- 1957 – 1 செம்பருத்தி
- 1957-2
- ஏகபோகம்
- அத்திம்பேர்
- 1954 – Y2K பிரச்சினை

மனித மூளையில் பொதுவான ஒரு இலக்கண அறிவு இயற்கையாகவே இருக்கிறது, அது குழந்தைகள் வளரும்போது தானாகவே வெளிப்படுகிறது. – நோம் கோம்ஸ்கி
ஆனால், எண்களைப் பற்றிய அறிவைக் கற்றுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.
விழிப்பு வந்ததுமே சுவாமிநாதன் எழுந்துவிட்டான். அன்று அவன் பிறந்த நாள். தூங்கப் போவதற்கு முன்பே அப்பா ஞாபகப்படுத்தி இருந்தார். உள்ளங்கையில் பல்பொடியை வைத்துக் குழாயடியில் உட்கார்ந்தான். கண்களைக் கூசி புதிய தினத்தை எதிர்பார்க்க வைக்கும் சூரியனின் வெளிச்சம் இன்னும் வேலியைத் தாண்டி கொல்லையில் விழவில்லை. அதனால், மனதில் கடந்துபோன காலங்கள்.
நான்காவது பிறந்த நாள் ஞாபகம் இருக்கிறது. அதற்கு முன்னால்?
இப்போது இருக்கும் வீட்டிற்கு வந்தது. நுழைந்ததும் நீண்ட அறைகள். அவற்றை ஒட்டிக்கொண்டு ஒரு பக்கம் சமையலறை. இன்னொரு பக்கம் குளியலறை. காலியான அறைகளில் சுற்றிச்சுற்றி வந்தான்.
அதற்கும் முன்னால்… ஒரு பெரிய கூடம். அதன் ஒரு மூலையில் அம்மா சமைப்பாள். இன்னொரு மூலையில் அவன் படுக்கை. தினம் எழுந்து பல் தேய்த்ததும் அம்மா மடியில் அமர்ந்து அவள் சொன்ன சுலோகங்களைத் திருப்பிச் சொன்னதைத் தவிர பழைய வீட்டில் நடந்தது வேறு எதுவும் அவன் நினைவுக்கு வரவில்லை. கண்களை மூடிக்கொண்டு உற்றுப் பார்த்தபோது ரயிலில் இரவு முழுக்க பயணம் செய்தது தெரிந்தது. ஒரு ஸ்டேஷனில் வண்டி நிற்கிறது. அதற்குப் பிறகு வந்த ரயில் முன்னால் கிளம்பிப்போய் விட்டது.
“நம்ம ரயில் ஏன் கிளம்பல?”
வார்த்தைகள் கோர்த்த வாக்கியங்கள் ஆச்சரியம். அர்த்தத்துடன் தமிழிலும் ஹிந்தியிலும் அவன் சரளமாகப் பேசுவது அதிசயம். ‘மேரா நாம் சாமி ஹை.’
“நான் எப்போ பேச ஆரம்பிச்சேன்?” என்று ஒரு தடவை அம்மாவைக் கேட்டான்.
“நாம தாம்பரத்தில இருந்தப்ப.”
“எனக்கு என்ன வயசு?”
“ம்ம்ம்… இரண்டு இருக்கும்.”
மொழியின் பிறப்பு தண்ணீரில் எழுதியது போல நினைவில் அழிந்து போய் விட்டது. ஆனால், இரண்டு என்பது ஒரு எண்ணைக் குறிக்கிறது என்ற அறிவின் ஆரம்பம் எப்போது என்பதில் சந்தேகம் இல்லை.
நான்காவது பிறந்த நாள். அம்மா மைசூர் பாக் கிளறி தட்டில் வைக்க அதை அப்பா துண்டுகளாக வெட்டினார்.
புதிய சட்டை டிராயரில் எல்லா கடவுள் படங்களுக்கும் முன்னால் தட்டை வைத்து நமஸ்காரம். கடைசியில் அப்பா அம்மாவுக்கும்.
“நிறைய படிச்சு புத்திசாலியா இருக்கணும்!”
பெரிய மைசூர் பாக் கட்டி அவனுக்கு.
அம்மா வடை பாயசம் என்று விஸ்தாரமாக சமைத்தாள். சாப்பிட்டதும் அப்பா அவனை சைக்கிள் முன்னால் வைத்து வெளியே அழைத்துப் போனார். முள் கம்பி வேலிக்கு முன் அவனை இறக்கினார்.
“தினம் இங்கே தான் நான் வேலைக்கு வரேன்.”
வேலியைத் தாண்டி வரிசையாக சாம்பல் நிறத்தில் ஒற்றைக் காற்றாடி விமானங்கள். இயந்திரப் பறவைகள் சத்தம்போட்டு வானத்தில் பறப்பதைத் தினம் பார்த்திருந்தாலும்,
“எத்தனை ப்ளேன்!” என்று ஆச்சரியப்பட்டான்.
“எங்கே? எண்ணு பார்க்கலாம்!”
விரலால் சுட்டி,
“ஒண்ணு, இன்னொண்ணு, இன்னொண்ணு…”
“அப்புறம்?”
“இன்னொண்ணு.”
“அடுத்தது?”
“இன்னொண்ணு.”
“முதலில் நிக்கறது?” என்று மறுபடி கேட்டார்.
“ஒண்ணு.”
“அதுக்கு அடுத்தது, இரண்டு” என்று அதைக் காட்டினார்.
“இரண்டு.”
“மூக்கை சாச்சிண்டு நிக்கறதே, அது மூணு.”
“மூணு.”
“மூணுக்கு அப்பறம் நாலு. உனக்கு நாலு வயசு ரொம்பிடுத்து. இனிமே ஐந்தாவது நடக்கப்போறது.”
இப்படியே பன்னிரண்டு வரை.
இரண்டு கை விரல்களையும் பிரித்து நீட்டினார்.
“விரல்களை எண்ணு பார்க்கலாம்!”
வலது கட்டைவிரலைத் தொட்டு, “ஒரு ப்ளேன்.” ஆள்காட்டி விரலைத் தொட்டு, “ரெண்டு ப்ளேன்” என்றான்.
அப்பா பற்கள் தெரியச் சிரித்தார்.
“ப்ளேனாக இருந்தாலும் விரலாக இருந்தாலும் மைசூர் பாகா இருந்தாலும் ஒண்ணு ஒண்ணுதான் ரெண்டு ரெண்டு தான்”.
புரிந்த மாதிரி தலையசைத்தான்.
“மறுபடி எண்ணு!”
“ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, ஐந்து.. ஐந்து.”
“ஆறு.”
“ம்ம் ஆறு, ஏழு, எட்டு, ஒம்பது, பத்து.”
“வெரி குட்! மொத்த கை விரல்கள் பத்து. அதனால அது ஒரு ஸ்பெஷல் நம்பர்.”
அவன் எண்ணியதும் விரல்களை மடக்கி மூடி, மூடிய கைகளைத் திறந்தார்.
“என் கையில என்ன இருக்கு?”
“ஒண்ணும் இல்லை.”
“அதுக்கு பூஜ்யம்னு பெயர். அதுவும் மிக முக்கியமான எண்.”
வீட்டிற்கு வந்ததும்,
“அ சொல்றதை எழுத்துல ‘அ’ன்னு எழுதறோம் இல்லையா? அது மாதிரி ஒண்ணுங்கறதை 1ன்னு எழுதணும்” என்று ஸ்லேட்டில் ஒரு கோடு இழுத்தார்.
அப்பா எழுதியதைப் பார்த்து இன்னும் சில கிறுக்கலான வரிவடிங்கள்.
சாமிக்கு எண்கள் மேல் காதல். எதையெல்லாம் எண்ணலாம்?
அம்மாவின் கைவளையல்கள். இடதுகையில் நான்கு, வலது கையில் ஆறு.
ஒரு நாள் எண்ணியபோது வலது கையில் ஐந்து தான்.
“பாத்திரம் தேய்க்கறப்ப உடைஞ்சுடுத்து.”
சோக செய்தியை அப்பா வேலையில் இருந்து வந்ததும் சொன்னான்.
“சனிக்கிழமை செகந்தராபாத் போறப்ப ஒண்ணு என்ன ரெண்டு வளையலே வாங்கிண்டு வருவோம்.”
அவனுக்குக் கீழ்த்தாடையில் பத்து பற்கள், மேலே இன்னொரு பத்து. காலண்டரில் மேலிருந்து கீழே ஏழு கட்டங்கள். வாணலியில் இட்லியை வேகவைக்க கீழ்த்தட்டில் மூன்று, மேல் தட்டில் ஐந்து.
அவனுக்கு மூன்று நண்பர்கள் – அஷோக், பக்குல், மாலதி. மாலதியின் அப்பா யுனிஃபாமில் மூன்று பட்டைகள். அப்பாவின் பாட்ஜில் ஐந்து ரிப்பன்கள்.
ஆறு மாதம் போனதும்,
தினம் அப்பா ஒரு சிலேட்டின் மேல் பாதியில் சில தமிழ் ஆங்கில வார்த்தைகள் எழுதிவைத்துவிட்டு வேலைக்குப் போவார். எழுந்து சுலோகம் சாப்பாடு ஆனதும் சாமி அதைப் பார்த்து எழுதி அப்பா திரும்பிவந்ததும் அவருக்குக் காட்டுவான்.
வார்த்தைகளுடன் எண்கள் சேர்ந்துகொண்டன.
10 – “இது என்ன?”
“ஒண்ணு பூஜ்யம்.”
“இது?” – டி ஓ ஜி.
“டாக்.”
“எழுத்தை தனித்தனியா வாசிக்கறது இல்ல. சேர்த்து டாக்னு சொல்ற மாதிரி… 10 – பத்து, 11 – பதினொண்ணு.”
இப்படியே இருபது வரை.
ஐந்தாவது பிறந்தநாளின் போது அவன் பெரியப்பா வந்திருந்தார். கிளம்பிப் போவதற்கு முன் வலக்கையில் ஒரு பச்சை ரூபாய் நோட்டு, இடதில் ஐந்து ரோஜா நிற நோட்டுகள்.
“இரண்டுல எது பெரிசு?”
வாங்கிப் பார்த்தான். பச்சையில் ஐந்து எண், மற்றதில் ஒன்று.
“ரெண்டும் ஒண்ணுதான்.”
“கில்லாடியா இருக்கியே. ரெண்டையும் வச்சுக்கோ!”
அவருக்கு இன்னொரு நமஸ்காரம்.
“தொலைச்சுடுவே என்கிட்ட கொடு!” என்றார் அப்பா.
“நான் தலைகாணிக்குக் கீழே பத்திரமா வச்சுப்பேன்.”
“யார்கிட்டயும் சொல்லாதே!” என்று அம்மா ஒரு நகைப்பெட்டியைக் கொடுத்தாள்.
வாரம் ஒரு தடவை பெட்டியின் கொக்கியை நகர்த்தி எண்ணிப் பார்ப்பான்.
இரவில் அந்த வழக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. அதன் விளைவு? போர்வையை மற்ற துணிகளுடன் அம்மா தோய்த்து உலர்த்த வேண்டும், ஜமக்காளத்தின் வாசனையைப் போக்க வெயிலில் போட வேண்டும்.
“நீ ஒரு மாசம் படுக்கையை ஈரம் பண்ணாட்டா ஒரு ரூபாய்” என்று அப்பா காலண்டரில் ஏப்ரல் மாதத்தைப் பிரித்து வைத்தார்.
காலையில் காலண்டரின் தேதிக்குப் பக்கத்தில் ஒரு வட்டம். ஒன்று, இரண்டு… இருபதைத் தாண்டிவிட்டான். கனவில் சிறுநீர் தோன்றினால் ஆபத்து. ஒரு இரவில் நுனிவரை வந்துவிட்டது. நல்ல வேளை, விழிப்பு வந்து குளியலறைக்கு ஒரு ஓட்டம். அப்பாடா! இருபத்தியொன்பது.
அடுத்த மாதத்தின் முதல் தேதி அப்பாவுக்கு சம்பளம் வந்ததும் அவன் கையில் ஒரு ரூபாய்.
சிவப்பு இரண்டு ரூபாய் அவனுக்கு இரண்டே நாளில் கிடைத்தது.
அப்பா அவனை சைக்கிள் முன்னால் வைத்து அழைத்து வந்தார். அவனுக்குத் தெரிந்து ஆஸ்பத்திரிக்குப் போவது அது தான் முதல் தடவை. டாக்டர் மார்பில் ஸ்டெதஸ்கோப்பை நகர்த்தி ஏதோ கேட்டிருக்கிறார். வாயை ஆஆஆவென்று திறக்கச்சொல்லி விளக்கில் உற்றுப் பார்த்திருக்கிறார். அதெல்லாம் கொஞ்ச நேரம். இது இரண்டு நாள் விவகாரம். வருவதற்கு முன் அஷோக்கிடம் பெருமை அடித்துக்கொண்டான்.
கட்டடத்தில் நுழைந்தும் அங்கே காத்திருந்த நர்ஸின் பின்னால் நடந்தார்கள். நடைவழியைத் தாண்டி ஒரு கூடம். சுவரில் வரைந்த பெரிய நாயின் படம். நான்கு மூலைகளில் கட்டில்கள். உட்புற கட்டிலை அவர்களுக்குக் காட்டினாள்.
கட்டிலின் தலைப்பக்கத்தில் சிறிய மேஜை. அதன் இழுப்பறையைத் திறந்து அப்பா உறையில் சுற்றிய சாக்லேட் கட்டிகளை வைத்தார். அவன் துணிகள் வைத்த பையை நர்ஸிடம் கொடுத்தார்.
“கவலையே படாதீங்கோ! சார்! நான் பார்த்துக்கும்” என்றாள்.
“நாளைக்கு வந்து பாக்கறேன்.”
அப்பா கதவைத் தாண்டிப் போனதும் தீவில் தனியாக விட்டது போல இருந்தது.
அவன் தன் அறையில் தனியாகத் தூங்கினாலும் பக்கத்து அறையில் அப்பா அம்மா இருக்கிறார்கள் என்கிற தைரியம். கூப்பிட்டால் உடனே வந்து கட்டிக்கொள்வார்கள்.
இங்கே பெரிய நாய் அவனுக்குத் துணை. இடைவெளி கொடுத்து இரண்டு சாக்லேட் தின்றதும் இரவு வந்தது.
மறுநாள் காலை அவனை நர்ஸ் அழைத்துப்போனாள். பிரகாசமான கூடம். நடுவில் இருந்த படுக்கையில் அவனைப் படுக்க வைத்தாள். மேலே அகலமான விளக்கு. வெள்ளை ஆடையில் வெள்ளை முகத்திரை அணிந்த ஒருத்தி,
“உன் பேர்?”
“சாமி.”
“உனக்கு ஐஸ் க்ரீம் பிடிக்குமா?”
“ரொம்ப.”
அதற்கு அவன் என்ன செய்ய வேண்டும்?
“டென் வரை கௌன்ட் பண்ணணும்.”
“பத்து என்ன, நூறு வரைக்குமே எண்ணுவேன்.”
“குட் பாய்! எங்கே செய் பார்க்கலாம்!”
ஒரு பஞ்சுத்துணியை அவன் முகத்தில் வைத்தாள். பல்பொடி வாசனையை ரசித்தபடி,
“ஒன், டூ, த்ர்ர் -”
பிறகு என்ன நடந்தது?
தூக்கத்தில் இருந்து விழித்தபோது நாய் அவனைப் பார்த்துக்கொண்டு இருந்தது.
இன்னுமா நீ பல் தேய்க்கல? என்று அம்மா பால் கோப்பையுடன் வந்தாள்.
இனிப்புடன் பிறந்தநாள் பரிசு, சாவி கொடுத்தால் ஓடும் கார். அதனுடன் விளையாடியதும் தினப்படி பாடம்.
“எண்களை சேர்க்கறமாதிரி குறைக்கவும் செய்யலாம். உன் கிட்ட எவ்வளவு பணம் இருக்கு?”
பெட்டியை எடுத்துவந்து திறந்தான்.
“பதிமூணு.”
நான்கு ஒரு ரூபாய்களை எடுத்துக் கொண்டார்.
“இப்போ?”
முகத்தை சோகமாக்கி.
“ஒன்பது.”
“நாலையும் திருப்பி வச்சுடறேன். இப்போ?”
“பதிமூணு.”
“ஐந்தையும் நாலையும் சேர்த்தால் ஒன்பது. பதிமூணுலேர்ந்து நாலை எடுத்தாலும் ஒன்பது.”
பணம் திரும்பக் கிடைத்த சந்தோஷத்தில் தலையை பலமாக ஆட்டினான்.
“இப்போ என்ன வருஷம்?”
“ஐம்பத்திநாலு.”
“உனக்கு என்ன வயசு?”
“ஆறு.”
“அப்போ, நீ பிறந்த வருஷம்?”
நீட்டிய விரல்கைள மடக்கி, “ஐம்பத்திமூணு, ஐம்பத்திரெண்டு… நாற்பத்தெட்டு.”
“கரெக்ட். அம்மாக்கு முப்பத்திமூணு நடக்கறது. அப்ப அவ பிறந்த வருஷம்?”
சிலேட்டில் பெரிய எண்ணுக்குக் கீழே சிறியதை எழுதினான்.
“இருபத்தியொண்ணு.”
அப்பா பதின்மூன்றாம் ஆண்டில் பிறந்ததால் அவர் வயது நாற்பத்தியொன்று.
அவனுக்கு ஞாபகம் வந்தது. பெங்களூரில் ஒரு நாள் தங்கியபோது அவனை நடத்தி அழைத்துப்போன தாத்தா.
“தாத்தாக்கு என்ன வயசு?”
“தாத்தா பிறந்த வருஷம் ஆயிரத்திஎண்ணூத்தி எண்பத்தி…” அப்பா நிறுத்தினார். “இப்போ நடக்கற வருஷம் ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி ஐம்பத்திநாலு.”
“அப்ப ஏன் முன்னாடி பத்தொன்பது போடறதில்ல?”
“சௌகரியத்துக்காக. வெறுமன 54ன்னு சொன்னாலும் முன்னாடி பத்தொன்பது இருக்கறதா அர்த்தம். காத்தி பிறந்த வருஷம்னா 1869ன்னு முழுசா எழுதணும்.”
54, 59, 60, 70…99. அவனுக்கு சிரிப்பு வந்தது.
“ஏன் சிரிக்கிறே?”
“தொண்ணுத்தி ஒன்பதுக்கு அடுத்ததா இரண்டாயிரம் வருஷம் வரும் இல்லயா?”
“ம்ம்ம்…”
“அதை வெறுமன 00ன்னு போட்டா முன்னாடி பத்தொன்பதா இல்ல இருபதான்னு குழப்பமா இருக்கும், இல்ல?”
தன் புத்திசாலித்தனத்தை நினைத்து அவனுக்கு ஒரே சந்தோஷம்.
அப்பா சில கணங்கள் யோசித்தார்.
“அப்போ எனக்கு என்ன வயசு இருக்கும்?”
சிலேட்டில் எண்களைப் பிரித்து எழுதி,
“எண்பத்தியேழு.”
“அப்போ என்ன நடக்கறதுன்னு நீ வேடிக்கை பார்க்கலாம். ஆனா நான் இருக்க மாட்டேன்.”
அதுவரை சந்தோஷத்துக்குக் காரணமாக இருந்த எண்கள் அவனுக்கு அழுகையைக் கொடுத்தன.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
