மேரா பாரத் மகான்

தெலுங்கில் : பொத்தூரி விஜயலட்சுமி

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

ஸ்ரீஹரிக்கு சிறு வயதிலிருந்தே ஒரு ஆசை இருந்தது. பனிப் பிரதேசத்திற்குச் செல்ல வேண்டும். பனியில் விளையாட வேண்டும். சினிமாவில் பனிப் பிரதேசங்களைப் பார்த்து ஏங்கினான். எப்படியாவது பனிப் பொழியும் இடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற தீவிர ஆசை அவனுக்கு. 

ஸ்ரீஹரி ஹைதராபாதில் ஒரு தனியார் கம்பனியில் பணி புரிகிறான். எல்.டி.ஸி. வசதி இல்லை. எப்போது போகலாமென்று முயற்சித்தாலும் ஏதோ ஒரு தடை. இறுதியில் அந்த விருப்பம் நிறைவேறிய போது அவனுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்து அதற்கு இரண்டு வயது நிரம்பியது.  

எதிர்பாராமல் அரியர்ஸ் பணம் பதினைந்தாயிரம் கையில் கிடைத்தது. அது போன்ற வாய்ப்பு மீண்டும் கிடைக்காது. எப்படியாவது இந்த முறை கிளம்பிவிட வேண்டும் என்று பிடிவாதமாக பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்தான். அது மார்ச் மாத இறுதி. சீசனும் நன்றாக இருந்தது. 

மணாலி செல்வதென்று தீர்மானம். டூரிஸ்ட் சர்வீஸ்கள் இருந்தன. ஆனால் எதுவும்  அவனுடைய சௌகர்யத்திற்கு ஏற்ப இல்லை. அதனால் தனியாகக் கிளம்பத் தீர்மானித்தான். டூரிஸ்ட் டிபார்ட்மென்ட் மூலம் வேண்டிய விவரங்களை சேகரித்துக் கொண்டான். மணாலி செல்வதற்கு இரு மார்க்கங்கள் உள்ளன. டெல்லி, சிம்லா வழியாகச் செல்லும் வழி ஒன்று. பதான்கோட், காங்ரா வழியாகச் செல்வது மற்றொரு மார்க்கம். இரண்டாவது மார்க்கத்தைத் தேர்ந்தேடுத்தான். 

ஏனென்றால், சிம்லா வழியாகச் சென்றால் குலு பள்ளத்தாக்கைத் தாண்டிய பிறகுதான் பனிமலைகள் தென்படும். காங்ரா வழியாகச் சென்றால், பதான்கோட்டைத் தாண்டிய சற்றைக்கெல்லாம் பனிச் சிகரங்களைப் பார்க்கலாம். இறுதி வரை அவற்றை ஒட்டியே பயணம் நிகழும்.  

வாரங்கல்லில் இருந்து பதான்கோட் செல்லும் ரயிலில் ரிசர்வேஷன் செய்து கொண்டு மனைவி சாரதாவோடும் குழந்தையோடும் ரயிலில் ஏறினான். அரைமணி நேரம் தாமதமாக ரயில் பதான்கோட் சென்றடைந்தது. அன்று இரவு ஹோட்டலில் தங்கிவிட்டு மறுநாள் காலையில் மணாலி செல்லும் பஸ்ஸில் ஏறினார்கள். 

பதான்கோட்டைத் தாண்டிய இரண்டு மணி நேரத்தில் பனிச் சிகரங்கள் தெரியத் தொடங்கின. அவனுக்கு உடல் புல்லரித்தது. கண்கள் கண்ணீரால் நிறைந்தன. சாரதா கணவனைப் பார்த்துச் சிரித்தாள். 

மாலையில் பஸ் மணாலியை அடைந்தது. அங்கு இறங்கியதுமே ஆட்டோக்களும்  டாக்சிகளும் வந்து சூழ்ந்து கொண்டன. ஒரு ஆட்டோவைப் பேசி, ஏதாவது ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லச் சொன்னான். இரண்டு, மூன்று ஹோட்டல்களைப் பார்த்துப் பிடிக்காமல் கடைசியில் ஒரு ஹோட்டலில் தங்கினார்கள். அவன்  ஹைதராபாதில் சேகரித்த விவரங்களை விட ஹோட்டல் அறைகளின் கட்டணம் அதிகமாக இருந்தன. விசாரித்ததில், அண்மைக் காலமாக அறைக் கட்டணங்கள் பெருகி விட்டதாகக் கூறினார்கள். ரூம் வாடகை அதிகமாக இருந்தாலும் அறை வசதியாக  இருந்தது. அறை ஜன்னலில் இருந்து வெளியே பார்த்தால். பனியால் போர்த்தப்பட்ட மலைகளும் பசுமையான பைன் மரங்களுமாக இயற்கைக் காட்சி கண்ணைக் கவர்ந்தது.

குளித்து முடித்தபின் சாரதா அறையிலேயே ஓய்வாக இருந்து விட்டாள். ஸ்ரீஹரி அறையை விட்டு வெளியில் வந்தான். ரிசெப்ஷனில் மணாலிக்கு வரும் ஒவ்வொரு டூரிஸ்ட்டும் கேட்கும் கேள்வியையே அவனும் கேட்டான். 

“ஸ்னோ பார்க்க வேண்டுமென்றால் எங்கே செல்ல வேண்டும்? எப்படி செல்ல வேண்டும்?”

“இந்த ஆண்டு பனிப்பொழிவு குறைவாகவே உள்ளது. ‘ரோஹ்தாங் பாஸ்’ என்ற இடத்தின் அருகில் பனி அதிகம் பொழிந்துள்ளது. அரசாங்கத்தின் ‘சைட் சீயிங் ட்ரிப்’ உள்ளது. அந்த பஸ்ஸில் ஏறுங்கள். பஸ் ஸ்டாண்ட் நம் ஹோட்டலின் எதிர்ப்புறத்தில் தான் இருக்கிறது. வேண்டுமென்றால் நான் டிக்கெட் வாங்கி தருகிறேன்” என்றார் ஹோட்டல்காரர். 

அவரிடம் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பி வந்தான். குளிர் அதிகமாக இருந்தது. ரூம் கட்டணத்தை விட ஒரு நாளைக்கு எழுபது ரூபாய் அதிகம் கட்டி ரூம் ஹீட்டர் வரவழைத்தான். 

மறுநாள் காலை ஏழு மணிக்குத் தயாராகி வெளியில் வந்தார்கள். சாலையில் ஹோட்டலுக்கு அருகில் சூடச் சுட உருளைக் கிழங்கு போண்டா விற்றார்கள் அதை வாங்கிச் சாப்பிட்டு, டீ குடித்து விட்டு பஸ்ஸில் ஏறினார்கள். பஸ் டூரிஸ்ட்டுகளால் நிரம்பி வழிந்தது. ரோஹ்தாங் பாஸ் செல்லும் சாலையில் ஐம்பது கிமீ தூரத்தில் கம்பளி ஆடைகளும் பூட்ஸ்களும் வாடைகைக்குக் கிடைத்தன. அங்கு பஸ் நின்றதும் அனைவரும் இறங்கி தேவையானதை வாங்கிக் கொண்டார்கள். உயரத்தில் செல்லச் செல்ல பனிப் பொழிவு அருகில் தெரிந்ததால் எல்லோரும் உற்சாகமாக விசிலடித்தார்கள். அவ்வாறு சென்று கொண்டிருந்த போது ரோஹ்தாங் பாஸ் இன்னும் பன்னிரண்டு கிமீ என்ற மைல் கல் தென்பட்டது. அதன் அருகில் பேருந்தை ஓரமாக நிறுத்தினார் டிரைவர். 

“இதற்கு மேல் பஸ் செல்லாது. மூன்று மணி நேரம் டைம் தருகிறோம். அதற்குள் சுற்றிப்  பார்த்துவிட்டுத் திரும்பிவிட வேண்டும்” என்றார். 

எல்லோரும் இறங்கினார்கள். அங்கு அருகில் பனி இல்லை. கீழே தரையெங்கும் ஈரமாகவும் சேறாகவும் இருந்தது. சாலை நன்றாக இருந்தது. குறுக்காக பாரிகேட் வைத்திருந்தார்கள். பேருந்தை விட்டு இறங்கியவர்கள் எல்லோருக்கும் ஏமாற்றத்தில் முகம் தொங்கிவிட்டது. 

சற்று தொலைவில் வரிசையாக குதிரைகளை நிறுத்தியிருந்தார்கள். குதிரை ஓட்டிகள் இவர்களிடம் வந்து சூழ்ந்து கொண்டார்கள். அங்கிருந்து ஐந்து கிமீ தொலையில் ‘பியாஸ் நாலா’ என்ற இடம் உள்ளது. அங்கு ஸ்னோ இருக்கிறது. அங்கு வாகனங்களை அனுமதிக்க மாட்டார்கள். குதிரையின் மீது ஏறிச் செல்ல வேண்டும். அல்லது நடந்து செல்ல வேண்டும். ஒரு குதிரைக்குப் போக வர ஐநூறு ரூபாய்கள் என்றார்கள். 

அதிர்ச்சி அடைந்தான் ஸ்ரீஹரி. அவன் சேகரித்த விவரங்களில் இந்த குதிரைகளைப் பற்றிய குறிப்பு இல்லை. இங்கு சின்னக் குழந்தைகளோடு நடப்பது மிகவும் கடினம். அதுமட்டுமின்றி நீண்ட நேரமாகும். அதனால் குதிரைகளைப் பேசினார்கள். ஸ்ரீஹரி மகளோடு ஒரு குதிரையில் ஏறினான். சாரதா மற்றொரு குதிரையில் ஏறினாள்.  

ஸ்னோ பாயிண்ட்டை அடைந்தார்கள்.  ஒரு கால்பந்து மைதானம் அளவுக்குப் பனி அடர்த்தியாக விழுந்திருந்தது. ஒரே கூட்டமாக மக்கள். அனைவரும் மிதித்ததால் பனியின் நிறம் கருப்பாக மாறியிருந்தது. மலைச் சாரலில் உயரமாகச் சென்றால் அங்கு பனி சுத்தமாக மின்னலைப் போல் ஒளிர்ந்தது. ஆனால் யாரும் அங்கு ஏறுவதற்கு சாகசம் செய்யத் துணியவில்லை. அனைவரும் கீழேயே தங்கி பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

“ஸ்கேட்டிங் உபகரணங்களை வாடகைக்குத் தருகிறோம். ஸ்கேட்டிங் செய்கிறீர்களா?” என்று கேட்பவர்கள் அங்கு நிறைய பேர் இருந்தார்கள். “பனியால் உங்கள் உருவத்தை வடித்துத் தருகிறோம். பணம் தாருங்கள்” என்று கேட்பவர்களும், காபி, டீ, சிப்ஸ், பாப்கார்ன் போன்ற ஸ்நாக்ஸ் விற்பவர்களும் அங்கு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். 

அந்த காட்சியைப் பார்த்து மனமுடைந்து போனான் ஸ்ரீஹரி. எங்கு திரும்பினாலும் இது போன்ற பலர் தென்பட்டார்கள். இதற்காகவா இங்கு வந்தோம்? கற்பனை செய்து பார்த்து வந்ததற்கும் உண்மை நிலைக்கும் சற்றும் பொருத்தம் இல்லையே என்று வருந்தினான்.  ஆனாலும் உற்சாகத்தை வரவழைத்தைக் கொண்டு பனியில் விளையாடினார்கள். ஒரு மணி நேரம் அங்கு கழித்த பின் மீண்டும் குதிரைகளில் ஏறி மணாலியை அடைந்தனர். டிரைவர் மேலும் சில இடங்களைக் காட்டியபின் ஹோட்டல் அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டார். 

குளிரும், பழக்கமில்லாத குதிரை சவாரியும் உடலை வாட்டி எடுத்தன. அறைக்குச் சென்று சற்று நேரம் ஓய்வெடுத்தனர். வெளியில் சென்று சிறிது நேரம் கடைத்தெருவில்   சுற்றி பார்த்து விட்டு உணவு சாப்ப்பிட்டு விட்டு வரலாம் என்று கிளம்பினர். கடைத்தெருவில் இருந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்று சாப்பாடு ஆர்டர் செய்தனர். 

இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு பக்கத்து மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மனிதன் இவனிடம் நலம் விசாரித்தான். இருவருடைய தாய் மொழியும் ஒன்றாக இருந்ததால் ஆர்வத்தோடு உரையாடினார்கள். அவன் பெயர் பிரசாத். கொத்தகூடத்திலிருந்து வந்தானாம். 

பேச்சுவாக்கில், “ஸ்னோ பார்த்திர்களா?” என்று கேட்டான் பிரசாத். 

“ஏதோ பார்த்தோம்” என்றான் ஸ்ரீஹரி. 

இவர்கள் பஸ்ஸில் சென்றார்கள் என்று அறிந்து, “ஓ அப்படிச் சென்றீர்களா?” என்று கேட்டு வருத்தப்பட்டான் பிரசாத். 

ஸ்ரீஹரிக்கு ஆச்சர்யமாக இருந்தது. “வேறு எப்படிப் போக வேண்டும்?” என்று கேட்டான்.  

அதற்கு பதிலாக மணாலியின் வரலாற்றையே விவரமாக எடுத்துக் கூறினான் பிரசாத். 

மணாலியில் இருந்து ரோஹ்தாங் பாஸ் வழியாக ‘லடாக் லெஹ்’ செல்லும் மார்க்கம் குளிர் காலத்தில் முழுமையாக பனியால் மூடப்பட்டிருக்கும். பிப்ரவரி மாத இறுதியில் பனியை நீக்கத் தொடங்கி ஏப்ரல் பதினைந்து தேதிக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்தை அனுமதிப்பார்கள். அதுமட்டுமின்றி, பியாஸ் நாலா வரை டூரிஸ்ட்டுகளை அனுமதிப்பார்கள் அங்கு வரை அனைவரும் வாகனங்கள் மீது சென்றால் தமக்கு வருமானம் இருக்காது என்று குதிரைக்காரர்கள் பியாஸ் நாலாவுக்கு ஐந்து கிமீ முன்பாகவே சாலைக்குக் குறுக்கே தடை வைத்து வாகனம் செல்லவிடாமல் அடைத்து விடுவார்கள். அவ்வாறு அவர்கள் வந்து தடை வைப்பதற்கு முன்பாகவே அதாவது காலை ஒன்பது மணிக்கு முன்பாக அந்த இடத்தைத் தாண்டிச் சென்றுவிட்டால் பயாஸ் நாலாவைத் தாண்டிய பின்னர் கொஞ்சம் சாலையைக் கிளியர் செய்வார்கள். அங்கு எங்கு பார்த்தாலும் பனி மயமாக இருக்கும். மக்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். அங்கு செல்வதற்கு ஜீப்புகள் கிடைக்கும். எண்ணூறு ரூபாய் கேட்பார்கள். விடியற்காலை ஐந்து மணிக்கே கிளம்ப வேண்டும்” என்று விளக்கினான். 

வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான் ஸ்ரீஹரி. “இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான். 

“வரும் போது சிம்லாவில் நம் ஊர்க்காரர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர்தான்  இதெல்லாம் எனக்குச் சொல்லி புண்ணியம் கட்டிக் கொண்டார். அவர் திரும்பிச் செல்லும் பயணத்தில் இருந்தார். அவர்கள் அப்படிச் சென்றார்களாம்/ நாங்கள் நேற்று அதுபோல் சென்று பார்த்து விட்டு வந்தோம். நாம் அத்தனை தூரத்திலிருந்து கஷ்டப்பட்டு வந்தது எதற்காக? ஸ்னோ பார்ப்பதற்கே அல்லவா?” என்றான் பிரசாத். 

“இந்த ஏற்பாடு எல்லாம் யார் செய்வார்கள்?” என்று கேட்டான் ஸ்ரீஹரி. 

“இவர்கள் யாரும் உண்மையைச் சொல்ல மாட்டார்கள். என்னிடம் எங்களை அழைத்துச் சென்ற டிரைவரின் நம்பர் உள்ளது. நீங்கள் அவரோடு பேசி, போய்ப் பார்த்துவிட்டு  வாருங்கள். மீண்டும் மீண்டும் இத்தனை தூரம் வர மாட்டோம் அல்லவா?” என்று கூறி நம்பரைக் கொடுத்துச் சென்றான் பிரசாத்.  

சற்று நேரம் செல்வதா வேண்டாமா என்று தலையைப் பிய்த்துக் கொண்டு யோசித்து, சென்று வரலாம் என்று முடிவு செய்தான் ஸ்ரீஹரி. வெளியில் சென்று டெலிபோன் பூத்திலிருந்து போன் செய்தான். இவன் தங்கியிருக்கும் ஹோட்டல் விவரங்களைக் கேட்டறிந்து கொண்டு இன்னும் அரை மணியில் வருவதாகக் கூறினான் டிரைவர். 

ஹோட்டலுக்குச் சென்ற பின் ரிசெப்ஷனில் கேட்டபோது, “ஆமாம். அப்படிக் கூட போகலாம்” என்று நிதானமாக பதில் சொன்னார் ஹோட்டல் உரிமையாளர். 

“இதை முன்பே சொல்லியிருந்தால் அந்த வழியில் சென்றிருப்போமே” என்று விடாமல்   கேட்டான் ஸ்ரீஹரி.  

“நீங்கள் கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன்” என்றார் அவர். 

கோபத்தோடு அறைக்குத் திரும்பினான் ஸ்ரீஹரி. “இது நம் தேசத்தைப் பிடித்த பீடை. செய்வதைச் சொல்ல மட்டார்கள். சொல்வதைச் செய்ய மாட்டார்கள் எல்லாம் திருட்டுக் கூட்டம்” என்று முணுமுணுத்தான். 

“போகட்டும் விடுங்கள். இங்கு இருக்கும் போதே இந்த விவரம் தெரிந்தது. ரயிலில் ஏறிய  பின் தெரிந்தால் வாழ்நாள் பூரா வருந்துவீர்கள்” என்றார் சாரதா. 

சற்று நேரத்தில் டிரைவர் வந்தான். பெயர் அசோக். மலை ஜாதிக்காரன். இருபத்தைந்து வயதிருக்கும். “எங்கு செல்ல வேண்டும்?” என்று கேட்டான். 

“ரோஹ்தாங் பாஸ் செல்ல வேண்டும்” என்றான் ஸ்ரீஹரி. 

“என் வண்டிகள் இரண்டும் புக் ஆகி விட்டன” என்றவன், மீண்டும், “மிகத் தொலைவில் இருந்து வந்திருக்கிறீர்கள். ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்குப் பனியைக் காட்ட வேண்டும். வேறு யாரிடமாவது வண்டி கேட்டுப் பார்க்கிறேன். ஆனால் ஆயிரத்து இருநூறு ரூபாய் ஆகும். பரவாயில்லையா?” என்று கேட்டான். 

“ஏன் அப்படி? நேற்று என் நண்பன் எண்ணூறு தானே கொடுத்தான்?” என்று கேட்டான் ஸ்ரீஹரி.

அதற்கு அந்த டிரைவர் ஏதேதோ கதை சொன்னான். பேரம் பேசி எண்ணூற்று ஐம்பதுக்கு சம்மதிக்க வைத்தான் ஸ்ரீஹரி. 

“சரிங்க மொதலாளி. உங்களுக்குப் பயணம் திருப்தியாக இருந்தால் எனக்குக் கொஞ்சம் பக்ஷீஸ் தராமல் போவீர்களா?” என்றவன், “ஃப்யூயல் போட வேண்டும். நாநூறு கொடுங்கள்” என்று கேட்டு பணத்தை வாங்கிக் கொண்டு, “நாளை காலை ஆறு மணிக்கெல்லாம் ரெடியாக இருங்கள்” என்று கூறிச் சென்றான்.  

“முன்பே தெரிந்து கொள்ளாமல் இரட்டைச் செலவு செய்கிறோமே” என்று சற்று நேரம் வருந்தி விட்டு, “போகட்டும். மீண்டும் மீண்டும் வரப் போகிறோமா, என்ன?” என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டான் ஸ்ரீஹரி. 

மறுநாள் காலை ஐந்து மணிக்கே எழுந்து தயாராகி உட்கார்ந்திருந்தார்கள். ஆறரை மணிக்கு வந்தான் அசோக். அவன் எடுத்து வந்த ஜீப் மிக நன்றாக இருந்தது. வேகமாக டிரைவ் செய்தான். ஏதோ கதை பேசிக் கொண்டே ஓட்டினான். எட்டு மணிக்கு நேற்றைய தினம் பேருந்தை நிறுத்திய இடத்திற்கு வந்தான். இன்னும் யாரும் வரவில்லை. சர்ரென்று ஜீப் முன்னேறியது. பியாஸ் நாலாவிடம் சென்று அங்கிருந்து வேறொரு மலை மீது ஏறத் தொடங்கியது. எங்கு பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனி.  குண்டூசி விழும் இடம் கூட இல்லாமல் படர்ந்திருந்த பனி காலை வெய்யிலில் மின்னியது.  

சாலையின் இருபுறமும் பனிச் சுவர்கள். மேலும் ஒரு கிமீ சென்று ஜீப்பை நிறுத்தினான் அசோக். “இவ்வளவுதான் சார். இது வரைக்கும்தான் ரோடு கிளியர் செய்துள்ளார்கள். இறங்கி, உங்கள் இஷ்டத்திற்கு எத்தனை நேரம் வேண்டுமானாலும் இங்கு பனியில் விளையாடலாம்” என்றான். 

மந்திரத்திற்கு வயப்பட்டவன் போல் ஜீப்பிலிருந்து இறங்கினான் ஸ்ரீஹரி. கண்ணை மூடினால் அந்த இனிய காட்சி கண்ணிலிருந்து மறைந்து விடுமோ என்று அஞ்சி கண்ணிமைகளை மூட மறந்தான். கோட்டும் பூட்சும் வாடகைக்கு எடுத்திருந்ததால்  அவர்களைக் குளிர் தாக்கவில்லை. ஆசை தீரப் பனியில் விளையாடினார்கள். தன் அதிர்ஷ்டத்தை நினைத்துப் பெருமை கொண்டான் ஸ்ரீஹரி. 

இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்து பனியை அனுபவித்த பின், “போதும். கிளம்பலாம்” என்று எண்ணி ஜீப்பிடம் வந்தார்கள். போகும்போது எந்தத் தடையும் இல்லாமல் சென்று விட்டார்கள். ஆனால் திரும்பி வரும்போது இரண்டு இடங்களில் போலீசார் ஜீப்பை நிறுத்தி விட்டார்கள். “சாலை இன்னும் திறக்க வில்லையே. ஏன் சென்றீர்கள்? ஏதாவது நடந்தால் யார் பொறுப்பு?” என்று எச்சரித்தார்கள். 

ஸ்ரீஹரிக்கு அவமானமாக இருந்தது. அசோக், ‘இதெல்லாம் எப்போதும் நடப்பதுதான்’ என்பது போல் சும்மா இருந்தான். ஸ்ரீஹரியிடம் ஒரு தொகை கேட்டு வாங்கி போலீசாரின் கையில் வைத்தான். 

சாலையில் தடை வைத்த இடத்தில் குதிரைக்காரர்கள் சண்டைக்கு வந்தார்கள்.  அவர்களுக்கும் ஏதோ கொஞ்சம் சமர்ப்பிக்காமல் நகர முடியவில்லை. “ஒருசில நாட்கள்  இப்படித்தான் நடக்கும். சில நாட்கள் பார்த்தும் பார்க்காதது போல் விட்டு விடுவார்கள்” என்றான் அசோக். 

அத்தனை நல்ல இயற்கை அழகின் அனுபவத்திற்குப் பிறகு இப்படிப்பட்ட சில்லறை விவகாரங்கள் ஸ்ரீஹரிக்கு எரிச்சலை ஏற்படுத்தின. ஹோட்டலை அடைந்தார்கள். நானூறு ரூபாயைக் கழித்துக் கொண்டு டிரைவரிடம் பாக்கி பணத்தைக் கொடுத்தான். 

“உங்களுக்காக இத்தனை கஷ்டப்பட்டு வந்தேன். போலீசாரோடு தகராறு வேறு. எனக்கு கொஞ்சம் இனாம் கொடுங்கள்” என்றான் அசோக். 

ஸ்ரீஹரி ஐம்பது ரூபாய் கொடுத்த போது டிரைவர் வாங்க மறுத்தான். ஸ்ரீஹரிக்குக் கோபம் வந்தது. “வழியெல்லாம் எல்லோருக்கும் தாரை வார்த்துக் கொண்டே வந்தேன்” என்றான். 

“அவர்களுக்குக் கொடுத்தால் எனக்கு கொடுத்ததாகுமா?” என்று லாஜிக் பேசினான் அசோக். 

வாக்குவாதம் முற்றியது. குறைந்தது இருநூறாவது தர வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினான் அசோக். எத்தனை கத்தினாலும் ஐம்பது ரூபாய்க்கு அதிகமாகத் தரமாட்டேன் என்றான் ஸ்ரீஹரி. 

“அதை நீயே வைத்துக் கொள். உன்னைப்போல கதியற்றவர்கள் டூர் எதற்காக வருகிறீர்கள்? அறிவில்லாமல் உன்னை அழைத்துச் சென்றேன்” என்றான் அசோக்.   

ஸ்ரீஹரிக்குக் கோபம் தலைக்கேறியது. அசோக்கை அடிப்பதற்கு கையை ஓங்கினான். அவர்களின் வாக்குவாதத்தைக் கேட்டு கூடியிருந்த மக்கள் அவனைத் தடுத்தார்கள். சத்தமாக திட்டிக் கொண்டே அங்கிருந்து சென்றான் அசோக். 

“அவனோடு எதற்கு வம்பு? அவர்கள் இங்குள்ளவர்கள். நாம் வெளியிலிருந்து வந்தவர்கள். ஏதோ இன்னும் கொஞ்சம் கொடுத்து சமாதானப்படுத்தி இருக்கலாம். சண்டைக்கு இறங்கினால் ஆபத்தை விலைக்கு வாங்குவது போல் ஆகாதா?” என்றார் ஹோட்டலில் தங்கியிருந்த மற்றொரு டூரிஸ்ட்.

விரைந்து அறைக்குச் சென்றான் ஸ்ரீஹரி. “சீ. இந்த தேசத்தில் எங்கே பார்த்தாலும் பகல் கொள்ளை. இதுபோன்ற அநியாயங்கள் வேறு தேசங்களில் நடக்காது. புது இடத்தைச் சுற்றிப் பார்க்க வந்த மனிதர்களை கழுகு போல கொத்திப் பிடுங்கித் தின்கிறார்கள். வெளிநாட்டுக் காரர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள். பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். எனக்குத்தான் புத்தி இல்லை. இது போல் சுற்றுலாவுக்கு வந்தது என் தப்புதான். என்னைச் செருப்பால் அடித்துக் கொள்ளவேண்டும். பணக்காரர்கள் டூர் செய்தால் அழகாக இருக்கும். என்னைப் போன்ற பிச்சைக்காரனுக்கு இது போன்ற மரியாதைதான் கிடைக்கும்” என்று சொல்லிப் புலம்பினான். 

கொஞ்சம் ஆவேசம் குறைந்த பிறகு பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டான். நினைத்ததை விட அதிகமாகவே செலவாயிற்று. இனி கவனமாகச் செலவு செய்தால்  வீட்டிற்கு மரியாதையாகச் செல்ல முடியும் என்று தோன்றியது. 

மறுநாள் முழுவதும் அங்கு அருகிலேயே கால்நடையாக அலைந்து திரிந்தார்கள். மறு நாளைக்கு பஸ்ஸில் ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கு டிக்கெட் புக் செய்து கொண்டு ஹோட்டலுக்கு வந்தான். இரவு இடியும் மின்னலுமாக ஒரே மழை. நம் அதிர்ஷ்டம் நேற்றும் முந்தாநாளும் சீதோஷ்ணம் நன்றாக இருந்தது. எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது என்று நினைத்துக் கொண்டான். இரவு முழுவதும் ஓயாமல் மழை பெய்தது. 

காலை எட்டு மணிக்கு பஸ். ஏழு மணிக்கே தயாராகி, அறையைக் காலி செய்து சாமான்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தார்கள். பஸ் ஸ்டாண்டில் ஐந்தாறு பஸ்கள் நின்றிருந்தன. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு ஏதோ சலசலப்பாக இருந்தது. என்னவென்று கேட்டுக் தெரிந்து கொண்டான். 

இரவு பெய்த மழையில் செல்ல வேண்டிய சாலை பழுதாகி விட்டது. பேருந்துகள் கிளம்பாது. டிக்கெட்டைக் காட்டி பணத்தை திரும்பப் பெறும்படி அறிவித்தார்கள்.  

ஸ்ரீஹரிக்கு இதயத்தை யாரோ தாக்கியது போலிருந்தது. இயந்திரத்தனமாக டிக்கெட்டைக் காட்டி பணத்தை வாங்கிக் கொண்டான். மீண்டும் மழை தூரத் தொடங்கியது. 

“வாருங்கள். போய் ஹோட்டலில் உட்காருவோம்” என்றாள் சாரதா. சாமான்களை எடுத்துக் கொண்டு சாலை அருகிலிருந்த ஹோட்டலில் போய் அமர்ந்தார்கள். டீ ஆர்டர் செய்தான் ஸ்ரீஹரி. 

அப்போது அசோக் ஹோட்டலுக்கு வந்தான். அவனோடு மேலும் சிலர் இருந்தார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கோபத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். 

“இப்படி மழை வருவதும் நல்லதற்குத் தான். மேலே நிறைய பனி பெய்துள்ளது. சீசன் முழுவதும் பனி இருக்கும். நிறைய டூரிஸ்ட்கள் வருவார்கள். நமக்கும் நிறைய கிடைக்கும்” என்று அசோக்கும் அவனோடு வந்தவர்களும் சத்தமாக பேசிக் கொண்டார்கள், 

“அந்த விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நல்ல கிராக்கியாகப் பிடிக்க வேண்டும். இனாம் கொடுப்பதற்கு அழும் சந்நியாசிகளால் நமக்கு என்ன லாபம்” என்றான் அசோக் சத்தமாக. 

ஸ்ரீஹரிக்கு ஆத்திரமாக வந்தது. அந்தக் கோபத்தை எல்லாம் குறும்பு செய்து எரிச்சலை ஏற்படுத்திய மகள் மீது காட்டி அவளை இரண்டு அடி போட்டான். அவள் ராகம் போட்டு பெரிதாக அழ ஆரம்பித்தாள். 

ஸ்ரீஹரி எழுந்து ஹோட்டல் கௌண்டரிடம் சென்றான். “பஸ்கள் எப்போது கிளம்பும்? நாங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்” என்றான். 

“இரவு பெய்த மழையில் சாலையெல்லாம் பாழடைந்து விட்டன. பேருந்துகள் கிளம்பாது என்று சொல்கிறார்கள்” என்றார் அங்கிருந்தவர். 

“வேறே ஏதாவது வாகனங்கள் அதாவது ஷேர் ஜீப்புகள் போன்றவை கிடைக்குமா?” என்று பரிதாபமாகக் கேட்டான் ஸ்ரீஹரி. 

“பஸ்ஸே போக முடியாத போது சிறிய வாகனங்கள் எப்படிப் போகும்?” என்றார் ஹோட்டல்காரர். மீண்டும் வந்து நாற்காலியில் அமர்ந்தான் ஸ்ரீஹரி. நிலைமையை நினைத்தால் இதயம் நழவி விழுந்து விடும் போலிருந்தது. கையில் போதும் போதாமல் சிறிது பணம் மட்டுமே இருந்தது. அவனிடம் கிரெடிட் கார்டு இல்லை. தொலைதூரப் பயணம், திருடர் பயம் என்று மனைவி கழுத்திலிருந்த சங்கிலியையும் கையிலிருந்த  வளையல்களையும் கழற்றிவைத்து விட்டு தாலிக் கயிற்றோடும் கில்ட் சங்கிலியோடும் கண்ணாடி வளையல்களோடும் வந்திருந்தாள். 

இப்போது என்ன செய்வது? இங்கேயே சிக்கிக் கொண்டால் ரயிலைப் பிடிக்க முடியாது. அவனையறியாமல் கண்ணீர் வந்தது. அவனை கவனித்துக் கொண்டிருந்த அசோக் திடீரென்று எழுந்து அவனை நோக்கி வந்தான். 

“சார், என்ன ஆயிற்று ஏன் இப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டான். அந்தக் குரலில் அதற்கு முன் இருந்த ஏளனம் தென்படவில்லை. ஆதரவாகக் கேட்பது போலிருந்தது. 

ஸ்ரீஹரியால் பேச முடியவில்லை. “நாங்கள் ஹோட்டலை காலி செய்து விட்டோம். பஸ் கான்சல் ஆகி விட்டது” என்று சாரதா பதிலளித்தாள். 

“ஓ அவ்வவளவுதானா? வாருங்கள். நான் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறேன்” என்ற அசோக், அவனுடைய பதிலுக்காக காத்திருக்காமல் சாமான்களை எடுத்துக் கொண்டு வெளியில் நடந்தான். 

கிடுகிடுவென்று நடந்த அவனோடு சேர்ந்து நடந்தான் ஸ்ரீஹரி.. இருவரும் சாலைக்கு வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து சாரதாவும் குழந்தையோடு நடந்தாள்.

“நில், அசோக்” என்று வாயைத் திறந்தான் ஸ்ரீஹரி. “என்னிடம் அத்தனை பணம் இல்லை.   இங்கேயே சிக்கிக் கொண்டு விட்டோம். எங்கள் ரயில் கிளம்பிச் சென்று விடும். பாதி பணம் தான் திரும்பக் கொடுப்பார்கள். மீண்டும் டிக்கெட் வாங்க எங்களிடம் பணம் இல்லை” என்று கூறிவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் நிறுத்தினான் ஸ்ரீஹரி. அவனுக்குத் தொண்டையை அடைத்தது. கண்கள் கண்ணீரால் நிறைந்தன. நிலைமையின் தீவிரம் புரிந்த சாரதா பெரிதாகக் குரலெடுத்து அழத் தொடங்கினாள். 

ஒரு நிமிடம் மலைத்து நின்றான் அசோக். உடனே, “எல்லாம் பரவாயில்லை, சார். எங்கள் வீட்டுக்கு வாருங்கள்” என்று தன் ஜீப்பில் சாமான்களை அடுக்கி வைத்தான். அவர்களும் பதில் பேசாமல் ஏறினார்கள். நேராகத் தன் வீட்டுக்கு ஜீப்பை விட்டான், அசோக். 

சிறிய வீடு. அவனுடைய அம்மாவும் அப்பாவும் இருந்தார்கள். அவர்களுக்கு அறிமுகம் செய்தான். அவர்களுக்கு ஹிந்தி வரவில்லை. மலை பாஷையில் பேசினார்கள். 

“உங்களை சங்கோஜப்படவேண்டாம் என்று சொல்கிறார்கள்” என்றான் அசோக். விருந்தினர்களை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டுச் சென்று விட்டான் அசோக். 

சாமான்களை ஓரிடத்தில் வைத்து விட்டு அருகில் அமர்ந்தார்கள். ஸ்ரீஹரியின் மனம் பல விதங்களில் யோசித்தது. அந்த ஆதரவின் பின்னால் ஏதாவது சதி இருக்குமோ என்று அஞ்சினான். ஏதாவது நடக்கக் கூடாதது நடந்தால் அந்தப் புதிய இடத்தில் யார்  காப்பாற்றுவார்கள்? இப்படிப்பட்ட சூழலில் சிக்கி விட்டோமோ, என்று யோசித்து யோசித்து மூளை சூடானதுதான் மிச்சம். 

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அசோக்கும் அவன் தம்பிகளும் வந்தார்கள். அவர்கள் இருவருக்கும் ஆம்னி வண்டிகள் இருக்கிறதாம். சாலைகள் அடைப்பட்டு போனதால் அங்கங்கு நின்றுவிட்ட டூரிஸ்ட்டுகளை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று சேர்த்ததில் நல்ல வருமானம் கிடைத்ததாம். சொல்லி மகிழ்ந்தார்கள். 

அசோக்கின் தாயார் அனைவருக்கும் உணவு பரியாமறினாள். அவர்கள் எத்தனைதான்  அன்போடு கவனித்தாலும் ஸ்ரீஹரிக்கு மனதின் ஒரு மூலையில் பயம் கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆபத்தை எதிர்பார்த்திருந்தது. அன்று முழுவதும் அங்கேயே கழித்தார்கள். மறுநாள் காலை பொழுது விடிந்தது. அவர்கள் குடும்பம் ஸ்ரீஹரியின் குடும்பத்தை சொந்த மனிதர்களைப் போல் நடத்தினார்கள். தம்மிடம் இருப்பதை அன்போடு பகிர்ந்து கொண்டார்கள். அன்று மதியம் அசோக் ஒரு செய்தியோடு வந்தான். 

நூறு மீட்டர் வரை சாலை அறுந்து துண்டாகி விட்டதாம். ராணுவத்தினர் களத்தில் இறங்கியுள்ளார்கள். சாலையின் அந்தப் பகுதிவரை வாகனங்களில் டூரிஸ்ட்டுகளை அழைத்துச் சென்று இறக்கி விட்டால், டூரிஸ்ட்டுகள் அறுபட்ட அந்த சாலையை நடந்து கடந்து விடுவார்கள். மறுபுறத்தில் வாகனங்கள் தயாராக இருக்கும்படி ஏற்பாடு செய்துள்ளார்கள். 

ஸ்ரீஹரிக்குப் போன உயிர் திரும்ப வந்தாற்போல் இருந்தது. இன்னொரு பிரச்னை நினைவுக்கு வந்தது. “அசோக், நான் மீண்டும் ரயிலுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்னிடம் உள்ள பணம் போதாமல் போகலாம். என்னிடம் கொஞ்சம் தங்க நகை  உள்ளது. அதை எடுத்துக் கொண்டு எனக்கு பணம் தருவீர்களா?” என்று கேட்டான். மேலும்  அவனிடம் உதவி கேட்பதை எண்ணி வெட்கத்தால் அவன் உயிர் துடித்தது. 

“என்ன சார் இப்படிக் கேட்கிறீர்கள்?” என்று கூறி அசோக் வருத்தப்பட்டான். “உங்களுக்கு வேண்டிய பணத்தை நான் தருகிறேன். நீங்கள் வீட்டுக்குச் சென்றபின் திரும்ப அனுப்புங்கள்” என்றான். 

மறுநாள் காலையில் பிரயாணம். அசோக்கின் தாயார் பரோட்டா செய்து பரிமாறினாள். வழியில் சாப்பிடுவதற்கு கொஞ்சம் பரோட்டக்களை கட்டிக் கொடுத்தாள். கண்ணீரோடு அவளுடைய பாதங்களைத் தொட்டு வணங்கினாள் சாரதா. அவளை ஆதரவோடு அருகில் அணைத்து தலையை வருடினாள் அந்தத் தாய். ஸ்ரீஹரி அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்தான். அனைவரும் வாயில் வரை வந்து அதிதிகளை வழியனுப்பினார்கள். 

பேருந்து நிலையத்தில் ஒரே பரபரப்பாக இருந்தது. ராணுவத்தினர் நிலைமையை செம்மைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளோடு இருந்த குடும்பத்தினருக்கு முதலில் இருக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அந்த விதத்தில் ஸ்ரீஹரியின்  குடும்பம் பேருந்தில் ஏறியது.  

அசோக்கை நன்றியோடு அணைத்து கொண்டான் ஸ்ரீஹரி. “ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள், சார். வீட்டுக்குச் சென்றவுடன் கடிதம் எழுதுங்கள். எங்கள் வீட்டில் உங்களுக்கு ஏதாவது அசௌகரியம் எற்பட்டிருந்தால் எங்களை மன்னியுங்கள்” என்று அவன் கூறியபோது ஸ்ரீஹரியின் இதயம் கனத்தது. 

“சரியான நேரத்தில் தெய்வம் போல் வந்து உதவினாய் அசோக். என்னை நம்பிப் பணமும் கொடுத்துள்ளாய். நான் திரும்ப கொடுப்பேனோ மாட்டேனோ என்ற சந்தேகம் உனக்கு எழவில்லையா?” என்று கேட்டான் ஸ்ரீஹரி. 

“இது என்ன பேச்சு சார்? வயிற்றுப் பிழைப்புக்காக சண்டை போடுவோமே தவிர,  நம்பியவர்களை ஏமாற்றும் குணம் எங்கள் ரத்தத்தில் இல்லை சார். உங்களுக்கு உதவியதைப் பற்றிக் கூறுகிறீர்களா? ஆபத்தில் இருக்கும் போது ஒருவருக்கொருவர் உதவியாக இல்லாவிட்டால் இந்த மனிதப் பிறவி எதற்கு சார்?” என்றான் அசோக்.   

“வீட்டுக்குச் சென்றவுடன் பணம் அனுப்புகிறேன். நீ எப்போதாவது ஹைதராபாத் வந்தால் எங்கள் வீட்டிற்குக் கட்டாயம் வரவேண்டும்” பாசத்தோடு கூறினான் ஸ்ரீஹரி.

“அத்தனை தூரம் நாங்கள் வருவது இயலாது, சார். நீங்கள் மீண்டும் ஒருமுறை வாருங்கள். என் ஜீப்பில் லேஹ், லடாக் எல்லாம் அழைத்துச் செல்கிறேன்” என்றான் அசோக். 

பேருந்து ஹாரன் ஒலித்தது. மற்றொருமுறை அசோக்கின் கைகளைப் பிடித்து நன்றி தெரிவித்த பின் பஸ் ஏறினான் ஸ்ரீஹரி. 

பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நெருக்கியடித்துக் கொண்டும் வாக்குவாதம் செய்து கொண்டும் வழி நெடுகிலும் ஒரே சலசலப்பு. பேருந்திலிருந்து இறங்கி மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு கால்நடையாக சாலை உடைந்த அந்தச் சிறிய தூரத்தைக் கடப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்தது. இராணுவத்தினரின் கண்டிப்பும் விரட்டலும் இல்லாவிட்டால் அதையும் கடந்திருக்க முடியாது. மீண்டும் பேருந்தில் ஏறி 

பதான்கோட்டை ரயில் நிலையத்தை அடைந்தார்கள். டிக்கெட்டைக் காண்பித்ததில் பாதி பணம் திரும்பக் கிடைத்தது. மீண்டும் டிக்கெட் வாங்கிய போது ரிசெர்வேஷன் கிடைக்கவில்லை. வெயிடிங் லிஸ்ட் தான் கிடைத்தது. அன்று முழுவதும் வெயிடிங்  ரூமில் தங்க வேண்டி வந்தது. அங்கு தூய்மையாகவே இல்லை. 

ரயில் வந்ததும் டிசியிடம் கெஞ்சி, கொஞ்சம் தொகை செலவு செய்த பின்னர் பரிதாபப்பட்டு இரண்டு படுக்கைகள் ஒதுக்கினார். ரயிலில் ஏறிப் பார்த்தால் பெருமளவு இடங்கள் காலியாக இருந்தன. மூட்டைகளைச் சுமந்து வந்த கூலி கூட, அவன் பங்குக்கு அதிகக் கூலிக்காக ஸ்ரீஹரியிடம் சண்டைக்கு வந்தான்.  

ரயில் இருக்கைகளின் கீழே கடலைத் தோலிகளும், எச்சில் டீ கப்புகளும் கிடந்தன. ஆனால் ஸ்ரீஹரிக்கு எரிச்சல் எழவில்லை. எது எப்படியாயனாலும், ‘மேரா பாரத் மகான். என் பாரதம் சிறந்த பாரதம்’ என்று எண்ணிக் கொண்டான். மகிழ்ச்சியாக இருக்கையில் சாய்ந்தமர்ந்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். 


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.