கற் கோவில்கள், கொலைக் களங்கள்

அறுவடையான விளை நிலங்கள் கோரைப்பாய்களின் விரிப்பு போல கீழே படர்ந்திருந்தன. அவற்றின் பச்சை நிறக் கரைகளாக மா, தென்னை, முந்திரி மரங்கள். மீகாங் நதி கொண்டு சேர்க்கும் வண்டலால் அடர் பழுப்பு நிறம் கொண்ட டோன்லே சாப் ஏரியின் மேல் நீர் பூச்சிகள் போல மீன் படகுகள். இருக்கையில் சற்று முன் நகர்ந்து, கழுத்தை வளைத்து, மூக்கை விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் ஒட்டி கீழே விரியும் காட்சிகளை நான் பார்க்கும் கோலத்தை கண்ட என் பக்கத்து இருக்கை வெள்ளையர்,

‘முதல் தடவையா?’ என்று கேட்டு புன்னகைத்தார்.

‘கம்போடியாவிற்கா?, ஆமாம்’ என்றேன்.

‘முரண்கள் நிரம்பிய அழகான தேசம்’ என்று சொல்லி விட்டு மீண்டும் Atomic Habits புத்தகத்திற்குள் தன் நீண்ட மூக்கை நுழைத்துக் கொண்டார்.

கேரள மாநிலத்து கோவில்கள் போல சிவப்பு ஓடுகள் வேயப்பட்ட சியாம் ரீயப் (Siam Reap) விமான நிலையம் காலியாகக் கிடந்தது. இந்தப் பகுதிகளில் வெயில் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைவு. கண்ணாடிச் சுவர்கள் வழியே உள்ளே நுழைந்த வெயில் குளிரூட்டியையும் தாண்டி வேர்க்கச் செய்தது. Vip visa என்று நாம் சொல்லிவிட்டால் போதும் ராஜ மரியாதை தான். முப்பத்தேழு டாலர்களுக்கு அவர்களே விசா தாளை நிரப்பி, பச்சை நிற விசாவை ஒட்டி பாஸ்ப்போர்ட்டை கையில் கொடுத்து விடுகின்றனர். எந்த வரிசையிலும் நிற்காமல் நேராகப் பெட்டிகளை எடுக்க சென்று விடலாம். 

இந்தியாவின் பல சிறு நகர விமான நிலையங்கள் போல ஊரை விட்டு வெகு தூரத்தில் தள்ளி இருக்கிறது சியாம் ரீயப் விமான நிலையம். ஆனால், அளவிலும், கட்டமைப்பிலும் பெரியது. பிரதான சாலையில் இருந்து விமான நிலையத்தை இணைக்கும் தார் சாலைகளில் விமானங்கள் கூட வந்து இறங்கலாம். செதுக்கப்பட்டப் புல் தரைகளில் வண்ணப் பூக்கள் சிறு நீருற்றுகளில் நனைந்தபடி நம்மை வரவேற்கின்றன. ஆனால், இந்த விஸ்தாரமான கட்டுமானங்கள் எல்லாம் ஒரு மாயையோ என்பதைப் போல விமான நிலையத்தை சுற்றி உள்ள வறண்ட நிலங்களில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே, மர நிழல்களில் மூங்கில் தொப்பி அணிந்த மேய்ப்பர்கள் கைகளில் கழிகளுடன் நின்று கொண்டு சாலையில் சீறிச் செல்லும் வாகனங்களை வேறொரு உலகத்தின் காட்சிகள் போலப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

பட்டினப் பிரவேசம் 

சியாம் ரீயப் நகரத்தின் வீதிகள் நேர்த்தியாக இருக்கின்றன. புத்தம் புது மால்களில் KFC தாத்தாவும், Starbucks தேவதையும் அழைக்கிறார்கள். கம்போடியா முன்னொரு காலத்தில் பிரெஞ்சு குடியிருப்பு நாடாக  இருந்தததற்கான அடையாளமாக நகரின் சில வீதிகளில் மஞ்சள் வண்ணம் அடிக்கப்பட்ட வீடுகளின் திறந்த மாடங்களிலிருந்து இளஞ்சிவப்பு போகன்வில்லா பூக்கள் காற்றில் ஆடியது.  நாங்கள் சென்ற தினத்தில் சியாம் ரீயப் சாலைகளில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் வரிசையின்  அடுத்த படைப்பிற்கான படப்படிப்பு ஏதேனும் நடைபெறுகிறதோ என்று சந்தேகம் எழும் வகையில், உடம்பை இறுக்கிப் பிடித்த தோல் ஆடைகள் அணிந்த இளைஞர்களும், யுவதிகளும் டுகாட்டி பைக்குகளிலும், தட்டையான பெர்ராரி கார்களிலும் உறுமியபடியே பவனி வந்து கொண்டிருந்தனர். பழைய விமான நிலையச் சாலையில் நடக்கப் போகும் ஒரு போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள் இந்த வின் டீசலின் விசிறிகள்.

நகரத்தின் காட்சிகள் பல கிழக்காசிய நகரங்களை நினைவுபடுத்துகிறது. நடைபாதையில் வண்ணப் பிளாஸ்டிக் கூரைகள் அடியே பெரிய ஐஸ் பெட்டியில் ஜில்லென்று உறங்கும் பானங்கள், மூங்கில் பிளாச்சுகளில் சொருகப்பட்ட இறைச்சித் துண்டுகள் தணலில் கருகும் வாடை, கார்களைப்  பழுது பார்க்கும் இடங்கள், ஸ்கூட்டரைப் போல முக அமைப்பும், பைக்கைப் போல உடலமைப்பும் கொண்ட வினோத வாகனங்களை ஒட்டிச் செல்லும் அழகானப் பெண்கள், பைக்கைப் பாதியாக உடைத்து ஷேர் ஆட்டோ இருக்கைகளை ஓட்ட வைத்து பயணிகளைச் சுமந்து செல்லும் டுக் டுக் என்று விரிகிறது இந்த உலகம்.  

சியாம் ரீயப் சிறிய நகரம். அருகில் இருக்கும் பிரபலமான அங்கோர் வாட் கோவில்களைப் பார்க்க வரும் சுற்றுலா வாசிகளுக்கென்றே கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டப் பல விடுதிகள் பூட்டப்பட்டிருந்தன. கோவிட் தொற்று சுற்றுலாவை நம்பி இருக்கும் பொருளாதாரங்களை சீரழித்ததின் சான்றுகள் தான் இந்த புதர்கள் மண்டி கேட்பாறற்றுக் கிடக்கும் விடுதிகள். இந்தப் பேரிடரிலிருந்து தேறி விட்டோம் என்பது போல பழைய மார்க்கெட் வீதிகளில் வியாபாரம் மும்முரமாக நடக்கிறது. பிரம்பு வலைத் தொப்பி, டீ ஷர்ட், வண்ணப் படங்கள், மசாஜ், உணவகங்கள் என்று சிறு வியாபாரிகள் மும்முரமாக இருக்கிறார்கள். ‘ஒன்லி 5 டாலர்ஸ் பார் ஷர்ட்’ என்ற வியாபார கூவலுக்கு நாம் பதில் சொல்லவில்லை என்றால் தடாலடியாக விலை குறைப்பு நடக்கிறது. ‘ஓகே…3 டாலர்ஸ்’ என்று சொல்லி விட்டு ஷர்ட்டை கையில் திணிக்கிறாள் ஒருத்தி.   

நகரத்தின் எல்லைகளைப் பத்து நிமிடங்களில் அடைந்து விடலாம். அதற்கு பின்னர் கிராமங்கள் தான். அறுக்கப்பட்ட நெற் பயிரின் அடிப் பாகங்கள் சவரம் செய்யப்படாத முதியவரின் தாடை முடிகள் போல் துருத்திக் கொண்டிருக்கும் நிலங்களின் நடுவே அங்கொன்றும், இங்கொன்றுமாக மரத்தால் ஆன வீடுகள். ஏறக்குறைய எல்லா வீடுகளும் நிலத்தை விட்டு மேலெழும்பி நான்கு கால்களில் நிற்கின்றன. எல்லோர் வீட்டிற்கு வெளியேயும் ஒரு மூலையில் துளசி மாடம் போல ஒன்று வீற்றிருக்கிறது. சற்றே உயரமான பீடத்தின் மேல் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிறு பொம்மை வீடு. தெவாதா என்று க்மேர் மொழியில் அழைக்கப்படும் இவை குடும்ப மூதாதையர்களும், பிற தேவதைகளும் வந்து தங்கும் இடம் என்று நம்பப்படுகிறது. அவர்களை குளிர்விக்க  நிதமும் ஊதுபத்தி ஏற்றி மலர்களும், இனிப்பு பதார்த்தங்களும் படைத்து வணங்குகிறார்கள் கம்போடியா வாசிகள். 

முற்பகலிலேயே சற்று மெத்தனமாகத் தான் நகர்ந்தன காட்சிகள். அடிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க வீடுகளைத் தாங்கி  நிற்கும் மரக்கால்களின் இடையே வலையைக் கட்டி மெதுவாக ஆடியபடியே பாதி தூக்கத்தில் கண் மூடிக் கிடந்தனர் சிலர். குழந்தைகளை வலையில் இட்டு அவற்றை அசைத்தபடியே காலருகே நிலத்தை கீறும் கோழிகளை விரட்டிக் கொண்டிருந்தனர் பெண்கள்.

காலம் உறைந்து, வண்ணங்கள் எல்லாம் வெளிறி இருக்கும் இந்த நண்பகல் நேரத்து மயக்கக் காட்சிகளின் ஊடே காட்டில் வீழ்ந்து கிடக்கும் மரத்தின் மேல் முளைக்கும் வண்ணக் காளான்கள் போல கம்போடியா மக்கள் கட்சியின் அலுவலகங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. கண்ணைக் கூச வைக்கும் செயற்கை வண்ணங்கள் ஏந்திய  இந்தச் சிமெண்ட் கட்டிடங்கள் கம்போடியாவின் ஆளும் கட்சியின் வீச்சுற்கு ஒரு உதாரணம். கடந்த பல வருடங்களாக கம்போடியாவில் இவர்களின் ஆட்சி தான். எதிர் கட்சிகள் எதுவும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை. சில வருடங்கள் முன்பு வரை எதிர் கட்சி போல காண்டில்லைட் கட்சி என்று ஒன்று முணுக் முணுக் என்று எரிந்து கொண்டிருந்தது. அதுவும் கடந்த ஆண்டு அணைக்கப்பட்டது. ஆளும் கட்சியின் எல்லா பதாகைகளிலும் கோட்டு அணிந்து, தொடுவானை உற்று நோக்கும் மூவர் பளிச்சிடுகின்றனர். ஏறக்குறைய நாற்பது வருடங்கள் கோலோச்சிய முன்னாள் பிரதம மந்திரி, அவருடைய முதல் மகனான இந்நாள் பிரதம மந்திரி மற்றும் அவருடைய தம்பியான உதவி பிரதம மந்திரி ஆகியவர்களின் படங்களே அவை. 

சாலையின் சில இடங்களில் இரு புறத்திலும் தள்ளு வண்டிகளில் சிறு மூங்கில் குழாய்களை வைத்து விற்கிறார்கள். சாலையில் பயணம் செய்யும் கம்போடியார்களின் மனதிற்கு பிடித்த சிறு தீனி இது. க்ராலான் என்று அழைக்கப்படும் இது பசையுள்ள சாதத்தில் தேங்காய் பால் விட்டு, வெல்லம் சேர்த்து அதனுடன் மொச்சை அல்லது காராமணி தூவி சிறு மூங்கில் குழாய்களில் அடைத்து சில மணி நேரங்கள் தணலில் வாட்டுகின்றனர். பின்னர் அதை வாழைப்பழத்தை உரிப்பது போல மூங்கில் குழாயை உரித்துச் சாப்பிட வேண்டியது தான். மிதமான இனிப்புடன், புகையோடிய பச்சை மூங்கிலின் மென்மையான வாசத்துடன் நன்றாகவே இருந்தது.  

கல்லிலே கலை வண்ணம் 

இந்தப் பூலோகக் காட்சிகள், கட்சிகள், சுவைகள் எல்லாம் சில காலம் தான் ஆனால் நான் சாஸ்வதமாக இருப்பவன் என்று சொல்வது போல அங்கோர் வாட்டின் கோபுரங்கள் நீல வானை உரசி நிற்கின்றன. இந்தியாவில் இருந்து வந்து சேர்ந்த கௌண்டின்யன் இந்த நாட்டின் இளவரசியை மணந்ததால் மகிழ்வுற்ற அவரின் மாமனார் இந் நிலங்களில் தேங்கி இருந்த கடல் நீரை வடிய விட்டு கம்போடியா என்று இன்று அறியப்படும் காம்போஜத்தை உருவாக்கினார் என்கின்றன தொல் கதைகள். இரண்டாயிரம் ஆண்டுகள் முன் ஏற்பட்ட இந்தத் தொடர்பு இன்று வரை தொடர்கிறது. இந்தியாவிலிருந்து வந்த மொழி, கலை, இலக்கியம், சடங்கு  என்ற பல மென்பொருட்களின் சுவடுகளை இன்று கூட இங்குக் காணலாம். இந்தப் பண்டைய இறக்குமதியின் ஸ்தூல வடிவங்கள் தான் இப்பொழுதும் கூட தலை நிமிர்ந்து நிற்கும் கற் கோவில்கள். 

பொதுவாகவே அங்கோர் வம்சத்து அரசர்கள் பெருஞ் செயல் பிரியர்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே நாட்களில் பெரும் ஏரி ஒன்றை மன்னன் இந்திரவர்மன் வெட்டத் தொடங்கினான் என்று 9ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று கூறுகிறது. நான்கு கிலோமீட்டர் நீளமும் 1 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இதெல்லாம் ஒரு ஏரியா என்று பின்னர் வந்த மன்னர்கள் இந்திரவர்மன் அமைத்த ஏரியை விட பன் மடங்கு பெரிய ஏரிகளையும், வாய்க்கால்களையும் வெட்டினர். இந்த கட்டமைப்புகளுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது அங்கோர் வாட். 

இரண்டாம் சூரியவர்மனால் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தப் பெரும் கோவிலை பல மேற்கத்திய விழிகள் கண்டு மலைத்திருந்தாலும் இதனை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் ஹென்றி மோ (Henri Mouhot). 1863 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் பயணித்த அவர் அங்கோரின் கோபுரங்களையும், பிரகாரங்களையும் கண்டு மலைத்து இந்தப் பிரம்மாண்டத்திற்கு முன் கிரேக்க, ரோம சாம்ராஜ்ய கட்டிடங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று தனது பயணக் குறிப்பில் எழுதினார். அன்று அவர் கண்ட அங்கோர் வாட்டில் காடு தனது இருப்பிடத்தை மீட்டு ஆதிக்கம் செய்து கொண்டிருந்தது. அங்கோர் மோ கண்டபோது எப்படி இருந்திருக்கும் என்பதை அருகில் இருக்கும் டா ப்ரோம் (Ta Prohm) என்ற புத்த விகாரில் காணலாம். ராட்சச ஆல மரங்கள் கோபுரங்கள் மேல் ஏறி அவற்றின் நீண்ட, தடித்த வேர்கள் அசுரனின் விரல்கள் போல சுவர்களை இறுக்குகிறது. வேர்களின் இடையே பிதுங்கி நிற்கும் கற்களைப் பார்த்து நமக்கு மூச்சு முட்டுகிறது. இந்த இடத்திற்கு இன்னொரு பெருமையும் உண்டு. ஒற்றை பின்னல் காற்றில் ஆட, துப்பாக்கிகள் தொடையோடு உரச, குட்டையான அரைக் கால் சட்டை அணிந்து, உதட்டை சுழித்து நம்மை பார்க்கும் ஏஞ்சலினா ஜோலி நடித்த Tomb Raider இங்கே தான் படம் பிடிக்கப்பட்டது என்பது மற்றொரு விசேஷம். 

ஏறக்குறைய 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அங்கோரின் கட்டமைப்பைத் தரையில் நின்றபடி உள்வாங்குவது இயலாத காரியம்.  சியாம் ரீயப் நகரத்தில் உள்ள அங்கோர் தேசிய அருங்காட்சியத்தில் அதன் சிறு வடிவ மாதிரி ஒன்றை பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். நுணுக்கமாக வரையப்பட்ட ஒரு மொசைக் டைல் நீரில் மிதப்பது போல கிடக்கிறது அங்கோர் வாட். கழுகுப் பார்வையில் அங்கோரின் தோற்றம் இந்தியக் கண்களுக்கு ஒரு பழகியக் காட்சி போலவே தோன்றும். ஏனென்றால் சில ஆராய்ச்சியாளர்கள் அங்கோர் வாட் கடவுள்கள் வாழும் மேரு மலையின் வடிவமே என்கிறார்கள். அதன் ஐந்து கோபுரங்கள் முகடுகள், வெளிச் சுவர்கள் மலைத் தொடர்கள், சுற்றி ஓடும் அகழி மேருவின் பாதங்களை நனைக்கும் கடல் என்பது இவர்களின் வாதம். மற்றும் சிலர், அதெல்லாம் சரி, ஆனால் சிற்பங்களைப் பார், கருடனைப் பார், சந்தேகமில்லாமல் இது விஷ்ணுவின் கோவில் தான் என்கிறது ஒரு குழு. அதெல்லாம் இல்லை, கருவறை மேற்கு திசையை நோக்கி இருக்கிறது இரண்டாம் சூர்யவர்மனின் சமாதி தான் இது என்று ஒரு சாரார் போர் கொடி எழுப்புகின்றனர். அருங்கட்சியகத்தில் அங்கோரின் சிறு வடிவ மாதிரியை கண்ட சிவப்பு முடி சிறுவன் ஒருவன் ‘மாம் இஸ் தட் எ ஸ்பேஸ் ஷிப்?’ என்று அவன் அன்னையிடம் வினவினான்.  இந்த கூற்றுகளில் எல்லாவற்றிலும் உண்மை இருக்கக் கூடும் (ஸ்பேஸ் ஷிப்பை தவிர்த்து!). ஆனால், இந்த விவாதங்களையெல்லாம் தாண்டி அருங்காட்சியகத்தின் குளிரான அரை இருட்டில் என் மனதில் மேலோங்கி நின்றது 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் அழகியலும், சிந்தனை வளமும், உழைப்பும் தான்.

பல நாட்கள் இருந்து நிதானமாகப் பார்க்க வேண்டிய அங்கோர் வாட்டை ஒரு நாளிற்குள் காண்பது என்பது ஒரு தலை கிறுகிறுக்கும் அனுபவம். மே மாதத்து உச்சி வெயில் மண்டையைப் பிளக்க காட்சிகள் துண்டுதுண்டாக மனதில் பதிகின்றன. நீர் நிலைகள், அதில் நெளியும் கோபுரங்களின் பிம்பங்கள், கற் சுவர்கள், அகலமான பாலங்களின் கைச்சுவர்களில் படர்ந்து தலையை விரித்து கிடக்கும் நாக சிற்பங்கள், தாழ்வாரங்களின் குறுகியத்  திருப்பங்களில் ஒயிலாக இடுப்பை வளைத்து நம்மை உற்று நோக்கும் அப்சரசுகளின் சிற்பங்கள், சிறு சிறு பொத்தல்களோடு சொறசொறக்கும் எரிமலை கற்கள் மேல் அணிவகுக்கும் கருங்கற்கள், தூக்கி நிறுத்தும் இரும்புச் சாளரங்கள் என்று ஒரு திரைப்படத்தின் ட்ரைலர் போல நம் கண் முன் விரிகிறது அங்கோர் வாட். 

ஆனால், இக் காட்சிகளின் அணி வகுப்பில் சில நம்மை ஈர்க்கின்றன. அவற்றை கடக்கும் போது என்னை நிதானமாகப் பார்த்து விட்டு செல் என்று மௌனமாக கெஞ்சுகின்றன. ஒரு வெளித் தாழ்வாரத்தின் சுவற்றில் செதுக்கப்பட்டிருக்கும் பாற்கடலை கடையும் சிற்பம் அதில் ஒன்று. இரு புறமும் தேவர்களும் அசுரர்களும் வடவரையை மத்தாக்கி வாசுகியை பிடித்திழுத்து கடலைக் கடைகிறார்கள். இரு புறத்திலும் அணிவகுத்து நிற்கும் தேவாசுரர்களின் வரிசைகளில் ஆங்காங்கே தலைவர்கள் போல பெரு உருவம் கொண்டவர்களின் தோள்களிலும், தரையில் அழுந்தப் பதிந்த  கால்களிலும், வடம் இழுக்கும் எத்தனம் புடைத்து நிற்கிறது. கடலுக்கடியில் மலையைத் தாங்கி நிற்கும் கூர்மம் இவர்கள் எல்லாம் என்ன தான் செய்கிறார்கள் என்ற பாவனையோடு கழுத்தைத் தூக்கி, கண்களில் ஆர்வத்தோடு பார்க்கிறது. அந்தரத்தில் மிதந்தபடி விஷ்ணு கூர்மத்தின் முதுகில் இருந்து மலை சரியாதவாறு சமன் செய்கிறார். ‘திஸ் ஸ்டோரி இஸ்  ப்ரம் பாகவத புராணா, வேர் பேர் ஸ்கிண்ட் தேவாஸ்…’ சிறு வயது முதல் நம் மனதில் பதிந்த கதை தான், ஆனாலும் கடல் கடந்து சென்ற தூர தேசத்தில் இந்தக் கதையை கம்போடிய தேசத்து வழிகாட்டி ஒருவரின் வாயில் இருந்து கேட்டது சற்று ஸ்வாரஸ்யமாகத்தான் இருந்தது.

ஐந்து கோபுரங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அங்கோர் வாட்டின் மையம் கற்கள் அடுக்கி அமைக்கப்பட்டிருக்கும் ஓர் சிறு குன்று. சபரிமலையின் சந்நிதிக்கு செல்லும் படிகள் போல செங்குத்தாக அமைக்கப்பட்ட கல் படிகளின் மேல் ஏறுவதற்கு வசதியாக கைபிடிகளுடன் இரும்புப் படிகள் பொருத்தப் பட்டிருக்கின்றன. இருந்தாலும், பலர் பதட்டம் தோய்ந்த முகத்துடன், குனிந்து கைகளைக் கொண்டு படிகளை இறுக்கப் பிடித்தபடி நான்கு அங்கங்களின் உதவியுடன் ஏறிக் கொண்டிருந்தனர். இறங்கும் படிகளில் ஒரு சீனப் பெண் படிப் படியாக உட்கார்ந்து கொண்டு இறங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னமே கடகடவென்று கீழே இறங்கி அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தவன் சிரித்துக் கொண்டிருந்தான். சீனத்துப் பெண்ணின் கன்னம் சிவந்து, கண்கள் கோபத்துடன் அவனைப் பொசுக்கின. கீழே நின்று கொண்டிருந்தவன் அந்த சீனப் பெண்ணின் கணவனாகத் தான் இருக்க வேண்டும் என்று என் மனைவி அறுதியிட்டுக் கூறினாள்.

குன்றின் மேல் உள்ள சதுரமான இடத்தை நான்காகப் பிரிக்கிறது குறுக்கு வெட்டாக செல்லும் உயரமான கற் பாதைகள். அவை உள்ளடக்கிய பள்ளமான பகுதிகள் ஒரு காலத்தில் நீரால் நிரப்பப்பட்டிருந்தன. இரண்டாம் சூரியவர்மன் காலத்தில் இவை தாமரைப் பூத்த தடாகங்களாக இருந்திருக்கலாம், யார் கண்டது? சதுரத்தின் மையத்தில் ஒரு காலத்தில் நான்கு திசையும் திறந்திருந்த விஷ்ணுவின் சந்நிதி இருந்தது. இப்பொழுது குன்றின் கீழே ஒரு தனி சந்நிதியில் அஷ்ட புஜங்களோடு ஏறக்குறைய 16 அடி உயரத்தில், டா ரீச் (Ta Reach) என்று உள்ளுர்வாசிகளால் அழைக்கப்படும், விஷ்ணுவின் சிலைப் போல இந்தச் சந்நிதியில் அன்று பெருமாள் நின்றிருந்திருக்கக் கூடும். இன்று கருவறை மூடப்பட்டு நான்கு திசைகளையும் பார்த்து கொண்டு நின்றிருக்கும் புத்தரின் பேருருவச் சிலைகள் உள்ளன. அவற்றின் அருகில் ஊதுபத்தி ஏற்றி, நீரும், மலர்களும், பழங்களும் படைத்து மண்டியிட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர் உள்ளூர் வாசிகள். கம்போடியாவில் தொண்ணூறு சதவிகிதத்திற்கு மேல் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பொறுத்த வரை இது வழிபாட்டிற்கான இடம்.    

மேலிருக்கும் சாளரங்கள் வழியாகப் பார்த்தால் நம்மைச் சுற்றி அங்கோர் வாட் பரவி, விரிந்து கிடப்பதைக் காண இயலும். சீராக வெட்டப்பட்டப்  புல் தரைகளும், வெயிலில் பளபளக்கும் அகழியின் நீரும், அங்கொன்றும் இங்கொன்றுமாக நிமிர்ந்து நிற்கும் பனைகளும், கருந்தோல் சற்றே வெளிறி, தேமல்கள் பூத்து இருக்கும் பெரும் யானைக் கூட்டங்கள் போலே விரவிக் கிடக்கும் கற் சுவர்களும், மண்டபங்களும் என்று பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தஞ்சை பெரிய கோவிலை ஞாபகப்படுத்துகின்றன. ஆனால், இது வேறு இடம் என்று கூறுவது போல புல் விரிப்பில் தனியாக இருக்கும் ஒரு மரத்தின் அடியில் சீனக் குடையை தலைக்கு மேல் பிடித்து கொண்டு, வேட்டி போல உடுக்கப்படும் சம்போட் அணிந்த இளம் பெண்ணும், தொப்பி வைத்த கம்போடிய இளைஞனும் pre-wedding புகைப்படங்களுக்காகப்  போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். அதில் திருப்தி இல்லாத புகைப்படக்காரர் அவர்களை க்மேர் மொழியில் அதட்டுவது சன்னமாக கேட்டது. 

இளம் ஜோடிகளைத் தாண்டி தூரத்தில் காட்டு மரங்கள் பெரும் பச்சை அலை போல அங்கோரின் சுவர்களை உரசி நிற்கின்றன. அவை மீண்டும் அங்கோர் வாட்டை தங்களின் வேர்களால் இறுக்கக்  காத்திருப்பவை போலவே தோன்றுகிறது. அங்கோரின் விளிம்புகளில் கல்லும், இலையும் ஆதிக்கத்திற்காக எப்பொழுதும் மோதிக் கொண்டிருக்கின்றன. 

இருண்ட மனம்  

மனித மனம் ஆக்கத்தின் உச்சத்தைத் தொட்ட இடம் அங்கோர் வாட் என்றால் அது கீழிறிங்கி தீவினை எனும் அதல பாதாளம் சேர்ந்த இடம் அங்கிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாட்டம்பாங் (Battambang) பகுதியில் ஒரு சிறு மலையில் உள்ள குகை தான் அது. அதன் உள்ளளவு சிறியது தான். ஆனால், அதன் கூரை நம் தலைக்கு ஏறக்குறைய 100 அடி மேலே குடை போல விரிந்திருக்கிறது. குகையின் விதானத்தின் நடுவில் ஒரு பெரும் துவாரம். 1975 முதல் 1979 வரை  ஆண், பெண், குழந்தைகள் என்று பல நூறு பேர்கள் பின் மண்டையில் அடிக்கப்பட்டு உயிரற்ற சடலங்களாக இந்தத் துவாரம் வழியே குகையின் தரையில் வீசப்பட்டனர். பிணங்களின் சேமிப்புக் கிடங்காக இருந்தது இந்தக் குகை. 

கம்போடியாவின் ரத்தம் தோய்ந்த இந்த சகாப்தத்தைத் தொடங்கி வைத்தது முகத்தில் எப்பொழுதும் மென் புன்னகைத்  தாங்கி இருந்த ஒரு பள்ளி ஆசிரியர். சலோத் சார் (Saloth Sar) என்ற அவர் இயற் பெயரை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் போல் பாட் (Pol Pot) என்ற பெயர் பலரின்  நினைவுகளில் பழுக்கக் காய்ச்சிய ஊசியை நுழைத்தது போல விதிர்க்க வைக்கும். 1975 ஆம் ஆண்டு துப்பாக்கி முனையில் பதவிக்கு வந்த க்மேர் ரூஜ் (Khmer Rouge) கட்சியின் தலைவரான போல் பாட்டின் அதித் தீவிரக் கொள்கைகள் சக கம்யூனிஸ்ட்களிடமே அச்சத்தைத் தோற்றுவித்தன. நாடெங்கும் தனி மனித உடமைகள் மற்றும் உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்த மக்களின் வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. நாட்டின் பண பரிவர்த்தனையை நிர்வகிக்கும் மத்திய வங்கி குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.  நகரங்களில் உள்ளவர்கள் வலுக்கட்டாயமாகக் கிராமங்களுக்கு இடம் மாற்றப்பட்டனர். பெரும் கூட்டுறவு பண்ணைகளில் காலையிலிருந்து மாலை வரை பல்லாயிரக்கணக்கானோர் கடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மாற்ற ஒரு ஆடை, அதுவும் கருப்பு நிறத்தில், சாப்பிடுவதற்கு ஒரு பாத்திரம் ஆகியவை மட்டுமே இந்தப் பண்ணைகளில் தனி மனித உடமைகளாக அனுமதிக்கப்பட்டது. பெண்கள் பலவந்தமாக க்மேர் ரூஜ் போர் வீரர்களுக்கு மணமுடிக்கப் பட்டனர். பள்ளி ஆசிரியராக இருந்த போல் பாட் அனைத்து பள்ளிகளையும் மூடச் செய்தான்.

இவற்றையெல்லாம் விட க்மேர் ரூஜை எதிர்த்தவர்கள், எதிர்க்க நினைத்தவர்கள், எதிர்க்கக் கூடியவர்கள் என்று சகலமானவரும் கொல்லப்பட்டனர். ஏறக்குறைய அன்றைய கம்போடியாவின் ஜனத்தொகையில் நான்கில் ஒருவர் இறந்ததாகச் சில கணக்குகள் கூறுகின்றன. இன்றும் கூட இந்தக் கொலைக் களங்களின் வடுக்கள் மக்களின் மனதிலும், நிலப்பரப்பிலும் பதிந்து கிடக்கிறது. 

பாட்டம்பாங் பகுதியில் உள்ள இந்தக் குகை அதற்கு ஒரு சாட்சி. உள்ளே கண்ணாடிகளால் அமைக்கப்பட்ட ஒரு சிறு அறையில் அங்கே இறந்தவர்களின் மண்டையோடுகள் சேகரிக்கப்பட்டுப் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. அதன் அருகே புத்தத் துறவிகள் சிலர் அமர்ந்து தியானத்தில் இருந்தனர். எலும்புகளுக்கு முன் ஏற்றி வைக்கப்பட்ட ஊதுபத்திகளின் அடர் புகை கூரையில் உள்ள துளை நோக்கி எழும்பி காற்றில் மென்மையாகக் கலைந்தது. அவ்விடத்தில் உறையும் ஆழ்ந்த மௌனத்தைத் தாண்டி ஏதோ ஒன்று நம்மை அழுத்துகிறது. காலவெளியால் நம்மிடமிருந்து அந்நியப்பட்டிருந்தாலும் இங்கே இறந்து போன பெயரறியா மனிதர்களுக்காக நம் மனம் துடிக்கிறது. இந்த இருண்டக் குகையில், வெற்றிடத்தை வெறித்துப் பார்க்கும் மண்டையோடுகள் முன், அங்கோர் வாட்டில் உதிக்காதப் பிரார்த்தனை உள்ளத்தில் மலர்ந்து நாம் அறியாமலேயே அதை நம் உதடுகள் முணுமுணுக்கின்றன. 

மலையில் இருந்து இறங்கும் பொழுது சூரியன் மறையத் தொடங்கியிருந்தது. கீழே சாலை எங்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளில் கோக், பீர், இளநீர் என்று பல பானங்களை கைகளில் ஏந்திப் பலர் உட்கார்ந்திருந்தனர். அவர்களின் பார்வை  மலையின் சரிவில் இருந்த ஒரு இருண்ட வாயிலை நோக்கி இருந்தது. என்ன நடக்கப் போகிறது என்று நான் வினவ சற்று பொறுங்கள் என்றார் அங்கே உட்கார்ந்திருந்தவர். சில நிமிடங்களுக்குள், கருமையான சிற்றாற்று வெள்ளம் பீறிட்டுக் கொண்டு வருவது போல அந்தப் பிளவிலிருந்து வௌவால்கள் வெளியேறத் தொடங்கின. சுமார் இருபது நிமிடங்களுக்கு மலையின் உள்ளே இருக்கும் ஒரு குழாயைத் திறந்து விட்டது போல கோடிக்கணக்கான வௌவால்களால் வெளியேறிக் கொண்டிருந்தன. சூரியன் மறைந்த பின்பும் செவ்வானில் அவை கருப்பு நட்சத்திரங்கள் போல சிதறிக் கிடந்தன.   


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

7 Replies to “கற் கோவில்கள், கொலைக் களங்கள்”

    1. சென்று வந்த பிறகும், நீண்ட நாட்களுக்கு மனதில் சுழன்று கொண்டே இருக்கும் இடங்களில் இதுவும் ஒன்று. நிச்சயமாக பார்க்க வேண்டிய நாடு.
      ரகு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.