
இறுதி பகுதி
உயிரணுக்கள் (Cells) மரபணுக்கள் (Genes) இவை ஒரு உடல் உயிர் உருவாக்கத்தில் என்ன பங்கு வகிக்கின்றன? இவற்றில் எது விஸ்வ கர்மா?
இரு சகோதரிகள் ஒன்றிணைந்து காரென் கீகென் (Karen Keegan) என்ற ஒரு பெண்ணாக உருவாகியுள்ளார்கள். எனவே, உயிரியலாளர் அல்பான்ஸோ மார்டீனெஸ் ஆரியாஸ், (Alfonso Martinez Arias) மனிதர்களின் அடையாளம் அவர்களின் டி என் ஏ (DNA) அல்ல, அவர்களின் உயிரணுக்களில், அதாவது செல்களில் உள்ளது என்று சொல்கிறார்.
இந்தக் காரென் கீகென் யார்? இவருக்கு இரு மரபணுத் தொடர் இருக்கிறது. இரண்டு கரு முட்டைகள், இரண்டு விந்துக்களுடன் கலந்து, இரண்டும் இணைந்து ஒரு உடலுயிராக உருவாகியுள்ளன. பாஸ்டனைச் சேர்ந்த இவர், தனது 52ம் வயதில் கடும் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டார். அவரது மூன்று வாரிசுகளும், தமது சிறுநீரகத்தைத் தர முன் வந்தனர். எந்த வாரிசின் உறுப்பு பொருந்தி வரும் என்று மருத்துவர்கள் பரிசோதிக்கையில், அவரின் இரண்டு குழந்தைகள் அவரின் மரபணுவைக் கொண்டிருக்கவில்லை என்று அறிந்து கொண்டார்கள். மேலும் வியப்பிற்குரிய ஒன்றும் அவர்களுக்குப் புலப்பட்டது. அவர்கள் எந்த ‘செல்லை’ப் பார்த்தார்களோ, அதன் மரபணு, மரபணுத் தொடர், அவர் உடம்பில் இருக்கும் மற்றொரு ‘செல்’லிலிருந்து மாறுபட்டு இருந்தது. சுருக்கமாகாச் சொல்வதானால், அவருக்கு இரண்டு வித மரபணுக்கள், மரபணு வரிசை இருக்கிறது! அவரது திசுக்கள், மாறுபட்ட ஆதாரங்களைக் கொண்ட உயிரணுக்களால் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விசித்திரம் என்னவென்றால், ஒரே உறுப்பில், இரண்டு மரபணுக்கள் காணப் பெறுவதுதான். இதை கைமெரிக் (Chimeric) எனச் சொல்கிறார்கள். எனவே, ஒரு மனிதரின் ஆதாரக் கட்டமைப்பு, டி என் ஏ அல்ல, அவர் அடையாளத்தை அது நிர்ணயிப்பதில்லை, அது ஒரு செயற்கருவி என்று ஆரியாஸ் சொல்கிறார்.
ஐக்கிய அரசின் ராயல் சொஸைடி நிகழ்த்திய கணக்கெடுப்பின்படி, ‘சுய நல ஜீன்’ (Selfish Gene) என்ற தலைப்பில் பிரித்தானிய உயிரியலாளரான ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) எழுதிய புத்தகம் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்த நூல். டி என் ஏ மூலக்கூறுகள் மனிதனைக் கவசமெனக் கொண்டு, தான் என்றென்றும் தொடரும் நோக்கத்தில், அடுத்த தலைமுறைக்கு தன்னைக் கடத்தும் சாதனமாக அவரைப் பயன்படுத்துகின்றன என்று அந்த நூலில் அவர் சொல்கிறார். ‘நாம் ஒரு இயந்திரத் தொடர் உயிரிகள், குருட்டுத்தனமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள ரோபோக்களைப் போன்ற வாகனங்களாக, சுய நலமிக்க ‘ஜீன்களை’ எடுத்துச் செல்கிறோம்.
அரை நூற்றாண்டிற்குப் பின்னர் இந்தக் கருத்தை மறுத்து எழுதியுள்ளார் ஆரியாஸ். ‘இது சுயநலமிக்க ஜீனல்ல, மாறாக பரோபகாரமாகச் செயல்படும் உயிரணு. உயிரணுக்கள், உயிரினத்தை உருவாக்குபவை. மரபணுக்கள் அதற்குத் தேவையான பொருட்களைத் தரும் ஒன்று.’ லண்டன் பப்ளிஷர் பேசிக் புக்ஸ் (London Publishers Basic Books) வெளியிட்டுள்ள இவரது நூலான ‘த மாஸ்டர் பில்டர்’ (The Master Builder) ஆர்வத்தையும், விவாதங்களையும் தூண்டுவதாக அமைந்துள்ளது. 68 வயதான ஆரியாஸ் குறிப்பிடுவது, ‘ஒரு நபரின் டி என் ஏ தொடர் என்பது அவரது உருவத்திற்கானக் கட்டளைக் கையேடோ, கட்டிட வரைபடமோ அல்ல. உயிரணு கட்டும் கட்டுமானத்திற்குத் தேவையான கருவிகள், மற்றும் பொருட்களைத் தருபவை அவை. மாட்ரிட்டில் (Madrid) பிறந்த இந்த உயிரியலாளர் சொல்கிறார்: இதயம் ஏன் இடது பகுதியில் இருக்கிறது, ஐந்து விரல்கள் ஒவ்வொரு கையிலும், பாதத்திலும் ஏன் இருக்கின்றன, இரட்டைச் சகோதரர்களுக்கு மாறுபட்ட கை ரேகைகள் ஏன் இருக்கின்றன போன்ற கேள்விகளுக்கான விடைகளை டி என் ஏ மூலக்கூறுகள் தருவதில்லை. செல்கள் தான் ‘நேரத்தையும், வெளியையும்’ (Time &Space) கட்டுப்படுத்துகின்றன என்று தீர்க்கமாகச் சொல்கிறார் அவர். அவைகளுக்குத்தான் இடது, வலது தெரியும், துல்லியமாக மனிதனின் பாதங்கள் எங்கு முடிய வேண்டும் என்பதும், அல்லது யானையின் தும்பிக்கை எங்கு முடிய வேண்டும் என்பதும்.
நாற்பது வருடங்களாக கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் செல் எவ்வாறு தன்னைப் பெருக்கிக் கொள்கிறது என்று ஆராய்ந்தவர் அவர். தனித்துவமான டி என் ஏ தொடர் கொண்டுள்ள தனிக் கருவுற்ற முட்டை, எவ்வாறு பில்லியன் செல்களாக வெவ்வேறு செயல்பாடுகளுக்காக, தன்னைப் பெருக்கி உடலென உருவெடுக்கிறது என்பது அவரது ஆராய்ச்சி. ‘இந்தக் கேள்வி எப்போதும் எழுகிறது ‘ஒத்த மரபணுத் தொடரிலிருந்து, மாறுபட்ட ஈக்கள், தவளைகள், குதிரைகள், மனிதர்கள் தோன்றும் சாத்தியங்கள் என்ன? இதை விட வியப்பிற்குரியது, ‘எப்படி அதே உயிரினத்திற்குள்ளே கண்களும், நுரையீரல்களும் அதே தொடரைக் கொண்டே உருவாகின்றன? நாம் உயிரணுக்களான செல்களுக்கு உரிய நிலையை வழங்குவோம்.’
கேம்ப்ரிட்ஜில் மரபியல் துறைத்தலைவராக இருந்தவர், 2021ல் Pompeu Fabra University in Barcelonaவில் இணைந்தார்.

‘காப்பி கேட்’(Copy Cat) என்று அழைக்கப்பட்ட இந்த நகல் பூனை டிசம்பர் 22,2001ல் உலகை வியக்க வைத்ததை அறிவியலாளர்கள் அறிவார்கள். நகல் பூனையின் டி என் ஏ, அசலை ஒத்திருந்தது, ஆனால், காலிகோ(Calico) பூனை வெளுப்பு, ஆரஞ்சு, கறுப்பு நிறங்களைக் கொண்டிருக்க அதன் நகல், வெண்மையாகவும், ஒருவகை வரிகள் கொண்ட உரோமங்களுடன் இருந்தது. அசலின் அச்சாக நகல் இல்லை. அந்த ஆய்வாளர்கள், எந்த உயிரணுவிலிருந்து தகவல்கள் பெற்று, பூனையின் நகலை உருவாக்கினார்களோ, அந்த உயிரணுவில் ஆரஞ்சு வண்ணம் செயலிழந்திருந்தது. ‘ஜெனெடிக் சேவிங்& க்ளோன்’ (Genetic Saving &Clone) என்ற அமெரிக்கக் குழுமம், “அச்சு அசலான அசத்தல்கள்” என்று சந்தைப்படுத்தி, வணிகத்தில் நிறைய சம்பாதிக்க எண்ணினார்கள். கடைசியில் 2006ல் கடையை மூடும்படி ஆகிவிட்டது. ‘தங்கள் செல்ல வளர்ப்புப் பூனையைப் போன்ற மரபணுக்கள் கொண்ட மற்றொரு பூனையை மனிதர்கள் ஏற்பதில்லை; அவர்களுக்கு அவர்களின் பூனையே வேண்டும்; அதைப் போலவே அதன் பாவனைகளும் இருக்க வேண்டும். அது நடக்கக் கூடிய ஒன்றல்ல.’ என்றார் ஆரியாஸ்.
லூவிஸ் வோல்பெர்ட்[ Lewis Wolpert (1929-2021)] என்ற சக பணியாளர் சொல்லும் பெருமை மிக்க வாக்கியத்தை ஆரியாஸ் பயன்படுத்துகிறார்: ‘பிறப்பு, திருமணம், இறப்பு இவை அனைத்தைக் காட்டிலும் உன் வாழ்வில் முக்கியமானது ‘gastrulation’, அதாவது ஈரடுக்கு கருக் கோளாக்கம். இந்த நிலையிலுள்ள கரு வளர்ச்சி நடனத்தை, மிகச் சரியாக அமைக்கப்பட்ட நாட்டியம் என்றே சொல்கிறார் ஆரியாஸ். கரு முட்டையும், விந்துவும் இணைந்த ஒரு பதினான்கு நாட்களில் உருவாகும் அந்தப் பந்தில், கிட்டத்தட்ட 400 செல்கள், கருக் கோளாக்கத்தில் ஈடுபடும்; ஈரடுக்கு என அமையும். ஆறு நாட்கள் நீடிக்கும் இந்த நடனத்தில், ஒரு மனிதனின் சிறு கோட்டுருவாக, கோளம் ஒன்று தோன்றும். இந்தப் புதிய 20 நாட்களில் ஏற்படும் கட்டுமானம் முக்கியமானது. அதன் மூலம் நாளை பிறக்கப் போகும் மனிதனின் மூன்று அச்சுக்களைப் பிரித்தறிய முடியும்; இடது- வலது, மேல்-கீழ், முன் உடல்-பின் உடல்.
ஆரம்பக் கருவுறும் நாட்கள் புதிரானவை. இந்தச் செயல்முறையை கவனிப்பது தார்மீக ரீதியாகவும், உடற்கூறு ரீதியாகவும் சரியெனக் கருதப்படுவதில்லை. ஆரியாஸ் மற்றும் அவரது குழுவினர், 2020ல் கேம்ப்ரிட்ஜில் இந்தச் சிக்கலை சாமர்த்தியமாகக் கையாண்டார்கள். மீந்துள்ள கருக்களை, கருத்தரிப்பு மையங்களிலிருந்து பெற்று, அதன் ஸ்டெம் செல்லை சிறப்பு இரசாயனக் கலவையால் தூண்டி, கருக் கோளாக்கத்தை ஒத்த முப்பரிமாண அமைப்பை உண்டாக்கினார்கள்- ஒரு மனிதனின் வரைகோடுமட்டுமே- மூளைக்கான அமைப்பு இல்லை, நச்சுக்கொடியை உருவாக்கும் செல்களும் இல்லை. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வு, உலகத் தரமான அறிவியல் இதழான ‘நேச்சரில்’ வெளியானது.
ஓரளவிற்கு மனிதக் கருவை ஒத்திருக்கும் இந்த அமைப்பு, மனிதக் கரு நிலையில் Gastruloids என அழைக்கப்படுகிறது. Gastrula என்பது, ஒற்றைப் பரிமாணமுள்ள ஓரடுக்கு, புறச்செல்களால்(epithelial cells) கருமுகையால், (Blastula) ஒரு கரு தன்னை மாற்றம் செய்து கொண்டு, பின்னர் பல்லடுக்குகளாய், பலப் பரிமாணங்களாய் அமைவது. ஆரியாஸ் சொள்கிறார்: இந்த gastrula ஐயத்திற்கு இடமின்றி, செல்களே கட்டுமானத் தலைவர் என்று காட்டுகிறது. மரபணுத் தொடரில், கட்டுமானத்திற்கான வரைபடம் இல்லை. வரலாற்றில் முதல்முறையாக அன்னையின் கருவகத்தில் என்ன நிகழ்கிறது என்பதை பரிசோதனைச் சாலையில் பார்த்த உயிரியலாளர்கள் வியந்து போனார்கள். இரசாயன சமிக்ஞைகளாலும், ஆற்றலாலும், செல்கள் தத்தமக்குள் உரையாடல் செய்து, தாம் எந்த உறுப்பாக, எந்த இடத்தைச் சென்று சேர வேண்டும் என்று தமக்குள் அழகாகத் தீர்மானிக்கின்றன. தாமே ஒருங்கமைத்துக் கொள்வது செல்களின் அடிப்படை குணாதிசயம் என்ற ஒரு கோட்பாட்டைச் சொல்லும் இவர், கருக்களின் செல் வடிவமைப்பைக் காண்பதற்கு ஃப்ரெஞ்ச் உயிரியலாளரான Alain Chedotal கையாண்ட வியத்தகு தொழில் நுட்பத்தை மேற்கோள் காட்டுகிறார்.
இவரது சக ஆய்வாளரான Susanne van den Brink, Gastruloids அமைய ஏறத்தாழ 400 செல்கள் பயனாகின்றன என்பதைக் கண்டுபிடித்தவர். செல்களுக்கு எண்ணிக்கை தெரியும். 400 இல்லையென்றால் அந்த நடனம் தொடங்கப்படுவதில்லை. அதே டி என் ஏ மூலக்கூறுகள் தான் அவை அனைத்தின் உட்கருவிலும் உள்ளது. ஆனால், ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதியைத்தான் படிக்கும்- அது குறிப்பிட்ட செயலிற்கானதாக இருக்கும். இப்பண்பால் தான், அதே சினை முட்டையிலிருந்து உருவாகி, அதே டி என் ஏ மூலக்கூற்றினைக் கொண்டிருந்தாலும், மூளையின் செல்களும், தோலின் செல்களும் ஒன்றைப் போல் மற்றொன்று இருப்பதில்லை. ‘செல்களின் கூட்டமைப்பு ஒத்து இயங்குவதும், ஒன்றின் சமிக்ஞையை மற்றொன்று புரிந்து கொள்வதும், சூழலை அறிவதும், எந்த மரபணுவை எவ்வாறு, எப்போது பயன்படுத்துவது என்று தீர்மானிப்பதும், இத்தனைக்கும் நிரூபணமாக Gastruloids இருக்கிறது’ என்று அவர் சொல்கிறார். மரபணுக்கள் நம் அடையாளமில்லை என அவர் மீண்டும் மீண்டும் சொல்கிறார்.
இந்தப் புதிய அறிவியலான ‘செல்கள் உயிரினத்தின் முதன்மைக் கட்டிடவியலாளர்; வாழ்க்கைக் கதையை மீள எழுதுகின்றன’ என்பதில் இவர் உறுதியாய் இருக்கிறார். ‘மரபணுத் தொடர் செய்திகளை உபயோகிக்கும் விதத்தில், எவ்விதம் செல்கள் தங்களை ஒருங்கமைக்கின்றன என்ற கேள்விக்கு நம்மிடம் விடையில்லை. ஆனால், கருவினை ஒத்த செல்களை ஆய்வகத்தில் ஆராய முடிகிறது. ஆர்கனாய்ட்ஸ் இருக்கின்றன. ஆர்கனாய்ட்ஸ் என்பவை முப்பரிமாணத்தில் உருவாக்கப்படும் உறுப்பு அல்லது திசு. ஸ்டெம் சாத்தியக் கூறுள்ள செல்கள், சுயமாக ஒருங்கமைத்துக் கொண்டு, முப்பரிமாணத்தில் செல் நிறைகளாக ஆய்வகங்களில் காணக் கிடைக்கும். நடக்கும் இந்த நூற்றாண்டு ‘செல்களின் நூற்றாண்டு’ என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.
உசாவி:
https://english.elpais.com/science-tech/2024-05-08/the-fusion-of-two-sisters-into-a-single-woman-suggests-that-human-identity-is-not-in-our-dna.html by Manuel Ansede 08/05/24
பாரதத்தில் ரிக் வேத காலத்திலேயே மறைந்திருக்கும் கூறுகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். பராசர மகரிஷி ‘விருக்ஷ ஆயுர்வேதாவில் சொல்கிறார் : ‘ஓர் இலையில் பலக் கூறுகள் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கின்றன. அதற்கு எல்லை இருக்கிறது, வடிவம் உள்ளது, அதற்கு நிறமி இருக்கிறது, அதில் சாறு இருக்கிறது.’ அவர் சிறப்புச் சாதனங்களைக் கொண்டு இவற்றை அறிந்து சொல்லியிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தைச் சொல்ல வந்த திருமூலர் ஓர் அதிசயமான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறுபோடச் சொல்கிறார். இதுதான் ஆன்மாவின் வடிவம் என்கிறார்.
“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே”
(திருமந்திரம், சீவன், பா.2011)
அதாவது, ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டுள்ளார்.
மனிதனின் முடியானது 40-80 மைக்ரோன் (Micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்த்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே எடுத்துக் கொள்வோம்.
பசு மாட்டு மயிரின் உரு அளவு =100 மைக்ரோன் —
100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர் .
இப்பொழுது திருமூலர் கூறியவாறு பசு மாட்டின் ஒரு முடியை நூறாகப் பிரிப்பதாக எடுத்துக்கொள்வோம்.
0.1/100=0.001 மில்லி மீட்டர் (MM) அதை ஆயிரமாகப் பிரிப்பதாக எடுத்துக் கொள்வோம். 0.001/1000= 0.000001 மில்லி மீட்டர். இதை நாம் (100,000) நூறாயிரமாகப் பிரிப்பதாக எடுத்துக் கொள்வோம்.
0.000001/100 000 = 0.00000000001 மில்லிமீட்டர் (MM) இதையே உயிரின் உருவத்தின் அளவாக இருக்கின்றது என்கிறார் திருமூலர். ஆகவே, திருமூலர் உயிரின் அளவாகக் குறிப்பிடுவது சராசரியாக 0.00000000001 (MM) மில்லிமீட்டர். ஒரு கடுகில் 32,768 அணு என ஒரு பழந்தமிழ்ப் பாடல் அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.
“அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
மணற்கடுகு நெல் விரலென்றேற – வணுத்தொடங்க
யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
லச்சாணிரண்டு முழமாம்”
Hydrogen அணுவின் சுற்றளவு 0.000000 212 (MM)-. ஆனால், திருமூலர் அதற்கும் கீழே சென்று உயிரின் அளவாக, 0.00000000001-யைக் குறிப்பிடுகின்றார்.
கடவுளின் வடிவம்:
“”அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே”
(திரு.புருடன்-2008)
அணுவிற்குள் அணுவாகவும் அதற்கப்பாலும் இருப்பவன்தான் இறைவன். அப்படி அணுவிற்குள் அணுவாய் உள்ளதை ஆயிரம் கூறு செய்து, அவ் ஆயிரத்தில் ஒரு கூறினை நெருங்க வல்லார் அணுவிற்குள் அணுவாய் இருக்கின்ற இறைவனை அணுகலாம்.
உயிருக்கு கூறப்பட்ட வடிவத்தை ஆயிரம் கூறுகளாக்கிக் கிடைப்பது இறைவன் வடிவம் என்று கூறுகின்றார். ( https://ta.quora.com/)
ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பல இரகசியங்களை உள்ளடக்கியது என்று கூறப்படுகிறது. அதில் ஒரு நாமாவளி ‘ஜராத்வாந்த ரவி ப்ரபா.’ முதுமையைப் போக்கும் மந்திர மூலிகைகளால் அம்பிகையை வழிபட்டு, அந்த மூலிகைகளை அவளது ப்ரசாதமாக எடுத்துக் கொள்பவர்கள் நீண்ட ஆயுளுடன், நல்ல இளமையுடன் வாழ்வார்கள் என்பது இதன் பொருள். அம்பிகையின் வழிபாட்டில் இந்த மூலிகை வழிபாடு குறிப்பது ஒன்று உண்டு- சிறு பிராயத்தில் செல்களின் வளர்ச்சி அதிகமாகவும், அதன் தேய்மானம் குறைவாகவும் இருக்கும்; இளமையில் வளர்ச்சியும், சிதைவும் சமமாக இருக்கும்; முதுமையில் வளர்ச்சி குறைந்து வீழ்ச்சி அதிகமாகும்; அத்தகைய நிலையை நீக்கி, என்றும் இளமையுடன் வாழ, செல் அழிவைப் போக்குபவளாக அம்பிகையை வழிபாடு செய்திருக்கிறார்கள்.
(செல்களுக்கு உணர்வு உள்ளதா? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்)
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “செல்லா, ஜீனா?”