தோசையம்மா  தோசை

’அம்மாவின் தோசைகள்’  என்று ஒரு கதை எழுதலாம் என்றால் நான் எழுத்தாளன் இல்லை. அமெரிக்கா வந்தபிறகு அம்மா  வார்க்கும் தோசையின் நினைவு அதிகமாகவே வருகிறது.. 

க்ருத்திகாவுக்கு அம்மா போல  வட்டமாய் தோசை வார்க்க வருவதில்லை குழந்தை நகுலுக்காக  மிக்கிமௌஸ், டொனால்ட் டக் என்றெல்லாம்  வார்க்கிறாள். எனக்காக  ரோஸ்டாக ரவுண்டாய் வார்ப்பதில்லை..ஒன்று வேகாத வெள்ளை  தோசை. இல்லாவிட்டால் கருகியவாசனையுடன்  கருப்பு தோசை. சில சமயம் கனம் கனமாய்  கல் தோசைகள்.. தோசை வார்ப்பதும் ஒரு கலை அது அம்மாவுக்கு மட்டும் கை வந்த கலை..

’தோசைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்  என் அம்மாவின் கைமணம் தனிவிதம்”  என்று  அம்மாவுக்காக சின்னவயசில் பாட்டு எழுதியதை தங்கையிடம் காட்டினேன். ”போடா  சினிமாபாட்டு காப்பி அடிக்கறே” என்றாள்.

“நீதான் எழுதேண்டி..அம்மா மாதிரி உலகத்துல யாராலும் தோசை வார்த்துப் போட முடியாது” என்றேன்.

“உண்மைதான். அம்மா  தோசை வார்த்தால் நாலு தோசைக்கு எட்டு தோசை சாப்பிடலாம்..ஆனாலும் அன்னிக்கு வந்த உன் ஃப்ரண்ட் கண்டது காணாதது மாதிரி பத்து தோசை சாப்டானே?”

”அவன் வடக்கிலிருந்து வந்தவன் காலேஜ்ல புதுசா சேர்ந்திருக்கான்…ஆனா அம்மாக்கு எவ்வளவு பெருமை தெரியுமா அவன் தோசையைப் புகழ்ந்து தள்ளினானே! இத்தனைக்கும் அவன் ஹிந்தியும் தமிழுமா  அரைகுறையா  அம்மாகிட்டப் பேசினான்”

”நம்ம அம்மாக்கு தோசைவார்க்க சலிக்காதுடா..  .”

”ரவாதோசை  மசால்தோசை  கரைச்ச மாவு தோசைன்னு  எது பண்ணாலும் அம்மாவின் கை மணமே தனி..”

படிப்பு முடித்து  வேலைக்காக  அமெரிக்கா  வந்ததும் போனில் அம்மாவிடம்,”  அம்மா! நீ அமெரிக்காவுக்கு வாம்மா..  நயாகரா வாசல்ல புல்வெளில்  நீ மட்டும் தோசைக்கடை போட்டா ஒரே நாள்ல   லட்சம் டாலர் சம்பாதிக்கலாம்” என்பேன் .

அம்மா சிரிப்பாள். அம்மாவுக்கு ஆசைகளே கிடையாது  எப்போதும் சமையலறைதான். சமைப்பது அடிக்கடி தோசை வார்ப்பது..

என்றைக்காவது இட்லியோ உப்புமாவோ  சப்பாத்தி பூரியோ செய்தால்  ஏதோ ஒப்புக்கு சாப்பிடுவோமே தவிர  தோசை என்றால்தான்  எல்லார்க்கும் குஷி. எங்களுடன்  அம்மாவும் தோசையை தட்டில் போட்டு க்கொண்டு சாப்பிடும்போது அதிலிருந்து ஒரு விள்ளலை  பிடுங்குவது சுஜியின் வழக்கம். அம்மா சிரித்தபடி  அந்த விள்ளலை அவள் வாயில் ஊட்டிவிடுவாள்.

”அம்மா  வார்க்கும் தோசை  ருசியா அம்மாவின் தட்டில் இருக்கும் தோசை ருசியா, பட்டிமன்றம் போடுடா ரகு!”

“அம்மா தட்டிலிருக்கும் தோசைதான் என்ன சந்தேகம்!  கைமணம்  அதில் இன்னும் நெருக்கம்”  என்றேன் நான்.

’தோசை கண்டேன் தோசையே கண்டேன்’ என அப்பா  தோள் கண்டேன் தோளே கண்டேன் ராகத்தில்  கிண்டலாய் பாடினாலும் அம்மா அதை புன்னகையுடன் தான் ஏற்பாள். 

அம்மாவுக்கு அமெரிக்காவிலிருந்து   மாவு ஒட்டிக்கொள்ளாத  ’ நான்ஸ்டிக்’ தோசைக்கல் வாங்கிவர கேட்டபோது ” வேண்டாம் ரகு…பழகின  அந்த இரும்பு  தோசைக்கல்தான்  வார்க்க  வாகாயிருக்கு.  அதுல  வார்த்தால்  தோசை நேரமானாலும்  பட்டுத்துணிபோல இருக்கும் ”என்றாள்.

அம்மா  தன் கல்யாணம் ஆன புதிதில் ஸ்ரீரங்கம் போனபோது அங்கே கோயில் ரங்கவிலாஸ் கடை ஒன்றில் வாங்கியதாம். வைர நெக்லஸ் போல அதை  பாதுகாக்கிறாள்.

ஜெர்மனியிலிருந்து  சுரேஷ் போன் செய்கிறான்..

”ரகு, இந்தியாக்கு இன்னிக்கு  என் ஒய்ஃபை கூட்டிண்டு கிளம்பறேன்  சென்னை போனதும்   உன் வீட்டுக்கு போகப் போறேன்  உன் அம்மாகையால தோசை சாப்பிடணும்  அதன் ருசியை அனுபவிக்கணும்டா..காலேஜ் நாளில் சாப்பிட்டது”

”ஓ போய்ட்டு வாடா…  எனக்கே இன்னிக்கு ரொம்பவே அம்மா கையால தோசை சாப்பிட ஆசையா இருக்கு. முப்பத்து மூணு வயசுக்கு மூணு வயசுக் குழந்தையா  தவிக்கறேன்..நீ போய்  சாப்பிடு. அம்மாவும் ஆசைஆசையா செய்துபோடுவாள்”

சுரேஷைப் போல வெளிநாடு வெளியூர்  என்று வந்து விட்ட என் நட்பு வட்டம்  அம்மாவின் தோசைக்கு அடிமைகள்..  இதுவரை லட்சம் தோசைக்கு மேல்  அம்மா வார்த்திருப்பாளா! 

”ரகு ! உனக்கு ஓட்ஸ்,  ஸ்கிம் மில்க்  கிச்சன் ஐலண்ட்ல இருக்கு .  ஃப்ரிட்ஜ்ல கட் பண்ணின ஃப்ரூட்ஸ் ரெடி.   டேய் நகுல்  போதும்டா போனில்  கேம் விளையாடினது…எழுந்துவா…அப்றோம் ரகு! நான் நகுலை  ஸ்கூல் பஸ்ஸில்  ஏத்திவிட்டு ஆபீசுக்கு அப்டியே போறேன்..ப்ரேக்ஃபாஸ்ட் ஸ்கிப் பண்ணாதே  சாப்பிடு  என்ன?”

”க்ருத்தி..  வர வர தோசையே செய்ய மாட்டேங்கிறே நீ”

”செய்தாலும்  ஒழுங்கா சாப்பிடறியா நீ  அம்மா  வார்க்கிற மாதிரி இல்லைங்கிறே?”  

சிரித்தபடி க்ருத்திகா  நகுலை  சோபாவிலிருந்து  இழுத்துக்கொண்டு   போனாள்.  அவள் கார்  சென்ற சத்தம்கேட்டதும்  அப்படியே உட்கார்ந்தவனுக்கு  தோசை ஞாபகம்  அதிகம் வந்துவிட்டது.  

அப்பா அம்மாவுக்கு  போன்பண்ணி  பேச ஆவலானது.

நகுல்  என் போனில் ஏதோ கேம் விளையாடிவிட்டு  போனை எங்கே போட்டான்  என்று தேட ஆரம்பிக்கிறேன் .அப்போது  செல்போன்  ’நான் சோபா இடுக்கில் இருக்கிறேன்’ என்று குர ல்கொடுத்தது.விரல்களால்  துழாவி  வெளியே எடுக்கிறேன்.

அட!  அப்பாவே  வாட்ஸ் அப்பில்  அழைக்கிறார்.

“ஹலோ அப்பா 100ஆயுசு  உனக்கும் அம்மாக்கும்” என்கிறேன்  குதூகலமாய்.

”ர்..ரகு.. அ,,அதுக்கு அம்மா கொடுத்து வைக்கலைடா”

”அப்பா..ஆ.ஆ?”

”ஆமாண்டா அம்மா போய்ட்டா  அரைமணி  முன்னாடி  இன்னிக்கு ஏகாதசிக்கு  கோதுமை மாவு தோசை எனக்கு வார்த்துண்டே இருந்தா. திடீர்னு  துடுப்புக்கையோட நெஞ்சைப் பிடிச்சி கீழஉக்காந்துட்டா..பயந்தே போய்ட்டேன்  தண்ணி கொடுத்தேன்.. சாப்டதும் அப்படியே  தலைசரிஞ்சுடுத்து  எதிர் ஃப்ளாட் டாக்டர் வந்து  அம்மா போய்ட்டான்னுட்டார்டா .. என்னால்நம்பமுடியல  அவளோட உள்ளங்கைல  இன்னும் தோசை துடுப்பு இருக்குடா ரகூஊ”

அப்பா அழுதுவிடுவார் போலிருந்தது எனக்கு  துக்கம் நெஞ்சை அடைக்கிறது. சுதாரித்துக்கொண்டு  ஃப்ளைட்  டிக்கட் புக் செய்ய  ஆயத்தமாகிறேன்.

ஆயிற்று இந்தியா வந்து ஐஸ்பாக்சிலிருந்த  ஐம்பத்தி ஆறு வயசான  என் அம்மாவைப் பார்த்து கதறி அவளுக்கு  மகனாய் செய்யவேண்டிய இறுதிக் காரியங்களையும் செய்து  முடித்தாயிற்று

”நாளைக்கு  சாம்பல் வந்துவாங்கிக்கலாம் ” என  மின் சுடுகாட்டில் கூறியபோது  நான் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினேன்.

தங்கைதான் அருகில்வந்து  சமாதானப்படுத்தினாள் ”அழாதடா, நல்ல சாவுடாரகு…படுக்காம கொள்ளாம எத்தனை பேருக்கு இந்தபாக்யம் கிடைக்கும்?” என்றாள். 

என்னைவிட ஆறுவயது சின்னவள்..அறிவு முதிர்ச்சியாய்  பேசினாள்.

” சுஜி..நாம  அம்மாவை  திருப்தியா  வச்சிண்டோமாடி?  அமெரிக்கா  போய்ட்டேனே  ஆறுவருஷமா   இங்கயே இருந்திருக்கலாமோ  பாழும் டாலர் ஆசைல போனேன்..ஆனா  சம்பாதிச்சி  சேர்த்து வச்சி அப்பா அம்மாக்கு  சொந்த வீடு கட்டித்தர நினச்சேன்..அடுத்த வருஷம் அதை ஆரம்பிக்க திட்டம்போட்ருந்தேன்..”

’ஆண்டாள் நிலையம்’ னு நீ கட்ற புதுவீட்டுக்கு அம்மாவோட பேரை  வைப்போம்..அவ மனசெல்லாம் நம்மகிட்டதான் இருக்கும்..விடாம  தினமும் ராத்திரி படுக்கறதுக்கு முன்னாடி ஸ்ரீராம்ஜெயம் எழுதுவா…அம்மாக்கு ஒருகுறையும் இருந்திருக்காதுடா..”.

”ஆமாம்..உங்க  அம்மாக்கு குறை பட்டுக்கவே  தெரியாது” என்று விசும்பினார் அப்பா. ”எந்தசூழ்நிலையிலும்  அவ புன்னகையை இழக்கமாட்டா”

”ஆனால்  அம்மாவின் மௌனம் சிலசமயம் எனக்கு  அம்மாவின்மனசுக்குள் ஏதாவது குறை இருக்குமோன்னு தோணும் . சுஜி! எதுக்கும்  நம்ம  அம்மாவோட ஸ்ரீராமஜெயம்  நோட்டைஎடுத்துப்பார்க்கலாமா  அம்மா  ஏதாவது எழுதி வச்சிருக்காளான்னு?”

”அசடாட்டம் பேசாதடா..அம்மா அப்படிப்பட்டவள் இல்ல”

”என் மனசு  அமைதிக்கு எதுக்கும் பார்ப்போம் ” என்று  கை நடுங்க அம்மாவின் ஸ்ரீராமஜெயம் நோட்டைத் தேடி எடுத்துப் பிரிக்கிறேன்  .வருஷக்கணக்காய் 11தடவை  தினம் எழுதி இருக்கிறாள். முத்துமுத்தான கையெழுத்து..ஒவ்வொரு பக்கத்திலும் இன்று ரகுவுக்கு தோசை  வார்த்துப்போட்டேன்   ஆனால்… 

இன்று சுஜிக்கு  தோசை  வார்த்தேன்  ஆனால்…  

மாட்டுப் பெண் க்ருத்திகாக்கு  தோசை வார்த்துப் போட்டேன் ஆனால்,,பேரன்  சரணுக்கு  வார்த்தேன் . ஆனால்..

என்ன  ஆனால்….?புரியவில்லையே…சட்டென அம்மாவின் அலமாரியில் இருந்த  பழைய  ஸ்ரீராமஜெயம் நோட்டுக்களை  எடுத்துப்பார்க்கிறேன்.

ஆனால்..ஆனால்   என்று    இருபது வருஷத்துக்குமேல் அம்மா சேர்த்து வைத்திருந்த  அனைத்து ஸ்ரீராமஜெயம் நோட்டுகளில்  எல்லா பக்கங்களிலும் கடைசி வரி இருந்தது. ஆனால் என்று நிறுத்தியிருந்தாள்  

என்ன இது ஆனால்..என்ன  சொல்லவருகிறாள்?

” அம்மாவுக்கு இன்னும்  தான்  தோசையை  சரியா பக்குவமா வார்த்துப் போட்டிருக்கலாம்னு தோணி இருக்கும். நமக்கு சரின்னாலும் அம்மாக்கு த்ருப்தி இருந்திருக்காதோ என்னவோ?”  என்றாள் சுஜி.

மறுபடி  கடைசியாய்  இறப்பதற்கு முதல்நாள் அம்மா  எழுதிய  ஸ்ரீராமஜெயம்  இறுதி வரியைப்பார்த்தவனுக்கு  தூக்கிவாரிப்போடுகிறது.

“சுஜி  இங்கபாருடி”

”ஆனால்…  எனக்குத்தான் யாருமே ஒரு தோசை கூட வார்த்துப்போட்டதில்லை..நானே  எனக்கு வார்த்து சாப்பிடுகிறேன்…அசட்டுத்தனமான குறைதான். தப்பா இருந்தா மன்னிச்சிடு ஸ்ரீராமா..”  

உரக்கப்படிக்கிறேன். கண்களில்  நீர்முட்டுகிறது.

”அம்மா ” என்று வீறிட்டாள் சுஜி. தலை தலையாய் அடித்துக்கொண்டாள்.

“.ஒருநாளும் நான் கேட்டதில்லை  பெத்த பொண்ணா இருந்திண்டு. “அம்மா, நான் இன்னிக்கு உனக்கு தோசை வார்க்கிறேன் உக்காந்து சாப்பிட்றியான்னு . கேட்கத்தோணவே இல்லயே”

எனக்கு  தொண்டை அடைக்கிறது..  இறுதிக்காரியம் பண்ணிவைத்த  வாத்தியார்  அருகில் வந்து சொல்கிறார்,

”  எல்லாம்  நியமமாய் பண்ணனும் என்கிறீர்கள்..இந்த காலத்தில் இப்படி சொல்கிறவர்கள்  அபூர்வம்,,  இறந்த ஆத்மா  பத்து நாளைக்கு இங்குதான் சுத்திவரும் அதை ஒரு கல்லில்  ஆவாஹனம் செய்து  வைப்பது  வழக்கம் .  ட்ரங்பொட்டி சைசுக்கு சின்னதா  மேற்கூரைபோட்டு கல்லூன்றுதல்..இறந்தவர்களுடைய  பெண் அல்லது மாட்டுப்பெண் கல் ஊன்றிய இடத்தில் ஸ்நானம் செய்து விட்டு சொட்ட சொட்ட ஈரத்துடன் அங்கு வைக்கப்பட்டு உள்ள அடுப்பை  மூட்டி பிண்டம் (அரிசி போட்டு பொங்கிய சாதம்)  தயாரித்து, கல்லுக்குக்காட்டிட்டு அந்த அடுப்பையும் பாத்திரங்களையும் தேய்த்து அலம்பி அங்கேயே வைக்க வேண்டும்.. சாயந்திரமா செத்துப்போனவாளுக்கு பிடிச்சதை  பண்ணி கல் முன்னாடி வச்சி   சேவிக்கணும்..ஒரு விளக்கு அங்கு பத்து நாட்களும் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்க வேண்டும்..ஊன்றப்பட்டு உள்ள அந்தக் கல் அதனுடைய சிம்மாசனம்  போல. அந்த கல்  அதற்கு சிறைசாலை போல அல்ல. அதனால் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அந்த ஆத்மாவும் தமக்கு அந்தஸ்தை தரும் வகையில் செய்யப்படும் சடங்குகளை மனதார ஏற்றுக் கொண்டு தாம் வாழ்ந்திருந்த குடும்பத்துக்கு மனதார ஆசிகளை அளிக்கும்”  என்று விவரமாய் கூறிமுடித்தார்..

இன்று ஒன்பதாம் நாள்.

தினமும்  நானும் சுஜியும் க்ருத்திகாவும்  தோசை வார்க்கிறோம்.  அம்மா வார்ப்பதுபோலவே  எங்கள் எல்லோருக்கும் வட்ட வடிவில்  முறுவலாக  மணக்க மணக்க வார்க்க  வருகிறது.

கல் ஊன்றிய இடத்தில் தோசையை  இலையில் வைத்து எதிரில் கண்ணீர்  வடிய  உட்கார்ந்திருக்கிறோம்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.