நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும்

ஆங்கிலத்தில்: Siobhan Leddy

தமிழாக்கம் : வெங்கட் ப்ரசாத்

கற்கால மனிதன் ஒருவன் புதர்களுக்குள் பதுங்கி, தன் கவனத்தை ஈர்க்கும் ஒன்றுக்காக காத்திருக்கிறான். மிக சிறிய அசைவு ஒன்று அவனின் இரத்த வேட்கையை, எப்படியும் அடைந்து விட வேண்டும் என்ற என்றுமுள ஆசையை அவனுள் தொடங்கி வைக்கிறது. தனக்கும் இரைக்கும் இடையில் உள்ள தூரத்தை சரியாக கடக்கும் ஒரு ஆயுதத்தை – ஒரு அம்போ, ஈட்டியோ – அதை நோக்கி எறிகிறான். குறியை சரியாக அது வீழ்த்துகையில், இரண்டு விஷயங்களை அவன் அடைந்திருப்பான் 

  1. அன்றைய பொழுதுக்கான உணவு 
  2. மிக முக்கியமான ஒன்று – வெற்றி 

வழமையான ஞானம் சொல்வது போல், மனித வரலாறு என்பது வன்முறையின், இரக்கமற்ற போட்டிகளின் கதையே ஆகும். இனமோ, அரசியல் தலைமையோ அல்லது முரணப்படும் கருத்தியலோ – எதுவானாலும் ஒன்று பிறிதொன்றை வென்று மேலே செல்வதே வரலாறு என்று ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோம்.  மரபு வழியாக நமக்கு மனித வரலாற்றை பற்றி தொடர்ந்து கூறப்படும் கருத்து – குகை மனிதன் – அது எப்பவும் ஒரு ஆண் தான் – கடினமான ஒரு நாளுக்கு  பின் ஒரு காட்டு எருமையோ, மானோ தோளில் தூக்கியப்படி வருவான். அவனுடைய அபிமான மனைவியும் குழந்தைகளும் நெருப்பை சுற்றி அமர்ந்திருக்க, தன்னுடைய வீர பராக்கிரம  பிரதாபங்களை விவரிப்பான். கொண்டு வரப்பட்ட உணவின் முக்கியத்திற்கு சற்றும் குறைவில்லாதது சொல்லப்படும் அந்த கதை. இப்படியாக, காலவரிசைப்படி சொல்லப்பட்ட கதைகளே வரலாறு என்று நாம் அழைக்கிறோம்.(அதனால் தான் ஏனோ ஜெர்மன் மொழியில் வரலாறும் கதையும் ஒரே சொல்லால் சுட்டப்படுகிறது – Geschichte கெஷஷ்ட்ட)  

வரலாறும் வீரமும் கலந்த இந்த தெளிவில்லா சங்கமம், கோலோச்சிய பெரிய மனிதர்களை குறித்த கோட்பாடுகளையும், இரண்டாம் உலகப் போரை பற்றிய உண்மையாகவே புரிந்துக்கொள்ள முடியாத எண்ணிக்கையில்லா ஆவணப்படங்களையும் கொடுத்துள்ளது.   மேலும், பருவநிலை மாற்றத்தை குறித்த நம்முடைய முழுமையற்ற சமீபத்திய  மதிப்பீட்டை விளக்கவும் செய்கிறது. முதலாளித்துவம் நம்மை நான்கு வெவ்வேறு விஷயங்களில் இருந்து அந்நியப்படுத்துகிறது. 

  1.  சுயம் 
  2.  மற்றவர்கள்  
  3.  உழைப்பின் பலன் 
  4.  இயற்கை

ஒவ்வொன்றோடும் நாம் முரணப்பட்ட உறவை வளர்த்துக் கொள்கிறோம். “இயற்கை” (கட்டமைக்கப்பட்ட, காலத்திற்கு ஏற்றாற் போல் மாறிக்கொண்டே இருக்கும் பொருளுடைய சொல்) என்பது நம் கட்டுப்படுத்தக் கூடிய, கட்டுப்படுத்த வேண்டிய ஒன்று; மாறிக்கொண்டே இருக்கும் நதிகளின் பாதைகள் மாற்றப்படுகின்றன, மரபணுக்கள் மாற்றப்படுகின்றன, கச்சா எண்ணெய் எரிப்பொருளாய் மாற்றப்படுகிறது. 

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கணிக்க முடியாத விளைவுகள் நம்முடைய சிந்தனையை உண்மையில் பாதித்திருக்க வேண்டும். உருகும் பனிப்பாறைகள், சிதைந்து வரும் சுற்றுச்சுழல் என மனித நடவடிக்கையால் உண்டான பேரழிவுகள் நமக்கு உணரத்துவது – இயற்கையை கையாள நமக்கு இன்னும் தெரியவில்லை என்பதே. இருந்தாலும் எப்போதும் போல் – மனிதன் வெல்வான் கண்டிப்பாக வென்றாக வேண்டும். கிரீன்லாந்து நாட்டின் பரப்பளவு கொண்ட கண்ணாடியை விண்வெளிக்கு அனுப்புதல், மிகுதியான sulphur dioxide  வானில் செலுத்துதல் என இந்த பிரச்சனைக்கு ஓட்டுப்போடும் மனித அகங்காரத்தின் முயற்சி பல்வேறு தீவிரத்தன்மைகளில் வெளிப்படுகின்றன. பண்டைய நெருப்பு சூழ் அமர்வுகள் தற்போது மாநாடுகளாய் மாறி இருக்கலாம் – ஆனால் அதன் அடிநாதம் – வீரக் கதை பேசுதல் என்பது அப்படியே இருக்கிறது.

உலகை கட்டமைத்து, மீள் கட்டமைக்கும் ஒரு வழியாக கதை சொல்லல் பயன்படுத்தப்படுகிறது. கதைகளால்  யதார்த்ததை கொண்டு வர முடியும்.

கதை சொல்லலின் ஆக சிறந்த உருவாக்கத்திறன் மாயாவாத புனைவுகளிலே வெளிப்படுகிறது. மாயாவாத புனைவு என்பது சமகால நிகழ்வுகளை, யதார்த்தங்களை கச்சா பொருளாக கொண்டு படைக்கப்படும் ஒரு படைப்பு. 2018 ல், 88 வயதில் காலமான மாயாவாத புனைவெழுத்தின் முன்னோடியான அர்ஸுலா லெ க்வின் (Ursula Le Guin) தனக்கே உரிய, பொது  சட்டகத்தில் அமையாத பெண்ணியவாத, காலனியாதிக்க எதிர்ப்பு கருத்துக்கள்  ஊடுபாவாய் நிறைந்துள்ள தீரமான, உலகமே அதிசயிக்கும் வகையில் புத்தகங்களும் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.  அவருடைய பிரபலமான நாவலான  – “வெளியேற்றப்பட்டவர்கள்” (The Dispossessed) லில் – அதிகார, வர்க்க பேதமற்ற, முரண்களும், சிடுக்குகளும்  கலந்த சுதந்திரமான சிறு நிலத்தை (கிரகத்தை) கற்பனை செய்கிறார். ஹெநர்ஸ் (Annares) என்கிற அந்த கிரகத்தில், சிறைச்சாலைகள் கிடையாது, விருப்பமிருந்தால் வேலை செய்யலாம், எதன் மீதும் உரிமை கொள்ளுதல் நிராகரிக்கப்படும். இப்படியாக இருந்தும், இது யாவையும் மீறி அங்கே பேராசையும் அதிகாரமும் ஆட்சி செய்கிறது. ஒரு புத்தகம் உரக்க சிந்திப்பது போல் தன் எழுத்தின் வழியாக பல விதமான உண்மைகளை தேடி கண்டுபிடிக்க முயல்கிறார். திறந்த மனது, பெருந்தன்மை, தவறானாலும் புது முயற்சிகளை கைவிடாமை, புலனாய்வு திறன், தீமையற்ற உலகத்தை விரும்பும் பேராளுமையாக  லெ க்வின் திகழ்வதை அவருடைய எழுத்துக்கள் காட்ட முயல்கிறது. 

1986 ஆண்டு “புனைவுகள் எனும் பைகள்” (The Carrier bag Theory of Fiction) கட்டுரையில், மனிதனின் முதல் ஆயுதம் ஈட்டி அல்ல அது ஒரு பை ஆக தான் இருந்திருக்க முடியும் என்கிறார்.  வெறும் கையில் எடுத்துக்கொள்ளுவதை காட்டிலும் ஒரு பையோ பாத்திரமோ இருந்தால், பின் வரும் நாட்களின் தேவைக்கும் ஏற்ப எடுத்த செல்ல முடியும் என்பதால் பையே ஈட்டியை விட முதன்மையான ஆயுதம் என்று நிறுவுகிறார். தீவிர குளிர் பிரதேசங்களான ஆர்க்டிக் போன்ற இடங்களில் வேண்டுமானால் இறைச்சி பிரதான உணவாக இருந்திருக்கலாம், மற்றப்படி கற்கால, வரலாற்றுக்கு முந்தைய காலம் வரை அறுபத்துஐந்து முதல் எண்பது சதம் மக்களுக்கு  சேகரிக்கப்பட்ட உணவே பிரதான உணவாக இருந்திருக்கிறது என்கிறார்.

இந்த “பை” கோட்பாடு, ஏற்றக்கொள்ள கூடியதாக மட்டுமில்லாமல்  ஒரு அர்த்தமுள்ள கருத்தியல் மாற்றத்தையும் முன் வைக்கக்கூடியதாக இருக்கிறது. மனிதக் குலத்தின் அடிப்படைகளை ஆதிக்கத்தின் பார்வையில் இருந்து  சேகரித்தல், பாதுகாத்தல், பகிர்தல் என்கிற பார்வைக்கு நகர்த்துகிறது.  இப்பார்வை ஒரு ஆறுதலான அரவணைப்பை தந்தாலும் காலியான வெற்று பாத்திரம்/பை பல விஷயங்களை கொள்ளும் என்றாலும் அதற்கே உரிய குழப்பங்களும் முரண்களும் இருக்கத்தான் செய்கிறது. 

லெ க்வின் காட்டும் இந்த பை உருவகம் – ஆதி மனிதர்களை குறித்த கதை என்பதை தாண்டி கதை சொல்லுதலில் ஒரு புதிய முறை – சொல்லப்போனால் வரலாறை சொல்லுதலில் புதிய முறையை தொடங்கி வைத்திருக்கிறது. நேர்க்கோட்டில் செல்லும் ஒரு ஈட்டி போலன்றி, மேற்குலகம் சொல்லும் நேர்நிலையான காலமும் நேரமும் போலில்லாமல் – வரலாறு என்பது பைக்குள் இருக்கும் பொருட்கள்  போல – ஒன்று இன்னொன்றோடு பிணைந்து, முயங்கி  குழம்பிய, தெளிவில்லாத ஒரு பெரிய சித்திரமாகும்.  லெ க்வின் தனது புத்தகத்தில் வரும் கற்பனை பிரபஞ்சத்தில் நிகழும் தற்காலிகத்தன்மை குறித்து சொல்லுகையில்- “ஹைனிஷ் வம்சத்தை சேர்ந்தவர்களின் கால நேரம் என்பது தீராத ப்ரமைகளை உண்டாக்கும் LSD (Lysergic Acid Diethylamide) மருந்தை உண்ட சிலந்தி பின்னிய வலை போலிருக்கும்” என்கிறார்.  

இந்த தெளிவற்ற பாதை என்கிற கருத்தியல் எல்லா வகையான அரசியல் நிகழ்வுகளையும் ஒன்றோடு ஒன்று  முடிச்சிட வேண்டிய அவசியத்தை இல்லாமல் ஆக்குகிறது. சிக்கலுக்கும், முரண்பாட்டிற்கும், வித்தியாசங்களுக்கும் – இவை அனைத்தும் ஒன்றாக ஒரே நேரத்தில் இருப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது.  தொடர் வெற்றிகளின் பார்வையில் இருந்து வரலாற்றை பார்க்காமல், ஒரு புதிய தீவிர கோணத்தை முன்வைக்கிறது. இந்த “பை” கோட்பாடு கண்டுப்பிடிப்பு “மனித கலாச்சாரத்தில் இப்படி ஒரு பணிவோடும் , சமநிலையோடும் என்னை  இதற்கு முன் உணர வைத்திருக்கவில்லை ” என்கிறார். “தாக்கவும், கொலைசெய்யவும் பயன்படுத்தப்படும்  ஆயுதங்கள் வரலாற்றில் இருந்து தன்னை அந்நியப்படுத்தவதோடு மட்டுமில்லாமல், தன்னை ஒரு குறைப்பாடுள்ள மனிதனாக அல்லது மனிதனே இல்லை” என்ற நிலையை உணரவைப்பதாக கூறுகிறார். 

முதல் பார்வைக்கு (அல்லது வாசிப்புக்கு) இந்த “பை” வகையான கதைகள் சுவாரசியம் கொடுப்பதில்லை. 

வளைந்து நெளிந்து செல்லும் இந்த கதை சொல்லில் கதாநாயகன் என்றும் யாருமில்லை. மாறாக, தன்னளவில் சமமான முக்கியத்துவத்துடன்  பல கதாநாயகர்கள் இருக்க இடமளிக்கிறது. கதை சொல்லவோ, புனைவாக எழுதவோ இது ஒரு கடினமான பாதை என்பதில் மறுப்பில்லை. ஆனால் யதாரத்தில், பல முக்கிய சமூக மாற்றங்கள் கூட்டு முயற்சியின் விளைவாக மலர்ந்த ஒன்றாகும். ஆனால் இப்படிப்பட்ட பரவலான பங்களிப்பை நினைவுக்கொள்ளவோ, எடுத்துசொல்லவோ நம்மால் இயல்வதில்லை. சமரசங்கள் வழியே முன்னகரும் இந்த நத்தை பாதையை அறிவதில் பெரும்பாலும் நமக்கு விருப்பமில்லை.   

இந்த ஒற்றை  கதாநாயகன் கருதுகோள் – முன்னோடிகள் மற்றும் மீட்பர்கள் என்ற நாம் யாவரும் அறிந்த வரலாற்று அதிகார உறவை மீட்டு எடுக்கிறது. பொங்கி நிறைந்து வழியும் தன்னம்பிக்கை உடைய இத்தகைய ரட்சிப்பாளர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே – அதிலும் வெள்ளைக்கார்களாகவே தான் இருப்பார்கள். இந்த ஒற்றை பிம்பத்தை முன்னிறுத்தும் போதே மற்றவர்களை பாதிக்கப்பட்டவர்களாக, காப்பாற்றப்பட வேண்டியவர்களாக மாற்ற வேண்டியிருக்கிறது. “இனி கதாநாயகர்கள் இல்லை” (No more heroes) என்ற புத்தகத்தில் ஜோர்டன் ஃப்ளாஹெர்டி   “ஒரு விதமான சிறப்புச் சலுகையோடு  உருவாக்கப்படும் 

இந்த கதாநாயக பிம்பங்கள் உலகத்தின் எல்லா கேள்விகளுக்கும் தங்களிடத்தில் பதில் இருப்பதாகவும், பிறரை காப்பாற்ற தேவையான திறமைகளும் இருப்பதாகவே கட்டமைக்கப்படுகிறார்கள்”    

மாறாக, கதாநாயகர்கள் இல்லாத இந்த “பை” வகை மாதிரி கதைகள், கூட்டு சமூகத்தின் ஒட்டுமொத்த பணியை பறைசாற்றும். வால்டர் பெஞ்சமின் காண்பிக்கும் “மறுசுழற்சியாளர்” (Ragpicker)  – முடிவற்ற தொடர் மறுபயன்பாட்டில் இருப்பவர். பாலி இசைக்கருவி gamelan பாதிப்பில் உருவாக்கிய தாள வாத்தியங்களை பயன்படுத்திய ஜான் கேஜ் (John Cage)  போல பல்வேறு மரபுகள், கலாச்சாரங்களில், பண்பாட்டின் பாதிப்பில் உருவாகி ஆனால் அதைத் தங்களின் தனித்துவமாக பிரதிபலிப்பவர்கள். மாறாக  “பை” வகை மாதிரிகள் – தனித்த மேதைகள் அன்று – பலரின்/பலவகையான பங்களிப்புகளை ஏற்றுக்கொள்ள கூடியவர்கள். 

இயற்கையை நமது எதிரியாக கருத வேண்டிய தேவையில்லை. பருவநிலை மாற்றம் என்பதை நாம் வெல்ல போவதும் இல்லை. மரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என வசுதைவ குடும்பகத்தில் ஒன்று பிறிதின் மேல் ஆதிக்கம் கொள்வது என்பது அழிவை அருகில் அழைப்பதாகும். தொடர்ந்து பிறிதை அழித்து வர, அதோடு சேர்ந்து நாமும் அழிந்து போவதே இறுதியில் நிகழக்கூடியது.

லெ க்வின் எழுத்துக்களால் பாதிக்கப்பட்ட சமூக கோட்பாட்டாளர் டோனா ஹார்வே – “கதைகள் எப்படி கதைகளை சொல்கின்றன”   என்பதே மிக முக்கியமான ஒன்று என்கிறார். பருவ நிலை மாற்றம் என்பது தனி மனித பிரச்னை மட்டுமல்ல –  ஒரே நேரத்தில், எல்லா வகை உயிரினங்களையும் ஒருங்கே தாக்கக்கூடிய அபாயம். நமக்கு இப்பொழுது தேவைப்படும் கதை என்பது – வீர சாகசங்கள் இல்லாத, சமூக சிந்தனையோடு, மாற்று அரசியல் பார்வையும் கலந்த, மனிதன் மட்டுமின்றி, எல்லா உயிர்களுக்கும் இடமளிக்கும் கதை. இந்த கதையில் காலம் என்பது  தொடக்கம், முடிவு என்ற நேர்க்கோட்டு பாதை அல்ல, இங்கே பல்வேறு காலங்கள் தங்களின் கடந்த கால மற்றும் எதிர்க்கால செயல்கள் நிகழ்க்காலத்தோடு சேர்ந்து நடத்தி வருகிறது. இயற்கை என்பதை தனிப்பிரிவாக, மற்றொன்றாக கருதாமல், அதனின் ஒரு பகுதியே நாம் என்று நமக்கு உணர்த்துகிறது. இந்த பருவநிலை மாற்றக் கதையில் யாரும் வெற்றி பெறப்போவதில்லை ஆனால் சற்றே வேறோர் பார்வையில் சிந்திக்க, சொல்ல தொடங்கினால் நம்மில் பலர் வாழ முடியும்.  

மூலம்: https://theoutline.com/post/7886/ursula-le-guin-carrier-bag-theory 


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும்”

  1. 1. கட்டுரையின் முதற்கோள் /*உலகை கட்டமைத்து, மீள் கட்டமைக்கும் ஒரு வழியாக கதை சொல்லல் பயன்படுத்தப்படுகிறது. கதைகளால் யதார்த்ததை கொண்டு வர முடியும்.*/

    2. அதற்கு ஏன் உர்சுலா சொல்லும் ஏன் வாசிக்க வேண்டும் /*ஒரு புத்தகம் உரக்க சிந்திப்பது போல் தன் எழுத்தின் வழியாக பல விதமான உண்மைகளை தேடி கண்டுபிடிக்க முயல்கிறார். திறந்த மனது, பெருந்தன்மை, தவறானாலும் புது முயற்சிகளை கைவிடாமை, புலனாய்வு திறன், தீமையற்ற உலகத்தை விரும்பும் பேராளுமையாக லெ க்வின் திகழ்வதை அவருடைய எழுத்துக்கள் காட்ட முயல்கிறது*/

    3. உர்சுலா சொல்லும் வழி /*இந்த கதாநாயக பிம்பங்கள் உலகத்தின் எல்லா கேள்விகளுக்கும் தங்களிடத்தில் பதில் இருப்பதாகவும், பிறரை காப்பாற்ற தேவையான திறமைகளும் இருப்பதாகவே கட்டமைக்கப்படுகிறார்கள்”. மாறாக, கதாநாயகர்கள் இல்லாத இந்த “பை” வகை மாதிரி கதைகள், கூட்டு சமூகத்தின் ஒட்டுமொத்த பணியை பறைசாற்றும். */

    உர்சுலாவை வாசிப்பதன் வழியாக பார்வைக் கண்ணோட்டம் மாறும் என்கின்றார்கள்.

  2. உர்சுலாவை எனக்கு அறிமுகப்படுத்தியது மதன். ஓமெலாசிலிருந்து கிளம்பிச் செல்பவர்கள் என்ற சிறுகதை, The Left Hand of Darkness என்ற நாவல் இரண்டையும் வாசித்திருக்கிறேன். அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று என்னிடமுள்ளது. அதிலிருந்து ஷ்ரோடிஞ்சரின் பூனை என்ற கதையை மட்டும் வாசித்திருக்கிறேன். பொதுவாக அறி-புனைக் கதைகளில் ஆர்வமில்லை. ஆனால் சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் தொகுப்பு வரிசையில் ஹார்ட் சைன்ஸ் ஃபிக்ஷன் என்ற வகைமையில் வந்த கதைகளை வாசித்த போது எனக்கு அறி-புனைவு வாசிக்கும் ஆர்வம் கூடியது. அப்போதுதான் மதன் உர்சுலாவைப் பரிந்துரைத்தார். நான் வாசித்தவரை அவரது கதைகள் அறி-புனை உலகை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு மனித இயல்புகள் குறித்தான ஆய்வுகளை மேற்கொள்வதாகவே படுகிறது. இத்தன்மை மிகச் சிறந்த இலக்கிய ஆக்கங்களுக்கே உரித்தானது. இருளின் இடதுகை வாசித்த அனுபவம் பரவசமானது. வெங்கட் பிரசாத்தின் இந்த மொழியாக்கக் கட்டுரை அந்த நாவலை மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. அந்த நாவல் எனக்கு ஓர்ஹான் பாமுக்கின் வெள்ளைக் கோட்டையை நினைவுபடுத்தியது.

    ஸியோபான் லெடியை நன்றாக மொழியாக்கம் செய்திருக்கிறார். மிகச் செறிவான வாக்கிய அமைப்பு, நமது பண்பாட்டுக் கூறுகளைக் கையாளுதல் (வசுதைவ குடும்பகம்) என்று அழகாகத் தமிழில் கொண்டு வந்துள்ளார். சிறிய கட்டுரைதான், ஆனால் அடர்த்தியானது.
    தலைப்பு கொஞ்சம் மிஸ்லீடிங்காக உள்ளது (ஆங்கிலத்திலும் அதுதான்). தலைப்பின் அடிப்படையில் இந்தக் கட்டுரையை வாசித்தால் உர்சுலா படைப்புகள் பற்றி ஒரு வரைபடம் கிடைக்கும் என்ற எண்ணம் எழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் கட்டுரை இரண்டு முக்கியமான விஷயங்களைப் பற்றி மட்டும்தான் பேசுகிறது. எப்படி மனிதனுக்குக் கற்காலம் முதல் வீரமும், கதை பாடலும் இணைபிரியாத பண்புகளாக இருந்து வந்துள்ளன என்று விரிவாக விவரிக்கிறது. இயற்கையை மனித இனம் தன் விருப்பத்துக்கு வளைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதைக் குறிப்பிடுகிறது. உலகை மீள் கட்டமைக்கும் வழிகளில் ஒன்றாக கதை சொல்லுதலைக் குறிப்பிடுகிறது.

    உர்சுலாவின் ஒரே ஒரு கதையை (புனைவுகள் என்னும் பைகள்) எடுத்துக் கொண்டு விளக்குகிறது கட்டுரை. இதில் மைய நாயகன் அற்ற கதை சொல்லும் முறையை உர்சுலா கையாண்டிருப்பதாகவும், மாறாக பல கதா நாயகர்கள் இருக்க கதை இடமளிப்பதாகவும் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

    கட்டுரையை வாசித்தவுடன் உர்சுலா பற்றி ஒரு சித்திரம் மனதில் உருவாகுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். உர்சுலா பற்றித் தலைப்பு கொண்ட கட்டுரையில் குகை மனிதர்கள் பற்றிய விபரம்தான் அதிகம் வருகிறது. இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. சில இடங்களில் மொழியாக்கம் சிக்கல் அளித்தது. 2018ல் காலமானது மாயாவாதப் புனைவா அல்லது உர்சுலா என்று ஒரு கணம் நின்று சிந்திக்க வேண்டியிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.