
கி பி 1709 – கி பி 1718
“முத்தழகு! சூரியனே உதிக்கல. எங்க கெளம்பிட்டே?”
“அம்மா! இன்னைக்கு சேர்வை வேல தரேன்னிருக்காரு. கருக்கல்ல போனாத்தனே நல்ல மதிப்பா இருக்கும்!”
“தலையெழுத்துடா உனுக்கு! பொம்பளையா பொறக்காம இந்த குடும்பத்துல இப்படி ஆம்பளையப்பொறந்து அல்லாடறியே!”
“அட என்னம்மா! நீ பட்ட அவஸ்தை போதாதா?”
“டேய் ஒரு காலத்துல நா இருந்த இருப்பென்ன! ஊர்ல இருக்கும் பெரிய மன்சங்க அத்தினி பேரும் சகாயம் செய்ய வருவாங்கடா!”
“நா பட்ட அவமானம், ஏன் நீ பட்டதுகூடத்தான், உனக்கு மறந்து போச்சா? அப்பம் பேர் தெரியாத புள்ளைன்னு என்னா ஏச்சு பேச்செல்லாம் வாங்கியிருக்கறன்1”
“அதாண்டா நீ மட்டும் பொம்பளையா பொறந்திருந்த இந்நேரத்துக்கு வூடு முழுக்க ஆளு படைன்னு விட்ட ராஜ்ஜியத்த புடிச்சிருப்பேனில்ல?”
“ஏன்மா நமக்கு அந்தப்பொழப்பு! கும்பினி தயவுல எதுனா வேல கெடச்சா காலத்துக்கும் கஞ்சி குடிச்சு வாழ்க்கைய ஓட்டிறலாம்னு நா பாத்துக்கிட்டு இருக்கேன். சரி, நேரமாவுதும்மா நா வரேன்!தாமசமா போனா சேர்வை கோவப்பட்டு வேலை கெடையாதுன்னுடப்போறாரு!”
“அதெப்படி சொல்லுவாரு? உனுக்கு வேலை தர அவரு கடமைப்பட்டவருதான்! சரி இருடா! கஞ்சி தாரேன். குட்ச்சிட்டு போயேன்!”
என்ன சேர்வை! வேலைக்கி ஆள் வெச்சுண்டிருக்காப்ல இருக்கே?”
‘ஆமா! நம்ம அலங்காரத்தோட மவன்! ரொம்பக்கஷ்டப்படறா? ஏதோ நம்மால ஆன ஒத்தாசைன்னு..
“ஜமாயும்! அந்தக்காலத்துல அவதானே உமக்கு………..
“ஓய் நாய்க்கரே! இப்ப எதுக்குங்காணும் அதெல்லாம்!
”சேர்வை! நீர்தானே அப்பல்லாம் அலுத்துப்பீர்! எட்டு மாசத்துல இருவது சவரனுக்கு மேல கொண்டு போயிருக்கன். முதுகையே முழுசாப்பாக்கலன்னு அங்கலாய்ப்பீரே!”
சேர்வை குரலைத்தாழ்த்திக்கொண்டு சிரித்தார்.
“நம்ம மிட்டாதார் சங்கரலிங்கம் என்ன சொல்லுவாரு நெனப்பிருக்கா? மாசமாசம் விரக்கடை அளவுக்கு கொண்டு போனா இப்படித்தானாவும். ஒரே தரமா எல்லாத்தையும் எடுத்துண்டு போம்! அப்பறம் பாரும் திவ்ய தரிசனத்தை! செதறிப்புடுவீர் சாமிம்பாரு!”
”அப்பவே சேர்வை உமக்குத்தான் அலங்காரம் தனி மரியாதை தருவான்னு பேச்சு ஓடுமே! உமக்கு இருக்கற செல்வாக்குக்கும் சொத்துக்கும் கம்பீரத்துக்கும் அலங்காரம் தன்னோட அடுத்து தலைமுறைக்கு உங்க வித்து வேணும்னு ஏங்கினாளே அய்யா!”
“ஓஹோ! அலங்காரமே சொன்னாளா உம்ம கிட்ட! அடச்சே! பொரளி பேசாதீங்கய்யா!விடும் அந்தப்பழைய அக்கப்போரை! ஆமா என்னய்யா நடக்குது? நம்ம திருவொத்தியூரை கும்பினிக்கு பட்டயம் எழுதிக்கொடுத்துட்டாராமே நவாபு?”
“ஆரு நவாபா? எந்த ஊர்ல இருக்கீரு? டெல்லி சுல்தானே குடுத்துட்டானாம்யா!”
“என்னது டெல்லி சுல்தானா?”
ஆமாம்யா! ஷா ஆலம்னு சுல்தானே தான்! அவனோட படைத்தளபதி ஸியாவுத்தின் கானுன்னு ஒருத்தர் நம்ம கும்பினி கவர்னருக்கு தோழமையாம். இவரு சிபாரிசு பண்ணதால நம்முது மட்டுமில்ல, அஞ்சு கிராமம்யா! சாதாங்குளம், வியாசர்பாடி நுங்கம்பாக்கம் ன்னு பேச்சு!”
”அப்ப நம்மட்ட கும்பினிக்காரன் வரியப்புடுங்குவானா இன்னமே?”
“சேர்வை! கும்பினியோட யாவாரம் பண்றீரு அப்ப வரியும் குடுமேன்!”
”அதெப்படிய்யா நவாபுக்கு சொல்லாம சுல்தான் குடுத்தாரு?
“சேர்வை! கும்பினிக்காரன் லேசுப்பட்ட ஆளுல்ல. அந்த ஸியாவுத்தீனோட சம்சாரம் மெட்ராசுல கேட்டாங்கன்னு அந்தம்மாளுக்கு 1000 பகோடா கடன் வாங்கிக்கொடுத்திருக்காரு, கவர்னர். அந்த நன்னியில செஞ்சிருக்காங்களாம்!
“நாய்க்கரே! திருவொத்தியூர்ல வெவசாயம் பண்றீங்கன்னுதான் நடப்பு. ஆனா ஒலக சமாச்சாரங்கள்ளாம் தெரிஞ்சு வெச்சிருக்கீரு! பலே ஆளுயா!”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல! எல்லா சேதியும் நம்ம தீட்சிதர்வாள் உபயம்! அவரோட ஒறவுக்காரன் யாரோ மெட்ராசுல கும்பினி வேலையா இருக்கானாமே! சரி சேர்வை, நா கெளம்பறேன். ஊருபட்ட வேல கெடக்கு! சாயந்தரம் கோவிலுக்கு வருவீரா? அப்ப பேசிக்குவம்!”
வாப்பா! முத்தழகு! ஆச்சா தேங்காயெல்லாம் மண்டியில கொண்டே போட்டியா?”.
”ஆச்சுங்கய்யா! கூப்ட்டனப்பினீங்கன்னு…….?”
“த பாரு முத்தழகு! நா உனுக்கு ஒதவி பண்றது உங்கம்மாளுக்காகத்தான்! அவ இருந்த இருப்பென்ன !ஆனா இன்னிக்கு வயசானதும் தேஞ்சு ஓஞ்சு போய்ட்டா. அவளோட வயசுத்தே……நடனக்காரவுங்க பொண்ணு பெத்து அவங்களுக்கு ஆட சொல்லிக்குடுத்து அப்படி இப்படின்னு காசு பார்த்து முன்னுக்கு வண்ட்டாங்க! உங்கம்மா தான் உன்னைப்பெத்துட்டு …..சரி, அது எதுக்கு இப்ப?”
முத்தழகு தலை குனிந்து கேட்டுக்கொள்ள வேண்டியதாகிற்று.
“த பாரு முத்தழகு! நம்ம கிராமத்தையெல்லாம் கும்பினிக்கு குட்துட்டாராம் நவாபு! எனக்கே இன்னமே வேல இருக்குமான்னு சந்தேகந்தான். நானு கும்பினியோட குமாஸ்தாங்கள மடக்கி எதுனா வியாபாரம் பண்ணலாம்னு பாக்கறேன். எனக்கு எடுபிடியா நீ ஒத்தாசையா இருந்தீன்னா எதுனா சம்பளம் போட்டுத்தாரேன். நீயும் அம்மாவும் கஞ்சி குட்ச்சு பொழச்சிக்கலாம், என்ன சொல்ற?”
சரிங்கய்யா! உங்களுக்கு விசுவாசமா இருப்பேனுங்க!”
“ஆமா! ஆசாரிய வரசோன்னேனே இன்னுமா காங்கல?”
“சொல்லீட்டு வண்ட்டேங்க! அவரு சம்சாரத்துக்கு மேலுக்கு சொவமில்லையாம்! கொஞ்சம் மருந்து வாங்கி குட்த்துட்டு வர்ரேன்னிருக்காரு!”
“ரெண்டு நா மிந்தி கோவில்ல பாத்தேன்! பொண்டாட்டி எங்கியோ திருநாங்கூர் போயிருக்கறதா சொன்னாரே! அதுக்குள்ளாரவா வந்துட்டா?”
“தெர்லக்கா! வாசல்ல பாத்தபோது சின்ன வயசா மொகத்தை மூடிக்கினு ஒரு பொண்ணு இருந்திச்சு. அவரு மவளாங்காட்டியும்னு நெனச்சேன்!”
“ஓஹோ ஆசாரி வெளையாடறாரு போல! சரி விடு வரட்டும்!”
“என்னங்க இப்ப ஆசாரி? எதுனா மர வேலை செய்யப்போறமா நம்ம வூட்டுக்கு?”
“ஆமாண்டி நான் இருக்கற இருப்புக்கு அதான் ரொம்ப அவசியம்? நவாபும் கும்பினியும் எப்படா ஆரமிக்கலாம் சண்டையன்னு கோதாவுல நிக்கிறாங்க! என் துட்டு ஆயிரத்துக்கும் மேல கோட்டைய்ல பாக்கி நிக்கிது! கேட்டா அந்த குமாஸ்தா அய்யரு இப்போ அப்போன்னு சொல்லிக்கிட்டே இருக்காரு! நாலு நடை கோட்டைக்கு போய் வந்து அய்யருக்கு பலகாரம் வாங்கித் தந்ததுதான் மிச்சம்!”
“என்னாங்க இது!நம்மூருக்கே சண்டை வந்துருமா?”
“நெலமை சரியா இல்லடி! தீட்சிதரு சாயங்காலமா வருவாரு. கேக்கணும்!”
“வணக்கம்! சேர்வையாரு கூட்டு விட்டீங்களா? வூட்ல கல்யாணம் வருதா? எதுனா கட்டில் செய்யப்போறீங்களா?”
“வாய்யா ஆசாரி! ஆமா எனக்குத்தான் சாந்தி முகூர்த்தம்! கட்டிலு செய்யலாமான்னு.. அடப்போய்யா! ஆமா என்ன இப்பல்லாம் பொழுதோடவே வெள்ளாடறீர் போல!”
“ஆட என்னங்க வூட்டம்மாவ வெச்சுக்கிட்டு…?”
“அவ எப்பவோ உள்ள போயிட்டா! இல்லென்னா உம்ம லீலைகள் பத்தி தெரியாதா? சரி விடும்! உமக்கு பல்லு இருக்கு! கடிச்சு திங்கறீர்!
ஆசாரி வெட்கம் போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்.
“எதுனா வேலையா சேர்வையாரே?”
ஆமா ஆசாரி! ஒரு வேல இருக்கு! கும்பினிக்காரன் சொல்லி அனுப்பியிருக்கான்! சுங்கு ராமாவோடா ஆள் ஒருத்தன் வந்து முன்பணம் குட்த்துட்டு போயிருக்கான்!”
“என்னா மரவேல ? கோட்டைக்கா?”
“இல்ல ஆசாரி! கொடி மரம் செய்யணூமாம்!”
“அட! எந்தக்கோவிலுக்குங்க?”
“நீ வேற! நம்ம நடு மைதானம் இருக்குல்ல, அங்க கும்பினி கொடி நட்டு வெக்கப்போறாங்களாம்!”
“இது என்னங்க புதுசா இருக்கு?”
“போன மாசம் கோட்டைக்குப்போனபோது அய்யரு சொல்லிட்டிருந்தாரு! நம்ம அஞ்சு கிராமம் இருக்கு பத்தியா?”
“எதுங்க? திருவொத்தியூர், வியாசர்பாடி சாத்தாங்காடெல்லாமா?”
“ஆமா கூடவே நுங்கம்பாக்கம் அப்றம் கத்திவாக்கம் அல்லாத்தையும் டெல்லி சுல்தான் கும்பினிக்கு எழுதிக்குடுத்த்துட்டாராம்!”
அடக்கிரகாசாரமே! கும்பினின்னா வரி போடுவாங்களே!
ஆமா ஆசாரி! ஆனா நம்ம கர்நாடிக் நவாபு மொரண்டு பிடிக்கிறாராம்!”
“அதெப்பிடிங்க! பெரிய சுல்தான் சொன்னா இவர் கேட்டுதானே ஆவணும்?
அதென்னமோ சரிதான்! ஆனா இவுரு பணம் எதிர்பார்ப்பாரு! இவருக்கு காசு குட்த்துட்டா கம்முனு போய்டுவாரு!
“அதுக்கும் கொடிக்கு என்ன சம்மந்தம்?
“கும்பினியா சும்மாவா? அவன் நட்ட நடு மைதானத்துல பெருசா கொடிக்கம்பம் வெச்சு கும்பினியார் கொடியைப்பறக்க விடப்போறானாம்!”
நெல்லதுதானுங்களே?
என்ன ஆசாரி நல்லது நமக்கு?
உங்களுக்கு கும்பினி வியாவாரம்! எனுக்கு கூலி! நெல்லதுதானுங்களே?
“ஆசாரி! நீ என்னாண்ட கழுத்துல கத்தி வெச்சு காசு வாங்கிக்கினு போய்டுவே? எனுக்கு அங்க கோட்டையில தம்பிடி பேறாது! ஏழெட்டு தபா வண்டி கட்டிக்கினு அங்க போய் வர்ரது, குமாஸ்தா அய்யருக்கு பலகாரம் செலவுதான் மிச்சம்!அடப்போ ஆசாரி! காசு பொரளாம என்ன யாவாரம் வேண்டுகெடக்கு!”
சரிதாங்க! ஆனா கும்பினி வேலையாச்சுங்களே!உங்களால மறுக்க முடியாதே?’
அதேதான்! சரி செஞ்சு தந்துருங்க!”
மரம் எங்க எடுக்க? சந்தனமா, வில்வமா இல்ல மகிழமா?”
“என்ன பொல்லாத கோவில் கொடி மரமா செய்யப்போறம்? சாதா மரம் சொல்லுங்க ஆசாரி!
“அப்ப பலா இல்ல மாமரம் எடுத்துக்கிடலாமா?”
“ஆசாரி! இன்னம் சல்லீசா சொல்லுமேன்!’
“வேற என்னங்க இருக்குது? பனை ஆவாதுங்க! அத்தினி உசரம் முறிச்சுக்கும்! கமுகு இல்ல தென்ன தான்!”
அதுலயே செய்யுங்க!
“கோட்டையில உண்மையான மரத்த சொல்லிடுங்க! அந்த குமாஸ்தா அய்யரு வெவரமான ஆளு! கும்மோணத்துக்காரு! கண்டு பிடிச்சு கும்பினியாண்ட சொல்லிப்போட்டாருன்னா இங்க என்னைய வீறிப்பிடுவாங்க!”
அவரு ஏன் கும்பினியாண்ட சொல்லுவாரு! நம்மள பயங்காட்டியே தன்னோட வூட்டுக்கு கட்டில் மேஜைன்னு செய்துக்குவாரு! சரி கொடிக்கம்பம் என்ன உசரம் வெப்பீங்க?
“அது என்னங்க பெரிய உசரம்! ஒத்தப்பனை மரம் உசரம் போதுங்க! என்ன, மரம் வாங்கும்போது பூமிக்கு மேல் உசரத்தைவிட அஞ்சில ஒரு பங்கு அதிகம் வாங்கணூம். என்னா பூமிக்கு அடியில வெக்கணுமில்ல, அப்பதானே திரமா இருக்கும்!”
“ஆசாரி! உசரத்தை பாத்து வெய்ங்க! நம்ம கோவிலு கோபுரத்தவிட உசரமா வெச்சுடாதீங்க! நமக்கு ஏன் தெய்வ பொல்லாப்பு!”
அதெல்லாம் நா செய்வேனுங்களா? நாமளே மைதானத்துல நட்டு தரணுமா?
ம்ஹும் வேணாம்! அதெல்லாம் கும்பினிகாரவுங்க செஞ்சுக்குவாங்க!
சரிங்க!அய்யா பாத்து…எதுனா……
“என்ன முன்பணமா? சரி சரி கூடவே மரத்துக்கும் சேர்த்து வாங்கிப்போங்க! நல்ல மரமா எடுங்க ஆசாரி! காத்துல கீத்துல வுழுந்து போச்சின்னா நம்ம தலை உருளும்!”
அதெல்லாம் நான் நெல்லா கவனிச்சு செய்யறேங்க. என் வேலையில கொறை வெப்பேனுங்களா? அப்புறம் நம்ம வீட்டுப்பின்புறம் கொஞ்சம் பழைய மரம் வெச்சிருக்கீங்களே. அத்த குட்த்தனுப்புங்க! கொடிக்கம்பம் செய்யும்போது உள் வேலைக்கி, இழைக்க அறுக்க கொள்ள, முட்டு கொடுக்கன்னு கட்டைங்க தேவைப்படும்!”
“என்னப்பா என்னாண்டயே காசு வாங்கி மரம் கொள்முதல் பண்ணிட்டு என்னையவே மரம் தரச்சொல்றே?
அடேடே! ரொம்ப இல்லீங்க! சுத்து வேலைக்கு மரம் தேவையிருக்குதுங்களே! அதுதானுங்க. நீங்க இத்தோட வெலைய கூலியில கழிச்சுக்குங்க, சேர்வையாரே!
“சரி சரி! முத்தழகு. வந்தவுடனே மாட்டு வண்டியில போட்டு அனுப்பிர்ரேன்!
”சரிதாங்க! நான் வரட்டா?”
ஆமா என்ன ஆசாரி! பொண்டாட்டி ஊருக்கு போயிருக்கறதா சொன்னீங்க!”
ஆமா திருநாங்கூர் வரைக்கும். அவ தங்கச்சி புருஷனுக்கு ஒடம்புக்கு நோவுன்னு கூப்ட்டனுப்பினா. துணைக்கு ஆளு ஆம்ட்டுது அனுப்பியிருக்கேனுங்க!
ஆனா இங்க வேற விருந்து போவுது போலருக்கே?
அய்யா! நீங்க பெரிய மனிசங்க! உங்க காதுக்கு இந்த சேதி வரணூமா! அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க! தம்பி பொண்டாட்டி சமைச்சு போட வந்துருக்கா! ஊருக்கு பொறுக்கல. கதை கட்டி வுடறானுங்க! நா வரேங்க!”
ஆசாரி சரேலென நடை கட்டினார்.
சேர்வை முத்தழகைக்கூப்பிட்டு அனுப்பினார்.
“முத்தழகு! நீ போய் நம்ம வீட்டுப்பின்புறத்துல தச்சு வேலக்கி மரக்கட்டை அடுக்கியிருக்கு. கும்பினிக்காக ஆசாரிய கொடிக்கம்பம் செய்யச்சொல்லியிருக்கன். அந்த வேலைக்குத்தோதா கொஞ்சம் பழைய மரக்கட்டை கேட்டிருந்தாரு ஆசாரி. நாளைக்கி காலையில மொத வேலையா அதுங்கள எடுத்து மாட்டு வண்டியில போட்டு கஞ்சாமி ஆசாரிவூட்ல கொண்டு போய் கொடு.”
சரிங்கய்யா
ஆசாரி வூடு தெரியுமில்ல? நம்ம மைதானம் இருக்குதே, அதாம்ப்பா கும்பினி ஆளுங்க கவாத்து பழகுவாங்களே அதுதான், அந்த மைதானத்தை கிழக்கால சுத்திப்போனா கடைசி வூட்டுகு முந்தின வூடு. வாசல்ல ஆளுங்க தச்சு வேலை செஞ்சிட்டு இருப்பாங்க, என்ன, போய்ட்டு சுருக்க வந்திரு!”
சரிங்கய்யா!
முத்தழகு கிளம்பிப்போனான்.
அன்று இரவு அலங்காரம் வாசலைப்பார்த்து உட்கார்ந்துகொண்டிருக்க முத்தழகு வந்து சேர்ந்தான்.
“என்னடா இம்மாம் நேரம்? ஆளு கெடச்சா சேர்வை சக்கையாப்பிழிஞ்சுடுவாரு!”
“வேலை ரொம்ப இருந்துதும்மா!
“எப்படி இருக்க வேண்டிய புள்ளைடா நீயி! எல்லாம் என் கெரகம்! போறாத காலம். உன்னைய சேர்வை வூட்டு வேலைக்கி அனுப்பிட்டு நிக்கறேன். இந்த சேர்வையும் மத்தவுகளும் எனுக்கு கால் பிடிச்சுவிட்ட காலம் உண்டு!”
முத்தழகு வெறுப்போடு முகம் சுளித்தான்.
‘சும்மா இரும்மா! அத்தையே பேசிக்கிட்டு! என்ன பெரிய ராஜ பரம்பரையா நம்முது! இழிபட்ட பரம்பரை தானே!
“எம்பொறப்பு அப்படி! நா என்ன பண்ணட்டும்!
“ஒன்னையச்சொல்லைம்மா! எம்பொழப்பு அப்படிப்போய்ட்டுதே! உடம்பு என்னா வலி! சோத்தப்போடும்மா! துன்னுட்டு தூங்கணும்! நாளைக்கு அம்பார வேலை கெடக்கு!”
“வா கண்ணு! சுடு சோறு ஆக்கி வெச்சிருக்கேன்!
இருவரும் சாப்பிட்டு முடித்தவுடன் முத்தழகு பாயில் படுக்க அலங்காரம் அவனுக்கு கால் பிடித்து விட்டாள். மெல்லப்பேச்சு கொடுத்தாள்.
“கண்ணு நா ஒண்ணு சொன்னா கேப்பியா?
சொல்லும்மா
“போன வாரம் கோவிலுக்கு போயிருந்தபோது பட்ணத்து அய்யிரு வந்திருந்தாங்க!
அதாருமா உனுக்கு பட்ணத்து சினேகம்?
சினேகமெல்லாம் இல்லைடா கண்ணு! பூந்தமல்லி ஜமீன் முதலியாரு ஒருத்தர் அப்பல்லாம் வருவாரு. அவரோட வீட்டு கணக்குப்பிள்ளை இவரு. பல சமயம் கூட வருவாரு! எம்மேல ஏதோ இரக்கம். வரும்போதெல்லாம் எனக்குனு அவங்க வீட்டம்மா குடுத்து விடற மருந்தெல்லம் அரைச்சு கொண்ட்டு வருவாரு.
அலங்காரம்! கண்ட கண்ட சேர்க்கை! உடம்பு கெட்டுரும். இந்த லேகியம் சாப்பிடு”ன்னு பாசத்தோட குட்த்துட்டு போவாரு.
சரி அவருக்கென்ன?
அவரு இப்ப வயசாயிப்போயி புள்ளை விட்டோட இருக்காரு. புள்ள கும்பினிய்ல குமாஸ்தாவாம். இப்ப கபாலி கோயிலாண்ட வாசம். அவருதான் பேசும்போது உன்னைய பத்தி சொன்னேன். எங்கூட அனுப்பிடு. எம்புள்ளையோட வீட்ல ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ வேலை செய்யட்டும், அந்த நேரத்துல நா கொஞ்சம் படிப்பு சொல்லித்தரேன். அத்த வெச்சு கும்பினி உத்தியோகம் வாங்கிடலாம்னு ரோசனை சொன்னாருப்பா!
“அடபோம்மா! உன்னைய தனியா விட்டு நா எங்க போறது
என்னைய விடுறா கண்ணு! நா ஆடி ஓஞ்சு போய்ட்டேன். இன்னமே எத்தினி நாளோ! நீ இந்த பாழாய்ப்போன திருவொத்தியூர்ல ஏண்டா கஷ்டப்பட்டு சாவணூம்! ஊர் பேச்சு வேற. அங்க போடா! போயி முன்னுக்கு வா!
திருவொற்றியூரில் இதுநாள் வரை நேர்ந்த அவமானங்களையும் நேரப்போகும் அவமானங்ளையும் நினைத்து மனம் தடுமாறி அலங்காரம் விவரித்த எதிர்கால கும்பினி உத்தியோக கனவு வார்த்தைகள் மனதில் சிறகடிக்க ஒருவழியாக பட்டினம் போக சம்மதித்து முத்தழகும், பிள்ளையின் ஈரமான கன்னங்களை ஆதுரமாக வருடிக்கொடுத்தபடி உட்கார்ந்தவாறே அலங்காரமும் தூங்கிப்போன இரவு!
ஒரு வாரம் கழித்து ஒரு நாள் காலை.
சின்ன வயதில் சேர்வை ஆடின ஆட்டத்தில் உடம்பு சூடு கண்டு அவருக்கு மாதம் ஒருமுறை உடம்பு முழுக்க கட்டிகளாய் வரும். கறுப்பர் டவுனில் ஒருமுறை சேர்வை சந்தித்த ஒரு மருத்துவன் அவரிடம் மூலிகை எண்ணை உபயோகித்து வாராவாரம் தலைக்குளித்தால் சுகமாகும் என்று சொல்லியிருந்தான். அதனால் நெல்லிக்காய், கற்றாழை, மிளகாய்ப்பழம் கருஞ்செம்மைப்பூவெல்லாம் போட்டுக்காய்ச்சிய திடம் எண்ணையில் ஸ்னானம் செய்வார்.
சேர்வை எண்ணை தேய்த்துக்குளித்து தன் குடுமியை காற்றில் ஆற்றிக்கொண்டிருந்தார் . வாசலில் பரபரப்பாய் ஏதோ சப்தம் கேட்க உள்ளிருந்து அதிகாரக்குரல் கொடுத்தார்.
“ஆருப்பா இது? வாசலாண்ட ஓலம்! வூடா இல்ல கடத்தெருவா?”
“சேர்வை!கேட்பீரே! கும்பினிட்ட முன்பணம் வாங்கும்போது குளூமையா இருந்திச்சா?”
வாசலில் ஆஜானுபாகுவாய் கும்பினி உடை அணிந்த இரண்டு சிப்பாய்கள். சேர்வை பதறி அடித்துக்கொண்டு குடுமி பறக்க வாசலுக்கு வந்தார்.
“ஆத்தாடி! மன்னிச்சுக்குங்க! கும்பினி அதிகாரிங்கள காக்க வெச்சுட்டன்! வாங்க! அமருங்க. என்ன குடிக்கிறீங்க? எளநீ தரச்சொல்லட்டா? இல்ல பானகம்?”
“சேர்வையாரே! நாங்க கும்பினி உத்தியோகந்தான்! இருந்தாலும் உம்ம மாதிரி தானே!என்ன அசலூர்க்காரங்க அவ்வளவுதான்! ஏதோ தொரைங்க மாதிரி உபசாரம் பண்றீங்களே?
“கும்பினியில உத்தியோகம் வாங்கியிருக்கீங்கன்னா நீங்களு தொரைக்கு சமானமாச்சுங்களே!
”அதெல்லாம் சரி எப்ப கொடி மரம் தயாராவும்?
“அது தயாருங்க! கொஞ்சம் கைவேல பாக்கி. அதும் இன்னையோட முடிஞ்சுரும்னு ஆசாரி சொல்லிட்டாரு. இன்னைக்கு பொழுது சாயறதுக்குள்ள அனுப்பிர்ரேங்க!
நல்லது! கொடி மரத்த மைதானத்துக்கு அனுபிட்டுங்க. நாளைக்காலையில கொடியேத்தப்போறோம். அப்படியே ஒத்தாசைக்கி ஒரு ஆளையும் அனுப்பி வெயிங்க சேர்வை!
”நம்ம பையன் முத்தழகுன்னு அவன அனுப்பி வெக்கறேன்! வராதவுங்க வந்திருக்கீங்க! எளனி அறுத்துப்போட்டிருக்கன். தாகத்துக்கு குடிங்க அய்யா!
”சரி கொண்டு வரச்சொல்லுங்க!
இருவரும் இளநீர் குடித்துவிட்டு புறப்பட்டுப்போனார்கள்.
சேர்வை பரபரப்பானார்.
“முத்தழகு! நீ போய் ஆசாரியாண்ட இன்னைக்கு மதியத்துக்குள்ள கொடி மர வேலை முடிச்சு அனுப்பி தயாரா இருக்கச்சொல்லு. அப்படியே நம்ம நாயக்கர் வண்டியை கட்டச்சொல்லி ஆசாரி வீட்டுக்கு எடுத்துப்போய் கொடி மரத்த மைதானத்துல கும்பினி அலுவலர் இருப்பாரு. அங்க குடுத்து கை ஒப்பம் வாங்கி நீயே எடுத்து வந்துரு!”
”சரிங்க அய்யா!”
“அப்றம் நாளைக்காலியில மைதானத்துல கொடி மரம் ஏத்துறாங்க. ஒத்தாசைக்கி உன்னைய வரச்சொல்லியிருக்காங்க. கும்பினி ஆசாமிங்களே உன்னைய கூப்டுருக்காங்க முத்தழகு. தவறாம நேரத்துக்கு அங்க போய் கொடி ஏத்தற வேலையில ஒத்தாசையா இருந்துட்டு வா, எதுனா சம்மானம் குடுப்பாங்க. சந்தோசமா வாங்கிக்க!”
கொடி மரத்த ஆசாரி வீட்டிலேர்ந்து வண்டியில் ஏற்றி மைதானத்துல கொண்டு சேர்த்து கும்பினி அலுவலரிடம் கை ஒப்பம் பெற்று அதைச்சேர்வையிடம் கொடுத்துவிட்டு முத்தழகு வீட்டுக்குப்போனான்.
“அம்மா! இன்னிக்கு….!”
எல்லாத்தசியும் சொல்லி முடிக்க அலங்காரத்துக்கு சந்தோஷம்.
“பாத்தியா முத்தழகு! உனக்கு நெல்ல நேரம் வந்தாச்சு! அதான் கும்பினிக்கே ஒத்தாசைக்கு கூட்டு விட்ருக்காங்க. அங்க ஒத்த ரெண்டு பேரை பரிச்சயம் பண்ணிக்கோ. பின்னால அய்யரு கும்பினியில வேலை வாங்கித்தரும்போது ஒதவும்! என்ன, சூதனமா நடந்து நல்ல பேரை சம்பாதிச்சிக்கோ கண்ணூ! ஆதிபுரீஸ்வரா! எம்புள்ளைய காப்பாத்துப்பா!”
காலையே முத்தழகு அங்கே போய்விட கும்பினி அலுவலர் ஒருவர் அவனை அழைத்து வேலை வாங்கினார். முதலில் கொடிக்கம்பம் நடப்பட்ட மேடையை சுத்தம் செய்யச்சொன்னார். பிறகு நீர் கொண்டு கழுவித்துடைக்க வைத்தார். ஏற்கனவே கட்டப்பட்டு மூடிக்கிடந்த கொடியின் கயிற்று முடிச்சை ஓரிரு முறை சரி பார்த்தார். திருவொற்றியுர் பாரக்ஸில் இருந்த மூத்த கும்பினி ஆசாமிகள் உட்கார போடப்பட்ட நாற்காலிகளை முத்தழகு துடைத்து ஒழுங்குபட வரிசையில் நிறுத்தினான்.
அடுத்த நாள் காலை மைதானத்தில் கும்பினி சிப்பாய்களும் அலுவலர்களும் குழுமி கொடிக்கம்பம் நடப்பட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்தது. சிப்பாய்கள் கூடியிருக்க அலுவலர்கள் பலரும் வந்திருந்தனர். மெட்ராஸிலிருந்து கவர்னர் கொல்லேட் கொடியேற்றும் நிகழ்ச்சியை பாராட்டி கடிதம் அனுப்பியிருக்க அது படிக்கப்பட்டது.
ஒருவித பரவசத்துடன் முத்தழகு கொடியேற்ற நிகழ்ச்சியை கவனித்தான். கும்பினி சிப்பய்களின் ஒழுங்கான நடை, அவர்களின் நேர்கொண்ட பார்வையோடு கொடிக்குத்தரப்பட்ட மரியாதை, முத்தழகு கேட்டே அறியாத தேசிய கீதம், அவர்கள் அடித்த ராயல் சல்யூட் அவனை புல்லரிக்க வைத்தது. கும்பினி மீது அவனுக்கு மரியாதை பன்மடங்கு பெருகி அங்கே சேர்ந்து வேலைசெய்யப்போகும் நாள் குறித்த எதிர்பார்ப்பும் கர்வமும் மேலோங்கியது.
அடுத்து நாளிலிருந்து அவன் சேர்வை வீட்டு வேலைக்கு போகும்போது சுற்றி மைதானம் வழியாகப்போய் கொடியை பார்த்து அவனும் சல்யூட் என்ற பெயரில் என்னமோ செய்து விட்டு சந்தோஷத்துடன் போக ஆரம்பித்தான். அந்த உயரத்தில் கொடி சடசடவென பறக்கும் சப்தம் முத்தழகுக்கு உடல் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. சில நாள் இருட்டின பிறகு வீட்டுக்கு திரும்பும்போதுகூட அந்த ராத்திரிக்காற்றில் கொடி பறக்கும் சப்தத்தை கேட்டுக்கொண்டே வீடு போவது அவனுக்கு உவப்பாக இருந்தது
அன்று காலையே தீட்சிதர் சேர்வை விட்டுக்கு ஒரு நடை வந்து போனார்.
“வாங்க தீட்சிதரே! ஆச்சா வீட்ல விசேஷமெல்லாம்?’
“ஆச்சு நன்னா ஆச்சு! உங்க ஒத்தாசைக்கு நன்றி சொல்லிட்டுப்போலாம்னுதான் வந்தேன்! அப்றம் ந்தாங்கோ! பட்சணம்! கொழந்தேளுக்கு குடுங்கோ!”
ஆமா போன வாரம் மெட்ராஸுக்கு போனீங்களே! நவாபுக்கும் கும்பினிக்கும் ஏதோ அரசல் புரசலா சண்டையின்னு பேச்சு இருக்காமே?”
ஆமாம் சேர்வை! என்னத்த சொல்ல! கும்பினிக்காரனுங்க வியாபாரம் பண்ண வந்துட்டு எடத்த பிடுங்கறான். டெல்லி சுல்தான் என்னடான்னா ஒரு பக்கம் பரிசெல்லாம் வாங்கிண்டு கிராமத்தையெல்லாம் அவளுக்கே குடுத்துர்ரேன்னு நிக்கறார். ஆனா இங்க கர்நாட்டிக் நவாபு கிரமங்கள குடுக்கறதுக்கு மின்ன முடிஞ்சவரைக்கும் கும்பினிட்டேர்ந்து பெருசா ஏதாவது கறந்துண்ட பிறகு குடுக்க்லாம்னு திட்டம் போடறாரு! …ஒரே குழப்பந்தான் சேர்வை!
“இன்னிக்குக்கூட கம்மாளத்தெருவுல பேச்சு. ஊருக்கு வெளில ஒரே புழுதியாம். என்ன்னு பாத்தா ஏகப்பட்ட குதிரை சிப்பாயிங்க துப்பாக்கியும் கையுமா படைன்னு அல்லோலகல்லோல படறதாமே!
“அட ஆமாம் சேர்வை! கும்பினி 500 பகோடாவை சுங்கு ராமாவாட்ட குடுத்து நவாபுகிட்ட குடுக்கச்சொல்லிட்டார். நவாபு அதெல்லாம் போறாதுன்னு கடுதாசு போட்ருக்காராம்!”
எவ்வளவு வேணுமாம்?
”ஆயிரம் பகோடாவாவது வேணும்னு கேக்கறாராம்!”
“அடேயப்பா! ஆயிரம் பகோடாவா?”
அது மட்டுமில்ல! அவரோட வாடகை குமாஸ்தா இருக்காரே …?”
ஆரு தயாராமுன்னு .. ஓய் அவர் குமாஸ்தா இல்லைங்காணூம்! மிராஸ்தார். ஆனா நவாபுக்காக அவரோட நிலபுலங்களையெல்லாம் வாடகைக்கு விட்டு வர்ர வருமானத்தை நவாபுக்கு அனுப்பற வேல செய்யறார்.”
“அது குமாஸ்தா வேல மாதிரிதானே சேர்வை? கேளூம்! அவர் தம் புள்ளைய குதிரைப்படை தரைப்படைன்னு ஆயிரம் பேர அனுப்பி கேட்ட பணத்த அனுப்பலைன்னா ஒரு சரக்கு மெட்ராஸ் போகாதுன்னு பூந்தமல்லி ராஸ்தாவ அடைச்சு வெச்சுட்டாராம்!’
“என்ன சொல்றீங்க சேர்வை! எங்காதுக்கு சேதி ஒண்ணும் வரலியே?”
”ஆமாங்காணும்! கும்பினிகாராளும் விட்டுக்குடுக்கறதா இல்ல. டெல்லி சுல்தானே பட்டயம் எழுதிக் குடுத்துட்டாரு. இவரு என்ன நவாபு நடுவுல நாட்டாமைன்னு சண்டை போட்டாவது கிரமங்களை முழுசுமா புடுங்கிக்கணூம்னு முனைப்பா இருக்காளாம்!
“நமக்கெல்லாம் ஆபத்து வருமோ? ஏதோ நாம பாட்டுக்கு ஆதிபுரீஸ்வரரையும் வடிவுடையாம்பிகையையும் கும்ட்டுக்கிட்டு பொழப்ப பாத்துட்டு இருக்கோம். கேடு வந்துராதே?
“ஒண்ணுஞ்சரியில்ல சேர்வை! கிரகங்கள்ளாம் கோணாமாணான்னு சஞ்சாரம் பண்றப்ப என்னத்த சொல்ல. நாம ஜாக்கிரதைய இருக்கணூம்! சரி வரட்டுமா? ஆத்துல ஜாதகக்கட்டெல்லாம் அப்படியே பிரிச்சுப்போட்டிருக்கேன்.!”
சரி வாங்க தீட்சிதரே! ஏதாவது கிரக சமாச்சாரம் இருந்தா முன்னமே சொல்லிருங்க. புள்ளைகுட்டிங்களுக்கு காபந்து பண்ணிடறேன்!
”நிச்சயமா சொல்றேன்! வரேன்!”
அக்டோபர் 19 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் லெப்டினன்ட் ஜான் ரோச் 150 பேர் கொண்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து புறப்பட்டு பகல் பொழுதிலேயே திருவொற்றியூர் வந்தடைந்தார். ஆரம்பத்தில் ஆச்சரியம் அடைந்த தியாராமின் படைகள் திருவொற்றியூர் கிராமத்தின் பல தெருக்களையும் ஆக்கிரமித்து, நகரின் நடுவில் இருந்த தியாகராஜஸ்வாமி கோயிலையும் அதன் குளத்தையும் கைப்பற்ற முயன்றன. கும்பினியாரை ஆத்திரப்படுத்த போகிற போக்கில் யூனியன் ஜாக் கொடி பறந்துகொண்டிருந்த கொடி மரத்தை வெட்டிப்போட, அந்த நீண்ட கொடி மரம் பாதியில் உடைந்து யூனியன் ஜாக் கொடி தரையில் மண் புழுதியில் புரண்டபடி கிடந்தது..
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த ஆரம்ப துப்பாக்கிப்பரிமாற்றங்களின் முடிவில், தியாராமின் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கும்பினி படைகளால் தொடர்ந்து விரட்டியடிக்கப்பட்டது. சுமார் 500 குதிரைகள் தியாராமின் படைக்கு ஆதரவாக வருவதைக் கண்ட ரோச், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உதவிக்கான அழைப்பை அனுப்பினார்.
கவர்னர் கோலெட், உடனே லெப்டினன்ட் ஃபுல்லர்டனை 100 பேருடன் அணிவகுத்துச் செல்லும்படியும், ரோச்சுடன் சேர போதுமான அளவு ஏற்பாடுகள் மற்றும் வெடிமருந்துகளையும் அனுப்பினார். புல்லர்டன் மாலை 4 மணியளவில் ரோச்சுடன் திருவொற்றியூரில் சேர்ந்தார், அதற்குள் தியாராமின் படைகள் சாத்தங்காடுவிற்கு அப்பால் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உடைந்திருந்த யூனியன் ஜாக் கொடி மரத்தைக்கண்ட கும்பினியின் வெள்ளைக்கார சிப்பய்கள் கோபம் கொண்டனர். வெறி கொண்டு அங்கே ஓடியபோது ஒரு இளைஞன் உடைந்த கொடி மரத்துண்டுகளை எடுத்துக்கொண்டிருப்பது அவர்களை இன்னும் வெறுப்பேற்றியது. சற்றுத்தொலைவிலிருந்து இதைப்பார்த்துக்கொண்டிருந்த ஃபுல்லர்ட்டன் “சேவ் தி யூனியன் ஜாக்!” என்று சப்தமிட, இரண்டு சிப்பய்கள் பரபரவென ஓடி வந்து கொடியின் மரத்துண்டுகளை அள்ளிக்கொண்டிருந்த முத்தழகைப்பிடிக்க அவன் ”கொடி கொடி’ என்று கத்த, தயாராமின் படையில் ஒருத்தன் என்று நம்பிய ஃபுல்லர்ட்டன் “இந்தக்கறுப்பன் நம் மேன்மை தாங்கிய கொடியை அவமானப்படுத்துகிறான்! கில் ஹிம்!” என்றூ உத்தரவு பிறப்பிக்க…..
ஆம்…ஆம்…ஆம்..
நாம் பிற்பாடு அறிந்த திருவொற்றியூர் சண்டை பாழாய்ப்போன ஒரே நாளில் தொடங்கி முடிந்தது.
கும்பினி சார்பில் சண்டையில் வெற்றி பெற்ற ஜான் ரோச் மற்றும் ஃபுல்லர்டன் இரவு எட்டு மணியளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குத் திரும்பினதும். அன்று மாலை. 700 பகோடாக்கள் செலவழிக்கப்பட்ட வெற்றியைக் கொண்டாடும் ஒரு பெரிய விருந்து நடந்ததும் அந்தச்செலவு அக்கவுண்ட்ஸ் புத்தகங்களில் ‘சார்ஜ்ஸ் எக்ஸ்ட்ராடினரி’ என்று எழுதப்பட்டது.,
திருவொற்றியூர் சண்டையில் வெற்றி வாகை சூடிய ரோச், கோரமண்டல் கடற்கரை மற்றும் சுமத்ரா தீவில் உள்ள கும்பினியின் அனைத்து படைகளுக்கும் மேஜராக நியமிக்கப்பட்டதும், அதே வருடம் டிசம்பர் மாதம் நவாப் சாததுல்லா கானுடன் கையெழுத்திடப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் மூலம் கிராமங்களை கும்பினியாரின் உடைமையாக்கியதும் அனாதையாகிப்போன அலங்காரம் பித்துப்பிடித்து கவனிப்பாரின்றி நோய்ப்பட்டு சில மாதங்களீலேயே செத்துப்போனதும், அவள் இருந்த வீடு கும்பினியால் கைக்கொள்ளப்பட்டு காய்ந்த விறகுக்கிடங்காக மாற்றப்பட்டதும்………..
சரித்திரமாம் சரித்திரம்!
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
