வருணன் கவிதைகள்

வீடு திரும்பல்

சூன்யத்துள் அலைந்து திரிந்து
அலுத்த சுடர்
விளக்கேற்றும் போதெல்லாம்
திரி நுனியில் இளைப்பாற அமருகிறது
பசலையில் தவிக்கும் சூன்யம்
காற்றைத் தூதனுப்ப
அலைந்து அலைந்து சமரசம்
இவர்களின் ஊடலுக்கிடையில்
அலைவுறுகிறோம்
நானும்
அறையும்
சகலமும்


மேய்ப்பனைத் தேடும் ஆடு

தேடப்படுவது எத்தனை பெரிய பாக்கியம்
தேடப்படுபவர் ஒரு பொருட்டு என்கிறது
தேடல்
காணாமலானதை தேடுகிற கடைக்கண்களும்
யோசிப்புகளும்
கடவுளின் வசிப்பிடங்கள்
இல்லாமற் போனது ஏனென உயராத புருவங்கள்
தம்மையுமறியாமல் ஒரு இறுதிச் சடங்கிற்குச்
சென்று திரும்புகின்றன
தேடுகிற மேய்ப்பனை
கொஞ்சம் எட்ட நின்று கண்கள் பனிக்க
பார்த்தபடி இருக்கிறது தவறிய ஆடு


வன்மம் என்பது

கிடைக்க வேண்டிய தருணத்தைத் தாண்டிடும்படியாக
மிகக் கவனமாய்
தாமதப்படுத்தப்படுகிற அன்பு

மனதின் மதகுகளை துல்லியமாய்
திறக்கத் தகுந்த
தருணங்களில்
அடைத்து விடுகிற செய்நேர்த்தி

பிசகாதிருக்கும் பொருட்டு
வராமைக்கான காரணங்களை
வருவதற்கு முன்னமே
ஒத்திகை பார்க்கிற துல்லியம்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

4 Replies to “வருணன் கவிதைகள்”

Leave a Reply to SenthilKumarCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.