காமம் காமம் என்ப

காமம் காமம் என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதாதை வந்தாங்கு,
விருந்தே காமம் பெருந்தோளோயே!

நாலு வேதம், நாப்பத்தெட்டு சாஸ்திரம், நாலாயிரம் பாசுரம் எல்லாம் கிண்ணென்று இருக்கும் இரண்டு முலைக்கு முன் அடிமையாகி நிற்பது கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது.

மேல்கோட்டை விஜயராகவாச்சாரியாரைத் தெரியுமா? தெரிந்தால்தான் ஆச்சரியம். நீங்களும் இந்த சேரன் சோழன் சிற்பம் கிற்பம், சுவடி கிவடி என்றெல்லாம் படித்துக் கிழிப்பவராக இருந்தால் தெரிந்திருக்கலாம். கிழவன் கோவில் கல்வெட்டை எல்லாம் நான் குமுதம் விகடன் படிக்கிறாற்போல படிப்பான். எங்கேயோ டென்மார்க்கிலேயோ நைன்மார்க்கிலேயோ ப்ரொஃபசராக இருந்திருக்கிறது. இன்னும் ஆராய்ச்சி பண்ண வேண்டும் என்று வேலையை விட்டுவிட்டு இங்கே வந்துவிட்டது.

அப்பப்ப இவரைப் பார்க்க நாலு வெள்ளைக்காரர்கள் வந்து போவார்கள். இவரும் அமெரிக்கா ஆஸ்திரேலியா என்று போய்விட்டு வருவார். இவரோட தங்கை – டொங்கு வாய் விஜயலட்சுமி – பீத்திப்பாள் – ஏதோ ஒரு முருகன் சிலையை யாரோ திருடி ஃப்ரான்ஸில் விற்றுவிட்டானாம். இவர்தான் அங்கே போய் சாட்சி சொல்லி அந்த சிலையை மீண்டும் தமிழ்நாட்டுக்கு மீட்டு வந்தாராம். அந்த நீதிபதி ஐயா நீர் பெரிய மேதை என்று பாராட்டினாராம். ராமானுஜருடன் மேல்கோட்டை போன குடும்பத்தில் பிறந்தவராம். பரம்பரை பரம்பரையாக வேதம், சாஸ்திரம் எல்லாம் படிப்பவர்கள். மைசூர் மகாராஜா கௌரவித்த குடும்பமாம். இந்த ஜெயலலிதா குடும்பத்துக்காரர்களுக்கு ஜெய என்று பேரில் வைத்துக் கொள்ளலாம் என்று இருப்பதைப் போல இவர்களுக்கு விஜய என்று பேரில் வைத்துக் கொள்ள உரிமை தரப்பட்டதாம்.

இவரும் பரம்பரை புகழை மேலேதான் கொண்டு போனார். பெரிய தலைகாணி சைசுக்கு 20 புத்தகம் எழுதி இருக்கிறார். தமிழ், சமஸ்கிருதம், இங்கிலீஷ், கன்னடம், உருது, டேனிஷ் இந்த மாதிரி ஏழெட்டு பாஷையில் புலி. இந்த வருஷப் பட்டியலில் பத்மஸ்ரீ கிடைக்கும், இல்லாவிட்டால் அடுத்த வருஷம் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார். கல்யாணம் எல்லாம் பண்ணிக் கொள்ளவில்லை. அது சரி, இந்த மாதிரி ஆளுக்கு அதெல்லாம் சரிப்படாது.

கிழம் ஆய கலை அறுபத்து நான்கையும் பற்றி மூச்சு விடாமல் மூன்று மணி நேரம் லெக்சர் அடிக்கும். ஆனால் எந்தக் கலையும் – மன்மதக் கலை உட்பட – சரியாக வராது. அது சரி 58 59 வயது இருக்குமே! வேகமாக நடந்தாலே மூச்சு வாங்கும். செவிட்டு மெஷின் இல்லாவிட்டால் காது கேட்காது. இந்த வயதுக்கு மேல் மன்மதக் கலை எல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான்.

நானோ  ப்ளஸ் டூவே இரண்டாவது முறை எழுதி – அதுவும் பிட்டடித்துதான் பாஸ் செய்தேன். ஏதோ இப்போதுதான் இவருடன் பேசிப் பேசி கொஞ்சம் கொஞ்சம் இங்க்லீஷ் எல்லாம் புரிகிறது. ரொம்ப நாளைக்கு டாக்டர் விஜயராகவாச்சாரி என்கிறார்களே, கிழம் எம்பிபிஎஸ் படித்துவிட்டு ப்ராக்டிஸ் செய்வதில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதை எல்லாம்  படித்துக் கூட டாக்டர் ஆகிவிடலாம் என்றே தெரியாது. நம்ம லெவல் அவ்ளோதாங்க!

என் பலம் என் வயது – 19தாங்க ஆகிறது! (டொங்குவாய்ச்சியின் பெண்ணுக்கே 25 இருக்கும்!) நல்ல சிவப்பு கலர், அஞ்சரை அடி உயரம், தொடை வரைக்கும் நீளமான முடி, பெரிய கண், வட்டமான முகம், சங்குக் கழுத்து, சிக்கென்ற இடுப்பு, நீளமான கால் – கொஞ்சம் சைட் வியூ தெரிகிற மாதிரி துப்பட்டாவை ஒதுக்கிக் கொண்டு போனால் பின்னால் படையே வரும்! சூப்பர் கட்டைங்க!

என்ன இருந்து என்ன பிரயோஜனம்! எங்கள் குடும்பத்துக்கும் ஒரு பாரம்பரியம் உண்டு. சமையல்! என் தாத்தா காலத்திலிருந்து சமையல்தான். அப்பா கல்யாண சமையல் ஜமாவில் ஒரு அசிஸ்டன்ட். அப்பா போய்ச் சேர்ந்ததும் அம்மாவுக்கு கை கொடுத்ததும் சமையல்தான். என்ன செய்வது பெண்கள் கல்யாண சமையல் ஜமாவில் சேர முடியாது. ஏதோ எங்கள் அதிர்ஷ்டம் டொங்குவாய் விஜயலட்சுமி மாமனாருக்கு அவர் சொந்த ஊரில் – திருக்கண்ணங்குடியில் – ஒரு வீடு இருந்தது. அவருக்கு என் அப்பாவைத் தெரியும். அப்பா மேலே போனதும் எங்கள் மேல் பரிதாபப்பட்டு நீங்கள் அங்கே போய் எங்கள் வீட்டை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அம்மாவுக்கு ஒரே சந்தோஷம். எனக்கு? ஊரா இது! திருக்கண்ணங்குடி! கூடுவாஞ்சேரி மாதிரி ஒரு பேர், வெளியே சொன்னால் சிரிப்பார்கள். ஒரு நல்ல சினிமா தியேட்டர் கூட கிடையாது!

ஆனால் அம்மாவுக்கு அது வசதியாக இருந்தது. வீட்டு வாடகை கிடையாது. பின்னால் மாமரம் வாழை மரம் என்று இருந்தது. பெரிய புழக்கடை, அங்கே கீரை, கத்திரிக்காய், புடலங்காய் மாதிரி எதையாவது போட்டு காலத்தை ஓட்டினோம். அம்மா நாகப்பட்டினத்தில் யார் வீட்டிலாவது சுமங்கலிப் பிரார்த்தனைக்கு சமையல், தீபாவளி பட்சணம் செய்து கொடுத்து கொஞ்சம் மேல்வரும்படி பார்த்தாள். ஓல்ட் ஏஜ் பென்ஷன் வந்தது. அம்மாவின் கிழிந்த புடவை எனக்கு தாவணி ஆயிற்று. அம்மாவுக்கு ஒரே ஆசைதான், நான் படித்து டீச்சர் வேலைக்கு போய் கொஞ்சம் வசதியாக இருக்க வேண்டும் என்பதுதான். எங்கே? நமக்கு ஒல்லி நடிகர் மீது உச்ச நடிகர் கடுப்பாக இருக்கிறார் என்றால் தனுஷ் விவாகரத்து செய்யப் போகிறார் என்று ஒரு நொடியில் புரிந்துவிடுகிறது, அக்பருக்கு பிள்ளை பாபரா பாபருக்கு பிள்ளை அக்பரா என்பது மண்டையில் ஏறுவதே இல்லை. நல்ல வேளையாக எல்லா ராஜாவும் சாலையின் இரு புறம் மரங்களை நட்டான்கள், இல்லாவிட்டால் பாசாவதே கஷ்டம்தான்.

ஒரு ஒண்ணரை வருஷம் முன்னால் தலையில் இடி விழுந்தது. டொங்குவாய்ச்சி எங்கண்ணா அந்த வீட்டை வாங்கப் போகிறார், அங்கே வந்து தங்கி சுற்றுவட்டாரக் கோவில் பற்றி எல்லாம் ஆராய்ச்சி பண்ணப் போகிறார், நீங்கள் இடத்தை காலி பண்ணி விடுங்கள் என்று. தகவல் வந்த இரண்டு வாரத்தில் கிழம் வந்தது. சாப்பாட்டுக்கு வழி வேண்டுமே! எங்கம்மா சாத்தமுது, திருக்கண்ணமுது என்று வகைவகையாக பண்ணிப் போட்டாள். எங்கேயோ வெளிநாட்டில் நாக்கு செத்துக் கிடந்த மனுஷன். நான் இருக்கும்போது எனக்கு சமைத்துப் போடுங்கள் நான் வெளியே போகும்போது வீட்டைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். என் அம்மாவுக்கு மூச்சு வந்தது.

புஸ்தகம், புஸ்தகம், புஸ்தகம்! இல்லாவிட்டால் கம்ப்யூட்டரில் ஏதாவது தட்டிக் கொண்டே இருப்பார். இல்லாவிட்டால் யாருடனாவது ஃபோனில் பேசுவார். என்னையும் முதலில் கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்மா என்று கேட்டார், நம்ம அறிவுக் கூர்மையைப் பார்த்து கழற்றி விட்டுவிட்டார். அம்மா என்னை அதற்காக திட்டிக் கொண்டே இருப்பாள்.

கிழவனுக்கு கொஞ்சம் நல்ல மனசு. டொங்குவாய் மாதிரி இல்லை. அம்மாவிடம் மாதம் பிறந்தால் 50000 ரூபாய் கொடுத்துவிடுவார். கறிகாய், மளிகை வாங்க, மற்றும் நாங்கள் வீட்டைப் பார்த்துக் கொள்வதற்கும் சமையல் செய்து போடுவதற்கும். இவர் வரும் முன்னால் நாங்கள் வருஷத்துக்கே அவ்வளவு செலவு செய்தோமோ என்னவோ தெரியவில்லை. எங்களுக்கு பொழுது போவதற்காக வீட்டில் இருந்த ஓட்டை டிவியை மாற்றி நல்ல பெரிய டிவியாக வாங்கிப் போட்டார். அவரது பழைய ஐபாட், பழைய ஆப்பிள் செல் ஃபோன்களை எங்களுக்குக் கொடுத்தார். அம்மா புடவை கிழிந்திருந்ததைப் பார்த்தார், அன்றைக்கே எங்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு நாகப்பட்டினத்துக்கு போனார், அம்மாவுக்கு பத்து புடவை! எனக்கு நாலு சூடிதார், 2 புடவை. 4 நைட்டி கூட வாங்கிக் கொடுத்தார்.

ஒரு பத்து நாள் கழித்து அவர் எங்கேயோ தென்திருப்பேரை என்ற ஊருக்கு போய்விட்டு வந்தபோதுதான் அவர் மனம் சலனப்பட்டது என்று நினைக்கிறேன். ராத்திரி வரும்போது மணி பதினொன்று இருக்கும். காரை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தார். நான் சுவாரசியமாக முந்தானையில் முள்ளு குத்தும் என்று பாட்டு பார்த்துக் கொண்டிருந்தேன். நைட்டி மட்டும்தான். அன்றைக்கென்று பார்த்து மேலே இரண்டு பட்டன் அறுந்து விட்டது. என் பாதித் தொடை தெரியும் அளவுக்கு என் நைட்டி மேலே ஏறிக் கிடந்தது. ஆண்கள்  பார்வை மாறும் வினாடி எப்படித்தான் எங்களுக்கு தெரிகிறதோ! எனக்கும் தெரிந்தது, கதவை திறந்துவிட்ட அம்மாவுக்கும் தெரிந்தது. சரியா உக்கார்டி என்று கத்தினாள்.

அதற்கப்புறம் அவருக்கு காப்பி கொடுக்கும்போது மெதுவாக என் கையைத் தடவுவது, என் மேல் யதார்த்தமாக படுவது போல் உரசுவது, என் பக்கத்தில் உட்கார்ந்து டிவி பார்ப்பது என்று மெதுவாக ஆரம்பித்தார். எனக்கா, கடுப்பான கடுப்பு. நான் அவரை எவ்வளவு தூரம் தவிர்க்க முடியுமோ அவ்வளவு தூரம் தவிர்த்தேன். அவரோ எவ்வளவு தூரம் என் கூட ஒட்ட முடியுமோ அவ்வளவு தூரம் ஒட்டப் பார்த்தார். என் கூடப் படித்த பெண்கள் எல்லாம் சொல்வார்கள், வயசுப் பையனை நம்பி பஸ்ஸில் பக்கத்தில உட்காரலாம், ஆனால் இந்த கிழவன்களை நம்பி உட்கார முடியாது என்று. அது முழுவதும் உண்மை என்று புரிந்தது. காபி கொண்டு போய்க் கொடுப்பதை நிறுத்தினேன். அம்மா சொன்னால் கூட நீயே குடுமா என்று வேறு பக்கம் நடந்துவிடுவேன். நான் டிவி பார்க்கும்போது அவர் வந்தால் டிவியை அணைத்துவிட்டு சமையல் உள்ளுக்கு போய்விடுவேன். பொதுவாக அவர் இந்தப் பக்கம் வந்தால் நான் அந்தப் பக்கம் போய்விடுவேன். ஆனால் அவர் அந்தப் பக்கமும் வந்தால் நான் எங்கேதான் போவது?

தன் தோற்றத்தைப் பற்றி அது வரை அக்கறையே படாத மனிதர் திடீரென்று பவுடர் போட்டார்; சென்ட் அடித்தார்; தன் இடது பக்கத்தில் இருக்கும் நாலு முடியை கஷ்டப்பட்டு வலது பக்கம் வரை சீவினார். அடுத்த முறை தன் தங்கை வீட்டுக்கு – சென்னைக்குப் போகும்போது எங்கள் இருவரையும்  வற்புறுத்திக் கூட கூட்டிக் கொண்டு போனார். ஷாப்பிங்குக்கு என்னை பிடிவாதமாக கூட்டிக் கொண்டு போய் தனக்கு நாலு ஜீன்ஸ் வாங்கிக் கொண்டார். (நானும் அவருடன் ராசியான பிறகு செய்த முதல் காரியம் அந்த ஜீன்ஸ்களை தூக்கிப் போட்டதுதான்) அப்படியே எனக்கு என்ன வேண்டும் என்ன வேண்டும் என்று நச்சரித்து சோப்பு பவுடர் லிப்ஸ்டிக் மேக்கப் என்ன எல்லாமோ வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். மாடர்ன் டிரஸ் வாங்கிக்கோ என்று அப்புறம் எனக்கு ஜீன்ஸ், பான்ட், ஸ்கர்ட், அரை டிராயர் என்று அலசினார். அரை டிராயர்! அலையறது! அதற்கப்புறம் என்னை நாயுடு ஹால் கூட்டிக் கொண்டு போனார் பாருங்கள், எனக்கு உடம்பெல்லாம் எரிந்தது! அதை வாங்கிக்கோ இதை வாங்கிக்கோ என்று தொல்லை செய்தார்.

டொங்குவாய்க்காரி என்னை ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்தாள். அவர் இல்லாதபோது யாரையோ சொல்வது போல கூட்டிக் கொடுக்கும் ஜன்மம் அது இது என்று என் அம்மாவை ஜாடையாக பேசினாள். என் அம்மா புரிந்து கொள்ளாத மாதிரி வேறு என்னவோ பேசிக் கொண்டிருந்தாள். எனக்கா கண்ணில் அழுகை ததும்புகிறது. இந்த மட அம்மாவுக்கு இது கூட புரியவில்லையே என்று ஒரே எரிச்சல்.

ஒரு நாள் தனியாக பேச ஒரு நிமிஷம் கிடைத்ததும் என் அம்மாவிடம் இந்த பெரிசு பண்ணும் அட்டூழியத்தையும் டொங்குவாய்க்காரியின் அடிவெட்டு பேச்சையும் சொன்னேன். இப்போதான் வயிறு நிறைய சாப்பிடறோம், சவுகரியமா இருக்கோம், பேசாம போடி என்று ஒரு போடு போட்டாளே பார்க்கலாம்!

அப்புறம் நானும் யோசித்தேன். என் அம்மாவுக்கு என்னை கல்யாணம் செய்து கொடுக்கும் வசதி கிடையாது. வந்தாலும் அது ஒரு சமையல்காரன்தான். கிழத்துக்கு நல்ல மனசு. நிறைய பணம். தைரியமும் கிடையாது. இப்போதைக்கு கொஞ்சம் தடவவிட்டால் போதும். அடிமையாக இருக்கும். என்ன குடி முழுகிவிடும்?

ஊருக்குப் போன அடுத்த நாள் அம்மா காப்பியை எடுத்துக் கொண்டு அவர் ரூமுக்குப் போனாள். நான் அம்மாவை நிறுத்தினேன். காப்பியைக் குடு என்று வாங்கிக் கொண்டேன். அம்மா கண் கொஞ்சம் பளபளத்ததோ?

கிழத்துக்கு என்னைப் பார்த்ததும் மாரடைப்பே வந்துவிடும் போலிருந்தது. நான் காப்பி கொடுப்பதை நிறுத்தி பல வாரம் ஆயிற்றே! அதுவும் துப்பட்டாவும் போடவில்லை. என் கையைப் பிடித்து காப்பியை வாங்கிக் கொண்டது. கையை விடவில்லை. நானும் எடுத்துக் கொள்ளவில்லை. உனக்கு என்ன வேணும் சொல்லு என்ன வேணும் சொல்லு என்று திருப்பி திருப்பி கேட்டார். நான் வேண்டுமென்றே நீங்க என்ன நான் கட்டிக்கப் போறவரா, நான் நகை, துணி எல்லாம் உங்ககிட்டே கேக்க என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டேன்.

கிழம் குளித்துவிட்டு வெளியே போனது. சாயங்காலம்தான் வந்தது. நான் திருப்பி காப்பி கொண்டு போனேன். இந்த முறை எல்லாவற்றையும் மூடி இருந்தேன். கிழம் ஒரு பத்து பவுன் சங்கிலியை எனக்கு காட்டியது. நீ என்கிட்டே என்ன வேணும்னாலும் கேக்கலாம் என்று வழிந்தது. உனக்கு பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கா என்று பத்து முறை கேட்டது. எனக்கு பிடிச்சிருக்கு, ஆனால் நான் இதை வாங்கிக்கிட்டா அம்மா கோவிச்சுப்பா என்றேன். கிழம் என் தோளை அழுத்தி உட்கார வைத்தது. நானே போட்டுவிடுகிறேன் என்று தோளையும் கழுத்தையும் தடவிக் கொண்டே செயினைப் போட்டது. அம்மாவிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை, அம்மாவும் ஒன்றும் சொல்லவில்லை. அம்மாதான் ஏற்கனவே பேசாம போடி என்று சொல்லி ஆயிற்றே, இனி மேல் என்ன சொல்லப் போகிறாள்!

அப்புறம் நான் மகா கனம் பொருந்திய டாக்டர் மேல்கோட்டை விஜயராகவாச்சாரியாரை ஆட்டி வைத்தேன். யாராவது வயசுப் பையனிடம் அவர் கண்பட நான் சிரித்துப் பேசினால் போதும், அன்றைக்கே ஏதாவது நகையோ இல்லை வேறு ஏதாவது பரிசோ வரும். நான் நீங்கள் எனக்கு யார் என்று சொல்லிவிட்டால் போதும், அப்படியே ஆடிவிடுவார். ஒரு முறை எனக்கு குற்றாலம் போக ஆசை, கூட்டிப் போக யாரும் இல்லை என்றேன், அடுத்த நாளே நாங்கள் மூன்று பேரும் குற்றாலம் போனோம். அங்கே நான் குளிக்கும் கோலத்தை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார். இரண்டு மூன்று நாள் கழித்து எவனோ ஒரு சனியன் சார் உங்க பொண்ணு கிட்டே அங்கே போக வேணாம்னு சொல்லுங்க ரொம்ப வழுக்குது என்றான். முகம் செத்துவிட்டது. அன்றைக்கே நாங்கள் குற்றாலத்தை விட்டு கிளம்பிவிட்டோம்.

ஒரு முறை நான் கேட்டேன், எனக்கு இத்தனை வாங்கித் தரீங்களே, நீங்க பெரிய பணக்காரரா, உங்ககிட்டே எவ்வளவு பணம் இருக்கும் என்று கேட்டேன். கிழவன் மழுப்பினான். எனக்கு முதல் முறையாக அப்போதுதான் சந்தேகம் வந்தது – இவன் கல்யாணம் எல்லாம் பண்ணிக் கொள்ள மாட்டான், சும்மா அனுபவிக்கத்தான் பார்க்கிறான் என்று. இவன் போன பிறகு எல்லாம் சொத்து எல்லாம் டொங்கு வாய்க்காரிக்கும் அவளுடைய திமிர் பிடித்த மகளுக்கும் போனால் என் கதி என்ன? செகண்ட் ஹான்ட் ஆகிவிட்டால் என்னை எவன் மதிப்பான்? எனக்கு என்ன மார்க்கெட் வால்யூ? சரி இவனை முழுமையாக கையில் போட்டுக் கொள்வது என்று முடிவு செய்தேன்.

அப்புறம் என்ன? ஒதுங்கிய தாவணி, பாவாடையை இடுப்பில் சொருகி கொள்வது, டைட்டான டி ஷர்ட், அரை டிராயர், பறக்கும் அரை ஸ்கர்ட், ப்ரா இல்லாமல் நைட்டி என்று ஆரம்பித்தேன். என்னை அப்படி பார்த்துவிட்டால் புஸ் புஸ் என்று மூச்சு சத்தம் கேட்கும். என் பக்கத்தில் உட்கார்ந்து டிவி பார்க்கும். நான் அவர் தோளில் சாய்ந்துகொள்வேன். கொஞ்சம் உரசுவேன். கிழத்துக்கு தைரியம் கம்மி. பயந்து பயந்துதான் என்னை தொடும். இடுப்பு, முதுகு, தோள், கழுத்து, கை விரல், கெண்டைக்கால், அபூர்வமாக கீழ்த் தொடை அவ்வளவுதான். அதற்கு மேல் எல்லை தாண்டாது. இது வேலைக்காகாது என்று நினைத்தேன். ஒரு நாள் நானே அவர் கையை எடுத்து என் மார்பில் வைத்துக் கொண்டேன். கிழம் அன்றைக்கு அவுட்.

கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் வற்புறுத்தினேன். கிழத்துக்கு சம்மதம்தான், ஆனால் இப்படி இந்த வயதில் கல்யாணம் செய்துகொண்டால் பத்மஸ்ரீ கிடைக்காமல் போய்விடுமோ என்று கொஞ்சம் பயந்தார். நான் அன்று இரவு அவர் முழங்காலில் மார்பை அழுத்திக் கொண்டு டிவி பார்த்தேன். கிழம் கவிழ்ந்துவிட்டது.

பத்மஸ்ரீ பட்டியல் வந்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னார். உனக்கு கொஞ்சம் என்னைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்று எனக்கு தமிழ் இலக்கியம், இங்கிலீஷ் பேச்சு, இந்திய வரலாறு என்று ட்யூஷன் எடுத்தார். டொங்கு வாய்க்காரிக்கு விஷயம் தெரிந்து திருக்கண்ணங்குடிக்கு வந்து என்னை கன்னா பின்னா என்று திட்டினாள். எங்கண்ணாவோட அம்பது கோடி சொத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பொண்ணை கூட்டிக் கொடுக்கறியே, நீ பிராமணத்திதானா இல்லை தேவடியா வம்சமா என்று அம்மாவை கண்டபடி பேசினாள்.  ஐம்பது கோடி சொத்தா என்று நான் அதிர்ந்தேன். பிறகு சும்மா அழுவது போல பாவலா காட்டினேன். நானா தங்கையா தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று மிரட்டினேன். கிழம் இனி மேல் நான் இருக்கும் பக்கமே வரக்கூடாது என்று விஜயலட்சுமியை விரட்டிவிட்டுவிட்டது.

அப்புறம் இவரிடம் கேட்டேன் உங்களுக்கு ஐம்பது கோடி சொத்து இருக்கிறதா என்று. அவர் ஆமாம் என்றார். நீயும் நானும் புருஷன் பெண்டாட்டி ஆகப் போகிறோம், என் சொத்து விவரங்கள் உனக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று தன் சொத்து விவரங்களை எனக்கு விவரமாகக் காட்டினார். சொன்னார். எனக்கு புல்லரித்துவிட்டது.

அம்மாவும் கேட்டாள் – ஏண்டி இவ்வளவு பணமா இருக்கு அவர்கிட்டே என்று. நான் மழுப்பினேன். அம்மாவுக்கு எனக்கு சொல்ல இஷ்டமில்லை என்று புரிந்துவிட்டது. ஐம்பது கோடி இருப்பதும் புரிந்துவிட்டது. என்ன்னமோடிம்மா, மாப்பிள்ளை வந்ததும் என்னை மறந்துடாதே என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள். அம்மா முதல் முறை மாப்பிள்ளை என்று சொன்னது அப்போதுதான்.

அன்றைக்கு முதல் முறையாக அவரை எல்லாவற்றுக்கும் அனுமதித்தேன். அம்மா தூங்கியதும் – தூங்கினாளோ இல்லை தூங்கியது போல நடித்தாளோ தெரியாது – அவர் ரூமுக்கு மெதுவாகப் போனேன். அவருக்கும் ஒரே பயம் – இதுதான் அவருக்கும் முதல் முறை. ஆனால் அவர் ஆசையின் உச்சத்தில் இருந்தார். என்னை தடவி தடவி மகிழ்ந்தார். பிள்ளை பிறந்தால் விஜயரங்கன் என்று பேர் வைக்கப் போவதாகவும், பெண் பிறந்தால் விஜயவாணி என்று பேர் வைக்கப் போவதாகவும் சொல்லிக் கொண்டார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அதுதான் சொன்னேனே, மன்மதக் கலை கூட சரியாக வராது என்று! சரி பிள்ளைகள் பிழைத்தார்கள், இந்த மாதிரி கர்நாடகப் பேர் இல்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

கிழத்தோடு அட்ஜஸ்ட் செய்து வாழலாம் என்று பார்த்தால் இந்த விஷயம் குறையாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. அடுத்த நாள் இவர் ஒன்றுமே நடக்காத மாதிரி வளைய வந்ததைப் பார்த்ததும் எனக்கு கடுப்பு அதிகமாகிக் கொண்டே போனது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

அடுத்த இரண்டு நாளும் மீண்டும் போனேன். ஒன்றும் நடக்கவில்லை. வெறுத்துப் போயிருந்தேன். இவர் என்னவோ கேட்டதற்கு கூரை ஏறி கோழி பிடிக்க முடியலையாம், விஜயரங்கனாம், விஜயவாணியாம் என்று சொல்லிவிட்டேன். அவர் அதற்கு பிறகு என் முகத்தைப் பார்க்கவே பயப்பட்டார். வாலிப வயோதிக அன்பர்களே விளம்பரங்களை படிக்க ஆரம்பித்தார். ஆனால் அங்கே போகவும் பயம். தன்னை யாராவது பார்த்துவிட்டால் என்ன சொல்வார்களோ ஏதோ என்று மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருந்தார்.

அடிக்கடி ஒரு கவிதையைச் சொல்ல ஆரம்பித்தார். எனக்கு வரிகள் சரியாக நினைவில்லை. ஆனால் கிழட்டுப்பசு இளம்புல்லை சுவைப்பது என்று வரும். எங்கள் நிலையும் அப்படித்தான் ஆகிவிட்டது.

பிறகு என்னிடம் சொன்னார் – இதற்கெல்லாம் ஒரு மாத்திரை இருக்கிறது, அமெரிக்காவில் சுலபமாக கிடைக்கும், அடுத்த முறை அமெரிக்கா போகும்போது நிறைய வாங்கிக் கொண்டு வந்துவிடுகிறேன், அப்புறம் பிரச்சினை இருக்காது என்று சொன்னார். கிழம் என்னை விரல் சூப்பும் பப்பா என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. நானும் தலையை ஆட்டிவிட்டு அவரை அவ்வப்போது உசுப்பி விட்டுக்கொண்டும், விரட்டி அடித்துக் கொண்டும் ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி நடித்துக் கொண்டும் டைம் பாஸ் செய்து கொண்டிருந்தேன்.

அமெரிக்கா போனார். தினமும் ஃபோன் செய்வார்.அவர் அங்கே இருக்கும்போது பத்மஸ்ரீயும் வந்துவிட்டது. சரி லைஃப் செட்டில்ட் என்று இருந்தேன். இவருக்கு வந்தவுடன் பாராட்டு விழாக்கள், அது இது என்று இவருக்கும் எனக்கும் சேர்ந்து இருக்க நேரமே கிடைக்கவில்லை. அவருக்கு தவிப்பு! உண்மையில் எனக்கும் கொஞ்சம் தவிப்புதான். இங்கே வந்ததும் நானே இவருக்கு சில முறை ஃபோன் செய்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

ஆயிற்று. வீட்டுக்கு வந்தாயிற்று. முருங்கைக்காய் சாம்பார் நானே சமைத்துப் பரிமாறினேன். அம்மா கொஞ்சம் தள்ளிப் போனபோது என்னைப் பார்த்து கண்ணடித்து இனி மேல் இதற்கெல்லாம் தேவை இல்லை என்று சிரித்தார். அம்மா “தூங்கிய” பிறகு நான் அவர் ரூமுக்குப் போனேன். எனக்காக ஏதோ அரைகுறையான உள்ளாடைகள் எல்லாம் வாங்கி வந்திருந்தார். எல்லாம் பப்பரக்கா என்று தெரிகிறது! எனக்கு கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது. அதைப் போட்டுக் கொண்டு வந்தேன். நானே ஆச்சரியப்படும் அளவுக்கு கலக்கினார். அவரது இதயத்தின் வேகமான துடிப்பை நான் நன்றாக உணர முடிந்தது. மாத்திரையின் விளைவா, நான் “போட்டிருந்த” உடையைக் கண்டு கிளர்ச்சியா, இல்லை இத்தனை நாள் பிரிந்திருந்த காய்ந்த மாடு கம்பங்கொல்லையை கண்டுவிட்டதா? எது எப்படி இருந்தால் என்ன? திருப்தி!

ஐந்து நிமிஷம் கழித்து அவரின் முகம் பூராவும் முத்தமிட்டேன். சரி எழுந்திருங்க எழுந்திருங்க என்று அவரை எழுப்பினேன். அவர் கண்டு கொள்ளவே இல்லை. அப்படியே படுத்திருந்தார். என்னங்க என்னங்க என்று அவரை கொஞ்சம் தள்ளினேன். அப்படியே விழுந்தார். மனிதன் போய்விட்டார்!

அடுத்த கிழவனை வயாகரா வாங்க அனுப்புவதற்கு முன்னால் சொத்துக்கான உரிமையை பெற்றுக் கொள்ள வேண்டும்!


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

4 Replies to “காமம் காமம் என்ப”

Leave a Reply to முருகன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.