காலையிலிருந்து விடாமல் பத்து முறைக்கு மேல் அழைப்பு வந்துவிட்டது. தொலைபேசிக்குப் பதில் சொல்லாமல் ஜன்னல் வழியே தெரிந்த கடலைப் பார்த்துக்கொண்டிருந்தார் ராமன். ஒவ்வொரு முறையும் அழைப்பு வரும்போதெல்லாம் தூரவீசிவிட வேண்டும் எனத் தோன்றியது. முந்தின மாலை அவர் அனுப்பிய ஒலிச்செய்தியிலிருந்து சங்கதி ஆஸ்பத்திரி முழுவதும் சென்று சேர்ந்திருக்கும். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை என ராமன் நினைக்கும்போது மீண்டும் அலைபேசி அழைத்தது. ஒரு எரிச்சலுடன் போனவர் ரிஷி பெயரைப் பார்த்ததும் கைப்பேசியை கையில் உருட்டியபடி உட்கார்ந்திருந்தார்.
எல்லாவற்றையும் உதறிப்போட்டு வேலூர் மருத்துவமனையிலிருந்து வந்தவர் கன்னியாகுமரி கடலைப்பார்த்ததும் கொஞ்சம் நிதானமடைந்திருந்தார். புதுவித பரபரப்பு அவரிடம் தொற்றிக்கொண்டது. நள்ளிரவு வரை தன் சிறு வயது நினைவுகள், குமரிக்கரையில் அம்மாவுடன் விளையாடியது என எல்லாவற்றையும் நினைத்து ஒரு பரவசத்தில் இருந்தார். ஸ்டேன்லியில் படிக்கும்போது , தில்லி எய்ம்ஸில் மேற்படிப்பு ஆய்வு செய்தபோதும் இப்படி சகலத்தையும் துறைந்து ஓடியது நினைவுக்கு வந்தது. ஆனால் அப்போதெல்லாம் எதையோ தேடி ஓடினார். இப்போது எல்லாவற்றையும் துறந்து செல்லும் துடிப்பு அதிகரித்திருந்தது. தர்க்கத்துக்குக் கட்டுப்படாத விஷயங்களில் ஆட்கொள்ளூம் போதெல்லாம் அவர் இங்கு வந்துவிடுவார்.

அதிகாலையிலிருந்து ஒரு நீண்ட நடை சென்றிருந்தார். கடல் பரப்பை ஒட்டிச் சென்ற போது தனக்கும் கடலலைக்கும் விடாமல் நடந்தது போட்டி. ஒவ்வொரு ஆட்களும் ஒரு உயிரணுவின் பிரதிநிதி எனும் கற்பிதம் அவருக்கு உண்டு. கல்லூரி நாட்களில் கூடப்படித்தவர்களை எக்ஸ் வொய் எனப் பெயர் வைத்து கூப்பிடுவது, உயிரணு பெருக்கி புதுசாக உருவாவதைக் மனித கூட்டத்தோடு ஒப்பிடுவது அவருக்குப் பிடித்த விளையாட்டு. எதிர்ப்படும் ஒவ்வொரு மனிதனின் தலையிலும் அவ்வடிவங்கள் தெரிவதாக எண்ணியபோது தனக்குள் சிரித்துக்கொண்டார். சின்ன வயது விளையாட்டு என்றாலும், அவரது நாற்பது வருட மருத்துவ ஆய்வில் மனிதர்களோடு நெருக்கத்தைக் காட்டுவதற்கு இந்த விளையாட்டு அவருக்குப் பயன்பட்டிருக்கிறது. ஆய்வகம் என்பது ஒரு கோப்பைக்குள் அடங்கியிருக்கும் வாழ்வு. பொது மருத்துவத்தை விரும்பாது உயிரணு ஆய்வுக்கென தனது வாழ்வை வடிவமைத்துக்கொண்டதற்குப் பின் நேரடியான மனிதர்களோடு உறவாடும் அனுபவம் அதிகமாகக் கிடைப்பதில்லை. பெட்ரி டிஷ் வழியாக அவர் சந்தித்த ஆண் பெண்கள் பல்லாயிரம். ஒரு உயிரணுவாகத் தோன்றிப் பலவாகப் பெருக்கம் பெற்று ஆறடி மனிதனாக உருவாகி நிற்பதை ஒரு மனிதன், அவனுடைய கூட்டு வாழ்வு, எண்ணற்ற அவனது அசைவுகள், அவளது இணைவுகள், கூட்டுச் சமூகம் எனப்பிரித்து பிரித்து அவரால் பொருள் கொள்ள முடிந்திருக்கிறது. ஒரு உயிரணுவிலிருந்து பல்கிப் பெருகி உருவான உறுப்புகள் போல மனிதத்திரளை எண்ணிக்கொள்வது அவர்களை நெருக்கமாக்கியது. எந்த உயிரணுவிலிருந்து எந்த உயிர் உருவாகும் என யார் கணித்திட முடியும்? அதற்கான ரசாயன மற்றும் மின்னணு மாற்றங்களை ஆய்வு செய்வதில் வாழ்வைக் கழித்ததினால் உயிரணுவின் திரளாக அமைந்த மனிதர்களை அவரால் வேறுபடுத்திப்பார்க்க முடியவில்லை. ஒருவிதத்தில் அவரது ஆராய்ச்சியின் மையமும் தத்துவதும் இதுதான் எனத் தோன்றும்போதெல்லாம் பெட்ரி சட்டியிலிருந்து குதித்த தவளையாகத் தன்னை நினைத்துக்கொள்வார்.
சூரியனின் தகிப்பை உடலில் உணர்ந்தபோது அறையிலிருந்து நீண்ட தூரம் வந்துவிட்டிருந்தார். இன்னும் சற்று தூரம் செல் எனும் மனதின் ஆணையை மீறி துவளும் கால்களைத் தொடர்ந்தார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் கூட இதைவிட நீண்ட தூரத்தைக் கடந்திருப்பார். மனைவி இறந்த பின் தனிமையின் பிடிப்பிலும் வயதும் மனமும் நடத்தும் போட்டியிலும் எது முந்தியது என நினைத்தமாத்திரத்தில் அந்நினைப்பைக் கலைத்துப்போட்டார். அறையை தூரத்திலிருந்து பார்த்தபோது காலையில் வந்த தொலைப்பேசி அழைப்பின் பாரம் மீண்டும் தலைக்குள் ஏறியது.
ஆனால் தனது ஆய்வகக் குழு முதன்மை செயலிவடிவமைப்பாளர் ரிஷியின் அழைப்பை அப்படி நிராகரிக்க முடியாது.
‘என்ன மீண்டும் மலையேறிட்டீங்களா?’ , எடுத்ததும் ரிஷி நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுவான். அவனை குழுவில் இணைத்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
‘இல்ல, இந்த முறை இறங்கும் எண்ணம் இல்லை ரிஷி. என்னை விட்டுடுங்க.’
‘சரி’
‘அப்படியே நீங்களும் பிராஜெக்டை விட்டுப் போய் குழுவையும குளோஷருக்கு அனுப்பிடுங்க’
‘அனுப்பிட்டு?’
‘அப்படியே பேடண்டை டிஸால்வ் செய்யச் சொல்லி ஐ எம் சிக்கு மனு ஒண்ணு அனுப்பிடலாம்’
‘அப்படி செஞ்சா பிரமோத் உங்களை விட்டுவிடுவாரா? அவருக்கும் மெடிக்கல் கவுன்சிலில் யாரையும் தெரியாதா என்ன?’
பிரமோத் மகன் ஒரு வேகக் கார் பந்தயத்தில் அடிபட்டு ஓராண்டுக்கும் மேலாக படுக்கைவிட்டு எழ முடியாமல் கிடக்கிறான். கழுத்துக் கீழே உறுப்புகள் செயலிழக்காமல் பார்த்துக்கொள்ள சில நவீன சிகிச்சைகள் செய்திருந்தனர். நுரையீரல், இருதயம் என இரண்டும் செயற்கை நெகிழி அமைப்புகளால் இயங்கிக்கொண்டிருந்தன. உடலில் இருந்த பயாலெஜிகல் க்ளாக் உயிரணுக்களுக்குத் தேவையான மின்னணு துடிப்புகளை பேஸ்மேக்கருக்கு அனுப்பிக்கொண்டிருந்தது. கல்லீரலும், குடல்களும் ஸ்டெம் செல்களால் தசைகளைப் புதுப்பிக்கும் வழிமுறையில் இயங்கிக்கொண்டிருந்தன. ஆனால் இவை அனைத்தையும் சீரான ஒழுங்குக்குள் கொண்டுவருவதற்கு காமா-டி உயிரணுவின் இயக்கம் அவசியமாகிறது. கல்லீரலில் இயற்கையாக உருவாகும் இந்த உயிரணுக்களை ஆய்வு செய்ய வேலூர் சி எம் சி மருத்துவக் குழுவினர் இந்திய மெடிக்கல் கவுன்சில் சார்பில் இயங்கி வந்தனர். இயற்கையாகவே தசைகளைச் சரிசெய்யும் அமைப்பை விரைவாக்க சில ஆக்ஸிலரேட்டர்களை ராமனின் குழு உருவாக்கியிருந்தது.
‘ரிஷி, பல லேபுகளில் செய்வது போல முறை மீறின ஆய்வுகள் என் வழியல்ல. அதுக்காக செல்களில் ஆய்வு கூடாதுன்னு சொல்லலை. பாட்டிலில் குலுக்குவது போல ஒரேடியாக செயற்கை செயல்பாடுகளை மனித உடலில் செலுத்தக்கூடாது. நம்ம குழுவில் அந்த நம்பிக்கை இல்லைன்னா, அவர் சொல்றபடி மருந்து செய்திடுவோமா?’
‘சார், நான் அப்படி சொல்லவரலை. இருபது வருஷங்க முன்னாடி எம் ஆர்என்ஏ வாக்ஸினுக்கு செஞ்ச முயற்சி ஞாபகம் இருக்கா?
‘கோவிட் வாக்ஸினா?’
‘ஆமாம், அதுக்கு செய்த வழியில் செய்தால் என்ன? நாம் உருவாக்கும் மாற்று உயிரணு எப்படியும் பெப்டினாக மாறப்போகுது. அப்படி உருவாகும் பெப்டினை வீரியமில்லாமல் ஆக்குவோம்’
‘நாம் இதுவரை சேகரித்து வைத்துள்ள பத்தாயிரத்துக்கும் அதிகமான ஸ்டெம் செல்களில் இதை செய்ய யாரு இன்வெஸ்ட் செய்வாங்க ரிஷி? இது எத்தனை பெரிய வேலை? மெடிகல் கவுன்சிலில் நம்மை வெளியேற்றிவிடுவாங்க’
‘சார், எனக்கு மருந்துகள் பற்றி அதிகம் தெரியாவிட்டாலும், நம் பாட்களுக்குத் தேவையான உயிரணு இணைப்பை கொடுக்கும் செல்களின் எலெக்ரிக் மாடல்களுக்கான நிரல் தெரியும். மின் அழுத்தத்தில் ஒரு பாசிடிவ் சேரும் இடத்தில் ரெண்டு நெகட்டிவ் அழுத்தம் தரமுடியும்’
ராமனின் குரல் கொஞ்சம் கனியத் தொடங்கியது.
கூடுமானவரை குழுவில் வேலை செய்பவர்களை அந்தந்த துறை சார்ந்த வல்லுனரின் வாதங்கள் என எடுத்துக்கொள்வது மட்டுமே ராமன் செய்தது. குழுவில் உள்ள அனைவருக்கும் அந்த பிராஜெக்டைப் பற்றி எல்லாமே தெரிந்திருக்க வேண்டும் என அவர் கட்டாயப்படுத்தியதல்ல. ஒருவிதத்தில் ராமன் ஒரு சிறந்த தலைமை ஆய்வாளர் என்பதன் ரகசியமும் இதுதான். ரிஷி மட்டும் விதிவிலக்கு. ஸ்டெம் செல் ஆய்வில் அவருக்குத் துணையாக பத்து வருடங்களுக்கும் மேலாக இருந்து வந்திருக்கிறான்.
‘இந்திய ஃபார்மா கவுன்சில் சிறப்பு மருந்துகளை அனுமதித்த அதே கேட்டகிரியில் தனிப்பட்ட மருந்துகளையும் அனுமதிப்பதில்லையே. நீ சொல்றபடி பாட்களைத் திருத்தி எழுதினாலும், ரிஜெனரேடிவ் மருந்துகளுக்குப் பல சோதனைகள் இருக்கும். இது பொது மருந்தில்லை. ஒவ்வொரு மனிதனின் ஸ்டெம் செல் கொண்டு தயாரிக்கப்படும் பிரத்யேக மருந்துகள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சோதனைகள், பாலிசிகள் உண்டு. எப்படி கருமுட்டையின் உயிரணுவைக்கொண்டு மருந்துகள் செய்யக்கூடாது எனும் விதி இருக்கோ அது போல. கவுன்சிலில் என்ன நம்ம ஆட்களா இருக்காங்க? செயற்கை நுண்ணறிவு சோதனையைத் தாண்டுவது அத்தனை ஈஸியா?’
‘இப்படி தூரத்திலிருந்து பேசி சமாளிக்கும் விஷயம் இல்லை சார். ஊருக்கு வாங்க பேசலாம். உடனடியாக நாம பிரமோதுக்கு எதுவும் சொல்லத் தேவையில்லை’
ராமனைக் கலைத்துப்போட்டு விளையாட ரிஷிக்குத் தெரியும். இது ஒரு களியிறங்கல் விளையாட்டு என்பதை ரிஷி அவருடன் வேலை செய்த முதல் நாளிலிருந்து உணர்ந்திருந்தான். அதை ராமனும் அறிந்திருந்தார். மேஜை மீதிருந்த சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். ரிஷி பேசிக்கொண்டே இருந்தான், வெளியே நடுவயதுக்காரர்கள் இருவர் சண்டை போடும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தூரத்தில் கடல் அலைகளில் நின்றுகொண்டிருந்த ஜோடியிடம் ஒரு சிறுமி கையேந்திக்கொண்டிருந்தாள். அவளது மறு கையில் அலங்காரக்கூடைகள் வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன. சற்று தொலைவில் ஒரு சன்னியாசி வேடமிட்ட ஒருவர் காலை மடித்து அலைதொடாத தூரத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தார். அவருக்கு சற்று அருகில் ஜோடி கைவிரல்களைப்பின்னிக்கொண்டு உதயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தன. இவர்கள் அனைவரும் ராமனுக்கு ஒரே வார்ப்பாகத் தெரிந்தனர். ரிஷியின் குரல் பின்னுக்குச் சென்றிருந்தது.
*
தென் தமிழகம் உயிரணு ஆய்வகக் கூடங்களில் ஜிஎன் ஆர் என்றால் யாருக்கும் தெரியாது. ஜுனியர் ராமன் என்றால் உடனடியாக அவர் இருக்கும் ரெண்டாம் தள அறைக்கு வழி சொல்லிவிடுவார்கள். 1960களில் செல் மருத்துவத்தின் தொடக்கமாயிருந்த ஜி.என்.ராமசந்திரன் விட்டுச்சென்ற உயிரி இயற்பியல் ஆய்வுகளை கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்குப் பிறகு இன்றும் தொடர்ந்து செய்பவர் ஜுனியர் ராமன். வேலூர் சி எம் சி மருத்துவமனையுடன் அவருடைய ஆய்வகம் கூட்டணியுடன் ஸ்டெம் செல், தனிப்பட்ட மீளுருவாக்க மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வருவதற்கு முன் அவர் ஆய்வுகளில் தனக்கென பெயர் எடுத்தவர். மரபணு ஆய்வுகளைத் தாண்டி இன்று புரத மறுயுருவாக்கத்துறையில் உலகளாவிய நிபுணர். லண்டன் வாட்ஸன் கிரிக் ஆய்வகத்தில் உருவாக்கிய பெப்டின் புரத மேப்பர் மென்பொருள் பிராஜெக்டின் தலைவர். கடந்த பத்து வருடங்களில் ஜீனோம் பிராஜெக்ட் செய்த மரபணு வரைபடத்துக்கு நிகரான கண்டுபிடிப்பை செய்தவர். அதன் காரணமாகவே சக விஞ்ஞானிகளின் பொறாமைக்கு ஆளாகி ஆய்வகத்திலிருந்து வெளியேறியவர்.
‘மனித பரிணாம வளர்ச்சியைப் பற்றி பல சோதனைகளும், ஆய்வுகளும் நடந்திருப்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒரே உயிருக்குள்ளே நடக்கும் வளர்ச்சி, செல்லுலார் மாற்றங்கள் பற்றி எத்தனை பேருக்கு இங்கு தெரியும், சொல்லுங்க’
அண்ணா யுனிவெர்சிட்டி பயோடெக் பொறியியல் பட்டாதாரிகளுக்கு நடக்கும் சிறப்பு அறிவியல் டெட் எக்ஸ் திறப்புவிழாவில் ராமன் கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாமல் கூட்டம் அப்படியே உட்கார்ந்திருந்தது.
‘2006 ஆம் ஆண்டு ஷின்யா யமனாகா என்ற ஜப்பானிய ஆய்வாளர் கண்டுபிடித்ததிலிருந்து நம்முள்ளே நடக்கும் உயிரணு மாற்றங்களைப் பற்றி புது திறப்புகள் உண்டானது. ஸ்டெம் செல் என்பவை உயிரணுவில் வித்தியாசமானவை. உயிரணு பெருக்கலில் பல காப்பிகளாக உருவானாலும் அவற்றின் டி என் ஏ மாறாது. ஆனால் உயிரணுவின் ரசாயனமும் அவற்றுக்குள் இருக்கும் மின்னணு குணமும் மாறுபடும். அதனால் தான் அவை இருதயம், கல்லீரல், தோல், கண், மூளை என பலவிதமான தசைகளாக உருவாகும். கருவில் இருக்கும்போது உருவாகும் உயிரணு வளர்ந்த உறுப்புகளாக மாற்றமடைந்த உயிரணுவை மீண்டும் பொதுவான உயிரணுவாக மாற்ற முடியும் என ஷின்யாவும் அவரது ஆய்வுக்கூட குழுவும் கண்டுபிடித்தனர். மாற்றமடைந்த உயிரணுவை மீண்டும் மாற்றமில்லாத நிலைக்கு உருவாக்கி புதுவித உயிரணுவை உருவாக்க முடியும்.’
கூட்டத்தில் சற்று குழப்பமான சலசலப்பு வந்ததும், ‘ கண் தெரிவதற்கு உருவான உயிரணுவை நாம் நம் தோல் உயிரணுவுடன் சேர்க்க முடியாது. ஆனால் ஷின்யாவின் ஆய்வு வழி குறிப்பிட்ட ஸ்பெஷல் உயிரணுவை நாம் பொதுவான ஒன்றாக மாற்ற முடியும். அதன் மூலம் அடிப்படையான உயிரணுக்கள் உருவாக்க முடியும். ஒருவருடைய உடலிலிருந்து அதை லேபில் வைத்து சில மாற்றங்கள் செய்து மீண்டும் அவரது உடலில் செலுத்த முடியும். அப்படி மாற்றமடைந்தவை பெருகி உடலில் சில குறிப்பிட்ட வியாதிகளை குணப்படுத்தும். யோசிச்சுப் பாருங்க முப்பது வருடங்களுக்கு முன்னர் இது எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு!’
‘எங்க ஆய்வகங்களில் இதன் அடுத்தகட்ட ஆய்வுகள் மூலம் நம் வியாதிகளை எப்படி குணப்படுத்தலாம் என சோதனைகள் செய்கிறோம். இன்னும் பத்து வருடங்களில் பொதுவான மருந்துகளை யாரும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. சொல்லப்போனால், நம் உடலே அதற்குத் தேவையான மருந்தைத் தயாரிக்கும்படியான சுயசீரமைக்கு மருந்துகள் உருவாகிவிடும். நம் குறைகளே நாமே தீர்க்கும்படியான உயிரணுக்களைக் கொண்டு ஒவ்வொரு மனிதனுக்கும் பிரத்யேகமான மருந்தை தயாரிக்கும் ஆய்வுகளை நாங்கள் வேலூர் மருத்துவ ஆய்வு அமைப்பில் செய்து வருகிறோம். அதன் மூலம் வியாதிகள் முழுமையாகத் தீரும் நிலைமை உண்டாகும் எனச் சொல்லமுடியாது. ஆனால் நம் மருந்துகள் கொடுக்கும் பக்க விளைவுகள் இவற்றுக்குக் கிடையாது. உடலுக்கு ஒவ்வாத ரசாயனங்களை செலுத்தும் எந்த கம்பெனியும் நம்மை ஏமாற்ற முடியாது. . இதுக்கு அறிவியல் மட்டுமல்ல தொழில்நுட்பமும் பொறியியல் சார்ந்த இயந்திரங்களும் தேவை. அதற்காகத் தான் உங்கள் பொறியியல் கல்லூரியில் முதல் முறையாக உயிரி இயற்பியல் மற்றும் உயிரி ரசாயனம் போன்ற துறைகளுக்குத் தேவையான ஆய்வுக்குழுக்களை அமைக்கப்போகிறோம். எங்கள் ஆராய்ச்சிமையத்திலிருந்து சில ஆராய்ச்சியாளர்கள் உங்களுடன் சேர்ந்து வேலை செய்யப்போகிறார்கள்.’
பெரும் கனவுகளை முன்வைப்பதில் ராமனுக்கு நிகர் மெடிடெக் கார்ப்பில் யாரும் இருந்ததில்லை. பல கனவுகள் கைப்பட்டு கலைந்திருக்கின்றன. அவர் ஏற்றுக்கொண்ட சிலுவை இது. நூறு வருடத்திற்க்குப் பின்னான கனவு என்பதிலிருந்து நிதர்சனமான கனவுகளை அவர் கைகொள்ளத்தொடங்கியிருந்தார். இயற்கைக்கு உதவும் சில செயற்கையான ஆக்ஸிலரேட்டர்களை செய்வதில் அவரது ஆய்வு மையம் கொண்டிருந்தது. முழுமையாக இயற்கையின் பரிணாமத்தை மீறும் செயற்கை ஆய்வுகள் அவரது கொள்கைக்கு ஏற்படுடயதல்ல. மருந்துகளை ஆய்வுக்கூடங்களில் உருவாக்கி சோதனை எலிகளுக்குக் கொடுக்கும் தலைமுறையைச் சார்ந்தவர். அங்கிருந்து மருந்து மாதிரிகளை ஆய்வக கணினியில் உருவாக்கி சோதனை செய்து வீடியோ விளையாட்டுகளை வெளியிடுவது போல ப்ளுபிரிண்ட் போடும் காலத்துக்கு அவரால் கஷ்டமில்லாமல் வரமுடிந்தது. அறிவியலுக்கான தத்துவ அறிவும், தொழில்நுட்பமும் ஒன்று சேரும் முழுமையான இடத்தில் அவரால் இயல்பாகப் பொருந்திக்கொள்ள முடிந்தது ஒரு காரணம்.
ஒரு பொது மருத்துவரை விட சற்று மென்மையாகவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தத்தெரிந்தவர் ராமன். அவர்களைப் போல மனதில் ஒரு பகுதி மரத்துப்போனவன் அல்ல என அடிக்கடி தங்கள் குழுவிடம் அவர் பகிர்ந்துகொள்வார். ஒருவிதத்தில் அவரது பலகீனம் என்றாலும், அந்த மெல்லுணர்வு அவரது ஆய்வை தத்துவமாக்க உதவியிருக்கிறது, ஒரு ஜடப்பொருள் போலில்லாமல் உயிர்ப்புள்ள பொருளைப் போல உயிரணுவின் ஓட்டத்தைப் பார்த்திருக்க முடிகிறது. உயிரணுவின் அசைவுகளும், புது குட்டிகளைப் போடும் வேகத்தைப் பார்க்கும்போது ஒரு சிறு குழந்தையின் ஆட்டத்தைப் பார்ப்பது போல ஒரு குதூகலம் அவருக்குள் ஏற்படும். அம்மானை ஆடுது பார் எனக் கூறும்போது அவரது குழுவினர் திகைத்துப்போவார்கள். அவரது அம்மா சொல்லிக்கொடுத்த பாடல்களில் வரும் அம்மானைப்பருவம், சப்பாணிப்பருவம் எனும் பத்து பருவங்களை அவர் உயிரணுக்களின் அசைவுகளுக்கு பெயரிட்டிருந்தார்.
‘உயிரணுவுக்கு G1, S, G2, M என நான்கு ஸ்டேஜஸ் இருக்கில்ல அதே மாதிரி தான் குழந்தைகளுக்கும் இருக்கு. அது ஆப்ரிக்க குழந்தைனாலும் சரி, ரோமேனிய ஜிப்ஸியா இருந்தாலும் அதே தான். உங்களுக்கெல்லாம் பிள்ளைத்தமிழ்னு ஒரு பழைய புக் ஒன்னு இருந்தது தெரியாது. அதில் குழந்தைங்க பிறந்து மூன்றாவது மாதத்திலிருந்து 21 மாதம் வரை எப்படி ஆடும், ஓடும், விளையாட வைக்கச் செய்யும் செயல்கள். அதுவரை அது அம்மாவின் ஒரு பகுதி தான்.’
அவரது குழுவினர் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். அரைகுறை ஆர்வம் கூட அவர்களிடம் இல்லை. ஆனால் எதையும் தனதாக்கிக்கொண்டு அதிலேயே திளைத்துப்போகும் ராமனின் போக்கு அவர்களுக்கு ஒரு போதை. அதிலிருந்து ஒரு கங்கு தங்கள் ஆய்வு அனுபவத்திலும் வந்துவிடாதா எனும் தவிப்பு அவர் உருவாக்கிய குழுவினருக்கு உண்டு.
‘எப்படி S நிலையில் டி.என்.ஏ உருவாகிறதோ, G2 நிலையில் புது பிரிதியாகப் பிரியத் தயாராக இருக்கிறதோ அது போலத்தான் பிள்ளைப்பருவத்தின் ஊசலில் ஒரு தனிப்பிரஜையாக குழந்தை மாறுகிறது. தன் அகம் தனிப்பட்டது எனும் உணர்வு அப்போது அதுக்கு உருவாகும். கிட்டத்தட்ட செல்கள் புதுசாகப் பிரிந்து மகள் உயிரணுக்கள் உருவாவது மாதிரி’
பலத்த கைதட்டல்களுக்கு நடுவே ராமன் மேடையை விட்டு இறங்கும்போது நிரலித் துறையின் மாணவனான ரிஷியும், மெடி டெக்கார்ப் நிறுவனத்தில் சீஃப் இன்வெஸ்டர் ஆன பிரமோதும் அக்கூட்டத்தில் சூட்சும ரூபங்களாக இணைந்திருந்தது எதிரெதிர் சக்தியாக உருவாகிவிட்டது.
*
ஆய்வகத்துக்குத் தேவையான நிதி உதவிக்கோரும் கூட்டம் எட்டாம் தளத்தில் நடந்தது. முதல் நிலை ஆய்வாளராக இருந்தாலும் நிதி அமைவதின் முக்கியத்துவத்தை அறிந்த ராமன் தன் ஆய்வகக் குழுவினரோடு உட்கார்ந்திருந்தார்.
‘உங்க பெர்சனலைஸ்டு மருந்துகளும் அதைக் கட்டுப்ப்படுத்தும் ‘பாட்’களுக்கும் கடந்த முறையை விட ரெண்டு மடங்கு நிதியை அதிகப்படுத்தப்போகிறோம்’, மெடிடெக்கார்ப் சி எஃப் ஓ பேசும்போது நிதிக்குழுவின் தலைவராக இருந்தாலும் பிரமோதின் பிரதிநிதி என்பதாகவே அவரது உடல் மொழி இருந்தது.மெடிடெக் கார்ப்பின் தாராள நிதிக்கு காரணத்தை அறியும்விதமாக ராமனின் சிந்தனைப்போக்கு இருந்தது என்றாலும் தனது ஆய்வை மிக வேகமாக முடித்துவிடமுடியும் என்ற மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது. சி எஃப் ஓ பேசுவதை மேலும் கூர்ந்து கேட்டார்.
‘எங்கள் மேல் அமைப்பின் தலைவர் சித்தார்த் முகர்ஜிக்கு சில கண்டிஷன்கள் இருந்தாலும், தென் இந்திய ஃபார்மா அமைப்பின் சார்பில் சில சிறப்பு கண்டிஷன்களை இணைத்திருக்கிறோம் அதையும் பார்த்திடுங்க’, என்றார்.
கூட்டத்தில் சில முணுமுணுப்பு எழுந்தாலும், எல்லாரும் ராமனின் முன்னெடுப்புக்குக் காத்திருந்தனர். வெயிலின் கடுமைக்கு ஏற்ப திரைசீலைகள் தானாக மடிந்துகொண்டன. சட்டென ஒரு நிழல் அலை அறையில் பரவியது.
‘டாப்பாட் எனும் சின்ன ரோபாட்கள் மூலம் செலுத்தப்படும் பெர்சனல் மருந்துகள் தொடர வேண்டும். இதில் நம் வேலூர் சி எம் சி மருத்துவமனையின் ஸ்டெம் செல் மற்றும் ரீஜெனரேடிவ் மெடிசின் ஆய்வுக்கூடத்தின் கிளை அமைப்பான ஃபார்மா டெக்குடன் கூட்டணி அமைய வேண்டும்’
ராமன் இதை எதிர்பார்த்திருந்தார். அதில் ஆச்சர்யமில்லை. கடந்த சில வருடங்களாகவே சி எம் சி மறுசீரமைப்பு மருந்து ஆய்வுகளில் முன்னணியில் இருந்து வந்துள்ளது. ராமன் கூட சில தனிப்பட்ட யோசனைகளைக்கொடுத்துள்ளார். வேலூர் மருத்துவமனை மருந்து ஆய்வகக் கவுன்சிலுக்குக் கடந்த சில வருடங்களாகவே மறைமுக அழுத்தங்களைத் தந்துள்ளது.
‘செல்களிலிருந்து எடுத்து உருவாக்கும் தனிப்பட்ட மருந்துகள் காமா-டி செல்களாகச் செயல்படும்படி தனிப்பட்ட மின்கடத்திகளை நம் டாப்பாட்கள் உருவாக்க வேண்டும்’
இதைப் படித்ததும் எல்லோரும் ராமனைப் பார்த்தனர். எதற்காகவும் இயல்பான மரபணு மாற்றத்தை குறைக்கும்விதமாக மேல் அதிகாரத்தை மனிதன் உருவாக்கும் மருந்துகள் உருவாக்ககூடாது என்பது தான் அவரது ஆய்வின் அடிப்படை. லிவர் மறு உருவாக்கத்திற்கு முக்கியமான பங்களிப்பை அளிப்பது காமா உயிரணுக்கள். செயற்கையாக உருவாக்கப்படும் காமா உயிரணுக்கள் இயற்கையாக உடலில் உருவாக்கப்படும் காமா செல்களை செயலிழக்கச் செய்யும் என்பது உயிரி இயற்பியலின் அடிப்படை. அவரது ஆய்வகத்தில் செய்யப்படும் சோதனைகளின் முக்கியமான விதியாக இது இருந்துள்ளது. உயிரணுக்கள் சிறப்புத் தகுதி பெற்ற பின் பெட்ரி டிஷ்ஷிலிருந்து டாப்பாட்களாக மாற்றம் செய்யும்போது அவை எக்காரணம் கொண்டும் இயல்பான மரபணு அமைப்பில் மாற்றம் செய்யக்கூடாது என்பது முதல் கட்ட சோதனை. அதற்காகவே செயற்கையாக உருவாக்கப்படும் காமா-டி உயிரணுக்கள் முறையில் ராமரின் குழு ஆய்வு செய்வதில்லை. அது வேற டிபார்ட்மெண்ட்.
‘நீங்க சொல்வது இயற்கை மரபணு அமைப்பை ஓவர்ரைட் செய்யும் செயற்கை காமா-டி உயிரணு உற்பத்தி. இன்னும் ஐரோப்பாவில் கூட இது நேரடியாகப் பயன்படுத்தப்படவில்லை. இந்திய மெடிகல் கவுன்சிலின் ஆய்வக சோதனையில் ஃபெயில் ஆகிவிடும். இந்த ப்ளூபிண்ட் மருந்து செயற்கை நுண்ணறிவு சோதனையின் முதல்கட்டத்திலேயே முடிந்திடும்.’
இவ்வரியின் முக்கியத்துவத்தை அந்த அறையில் யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
‘மெடிக்கல் கவுன்சில் விதிகள் அடிப்படையான உயிரணுக்களுக்குச் செல்லுபடியாகாது, தசை உயிரணுக்கள் போன்ற ஸ்பெஷல் கேட்டகிரியில் தான் அந்த விதி வரும்’, கூட்டத்திலிருந்து பதில் வந்தது.
சி ஃஎப் ஓ கூட்டி வந்த ஆய்வாளர்கள் தங்கள் கடமையை செவ்வெனே செய்தனர்.
‘அந்த விதியின் சகல சாத்தியங்களையும் பிடித்து நாம் உலுக்க முடியாது மிஸ்டர் பிரமோத். எங்கள் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டெம் செல் மற்றும் ரீஜெனரேட்டிவ் மருந்து ஆய்வு என்பது உடலின் ஜீனோம் மற்றும செல்லுலார் விதிகளோடு ஒத்துப்போகும்படி சில ஆக்ஸிலரேட்டர்கள் மட்டுமே பயன்படுத்தும். இயற்கையாகச் செய்யப்படும் செல்லுலார் கம்யூனிகேஷனில் நாம் கைவைக்கக்கூடாது. நாங்க அடிப்படையாக நம்புவதும் அதுதான். அந்த செல் விளையாட்டைத் துரிதப்படுத்தும் ஆக்ஸிலேட்டர்கள் தான் எங்கள் ஆர்வம். அதாவது இயற்கையாக நடக்கும் நிகழ்வை வேகப்படுத்துவது. சீனாவிலும், ரஷ்யாவிலும் இப்படியான ஆய்வுகள் முறை மீறி நடந்துகொண்டிருக்கிறது. இங்கு அது சாத்தியமே இல்லை. பேஷண்டின் செல்களை எடுத்து மருந்து செய்வதால் நம் டாப்பாட்கள் உடலில் செலுத்திய உடன் பிற உயிரணுக்களோடு இயல்பாக இணைந்துவிடும். பின்னர் நம்மால் கூட அவற்றை கண்டுபிடிக்கமுடியாது.’
‘அதில் நமக்கு என்ன பெருமை ராமன்? தில்லி ஏய்ம்ஸ் ஆய்வுக்கூடங்களில் நம்மால் உருவாக்கப்படும் உயிரணுக்களை அடையாளம் செய்யும்படி என்கோட் செய்றாங்களே? மந்தைக் கூட்டத்தில் நம் ஆடு முதுகில் வண்ணம் பூசுவது போலத்தானே இது?’
‘இதுவரை எங்கள் ஆய்வின் முடிவில் வரம்பு மீறும் மரபணுவை உடல் உடனடியாக ரிஜெக்ட் செய்வதைப் பார்க்கிறோம். அது ஒரு ஃபாரின் ஆப்ஜக்ட் போல ஆகிவிடும் அபாயம் உண்டு. இதனாலேயே நம் செயற்கை நுண்ணறிவு குழு உருவாக்கிய சோதனையில் ஃபாரின் ஆப்ஜக்டுகளை முதல் கட்டத்திலேயே கண்டுபிடிக்கும் வழிமுறை இருக்கு. மருந்துகளை கொண்டு செல்லும் ரோபாட்களே கூட இதை ரிஜெக்ட் செய்துவிடும்’
கொஞ்சம் நேரம் என்ன செய்வதென்று தெரியாது அந்த அறை மெளனமாக இருந்தது. ராமன் கடைசி வார்த்தையைக் கூறியபின்னர் பெரிய எடை மனதிலிருந்து விலகி மேலும் பெரிய எடை ஒன்று உட்கார்ந்தது போல உணர்ந்தார். இப்பொழுது எழுந்து நிற்கவே முடியாது எனத் தோன்றியது. ஆனாலும், சும்மா இருக்க முடியாது. அருகில் இருந்த அவரது கோப்பையில் தேனீரை நிரப்பிக்கொண்டு. ஒரு சிப் குடித்தபோதுதான் எத்தனை தாகம் என்பதை உணர்ந்தார். மனம் படபடத்தது.
‘உங்கள் பிரச்சனை ஐ எம் சி தான் என்றால், எனக்கு அங்க நிபுணர்கள் தெரியும். நான் பார்த்துக்கொள்கிறேன்.’, எனப் பிரமோத் கூறினார்.
நினைத்ததுபோலவே விவாதம் ஒரு அரசியல் ஆடுகளமாக விரிப்பை போட்ட திசையில் செல்லத் தொடங்குகிறது என ராமன் உணர்ந்தார். இதுவும் அறிவியில், ஆய்வு, கண்டுபிடிப்புகள் எல்லாவற்றுக்கும் இடையே நடப்பது தான். பணமும், அதிகாரமும் தூசி போலப் பரவியிருக்கும் துறைகளில் ஆட்டங்களை நடத்துவதற்கு அறிவியல் விதிகளை விட நுண்ணிய பல வழிகள் உள்ளன.
பிரமோத் புன்னகை செய்தார். ‘ சரி ஒண்ணு செய்யலாம். இந்த மருந்து ரோபாட், அதான் டாப்பாடுக்குத் தேவையான உயிரணுக்களை தில்லி எய்ம்ஸ் லேபில் உருவாக்கச் சொல்லலாம். ஆனால் அவை பயணம் செய்யும் வெஹிகிள் நீங்க செய்யப்போற பாட், சரியா?’
எப்படியேனும் ரெண்டாவது வரியில் தன் அரசியல் காய்களை நகர்த்தத் தொடங்கிவிடுவார் என பிரமோத் பற்றிப் பலரும் சொல்லியிருந்தனர். தனது அனுபவத்தில் ராமன் இவற்றையும் கவனித்திருக்கிறார். சட்டென கண்ணை மூடிக்கொண்டு முழு கோப்பையை வாயில் கவிழ்த்துக்கொண்டார்.
‘சார், 2020ல கோவிட் வேக்ஸின் எத்தனை மாதங்களில் உருவாக்கினாங்க?’
’11 மாதங்கள்’
‘உலகத்திலேயே அதுவரை இந்த வேகத்தில் ஒரு வேக்ஸின் தயாரித்ததில்லை. அதுவும் இந்த ஸ்கேலில் செய்யப்படலை. கூட்டங்கூட்டமா செத்தவங்களின் முதல் கட்ட போஸ்ட்மார்ட்டம் செய்வதற்குள் எம் ஆஎன்ஏ ஆன்டிபயாடிக்கோட ப்ளூ பிரிண்ட் ரெடி ஆனது. சுற்றியிலும் செத்துக்கொண்டிருந்த ஆயிரணக்கானவர்களில் சாவு தான் அந்த வேகத்துக்குக் காரணம். உங்க பாஷைல அதுவும் ஒரு சப்ளை டிமாண்ட் தந்த ஆக்ஸிலரேட்டர் தான். இப்போ நம் உலகத்தில, அவ்வளவு ஏன், நம்ம நாட்டில மரபணு சிக்கல்கள், அல்சைமர் சிக்கல், உடலுறுப்பு சிதைவு நோய் வந்தவங்க லட்சக்கணக்கானவங்க இருக்காங்க. நாம் காமா-டி செல்லை ஓவர்ரைட் செய்யக்கூடிய டெக்னாலஜியைக் கண்டுபிடிச்சா, அதை ப்ளூ ப்ரிண்டாகக் கொண்டு எல்லா ஆய்வகங்களும் மருந்து தயாரிக்கத் தொடங்கிடும். ஆனால் அது எதுவுமே பக்க விளைவுகளை உருவாக்காது என யாரும் கேரண்டீ கொடுக்கமுடியாது. அதனால தான் மெடிகல் கவுன்சிலிலும் அப்படி ஒரு விதி வெச்சிருக்காங்க.’
ராமன் சிறிது இடைவெளிவிட்டார். மேலும் பேசமுடியாமல் அப்படியே அமர்ந்திருந்ததைப் போலிருந்தாலும், கோபத்தில் அவர் கைகள் கொஞ்சம் நடுங்கிக்கொண்டிருந்தன.
‘ஒரு சக்தி உயிரணுக்களின் மொத்த இருப்பையும், அசைவுகளையும் கட்டுப்படுத்துது. கோவிட் வேக்ஸின் கண்டுபிடித்து இருபது வருடங்களாச்சு..இன்னும் உயிரணு கூட்டு இயங்கியலுக்கான அடிப்படை விதியை நம்மால் கண்டுபிடிக்க முடியலை. பல ஊகங்கள் இருக்கு. நம்ம மனுஷங்கள் போலத்தான். நான் ஆய்வுக்கு வந்து நாற்பது வருடங்கள் ஆகப்போகுது. எனக்கு எல்லாருமே சிறு குழந்தைங்க மாதிரி தான் தெரியறாங்க. என் குழந்தை மாதிரி. கூட்டா இருக்கோம். இணையறோம், பிரியறோம், குழந்தை பெத்துகிட்டு நம்மையே பிரதி பண்ணிக்கிறோம். அதில் சில தெம்பா இருக்கு, சில உறவுகள் வீக்கான செல் மாதிரி சட்டென உடையுது. நல்ல மழையும் வெயிலும் இருந்தாலும் சில இடங்களில் வானவில் தெளிவில்லாம இருக்குமில்ல, அந்த மாதிரி ஒரு வீக் ஃபோர்ஸ். அந்த விதியோட விளையாடுவதற்கு நமக்குள்ளையே சில கட்டுப்பாடுகளைப் போட வேண்டியதா இருக்கு..in the long history of humankind and animal kind, those who learned to collaborate and improvise most effectively have prevailed. டார்வின் இதைச் சொன்னபோது அவர் கூட்டு வாழ்க்கையை மட்டும் சொல்லலை, இயற்கை மீது நமக்கிருக்கும் அதிகாரம் பற்றியும் தான். அதை எப்படி முறையா பயன்படுத்தனும் என்பது பற்றியும் தான்..’
இதைச் சொல்லிமுடித்ததும் ராமன் மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் கசிந்தது. அவரது கை நடுக்கம் குறையவில்லை. அவரது உடம்பே எல்லார் முன்னிலையிலும் பார்வைக்கு வைக்கப்பட்டது போல கூசி உட்கார்ந்திருந்தார். அவரை சுற்றி இருந்த அனைவரும் அந்நியர் போலவும், அவரது அகம் முழுவதும் சோதனைக்குத் தயாராகி நிற்பது போலவும் அவருக்குத் தோன்றியது. இது இன்று நடக்கும் சண்டை அல்ல. மானுட மேன்மைக்கும், அவனது விடுதலைக்கும் முன்வைக்கப்படும் எந்த அமைப்பும் ஏதேனும் ஒரு கட்டத்தில் அதிகாரம், பணம், அரசியல் முன்னால் தனது ஆன்மாவை நிர்வாணமாக காட்சிப்படுத்த வேண்டியிருக்கிறது. அவன் உருவாக்கிய பொருளியல் அமைப்பில் உண்மையான மேன்மைக்கும் இவை அனைத்தும் அவசியம் என்பதை உணர்ந்தவர் தான் ராமன். பெரிய கனவுகளை நிறைவேற்றத் தேவையான பலம் இவர்களிடம் தான் உள்ளது என்றும் அறிந்தவர்.
அவரது நாக்கு வரண்டு போயிருந்தது. சில நிமிடங்கள் முன் குடித்த தேநீர் கூட சென்ற இடம் அறியாது வாயை காலியாக்கிவிட்டுச் சென்றிருந்தது. மெளனம் நீண்டிருந்தது. அறையில் அடுத்த வரிசைப்படி பிரமோத் பேச வேண்டும்.
‘எனக்கு பெர்சனலாக இந்த மருந்தால் ஒரு காரியம் நடக்க வேண்டியிருக்கிறது. உங்களுக்குத் தெரியும்தானே?’, பிரமோதின் குரல் கொஞ்சம் கனிந்து தனிப்பட்ட முறையில் ராமனுக்கு மட்டும் கேட்டது போலத் தோன்றியது.
‘ஆக்ஸிலேட்டர்களை முறைப்படி அவர் சிகிச்சையில் பயன்படுத்திவருகிறோம் மிஸ்டர் பிரமோத். ஆனால் நீங்க கேக்கறது..’
*
பல கிலோமீட்டர்கள் ஓடியது போல ராமனின் உள்ளமும் உடலும் களைத்திருந்தன. உடல் முழுவதும் போர்த்தியது போல அசதி. கன்னியாகுமரியிலிருந்து வந்த சில மணி நேரங்களில் நீண்ட நேரம் குளித்து முடித்தார். உடலில் கனத்த நீர் விழுந்துகொண்டே இருந்தது. அவரது ஷவரில் பல திசைகளிலிருந்தும் விழும் நீருள் அவர் மூழ்கியபடி இருந்தார். தனது கணக்குகள் தப்பாகிப்போகுமா எனும் குழப்பம் அவரிடம் எஞ்சி இருந்தது. விமானத்தில் ஏறுவதற்கு முன் தண்ணீர் அருந்திருந்தார். இப்போது ஷவரில் வந்த நீரைக்கொண்டு உதட்டை ஈரப்படுத்திக்கொண்டார்.
ரிஷி கதவைத் திறந்து உள்ளே வந்தபோது அவர் அலுவலக கோப்புகளைப் பார்த்து முடித்திருந்தார். எதுவும் நடக்காதது போல, ‘பாலிமெட் டீமிலிருந்து வந்த ரிப்போர்ட்டைப் பார்த்தாச்சா? நம் ஃபார்மா மாடல்களில் சில மாற்றங்கள் செய்யச் சொல்லி வந்திருக்கு. இது முன்னாடியே நம்ம டெஸ்டிலேயே தெரியாதா?’
ராமனின் கண்கள் சிவந்திருந்தன. அனிச்சையாக பிற விஷயங்களைப் பேசுவதன் மூலம் பிரமோத் பற்றிப் பேசத் தவிர்க்கிறார் என்பதை ரிஷி உணர்ந்தார்.
‘இப்போ வந்த விமானத்தின் வேகம் மிக அதிகம். மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் போயிருக்கும் என நினைக்கிறேன். அத்தனை வேகமான என்ஜின். என்ன..கன்னியாகுமரி இடமும் மனிதர்களும் தான் இன்னும் மாறவில்லை’
‘சார், நம்ம பிரமோத் மேட்டரை அத்தனை சுலபமா தவிர்க்க முடியாது. எனக்கும் பேச பிடிக்கலை தான். ஆனால், பாட்களை மட்டும் தந்தால் போதும் என அவர்கள் சொல்லிவிட்டால் நம்ம நார்த்ஸ்டார் பிராஜெக்ட் ஆட்களை வீட்டுக்கு அனுப்பிட வேண்டியதுதான்’, ரிஷி வேகமாகப் பேசி முடித்தார்.
ராமன் அலுப்புடன் ரிஷி சொல்வதைக் கேட்பது போல பாவனை செய்தார். அவரது உடல் மொழி ஏற்கனவே முடிவெடுத்தவன் போலத் தெரிந்தது.
‘இன்னும் எத்தனை நாள் இப்படியே நாட்களைக் கடத்த முடியும் சார். இது ஒரு உயிரைக் குறித்த முடிவு. சாதாரண உயிர் இல்லை. நம்ம விசியோட மகன்..’
‘இது ஒரு முடிவற்ற போர், ரிஷி. என்னைக்குமே ஆய்வுக்கும் அதை மக்களிடையே சேர்ப்பதுக்கும் பெரிய இடைவெளி இருக்கத்தான் செய்யும். கலீலியோ தயார் செய்த முதல் தொலைநோக்கியை இத்தாலியிலிருந்த பணக்காரங்க எல்லாம் போட்டி போட்டு வந்து பார்த்தாங்களாம். ஒரு ராஜா, தூரத்தில் தெரிந்த எதிரிக் கப்பலை பார்த்ததும் அதில் வந்த ஐம்பது பேரை சண்டை போட்டு கொன்னுட்டார். பல மாதங்கள் அது கலீலியோ மனசை அலைக்கழிய வெச்சிருக்கு. டெலெஸ்கோப்புக்கு இப்படி ஒரு உபயோகம் இருக்கும்னு அவர் எதிர்பார்க்கலை. அணுகுண்டு, நோய்க்கு கொடுக்கும் ஆண்டிபயாடிக். இப்படி ஒவ்வொரு கண்டிபிடிப்புக்கும் பின்னாடி ஒரு தவறான உபயோகம் இருக்கு தானே?’
ரிஷி பெருமூச்சுவிட்டார்.
‘சார் அதுக்காகத் தான் பாலிசியும் ரெகுலேஷனும் கவர்ன்மெண்ட் போட்டிருக்கு. உங்களுக்குச் சொல்லணுமா? மெடிகல் கவுன்சிலில் பார்த்துப்பாங்க. இப்போதைக்கு நம்ம எதிர்கால பிராஜெக்டுக்கு பணம் வரும்படி எதாவது முடிவு செய்யணும்’
‘ஆமாம் செய்யணும் தான். ஆனால் நம்ம ரெகுலேஷன் எல்லாம் அந்த கால மந்திரி மாதிரி ஒரு அடி தள்ளி பின்னாடி தான் வரும். அதுக்குள்ள இது போல தவறான முன்னுதாரணங்களைக் காட்டி வேற கிளினிக்கள் டிரையல் எல்லாத்துக்கும் தலையாட்டிடும்’
ரிஷிக்கு ஒரு சித்திரம் உருவாகவே இல்லை. பயணத்தினால் வந்த தளர்ச்சி, வயதானதால் வந்த குழப்பம் என நினைத்தபடி ராமனைக் குழப்பத்துடன் பார்த்தான். ராமன் எங்கோ விட்டத்தைப் பார்த்துப் பேசினார்.
‘இயற்கையை ஓவர்ரைட் செய்ய மனுஷனுக்கு அதிகாரம் இல்லை. இல்லை அது கூட சரியான வரியில்லை. ஒரு தனிமனிதனுக்கு அதிகாரம் இல்லை. நான் உயிரணுக்களை கண்ணால் தொட்டுத் தொட்டு நாற்பது வருஷத்துக்கு மேல பார்க்கிறேன். ஒரு ப்ரைமரி ஸ்கூலில் ஓடி விளையாடும் பிள்ளைகள் போலத்தான் எனக்கு செல்கள் தெரியுது. வளர்ந்து உறுப்புகளாவும் மனுஷங்களாகவும் ஆகும்போதும் எனக்கு ஒரு மகத்தான உயிர் மாதிரி தெரியும். நம்ம உயிரினமே ஒவ்வொரு கணமும் மாறியபடி இருக்குதுதான், ஆனால் ஒரு உயிருக்குள்ள இத்தனை மாற்றங்கள்! அதிலும் முற்றிலும் அழிவேயில்லை. எல்லாவற்றையும் உருக்கியபடி ஓடும் லாவா மாதிரி. நான் இத்தனை வருடங்கள் இந்த உண்மையதான் தேடறேன். முதல் மூச்சுக் காற்று யார் கொடுத்தது? அது எப்படி ஒரு செல் அதிலிருந்து இன்னொரு செல் அங்கிருந்து தசை உறுப்பு என உருமாறிக்கொண்டே இருக்கு. இதெல்லாம் நம்மையும் மீறின ஒண்ணு. இல்லைன்னா இத்தனை வருஷங்களா நமக்குப் போக்கு காட்டியிருக்காது. இன்னிக்கும் ஸ்டெம் செல் ரிசேர்ச்சில் இது ஒரு புதிர் தானே? உன்னோட ஆர்டிஃபிஸியல் இண்டெலிஜென்ஸ் இப்படி வர்ற உயிரணுக்களைப் பிழையாப்பாக்குது இல்ல?
ரிஷி அவரை வெறித்து உட்கார்ந்திருந்தான்.
‘சொல்லு, இந்த செல்கள் மல்டிப்ளை ஆவதை நீங்க என்னன்னு சொல்றீங்க? அது ஒரு எரர், பல செல்கள் அதில் சிதையும், சிலது மிகக் கச்சிதமான காப்பியா உருவாகும். அந்த முறைக்கு ஃபீட்பேக் எரர் எனச் சொல்லும்போது நாம் அதைப் பிழையா பார்க்கிறோம்னு தோணுது இல்ல? ஆனா அந்த பிழையில் ஒரு நேர்த்தி இருக்கு. அப்படி எத்தனை காலம் பிழை உருமாறி ஒரு வடிவ ஒழுங்குக்குள் வந்திருக்கு. அதுக்கான வெளி காரணிகள் எத்தனையோ இருக்கலாம். அப்படி ஒன்றை நம் சிறு அளவிலான சாம்பிள் மாடல்களைக் கொண்டு ஓவர்ரைட் செய்யக்கூடாது. டி என் ஏ ஹார்ட்வேர் என்றால், உயிரணுயும் அதன் ரசாயன சேர்க்கை, மின் கடத்தும் முறை எல்லாம் தான் சாஃப்ட்வேர். இந்த கூட்டணிக்கு என்று ஒரு முறை இருக்கு. முன்னுக்கும் பின்னுக்குமான தொடர்பு. ஒருவிதத்தில் அந்த செல் எந்த உறுப்பை உருவாக்கப்போகிறதுன்னு அதுக்குத் தெரிவதில்லை; ஆனால் அது தெரியாத உயிரணுக்களும் இல்லை. ஷின்யா யமனாகா இதற்கு ஒரு ரிவர்ஸ் வழி கண்டுபிடிச்சார் இல்லையா? அப்படி செல் என்னவாகப்போகிறதுன்னு ஒரு அறிவு இருக்கில்லையா – அதுக்கு நம்ம பழைய முறைல சத்காரியவாதம்னு பெயர். காரிய காரணத்தொடர்பு. காரியத்தில் காரணமும், காரணத்தில் காரியமும் அடங்கி இருப்பது. இது ஏதோ ஒரு மேஜிக் இல்லை. அதுக்காக சத்காரியவாதம் தான் இதுக்கு பதில் என்பது இல்லை. இப்படி நம்மை சுற்றி இருக்கிற வலையில் காரியமும் காரணமும் இணைத்திருக்கும் மந்திரக்கயிறின் ஒரு பிடி இப்போ இயற்கை கிட்ட இருக்கு, இன்னொரு பிடி நம் கையில் வந்து நழுவிப்போகுது. நம்ம கைக்கு முழுசா வந்தாலும் அந்த இயற்கை/கடவுள்/ஆம்னிபொடண்ட் எது வேணாலும் சொல்லு, அதோட பிடி நமக்குக் கிடைக்காது என்பது என் நம்பிக்கை’
ரிஷிக்கு அவர் பேசும் தோரணை புதுசு அல்ல. அவரது அனுபவத்தில் ராமன் ஏதோ ஒரு கட்டத்தில் அறிவியல் எனும் இடத்திலிருந்து தத்துவத்துக்குள் வந்திருந்தார். அது கண்காணா கோடு. அந்தப்பக்கம் போன பிறகு திரும்பவும் இந்தப்பக்கம் வரமுடியாது. வெறும் அனுபவத்தால் மட்டும் இக்கோணம் வந்துவிடமுடியாது என்பதை பிற சீனியர்களைப் பார்த்து ரிஷி அறிந்திருந்தார். பளீர் வெளிச்சத்தில் கண்ணில் தெரியும் காட்சி போல. அதைப்பார்த்தபின் கண்ணை மூடினாலும் கண்ணுக்குள் உருவம் சில நொடிகள் தெரியும். வாழ்வில் கடந்த அனுபவத்தை ரத்தினச் சுருக்கமாக அவர்களால் சொல்லிவிடமுடியும். அப்படிப்பட்ட ஒருவரைத் தான் ரிஷி தன் முன்னே பார்த்தார்.
*
தான் நின்றிருந்த தளத்தின் பாரம் முழுவதும் அவர் மீதிருந்ததைப் போல உணர்ந்தார் ராமன். ஆய்வகத்தின் முடிவை பிரமோதுக்கு அனுப்பி இருப்பார்கள். தன்னுடையே ஆய்வகத்தில் கூட பலருக்கு இந்த முடிவில் உடன்பாடு இல்லை என்பதை ராமன் உணர்ந்திருந்தார். முன்னெப்போதும் செல்ல முடியாத இடத்துக்கு இந்த ஆய்வை பிரமோதால் பின்னுக்குத் தள்ள முடியும். அதன் முழு தாத்பரியத்தையும் உணரும் போது ராமனின் மனம் சற்று திடுக்கிட்டது. அவரது முடிவினால் வரப்போகும் விளைவுகளைக் காட்டிலும் ஆய்வினால் உண்டாகும் தவறான போக்குகளை மனக்கண்ணில் அசைப்போட்டார். முன்னர் உயிரணுக்களின் பல நிலைகளைப் பற்றிப் படிக்கும்போது அந்தந்த ரசாயன மாற்றங்கள் அவரது கண்ணில் படம் போல விரியும். அவை கல்லில் செதுக்கி அடுக்கப்பட்டவை போல உறுதியாக இருக்கும். அடுத்த நொடி அதனதன் அசைவுகள் எதற்கும் அடங்காமல், இதுதான் நான் எனத் திரண்டு வந்து ஒரு வடிவத்தை அடையும்.
கண்ணை மூடிக்கொண்டார். ஒரு கனவு போல அந்த காட்சி இப்போது அவர் முன்னே வந்தபடி இருந்தது. இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என முழுமையாக அவருக்கு விளங்கவில்லை. ஆனால், அதில் ஒரு பார்வை இருந்ததை உணர்ந்தார். இமைக்காமல் அப்பார்வையும் அவரைப் பார்த்தது. ராமன் அதைப் பார்த்திருக்கிறார். உடனே கண்களைத் திறந்துகொண்டார்.
தொடர்புள்ள பதிவு
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “உயிர்த்தாம்பு”