
கடவுள்களால் காதலிக்க முடியாது
ஆனால் என்னுடைய கடவுள் காதலித்திருக்கிறார்
மிதி வண்டி வாடகைக்கு எடுத்துக்கொண்டு
மூன்று கிலோ மீட்டர்கள் பயணித்து
காதலியின் வீட்டை நோட்டமிடுகிறார்
திடீரென்று காதலியின் தந்தை வெளியே வருகிறார்
என்ன இந்தப்பக்கம் என்ற கேள்விக்கு
பதில் சொல்லாமல் திகைக்கிறார்
அவர் இதுவரை கேட்ட எல்லா ஸ்லோகங்களும் மறந்து விட்டன
குடிக்க தண்ணீர் கேட்கிறார்
அவருடைய காதலி தண்ணீர் கொடுக்கிறார்
குடித்த பின்புதான்
அவருக்கு அதிகதிகமான தாகம் எடுக்கிறது
காதலியின் தந்தை கேட்கிறார்
தம்பி நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா
கடவுள் விழுங்கிய படி பதில் சொன்னார்
இல்லையென்றார்
என்னாமா நீ அவரை காதலிப்பதாய் சொன்னாய்
அவர் இல்லையென்கிறார்
கடவுள் சொல்கிறார்
இந்த நிலத்தில் கடவுளே ஆனாலும் காதலை சொல்லும் போது
நிறைய பயப்பட வேண்டியிருக்கிறது
அதுதான் இந்த நிலத்தின் நிறம்
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
