‘செல்லா, ஜீனா?’ என்ற கட்டுரையில், செல்களுக்கு உணர்வு உள்ளதா எனப் பார்க்கலாம் என எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சி என்று இக்கட்டுரையைக் கொள்ளலாம்.
முந்தைய பகுதி

லின் மார்குலிஸ் (1938-2011) (Lynn Margulis) என்ற நுண் உயிரியலாளர், (Micro Biologist) 1995ல் எழுதினார்: “விலங்கினங்களைப் போலவே தானியக்க செல்களுக்கும் (Autopoietic cell) உணர்வு உண்டு.” இந்தக் கருத்தானது இன்று அதிக கவனம் பெற்று அந்தத் துறையில் பல கோட்பாடுகளும், சில பரிசோதனைகளுமாக வளர்ந்து வருகிறது.
ஆர்தர் ரீபெர் என்ற அறிவாற்றல் உளவியலாளர், (Arthur Reber, Cognitive Psychologist) ஃப்ரேன்டிசெக் பாலுஸ்கா என்ற தாவர உயிரியலாளர், (Frantisek Baluska, Plant Biologist) வில்லியம் மில்லர் என்ற பரிணாம வளர்ச்சி உயிரியலாளர் (William Miller, Evolutionary Biologist) மூவரும் இணைந்து 2024ல் ‘த சென்டியன்ட் செல்’ (The sentient cell) என்ற நூலை வெளியிட்டுள்ளார்கள். உயிரியலின் மிக ஆழமான கேள்விகளை உள்ளடக்கமாகக் கொண்டு, இந்த நூல், செல்கள், பொருள் உருவாகும் போதோ, அதற்கும் முன்னரோ கூட உணர்வுகள் கொண்டிருக்கின்றன என்று சொல்கிறது. இதுவரை சென்ற பாதையை, நம்பிக்கைகளை இந்த நூல் ஆணித்தரமாகக் கேள்விகளுக்கு உட்படுத்துகிறது. இந்த மூவருமே பழகின பாதையில் செல்லாமல், மாற்றி சிந்தனை செய்பவர்கள் எனவும் சொல்லப்படுகின்றனர். இவர்களின் கோட்பாடு சி பி சி, (CBC) அதாவது, செல்லை அடிப்படையெனக் கொண்ட உணர்வு (Cellular Basis of Consciousness) என்பதை வலியுறுத்துகிறது.

பெரும் மூலக்கூறுகளின் கூட்டமைப்பை (Macro Molecular Assembly) உள்ளடக்கிய பல செயற்பாடுகளும், பல கட்டுமானங்களும், தூண்டப்பட்ட ப்ளாஸ்மா ஜவ்வு (Plasma Membrane- மெல்லிய ப்ளாஸ்மா தோல்) மற்றும் சைடோ ஸ்கெலிடல் பாலிமர்சுடன் (Cytoskeletal Polymers) ஒத்துழைக்கின்றன; அதிலிருந்து செல்கள் வழி உணர்வு ஏற்படுகிறது.
இந்த நூலின் படி, ப்ளாஸ்மா ஜவ்வு, பரிணாமத்தில் ஒரு முறைதான் தோன்றியது; அன்றிலிருந்து 4 பில்லியன் வருடங்களாக உயிரியல் பரிணாமத்தில் ப்ளாஸ்மா ஜவ்வு அப்படியே தொடர்கிறது. செல்கள், தொடக்கத்திலிருந்தே உணர்வுடன் இருந்தன என்பது இதன் பொருள். வாழ்வின் துவக்கத்திலிருந்தே, செல் உணர்வு என்பது வாழ்க்கைப் பரிணாமத்தை தொடர்ந்திருக்கிறது.
ப்ளாஸ்மா ஜவ்வு புராதனமானது என்று மேலே பார்த்தோம். அது 4 பில்லியன் ஆண்டுகளாக அதேதான் என்றும் பார்த்தோம். எனவே, முதல் உயிர் அணு, வாழ்வு மற்றும் உணர்வுடன் இணையான, சம எல்லையில் உள்ளது என்பது இந்தப் புத்தகத்தின் அடிநாதம். யூகார்யோடிக் செல் (Eukaryotic cell) வந்தது, அப்புறம் என்ன நடந்தது? ஒற்றைச் செல்லிற்கு மேம்பட்ட, மாறுபாடுள்ள அணு கட்டமைப்புகள் கொண்ட அணுக்கள் இணைந்தன என்று இந்த ஆசிரியர்கள் சொல்கிறார்கள். இதன் விளக்கமாக ‘ஒன்றைப் போல் மற்றொன்று இல்லாத, அடிப்படையிலேயே மாறுதல்கள் கொண்ட செல் உணர்வுகள் இணைந்தன; அவைகளின் இந்த இணைப்பு பரிணாமத்தில் நீண்ட நெடுங்காலம் எடுத்தது’ என்று சொல்கிறார்கள்.
பரிணாம படைப்பாற்றல் (Evolution creativity) என்ற கோட்பாட்டையும் இந்த நூல் வலியுறுத்துகிறது. அந்தக் கோட்பாடு என்னவென்றால், தாக்குப்பிடித்துத் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளும் (டார்வீனியனிசம்) குணாதியசங்கள், வடிவம், செயற்பாடுகள், பரிணாமம் மேற்கொள்ளும் வளர்ச்சியில் முற்றிலும் தொலைவதில்லை, ஆனால், புதிய செயற்பாடுகள், வடிவம், குணங்கள் ஆகியவை, பழையனவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்றன.
அணு உணர்வும், நினைவுத் திறனும், ஒரு செல் நிலைத்து உருவாகி வருவதற்கானத் தேவையாக இருப்பதால், உணர்வு, செல்லின் உள்ளடக்கக் கூறு என்றே கருதப்படுகிறது; ஏனெனில், சூழலுக்குத் தக்க முடிவெடுக்கும் அம்சம், செல்களின் மும்முதல் பரிணாமத்திலிருந்தே இருக்கிறது. எனவே, இந்த அணுக்களை அடிப்படையெனக் கொண்ட உணர்வு, பரிணாமத்தில் முக்கிய இடம் பெற்றும், வாழ்வுடன் சம எல்லையுள்ள ஒன்றாகவும் திகழ்கிறது.
இந்தப் புத்தகம் ‘ஹோமியோர்ஹெசிஸ்’ (Homeorhesis) என்ற சித்தாந்தத்தை முன் வைக்கிறது. அதாவது, செயலூக்கமிக்க அமைப்பாக, உயிரணுக்கள் முன் பாதைக்கு திரும்பி விடும். இது செல்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்க வழி செய்யும். அதாவது, செல்கள் துடிப்போடு முன் பாதையில் செல்லும் என்று சொல்கிறார்கள். முன்னர் கருதப்பட்ட ஏக நிலை என்ற ‘ஹோமியோஸ்டேசிஸை’ (Homeostasis) இந்த ஆசிரியர்கள் ஏற்கவில்லை. இது ஏக நிலை அல்லது ஒத்த ஒடுக்கம் என்பது குறிப்பிட்ட ஒரு நிலைக்குத் திரும்பும் பண்பாகும்.
உயிரியலின் ஆதார அனுமானங்களை இந்த நூல் கேள்விகளால் துளைக்கிறது. ப்ளாஸ்மா ஜவ்வுடனும், அங்கே நடக்கும் உள் செயல்பாடுகளுடனும் தான் உணர்வு தோன்றுகிறதா? வாழ்வும், உணர்வும் சம எல்லை உள்ளவை என்பது இந்த நூலாசிரியர்களின் சிந்தனையாக உள்ளது. அப்படியென்றால், குறைந்தபட்ச வாழ்வு என்பதைக் குறித்த கேள்வி, குறைந்தபட்ச உணர்வு என்பதானக் கேள்வியாகவும் ஆகிவிடுகிறது.
மேற்கண்ட வினாவிற்கு விடை சொல்லும் வகையில், இவர்கள் துணிகரமாக ஒன்றை ஊகிக்கிறார்கள்- ‘சில உயிர் மூலக் கூறுகளுக்கு (Bio molecules) மனம் (Mind) இருக்கலாம்.’ பாலூட்டிப் புரதமான எம் டி ஓ ஆர் (mTOR), மனிதர்களுக்குச் செய்யும் பல செயற்பாடுகளை ஒரு எடுத்துக்காட்டாக இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
‘சைடோ ஸ்கெலிடல் அணுக்கள் (Cytoskeletal) சரியான முறையில் செயல்படுவதற்கு, எம் டி ஓ ஆர் (mTOR) அரிய செயல் புரிகிறது. அதுதான் ஊட்டச்சத்து, சக்தி, மற்றும் உயிர் வாயு ஏற்றம் அடங்கிய புரதத்தினை உற்பத்தி செய்யும் முறைமைகளில் பங்கெடுத்து, தூதர்களான ஆர் என் ஏ (RNA) மற்றும் ரிபோசங்களுக்கு (Ribosome) சமிக்ஞைக் கொடுக்கிறது. எப்படித்தான் ஒரு மூலக்கூறு பலச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி, ஊட்ட நிலை, உயிர்வாயு, சக்தி முதலானவற்றைக் அளவீடு செய்து, வளரும் மனித மூளையின் மறுகட்டமைப்பை உருவாக்க, தன் பங்கினைச் செய்கிறதோ? பல சிக்கலான செயல்பாடுகள், நிகழ் கணத்தில் துரிதமாக எடுக்க வேண்டிய முடிவுகள் இவற்றையெல்லாம் செய்யும் எம் டி ஓ ஆர் (mTOR), ஒரு விதத்தில் பார்த்தால் மூளையை ஒத்தல்லவா செயல் படுகிறது? அது தனியாக உயிர்ப்புடன் இருக்கிறதோ? அதற்கென்று ஒரு மனம் (Mind) இருக்கிறதோ?’
இந்த எம் டி ஓ ஆர் (mTOR) பற்றி மட்டும் ஆசிரியர்கள் சொல்லவில்லை. ஒவ்வொரு செல்களுக்குள்ளும் இருக்கும் கூறுகள், ப்ளாஸ்மா ஜவ்வு, சைடோ ஸ்கெலிடல் நுண்குழாய்கள் அனைத்திலும் நுண்மையான குறு மனம் அல்லது புத்தி இருக்கிறது என்பது அவர்களின் கருத்து.
‘வாழ்வு என்பது உணர்வு; நிரந்தரமான செல் வடிவத்தில் பொதியப்பட்டுள்ளது. மாறுபடும் சூழல்களை எதிர்த்து பரிணாமத்தில் நிலை பெறும் செல்கள், உணர்வாகப் பொருள் கொள்கின்றன.’
பழம்பெரும் பூமியில் ஆரம்பத்தில் நிலவிய மாறுபாடுகள் மிகக் கொண்ட கடுஞ்சூழல்கள், வன்முறையான சவால்கள் இவற்றை சமாளிக்க திறன் கொண்டதும், விவேகமானதுமான ஒரு குறைந்தபட்ச ஆரம்ப உணர்வினை (Proto Consciousness) இந்த ஆசிரியர்கள் சிந்திக்கிறார்கள். இந்தத் தொடக்க உணர்வும் அணுக்களின் சிர்கேடியன் (Circadian) கடிகாரமும் ஒன்றாக உருவாகியிருக்கும் எனவும் சொல்கிறார்கள். உயிரிகளின் பரிணாம வளர்ச்சியில், அணுக்களின் உட்புறக் கூட்டுவாழ்வும், (Endosymbiosis) யூகார்யோடிக் செல்களும் தோன்றியதில், உணர்வு ஒரு முக்கிய வினையூக்கியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.
இந்த நூலசிரியர்கள், புகழ் வாய்ந்த ஐ ஐ டி (IIT- Integrated Information Theory) எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் தேற்றத்தையும் குறிப்பிடுகிறார்கள். இந்த ஐ ஐ டி (IIT), க்வாலியா (Qualia) என்ற அவரவர் அனுபவத்தை, (குறைத்துக் கூட்ட இயலாத) உள் புறத்தில் உண்டாகும் அந்த உணர்வைப் பற்றி ஆராய்கிறது. உதாரணமாக, உங்கள் மகிழ்ச்சி, என் மகிழ்ச்சி, உங்கள் வலி, என் வலி, நீங்கள் சுவைக்கும் இனிப்பைப் பற்றிய உங்கள் அனுபவம், நான் சுவைக்கும் இனிப்பைப் பற்றிய என் அனுபவம் இவற்றைப் பொதுமைப் படுத்துதல் என்பதை விட அவரவர் உள்ளுக்குள்ளே அவரவர் அனுபவம் என்றே தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த ஆசிரியர்களின் கூற்றுப்படி ‘உணர்வு என்பது தகவல்; ஐ ஐ டியின் (IIT) முக்கியக் கோட்பாடுகள், நேரடியாகவே செல் உணர்விற்கு பொருந்துவதால், தகவல் பெறுவதும், அதை அலசி ஆராய்வதுமான செல் உணர்வு என்ற கூற்று மேலும் வலுப்படுகிறது.
இந்த மூன்று ஆசிரியர்களில் ஒருவரான வில்லியம் மில்லர் 2023ல் உணர்வு- அடித்தளம் சார்ந்த பரிணாமம் (Conscious- Based Evolution) என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் எர்ன்ஸ் மயரின் (Ernst Mayaer) புகழ் பெற்ற வாக்கியத்தைச் சிறிது மாற்றி கையாண்டிருக்கிறார். ‘பரிணாம வளர்ச்சித் தேற்றத்தை, உயிரியலை ஒன்றுபடுத்தும் கோட்பாடு எனச் சொல்வது மிகச் சரியான ஒன்று.’ இதை மில்லர், உயிரியலின் ஒன்றுபடுத்தும் சக்தி என்பது ‘செல் உணர்வு என்ற கோட்பாடு’ தான் என்று சொல்கிறார்.
இவர்கள் சி பி சியை தார்மீகக் கேள்விகளுக்கும் உட்படுத்துகிறார்கள். மரக்கறி உணவை எடுத்துக் கொள்வோர் பெரும்பாலும் எதிர் கொள்ளும் கேள்வி ‘தாவரங்களுக்கு உணர்வில்லையா?’ என்பது. இவர்கள் பொருந்தும் ஒரு விடையைச் சொல்கிறார்கள்.
‘அனைத்து செல் உயிரிகளுக்கும் உணர்வு உண்டு; அவை வெளி நிகழ்வுகளை உணர்கின்றன, உள்ளே நடப்பதை பரிசீலனை செய்கின்றன, சிந்திக்கின்றன, தீர்மானிக்கின்றன, எதிர்மறையான சிந்தனையும், கண்ணோட்டமும் அவைகளுக்கும் உள்ளன. அப்படியென்றால், சைவ உணவுக்காரர்கள், அதிலும் அற உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வது? அடிப்படை பரிணாம வளர்ச்சிக்கான காரணிகளால், தன்னை உண்ணுமாறு செய்யும் குணம் கொண்ட தாவரங்களை எடுத்துக் கொள்ளலாம்; இவ்வகைகளின் பரிணாம வரலாறே, உயிர்மூலக்கூறுகளின் வளர்ச்சியால், சுவை மிக்கதாகவும், சத்துக்கள் தருவதாகவும், அதன் மூலம் பிற உயிரினங்களை வாழ வைப்பதாகவும் இருக்கிறது.’ இதற்கான அடிக்குறிப்பில், வன்முறையற்ற சமண மத வழக்கங்கள் குறிப்பிடப்படுகின்றன.
பல தகவல்கள், ஆழ் சிந்தனைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. மூலக்கூறு பாதை தொடங்கி, வெப்ப மண்டலக் காடுகள் வரை உயிரியல் தன் சிறகுகளை விரித்துப் பறக்கிறது. ‘குறைப்பு வாதம்’ (Reductionism) ஒரு முக்கியக் கருவிதான், அதால் முழு உண்மையையும் கண்டு பிடிக்க முடியுமா?
செல் உணர்வின் அடிப்படை (CBC) என்பதிலிருந்து, உணர்வு சார்ந்த பரிணாமம் (CBE) என்பது சுவாரசியமான ஒன்று. இது உயிரியலின் பார்வையை மாற்றக் கூடும். இச் சிந்தனையை இன்னமும் பொருள் பொதிந்ததாகவும், தெளிவானதாகவும், ஆழமானதாகவும் வளர்த்தெடுத்தால், நாம் உயிரியலை அணுகும் முறைமைகளில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
உணர்ச்சியின் ஒவ்வொரு துடிப்பிலும், அறிய முடிந்த உணர்வே நிரந்தரத்திற்கும், முக்திக்கும் வழியாகும் என்று கேன உபனிஷத் சொல்கிறது. (Pratibodhaviditam matamamṛtatvam hi vindate). சிபிசியும்,(CBC) சிபிஈயும் (CBE) இதைச் சுட்டுவதாக இருக்கலாம்.
பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஒவ்வொரு ஆய்வும், சிக்கல் நிறைந்ததாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உருப்பெறுகின்றன. இதைக் கருத்தில் கொண்டால், டார்வினுக்குப் பிறகு சிறந்த உயிரியல் வல்லுனரக லின் மார்குலிசை கொண்டாட வேண்டும்.
அவர் சொல்கிறார் “இந்த நாலாயிர மில்லியன் வட்டச் சுழற்சி ஆண்டுகளில் நடந்துள்ள மென்மையான ‘வாழ் வெடிப்பு’ (Life Explosion) நம்மைப் படைத்திருக்கிறது, ஒரு விதத்தில் வேதங்கள் சொல்லும் ‘தனி விழிப்புணர்வு (Individual Awareness) என்பது மாயை; நம் அனைவருக்குமான முதல் நிலை மைதானம் “பிரும்மன்” என்பது துல்லியமாக இருக்கலாம்; நம் அனைவருக்கும் ஒரே பாரம்பரியம் தான், அது வேதியியல் மட்டுமல்ல, உணர்வும் கூட. இந்த அண்டத்தின் பருப்பொருளை நாம் பங்கிட்டுக் கொள்கிறோம், ஆனால் அதுவோ நம்மிடம் சற்று அலட்சியமாகவும், நம் சுய- அக்கறையைப் பற்றி கண்டு கொள்ளாததாகவும் இருக்கிறது.”
ஸரஸ்வதி, கங்கை போன்ற ஆறுகளின் கரைகளில் அமர்ந்து தியானித்து இரண்டற்ற ஒன்றைச் சொன்ன ஞானிகளின் கூற்றை, உயிரியலின் புரட்சி சிந்தனைகள் வலுப்படுத்தக்கூடும்.
உசாவி:
https://swarajyamag.com/science/do-cells-have-sentience-new-framework-for-understanding-life-and-consciousness by Shri Aravindan Neelakandan June 1,2024
உணர்வுள்ள செல் மெல்லிய தோலால், மாறும் சூழலிற்கு ஏற்ப வடிவங்களை மாற்றும் திறத்தினை அதன் பல்வேறு ஏற்பிகள் (Receptors) மூலம் பெறுகிறது. இந்த ஏற்பிகள், செல்களின் உட்புறத்திற்கு சைகைகளை அனுப்பும். இதனால், மின்சக்தி ஏற்பட்டு, செல்கள் தத்தமக்குள் செய்தி பரிமாற்றங்களைச் செய்து கொள்கின்றன.
நம் உடலையும், கணினியையும் கூட நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முன்னது கார்பனால் ஆனது; பின்னது சிலிக்கானால். இரண்டுமே தகவல்களை அலசுகின்றன.
பாரதமும், சைதன்யமும்
ஸ்வாமி ததாத்மானந்தா (Swami Tatadmananda) மிக அருமையாக, செல்கள் மற்றும் உணர்வுகள் பற்றிய கேள்விகளுக்கு விடை தந்திருக்கிறார். காணொலிகள் உள்ளன. அனைத்து உயிரிகளுக்கும் உணர்வு என்பது உண்டு. அதை உணர்ச்சி சார்ந்த ஒன்றாகவும் கருதலாம், அல்லது உணர்திறன் என்று சொல்லலாம். உயிரிகளுக்கு தம்மைப் பிரதியெடுக்கும் தன்மையும் உண்டு. அமீபா ஒரு ஒற்றைச் செல் உயிரி; அதற்கும் உணர்ச்சி உண்டு. நம் உடலிலோ 30 ட்ரில்லியன் செல்கள் இருக்கின்றன -குருதி, தசை, தோல், என்ற பலதும் இருக்கின்றன. நம் மூளை ந்யூரான் என்ற செல்களால் அமைந்துள்ளது. மூளையால் மின் வலை சமிக்ஞைகளைப் புரிந்து கொள்ள முடியும் (நரம்பு வலைப் பின்னல்களால் ஆனது). ஆனால் அது ஒரு பொருண்மையான வஸ்துதான். அதன் எடை சராசரியாக 2.5 பவுண்ட்.
ஆனால், பொருண்மையற்ற மனதிற்கு எடை கிடையாது. ஒரு கணினியின் இலக்க மூளையில் இருப்பது வெறும் தரவுகள். அதன் நினைவுப் பெட்டகத்தை அழித்துவிட்டால், கணினியின் எடை எப்படி மாறாதோ, அதைப் போலவே தான் மனதும். நாம் பெரும்பாலும், மூளையையும், மனதையும் ஒன்றெனக் கருதுகிறோம். மனது என்பது இந்திய மரபின் படி நாம் காணாத நம் உடலில் இருக்கிறது, அதாவது கண்களுக்குப் புலப்படாத, உள்ளே இருக்கும் இரண்டாவது உடலில் இருக்கிறது மனது. நம் மரபு, வெளியில் காணும் உடலை மட்டுமே கணக்கில் கொள்வதில்லை. சூக்கும உடல் ஒன்றைப் பற்றியும் நாம் பேசுகிறோம். இந்த மனதிற்கு மூளையைப் போல ஒரு வடிவம் கிடையாது, எடை கிடையாது. இதைப் பரமாணு என்றும் கூட சொல்கிறார்கள். ஒரு எடுத்துக்காட்டினைப் பார்ப்போம். ஒருவர், ஒரு விபத்தில், தன் இடுப்பிற்குக் கீழே எதையும் உணர முடியாதவராக ஆகிவிட்டார். மூளையின் ந்யூரான் செல்கள் அந்த பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து எந்த செய்திகளையும் பெறவும் முடியாது, தரவும் முடியாது. மூளையின் ஒரு பகுதி இந்த நிலையை ஏற்றுக் கொண்டுவிடும். ஆனால், மனமானது, பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியையும் சுற்றி வரும்; மனத் திண்மையால் அதை நேர் செய்ய முடியுமா என முயற்சிக்கும். இதன் மூலம் செயல்படாத பகுதிகளைச் செயலிற்கு கொண்டு வரும் சில பல காணொலிகள் இருக்கின்றன. ஏற்பதும், மறுப்பதும் நம் உரிமை. நம் மரபின்படி உயிர் பிரிந்த பிறகு, ஆத்மாவுடன், பரமாணுவான மனமும் பயணித்து, சொர்க்கம், நரகம், மோட்சம், மறுபிறவி என்று தொடருமாம். ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், ‘ஸ்வர்கா பவர்கதா’ என்ற நாமாவளியில் இதைச் சொல்கிறது.
சில மொழிகளின், சில சொற்களுக்குச் சரியான சொல், பிற மொழிகளில் கிடைப்பதில்லை எனத் தோன்றுகிறது. ‘சைதன்யம்’ என்பதை, ‘கான்சியஸ்னெஸ்’. ‘உணர்வு’ என்றெல்லாம் சொல்கையில், சைதன்யத்தின் முழுப் பொருளும் விளங்குகிறதா என்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு நிரடும் கேள்வியே. சைதன்யம். முடிவற்றது, எல்லையில்லாதது, வானைப் போன்றது, எதனாலும் பாதிக்கப்படாதது. மனமும், மூளையும் மாறுபட்டு இருப்பதால் தான், அனுபவங்கள் ஒவ்வொருவரையும் பொறுத்து மாறுகின்றன. சைதன்யம், நம் மனதிலும், உடலிலும் பாயும் ஒளியாகத் திகழ்கிறது. சைதன்யத்திற்கு பல நிலைகள் கிடையாது, ஆனால், பல உணர்ச்சி நிலைகள் அதனால் ஏற்படும்.
சித் அல்லது சைதன்யம் பற்றி வேதாந்தங்கள் சொல்கின்றன. ஈசோபனிஷத் சொல்கிறது:
- அது உன் மனமோ, உடலோ இல்லை.
- அது துளைத்துக் கொண்டு, உன் மனதையும், உடலையும் ஒளி கொள்ளச் செய்கிறது.
- அதற்கு மனமோ, உடலோ எல்லை வகுக்க முடியாது.
- மனம், உடல் செயல்பாட்டால், அதை அறிவதாக நினைத்துக் கொள்கிறோம்.
- அது என்றும் இருப்பது. அது உன்னுள் ஆன்ம ஒளியாக நிலவுகிறது. சூர்ய ஒளி, சிறு நீர்த்துளியிலும் தென்படும், பெரும் குளத்திலும் பார்க்கலாம்; அதைப் போல அனைத்திலும் இருக்கும் சைதன்யம், நீர்த்துளியோ, குளமோ இல்லாவிட்டாலும் கூட சூரியன் இருப்பதைப் போல இருக்கும். அந்த சித் எதையும் சார்ந்ததில்லை.
ஒளவையின் விநாயகர் அகவல் மிக அற்புதமாக இதைச் சொல்கிறது
“இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்,
குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்,
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
சண்முக தூலமும், சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்தி கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி,
என்னை யறிவித்து எனக்கருள் செய்து……”
அற்புதம் நின்ற கற்பகக் களிறுதான்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “அற்புதம் நின்ற கற்பகக் களிறே!”