
நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும்
அன்புள்ள ஆசிரியருக்கு
கட்டுரை மிக சுவாரசியாமாக இருந்தது.
உர்சுலாவை எனக்கு அறிமுகப்படுத்தியது என் நண்பர் மதன். ஓமெலாசிலிருந்து கிளம்பிச் செல்பவர்கள் என்ற சிறுகதை, The Left Hand of Darkness என்ற நாவல் இரண்டையும் வாசித்திருக்கிறேன். அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று என்னிடமுள்ளது. அதிலிருந்து ஷ்ரோடிஞ்சரின் பூனை என்ற கதையை மட்டும் வாசித்திருக்கிறேன். பொதுவாக அறி-புனைக் கதைகளில் ஆர்வமில்லை. ஆனால் சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் தொகுப்பு வரிசையில் ஹார்ட் சைன்ஸ் ஃபிக்ஷன் என்ற வகைமையில் வந்த கதைகளை வாசித்த போது எனக்கு அறி-புனைவு வாசிக்கும் ஆர்வம் கூடியது. அப்போதுதான் மதன் உர்சுலாவைப் பரிந்துரைத்தார். நான் வாசித்தவரை அவரது கதைகள் அறி-புனை உலகை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு மனித இயல்புகள் குறித்தான ஆய்வுகளை மேற்கொள்வதாகவே படுகிறது. இத்தன்மை மிகச் சிறந்த இலக்கிய ஆக்கங்களுக்கே உரித்தானது. இருளின் இடதுகை வாசித்த அனுபவம் பரவசமானது. வெங்கட் பிரசாத்தின் இந்த மொழியாக்கக் கட்டுரை அந்த நாவலை மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. அந்த நாவல் எனக்கு ஓர்ஹான் பாமுக்கின் வெள்ளைக் கோட்டையை நினைவுபடுத்தியது.
ஸியோபான் லெடியை வெங்கட் பிரசாத் நன்றாக மொழியாக்கம் செய்திருக்கிறார். மிகச் செறிவான வாக்கிய அமைப்பு, நமது பண்பாட்டுக் கூறுகளைக் கையாளுதல் (வசுதைவ குடும்பகம்) என்று அழகாகத் தமிழில் கொண்டு வந்துள்ளார். சிறிய கட்டுரைதான், ஆனால் அடர்த்தியானது.
தலைப்பு கொஞ்சம் மிஸ்லீடிங்காக உள்ளது (ஆங்கிலத்திலும் அதுதான்). தலைப்பின் அடிப்படையில் இந்தக் கட்டுரையை வாசித்தால் உர்சுலா படைப்புகள் பற்றி ஒரு வரைபடம் கிடைக்கும் என்ற எண்ணம் எழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் கட்டுரை இரண்டு முக்கியமான விஷயங்களைப் பற்றி மட்டும்தான் பேசுகிறது. எப்படி மனிதனுக்குக் கற்காலம் முதல் வீரமும், கதை பாடலும் இணைபிரியாத பண்புகளாக இருந்து வந்துள்ளன என்று விரிவாக விவரிக்கிறது. இயற்கையை மனித இனம் தன் விருப்பத்துக்கு வளைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதைக் குறிப்பிடுகிறது. உலகை மீள் கட்டமைக்கும் வழிகளில் ஒன்றாக கதை சொல்லுதலைக் குறிப்பிடுகிறது.
உர்சுலாவின் ஒரே ஒரு கதையை (புனைவுகள் என்னும் பைகள்) எடுத்துக் கொண்டு விளக்குகிறது கட்டுரை. இதில் மைய நாயகன் அற்ற கதை சொல்லும் முறையை உர்சுலா கையாண்டிருப்பதாகவும், மாறாக பல கதா நாயகர்கள் இருக்க கதை இடமளிப்பதாகவும் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.
கட்டுரையை வாசித்தவுடன் உர்சுலா பற்றி ஒரு சித்திரம் மனதில் உருவாகுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். உர்சுலா பற்றித் தலைப்பு கொண்ட கட்டுரையில் குகை மனிதர்கள் பற்றிய விபரம்தான் அதிகம் வருகிறது. இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. சில இடங்களில் மொழியாக்கம் சிக்கல் அளித்தது. 2018ல் காலமானது மாயாவாதப் புனைவா அல்லது உர்சுலாவா என்று ஒரு கணம் நின்று சிந்திக்க வேண்டியிருந்தது.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்
இலைகளுதிர்ந்த பின் மலைகள்
சு. வெங்கட்டின் இலைகளுதிர்ந்தபின் மலைகள் மிக முக்கியமானதொரு விஷயத்தைப் பேசுகிறது. கதை அலசும் பிரச்னையை நாம் வர்க்க பேதம், ஆண், பெண் பேதம், சாதிய இட ஒதுக்கீடு, இனப்பாகுபாடு போன்ற உலகளாவிய பிரச்னைகளுக்கு நீட்டித்துக் கொள்ள முடியும். ஆனால் கதை ஒரு குடும்பத்துக்குள் நிகழும் சொத்துப் பங்கீடு பிரச்னையை அக்குடும்பத்து உறுப்பினரான ஒரு சிறுவனின் பார்வையில், எளிமையான வகையில் விவரித்துச் செல்கின்றது.
கல்வியியலில் எக்விட்டி என்ற பதம் பிரயோகிக்கப்படுகிறது. ஒரு சித்திரம்: உயர்ந்ததொரு வேலிக்கு அப்பால் ஒரு விளையாட்டுப் போட்டி நடக்கிறது. வேலிக்கு இந்தப் புறம் உயரமும் குட்டையுமாக பல சிறுவர்கள் நிற்கிறார்கள். குட்டையான சிறுவர்கள் பார்ப்பதற்கு வசதியாக ஸ்டூல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் மீது ஏறி நிற்பதன் மூலம், உயரமான சிறுவர்கள் பார்ப்பதைப் போலவே, குட்டைச் சிறுவர்களும் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து அனுபவிக்க முடிகிறது. எல்லாருக்கும் அளிக்கப்படும் சமமான வாய்ப்பு என்பது இதுதான். அவர்களுக்கு ஏன் ஸ்டூல்கள் அளித்தீர்கள் என்று உயரமான சிறுவர்கள் கோபித்துக் கொள்வதில் நியாயமில்லை.
எது நியாயம்? என்பதுதான் கதையின் ஆதாரமான கேள்வி. அண்ணன் தம்பிக்குள் சொத்துப் பிரச்னை. தந்தை இறந்தபின் சொத்து எல்லாருக்கும் சமமாகத்தான் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அப்புறம் ஏன் குட்டியப்பாவின் மனைவி மட்டும் தங்களுக்கு இன்னும் அதிகப் பங்கு வேண்டும் என்று போராடுகிறாள். வழக்கை நீதி மன்றம் வரை கொண்டு செல்கிறாள்?
கதையில் இரண்டு இடங்கள் எனக்கு முக்கியமானவையாகப் படுகின்றன. ஒன்று கதை சொல்லிச் சிறுவனுக்கும், குட்டியப்பா சித்தப்பாவுக்கும் பூக்கடையில் நிகழும் உரையாடல். பூக்களில் ரோஜா அழகானது மட்டுமல்ல, பணக்காரப் பூவும் கூட. அரளியும், நந்தியாவட்டையும் ஏழைப் பூக்கள். “ஒரு மாலையில நந்தியாவட்டைக்கும் அரளிக்கும் அதிகமான இடமும் ரோஜாவுக்கு குறைந்த இடமும் கொடுக்கணும். அதுதான் சமமாகவும் நியாயமாகவும் எல்லோருக்கும் கட்டுப்படியாகக்கூடிய விலையிலும் இருக்கும்னு தாத்தா சொல்லுவாங்க”, என்கிறார் குட்டியப்பா.
இன்னொன்று மண்டல் கமிஷன் போராட்டத்துக்காக வந்த சிவப்புத் தொப்பியும், வெண்ணிற ஆடையும் அணிந்த தலைவர் (வி.பி. சிங்கா?) என்ன சொல்லுகிறார் என்ற பெரியவரின் கேள்விக்கான ஆசிரியரின் மொழிபெயர்ப்பு. “எல்லாரும் சமமில்லைன்னு சொல்லறாரு.” இன்னொருத்தர் எல்லாரும் சமம்னு சொல்லறாரே? என்று அந்தப் பெரியவர் புரியாமல் கேட்கிறார்.
இவ்விரண்டு இடங்களும் கதையின் மைய இழையத் தொட்டு, இக்கதை எதை நோக்கிச் செல்கிறது என்பதைக் காட்டுகின்றன.
சமூக ஏற்றத்தாழ்வுகள் குடும்பத்திலும் பேணப்படுகின்றன என்பதை இக்கதை காட்டுகிறது. ஆனால் சிறு பிரசார தொனி கூட கதை சொல்லும் தன்மையில் இல்லை. காரணம் வெங்கட் கதையைச் சொல்ல முற்படுவதில்லை. கதையை முதலில் தன் அகக் கண்களால் காண்கிறார். பின் கண்டதை அப்படியே நமக்குக் காட்டுகிறார். ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு அவர் காட்டும் உலகத்துள் நுழைந்த வாழ நம்மை அனுமதிக்கிறார். பிரின்ஸ் மிஷ்கினைப் போல குட்டியப்பா எளிமையும், தூய்மையும் வடிவான ஓர் உயிர். கடும் உழைப்பாளி. வேறொரு உலகில் வாழ்பவர். நடிகை அம்பிகாவைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுபவர். அவரது கதாபாத்திரம் மிக மெதுவாக நம் மனதுக்குள் உருக்கொள்ளுகிறது. கதையில் நிறையப் பாத்திரங்கள் இருந்தாலும் அவர்களை அறிந்து கொள்ளுவதில் நமக்குச் சிரமமேதுமில்லை. கதைசொல்லிச் சிறுவனுக்குப் பக்கத்தில் நாமும் நின்று கொண்டு நடக்கும் நிகழ்வுகளை அவதானிக்கத் துவங்கி விடுகிறோம். முற்றத்தில் நீல வண்ண மூடியாய் வானமும் சதுரமாய் வெட்டப்பட்டது போல தெரியும் வீட்டில் நாமும் வசிக்கத் துவங்கி விடுகிறோம். கனகாம்பரத்தின் அடிப்பக்கக் காம்பில் இருக்கும் தேனை உறிஞ்சிப் பார்க்கிறோம். ஒரு முழு வாழ்க்கையை அருகிருந்து அவதானித்த திருப்தி கதையை முடித்தவுடன் வருகிறது.
ஒரு புனைவு தரும் நிகர் நிலை அனுபவங்களும், அது கையாளும், ஆராயும் விஷயங்களுமே அதை ஓர் அரிய கலைப்படைப்பாக ஆக்குகிறது. அவ்வகையில் வெங்கட்டின் இக்கதை மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு என்று கருதுகிறேன். சிறுகதை வடிவம் வெங்கட்டுக்கு மிக லாவகமாக வருகிறது. ஏற்கனவே இரண்டு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவரிடமிருந்து நான் நிறைய நுட்பங்களைக் கற்றிருக்கிறேன். அவரது மொழி பாசாங்கற்றது, நேரடியானது, ஓவியனுக்குத் தூரிகை போல இவருக்கு மொழி, புனைவைச் சித்திரமாக ஆக்குகிறது.
கதை சொல்லி திருமணமாகி குழந்தையுடன் குட்டியப்பா கடைப்பக்கம் வருகிறான். அவனுக்கு தாத்தாவை அறிமுகப்படுத்த, குழந்தை வாயிலிருந்து கையை எடுத்து விட்டு மின்சாரக் கம்பியில் அமர்ந்திருக்கும் காக்காவைக் காட்டுகிறான். என்ன அழகான தருணம்! அதுவும் கதை முடியும் தருவாயில்.
மற்றுமொரு அற்புதமான கதையைத் தந்ததற்கு நன்றி, வெங்கட்.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
