ரீலிஸிக்கு முந்தைய நாள் எல்லா கடனையும் அடைத்து, கே.டி.எம் வாங்குவதற்குள் பலர் காலைப் பிடிக்க வேண்டியதாயிற்று. ஒவர்சீஸுக்கு க்ரீன் மேட் அழிக்காமல் பிரிண்ட் போய்விட்டது. தமிழ்நாட்டிலாவது சரியான பிரிண்டை க்யூபில் ஏற்ற வேண்டும். ஒத்த ஆளாகச் சிரமப்பட்டான் ராம். இப்படியே பல இரவுகளின் உறக்கத்தை அந்தப் படம் காவு வாங்கிவிட்டது. ஒருவழியாகப் படம் தீபாவாளியன்று ரீலிஸானது. முதல் காட்சியிலே பாதியுடன் வீடு திரும்பினான். தலைவலித்தது. தேவையெல்லாம் நிம்மதியான தூக்கம். மெத்தையில் சரிந்தான். அடித்துப் போட்டதுபோல் உறங்கிக்கொண்டிருந்தவனை, விடாமல் ஒலித்த காலிங் பெல் சத்தம் எழுப்பியது. அருகில் படுத்திருந்த மனைவி சத்யாவைக் காணவில்லை. படுத்தவாக்கில் கழிவறையைப் பார்த்தான். பாட்டுச் சத்தம் கேட்டது. அவள் காலைக் கடனைச் சங்கீதத்தோடுதான் கழிப்பாள். காலிங் பெல் விடாமல் ஒலிக்கவும் அவளைத் திட்டியபடி எழுந்துபோய் கதவைத் திறந்தான். வெளியே யாருமில்லை. சுற்றிமுற்றிப் பார்த்தான். யாரும் தென்படவில்லை. எரிச்சலில் கதவை வேகமாகச் சாற்றிவிட்டு மீண்டும் படுக்கையில் சாய்ந்தான். தலையணைப் பக்கமிருந்த போன் நகர்ந்தது. சைலன்ட் மோடில் இருந்திருக்க வேண்டும். கண்களை முழுதாய்த் திறக்காமல் போனை எடுத்துப் பார்த்தான். புரோடியூசர் சாமிநாதன் அழைத்தார். எடுக்கவில்லை. ஏற்கனவே பலமுறை அழைத்திருக்கிறார். யார் எத்தனை முறை அழைத்தாலும் அவனுக்குத் தேவை என்றால்தான் எடுத்துப் பேசுவான். இருபத்தைந்து எண்கள் மட்டுமே போனில் சேமித்து வைத்திருக்கிறான். அதற்குமேல் ஒருவருக்கும் இடமில்லை. மற்றவர்களின் கடைசி மூன்று எண்களை மட்டும் நினைவில் வைத்திருப்பான்.
புரோடியூசர் சாமிநாதன் எதற்கு அழைத்தார் என அவனுக்கு நன்றாகவே தெரியும். இன்று திரைக்கு வந்திருக்கும் படம் ஒருவேளை விமர்சையாகக் கொண்டாடப்படுவதாகச் சொல்வார் இல்லையெனில் மோசமான வரவேற்பு எனக் கதறி அழுவார். இந்த இரண்டு செய்திகளைக் கடந்த பத்து வருடங்களாக மாறிமாறிக் கேட்டுக்கேட்டு மரத்துப்போய்விட்டது.
எதுவாகயிருந்தாலும் நன்றாகத் தூங்கி எழுந்த பின் பார்த்துக்கொள்ளலாம் எனப் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டான். கொஞ்சம்கொஞ்சமாகத் தூக்கம் அவனை ஆட்கொண்டது. மெலிதாகக் குறட்டையொலி கேட்டது, ஆழ்ந்த உறக்கம். திடீரென மீண்டும் அதே காலிங் பெல் சத்தம்!
மனைவி வந்துவிட்டாளா என எரிச்சலோடு பார்த்தான், அவள் இன்னும் ஒத்திசை பாடிக்கொண்டிருந்தாள். பெல் சத்தம் நிற்பதற்குள் கதவைத் திறக்க ஓடினான். தாழ்ப்பாள் உடையும் வேகத்தில் கதவைத் திறந்தான். இம்முறையும் யாருமில்லை. எதிர் வீடும் பூட்டியிருந்தது. ‘யாரு’ எனப் பலமுறை தொண்டை கிழியக் கத்தினான். பதிலில்லை தூரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்கவும் லேசாகப் படபடத்தது. வீட்டுக்குள் ஓடினான். சத்யா கால்சட்டை அணிந்தவாறு நடுவீட்டுக்குள் வந்தாள். தடுமாறி அவள் மீது மோதினான்.
‘எரும ஏன் இப்டி ஓடியாற.’ அவன் முதுகில் அடித்தாள்.
‘எதோ கொழந்த அழுவுற மாரி கேக்குது’ வாய்க் குழறியது.
‘எரும அது பூனை அழுவுது.’
‘பூனையா?’
‘ஆமாம் பூனை அழுது நீ பாத்ததில்ல’ நக்கலாகக் கேட்டாள். திருதிருவென விழித்தான்.
‘லூசு நிசமா பூனைத்தான் அழுவுது, இங்க வந்து பாரு’
மொட்டைமாடி போகும் படிக்கட்டின் மீது அமர்ந்திருக்கும் பூனையைக் காட்டினாள்.
‘என்னடி முட்டக்கண்ணி காலைலே அழுவுற, பூச்ச்ச்’
கருப்புநிறப் பூனை. மழையில் நனைந்த அதன் முடிகள் சாய்ந்த புற்கள் போலிருந்தன. சத்யாவைக் கண்டு அப்பூனை மீண்டும் அழுதது. ராமுக்கு அதன் அழுகுரல் ஏனோ பதட்டமூட்டியது

‘யாரு காலிங் பெல் அடிச்சா?’ எனக் கேட்டுக்கொண்டே பூனைக்குக் கருவாடுடன் சோற்றைக் கிளறி வைத்தாள். பூனை சாப்பிடாமல் பக்கத்து மாடிக்குத் தாவியது.
‘உன்னதான் கேக்குறேன் யாரு பெல் அடிச்சா?’
‘தெரியலடி வந்து பாக்குறன் யாருமில்ல’ பயந்தபடி சொன்னான்.
‘பினாத்திட்டுக்கிடக்காம போயி தூங்கு’ கதவை மூடினாள்.
ராம் யோசித்தபடி கட்டிலுக்குச் சென்றான். சத்யா அடுப்படிக்குப் போனாள். உதவி இயக்குநர் நரேனின் மனைவி செல்வி போன் அடித்தாள். சத்யா எடுக்கவில்லை. ராமைக் கல்யாணம் செய்தது முதல் அவனின் பழக்கங்கள் ஒன்றிரெண்டு இவளுக்கும் தொற்றிக்கொண்டுவிட்டது. செல்வி விடாமல் இருமுறை அடித்தாள். சத்யா இசையவில்லை. செல்வி கடையசியாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். அதில் செல்வியின் கணவர் நரேன் சாலை விபத்தில் அடிப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக வந்தது. சத்யாவுக்கு இப்போது குற்றவுணர்ச்சி எழுந்தது.
‘என்னங்க, என்னங்க.’ ராம் முதுகில் தட்டினாள்.
‘சொல்லுடி.’ அழுத்திக் கேட்டான்.
‘என்னங்க.’
‘ஏய் என்ன’ எழுந்து மெத்தையில் அமர்ந்தான்.
‘நரேனுக்கு ஆக்ஸிடன்னு அவ வெயிப் மெசெஜ் அனுப்பிருக்குங்க’
அவள் சொல்வதை உள்வாங்கியவுடன் பாதி உறக்கத்திலிருந்த ராமின் விழிகள் அவளை வெறித்துப் பார்த்தன. தலை கனத்தது. திடீரென தொடர்ந்து காலிங்பெல் அழுத்தும் சத்தம். ‘டிங் டிங் டிங்’ என்ற இசை. இருவரும் படாரெனக் கதவைத் திறந்தார்கள். பதட்டத்துடன் வெளியே பார்த்தார்கள். கருப்புப் பூனை இவர்களைப் பார்த்து அழுதுகொண்டு நின்றது. கடுப்பான சத்யா அதனைத் துரத்த முற்பட்டாள். கீழிருந்த டப்பாவை எடுத்தெறிய போனாள். அவளைவிட வேகமாய்ப் பூனை ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தது. ராமின் முகத்தைக் கீற வருவதைப் போல் நெருங்கி வரவும் சுதாரித்த ராம் ஒரு அடி பின் நகர்ந்தான். செருப்பு வைக்கும் ஸ்டாண்டில் விழுந்து. ஈரம்படிந்த டைல்ஸ் படிக்கட்டுகளில் அது வழுக்கிக்கொண்டு ஓடியது. அதன் கூர் நகங்கள் தரையில் சருக்கிய சத்தம் ராமின் உடம்பைக் கூசச் செய்தது. அப்போது மேலும் இரண்டு பூனைகள் மாடியிலிருந்து நிதானமாகப் படியறங்கின. ஒவ்வொன்றும் ஒரு நிறம். இரண்டும் ராமை உற்று நோக்கின. மீண்டும் எங்கிருந்தோ கருப்புப் பூனையின் அழுகைச் சத்தம். இருவரும் பதற்றத்துடன் எட்டிப் பார்த்தார்கள். மூன்று பூனைகளும் ஒருசேர அழுதன. ராமை இழுத்துக்கொண்டு சத்யா கதவை அடைத்தாள். அழுகைச் சத்தம் அதிகரித்தது. ஒவ்வொரு ஜன்னலாகச் சாத்தினாள். இருந்தும் வீடெங்கும் அழுகைச் சத்தம் எதிரொலித்தபடி இருந்தது.
நரேனின் விபத்து. காலிங் பெல் சப்தம். பூனையின் அழுகுரல். ஒழுங்கற்ற சிந்தனைகள் அலைக்கழித்தன. நரேனுடன் பயணித்த காலங்கள் அவனுக்கு நெருக்கமானவை. நரேன் கடுமையான உழைப்பாளி அல்ல. கூர்மையான வேலைக்காரன். ராம் தயாரிப்பு மேற்பார்வையாளராகவும் நரேன் இணை இயக்குநராகவும் சென்ற தீபாவளிக்கு வெளியான படத்தில் வேலை செய்தார்கள்.
படத்தின் முழுக்கதையும் கேட்டு அதற்கேற்ப பட்ஜெட்டை நிர்ணயித்து, சரியாகத் திட்டமிட்டுப் படத்தை உரிய நேரத்தில் முடிக்கவேண்டிய பொறுப்பு ராமினைச் சார்ந்தது. அதற்கு இணைஇயக்குநரின் ஒத்துழைப்பு மிக முக்கியம். ஷெடியூலைத் தயார் செய்வது இணைஇயக்குநர்தான். ஷெடியூல்படி ஆர்டிஸ்ட்களிடம் தேதிகளை வாங்கி படப்பிடிபுத் தளத்துக்குக் கூட்டி வர வேண்டும். நடிகர், நடிகை கால்ஷீட்களைக் கையாளும்போது ராம் அவ்வபோது கவனக்குறைவாக இருப்பான் . நடிகர்களிடம் தேதியினை மாற்றிச் சொல்லிவிடுவான். பெரும் களேபரம் வெடித்துவிடும். இயக்குநர் தலைகீழாக ஆடுவார். நடிகர்களிடம் திட்டு வாங்கி, சிரித்துப் பேசி எப்படியாவது படப்பிடிப்புக்கு அழைத்து வருவது நரேன்தான்.ராமும் பிரச்சனைக்குரிய டிப்பார்ட்மென்ட்களை நரேன் தலைக்குத் தள்ளிவிடுவான்.போஸ்ட் புரொடக்ஷனில் டப்பிங் பணிகளை நேரத்துக்கு முடிக்காமல் இழுத்தடித்த படத்தின் இயக்குநரை புரோமோசன் பணிகளுக்காக துபாய்க்கு அனுப்பி வைத்தார் தயாரிப்பாளர் சாமிநாதன். இயக்குநருக்கு அது முதல் வெளிநாட்டு பயணம். பேரானந்தத்துடன் சென்றார். நரேனிடம் டப்பிங் வேலைகளை ஒப்படைத்தார்கள். ஐந்தே நாட்களில் மொத்த படத்துக்கான வாய்ஸ்களை அவுட் எடுத்து முடித்தான். ஒரே ஆளே வைத்து ஐந்து, ஆறு பேருக்கு பின்னணி குரல் பேச வைத்தான். கடினமான சி.ஜி ஷாட்டை முன்னதாகவே எடிட்டரிடமிருந்து வாங்கி சி.ஜி கம்பெனிகளுக்குக் கொடுத்தான். இயக்குநர் துபாயிலிருந்து திரும்பும் முன் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி ரெடியாக இருந்தது. சாமிநாதன் மெய்சிலிரித்துப் போனார். நரேனிடம் காட்டிகொள்ளவில்லை.
நரேனின் அறையிலே ராம் நாள்கணக்காகக் கிடப்பான். நரேன் சிறந்த சமையல்காரன். வித விதமான கறிக்குழம்புகளைச் சாப்பிட்டபடி நரேன் எழுதிய திரைக்கதையைப் படமாக்குவது பற்றி விவாதிப்பார்கள். நரேன் குறைந்த பொருட்செலவில் ஒரு திரைக்கதை உருவாக்கி வைத்திருந்தான். ஒரு பூனை, ஒரு அறை, ஒரு தேர்ந்த நடிகர் இருந்தால் போதும் இருபது நாட்களில் படத்தினை முடித்துவிட முடியும்.
‘போக வழியின்றி பூனையை மறித்துப்பார்
புலியினைக் காண்பாய்’.
இன்குலாப் கவிதையை மையமாக வைத்து எழுதியிருந்தான். பசியில் தவிக்கும் பூனையை அறையில் அடைத்து வைத்துவிட்டுப் போகிறான்.
போக வழியின்றி தவிக்கும் அப்பூனை, அவன் அறைக்கும் திரும்பி வரும்போது மூர்க்கமாகி அவனைக் கொல்கிறது இதுவே படத்தின் கதை. திகிலுட்டும் விதத்தில் திரைக்கதை அமைத்திருந்தான். காட்சி காட்சியாக நரேன் விளக்கும்போது ராமுக்கும் பயத்தினைக் கொடுக்கும். ராம் நரேனுக்கு அதீத நம்பிக்கை அளித்திருந்தான். தயாரிப்பாளரிடம் அவ்வப்போது நரேனின் கதைப் பற்றி ராம் கலந்து ஆலோசிப்பான். தயாரிப்பாளர் சாமிநாதனுக்கு முழுக்கதையைக் கேட்கும் பழக்கமில்லை. ஒன்லைன் மட்டுமே கேட்பார். நரேன் ஒன்லைன் சொல்வது போல் இரண்டு முக்கிய காட்சியை எடுத்துரைத்தான். தயாரிப்பாளர் சாமிநாதனும் அதைக் கேட்டு மிரண்டார். கம்பெனியின் அடுத்த படம் உன்னுடையது தான் என்று சத்தியம் செய்தார். அவர்கள் வேலை செய்த படமும் வெளியானது. வர்த்தகரீதியாக பெரும் நட்டம். தயாரிப்பாளருக்குப் போட்ட பணத்தில் பாதிதான் திருப்பிக் கிடைத்தது. இருந்த போதிலும் நரேன் சிந்திய வேர்வைக்கு ஊதியத்துடன் கூடுதலாக கொஞ்சம் போனஸும் கொடுத்தார். அத்துடன் நரேனுக்குக் கணக்கு முடித்தார் தயாரிப்பாளர் சாமிநாதன்.
மந்திரித்து விட்டவன்போல் நிற்கும் ராமை உலுக்கினாள்.
‘இரு, நான் செகரெட்டரி சீனிவாசன் வீட்டுலே போய் பாத்துட்டு வரேன்’
‘அவர் வீட்ல என்னங்க பாக்க போறீங்க?’
பதிலளிக்கமால் லுங்கியைச் சரிசெய்து கிளம்பினான். இந்த அப்பார்மெண்டில் ராமுக்குத் தெரிந்த ஒரே நபர் சீனிவாசன்தான். அதுவும் மாதாமாதம் அவரிடம் பரமாரிப்பு காசு கொடுப்பதால் அறிமுகம். முதல் தளத்திலிருந்த வீடுகளும் பூட்டியிருந்தன. தீபாவளியையொட்டிச் சொந்தவூருக்குச் சென்றிருக்கலாம் என யூகித்தான். மொத்தம் ஆறு வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு. சீனிவாசன் வீடும் சாத்தியிருந்தது. பார்க்கிங்கில் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று கேமராக்களைப் பார்த்தான். தூசி படிந்திருந்தன. சத்யா மொட்டைமாடியிலிருந்து கத்தினாள்
‘என்னங்க என்னங்க.’.
ஓட்டமும் நடையுமாக மாடிப்படிகளில் ஏறினான். ஒவ்வொரு படியிலும் பூனையின் கால்தடங்கள். படியேறிக்கொண்டிருக்கும் போதே சத்யா பயத்தில் மீண்டும் கத்தினாள்.
‘என்னங்க, என்னங்க’
‘செருப்பால அடிப்பேன், முத சொல்லுடி எப்ப பாரு என்னங்க என்னங்கன்னுட்டு’
‘இல்லைங்க, நரேனைப் பாக்க போலாமா’
‘அதுக்கு ஏன் இப்ப கத்துன’
‘டி.வி. நீயூஸல அவர் ஆக்ஸிடன்ட்டு காட்டுனூங்க’
‘என்னடி சொல்லுற, பெரிய ஆக்ஸிடன்ட்டா, நவுரு’
ஹாலிலுள்ள டி.வி.யைப் பார்த்தான். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ‘எங்கடி?’ என்றவுடன் அவளது போனை நீட்டினாள். அதில் நரேன் டூவிலர் லாரி மீது மோதிக் கிடந்தது. தலை பிளந்து இரத்தம் வடிந்தபடி உயிருக்குப் போராடினான். வீடியோவைக் கண்டதும் ராமுக்குப் பேச்சு மூச்சில்லை. லாரி டிரைவர் முழுபோதையில் வண்டி ஓட்டிச் சென்றதாகச் செய்தி வாசிப்பாளர் சொன்னது மட்டுமே காதில் விழுந்தது.
நாளடைவில் ராம் நரேனிடம் பேசுவதை தவிர்த்தான். அதற்கு நம்பமுடியாத பல காரணங்களை அடுக்கினான். தயாரிப்பாளர் சாமிநாதனுக்கும் பெரிய நடிகரின் கால்ஷீட் கிடைக்கவும் நரேன் படம் கேள்விக்குறியானது. விரக்தியில் சுற்றினான். நரேனின் காதலி பெட்டியோடு அவனது அறையில் வந்து நின்றாள். முதல் படம் கையெழுத்தானவுடன், கல்யாணம் எனப் பேசிவைத்திருந்தான். சூழ்நிலை வேறொன்றைத் தீர்மானித்தது. நரேனின் பெற்றோர்களுக்கு இதில் விருப்பமில்லை. நண்பர்களின் உதவியோடு எளிய முறையில் திருமணம் நடந்தது. வடபழனி முருகன் கோயில் முன்பு ரோசாப்பூ மாலை மாற்றி இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்தார்கள். நாங்கள் இருவரும்தான் உனக்குச் சாட்சி கையெழுத்துப் போடுவோம் என்று சத்தியம் செய்த ராமும் சத்யாவும் கடைசிவரை வரவில்லை. குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினார்கள்.
செல்வி, நரேன் இருவரிடையே வரும் சண்டைகளைச் சத்யா தீர்த்துவைப்பாள். அதேபோல் ராம், சத்யா மோதல்களுக்கு சமரசம் செய்வது செல்விதான். செல்வி கர்ப்பம் உண்டானதை முதலில் சத்யாவிடம்தான் சொல்ல ஆசைப்பட்டாள். சத்யாவுக்கு போன் செய்தபோது எப்போதும் எடுக்காதவள் அன்று தவறுதலாக எடுத்து விட்டாள்.
‘ஸாரிடி மேரேஜ் அன்னைக்கு, ஊர்ல முக்கியமான வேலயா போயிட்டோம் அதான் வர முடியல, ஃப்ரீயா இருந்தா நாளைக்கு வீட்டுக்கு வா.’
செல்வியும் தான் கருவுற்றிருப்பதைச் சொன்னாள். பெருமகிழ்ச்சியடைந்தவள் போல் ‘அப்ப கண்டிப்பா நீ நாளைக்கு நரேனோட வீட்டுக்கு வரணும்’ என சத்யா ஆணையிட்டாள்.
நரேன் எவ்வளவு சொல்லியும் செல்வி கேட்கவில்லை.
‘அவதான் வரச் சொன்னா, வாங்க போலாம்’ என வலுக்கட்டாயமாக அவனை அழைத்துச் சென்றாள். அரைமனதோடு வண்டியில் ஏறினான். ராம் வீட்டுக்கு போகும் வழியிலே சத்யாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. அவசரமாக ராம் ப்ரோடியூசரோடு மீட்டிங்குக்குச் சென்றிருப்பதால் இன்னொரு நாள் பாக்கலாமென்று. நரேன் மெலிதாகப் புன்னகைத்து வீட்டுக்குத் திரும்பினான். அதன் பிறகு சத்யாவுக்கு இன்றுதான் செல்வி போன் செய்தாள்.
தீபாவளிக்கான சமையலைத் தொடங்கினாள் சத்யா. ராம் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து, நாட்டுக் கோழி சாப்பிட்டு மீண்டும் படுக்கையறைக்குப் போனான். உடல் சூடு தணிந்தது. நிம்மதியாக உறங்க வேண்டும் அவனுக்கு. சத்யாவும் வயிறு முட்ட சாப்பிட்டாள். ராம் அருகில் படுத்தாள். வாட்சப்பில் எல்லோரது ஸ்டேடஸ்களை நோட்டமிட்டான். சத்யா போனிலும் ஆராய்ந்தான். நரேனின் புகைப்படமிட்டு யாராவது இரங்கல் செய்தி வைத்துள்ளார்களா? எனத் தேடினான். நல்ல வேளையாக அப்படி எதுவுமில்லை. இருவரும் கண் அப்போதுதான் அசந்திருப்பார்கள். அதே டிங் டிங் டிங் சப்தம். தூக்கிவாரிப் போட்டது. படுக்கையிலிருந்து தவறி விழப்போனவன் வாசல் கதவை நோக்கி வேகமாக ஓடினான். வெடுக்கென திறந்ததில் கைப்பிடி உடைந்தது. கஷ்டப்பட்டுதான் கதவைத் திறந்தான். வழக்கம்போல யாருமில்லை. மொட்டை மாடியிலிருந்து பலத்த காற்று வீசியது. பைத்தியம் பிடித்தவனாக இங்குமாகும் நடந்தான். காலிங் பெல் பட்டனைச் சோதித்துப் பார்த்தான். அவன் அழுத்தும்போது சத்தம் கேட்கவில்லை. கையை எடுத்த பின்னும் ஸ்விட்ச் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. பட்டன் நெளிந்திருந்தது. ஸ்விட்சை பழைய மாதிரி சரிசெய்யப் பார்த்தான். வெறுப்படைந்ததுதான் மிச்சம். அது மட்டம் பார்க்காத பலகை போலிருந்தது. ஐந்தாறு பூனைகள் வரிசையாக மாடிப்படிகளில் அணிவகுத்து நின்றபடி ராமின் நடவடிக்கைகளை வெறித்துப் பார்த்தன.
‘இந்தாடி நாளைக்கு ஒரு பூனை வீட்டு பக்கம் இருக்கக்கூடாது, சனியனுங்க அதுங்க தான் தாவும் போது பட்டனை உடைச்சிருக்கு போல, அதான் காலிங் பெல் கண்டபடி அடிக்கிது’
‘சும்மா ஏதாவது உளறாதீங்க, அதுங்க எப்படி ஸ்விட்சில தாவும்’
கண்களைத் திறக்காமலே பதிலளித்தாள். அவளைச் சொல்லி எந்தப் பலனுமில்ல. பூனைகளை ஆசை ஆசையாக இவளும், எதிர்வீட்டு அம்மாளும்தான் வளர்க்கிறார்கள். இந்த உலகில் எதைக் குறை சொன்னாலும் ஒப்புக்கொள்வள், பூனையைச் சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். ‘பாவம் வாயில்லா ஜீவன்’ எனச் சண்டைக்கு வருவாள்.
பண்டிகை நாள் என்பதால் எலக்டீரிஷியன் கிடைக்கவில்லை. சத்யா இரவு சாப்பிடாமலே தூங்கப் போனாள். படுக்கையறையை உள்தாழிட்டுக்கொண்டாள். நாளைக்கு எப்படியாவது ஒரு எலக்டீரிஷியனை அழைத்து வந்து பழுது பார்த்துவிட வேண்டும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். ஹாலிலேயே படுத்தான். கண்களை மூடி தன்னிலை மறக்கும் நொடியில் டிங் டிங் டிங் டிங் சத்தம். படுக்கையறைக் கதவைப் பலமுறை தட்டியும். அவள் திறந்தபாடில்லை குட்டிப்போட்ட பூனை போல் கதவின் அருகிலே அலைந்தான். அறவே தூக்கமில்லாமல் போனது. கதவைத் திறந்து வைத்தபடியே வாசலைப் பார்த்து நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தான். உட்கார்ந்தபடி தூங்கினான். தன்னை மீறி கண்ணிமைகள் மூடும் நொடியில் எங்கிருந்தோ ‘டிங் டிங் டிங்’ சத்தம் கேட்டுத் தடாலென எழவும் நாற்காலி கவிழ்ந்தது. அவனும் விழுந்தான். தலையில் அடிபட்டது. பின்னந்தலையில் கொப்பளம்போல் உப்பியது. அதை யாரோ நாக்கால் வருடுவதுபோல் உணர்ந்தான். ஆனால் கண் திறந்து பார்க்கவும் முடியவில்லை. மிகவும் பிரயாசைப்பட்டான். காய்ந்த பசைகளைப் பிய்க்கும்போது எழும் ‘டப்’ ஒசையோடு கண்ணிமைகள் பிரிந்தன. தலையில் அடிபட்டிருக்குமிடத்தைத் தன் சொரசொரவென்ற நாக்கால் கருப்புப் பூனை நக்கிக்கொண்டிருந்தது. அதன் கழுத்தைப் பிடித்து நெறித்தான். தன் கூர்மையான கால் நகங்களால் அவனைப் பிறாண்டியது. தூக்கி வீசினான். சுழன்று பறந்த பூனை கச்சிதமாகத் தரையில் காலூன்றி நின்று இவனைப் பார்த்து முறைத்தது. உரக்க அழுதது. அடிப்பதைப் போல் கை ஒங்கினான். அதுவும் சீறியபடி பாயத் தயாராகவும் அச்சமேலிட்டது. தன் உடலைச் சிலிர்ப்பியபடி மெதுவாக. வீட்டை விட்டு வெளியேறியது.
சோம்பல் முறித்துபடி எழுந்த சத்யா ராமைக் கண்டு அதிர்ச்சியானாள்.
‘என்னடி எத்தன வாட்டி கதவ தட்டுறது, காதுலென்ன ஈயமா பூசி வச்சிருக்க.’
‘என்னனெ தெரில, யாரோ அடிச்சி போட்டது போல தூங்கிட்டேன், நீ ஏன் இப்டி நிக்கிற.’
‘நைட்டெல்லாம் ஒரு பொட்டு கூட தூங்குல, விடிஞ்சிச்சுல, இரு எலக்டீரிஷியனக் கூட்டிட்டு வரேன்.’
அணிந்திருந்த முண்டா பனியனோடு புறப்பட்டான். அவனின் வினோத நடவடிக்கைகளைப் பற்றி அம்மாவிடம் போன் போட்டுப் புலம்பினாள். தர்கா கோயில் சென்று தாயத்துக் கட்டி வரச் சொன்னாள். மந்திரிப்பது, ஜாதகம் பார்ப்பது ராமுக்கு ஆகாத காரியங்கள். சொன்னால் கண்டபடி எரிந்து விழுவான்.
அலைந்து திரிந்து எலக்டீரிஷியனைக் கண்டுபிடித்துவிட்டான். அளவுக்கு அதிகமாக அவன் குடித்திருந்தான். பேச்சில் காட்டமான சாராய வாடை. போதைக் கிறக்கத்திலே ஒயர்களைப் கண்டபடி பிரித்தான். புது ஒயர்களைக் கொண்டு கனெக்ஷன் கொடுத்தான்.
பழைய ஒயர்கள் எல்லாம் எரிந்துவிட்டன, மொத்தமாக மாற்றியுள்ளேன் எனப் பெரிய ரசீதை நீட்டினான். பெல் அடித்து சோதித்துக் காட்டினான். ராமும் பல முறை சோதனையிட்டான். பட்டன் அழுத்தும்போது மட்டுமே சத்தம் வந்தது. இருந்தும் எலக்டீரிஷியனை அரை மணி நேரம் காக்க வைத்தான். தானாக ‘டிங் டிங் டிங்’ சத்தம் எதுவும் கேட்கவில்லை. ராம் பெருமூச்சுவிட்டான்.
நேற்று ரீலிஸான படத்துக்கு எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு. படம் சுமார்தான். ஆனால் பெரிய நடிகரின் படம் என்பதால் திரையரங்குகளில் ரசிகர்கள் ஈசல் கூட்டம் போல் குவிந்தார்கள். பதினைந்து முறைக்கு மேல் கூப்பிட்ட தயாரிப்பாளர் சாமிநாதனுக்குத் திருப்பி அழைத்தான். தயாரிப்பாளர் பெரும் சந்தோஷ மனநிலையிலிருந்தார். அவனது வீட்டு வாசலில் உயர் ரக கார் வந்து நின்றது. முகத்தை மட்டும் கழுவினான். காரில் ஏறினான். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வெற்றிக் கொண்டாட்டம் ஆர்ப்பாட்டமாக நடந்தது. ராம் போதை தெளிய தெளியக் குடித்தான். ஹோட்டல் வரவேற்பறையில் நரேனின் மனைவி செல்வி நிற்பதாகத் தோன்றியது. திரும்பி வந்து பார்த்தான். செல்வி அங்கில்லை. நரேன் விபத்து பற்றி தயாரிப்பாளரிடம் போதைமிகுதியில் சொன்னான். அவர் பொருட்படுத்தவில்லை. உடனே அங்கிருந்து கிளம்பியவன் நரேன் நம்பருக்கு அழைத்துப் பார்த்தான், ஸ்விட்ச் ஆப். கிறுக்கு பிடித்தவன்போல் நடந்தும், ஓடியும் வீடு வந்தடைந்தான்.
சத்யா அவனைக் குளிக்க வைத்தாள். மெதுவாகப் படுக்கையில் சாய்த்தாள். மாமியாரிடம் பொதுவாகப் பேச விரும்பாத சத்யா, இன்று போன் செய்து ஒன்றுவிடாமல் ஒப்புவித்தாள். அவனின் அம்மா சத்யாவைத் திட்டித் தீர்த்தாள். உடனே சென்னைக்கு பஸ் பிடித்தாள். ராம் விடிய விடிய உறங்காமல் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். சத்யா அவன் தலையில் எலுமிச்சைப் பழம் தேய்த்துப் பார்த்தாள். பித்தம் குறைந்தபாடில்லை. அவனது அம்மா வந்தவுடன், ராமின் உடல்நிலைக் கண்டு பதற்றமடைந்தாள். மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவர் பரிசோதித்து ஊசி போட்டார். தூங்கி எழுந்தால் எல்லாம் சரியாகிவிடுமென்று சத்யாவையும், அவனது அம்மாவையும் தேற்றி அனுப்பினார்.
மருத்துவமனையிலிருந்து திரும்பும்போது அவர்கள் அப்பார்ட்மெண்ட் வாசலில் வழக்கத்துக்கு மாறான கூட்டம். ஆட்டோவிலிருந்து இறங்கியதும் சத்யா என்னவென்று விசாரித்தாள். யாரோ ஐந்து பூனைகளுக்கு விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக அப்பார்ட்மெண்ட் செகரெட்டரி சீனிவாசன் சொன்னார்.
ராம் பிரமை பிடித்தவன்போல் சோபாவில் அமர்ந்திருந்தான் சத்யாவும் அவனது அம்மாவும் எவ்வளவு பேசியும் பதிலில்லை. அவனது அம்மா கஷாயம் காய்ச்சிக் கொடுத்தாள். மிடறு மிடறாக அருந்தினான். அவனது கண்கள் சிவந்திருந்தன. சத்யாவும் அம்மாவும் அசதியில் படுத்தார்கள். இருவரின் குறட்டையும் ஒரே விதமாக ஒலித்தன. ராமுக்குக் காதடைத்தது. மெல்ல எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றான். நிலாவை வேடிக்கை பார்த்தபடி சிறு சத்தங்களைக் கூட நுண்ணறிய ஆராய்ந்தான். பறவைகளின் குரல்கள் பெரிதாக அவனை தொந்தரவு செய்யவில்லை. அவனைத் தேடி சத்யாவும், அம்மாவும் மொட்டை மாடிக்கு ஓடி வந்தார்கள். ராமைக் கண்டதும் இருவரும் நிம்மதியானர்கள். சத்யா மொட்டைமாடியில் படுக்கை விரித்தாள். மூவரும் படுத்தார்கள். சற்று நேரத்திலேயே இருவரும் குறட்டை விட்டார்கள்.
உச்சுக்கொட்டியபடி ராம் வீட்டுக்குள் வந்து படுத்தான். ஏ.சி. எந்நேரமும் இயங்கியபடி இருந்ததால் படுக்கையறை நல்ல குளிர்ச்சியாக இருந்தது. கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டான். கண்களை இறுக மூடினான். உடல் மெதுவாகத் தன்னிலை மறந்தது. மெல்ல தூக்கத்துக்குச் சென்றான். மெல்லிய குறட்டைச் சத்தம் பூமியைக் கடந்து மிதந்தான். இருட்டு சூழ்ந்தது.
இடிபோல் டிங் டிங் டிங் சத்தம். பதறியடித்து எழுந்தான். கதவைத் திறந்தான். வெளியே யாருமில்லை. வேகவேகமாக மாடிப்படி இறங்கினான். ரோட்டில் எவருமில்லை. மொட்டைமாடிக்கு விரைந்தான். அங்கே சத்யாவும், அம்மாவும் மட்டுமே இருந்தார்கள். அத்தனை கொசு கடியிலும் தூங்கிக்கொண்டிருந்தாகள். உள்ளூர அச்சம் ஏற்பட்டது. அவர்களின் நடுவில் படுத்தான். உறங்காமல் நிலா நகர்வதை அளந்தான். ஆறு நட்சத்திரங்கள் அவனை இரண்டு மணி நேர இடைவெளியில் கடந்திருந்தன.
நிலா மேகங்களில் மறைந்தபோது தன்னையறியாமல் ராம் கண்களை மூடினான். தூரத்திலிருந்து ‘டிங் டிங் டிங்’ சத்தம். பதறி எழுந்தான். போகப்போக இன்னும் சத்தமாக ஒலித்தது, திடுதிடுவென மாடிப்படியில் இறங்கினான். வீட்டு வாசலை அடைந்தான். காலிங் பெல் பட்டன் தானாக இயங்கியது. பயத்தில் வீட்டிற்குள் ஓடிக் கதவை அடைத்தான். வீடு முழுவதும் பூனைகள் நிறைந்திருந்தன.
***
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
