாகச் சொல்கிறார்கள். ஆனால், இதற்கான ஆதாரம் இன்று ஒரு கருதுகோள் மட்டுமே. இப்படி நிச்சயமற்ற ஒன்றில் மனிதன் ஏன் ஈடுபடுகிறான்? தன்னை, அப்படியோர் உறக்கத்திற்கு ஏன் உட்படுத்துகிறான்? அல்கோர் குழுமம் நம்பிக்கை தருகிறது, ஆனால் உத்திரவாதம் தருவதில்லை. பலர், எதிர்கால முன்னேற்றங்களைக் காண்பதற்கும், வயதாவதைத் தடுத்துக் கொள்வதற்கும், வாழ்ந்து கொண்டே இருப்பதற்குமான ஒரு வழி என்று இச் சிகிச்சையை எடுத்துக் கொள்கிறார்கள்..

அல்கோர் எப்படி இவர்களிடம் பணம் வசூல் செய்யும்? ஒரு உடலை, இந்த முறையில் பல பத்தாண்டுகளுக்கு, ஏன் வரம்பற்ற ஆண்டுகளுக்கும் கூட காப்பாற்ற பணம் தேவை. அல்கோர் ஒரு  நம்பிக்கை நிதி (Trust Fund) அமைப்பை வைத்துள்ளது. நீங்கள் ஒப்பந்தம் செய்தவுடன், நீங்கள் அளிக்கும் தொகையின் பெரும் பகுதி ‘அல்கோர் நோயாளிகள் பாதுகாப்பு நம்பிக்கை நிதியில்’ சேர்க்கப்படுகிறது. முழு உடல் பாதுகாப்பிற்கு அந்த நிதியில் உங்கள் பணம் $1,15000 வரவு வைக்கப்படுகிறது. உங்கள் மூளையை மட்டுமே பாதுகாத்தால் போதுமா-அப்படியென்றால் $25,000 அதில் வரவு வைக்கப்படுகிறது. அந்தக் குழுமத்தில் அங்கத்தினராக வேண்டுமென்றால், உங்கள் வயதிற்கேற்றாற் போல் மாதந்தோறும் $17- $100 வரை செலுத்த வேண்டும். உங்கள் குழந்தைகளை இதில் இணைக்க வேண்டுமா? ஒரு குழந்தைக்கு வருடத்திற்கு $60 செலுத்த வேண்டும்.

க்ரையோனிக்ஸ் விமர்சனங்களை சந்திக்காமல் இல்லை. அறம் சார்ந்தும், அறிவியல் ரீதியிலும் வினாக்கள் எழுகின்றன. மீட்கப்படும் வழிகள் என்ன என்பதில் தெளிவில்லாததால், க்ரையோனிக்ஸ், பல மனிதர்களுக்கு தவறான நம்பிக்கை தருகிறது. இது ஊகத்தில் செயல்படுகிறது என்று சொல்லும் எய்ம்ஸ், ராஜ்கோட் கீழ்க்கண்ட வினாக்களையும் எழுப்புகிறது.

  1. காலப்போக்கில் உறை நிலைத் திசுக்கள் சேதம் அடையாமல் இருக்குமா?
  2. மேலும் சிதைவுறாமல், உறை நிலையிலிருந்து மீள்வதற்கு இயலுமா?
  3. அப்படி மீட்கப்பட்ட மனிதரின் ஆளுமை, அடையாளம், நினைவுகள் முன்னர் இருந்த நிலையிலிருக்குமா? அல்லது அந்த மனிதருக்கு குழப்பமே எஞ்சுமா?

இந்தியா

நம் மரபிலும் நீண்ட ஆயுளைக் கேட்டு தவம் செய்தவர்களும், மரணத்தை வெல்வதை வரமாகக் கேட்டவர்களும் உண்டு. மார்க்கண்டேய மகரிஷி, நல்ல வழியில் வாழ்க்கை தொடர்வதற்காக சிவனிடம் வரம் கேட்டார். ஹிரண்ய கசிபோ, யாரும் தன்னை வெல்லக் கூடாதென்று வரம் பெற்று, பின்னர் பிறரைத் துன்புறுத்தினார்.

இன்றும் கூட, நாம் ஏழு மனிதர்களை சிரஞ்ஜீவிகள் எனச் சொல்கிறோம்- அஸ்வத்தாமா. மஹாபலி, வியாச மகரிஷி, அனுமன், விபீஷணன், க்ருபா, பரசுராமர்.

ஒளவைக்கு நெல்லிக்கனி தந்த அதியமான், அந்த அற்புதத் தமிழ்க்கவி பல்லாண்டு வாழ வேண்டுமெனத்தானே தந்தான்?

திருமூலர் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர் என்ற குறிப்பு நம்பியாண்டர் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியில் காணக்கிடைக்கிறது. திருமூலர் பல அற்புதச் செயல்களைச் செய்ததாக நம்பப்படுகிறது. அவர் பரகாயப் ப்ரவேசம் (மறு உடலில் புகுவது) செய்தார் என்று ஒரு கதை உள்ளது. 

காட்டில் அவர் நடந்து செல்கையில், மாடுகளும், கன்றுகளும் கதறுவதைக் கேட்டு அவ்விடம் சென்று பார்க்கிறார். மாடு மேய்ப்பவனாகிய ஆயன் இறந்து கிடக்க, மாடுகள் வகை அறியாமல் தவிப்பதை உணர்ந்ததும், அவர் தன் உடலை மறைத்து ஓர் மரப் பொந்திற்குள் வைத்துவிட்டு, அவன் உடலில், உயிர் எனப் புகுந்து மாடுகளையும், கன்றுகளையும் அதனதன் இருப்பிடம் சேர்க்கிறார். காட்டிற்கு அவர் திரும்பி வந்து பார்த்தால், உடல் எரியுண்டு போயிருக்கிறது. ஆயனின் உடலும், மூலரின் உயிரும் கொண்டு அவர் 3000 வருடங்கள் வாழ்ந்து, சமாதி நிலையிலிருந்து வருடத்திற்கொரு முறை இயல்பு நிலைக்கு வந்து ஒரு பாடலைச் சொல்லிவிட்டு மீண்டும் சமாதி நிலைக்குச் சென்று, சித்திகள் பல செய்து, காலத்தில் கரைந்தார். அவருடைய பாடல்கள் ஆன்மீகப் பாடல்கள், தத்துவ பாடல்கள் மட்டுமல்ல, அறிவியல் பேசும் ஒன்று. அவர் பேரண்டத்தின் புழுத் துளையை, அண்டங்களைப் பற்றிக்கூட பாடல் எழுதியுள்ளார். அவர் நந்தியின் சீடராகக் கருதப்படுகிறார். 

அண்டம் விட்டு அண்டம் செல்லும் போது, ‘பாதரச மணிக் குளிகையை வாயில் கவ்விக் கொண்டும் , கவுன மணிக் குளிகையை கையில் ஏந்திக் கொண்டும் பயணித்திருக்கிறார். பல அண்டங்களில் பல சித்தர்களையும் பார்த்திருக்கிறார். சில அண்டங்களில் தண்ணீரில் வாழ்பவர்கள் இருந்தார்களாம், வேறொரு அண்டத்தில் சிலரின் உடலைத் தொட்டால் உடலின் உள்பாகத்திற்கு கைகள் போய்விடுமாம். அவர் ஜீவ சமாதி அடைந்தது தமிழ் நாட்டிலே.

திருமூலர் அருளிச் செய்த செய்தியை, அவரது சீடரான போகர் 45 கற்பக மூலிகைகள் என்ற பாடலில் சொல்கிறார்.

  • “கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
    • கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
  • காளென்ற, 5 கரிய கரிசாலையோடு
    • 6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
  • கோளென்ற 8 கரூமத்தை 9 தீபச் சோதி
    • 10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
  • ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
    • ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா” 
  • “செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
    • 18 சிவந்த கற்றாழை 19 செஞ்சித்திர மூலம்
  • நந்திராய் சிவப்பப்பா மார்க்கத்தோடு
    • நலமான 20 கற்பிரபி 21 கற்சேம்பாகும்
  • பரந்திராய் 22 கல்லுத்தாமரையினோடு
    • பாய்ந்த 23 குழல் ஆதொண்ட 24 மகாபொற்சீந்தல்
  • 25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
    • மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே” (2)
  • “மிடுக்கான குண்டலமாம் 29 பாலையோடு
    • 30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
  • கடுக்கான 32 வெண்கண்டங்காரி யோடு
    • 33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
  • கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
    • கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
  • படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
    • 40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே” (3)
  • “தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
    • தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
  • 45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத்தைந்தும்
    • ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
  • பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
    • பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
  • துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
    • சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே.” (4)
  • “சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
    • சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
  • மத்தான மன்மதன்போல் தேகமாகும்
    • மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
  • எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
    • ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
  • அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
    • அண்டரண்டபதமெல்லாம் அறியலாமே. 

(இன்றைய சூழலில் இவைகளை யார் அறிவாரோ?)

இம்மூலிகைகளை முறையாக எடுத்துக் கொண்டால், சாவு இல்லை என்றும் மன்மதன் போல அழகுடைய  வாலிபத்தோற்றம் இருக்கும் என்றும் சொல்கிறார். முடி நரைக்காது, தோல் சுருங்காது, உடல் மூப்பு அடையாது, விண்வெளியில் உலாவரலாம். வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம். 

‘நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமையுடைத்து இவ்வுலகு’ என்கிறார் திருவள்ளுவர். மரணம் மனிதனை பயமுறுத்தும் பெரிய விசை. தனக்கு மரணம் நேரக்கூடாதென்று  மனிதன் விரும்புகிறான். உயிர் தோன்றிய காலம் தொட்டே தொடரும் மரண பயம். கண்ணனின் வாக்காக கண்ணதாசன் அற்புதமாகச் சொல்கிறார்:

“மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன்.

மானுடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடி பிறந்திருக்கும். மேனியைக் கொல்வாய்”

குறிப்புகள்

1ஃபாலிஸ்டேடின் என்பதொரு புரதம்- இதன் முதன்மைச் செயல்பாடென்பது, மற்ற புரதங்களின், ஹார்மோன்களின் உற்பத்தியை நிர்வகித்து, வீக்கங்களைக் குறைத்து, தசைகளில் வலுவேற்றுவதாகும்.

2 Vitrification என்பது ஒரு பொருளை கண்ணாடி அல்லது கண்ணாடி போன்ற பொருளாக மாற்றுவதாகும்.

துணை:

இக்கட்டுரை பல் வேறு தளங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களுடன், லா ச ரா, திருமூலர், திருவள்ளுவர், கண்ணதாசன் ஆகியவர்கள் சொன்னவற்றையும் இணைத்து எழுதப்பட்டது. அறிவியல் செய்திக்கான சுட்டிகள் கீழே தரப்பட்டுள்ளது.

https://www.businesstoday.in/technology/news/story/defying-death-and-time-how-the-rich-are-freezing-themselves-in-hopes-of-waking-up-hundreds-of-years-later-436708-2024-07-11?onetap=true

https://www.businesstoday.in/technology/news/story/tech-millionaire-who-wants-to-live-forever-edits-his-own-dna-on-a-secret-island-433670-2024-06-18


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

5 Replies to “வாழ நினைத்தால் வாழலாம்”

  1. ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்துக்களை அனாயாசமாக எழுதித் தள்ளுகிறீர்கள் பானுமதி ! எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் 100 வருடம் வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளது. நிச்சயம் நீங்கள் உதவுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    1. மிக்க நன்றி சார். சிறந்த கதைகள், கட்டுரைகள், நாவல்கள் , மொழிபெயர்ப்புகள் என்று இலக்கியத் தேனீயாக நீங்கள் இயங்குகிறீர்கள். நூறு வயதென்ன, அதற்கு மேலும் செயலுடன் வாழ என் வேண்டுதல்கள். ‘அல்கோரில்’ நீங்களும், நண்பர்களும் பதிவு செய்து கொள்ளலாமே?

  2. நல்ல தகவல்களுடன் ஒரு கட்டுரை. க்ரையோனிக்ஸ் முறையில் தன் வாழ்வை நீட்டிக்கொள்ள விரும்பும் ஒரு பணக்கார கேரக்டர் Mitch Albom எழுதிய the time keeper நாவலில் வரும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.