நீங்களும் உங்கள் ஆராய்ச்சியும் – ரிச்சர்ட் ஹாமிங்

தமிழாக்கம் : நம்பி கிருஷ்ணன்

குறிப்பு:

ரிச்சர்ட் வெஸ்லி ஹாமிங் (Richard Wesley Hamming) சென்ற நூற்றாண்டின் பிரபலான கணிதவியலாளர். பெல் தொலைபேசி ஆய்வகங்களில் கம்ப்யூட்டிங் புரட்சியின் ஆரம்ப நாட்களில் பணியாற்றியவர். கணினி, தொலைத்தொடர்புத் துறைகளில் தீர்க்கதரிசியாகக் கொண்டாடப்படுபவர். சுயமாகப் பிழைகளைத் திருத்திக் கொள்ளும் அமைப்புகளில் அவரது பிரசித்தி பெற்ற ஹாமிங் கோட்கள் (hamming codes) பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவரது பங்களிப்புக்காக 1968-இல் கணினி அறிவியலின் உச்சமெனக் கருதப்படும் டூரிங் விருதை அதன் மூன்றாவது பெறுநராகப் பெற்றவர். ஹாமிங் டிஸ்டன்ஸ், ஹாமிங் கிராஃப், ஹாமிங் விண்டோ, ஹாமிங் பவுண்ட் (hamming distance, hamming graph, hamming window, hamming bound) போன்றவை இவரது பிற அபாரமான பங்களிப்புகள். 

பெல் லாப்ஸில் முப்பது ஆண்டுகளாகப் பணியாற்றிய பின், மான்டரேயில் உள்ள கடற்படை முதுகலைக் கல்லூரியில் பேராசிரியராகத் தனது இரண்டாவது ஆட்டத்தைத் தொடங்கியவர். தனது கற்பனைமிக்க ஆசாதாரண தீர்வுகளையும், அணுகுமுறைகளையும் புத்தகங்களிலும் (The Art of Doing Science and Engineering, The Art of Probability for Scientists and Engineers), சொற்பொழிவுகளிலும் முன்வைத்தவர். மார்ச் 7 1986-இல் பெல்கோரில் அவர் அளித்த பேச்சின் மொழிபெயர்ப்பு இங்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 

“Problem”-இல் வேலை செய்வது இப்பேச்சில் பரவலாக இடம்பெறுகிறது. அது புதிர் விடுத்தல், சிக்கலுக்கான தீர்வு என்று பேசுபொருளுக்கு ஏற்ப மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. 

Speech Richard Hamming’s Famous You And Your Research – History’s Most Inspiring Speeches

என் பேச்சின் தலைப்பு “நீங்களும் உங்கள் ஆராய்ச்சியும்”. இது ஆராய்ச்சியை நிர்வகிப்பதைப் பற்றியது அல்ல, நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் ஆராய்ச்சியை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதைப் பற்றியது. அந்தத் தலைப்பிலும் என்னால் ஒரு பேச்சை வழங்க முடியும் – ஆனால் இது அதுவல்ல, இது உங்களைப் பற்றியது. நான் சாதாரண காமா சோமா ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவில்லை; பெரும் ஆராய்ச்சியைப் பற்றி பேசுகிறேன். சிறந்த ஆராய்ச்சியை விவரிக்கும் பொருட்டு நான் எப்போதாவது நோபல் பரிசு வகை வேலை என்று கூறுவதுண்டு. நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்று அவசியமில்லை, ஆனால் குறிப்பிடத்தக்கவை என்று நாம் உணர்ந்து கொள்ளும் அவ்வகையான விஷயங்களைப் பற்றியே பேசுகிறேன். உதாரணங்கள் வேண்டுமானால், ரிலேடிவிட்டி என்றழைக்கபடும் சார்பியல், அல்லது ஷானனின் (Shannon) தகவல் கோட்பாடு, இப்படி எவ்வளவோ சிறந்த கோட்பாடுகள் – இவற்றைப் போன்றதையே பேசுகிறேன்.

இந்த ஆய்வை நான் எவ்வாறு மேற்கொண்டேன்? மற்றவர்கள் பயன்படுத்திய கணினி இயந்திரங்களை இயக்குவதற்காகவே நான் லாஸ் அலமோஸிற்குக் கொண்டுவரப்பட்டேன். விஞ்ஞானிகள் இயற்பியலாளர்கள் எல்லாம் கணினி இயந்திரங்களை இயக்குவதில் தங்கள் நேரத்தை விரயம் செய்யாது அவரவர் துறைகளில் மட்டும் தங்கள் கவனத்தைச் செலுத்துவதற்காக என்னை ஒரு எடுபிடியாக வைத்திருந்தார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன். உடல்ரீதியாக ஒத்திருந்தாலும், என்னிடமிருந்து அவர்கள் வித்தியாசப்பட்டிருப்பதையும். அப்பட்டமாகக் கூறவேண்டுமானால், நான் பொறாமைப்பட்டேன். என்னிடமிருந்து அவர்கள் ஏன் அவ்வளவு வித்தியாசமாக இருந்தார்கள் என்பதை அறிய விரும்பினேன். ஃபெய்ன்மனை (Feynman) மிக அருகிலிருந்து அவதானித்திருக்கிறேன். ஃபெர்மி, டெல்லரையும்கூட (Fermi, Teller). ஓபன்ஹைமரையும். ஹான்ஸ் பீட்டவுடனும் (Oppenheimer, Hans Bethe) பழகியிருக்கிறேன்: பீட்ட அப்போது என் மேலாளராக இருந்தார். இப்படிப் பல திறமைசாலிகளுடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. செய்பவர்களுக்கும் செய்திருக்கக்கூடியவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டில் மிகவும் ஆர்வமானேன்.

Richard Feynman There’s plenty of room at the bottom’, Nanotechnology lecture – 1959

பெல் லாப்ஸிற்குப் பணிபுரிய வந்தபோது ஆராய்ச்சி உற்பத்தியில் மேலிடத்தை வகித்த ஒரு துறையிலேயே முதலில் ஆரம்பித்தேன். ஷானன் இருந்தார், மேலும் பலரும் அங்கிருந்தனர். “ஏன்?”, “என்ன வித்தியாசம்?” என்ற கேள்விகளைத் தொடர்ந்து ஆராய்ந்தேன். அதன்பின் சரிதைகளையும் சுயசரிதைகளையும் வாசித்து, பலரிடம் “உங்களால் இதை எப்படிச் செய்ய முடிந்தது” போன்ற கேள்விகளையும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். இந்தப் பேச்சும்கூட அதைப் பற்றியதுதான்.

சரி, இந்தப் பேச்சு ஏன் முக்கியமானது? ஏனென்றால், நான் அறிந்தவரையில், உங்கள் ஒவ்வொருவருக்கும், வாழ்வதற்கு ஒரே வாழ்வுதான் இருக்கிறது என்பதால். நீங்கள் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், ஒரு வாழ்விலிருந்து அடுத்ததுக்குச் செல்கையில் அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதால். இந்த ஒரு வாழ்க்கையிலேயே நீங்கள் ஏன் குறிப்பிடத்தக்க விஷயங்களைச் செய்யக்கூடாது? குறிப்பிடத்தக்கவை என்பதை நீங்கள் எப்படி வரையறுத்தாலும். நான் அதை வரையறுக்கப் போவதில்லை, என்ன சொல்லவருகிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். நான் அறிவியலை மட்டுமே ஆழ்ந்து படித்திருப்பதால் அதைக் குறித்தே பிரதானமாகப் பேசப் போகிறேன். ஆனால் எனக்குத் தெரிந்தவரையில், பிறர் கூறியதை வைத்துப்பார்த்தால், நான் கூறுவது பெரும்பாலும் பல துறைகளுக்கும் பொருந்தும். மிகச்சிறந்த பணி என்பது பெரும்பாலான துறைகளில் ஒரே மாதிரியாகத்தான் வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் நான் அறிவியலோடு நிறுத்திக் கொள்கிறேன். 

உங்களைத் தனிப்பட்ட முறையில் சென்றடைய நான் தன்மையில் பேசியாக வேண்டும். அடக்கத்தைத் துறக்கச் செய்து “ஆம், நான் முதல்தர வேலையைச் செய்ய விரும்புகிறேன்” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளும்படி உங்களை உந்த வேண்டும். மிகச்சிறந்த பணிகளைச் செய்யப் புறப்படும் மனிதர்களைப் பார்த்து நமது சமூகம் முகம் சுளிக்கிறது. நீங்கள் அவற்றைச் செய்ய முனையாதிருப்பதையே அது எதிர்பார்க்கிறது; திடீரென்று அதிர்ஷ்டமடித்து மகத்தான பணிகளை நீங்கள் தற்செயலாகச் செய்ய வேண்டுமாம். என்ன ஒரு முட்டாள்தனமான சிந்தனை! நான் சொல்கிறேன், நீங்கள் ஏன் முக்கியமான ஒன்றைச் செய்ய முற்படக் கூடாது? மற்றவர்களிடம் சொல்ல வேண்டியதில்லை, ஆனால் “ஆம், நான் குறிப்பிடத்தக்க ஒன்றைச் செய்ய விரும்புகிறேன்” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ள வேண்டாமா?

அடுத்த கட்டத்திற்குச் செல்ல, நான் தன்னடக்கத்தைக் கைவிட்டு பார்த்ததை, செய்ததை, கேட்டதை நேரடியாகத் தன்மையில் பேசவேண்டும். குறிப்பிட்ட நபர்களைப் பற்றிப் பேசப் போகிறேன், உங்களுக்கும் சிலரைத் தெரிந்திருக்கும், நாம் அரங்கைவிட்டு வெளியேறுகையில் நான் கூறியதில் சிலதை நீங்கள் மேற்கோள் காட்டமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

Manuscript notes on the flyleaf of “Numerical Methods for Scientists and Engineers”

தர்க்கரீதியாக அல்ல, உளவியல்ரீதியாக ஆரம்பிக்கிறேன். மகத்தான அறிவியல் அதிர்ஷ்டத்தால் செய்யப்படுகிறது என்று மக்கள் நினைக்கிறார்கள் என்பதே பெரும் தடையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். எல்லாமே குருட்டாம்பேக்கில் அதிர்ஷ்டத்தால் நடக்கிறது என்ற எண்ணம். சரி, ஐன்ஷ்டைனையே எடுத்துக் கொள்வோமே. அவர் எவ்வளவு வேறுபட்ட முக்கியமான விஷயங்களை செய்தார் என்பதைக் கவனியுங்கள். அவை எல்லாமே அதிர்ஷ்டமா? அளவிற்கு அதிகமான மீள்நிகழ்வு போலில்லையா? ஷானனை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் தகவல் கோட்பாட்டை மட்டும் செய்யவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர் வேறு சில நல்ல விஷயங்களையும் செய்தார், இன்னமும் குறியாக்கவியலின் (Cryptography) பாதுகாப்பின் பேரில் பூட்டுபோட்டு வைத்திருக்கிறார். இப்படிப் பல நல்ல விஷயங்களை அவர் செய்திருக்கிறார்.

ஒரு திறமையான நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளில் திறம்படச் செயல்படுவதை நாம் மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். ஒரு நபர் தனது முழு வாழ்க்கையிலும் ஒரு காரியத்தை மட்டுமே செய்வதை நாம் எப்போதாவாது காண நேரிடலாம். அதைப் பற்றி பிறகு பேசுவோம். ஆனால் பல சமயங்களில் இது மீண்டும் மீண்டும் நிகழ்வதையே இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். அதிர்ஷ்டம் எல்லாவற்றையும் வழிநடத்துவதில்லை என்பதையும். மேலும், “தயாரான மனதை அதிர்ஷ்டம் சாதகமாக்குகிறது” என்று கூறிய பாஸ்டரை (Pasteur) நான் மேற்கோள் காட்டுவேன். நான் நம்புவதையே அம்மேற்கோளும் மொழிகிறது என்று நினைக்கிறேன். ஆம், சிறிது அதிர்ஷ்டமும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நான் சொல்லவருவது இதுவல்ல. விரைவாகவோ தாமதமாகவோ தயார் நிலையில் இருக்கும் மனது முக்கியமானதைக் கண்டறிந்து அதைச் செய்து முடிக்கிறது. ஆக, ஆமாம் அதிர்ஷ்டம்தான்; குறிப்பிட்ட அந்த முக்கியமான விஷயத்தைக் கண்டறிவதில் அதிர்ஷ்டம் இருக்கிறது, ஆனால் முக்கியான ஏதோவொன்றை நீங்கள் செய்துமுடிப்பதில் அதிர்ஷ்டமேதுமில்லை.   

Claude Shannon

உதாரணமாக, நான் பெல் லாப்ஸிற்கு வந்தபோது, ஷானனுடன் சிறிது காலம் அலுவலகத்தைப் பகிர்ந்து கொண்டேன். அப்போது அவர் தகவல் கோட்பாட்டிலும் நான் நிரலாக்கக் கோட்பாட்டிலும் (Information theory, Coding Theory) பணியாற்றிக் கொண்டிருந்தோம். நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில், அது ஏதோ அச்சூழலின் இயல்பைப் போல, இதைச் செய்தோம் என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருக்கலாம். அதையொருவர் “பார்த்தீர்களா, இதுதான் அதிர்ஷ்டங்கறது” என்றும் கூறலாம். அதே சமயத்தில் இதை இப்படியும் யோசித்துப் பார்க்கலாம் “பெல் லாப்ஸில் அவ்வளவு பேர்கள் இருக்கையில் ஏன் இவர்களிருவர் மட்டுமே இதை செய்யதார்கள்?” ஆம், ஓரளவிற்கு அதிர்ஷ்டத்தாலும், ஓரளவிற்குத் தயார்நிலையிருக்கும் மதியாலுமே இவை நடந்து முடிகிறது; நான் பேசப் போகும் மற்றொரு விஷயம் இந்த “ஓரள”விற்கைப் பற்றிதான். எனவே, நான் இன்னும் பல முறை அதிர்ஷ்டத்தைத் திரும்பிப் பேசுவேன் என்றாலும், அது மட்டுமே நீங்கள் முக்கியமான விஷயத்தைச் செய்கிறீர்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கிறது என்ற கூற்றை நான் முதலிலேயே புறந்தள்ள விரும்புகிறேன். முற்றிலும் இல்லை என்றாலும் ஓரளாவிற்கேனும் உங்கள் பணியின் இலக்கு உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதையே இங்கு வலியுறுத்துகிறேன். இறுதியாக, இந்த விஷயத்தில் நியூட்டனை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்: “என்னைப் போல் மற்றவர்களும் கடுமையாகச் சிந்தித்தால், அவர்களும் இதையொத்த விளைவுகளை எய்துவார்கள்” என்று அவர் ஒருமுறை கூறியதை. 

உங்களுக்குக் காணக்கிடைக்கும் குணாதிசயங்களில் ஒன்று, சிறந்த விஞ்ஞானிகள் உட்பட பலரும் அதைக் கொண்டுள்ளனர், பொதுவாக இளமையில் அவர்கள் சுதந்திரமாக சிந்தித்து அச்சிந்தனைகளைப் பின்தொடரும் தைரியத்தையும் கொண்டிருந்தார்கள் என்பதே. உதாரணமாக, ஐன்ஸ்டைன், தனது 12 அல்லது 14-ஆம் வயதில், “ஒளி அலையைப் பார்க்க ஒளியின் வேகத்துடன் சென்றால் அது எவ்வாறு காட்சியளிக்கும்?” என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டார். நிலையான இடம்சார்ந்த பெருமங்களை (local maximum) மின்காந்தக் கோட்பாடு அனுமதிப்பதில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் ஒளியின் வேகத்துடன் சென்றார் எனில் ஓர் இடம்சார்ந்த பெருமத்தை அவர் பார்த்திருக்கக்கூடும். ஆக 12, 14 அல்லது அப்படிபட்ட ஓர் வயதிலேயே அவரால் ஒரு முரண்பாட்டை அடையாளங்காண முடிந்தது. ஏதோ உதைக்கிறது, ஒளியின் வேகம் வினோதமானது என்பதையும். இறுதியில் சிறப்பு சார்பியல் கோட்பாட்டை அவர் உருவாக்கியது அதிர்ஷ்டமா? ஆரம்பத்திலேயே அதன் துண்டங்களை அவதானித்து சில பகுதிகளை அவரால் நிறுவ முடிந்தது. இது அத்தியாவசிய நிபந்தனை என்றாலும் முற்றிலும் போதுமானதல்ல. நான் பேசவிருக்கும் இவ்வுருப்படிகள் அனைத்துமே அதிர்ஷ்டத்துடன் சம்பந்தப்பட்டும், படாமலும் இருக்கின்றன.

உடம்பெல்லாம் மூளை? கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. இந்த அறையில் அமர்ந்திருக்கும் உங்களில் பெரும்பாலானோருக்கு அனேகமாக முதல் தர வேலைகளைச் செய்வதற்குப் போதுமான மூளைகள் இருக்கலாம். ஆனால் மகத்தான பணி என்பது வெறும் மூளையைக் காட்டிலும் பிறிதொன்று. மூளை பல்வேறு வழிகளில் அளவிடப்படுகிறது. பெரும்பாலும் கணிதம், கோட்பாட்டு இயற்பியல், வானியற்பியல் போன்ற துறைகளில் குறியீடுகளைக் கையாளும் திறனுடன் அது அதிக அளவில் தொடர்புபடுத்தப்படுகிறது. எனவே வழக்கமான IQ எனப்படும் நுண்ணறிவுச் சோதனைகளில் அவர்கள் உயர்ந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கான சாத்தியம் அதிகம். ஆனால் பிற துறைகளில் இப்படியல்ல. எடுத்துக்காட்டாக, மண்டல உருகலைச் (zone melting) செய்த ஆசாமி, பில் ஃபன் (Bill Pfann), ஒருநாள் என் அலுவலகத்திற்கு வந்தார். தனது இலக்கைக் குறித்த தோராயமான எண்ணம் அவர் மனதிலிருந்தது, அதனுடன் சில சமன்பாடுகளும். மனிதருக்குக் கணிதம் அதிகம் தெரியாது என்பதும், அவர் உண்மையில் பேசத் தெரியாதவர் என்பதும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவரது புதிர் சுவாரசியமாக இருந்ததால் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று கொஞ்சம் வேலை செய்தேன். இறுதியில் அவரே அவரது விடைகளைக் கணக்கிடும் வகையில் கணினிகளை எவ்வாறு இயக்குவது என்பதை அவருக்குக் காட்டினேன். கணக்கிடுவதற்கான அதிகாரத்தை அவருக்களித்தேன். தன் துறையிலிருந்து குறைந்தபட்ச அங்கீகாரமே கிடைத்தது என்ற குறையையும் மீறி அவர் முன்னேறினார். இறுதியில் துறையின் அனைத்து பரிசுகளையும் அள்ளினா. தொடக்கத்திலிருந்த தயக்கத்தைத் தொலைத்தபின், அவரது கூச்சம், அருவருப்பு, பேசாமை போன்றவை உதிர்ந்து காணமல் போயின, பல இதர வழிகளில் அவர் மேலும் பயனளிப்பவர் ஆனார். மேலும், சந்தேகமின்றி அவரது சிந்தனைகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறனும் அதிகரித்தது. 

அதே போல் மற்றொரு நபரையும் என்னால் மேற்கோள் காட்ட முடியும். க்ளாக்ஸ்டன் (Clogston) என்ற ஆசாமி, அவர் இங்கு பார்வையாளராக அமர்ந்திருக்கவில்லை என்று நம்புகிறேன். ஜான் பியர்ஸின் (John Pierce) குழுவில் பணிபுரிந்தபோது அவரைச் சந்தித்தேன், அவரிடம் சரக்கு அதிகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. கல்லூரியில் அவருடன் இருந்த நண்பர்களிடம், “பட்டப்படிப்பு படிக்கையிலும் அவர் இப்படித்தான் இருந்தாரா?” என்று கேட்டேன். “ஆம்” என்று பதிலளித்தார்கள். சொல்லப்போனால், நான் அந்த நபரை வேலையிலிருந்து நீக்கியிருப்பேன்; ஆனால் ஜே.ஆர்.பியர்ஸ் புத்திசாலி, அவரைத் தொடர்ந்து வேலையில் வைத்திருந்தார். க்ளாக்ஸ்டன் இறுதியாக க்ளாக்ஸ்டன் கேபிளைக் கண்டுபிடித்தார். அதன்பிறகு அவரிடம் சிறந்த கருத்துக்களின் நிலையான ஓட்டம் இருந்தது. வெற்றி அவருக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தது.

Donald Herriot, Ali Javan, and William Bennett with one of the first lasers, circa 1961.
Credit…Courtesy of Alcatel-Lucent USA Inc. and the AT&T Archives and History Center

வெற்றிகரமான விஞ்ஞானிகளின் பண்புகளில் ஒன்று தைரியம். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, முக்கியமான புதிர்களுக்கு உங்களால் விடைகாண முடியும் என்று நீங்கள் நம்பினால், உங்களால் அதைச் செய்து முடிக்க முடியும். முடியாதென்று நினைத்தால், அனேகமாக உங்களால் அவற்றைச் செய்து முடிக்க இயலாது. தைரியம் ஷானனின் செம்மையான பண்புகளில் ஒன்று, அவரிடம் நிறையவே இருந்தது. அவரது பிரதான தேற்றமே இதற்கு சாட்சி. புதிய கோடிங் முறையொன்றை உருவாக்க விரும்பினார். ஆனால் என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை, அதனால் சீரற்ற நிராலாக்கமொன்றை (random code) உருவாக்குகிறார். ஒரு முட்டுசந்தில் மாட்டிக்கொள்கிறார். அதன்பின் சாத்தியமற்ற கேள்வியொன்றை அவர் கேட்கிறார்: “சராசரியான சீரற்ற நிரலாக்கம் என்ன செய்யும்?” சராசரி நிரலாக்கமும் ஏதோவொரு சாத்தியத்தில் அனிச்சையாக நல்ல நிரலாக்கமாக அமையும் என்பதால், நல்ல நிரலாக்கம் என்பது கண்டிப்பாக இருந்தாக வேண்டும் என்பதை நிரூபிக்கிறார். எல்லையற்ற தைரியமுள்ள ஒரு மனிதரைத் தவிர வேறு யாரால் இம்மாதிரியான எண்ணங்களைச் சிந்திக்கத் துணிந்திருக்க முடியும்? இதுவே பெரும் விஞ்ஞானிகளின் பண்பு; அவர்களுக்குத் துணிவிருக்கிறது. நம்பமுடியாத சூழ்நிலையிலும் அவர்கள் முன்னேறுவார்கள்; அவர்கள் சிந்திக்கிறார்கள், தொடர்ந்து சிந்திக்கிறார்கள்.

இயற்பியலாளர்கள் குறிப்பாக கவலைப்படும் மற்றொரு காரணி வயது. இளமையாக இருக்கையில் செய்துமுடித்தாக வேண்டும் அல்லது ஒருபோதும் செய்ய மாட்டீர்கள் என்று அவர்கள் எப்போதும் கூறுகிறார்கள். ஐன்ஸ்டைன் தன் ஆரம்பகாலத்திலேயே பலவற்றைச் செய்துமுடித்தார் அதேபோல் நம்மெல்லோரையும் காண்டடிக்கும் வகையில் இளமையிலேயே தங்கள் மிகச்சிறந்த பணிகளைச் செய்துமுடித்த அந்த குவாண்டம் மெக்கானிக் கூட்டாளிகள்! பெரும்பாலான கணிதவியலாளர்கள், கோட்பாட்டு இயற்பியலாளர்கள் வானியற்பியல் வல்லுநர்கள் இளமையாக இருக்கும்போதே அவர்களின் சிறந்த வேலை என்று நாம் கருதுவதைச் செய்து முடிக்கிறார்கள். வயதான காலத்தில் அவர்கள் சிறந்த வேலையைச் செய்யவில்லை என்றில்லை, ஆனால் அவர்கள் ஆரம்பத்தில் செய்ததையே நாம் மிகவும் மெச்சுகிறோம். மறுபுறம், இசை, அரசியல் இலக்கியம் போன்ற துறைகளில் பெரும்பாலும் அவர்களின் சிறந்த வேலை என்று நாம் கருதுவது வயதான காலத்தில்தான் செய்யப்படுகிறது. நீங்களிருக்கும் துறை இந்த அளவுகோலில் எப்படிப் பொருந்துகிறது என்று எனக்குத் தெரியாது, ஆனால் வயது சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை மட்டும் சுட்ட விரும்புகிறேன்.

ஆனால் வயது ஏன் அதன் விளைவை ஏற்படுத்துகிறது என்பதையும் பேசிவிடுகிறேன். முதலாவதாக, சில நல்ல வேலைகளைச் செய்தீர்களானால், உடனேயே உங்களை எல்லா வகையான குழுக்களிலும் அமர்த்தி விடுவார்கள், எந்த வேலையையும் உங்களால் மேலும் செய்ய இயலாத அளவிற்கும். பிராட்டனுக்கு (Brattain) நோபல் பரிசு கிடைத்தபோது அவருக்கு நிகழ்ந்ததே உங்களுக்கும் நிகழலாம். பரிசு அறிவிக்கப்பட்ட அன்று நாங்கள் அனைவரும் அர்னால்ட் ஆடிட்டோரியத்தில் கூடியிருந்தோம்; மூன்று வெற்றியாளர்களும் மேடையேறி உரையாற்றினார்கள். மூன்றாவதாக உரையாற்றிய பிராட்டன், கிட்டத்தட்ட கண்களில் நீர் மல்க “இந்த நோபல்-பரிசு விளைவு பற்றி எனக்குத் தெரியும், அது என்னைப் பாதிக்க நான் அனுமதிக்கப் போவதில்லை; எப்போதும் போல் பழைய வால்டர் பிராட்டனாகவே இருக்கப் போகிறேன்” என்று உறுதியளித்தார். “நல்லதுதான்” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் சில வாரங்களிலேயே அது அவரைப் பாதித்ததைக் கண்டேன். இப்போது மகத்தான அறிவியல் புதிர்களில் மட்டுமே அவரால் பணியாற்ற முடியும்.

பிரபலமாக இருக்கையில் சிறுபுதிர் விடுத்தலில் வேலை செய்வது கடினம். ஷானன் இதில்தான் மாட்டிக்கொண்டார். தகவல் கோட்பாட்டிற்குப் பிறகு அதன் உச்சத்தை மீள்நிகழ்த்த ஒருவர் எதைச் செய்தாக வேண்டும்? பெரும் விஞ்ஞானிகள் இந்தத் தவறை அடிக்கடி செய்கிறார்கள். வலிமையான ஓக் மரங்களுக்கு வித்தாக அமையும் சிறிய ஏகார்ன்களை அவர்கள் தொடர்ந்து நடவு செய்யத் தவறவிடுகிறார்கள். எடுத்த எடுப்பிலேயே பெரிதினும் பெரிதைச் செய்ய முனைகிறார்கள். ஆனால் நடப்பு இப்படிச் செல்வதில்லை. இதுவே ஆரம்பகால அங்கீகாரம் உங்களை மலடாக்குவதற்கான மற்றொரு காரணம். பலகாலமாக எனக்கு மிகப்பிடித்தமாக இருக்கும் ஒரு மேற்கோள் நினைவிற்கு வருகிறது. என்னைப் பொறுத்தவரையில் ப்ரின்ஸ்டனின் இன்ஸ்டிட்யூட் ஃபார் அட்வான்ஸ்ட் ஸ்டடி, ஒப்புமை நோக்கில் அந்நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் அதற்குள் நுழைவதற்கு முன் செய்ததையும் அதைவிட்டு வெளியேறிய பின் செய்தைதையும் வைத்துப் பார்த்தால், அந்த நிறுவனம் உருவாக்கியதைக் காட்டிலும் அதிக தரமான விஞ்ஞானிகளை நாசமாக்கியிருக்கிறது என்றே கூறவேண்டும். இப்படிச் சொல்வதால், அவர்கள் பின்னால் நல்ல பணியைச் செய்யவில்லை என்றில்லை, அதற்குள் வருவதற்கு முன்னால் அவர்கள் செம்மையாக இருந்தார்கள், விட்டு வெளியேறிய பின் வெறும் நன்றாகப் பணியாற்றுபவர்கள் என்று சொல்லத்தக்க வகையிலேயே இருந்தார்கள்.  

முன்னுக்குப்பின்னாகத் தோன்றினாலும் இப்போது பணிச்சூழலைப் பற்றிச் சிறிது பேசப் போகிறேன். பெரும்பாலும் தலைசிறந்த பணிச்சூழல் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் உண்மையில் அப்படியல்ல. ஏனெனில் நிலைமை மோசமாக இருக்கையில்தான் பெரும்பாலும் மக்கள் மிகுந்த ஆக்கத்துடன் செயலாற்றுகிறார்கள் என்பதால். கேம்பிரிட்ஜ் இயற்பியல் ஆய்வகங்களின் சிறந்த காலகட்டமொன்றில், அவர்கள் கிட்டத்தட்ட குடிசைகள் என்று வரையறுக்கத்தக்க கட்டிடங்களில் இருந்தார்கள் – ஆனால் அபாரமான இயற்பியல் வேலைகளை அவர்கள் அப்போதுதான் செய்தார்கள்.

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து ஒரு கதையை அளிக்கிறேன். அப்சொல்யூட் பைனரியில் கணினி இயந்திரங்களை நிரல்படுத்துவதற்கு பெல் லாப்ஸ் எனக்கு வண்டி வண்டியாக நிரலாளர்களைத் தரப் போவதில்லை என்பது ஆரம்பத்திலேயே எனக்கு தெளிவாகத் தெரிந்தது, ஒருபோதும் கிடைக்காது என்பதையும் தெளிவாகவே புரிந்துகொண்டேன். ஆனால் அப்போதெல்லாம் எல்லோரும் அப்படித்தான் செய்துகொண்டிருந்தார்கள். வெஸ்ட்கோஸ்ட் எனப்படும் மேற்குக் கடற்கரைக்குச் சென்று விமான நிறுவனங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஒரு வேலையில் என்னால் சேர்ந்திருக்க முடியும், ஆனால் பெல் லாப்ஸில்தான் உற்சாகமூட்டும் நபர்களெல்லாம் இருந்தார்கள். விமான நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் அப்படிப்பட்டவர்களல்ல. “போகலாமா வேண்டாமா?” என்று நீண்ட நேரம் யோசித்தேன். கூழ் மீசை இரண்டையும் எப்படித் தக்கவைத்துக் கொள்வதென்பதையும். இறுதியில் “ஹாமிங், நீயோ இயந்திரங்களால் கிட்டத்தட்ட அனைத்தையுமே செய்ய முடியும் என்பதை நம்புபவன், அவற்றை உன்னால் ஏன் நிரல்களை எழுத வைக்க முடியாது?” முதலில் குறைபாடாகத் தோன்றியது விரைவிலேயே என்னை அந்தக் காலத்திலேயே தானியங்கி நிரலாக்கத்திற்குக் கட்டாயப்படுத்தியது. கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்கையில் குறையெனத் தோன்றுவது பெரும்பாலும் நம்முடைய மிகப்பெரிய சொத்தாக மாறிவிடுகிறது. ஆனால் முதலில் அதை எதிர்கொள்கையில் அப்படி யோசிக்காமல் “சே, தேவையான நிரலாளர்கள் கிடைக்காதபட்சத்தில் நான் எங்கே மகத்தான நிரல்களை உருவாக்கப் போகிறேன்?” என்றொருவர் அங்கலாய்க்கலாம். 

இது போல எத்தனையோ கதைகள் இருக்கின்றன; கிரேஸ் ஹாப்பர்கூட (Grace Hopper) இம்மாதிரியான அனுபவங்களை பேசியிருக்கிறார். கவனமாக அவதானித்தீர்களானால், மகத்தான விஞ்ஞானிகள், சிக்கலை சிறிது மாற்றியமைத்து, குறைபாட்டையும் சாதகமாக்கிக் கொள்வதை நீங்கள் இனம் காண்பீர்கள். உதாரணமாக, ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணமுடியவில்லை என்பதை உணர்ந்தபின் பல விஞ்ஞானிகள் அதை ஏன் செய்ய முடியவில்லை என்பதை ஆராய்கிறார்கள். பிறகு அதை தலைகீழாக திருப்பிப் போட்டு “அட இதுதான் சங்கதியா” என்று ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார்கள். ஆக, ஆதர்சமான பணிச்சூழலெல்லாம் விசித்திரமானதும்கூட. நீங்கள் விரும்பும் சூழல்களெல்லாம் உங்களுக்கு எப்போதும் சாதகமானவைகளாக அமைந்து விடுவதில்லை. 

THE IDEA FACTORY: Bell Labs and the Great Age of American Innovation

முனைப்பைப் பொறுத்தமட்டில் பல மாபெரும் விஞ்ஞானிகளுக்கு அபாரமான முனைப்பிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பெல் லாப்ஸில் ஜான் டூகியுடன் (John Tukey) பத்து ஆண்டுகள் பணியாற்றினேன். அவரிடம் அபாரமான முனைப்பிருந்தது. நான் சேர்ந்து மூன்று நான்கு ஆண்டுகளிருக்கும், ஒருநாள், ஜான் டூகி என்னைவிட சற்று இளையவர் என்பதை அறிந்துகொண்டேன். ஜானொரு மேதை, நான் மேதையல்ல என்பது திண்ணம். போடின் (Bode) அலுவலகத்திற்குள் கோபத்துடன் நுழைந்து “என் வயதுள்ள ஒருவர் எப்படி ஜான் டூகி அளவிற்கு விஷயம் தெரிந்தவராக ஆக முடியும்?” என்று கேட்டேன். அவர் நாற்காலியில் சாய்ந்து, கைகளை தலைக்குப் பின்னால் கோர்த்துக் கொண்டு, லேசாக சிரித்தபடி “உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஹாமிங், அவரளவிற்கு அவ்வளவு ஆண்டுகள் நீயும் கடுமையாக உழைத்திருந்தாயானால் உனக்கும் எவ்வளவு தெரிந்திருக்குமென்று” என்று கூறினார். அனைத்தையும் பொத்திக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினேன்!

போட் கூறியது இதுதான்: அறிவும் உற்பத்தித்திறனும் கூட்டு வட்டி போன்றவை. ஏறத்தாழ ஒத்தத் திறனைக் கொண்டிருக்கும் இருவரை எடுத்துக்கொள்வோம். ஒருவரைக் காட்டிலும் மற்றொருவர் பத்து சதவிகிதம் அதிகமாக வேலை செய்பவர் என்றால் பிந்தையவர் முன்னவரைக் காட்டிலும் இரு மடங்கிற்கும் அதிகமாகவே உற்பத்தி செய்வார். எவ்வளவு அதிகம் அறிந்து கொள்கிறீர்களோ அவ்வளவு அதிகம் கற்கவும் செய்கிறீர்கள்; அதிகம் கற்கையில் அதிகம் செயலாற்றுகிறீர்கள்; அதிகம் செயலாற்றுகையில், அதிக வாய்ப்புகள் கிட்டுகின்றன – கிட்டத்தட்ட இது கூட்டு வட்டி போன்றதுதான். குறிப்பிட்ட வட்டி வீதமெல்லாம் தர விருப்பமில்லை, ஆனால் அது அதிகமான வீதம் என்பதை மட்டும் கூற விரும்புகிறேன். ஒற்ற திறனுள்ள இருவரை எடுத்துக் கொள்வோம், ஒருவர் மற்றவரைக் காட்டிலும் தினமும் ஒரு மணி நேரம் அதிகம் சிந்திக்கிறார் என்று வைத்துக் கொண்டால், அவரே ஆயுட்காலம் என்று வருகையில் அதிகம் ஆக்கவளமுள்ளவராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. போட் கூறியதை நான் தாரக மந்திரமாகவே உள்வாங்கிக் கொண்டேன். என் நேரத்தை இன்னும் சற்று அதிகமாக உழைப்பதில் செலவழித்தேன். அதற்கேற்றாற் போல் என் உற்பத்தி பெருகியதைக் கண்கூடாகவே உணர்ந்தேன். என் மனைவிக்கு எதிரே இதை ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றாலும் சில சமயங்களில் அவளை நான் ஒரு வகையில் அசட்டை செய்தேன் என்பதே உண்மை. கற்றுக்கொள்ள எனக்கு நிறைய இருந்தது. விழைவதைச் செய்து முடிக்க வேண்டுமானால் பல விஷயங்களை அசட்டை செய்தாக வேண்டி இருக்கிறது. இதில் சந்தேகமேதும் இல்லை.



இந்த உத்வேகம் சமாச்சாரத்தைப் பற்றி எடிசன் “மேதைமை என்பது 99 சதவீதம் வேர்வை ஒரு சதவீதம் மனவூக்கம்” என்று கூறியிருக்கிறார். சற்றே மிகைப்படுத்துகிறார் என்றே வைத்துக் கொண்டாலும் நீங்கள் தொடர்ந்து அளிக்கும் உறுதியான உழைப்பு உங்களை வியக்கத்தக்க வகையில் வெகுதூரம் அழைத்துச் செல்லும். இடையறாத உழைப்பை கொஞ்சம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினாலே போதும், இலக்கை அடைந்து விடுவீர்கள். இதுதான் பிரச்சினை; சரியாக வழிநடத்தப்படாத உத்வேகம் உங்களை எங்கும் இட்டுச் செல்லாது. பெல் லாப்ஸில் என்னளவிற்கு, ஏன் என்னைவிடக் கடினமாகவே உழைத்த என் உற்ற நண்பர்கள் பலரும் சொல்லும்படியான, அவ்வுழைப்பிற்கு ஏற்ற, விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதை நான் பலமுறை யோசித்திருக்கிறேன். முயற்சியின் தவறான பயன்பாடென்பது மிகவும் சீரியஸான விஷயம். கடின உழைப்பு மட்டும் போதாது – அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும்.

நான் பேச விரும்பும் மற்றொரு பண்பு உள்ளது; தெளிவின்மையே அப்பண்பு. அதன் முக்கியத்துவத்தை அறிய எனக்குச் சிறிது நேரம் பிடித்தது. பெரும்பாலானோர் ஏதோவொன்றை உண்மை அல்லது உண்மை இல்லை என்று நம்ப விரும்புகிறார்கள். சிறந்த விஞ்ஞானிகள் தெளிவின்மையை நன்கு பொறுத்துக்கொள்கிறார்கள். முன்னெடுத்துச் செல்லப் போதுமான அளவிற்குக் கோட்பாட்டில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதே சமயம் அவர்களிடத்தே பிழைகள், தவறுகளைக் கவனிப்பதற்கான போதுமான சந்தேக உணர்வும் இருப்பதால் அவர்களால் மாற்றுக் கோட்பாட்டை உருவாக்கி முன்னேற முடிகிறது. கண்மூடித்தனமாக நம்பினால் குறைகளைக் கவனிக்க மாட்டீர்கள்; அதிகமாகச் சந்தேகித்தால் உங்களால் ஆரம்பிக்கவே முடியாது. இரண்டிற்கும் இடையே ஒரு நளினமான சமநிலை தேவைப்படுகிறது. பெரும்பாலான சிறந்த விஞ்ஞானிகள் தங்கள் கோட்பாடுகள் ஏன் உண்மை என்பதை நன்கு அறிந்திருக்கிறார்கள். அதே சமயம் சற்றே பொருந்தாத சில பொருந்தாமைகளையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவற்றை அவர்கள் மறப்பதில்லை. டார்வின் தனது சுயசரிதையில் தனது நம்பிக்கைகளுக்கு முரணாகத் தோன்றும் ஒவ்வொரு ஆதாரத்தையும் எழுதும் அவசியத்தைப் பற்றி எழுதுகிறார், இல்லையெனில் அவை அவரது மனதில் இருந்து மறைந்துவிடும் என்பதற்காக. வெளிப்படையான குறைகளைக் கண்டறிந்தால் அவற்றை நீங்கள் ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டும். அவை எவ்வாறு விளக்கப்படலாம் அல்லது அவற்றிற்கு ஏற்றவாறு கோட்பாட்டை எவ்வாறு மாற்றலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் பெரும் பங்களிப்புகளுக்கே இவை எல்லாம் பொருந்தும். மற்றொரு தசம இடத்தைச் சேர்ப்பதன் மூலம் பெரும் பங்களிப்புகள் அரிதாகவே செய்யப்படுகின்றன. மொத்தத்தில் பார்த்தால் இது உணர்வுபூர்வமான அர்ப்பணிப்பைச் சார்ந்தது. பெரும்பாலான சிறந்த விஞ்ஞானிகள் தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சினையில் முழுமையான ஈடுபாடுள்ளவர்களாக இருக்கிறார்கள். அர்ப்பணிப்பு இல்லாதவர்கள் மிகச் சிறந்த, முதல் தர படைப்புகளை அரிதாகவே உருவாக்குகிறார்கள்.


மீண்டும் சொல்கிறேன், அவசியமானதே என்றாலும் உணர்வுபூர்வமான அர்ப்பணிப்பு மட்டும் போதாது. அதற்கான காரணத்தையும் என்னால் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். படைப்பாற்றலை ஆராய்ந்த ஒவ்வொருவருமே இறுதியாக, “உங்கள் ஆழ்மனதில் இருந்தே படைப்பாற்றல் வெளிவருகிறது” என்று சொல்லத் தூண்டப்படுகிறார்கள். எப்படியோ திடீரென்று அது தோன்றிவிடுகிறது. ஆழ்மனதைப் பற்றி நமக்கு மிகக் குறைவாகவே தெரியும்; ஆனால் உங்கள் கனவுகளும் உங்கள் ஆழ்மனதிலிருந்தே வெளிவருகின்றன என்பதை நீங்கள் நன்கறிந்திருப்பீர்கள். ஒரளவிற்கு உங்கள் அன்றாட அனுபவங்களின் உருமாற்றமே உங்கள் கனவுகள் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு விஷயத்தில் ஆழமாக ஒவ்வொரு நாளும் நீங்கள் ஈடுபட்டிருந்தால் உங்கள் ஆழ்மனதிற்கும் அதில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவேதான் நீங்கள் ஒருநாள் காலை அல்லது மதியம் எழுந்திருக்கையில், நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் பதில் உங்களுக்காகக் காத்திருக்கிறது. தாங்கள் எதிர்கொண்டிருக்கும் சிக்கலில் தங்களை ஆழ்த்திக் கொள்ளாதவர்களின் ஆழ்மனங்களோ வேறு சல்லித்தனங்களில் விரயம் ஆவதால் அவர்களால் பெரிய விளைவுகளெதையும் உருவாக்க முடிவதில்லை. எனவே உங்களை நிர்வகிப்பதற்கான சிறந்த வழி என்ன என்று கேட்டால், முக்கியமான சிக்கலுக்கான தீர்வில் வேலை செய்துகொண்டிருக்கையில் வேறு எதையுமே உங்கள் கவனத்தை மையப்படுத்த அனுமதிக்காதீர்கள் – சிக்கலில் மட்டுமே உங்கள் கவனம் குவிந்திருக்க வேண்டும். ஆழ்மனதைப் பட்டினி போடுங்கள், உங்கள் பிரச்சினையில் ஆழ்வதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை என்ற நிலை உருவாகும் வரையில். நிம்மதியாக உறங்குங்கள், காலையில் விடை உங்களுக்காகக் காத்திருக்கும், அதுவும் இலவசமாக! 

Robotics Research – Combining research in robotics and connected word speech recognition, an AT&T Bell Laboratories robot responds to Michael Brown’s instructions to move objects around on a table

நான் இயற்பியலாளர்களுக்கான மேஜையில் உணவருந்துவேன் என்று ஆலன் ஷினௌவெத் (Alan Chynoweth) கூறினார். நான் கணிதவியலாளர்களுடன்தான் உணவருந்திக் கொண்டிருந்தேன். ஏற்கனவே கணிசமான அளவிற்குக் கணிதம் தெரிந்திருந்தது என்பதை அந்த மேஜையில்தான் அறிந்துகொண்டேன்; சொல்லப்போனால் அங்கு நான் அதிகம் கற்றுக் கொள்ளவில்லை. இயற்பியல் மேஜை அவர் கூறியதுபோல் மிக சுவாரசியான ஒரு இடம், ஆனால் என் பங்களிப்பை அவர் மிகப்படுத்துகிறார் என்றே நினைக்கிறேன். ஷாக்லி, பிராட்டன், பார்டீன், ஜேபி ஜான்சன், கென் மெக்கே (Shockley, Brattain, Bardeen, J. B. Johnson, Ken McKay) முதலானோர் பேசுவதைக் கேட்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, நான் நிறையவே கற்றுக்கொண்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நோபல் பரிசு வந்தது, பதவி உயர்வு வந்தது, அடிமண்டியே எஞ்சியது. அதை யாருமே விரும்பவில்லை. போகட்டும், அவர்களுடன் சாப்பிடுவதில் ஒரு பயனுமில்லை. 

உணவுக்கூடத்தின் மறுபுறத்தில் ஒரு கெமிஸ்ட்ரி மேஜை இருந்தது. அதில் வழக்கமாக உணவருந்திய ஆய்வாளர்களில் ஒருவரான டேவ் மெக்காலுடன் (Dave McCall) நான் ஏற்கனவே பணிபுரிந்திருந்ததால் அங்கு சென்று “நான் உங்களுடன் சேர்ந்துகொள்வதில் ஆட்சேபணை ஏதுமில்லையே” என்று கேட்டேன். அவர்களால் வேண்டாம் என்று வெளிப்படையாகக் கூற முடியவில்லை, சிறிது காலத்திற்கு அவர்களுடன் உணவருந்தினேன். மேலும், “உங்கள் துறையின் முக்கியமான புதிர்கள் எவை?” என்று கேட்க ஆரம்பித்தேன். ஒரு வாரத்திற்குப் பிறகு “எந்த முக்கியமான புதிர்களை ஆய்வு செய்துகொண்டிருக்கிறீர்கள்?” மேலும் சில நாட்களுக்குப் பிறகு “நீங்கள் செய்வது முக்கியமல்ல, அது முக்கியமான விஷயத்திற்கு வழிவகுக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லை என்றால், நீங்கள் ஏன் பெல் லாப்ஸில் வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதன் பிறகு நான் அங்கு வரவேற்கப்படவில்லை; உடன் உணவருந்த நான் வேறு ஆளைப் பிடிக்க வேண்டியதாகிவிட்டது. இது நடந்தது வசந்த காலத்தில். 

L-R: Unknown, David McCall and Charles Slichter converse, undated. Department of Physics, University of Illinois at Urbana-Champaign, courtesy of Emilio Segrè Visual Archives of the American Institute of Physics

இலையுதிர் காலத்தில், டேவ் மெக்கால் என்னை ஹாலில் இடைமறித்தார், “ஹாமிங், நீங்கள் அன்று கூறியது மிகவுமே எரிச்சலூட்டியது. கோடை முழுவதும் இதைப் பற்றி யோசித்தேன், அதாவது என் துறையின் முக்கியமான ஆய்வு இலக்குகளைக் குறித்து, நான் என் ஆராய்ச்சியை மாற்றிக்கொள்ளவில்லை, ஆனால் இதைப் பற்றி சிந்தித்தது பயனளிப்பதாகவே இருந்தது” என்று கூறிவிட்டுக் கடந்து சென்றார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டதை நான் கவனித்தேன். அவர் நேஷனல் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் உறுப்பினராக இருந்ததையும் சமீபத்தில் அறிந்துகொண்டேன். அவர் வெற்றி அடைந்திருப்பதை அவதானித்தேன். அறிவியலிலும் அறிவியல் வட்டாரங்களிலும் அந்த மேஜையில் இருந்த மற்ற கூட்டாளிகளின் பெயர்களை நான் கேள்விப்பட்டதே இல்லை. “என்னுடைய துறையில் உள்ள முக்கியமான பிரச்சினைகள் என்ன?” என்று தங்களையே அவர்களால் கேட்டுக்கொள்ள முடியவில்லை.

ஒரு முக்கியாமான புதிர்விடுவித்தலில் நீங்கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் முக்கியமான பணியாற்ற வாய்ப்பில்லை. இது வெளிப்படை. சிறந்த விஞ்ஞானிகள் தங்கள் துறையில் பல முக்கியமான சிடுக்குகளைக் குறித்து கவனமாகச் சிந்தித்து, அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்று யோசித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்த “முக்கியமான சிடுக்கு (அல்லது புதிர்)” என்பது மிகக் கவனமாக வரையறுக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு எச்சரிக்க விரும்புகிறேன். நான் பெல் லாப்ஸில் இருந்தபோது, இயற்பியலின் மூன்று மிக முக்கியமான சிடுக்குகள், ஒருவிதத்தில், எதிர்கொள்ளப்படவில்லை என்றே கூறுவேன். இங்கு நான் முக்கியானது என்று கூறுவதை, அதற்கு விடை கண்டுபிடித்தால் நோபல் பரிசோ நீங்கள் குறிப்பிட விரும்பும் அளவு பணமோ கிடைப்பது நிச்சயம் என்றோ அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். 1) காலப் பயணம் 2) டெலிபோர்ட்டேஷன் (தொலைப்பெயர்ச்சி) 3) ஆன்டி-கிராவிடி (எதிர்-ஈர்ப்புவிசை) – இவை எதிலுமே நாங்கள் பெல் லாப்ஸில் வேலை செய்யவில்லை. அப்புதிர்களை எதிர்கொள்வதன் சாத்தியமின்மையே அவற்றை முக்கியமில்லாததாக்குகிறது. பிரச்சினைக்கான தீர்வின் விளைவுகள் அவற்றை முக்கியமானதாக ஆக்குவதில்லை, அவற்றைத் தீர்ப்பதற்காக வகுக்கப்படும் திட்டங்களின் சாத்தியப்பாடே அவற்றிற்கு முக்கியத்துவத்தை அளிக்கிறது. பெரும்பாலான விஞ்ஞானிகள் முக்கியமான பிரச்சினைகளில் வேலை செய்வதில்லை என்று நான் கூறும்போது, இந்த அர்த்தத்தில்தான் நான் சொல்கிறேன். எனக்குத் தெரிந்தவரை, சராசரி விஞ்ஞானி என்பவர் தான் முக்கியமல்லாதது என்று நம்பும் பிரச்சினைகளில்தான் தன் முழு நேரத்தையும் செலவிடுகிறார். அவர் ஆய்வு செய்யும் விஷயங்கள் அவரை முக்கியமான சிடுக்குகளுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதிலும் அவருக்கு நம்பிக்கையில்லை.

The Telstar I satellite in 1962. The communications satellite could transmit television signals and collect data on radiation in space. 
Credit…Courtesy of Alcatel-Lucent USA Inc. and the AT&T Archives and History Center

ஓக் மரங்கள் வளர்வதற்காக ஏகார்ன்களை விதைப்பதைப் பற்றி சற்று முன்னால் பேசினேன். எங்கு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் எப்போதும் துல்லியமாக அறிய முடியாது, ஆனால் முக்கியமான ஏதோவொன்று நிகழக்கூடிய இடங்களில் உங்களை இருத்திக் கொள்வதற்கு நீங்கள் முயலலாம். மாபெரும் அறிவியல் என்பது அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது என்று நீங்கள் நம்பினால்கூட, மின்னல் தாக்கும் மலை உச்சியில் நீங்கள் நிற்கலாம்; பாதுகாப்பாக இருக்கும் பள்ளத்தாக்கில் ஒளிந்துகொள்ள வேண்டியதில்லை. ஆனால் சராசரி விஞ்ஞானி என்பவர் கிட்டத்தட்ட அனைத்து சமயங்களிலும் பாதுகாப்பான சராசரி வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார். இதனால்தான் அவர் குறிப்பிடும்படியாக அதிகம் செய்வதில்லை. இவ்வளவுதான், இது மிகவும் எளிமையானது. மகத்தான பணியைச் செய்ய விரும்பினால், நிச்சயமாக முக்கியமான புதிர்விடுத்தல்களில் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும் அவற்றைக் குறித்து ஓரளவிற்கேனும் யோசித்திருக்க வேண்டும். 

இம்மாதிரியான சிந்தனைகளின் தொடர்ச்சியாக, ஜான் டூகி உள்ளிட்ட சிலரின் வற்புறுத்தலின் பேரில் “மகத்தான சிந்தனைகளுக்கான நேரம்” என்று நான் அழைத்த ஒன்றிற்கு நான் ஒருவழியாக வந்து சேர்ந்தேன். வெள்ளிக்கிழமை மதிய உணவு நேரத்திலும் அதற்குப் பிறகும் பெரிய சிந்தனைகளை மட்டுமே விவாதிப்பேன். பெரும் சிந்தனைகள் என்று நான் குறிப்பிடுவது AT&T முழுவதிலும் கணினிகளின் பங்கு என்ன?”, “கணினிகள் அறிவியலை எவ்வாறு மாற்றும்?” போன்றவை. உதாரணமாக, பத்தில் ஒன்பது சோதனைகள் ஆய்வகத்திலும், பத்தில் ஒன்று கணினியிலும் செய்யப்படுகின்றன என்பதை நான் அவதானித்தேன். ஒருமுறை நிறுவனத்தில் வைஸ் பிரசிடெண்ட்களிடம் இந்நிலைமை தலைகீழாகும் அதாவது பத்தில் ஒன்பது சோதனைகள் கணினியிலும் பத்தில் ஒன்று ஆய்வகத்திலும் செய்யப்படும் என்று கூறினேன். நான் யதார்த்தத்தை துளியும் அறிந்திராத ஒரு பைத்தியக்காரக் கணிதவியலாளன் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் பார்வை தவறானது என்பது எனக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது. மேலும் காலம் அவர்களின் பிழையை நிரூபித்துவிட்டது; என்னுடையதே சரி என்பதையும். இருந்தும்கூட தேவையில்லாத ஆய்வகங்களை அவர்கள் கட்டிக்கொண்டே இருந்தார்கள். “அறிவியலில் கணினிகளின் தாக்கம் என்னவாக இருக்கும், அதை நான் எப்படி மாற்றுவது?” என்ற கேள்வியில் கணிசமான நேரத்தை நான் செலவிட்டதால் கணினிகள் அறிவியலை மாற்றுவதை என்னால் இனம்காண முடிந்தது. “பெல் லாப்ஸை இது எப்படி மாற்றப் போகிறது?” என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். நான் கிளம்பும் முன் பெல் லாப்ஸில் உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கணினி இயந்திரங்களுடன் நெருக்கமாகப் பழகுவார்கள் என்று அவர்களிடம் குறிப்பிட்டேன். உங்கள் அனைவருக்குமே இப்போது டெர்மினல்கள் உள்ளன. என் துறை எங்கே போகிறது, வாய்ப்புகள் எங்கே, செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் எவை என்று தீவிரமாக யோசித்தேன். அவ்விஷயங்களைப் செய்வதற்கான வாய்ப்பை அளிக்கும் இடத்திற்குச் செல்ல என்னை அனுமதியுங்கள் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

பெரும்பாலான பெரும் விஞ்ஞானிகள் பல முக்கியமான அறிவியல் புதிர்களை நன்கறிந்திருப்பார்கள். கிட்டத்தட்ட பத்திலிருந்து இருபது முக்கியமான கேள்விகளுக்கு அவர்கள் விடைகாண முயல்கிறார்கள். புதிய யோசனையொன்று அறிவியலுலகில் உதிக்கையில், “ஆஹா இது நம் பிரச்சினைக்குப் பொருந்தும் போலிருக்கிறதே” என்று சப்புக் கொட்டுகிறார்கள். அனைத்தையும் துறந்து முழுமூச்சுடன் அதில் இறங்குகிறார்கள். என்னிடம் சொல்லப்பட்ட ஒரு பயங்கரமான கதையை இப்போது நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன், ஆனால் அதன் நம்பகத்தன்மைக்கு என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. லாஸ் அலமோஸைச் சேர்ந்த எனது நண்பரிடம் ஐரோப்பாவில் முதல் அணுப்பிளவுப் பரிசோதனை நடந்தது எவ்வளவு அதிர்ஷ்டகரமானது என்றும், அமெரிக்காவில் அணுகுண்டு தயாரிப்பில் நாம் ஈடுபடுவதற்கு அது எவ்வாறு வழிவகுத்தது என்பது பற்றியும் விமான நிலையத்தில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தேன். “இல்லை; பெர்க்லியில் நாங்கள் ஒரு கொத்து தரவுகளைச் சேகரித்தோம், ஆனால் மேலும் சில உபகரணங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தியதால் அவற்றைச் சரியாகச் சுருக்கித் தொகுத்துக் கொள்ளவில்லை. அதைச் செய்திருந்தால் நாங்களும் அணுப்பிளவைக் கண்டுபிடித்திருப்போம்.” கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருந்தார்கள். இரண்டாவதாக வந்து சேர்ந்தார்கள்!

வாய்ப்பு கிடைக்கையில் சிறந்த அறிவியலாளர்கள அதை முழுமூச்சுடன் பயன்படுத்திக்கொள்ள முற்படுகிறார்கள். பிறிதனைத்தையும் புறம்தள்ளிவிட்டு அந்தப் புதுச் சிந்தனையைத் தீவிரமாக பின்தொடர்கிறார்கள்; ஏனெனில் அதைக் குறித்து அவர்கள் ஏற்கனவே தீவிரமாகச் சிந்தித்திருக்கிறார்கள். அவர்கள் மனங்கள் எப்போதுமே தயாராக இருக்கின்றன; வாய்ப்பைக் கண்டவுடன் சடுதியில் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் பல சமயங்களில் இவ்வாய்ப்புகள் வெற்றிகளில் முடிவதில்லை என்பது வெளிப்படை, ஆனால் மகத்தான அறிவியலைச் செய்வதற்கு பல வாய்ப்புகளை நீங்கள் எதிர்கொள்ளத் தேவையில்லை. ஒரு விதத்தில் இது மிகச் சுலபமானதுதான். நீண்டகாலம் வாழும் தந்திரத்தைக் கற்றுக்கொண்டால் போதும்!

மற்றொரு பண்பு, அதைக் கண்டுகொள்ள எனக்குச் சிறிது நேரம் பிடித்தது. கதவைத் திறந்து வைத்துகொண்டோ மூடிக்கொண்டோ வேலை செய்பவர்களைப் பற்றிய சில உண்மைகளை நான் உணர்ந்து கொண்டேன். உங்கள் அலுவலகத்தின் கதவு மூடியிருந்தால், இன்றும் நாளையும் நீங்கள் அதிக வேலைகளைச் செய்து முடிப்பீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. பெரும்பாலானாவர்களை விடவும் நீங்கள் பயனளிக்கும் வகையில் வேலை செய்கிறீர்கள் என்பதும். ஆனால் பத்து வருடங்களுக்குப் பிறகு எந்தப் புதிர்விடுத்தல் பெறுமானமுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்கு எப்படியோ தெரியாமல் போய்விடுகிறது; உங்களின் அத்தனை கடின உழைப்புமே பத்தோடு பதினொன்று வகை முக்கியத்துவத்தையே பெறுகிறது. கதவைத் திறந்து கொண்டு வேலை செய்பவர் சகலவிதமான குறுக்கீடுகளால் அவதிப்பட்டாலும் உலகம் இன்னது, அதில் இவையே முக்கியம் என்பதற்கான தடயங்களையும் பெறுகிறார். “மூடிய கதவு மூடிய மனதிற்கான குறியீடு” என்று நீங்கள் கூறினால் அதற்கான காரணா காரியங்களை என்னால் நிரூபிக்க முடியாது. ஆனால் கதவுகளைத் திறந்து வைத்து வேலை செய்பவர்களுக்கும் இறுதியில் முக்கியமான விஷயங்களைச் செய்பவர்களுக்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பு இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். கதவுகளை மூடிக்கொண்டு வேலை செய்பவர்களே இவர்களைக் காட்டிலும் கடினமாக உழைக்கிறார்கள் என்றாலும்கூட. எப்படியோ அவர்கள் சற்றே தவறுதலான புதிர்களை விடுக்க பிரயத்தனப்படுகிறார்கள். தவறு அதிகமில்லை என்றாலும் அவர்கள் புகழை இழக்கும் அளவிற்கேனும் அவை தவறுதலாக இருக்கின்றன. 

இப்போது நான் வேறொரு தலைப்பில் பேச விரும்புகிறேன். அது ஒரு பாடலை அடிப்படையாகக் கொண்டது. உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும் என்று நினக்கிறேன்: “It ain’t what you do, it’s the way that you do it.” (செய்வதல்ல செய்யும் முறையே முக்கியம்.) என் சொந்த உதாரணத்துடன் தொடங்குகிறேன். முழுமையான பைனரி நாட்கள் என்று வரையறுக்கத்தக்க ஓர் காலத்தில், சிறந்த அனலாக் கம்ப்யூட்டர்களால் விடுக்க முடியாத ஒரு சிக்கலை, டிஜிட்டல் கம்ப்யூட்டரில் செய்யத் திட்டமிட்டேன். அதன்படி ஒர் தீர்வையும் என்னால் ஈட்ட முடிந்தது. இதைப் பற்றி கவனமாக யோசித்துவிட்டு “இதோ பார் ஹாமிங், இந்த ராணுவப் பணியைப் பற்றி நீ ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்யப் போகிறாய்; நிறைய பணத்தைச் செலவு செய்தபிறகு அதற்கான கணக்கையும் நியாயத்தையும் நீ காட்டியாக வேண்டும். அனலாக் அமைப்புகள் வைத்திருக்கும் ஒவ்வொரு குழுவும் உன் அறிக்கையில் பூதக்கண்ணாடியை வைத்து பிழைகளைத் தேடுவார்கள்” என்று எனக்கே கூறிக்கொண்டேன். தேவையான ஒருங்கிணைப்பை நான் ஒரு அச்சுப்பிச்சு முறையில்தான் செய்துகொண்டிருந்தேன் என்றாலும் என்னால் புதிரை விடுக்க முடிந்தது. அப்போதுதான் உண்மையில் பிரச்சினை என்பது விடை பெறுவது மட்டும் அல்ல என்பதை நான் உணர்ந்து கொண்டேன்; அனாலாக் கணினியை அதன் குகையிலேயே ஒரு டிஜிட்டல் இயந்திரத்தால் வெல்ல முடியும் என்பதை முதல் முறையாகச் சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுவதே என் புதிர் என்பதையும். தீர்வு முறையைச் செப்பனிட்டு, ஒரு நல்ல நேர்த்தியான கோட்பாட்டொன்றை உருவாக்கி, விடையைக் கணிக்கும் முறையையும் மாற்றினேன்; முடிவுகளில் எந்த மாற்றமும் இல்லை. வெளியிடப்பட்ட அறிக்கை ஒரு நேர்த்தியான முறையைக் கொண்டிருந்தது, பின்னர் பல ஆண்டுகளாக “வகையீட்டுச் சமன்பாடுகளை ஒருங்கிணைக்கும் ஹாமிங் முறை” (Hamming’s Method of Integrating Differential Equations) என்று அறியப்பட்டது. இது இப்போது வழக்கற்றுப் போய்விட்டது என்றாலும் சிறிது காலத்திற்கு மிகவும் நல்ல முறையாகவே இருந்தது. சிடுக்கைச் சற்று மாற்றி அமைத்ததால் சராசரி வேலைக்குப் பதிலாக முக்கியமான வேலையை என்னால் செய்து முடிக்க முடிந்தது.

அதே போல், பரணில் அந்த இயந்திரத்தை உபயோகித்துக் கொண்டிருந்த அந்த ஆரம்ப நாட்களில் நான் ஒன்றன்பின் ஒன்றாகப் புதிர்களை விடுத்துக் கொண்டிருந்தேன்; சொல்லும்படியான எண்ணிக்கையில் அவை வெற்றியில் முடிந்தாலும் சில தோல்விகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை, ஒரு புதிரை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றேன், ஆனால் விசித்திரமாக என் மனநிலை மகிழ்வூட்டுவதாக இல்லை; மனச்சோர்வுற்றிருந்தேன். வாழ்க்கை என்பது ஒன்றன் பின் ஒன்றாக நீளும் சிடுக்குகளின் நீண்ட வரிசை என்பதை என்னால் பார்க்க முடிந்தது. “இல்லை, நான் ஒரு மாறு விளைபொருள் தயாரிப்பின் வெகுஜன உற்பத்தியில் பணியாற்ற வேண்டும், அடுத்த வருடத்தின் அனைத்து புதிர் விடுத்தல்களிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும், என் முன்னே இருக்கும் புதிரில் மட்டுமல்ல” என்று முடிவெடுத்தேன். கேள்வியை மாற்றி அதே விளைவுகளையோ முன்னதைக் காட்டிலும் சிறப்பான விளைவுகளையோ ஈட்டினேன் என்றாலும் மாற்றத்தை ஏற்படுத்தி முக்கியானவற்றில் என்னை ஆழ்த்திக்கொள்வதே எனக்கு முக்கியமாக இருந்தது. பிரதானப் பிரச்சினையை நேருக்குநேர் எதிர்கொண்டேன் – இயந்திரங்களை வென்று, அவை என்னவாக இருக்கும் என்று தெரியாதபோதிலும் அடுத்த வருடத்துப் புதிர்கள் அனைத்தையும் எப்படி விடுப்பது? அதற்கு என்னை எப்படி தயார்படுத்திக்கொள்வது? வெற்றிபெறும் வகையில் இதை எப்படிச் செய்வது? நியூட்டனின் விதிக்கு நான் எவ்வாறு கீழ்ப்படிவது? “ஜாம்பவான்களின் தோள்களில் நின்றதால்தான் என்னால் மற்றவர்களைக் காட்டிலும் தீர்க்கமாக தரிசிக்க முடிந்தது” என்று அவர் கூறினார். இந்நாளிலோ நாம் ஒருவருக்கொருவரது பாதங்கள் மீதே நின்று கொண்டிருக்கிறோம்!

மற்றவர்கள் அதன் மேல் கட்டக்கூடிய வகையில் உங்கள் வேலையை நீங்கள் செய்ய வேண்டும், “ஆம், நான் இன்னாரது தோள்களில் மீது நின்றதால்தான் என்னால் தொலை நோக்க முடிந்தது” என்று பிறர் சொல்லும் வகையில். அறிவியலின் சாராம்சம் என்பது படிப்படியாக வளரும் கூட்டுத்தொகைத் தன்மை வாய்ந்தது. பல சமயங்களில் ஒரு சிக்கலைச் சற்றே மாற்றி எதிர்கொள்வதன் மூலம் வெறும் நல்ல வேலையைக் காட்டிலும் மகத்தான வேலையை நீங்கள் செய்யக்கூடும். இனி தனிப்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணமாட்டேன் என்றும், ஒரு வகைமையின் குறிப்பிட்ட தோற்றமாக இருக்கும்பட்சத்தில் மாத்திரமே அவற்றை நான் எதிர்கொள்வேன் என்றும் முடிவெடுத்தேன்.

நீங்கள் ஒரு குறிப்பிடத்தக்க கணிதவியலாளராக இருந்தால், பொதுமைப்படுத்தும் முயற்சி பெரும்பாலும் எளிமையான தீர்வுகளில் முடிவடைகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். பல சமயங்களில் செய்துகொண்டிருப்பதை நிறுத்திவிட்டு “அவருக்கு இந்தச் சிக்கலுக்கான தீர்வுதான் வேண்டும் என்றாலும் அதில் வேலை செய்தால் அதன் அநாவசிய விவரங்களில் உழன்று கொண்டிருக்க நேரிடும். அவற்றைத் தவிர்த்து அது குறிப்பிட்ட இந்த வகைமையின் சிறப்பியல்பாக அமைந்திருப்பதால் ,அம்முழு வகைமைக்கான தீர்வைக் கண்டறிவதே சிறந்ததாக இருக்கும்” என்று நமக்கே சொல்லிக்கொள்கிறோம். நுண்மையமாக்கல் அல்லது அருவமாக்கல் பல சமயங்களில் விஷயங்களை எளிமைப்படுத்துகிறது. கண்டெடுத்த இம்முறைமைகளைத் தாக்கல் செய்து, வருங்காலப் புதிர்களுக்காக என்னைத் தயார்படுத்திக்கொண்டேன்.

பேச்சின் இப்பகுதியை நிறைவுசெய்யும் வகையில் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்: “நொண்டிக் குதிரைக்குச் சறுக்குனதெல்லாம் சாக்கு – சிறந்த பணியாளன் செய்யவேண்டியதைச் செய்கிறான், கிடைத்ததை வைத்து புதிருக்கான சிறந்த விடையைக் காண விழைகிறான்.” அதனுடன் இதையும் சேர்த்துக்கொள்கிறேன், சிக்கலைச் சற்றே மாற்றி அமைப்பதன் மூலம், அதை வேறு விதமாக எதிர்கொள்வதன் மூலம், உங்களால் உங்களது இறுதி உற்பத்தித் திறனில் பெரும் மாற்றத்தை விளைவிக்க முடியும். ஏனெனில் நீங்கள் செய்ததின் மீது பிறர் கட்டமைக்கும் வகையில் நீங்கள் அதைச் செய்து முடிக்கலாம் அல்லது அடுத்தவரும் நீங்கள் செய்ததனைத்தையும் திரும்பிச் செய்ய வேண்டிய வகையில் நீங்கள் அதைச் செய்து முடிக்கலாம். நான் சொல்வது வேலையைப் பற்றியது மட்டுமல்ல, அறிக்கை அல்லது ஆய்வேட்டை எழுதும் முறை, உங்கள் முழு அணுகுமுறையைப் பற்றியது. ஒரு தனிப்பட்ட சிக்கலைக் காட்டிலும் அதன் பொதுமைப்படுத்தப்பட்ட வடிவத்திற்குத் தீர்வு காண்பது அப்படியொன்றும் கஷ்டமல்ல. என்ன, பிந்தையது திருப்திகரமாகவும் மேலும் பயனளிப்பதாகவும் இருக்கிறது.

இப்போது மிகவும் அருவருப்பான ஒரு விஷயத்தைப் பேசப் போகிறேன்; ஒரு வேலையைச் செய்துமுடித்தால் மட்டும் போதாது அதைக் கூவி விற்கவும் வேண்டும். விற்பதென்பது அறிவியலாளனுக்கு சங்கோஜத்தை அளிக்கக்கூடியது. மிக அசிங்கமானது; அதைச் செய்ய நீங்கள் நிர்ப்பந்திக்கப் படக்கூடாது. நீங்கள் செய்யவிருக்கும் மகத்தான காரியத்திற்காக உலகம் காத்திருக்க வேண்டும்; நீங்கள் அதைச் செய்து முடிக்கையில் அது விரைந்தோடி அதை வரவேற்க வேண்டும். ஆனால் அனைவரும் அவரவர் காரியத்தில் மும்முரமாக இருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. எனவே, நீங்கள் அதைப் பிரமாதமாக முன்வைக்கையில் அவர்கள் அதனால் கவரப்பட்டு, தாங்கள் செய்துகொண்டிருப்பதை அப்படியே போட்டுவிட்டு, நீங்கள் செய்ததைப் பார்த்துப் படித்துவிட்டு, உங்களிடம் “ஆமாம், நன்றாக வந்திருக்கிறது” என்று கூறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அறிவியல் ஆய்விதழைப் புரட்டுகையில் ஏன் குறிப்பிட்ட ஆய்வுகளை மட்டும் நீங்கள் படிக்கிறீர்கள் என்று உங்களையே கேட்டுக்கொள்வதை நான் பரிந்துரைக்கிறேன். Physical Review போன்ற அல்லது உங்களுக்குப் பிடித்தமான மற்றொரு ஆய்விதழில் உங்கள் ஆய்வு பதிப்பிக்கப்படுகையில் உங்கள் பக்கங்களை வாசகர்கள் மேம்போக்காகப் புரட்டிக் கடந்துவிடாது தாமதித்து வாசிக்கும் வகையில் உங்கள் அறிக்கை எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் நின்று வாசிக்கவில்லையெனில், உங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்றுதான் அர்த்தம். 

விற்பனையில் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள் உள்ளன. மக்களைப் படிக்கத் தூண்டும் வகையில் நன்றாகவும் தெளிவாகவும் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். ஓரளவிற்கு முறைசார்ந்திருக்கும் சொற்பொழிவுகளை ஆற்றப் பழகிக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் இயல்பான முறைசாரா சொற்பொழிவுகளையும் ஆற்றத் தெரிந்திருக்க வேண்டும். ‘பின் அறை விஞ்ஞானிகள்’ என்று அழைக்கப்படுபவர்கள் நிறைய பேர் இருந்தனர். மாநாட்டில் அவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஒரு முடிவு எடுக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, நீங்கள் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்வார்கள். நல்லது, ஆனால் மிகத் தாமதமான ஆலோசனை என்பதால் செயவ்தற்கொன்றும் இல்லை! மாநாடு சுடச் சுட நிகழ்ந்து கொண்டிருக்கையில் தைரியமாக எழுந்து நின்று “இக்காரணங்களுக்காக நாம் இதைச் செய்ய வேண்டும்” என்று கூறமாட்டார்கள். தயார் செய்த பேச்சுக்களுடன் இம்மாதிரியான தகவல்தொடர்பிலும் நீங்கள் தேர்ச்சி பெறவேண்டும். 

ஆரம்பகாலத்தில் சொற்பொழிவு என்றாலே எனக்கு வயிற்றைக் கலக்கும், உண்மையிலேயே உடல்நிலை மோசமாகிவிடும். அப்போதுதான், சொற்பொழிவுகளைச் சீராக ஆற்றக் கற்றுக்கொள்ளாவிட்டால் என் முழு பணிவாழ்வே முடங்கிவிடும் என்பதை உணர்ந்து கொண்டேன். முதல் முறையாக IBM என்னைப் பேச அழைத்தபோது அபாரமான ஒரு பேச்சை, அவர்கள் விரும்பிய, அதிக தொழில்நுணுக்கங்கள் இல்லாத ஒரு பரந்த உரையை வழங்கப் போகிறேன் என்று முடிவுசெய்தேன். இறுதியில், அவர்களுக்கு அது பிடித்தமாக இருக்கும்பட்சத்தில், “எப்போது வேண்டுமானாலும் தயார், தேதியை மட்டும் கூறுங்கள்” என்று அமைதியாகக் கூறப்போவதையும். இதன் விளைவாக, வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு உரைகளை நிகழ்த்தும் பயிற்சியை நிரம்பவே பெற்றேன், என் மேடைப்பேச்சு பயத்தையும் போக்கிக் கொண்டேன். பேச்சுக்கலை உத்திகளில் எவை பயனளித்தன எவை பயனற்றதாக இருந்தன என்பதையும் என்னால் அவதானிக்க முடிந்தது. 

கூட்டங்களுக்குப் போய்க்கொண்டிருந்த காலத்தில், ஏன் சில ஆய்வுகள் மட்டும் நினைவில் நிற்கின்றன, ஏன் பெரும்பாலானவை மறக்கப்படுகின்றன என்பதை நான் ஏற்கனவே ஆராய்ந்து கொண்டிருந்தேன். தொழில்நுட்ப நபர் மிகவும் வரையறுக்கப்பட்ட தொழில்நுட்ப பேச்சையே கொடுக்க விரும்புகிறார். பெரும்பாலான நேரங்களில் பார்வையாளர்களோ ஒரு பரந்த பொதுப் பேச்சையே விரும்புகிறார்கள். பேச்சாளர் தர விரும்புவதைவிட மேலதிகமான பொதுவான கணக்கெடுப்பையும் பின்னணியும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த முரண்பாட்டினால்தான் பெரும்பாலான சொற்பொழிவுகள் வெற்றிபெறுவதில்லை. ஒரு தலைப்பை மட்டும் அளித்துவிட்டு பேச்சாளர் அவருக்குப் பரிச்சயமான ஏற்கனவே தீர்வு கண்டுவிட்ட விஷயங்கள் குறித்த நுணுக்கமான விவரங்களில் குதித்துவிடுகிறார். பார்வையாளர்களில் ஒரு சிலர் மட்டுமே அவரைப் பின்தொடர முடியும். முதலில் அது ஏன் முக்கியமானது என்பதை விளக்க ஒரு பொதுச் சித்திரத்தை பேசியபின் மெதுவாக குறிப்பிட்ட விஷயத்தில் என்ன செய்யப்பட்டது என்பதை விவரித்தால், பார்வையாளர்களில் பலர் “ஆமாம், ஜோ இதை செய்திருக்கிறார்” அல்லது மேரி அதைச் செய்திருக்கிறார்” அல்லது “உண்மையிலேயே இப்போது புரிகிறது; மேரி உண்மையிலேயே நன்றாகப் பேசினார், மேரி என்ன செய்தார் என்பது புரிகிறது” என்று ஆமோதிப்பார்கள். அடக்கி வாசித்து ஜாக்கிரதையாகப் பேசுவதுதான் போக்கு; ஆனால் இது பொதுவாகவே வேலைக்காகாது; அல்லது பல பேச்சுக்களைப் போல் தேவைக்கதிகமான தகவல்களைத் திணிப்பது; இதெல்லாம் வெளிப்படைதான். 

இப்போது இதுவரை பேசியதைச் சற்று தொகுத்துக் கொள்வோம். முக்கியமான புதிர்களில் வேலை செய்யவேண்டும். எல்லாமே அதிர்ஷ்டத்தை பொறுத்தது என்பதை மறுத்தாலும், ஓரளவிற்கு அதிர்ஷ்டத்திற்கும் பங்கிருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். “தயாராக இருப்பவர்களை அதிர்ஷ்டம் ஆதரிக்கிறது” என்ற பாஸ்டரின் கூற்றையும். நான் செய்ததை மிகவுமே ஆமோதிக்கின்றேன். பல ஆண்டுகளாக வெள்ளி மதியம் தோரும் – மகத்தான சிந்தனைகள் மட்டுமே என்ற கட்டுப்பாடு. அதாவது, என் பணி நேரத்தில் பத்து சதவீதத்தைத் துறையின் பெரும் புதிர்களுக்காக (அதாவது எவை முக்கியம் அவை முக்கியமல்ல என்ற அர்த்தத்தில்) அர்ப்பணித்தேன். ஆக, என் செயற்பாட்டை மாற்றி நான் முக்கியம் என்று நினைத்ததை நோக்கி என் சிந்தனைகளை அணிவகுத்தேன். உண்மையிலே இது இவ்வளவு சுலபமானதுதான்.

என்ன வேலை செய்ய வேண்டும் என்பது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று நீங்கள் மறுதலிக்கலாம். உண்மைதான், ஆரம்பிக்கையில் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமலிருக்கலாம். ஆனால் ஓரளவிற்கு வெற்றியை ஈட்டிய பின், நீங்கள் அளிக்கக்கூடிய விளைவுகளைக் காட்டிலும் அதிகமாகக் கோரப்படுகிறது என்கிற பட்சத்தில், முழுமையாக இல்லை என்றாலும் ஓரளவிற்கேனும் தேர்வு செய்யும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இப்போது அதைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள், அது உங்கள் முதலாளியைப் பயிற்றுவிப்பது பற்றியது. எனக்கு ஸ்கெல்குனாஃப் (Schelkunoff) என்ற மேலதிகாரி ஒருவர் இருந்தார்; அப்போதும் இப்போதும் என் உற்ற நண்பர் அவர். ஒரு மிலிட்டரி ஆள் என்னிடம் வந்து வெள்ளிக்கிழமைக்குள் சில விடைகளைக் கோரினார். நான் ஏற்கனவே எனது கணினி வளங்களை விஞ்ஞானிகள் குழுவிற்குச் சடுதியில் உடனுக்குடன் தரவைக் குறைப்பதற்காக அர்பணித்திருந்தேன்; முக்கியமான ஆனால் சீக்கிரமே தீர்மானிக்கக்கூடிய சின்னச் சின்ன சிக்கல்களில் நான் ஆழ்ந்திருந்தேன். “இல்லை, திங்கட்கிழமை தருகிறேன். இப்போது செய்ய இயலாது, வார இறுதியில் செய்யப் பார்க்கிறேன்” என்று அவரிடம் கூறினேன். அவர் என் மேலதிகாரி ஸ்கெல்குனாஃபிடம் செல்ல, ஸ்கெல்குனாஃபும் “இதை அவருக்கு நீ வெள்ளிக்கிழமைக்குள் ஓட்டிக் கொடுத்துவிடு” என்று என்னிடம் கூறினார். “ஏன்” என்று நான் அவரிடம் கேட்க, “செய்துதான் ஆக வேண்டும்” என்று அவர் பதிலளித்தார். “நல்லது, செர்கெய், ஆனால் நீங்கள் வெள்ளிக்கிழமை மதியம் உங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்து, வீட்டிற்கு தாமதமான பஸ்ஸைப் பிடிப்பதற்கு முன்னால் அவர் அந்த வாசல் வழியே வெளியே போவதைப் பார்த்தாக வேண்டும்” என்று நிபந்தனை விதித்தேன். வெள்ளிக்கிழமை பிற்பகல் இராணுவ ஆசாமிக்கு விடைகளை வழங்கினேன். அதன் பின் ஸ்கெல்குனோஃப் அலுவலகத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டேன். அந்த ஆசாமி வெளியே செல்கையில் “அதோ பார் ஸ்கெல்குனோஃப், அந்த ஆசாமி எதையுமே எடுத்துக்காத கைய வீசிட்டு போறத, ஆனா நான் அவருக்கு விடைகளக் குடுத்துட்டேன்” என்று கூறினேன். திங்கட்கிழமை காலை ஸ்கெல்குனோஃப் அவரை அழைத்து, “நீங்கள் வார இறுதியில் வேலைக்கு வந்தீர்களா?” என்று கேட்டார். என்ன நடக்கப் போகிறது என்று அந்த ஆசாமி ஊகிக்கையில் நிகழ்ந்த ஓர் இடைநிறுத்ததை என்னால் கேட்க முடிந்தது; ஆனால் புகுபதிவு செய்யாமல் அலுவலகத்திற்குள் நுழைய முடியாது என்று அவருக்குத் தெரியும். வராத பட்சத்தில் வந்தேன் என்று பொய் சொல்வது உசிதமல்ல என்று அவர் நினைத்ததால் வரவில்லை என்று பதிலளித்தார். அதற்குப் பிறகு ஸ்கெல்குனாஃப் “உன் காலக்கெடுவை நீயே நிர்ணயித்துக்கொள்; தேவைப்பட்டால் நீ அவற்றை மாற்றிக் கொள்ளலாம்” என்று என்னிடம் கூறினார்.

ஊகங்கள்மிக்க ஆராய்ச்சியை புறந்தள்ளும் பெரிய வேலைகளை நான் ஏன் செய்ய விரும்பவில்லை என்பதையும் அனைத்து கணினி வளங்களையும் உறிஞ்சும் கடுவிரைவுப் பணிகளை எடுத்துக் கொள்வது நியாயமில்லை என்பதையும் என் முதலாளிக்கு போதிக்க இந்த ஒரு பாடமே போதுமாக இருந்தது. அதற்குப் பதிலாக அதிக எண்ணிக்கையிலான சிறிய சிக்கல்களைக் கணக்கிட வளங்களைப் பயன்படுத்த விரும்பினேன். ஆரம்ப நாட்களில் கணினித் திறனில் தட்டுப்பாடிருந்ததை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். மேலும் என் துறையில் “ஒரு கணிதவியலாளனுக்கு இயந்திரங்களால் எந்தப் பயனும் இல்லை” என்பதும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் எனக்கு அதிக இயந்திரத் திறன் தேவைப்பட்டது. ஒவ்வொரு முறையும் நான் வேறு துறை விஞ்ஞானியிடம், “இல்லை என்னால் முடியாது; என்னிடம் போதுமான இயந்திரத் திறன் இல்லை” என்று மறுப்பேன். அவர் புகார் வைப்பார்; “போய் உங்கள் வைஸ் பிரசிடெண்டிடம் ஹாமிங்கிற்கு மேலும் இயந்திரத் திறன் தேவைப்படுகிறது என்று கூறுங்கள்” என்று நான் அறிவுறுத்துவேன். சிறிது காலத்திலேயே மேலாண்மை வட்டாரத்தில் என்ன நடக்கிறது என்பது கண்கூடாகவே எனக்குத் தெரிந்தது; பலர் என் வைஸ் பிரசிடெண்டிடம் “உங்களுக்கு மேலும் கணினித் திறன் தேவைப்படுகிறது” என்று கூறினார்கள். எனக்கது கிடைக்கவும் கிடைத்தது.  

நான் இன்னொரு விஷயத்தையும் செய்தேன். கம்ப்யூட்டிங்கின் ஆரம்ப நாட்களில் எங்களிடம் இருந்த கொஞ்சநஞ்ச நிரலாக்க சக்தியை நான் கொடுத்துதவியபோது “அவர்கள் தகுதிக்கு ஏற்ப எங்கள் ப்ரோக்ராமர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. நீங்கள் ஒரு ஆய்வைப் பதிப்பிக்கையில் உங்களுடன் பணியாற்றிய ப்ரோக்கிராமருக்கு நன்றி செலுத்த வேண்டும் இல்லையெனில் என்னிடமிருந்து வருங்காலத்தில் எந்த உதவியையும் எதிர்பார்க்காதீர்கள். அந்த நிரலாளார் கடுமையாக உழைத்திருக்கிறாள், எனவே பெயர் சொல்லி அவளுக்கு நன்றி தெரிவிக்கப் போகிறீர்கள்” என்று கூறினேன். இரண்டு வருடங்கள் காத்திருந்தேன். ஒரு வருடமாக BSTJ-இல் வந்த ஆய்வுரைகளில் எத்தனை நிரலாளர்களுக்கு நன்றி தெரிவித்தன என்பதைக் கணக்கிட்டேன். அதை என் மேலதிகாரியிடம் காட்டினேன். “பெல் லாப்ஸில் கம்ப்யூட்டிங் முக்கியப் பங்கு வகிக்கிறது; பிஎஸ்டிஜே முக்கியம் என்றால், கம்ப்யூட்டிங்கும் அவ்வளவு முக்கியம்.” என்று கூறினேன். ஒத்துக்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. உங்கள் மேலதிகாரிகளுக்கு நீங்கள் பாடம் புகட்டலாம். கஷ்டமான வேலைதான். இந்தப் பேச்சில் நான் கீழிருந்து மட்டுமே மேலே பார்க்கிறேன்; மேலிருந்து கீழாகப் பார்க்கவில்லை. உயர் நிர்வாகத்தையும் மீறி நீங்கள் விரும்பியதை நீங்கள் எவ்வாறு பெற முடியும் என்பதைத் நான் இங்கு பேசுகிறேன். அங்கேயும்கூட உங்கள் யோசனைகளை நீங்கள் விற்றாக வேண்டும்.

சரி, இப்போது நான் வேறொரு விஷயத்துக்கு வருகிறேன், “பெரும் அறிவியலாளன் ஆவதற்கான முயற்சி அதற்கேற்ற பெறுமானத்தை பெறுகிறதா?” இதற்கான பதிலை நீங்கள் அவர்களைத்தான் கேட்க வேண்டும். தன்னடக்கத்தை அவர்கள் கடக்கும் பட்சத்தில், பெரும்பாலானோர் “ஆமாம் முதல்தர வேலைகளைச் செய்வது, அதை செய்கிறோம் என்பதை அறிந்திருப்பது, மது, பெண் (அல்லது ஆண்), பாட்டு இவற்றையெல்லாம் கலந்தனுபவிப்பதைக் காட்டிலும் சுவாரசியமானது” என்று கூறுவார்கள். ஆனால் அதிகாரிகளை எடுத்துக்கொண்டால் கண்டுபிடிப்பின் சிறப்பான தருணங்களில் தங்களையும் இணைத்துக் கொள்ள அவர்கள் திரும்பத்திரும்ப வருவார்கள் ஏதாவது அறிக்கைகளைக் கேட்கும் சாக்கில். எப்போதுமே அவர்கள் குறுக்கே மறித்துக்கொண்டு நிற்கிறார்கள்.

சிறந்த அறிவியலை செய்துபார்த்தவர்கள் மீண்டும் அதைச் செய்ய விரும்புகிறார்கள் என்பது வெளிப்படை. ஆனால் இது மிகவுமே குறுகிய கணக்கெடுப்பு. இந்த விஷயத்தைப் பற்றி பெரும் புதிர்களில் வேலை செய்யாதவர்களிடம் கேட்க நான் ஒருபோதும் துணிந்ததில்லை. மிகைசார்புடைய மாதிரிகளைக் கொண்ட கணக்கெடுப்பென்றாலும் இந்தப் போராட்டம் பெறுமானமுள்ளது என்றே நான் நினைக்கிறேன், சர்வ நிச்சயமாக முதல்தர வேலை செய்வதற்காக முயல்வது பெறுமானமானது என்று சொல்வேன், ஏனெனில் விளைவைக் காட்டிலும் முயற்சியில்தான் பெறுமானம் இருக்கிறது என்பதே உண்மை. உங்களை மேம்படுத்திக் கொள்வதற்காகப் போராடுவது அதனளவிலேயே மேன்மையானது. வெற்றியும் புகழும் ஒருவித ஈவுத்தொகை என்பதே என் கருத்து.

சரி, இப்போது நான் வேறொரு விஷயத்துக்கு வருகிறேன், “பெரும் அறிவியலாளன் ஆவதற்கான முயற்சி அதற்கேற்ற பெறுமானத்தை பெறுகிறதா?” இதற்கான பதிலை நீங்கள் அவர்களைத்தான் கேட்க வேண்டும். தன்னடக்கத்தை அவர்கள் கடக்கும் பட்சத்தில், பெரும்பாலானோர் “ஆமாம் முதல்தர வேலைகளைச் செய்வது, அதை செய்கிறோம் என்பதை அறிந்திருப்பது, மது, பெண் (அல்லது ஆண்), பாட்டு இவற்றையெல்லாம் கலந்தனுபவிப்பதைக் காட்டிலும் சுவாரசியமானது” என்று கூறுவார்கள். ஆனால் அதிகாரிகளை எடுத்துக்கொண்டால் கண்டுபிடிப்பின் சிறப்பான தருணங்களில் தங்களையும் இணைத்துக் கொள்ள அவர்கள் திரும்பத்திரும்ப வருவார்கள் ஏதாவது அறிக்கைகளைக் கேட்கும் சாக்குடன். எப்போதுமே அவர்கள் குறுக்கே மறித்துக்கொண்டு நிற்கிறார்கள்.

சிறந்த அறிவியலை செய்துபார்த்தவர்கள் மீண்டும் அதைச் செய்ய விரும்புகிறார்கள் என்பது வெளிப்படை. ஆனால் இது மிகவுமே குறுகிய கணக்கெடுப்பு. இந்த விஷயத்தைப் பற்றி பெரும் புதிர்களில் வேலை செய்யாதவர்களிடம் கேட்க நான் ஒருபோதும் துணிந்ததில்லை. மிகைசார்புடைய மாதிரிகளைக் கொண்ட கணக்கெடுப்பென்றாலும் இந்தப் போராட்டம் பெறுமானமுள்ளது என்றே நான் நினைக்கிறேன், சர்வ நிச்சயமாக முதல்தர வேலை செய்வதற்காக முயல்வது பெறுமானமானது என்று சொல்வேன், ஏனெனில் விளைவைக் காட்டிலும் முயற்சியில்தான் பெறுமானம் இருக்கிறது என்பதே உண்மை. உங்களை மேம்படுத்திக் கொள்வதற்காகப் போராடுவது அதனளவிலேயே மேன்மையானது. வெற்றியும் புகழும் ஒருவித ஈவுத்தொகை என்பதே என் கருத்து.


எப்படிச் செய்வதென்பதை நான் பேசிவிட்டேன். இது இவ்வளவு சுலபமானதென்றால் அந்த அளவு திறமையுள்ள இவ்வளவு பேர்கள் ஏன் தோல்வியுறுகிறார்கள்? எடுத்துக்காட்டாக, இன்றுவரையிலும்கூட, பெல் லாப்ஸில் உள்ள கணிதத் துறையில் என்னைவிட மிகவும் திறமையான, சிறந்த வளம் கொண்ட பலர் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அவ்வளவாக உற்பத்தி செய்யவில்லை. சிலர் என்னைக்காட்டிலும் அதிகமாக உற்பத்தி செய்தனர்; நிச்சயமாக ஷானன் என்னைவிட அதிகமாக உற்பத்தி செய்தார், சிலர் நிரம்பவே உற்பத்தி செய்தார்கள் ஆனால் என்னைக் காட்டிலும் திறன்படைத்தவர் பலரைவிட, உற்பத்தியை பொறுத்தவரையில் நான் முன்னிலையில் இருந்தேன். ஏன் அப்படி? அவர்களுக்கு என்னவாயிற்று? நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கியவர் பலர் ஏன் தோல்வி அடைந்தார்கள்?

உந்துதலும் அர்ப்பணிப்பும் சில காரணங்கள். சிறந்த பணியை ஒப்பீட்டளவில் குறைவான திறனுடன் ஆனால் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்பவர்கள் அதிக திறனிருந்தாலும் பணியில் பட்டும்படாமல் இயங்குபவர்களைவிட அதிகம் சாதிக்கிறார்கள். பிந்தையவர்கள் நாளில் பணியைச் செய்துவிட்டு மாலையில் வீட்டில் வேறெதிலாவதில் ஈடுபட்டுவிட்டு மறுநாள் மீண்டும் பணிக்கு வருவார்கள். முதல்தர வேலைக்குத் தேவையான ஆழ்ந்த அர்ப்பணிப்பு அவர்களிடம் இல்லை. அவர்கள் நிறைய நல்ல வேலைகளைச் செய்கிறார்கள் ஆனால் நாம் இங்கு முதல்தர வேலைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இரண்டிற்கும் வித்தியாசமிருக்கிறது. நல்ல திறம்படைத்தவர்கள் எப்போதுமே நன்றாக வேலை செய்வார்கள். ஆனால் நாம் நோபல் பரிசு அங்கீகாரம் பெறும் படைப்புகளைப் பற்றி பேசுகிறோம்.

இரண்டாவது விஷயம், ஆளுமைக் குறைபாடுகள் பிரச்சினையாக இருக்கும் என்று தோன்றுகிறது. இர்வைனில் சந்தித்த ஒரு நபரை உதாரணமாக எடுத்துக் கொள்கிறேன். ஒரு கணினி மையத்தின் தலைவராக இருந்தார், தற்காலிகமாக பல்கலைக்கழகத்தின் தலைவரின் சிறப்பு உதவியாளராக நியமிக்கப்பட்டார். பிரகாசமான எதிர்காலத்தை அளிக்கக்கூடிய வேலையில் இருந்தார் என்பது வெளிப்படை. ஒருமுறை என்னை தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, கடிதங்களை எழுதி முடிக்கும் உத்தியையும் கடிதப் பரிமாற்றத்தை எவ்வாறு கவனித்துக்கொண்டார் என்பதையும் காட்டினார். செயலாளர் எவ்வளவு மோசம் என்பதையும் சுட்டினார். தன் கடிதங்கள் அனைத்தையும் அடுக்கி வைத்திருந்தார்; எது எங்கிருக்கிறது என்பதெல்லாம் அவருக்குத் தெரிந்திருந்தது. தன் சொற் செயலியில் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினார். அதன் அருமை பெருமைகளைப் பறைசாற்றிவிட்டு செயலாளரின் குறுக்கீடு இல்லாமல் அதிக உற்பத்தித்திறனுடன் வேலை செய்துமுடிப்பதைப் பற்றி பெருமைபட்டுக் கொண்டார். அவருக்குத் தெரியாமல், நான் செயலாளரிடம் பேசினேன். “நிச்சயமாக என்னால் அவருக்கு உதவ முடியாது; எனக்கு அவரது அஞ்சலுக்கான நுழைவிரிமை கிடையாது. கடவுசொல்லை எனக்குக் கொடுக்க மாட்டார். நிச்சயமாக உதவமுடியாது” என்று அவர் அங்கலாய்த்துக் கொண்டார். அதன்பின் நான் தலைவரிடம் சென்று “இதோ பாருங்கள், இப்போது நீங்கள் பயன்படுத்தும் முறையை வைத்து ஒத்தையாளாக எல்லாவற்றையும் செய்தால் இவ்வளவு தூரம் தான் போகமுடியும், அதாவது ஒத்தையாளாக அனைத்தையும் செய்ய முயல்பவர் செல்லக்கூடும் தூரம் வரையில்தான். அமைப்புடன் இணக்கமாக வேலை செய்வதைக் கற்றுக்கொண்டால் அமைப்பு ஆதரவளிக்கும் தூரம் வரையிலும் நீங்கள் செல்லலாம்” என்று கூறினேன். அவர் மேற்கொண்டு பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. முழுக் கட்டுப்பாட்டை விரும்பும் ஆளுமைக் குறைபாட்டிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை. அமைப்பின் ஆதரவு ஒருவருக்குத் தேவையாக இருக்கிறது என்பதை அவர் அங்கீகரிக்கத் தயாராக இல்லை.

இது மீண்டும் மீண்டும் நிகழ்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்; நல்ல விஞ்ஞானிகள் அமைப்புடன் ஒத்திசைந்து வேலை செய்யக் கற்றுக்கொள்வதைவிட அதை எதிர்த்துப் போராடுவார்கள், அதன் அனைத்து அனுகூலங்களை அனுபவித்துக்கொண்டே. அதன் வளங்கள் ஏராளம், அதை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்திருந்தால். இதற்கு பொறுமை அதிகம் தேவை என்றாலும் அதை ஓரளவிற்கு நன்றாகப் பயன்படுத்திக் கொள்வதை நீங்கள் கற்றுக் கொள்ளலாம். அதன் வியாகூலங்களைச் சமயோஜிதத்துடன் தவிர்க்கும் விதத்தையும். அனைத்திற்கும் மேலாக, உங்களுக்கு “இல்லை” என்ற தீர்மானமே வேண்டுமெனில் முதலாளியிடம் சென்று அதை எளிதில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் எதையாவது செய்ய விரும்பினால், கேட்காதீர்கள், செய்யுங்கள். நிறைவேற்றப்பட்ட தரவை அவர் முன் வையுங்கள். “இல்லை” என்று சொல்வதற்கு அவருக்கு வாய்ப்பளிக்காதீர்கள். ஆனால் “இல்லை”தான் தேவை என்றால், அதைப் பெறுவது சுலபம்.

அகந்தை வலியுறுத்தல் மற்றொரு ஆளுமைக் குறைப்பாடு. இந்த விஷயத்தில் என் சொந்த அனுபவத்திலிருந்தே பேசுகிறேன். லாஸ் அலமோஸிலிருந்து திரும்பிய ஆரம்ப நாட்களில் நியூயார்க்கில் 590 மாடிசன் அவென்யூவில் ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன், அதன் நேரத்தை வாடகைக்கு எடுத்திருந்தோம். நான் இன்னமும் மேற்கு மாநிலங்களில் புழங்கிய உடைகளை அணிந்திருந்தேன், பெரிய ஸ்லாஷ் பாக்கெட்டுகள், போலோ இத்யாதி. சேவையைப் பொறுத்தவரையில் மற்றவர்களைவிட நான் மலிவாக நடத்தப்படுகிறேன் என்பதை அரசல் புரசலாக உணர்ந்துகொண்டேன். அதை அளக்கத் தீர்மானித்தேன். உள்ளே வந்தபின் உங்கள் முறைக்காகக் காத்திருக்க வேண்டும்; நியாயமாக நடத்தப்படவில்லை என்று சந்தேகப்பட்டேன். “ஏன், IBM வைஸ் பிரெசிடண்ட் எவராவது ஹாமிங்கைக் காயவிடுங்கள் என்று கூறினார்களா என்ன? இல்லையே” என்று எனக்கே சொல்லிக் கொண்டேன். கீழ்மட்டத்தில் உள்ள காரியதரிசிகள்தான் இதைச் செய்கிறார்கள். கணினியைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு தோன்றினால் அதை உடனேயே அளிப்பதற்காக அவர்கள் விரைவார்கள். ஆனால் வெளியே சென்று வேறெவருக்காவது அதை அளித்துக் கொண்டிருந்தார்கள். ஏன்? நானொன்றும் அவர்களைத் தவறாக நடத்தவில்லையே? விடை: அந்த சூழலிற்கு ஏற்றாற் போல் நான் உடை அணிந்திருக்கவில்லை என்று அவர்கள் நினைத்தார்கள். நான் சரியாக உடை அணியவில்லை என்பதே அடிப்படை பிரச்சினை. இப்போது நான் ஒரு முடிவெடுத்தாக வேண்டும் – என் அகங்காரத்தை வலியுறுத்தி என் விருப்பப்படி உடையணிந்து அதன் விளைவாக என் தொழில் வாழ்வு முயற்சிகளை வீணடிக்கட்டுமா அல்லது சரியாக ஒட்டொழுகுவது போல் தோற்றமளிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளட்டுமா? பிந்தையதைச் செய்ய முடிவு செய்தேன். உடனேயே, எனக்குக் கிடைத்த சேவைத்தரம் அதிகரித்தது. இப்போதோ, ஒரு சுவாரசியான பழங்காலத்து ஆசாமியாக, எனக்கு மற்றவர்களைவிட நல்ல சேவை கிடைக்கிறது.

பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப உடையணிய வேண்டும். MIT கம்ப்யூட்டர் சென்டரில் ஒரு பேச்சைக் கொடுக்கப் போகிறேன் என்றால், நான் ஒரு போலோ, பழைய கார்ட்ராய் ஜாக்கெட் அல்லது வேறெதையாவது அணிந்து கொள்வேன். என் உடை, தோற்றம், முக்கியமானது என்று நான் கருதுவதற்குத் என் நடத்தை தடங்கலாக இருக்க அனுமதிக்காத அளவிற்கு எனக்கு விஷயம் தெரியும். பெரும் எண்ணிக்கைகளில் விஞ்ஞானிகள் அவர்கள் அகங்காரங்களை வலியுறுத்தி அனைத்தும் தங்கள் சித்தப்படியே நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் அல்லது வேறு எதையாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள், அதற்கான விலையைக் கொடுக்கிறார்கள்

ஜான் டூகி அனேகமாக எப்போதுமே மிக சாதாரணமாகத்தான் உடையணிவார். அவர் முக்கியமான அலவலகத்திற்குச் சென்றார் என்றால், அவர் முதல்தரமானவர், அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு அங்குள்ள ஆசாமிக்கு நீண்ட நேரம் பிடிக்கும். நீண்ட காலமாக ஜான் இம்மாதிரியான துவேஷத்தைச் சமாளிக்க வேண்டியிருந்தது. வீண்முயற்சி! நீங்கள் இணங்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை; “இணங்குவது போல் தோற்றமளிப்பது உங்களை நெடுந்தூரம் இட்டுச் செல்லும்” என்று சொல்கிறேன், பல வழிகளில் உங்கள் ஈகோவை வலியுறுத்த நீங்கள் தேர்வுசெய்தால், “என் வழி, தனிவழி” என்றெல்லாம் அடம்பிடித்தால் அதற்கான சிறு ஊதியத்தை உங்கள் பணிவாழ்வு முழுவதும் அபராதமாகக் கட்டிக்கொண்டிருப்பீர்கள். வாழ்நாள் முழுவதும் என்று இதைக் கணக்கிட்டால் கணிசமான அளவிற்குத் தேவையில்லாத தலைவலியில் உங்களை இது ஆழ்த்துகிறது. 

செக்ரட்டரிகளிடம் ஜோக்ஸ் சொல்ல மெனக்கிட்டு, கொஞ்சம் நட்பாக இருந்ததால், எனக்கு அவர்களிடமிருந்து அருமையான உதவி கிடைத்தது. உதாரணமாக, ஒருமுறை சில முட்டாள்தனமான காரணங்களுக்காக, ஏன் என்று கேட்காதீர்கள், முர்ரே ஹில்லில் உள்ள அனைத்து படிபெருக்கி இயந்திரங்களும் பிசியாக இருந்தன. எனக்கோ அவசரம். என் செயலாளர் ஹோல்ம்டெல்லில் ஒருவரை அழைத்து, நிறுவனத்தின் காரில் ஒரு மணி நேரம் பயணித்து, நகல்களை எடுத்தபின், திரும்பி வந்தார். அவரை உற்சாகப்படுத்தி, அவரிடம் ஜோக்குகளை சொல்லி, நட்பாக இருக்க நான் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கான பிரதிபலன் இது. முன்னர் மேற்கொண்ட அந்தச் சிறு மெனக்கெடல்தான் எனக்குப் பின்னர் பலனளித்தது. சிஸ்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து அதை எப்படி உங்கள் காரியத்தைச் செய்ய வைக்க முடியும் என்பதை ஆராய்ந்தால் உங்கள் விழைவுகளுக்கு ஏற்ப அதை வளைத்துக்கொள்ள முடியும். மாறாக, வாழ்நாள் முழுதும், ஒரு சிறு அறிவிக்கப்படாத போரில், அதைத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கலாம். 

ஜான் டூகி ஒரு அபரிமிதமான விலையைத் தேவையில்லாமல் கொடுத்தார் என்று நினைக்கிறேன். ஆனாலும் அவர் ஒரு மேதைதான், என்ன அகங்கார வலியுறுத்தலை தளர்த்தி சற்றே இணங்க முயன்றிருக்கலாம், எல்லாமே சுமூகமாகவும் சுலபமாகவும் அமைந்திருக்கும். எப்போதுமே தன் விருப்பப்படிதான் அவர் உடை அணிவார். ஆனால் இது உடையைப் பற்றியது மற்றுமல்ல, பிற ஆயிரம் விஷயங்களுக்கும் இது பொருந்தும். மக்கள் தொடர்ந்து அமைப்பை எதிர்த்துக் கொண்டிருப்பார்கள், அவ்வப்போது இதைச் செய்யக்கூடாது என்பதல்ல!

மர்ரே ஹில் மத்தியிலிருந்த நூலகத்தை அதன் கடைக்கோடிக்கு இடம்பெயர்த்தபோது எனது நண்பர் ஒருவர் சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அமைப்பொன்றும் முட்டாளில்லையே. சிறிது நேரம் காத்திருந்துவிட்டு காம்பஸின் வரைபடத்தைத் திருப்பி அனுப்பி, “தயவுசெய்து நீங்கள் எந்த பாதையில் செல்லப் போகிறீர்கள் என்பதை இந்த வரைபடத்தில் குறிப்பிடுங்கள், அதை வைத்து உங்களுக்கான தகுந்த காப்பீடு பாலிசியைப் வாங்குவோம்” என்று கூறினார்கள். மேலும் சில வாரங்கள் சென்றன. அதன்பின் அவர்கள், “சைக்கிளை எங்கே வைக்கப் போகிறீர்கள், அது எப்படி பூட்டப்படும் என்பதைப் தெளிவுபடுத்தினால் நாங்கள் இதை அதைச் செய்ய வசதியாக இருக்கும்” என்று கேட்டார்கள். நிர்வாகத்தின் சிகப்பு நாடாத்தனத்தில் மூழ்கடிக்கப்பட்டு இறக்கப் போவதை அவர் ஒரு வழியாகப் புரிந்துகொண்டு பின் வாங்கினார். பின்னர் பெல் லாப்ஸின் ப்ரெசிடெண்டாக உயர்ந்தார்.

 பார்னி ஆலிவர் (Barney Oliver) நல்ல மனிதர். அவர் ஒருமுறை IEEE-க்கு ஒரு கடிதம் எழுதினார். அப்போது பெல் லாப்ஸின் அதிகாரபூர்வ ஷெல்ஃப் உயரத்தைக் காட்டிலும் IEEE ப்ரொசீடிங்ஸ் குறிப்பேடுகளின் நீளம் அதிகமாக இருந்தது; அலுவலக அலமாரியின் அளவை மாற்ற முடியாததால் IEEE பப்ளிகேஷன் நபருக்கு அவர் இந்தக் கடிதத்தை எழுதினார்: பல IEEE உறுப்பினர்கள் பெல் லேப்ஸில் இருப்பதாகவும், IEEE தங்கள் பதிப்புகளின் நீளத்தைக் குறைக்க வேண்டுமென்றும். தன் மேலதிகாரியின் கையொப்பத்திற்காக அக்கடிதத்தை அனுப்பிவைத்தார். மேலதிகாரியின் கையொப்பத்துடன் கடிதத்தின் கார்பன் காப்பி திரும்பி வந்தது, ஆனால் மூலம் அனுப்பப்பட்டதா இல்லையா என்பதை அவரால் இன்றுவரையில் அறிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் சீர்திருத்த பாவனைகளில் ஈடுபடக் கூடாது என்று நான் கூறவில்லை. திறமையானவர்களைப் பற்றிய எனது ஆய்வு என்ன கூறுகிறதென்றால், அவர்கள் அத்தகைய சண்டைகளில் தங்களை நிரந்தரமாக ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள் என்று. கொஞ்சம் கோபத்தில் உச்சாணிக் கொம்பில் ஏறிவிட்டு அவர்கள் தங்கள் வேலைகளைத் தொடர சமநிலைக்கு கீழிறங்குகிறார்கள்.

பல இரண்டாம்தர ஆசாமிகள் அமைப்பின் சிறுசிறு சல்லித்தனங்களை எதிர்ப்பதில் சிக்கிக்கொண்டு அதைப் போரளவிற்கு ஊதிப் பெருக்குவார்கள். அத்தகையவர்கள் முட்டாள்தனமான திட்டங்களில் தங்கள் சக்தியைச் செலவிடுவார்கள். சிஸ்டத்தை யாரேனும் ஒருவர் மாற்றத்தானே வேண்டும் என்று நீங்கள் கூறலாம். அதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்; யாரவது அதைச் செய்யத்தான் வேண்டும். ஆனால் நீங்கள் யாராய் இருக்க விரும்புகிறீர்கள்? சிஸ்டத்தை மாற்றுபவராகவா அல்லது முதல்தர அறிவியலைச் செய்பவராகவா? இரண்டில் எந்த ஆசாமியாக இருக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்? அமைப்போடு சண்டையிட்டு அதற்கெதிராகப் போராடுகையில் என்ன செய்கிறீர்கள், வேடிக்கைக்காக எவ்வளவு தூரம்வரை போகத் தயாராக இருக்கிறீர்கள், எவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் விரயம் செய்யத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைப் பற்றி தெளிவாக இருங்கள். வேறு யாராவது அதைச் செய்யட்டும், நீங்கள் ஒரு முதல்தர அறிவியலாளராக ஆவதில் கவனம் செலுத்துங்கள் என்பதே என் அறிவுரையாக இருக்கும்.

அதே சமயத்தில் எல்லா சமயங்களிலும் பின் வாங்கக்கூடாது என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன். சில சமயங்களில் ஓரளவிற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதே புத்திசாலித்தனமானதும்கூட. அமைப்பின் காலை இழுத்துப்பார்க்கும் ஆசையில் ஈடுபடும் பல அறிவியலாளர்களை நான் கவனித்திருக்கிறேன். அடிப்படையில் இது எதனாலென்றால், பிற துறையில் அசல் தனித்துவத்துடன் இல்லாமல் ஒரு துறையில் மட்டுமே நீங்கள அசலான தனித்துவத்துடன் திகழ முடியாது என்பதே. அசலாக இருப்பதென்பது வித்தியாசமாக இருப்பதும்கூட. தனித்துவமான பிற கூறுகளில்லாமல் நீங்கள் ஒரு தனித்துவமான அறிவியலாளராக மட்டும் இருக்க முடியாது. ஆனால் பல விஞ்ஞானிகள் பிற இடங்களில் உள்ள அவர்களது விநோதங்களால் ஆங்காரத் திருப்திக்காகத் தேவையானதைக் காட்டிலும் அதிக விலை கொடுக்க அனுமதித்துள்ளனர். நான் எல்லா ஈகோ வலியுறுத்தலுக்கும் எதிரானவன் அல்ல, சிலதுக்கு மட்டும்.

மற்றொரு குறை கோபம். பல சமயங்களில் அறிவியலாளர்கள் கோபப்படுகிறார்கள், ஆனால் விஷயங்களைச் சமாளிப்பதற்கான வழி இதுவல்ல. வேடிக்கை, செய்யலாம், கோபம், கூடாது. கோபம் வழிதவறுகிறது. எல்லா நேரத்திலும் அமைப்புக்கு எதிராகப் போராடுவதைவிட நீங்கள் அதைப் பின்பற்றி ஒத்துழைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

Manuscript notes for the talk

இன்னொரு விஷயம், எப்போதுமே எதிர்மறையானதைக் கண்டெடுப்பதைவிட நேர்மறையானதைப் பார்க்கப் பழகிக்கொள்ளுங்கள். நான் ஏற்கெனவே உங்களுக்குப் பல உதாரணங்களைக் கொடுத்துவிட்டேன், இன்னும் எக்கச்சக்கமாக இருக்கிறது; எப்படி, நிலைமையைக் கருத்தில் கொண்டு, நான் பார்த்த விதத்தை மாற்றிக்கொண்டதன் மூலம், வெளிப்படையாகக் குறைபாடாக இருந்ததை சாதகமானதாக மாற்றினேன் என்பதை முன்னே குறிப்பிட்டேன். இப்போது மற்றொரு உதாரணத்தைத் தருகிறேன். நான் ஒரு அகந்தைப் பேர்வழி, சந்தேகமே இல்லை. புத்தகம் எழுத தற்காலிக ஓய்வு எடுத்துக்கொள்ளும் பெரும்பாலானோர், அதை சரியான நேரத்தில் முடிப்பதில்லை என்பது எனக்குத் தெரியும். ஆகவேதான் என் சபாடிகலுக்குப் புறப்படுவதற்கு முன்னால் என் நண்பர்களிடம், திரும்பிவருகையில் அந்தப் புத்தகம் முடிக்கப்பட்டிருக்கும் என்று அடித்துக் கூறினேன். ஆமாம், அதை நான் முடிக்கவும் செய்தேன், ஏனெனில் முடிக்காமல் திரும்புவது எனக்கு அவமானத்தை அளித்திருக்கும் என்பதால். நான் விரும்பியபடி நடந்துகொள்ள என் ஈகோவைப் பயன்படுத்தினேன். நான் செய்துமுடித்தாக வேண்டியதைப் பற்றி பீற்றிக் கொண்டேன். பொறியில் சிக்கிய எலியைப் போல் மூலையில் தள்ளப்படுகையில் வியக்கத்தக்க வகையில் என்னால் செயலாற்ற முடிந்ததை நான் பல முறை கவனித்திருக்கிறேன். எப்படிச் செய்துமுடிப்பேன் என்பதைப் பற்றி துளியும் அறிந்திறாத நிலையிலும் “ஒன்னும் பிரச்சினை இல்ல. செவ்வாய்க்கிழமை முடிச்சுத் தரேன்” என்று உறுதியளிப்பது உந்துதலளித்ததையும். பல முறை என் மானத்தைப் பிணையமாக வைத்திருக்கிறேன், சில முறை தவறியுமிருக்கிறேன், ஆனால் முன்னால் சொன்னது போல் ஒரு பொறியில் சிக்கிய எலியாக எவ்வளவு அருமையாகப் பணியாற்றுகிறேன் என்பதைக் கண்டு பல முறை வியந்திருக்கிறேன். உங்களை நீங்களே பயன்படுத்திக்கொள்ள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒரு கண்ணோட்டத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றிக்கொள்வதை நீங்கள் அறிந்துகொள்வது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

மனிதர்களைப் பொறுத்தவரையில் சுய மமதை என்பது ஒரு பரவலான விஷயம். ஒரு விஷயத்தை மாற்றி உங்களையே ஏமாற்றிக் கொண்டு அதைப் பிறிதொன்றாகக் காட்டுவதற்கு எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. “இதையோ அதையோ நீ ஏன் செய்யவில்லை” என்று ஒரு நபரைக் கேட்டால் அதற்கான ஆயிரம் சப்பைக்கட்டுகளை அவர் வழங்குவார். அறிவியல் வரலாற்றைக் கவனித்தீர்களென்றால், பெரும்பாலும் பத்து பேர்கள் தயாராக இருப்பார்கள். ஆனால் முதலில் வருபவருக்கே நாம் பரிசளிக்கிறோம். மீதி ஒன்பது பேர்கள் “எனக்கும் தோன்றியது ஆனால் அதைச் செய்து முடிக்கவில்லை, அது இது” என்று நீட்டிமுழக்குவார்கள். சப்பைக்கட்டுகள் ஏராளம். நீ ஏன் முதலில் வரவில்லை? நீ ஏன் சரியாகச் செய்து முடிக்கவில்லை?. நொண்டிக் காரணங்களை ஒப்பித்து உங்களையே ஏமாற்றிக்கொள்ள முயலாதீர்கள். மற்றவர்களிடம் வேண்டுமானால் இவற்றைக் கூறிக்கொள்ளுங்கள். ஆனால் உங்களிடமே கூறிக் கொள்ளும் போதாவது உண்மையாக இருக்க முயலுங்கள்.

முதல்தர அறிவியலாளராக வேண்டுமானால் உங்களை நீங்களே அறிந்துகொள்ள வேண்டும்; அதாவது உங்கள் பலங்கள், பலவீனங்கள், என் அகந்தையைப் போல் உங்கள் மோசமான குறைபாடுகளை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு குறையை எப்படிச் சாதகமாக மாற்றிக்கொள்வது? நீங்கள் செல்ல வேண்டிய திசையில் துல்லியமாகச் செல்ல உங்களுக்குப் போதுமான மனிதவளம் இல்லாதிருக்கும்பட்சத்தில் நிலைமையை எப்படிச் சமாளிப்பது? மீண்டும் கூறுகிறேன், வரலாற்றை அவதானிக்கையில் வெற்றிகரமான விஞ்ஞானி கண்ணோட்டத்தை மாற்றி, ஒரு குறைபாட்டைச் சாதகமான ஒன்றாக மாற்றிக்கொளவதை நான் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். 


சுருக்கமாக, கைக்கெட்டும் தூரத்தில் மகத்துவத்தை வைத்திருக்கும் பலர் வெற்றிபெறாததற்கு சில காரணங்கள் என்று நான் கூறுவது: அவர்கள் முக்கியமான பிரச்சினைகளில் வேலை செய்வதில்லை, அறிவியலில் தங்களை உணர்வுபூர்வமாக ஆழ்த்திக் கொள்வதில்லை, கடினமானதை எளிதாக செய்யக்கூடியதென்றாலும் முக்கியமாக இருக்கும் பிறிதொன்றாக மாற்றிக்கொள்ள அவர்கள் முயல்வதில்லை, அதை மறைக்க அவர்களுக்கே நொண்டிக் காரணங்கள் கொடுத்துக் கொண்டு, அதிர்ஷ்டமில்லை என்று அங்கலாய்த்துக் கொள்வது. ஆனால் இது எவ்வளவு எளிமையானதென்று நான் உங்களுக்கு விளக்கியிருக்கிறேன்; மேலும் உங்களை எப்படிச் சீர்திருத்திக்கொள்ள முடியும் என்பதையும். எனவே, முன் செல்லுங்கள், மாபெரும் அறிவியலாளர்களாக ஆகுங்கள்!

R.W. Hamming and NPS colleagues

கேள்விகளும் பதில்களும்

ஏ.ஜி. ஷினௌவெத்: 50 நிமிடங்களாக ஒரு அற்புதமான பணிவாழ்விலிருந்து கடைந்தெடுத்த ஞானத்தையும் முத்தான அவதானங்களையும் வழங்கினீர்கள்; நச்சென்று இலக்கை பாய்ந்தடைந்த அவதானங்கள் அனைத்தையும் என்னால் நினைவுகூர முடியாதென்றாலும் அவற்றில் பல இக்காலத்திற்கு மிக மிகப் பொருத்தமாக இருந்தது என்பதை என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஒன்று, அதிக கணினித் திறனுக்கான வேண்டுகோள்; இன்று காலை பலரிடம் இருந்து அதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை. மீண்டும் மீண்டும்! டிக், நீங்கள் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற கருத்துகளைக் கூறிக் கொண்டிருந்தீர்கள் என்றபோதிலும் இப்போதும் அவை மிகப் பொருத்தமாகவே இருக்கின்றன. உங்கள் பேச்சிலிருந்து நாங்கள் வடிகட்டி எடுத்துக்கொள்ளக் கூடிய சகலவிதமான பாடங்களை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. உதாரணமாக, எதிர்காலத்தில் நான் அரங்குகளைச் சுற்றி வலம் வருகையில் பெல்கோரில் பல மூடிய கதவுகளைக் காணமாட்டேன் என்று நம்புகிறேன். அந்த அவதானத்தை நான் மிகவுமே ரசித்தேன். 

உண்மையில் மிக்க நன்றி டிக். நினைவுகூரல் அற்புதமாக இருந்தது. இப்போது இந்த கூடுகையைக் கேள்விகளுக்காகத் திறந்து வைக்கிறேன். நிச்சயமாக டிக்கின் பல கருத்துக்களை மேலும் விவாதிக்க பலரும் பிரியப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன். 

ஹாமிங்: முதலில் கம்ப்யூட்டிங் பற்றி ஆலன் ஷினௌவெத்துக்குப் பதிலளிக்கிறேன். அப்போது கம்ப்யூட்டிங்கை ஆய்வுத் துறையில் நடத்திக் கொண்டிருந்தேன். பத்து வருடங்களாக என் நிர்வாகத்திடம் “அந்த இழவெடுத்த இயந்திரத்தை ஆய்வுத் துறையிலிருந்து வெளியேற்றுங்கள். அனைத்து நேரங்களிலும் பிறரது புதிர்விடுத்தல்களை அதில் ஓட்ட நாங்கள் கட்டாயப்படுத்தப் படுகிறோம். கணினி இயந்திரங்களை இயக்குவதிலும் நிர்வகிப்பதிலும் மிகவும் பிஸியாக இருப்பதால் எங்களால் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முடிவதில்லை” என்று கூறினேன். ஒருவழியாக நாங்கள் கூறியது அவர்கள் மண்டைகளை எட்டியது. கம்ப்யூட்டிங்கை ஆராய்ச்சியிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தார்கள். சொல்லவே வேண்டாம் நான் வெறுக்கத்தக்கவனாக ஆகிவிட்டேன், அவர்கள் என் தாடைகளை உடைக்காதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது, ஏனெனில் அனைவருக்கும் பிரியமான விளையாட்டுச் சாமானை நான் பறித்துவிட்டேன். எட் டேவிட்டின் அலுவலகத்திற்குச் சென்று, “பாருங்கள் எட், நீங்கள் உங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு இயந்திரத்தைக் கொடுக்க வேண்டும். மிகப் பெரிய இயந்திரத்தைக் கொடுத்தால் அதை நிர்வகிப்பதில் நேரத்தைச் செலவிடும் அந்தப் பழைய பிரச்சினையில் மீண்டும் மாட்டிக் கொள்வார்கள். எனவே இருப்பதிலேயே சிறிய இயந்திரத்தை அவர்களுக்குக் கொடுங்கள், அவர்கள் திறமைசாலிகள், மாஸ் கம்ப்யூட்டிங்கிற்குப் பதிலாக சிறிய மெஷினில் எப்படி வேலைகளைச் செய்துகொள்வது என்பதைக் கற்றுக் கொள்வார்கள்” என்று கூறினேன். என்னைப் பொறுத்தவரையில் அப்படித்தான் UNIX உருவானது. நாங்கள் அவர்களுக்கு ஒரு மிதமான சிறிய இயந்திரத்தை கொடுத்தோம், அவர்கள் அதை வைத்து பெரிய விஷயங்களைச் செய்ய முடிவு செய்தார்கள். அதை நிறைவேற்ற அவர்களுக்கு ஒரு புதிய அமைப்பைக் கட்டமைக்க வேண்டியிருந்தது. அதன் பெயர்தான் யூனிக்ஸ்!

ஏ.ஜி. ஷினௌவெத்: அதைப் பற்றி கூறுவதற்கு எனக்கும் ஒன்றிருக்கிறது. டிக், எங்கள் இப்போதைய சூழலில் ரெகுலேட்டர்களுக்குத் தேவைப்படும் அல்லது காரணமாக இருக்கும் சிகப்பு நாடாக்களுடன் நாங்கள் மல்யுத்தம் செய்கையில் AVP ஒருவர் கூறியதை நான் பல முறை மேற்கோளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அவர் “செய்து முடித்தாக வேண்டியதின் பட்டியலில் UNIX இல்லவே இல்லை” என்று உறுமினார்.

கேள்வி: தனிப்பட்ட மனஅழுத்தம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தோன்றுகிறதா?

ஹாமிங்: ஆம், கண்டிப்பாக. நீங்கள் உணர்வுபூர்வமாக ஈடுபடவில்லை என்றால் பாதிக்காது. பெல் லேப்ஸில் இருந்த பெரும்பாலான வருடங்களில் எனக்கு ஆரம்பகால வயிற்றுப் புண்கள் இருந்தன. கடற்படை முதுகலை பள்ளிக்குச் சென்ற பிறகு சிறிது ஓய்வாக இருக்கிறேன், இப்போது என் உடல்நிலை மிகவுமே முன்னேறியிருக்கிறது. ஆனால் நீங்கள் ஒரு சிறந்த விஞ்ஞானியாக இருக்க விரும்பினால், மனஅழுத்தத்தைத் தாங்கித்தான் ஆக வேண்டும். சொகுசான வாழ்க்கை வாழலாம், அனைவருக்கும் பிடித்தமான நல்ல ஆசாமியாக இருக்கலாம் அல்லது பெரும் அறிவியலாளராக ஆகலாம். ஆனால் சமத்துப் பிள்ளைகள் எப்போதுமே கடைசியில் வருவார்கள் என்றுதான் லியோ டுரோஷெர் கூறுவார். பொழுதுபோக்கு, மற்றதனைத்தும் கூடிய ஒரு இன்பகரமான வாழ்க்கையை வாழ நீங்கள் ஆசைப்பட்டால், நீங்கள் அப்படிப்பட்ட வாழ்க்கையைத் தான் வாழ்வீர்கள். 

கேள்வி: தைரியம் பற்றிப் பேசினீர்கள், அதை யாராலும் விவாதிக்க முடியாது; நம்மில் நரை முடி உள்ளவர்கள் அல்லது தங்களை நன்றாக நிறுவிக்கொண்டவர்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இக்காலத்தில் இளைஞர்களிடையே நான் உணருவது மிகவும் போட்டி நிறைந்த சூழலில் ரிஸ்க் எடுப்பதைக் குறித்த உண்மையான கவலையை. இதைப் பற்றி ஏதாவது போதனைகள் உங்களிடம் உள்ளதா?

ஹாமிங்: எட் டேவிடை மீண்டும் மேற்கோள் காட்டுகிறேன்; இக்கட்டுகளை எதிர்கொள்ளும் ஸ்திரத்தை பொதுவாகவே நம் சமூகம் இழந்துவிட்டதைப் பற்றி எட் டேவிட் கவலைப்பட்டார். நாம் பல்வேறு காலகட்டங்களை கடந்திருக்கிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. போரிலிருந்து வெளியே வந்து, வெடிகுண்டு உருவாக்கப்பட்ட லாஸ் அலமோஸில் இருந்து வெளியே வந்து, ரேடார்களை உருவாக்கி வெளியே வந்து என, கணிதத் துறையிலும், ஆராய்ச்சித் துறையிலும், பல துணிச்சல்மிக்கவர்கள் குழுவாக வந்து சேர்ந்தார்கள். அவர்கள் காரியங்கள் செய்து முடிக்கப்படுவதைப் பார்த்திருந்தார்கள்,. அண்மையில்தான் அருமையாக ஒரு போரில் வெற்றி பெற்றிருந்தார்கள், எங்களிடம் துணிவிருப்பதற்கான காரணங்கள் இருந்தன, எனவே நாங்கள் பெரிய அளவில் செய்தோம். திரும்பவும் அதைச் செய்ய அதே மாதிரியான சூழலை என்னால் உருவாக்க முடியாது. அது தற்போது இல்லை என்று இன்றைய தலைமுறையைக் குறை சொல்ல முடியாது, நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் பழியை அக்கருத்துடன் இணைத்துக் கொள்ளாமல்; மகோன்னதத்திற்கான விழைவு அவர்களிடம் இல்லை என்றே தோன்றுகிறது; அதற்கான துணிவும் அவர்களிடம் இல்லை. ஆனால் எங்களிடம் இருந்தது, ஏனென்றால் நாங்கள் அதற்கான சாதகமான சூழலில் இருந்தோம்; மாபெரும் வெற்றிகரமான போரைக் கடந்து வந்திருந்தோம். அந்தப் போரில் நீண்ட காலமாக நாங்கள் படுமோசமான நிலையில் இருந்தோம்.; அவநம்பிக்கையுடன் போராடிய அந்த நாட்களைப் பற்றி உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியுமே. எங்கள் வெற்றி, எங்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது என்று நினைக்கிறேன்; அதனால்தான் அக்காலத்தால் உந்தப்பட்டு நாற்பதுகளின் பிற்பகுதியில் தொடங்கி ஐம்பதுகள்வரை திறந்தெழுந்த ஆய்வகங்களில் மிகப்பெரிய உற்பத்தித் திறனை நீங்கள் பார்க்கிறீர்கள் – ஏனெனில் எங்களில் பலர் அறிந்திராத பிற விஷயங்களைக் கற்றுக்கொள்ள கட்டாய்ப்படுத்தப்பட்டதால், கற்றுக்கொள்ள விரும்பாத பல விஷயங்களை கற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டதால், திறந்த கதவை வைத்திருக்க கட்டாயப்படுத்தப்பட்டதால் – பின்னர் கட்டாயத்தில் கற்றுக்கொண்ட அவ்விஷயங்களை எங்களால் செம்மையாகப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. அதுவே உண்மை, அதை என்னால் மாற்ற முடியாது; இன்றைய தலைமுறையையும் என்னால் குறை சொல்ல முடியாது. இது வெறும் தரவுதான்.

கேள்வி: நிர்வாகத்தால் ஏதாவது செய்ய முடியுமா அல்லது செய்ய வேண்டுமா?

ஹாமிங்: நிர்வாகம் மிகக் குறைவாகவே செய்ய முடியும். ஆராய்ச்சியை நிர்வகிப்பது பற்றி நீங்கள் பேச விரும்பினால், அது முற்றிலும் வேறு கதை; எனக்கு அதைப் பற்றி பேச இன்னும் ஒரு நேரம் பிடிக்கும். இந்தப் பேச்சு நிர்வாகத்தையும் வேறு எந்த எதிர்ப்பையும் மீறி தனிநபர் எவ்வாறு மிகவும் வெற்றிகரமான ஆராய்ச்சியை மேற்கொள்கிறார் என்பதைப் பற்றியது. நீங்களும் அதை எப்படிச் செய்ய முடியும்? என்னைப் போல் பிறர் செய்வதைக் கவனித்து. அது அவ்வளவு எளிமையானது, ஒரு விதத்தில் அவ்வளவு கடிமானதும்கூட.

கேள்வி: ப்ரெயின் ஸ்டார்மிங் அல்லது கூட்டுச் சிந்தனை செய்வது தினசரி செயலா? 

ஹாமிங்: ஒரு காலத்தில் அது மிகவும் பிரபலமாக இருந்தது, ஆனால் அது பலனளிக்கவில்லை என்றே தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை, மற்றவர்களுடன் பேசுவதை நான் விரும்புகிறேன். ஆனால் கூட்டுச் சிந்தனை அமர்வு என்பதெல்லாம் அரிதாகவே பெறுமானமானதாக இருக்கிறது. குறிப்பிட்ட ஒருவரோடு பேசுவதற்காக நான் உள்ளே சென்று “பாருங்கள், இதில் ஏதோ ஒரு விஷயம் இருந்தாக வேண்டும், எனக்கு என்ன தோன்றுகிறதென்றால்…” என்று ஆரம்பித்து உரையாடலைத் தொடருவேன். ஆனால் இது வேலை செய்ய நீங்கள திறமைசாலிகளை உரையாடுவதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதை வேறுவிதமாகக் கூறவேண்டுமானால், ‘கிரிட்டிகல் மாஸ்’ என்ற கோட்பாட்டை நீங்கள் அறிந்திருப்பீர்கள், போதுமான விஷயங்கள் இருந்தால் உங்களிடம் வரம்புத் திணிவும் இருக்கிறது. நான் ‘ஒலி உறிஞ்சிகள்’ என்று அழைக்கும் ஒரு கருத்தும் உள்ளது. அதிக ஒலி உறிஞ்சிகளைக் கொண்ட கூட்டத்தில், நீங்கள் ஒரு யோசனையைச் சொன்னால், அவர்கள் வெறுமென “ஆம், ஆம், ஆம்” என்று கூறுவார்கள். ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பதோ செயல்படுவதற்குத் தேவையான கிரிட்டிகல் மாஸ்-ஐ.; “ஆமாம், இது எனக்கு அதை நினைவூட்டுகிறது,” அல்லது, “அதைப் பற்றியோ இதைப் பற்றியோ யோசித்தீர்களா?” போன்ற எதிர்வினைகளை. நீங்கள் மற்றவர்களுடன் பேசும்போது, நல்ல மனிதர்களாக இருக்கும் ஆனால் “ஒலி உறிஞ்சிகளை” ஒத்த ஆமாஞ்சாமிகளை அகற்றிவிட்டு, உங்களை உடனடியாகத் தூண்டிவிடுபவர்களைக் கண்டறிய வேண்டும்.

உதாரணமாக, மிக விரைவாகத் தூண்டப்படாமல் நீங்கள் ஜான் பியர்ஸுடன் பேச முடியாது. வேறு சிலருடனும் உரையாடும் பழக்கம் எனக்கிருந்தது. உதாரணத்துக்கு, எட் கிட்பர்ட் (Ed Gilbert); அடிக்கடி அவருடைய அலுவலகத்திற்குச் சென்று அவரிடம் கேள்விகளைக் கேட்டுவிட்டுத் திரும்பி வருகையில் என் சிந்தனை தூண்டப்பட்டிருக்கும். யார் யாருடன் கூட்டுச் சிந்தனை செய்யவேண்டும் எவருடன் அதை செய்யக்கூடாது என்பதை நான் கவனமாகத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் ஒலி உறிஞ்சிகள் ஒரு சாபக்கேடு. நல்ல ஆசாமிகள்தான்; ஆனால் இடத்தை நிரப்பிக்கொண்டு, யோசனைகளை உறிஞ்சுவதைத் தவிர வேறு பங்காற்ற மாட்டார்கள், மேலும் புதிய யோசனைகள் எதிரொலிக்கப்படாது அவர்களிடம் இறந்துவிடுகின்றன. ஆம், பிறருடன் பேசுவது அவசியம் என்றே நினைக்கிறேன். மூடிய கதவுகளைக் கொண்டவர்கள் இதைச் செய்யத் தவறுவதால், தங்கள் யோசனைகளைக் கூர்மைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளையும் தவறவிடுகிறார்கள்; “நீங்கள் எப்போதாவது இதைக் கவனித்தீர்களா?” என்று அறிந்திராத ஒன்றைப் பற்றி கேட்கப்படுகையில் நான் அங்கு சென்று பார்க்க உந்தப்படுகிறேன். யாரோ வழி காட்டுகிறார்கள். இங்கு வருவதற்குள், வீட்டிற்குச் சென்றவுடன் படிக்க வேண்டிய பல புத்தகங்கள் ஏற்கனவே எனக்குப் பரிந்துரைக்கப்பட்டுவிட்டன. நான் பிறரிடம் பேசுகிறேன், கேள்விகளைக் கேட்கிறேன், அவர்களால் எனக்குப் பதிலளிக்க முடியும், எனக்குத் தெரியாத துப்புகளைக் கொடுக்க முடியும் என்று நம்புகையில், வெளியே சென்று கவனிக்கிறேன்.

கேள்வி: வாசிப்பதற்கும் எழுதுவதற்கும், அசல்ஆராய்ச்சி செய்வதற்கும் உங்கள் நேரத்தை ஒதுக்குவதில் நீங்கள் என்ன வகையான சமரசங்களைச் செய்துகொள்கிறீர்கள்?

ஹாமிங்: ஆரம்ப நாட்களில், குறைந்தபட்சம் அசல் ஆராய்ச்சியில் செலவிடுதும் அளவிற்கு, மெருகூட்டல், காண்பிக்கைகளில் நேரம் செலவிட வேண்டும் என்று நம்பினேன். இப்போது 50% நேரத்தையாவது பிரெசெண்டேஷன்களுக்கும் செலவிட வேண்டும் என்ற கணிப்பிற்கு வந்திருக்கிறேன். நிச்சயமாக கணிசமான நேரத்தை. 

கேள்வி: எவ்வளவு நேரம் நூலகத்தில் வேலை செய்ய வேண்டும்?

ஹாமிங்: இது புலத்தைப் பொறுத்தது. இதைப் பற்றி இப்படிச் சொல்கிறேன். பெல் லாப்ஸில் தோழரொருவர் இருந்தார், மிக மிக புத்திசாலி. எப்போதும் நூலகத்தில்தான் இருப்பார்; அனைத்தையும் படிப்பார். உசாத்துணை வேண்டுமானால் அவரிடம்தான் கேட்போம் சகல விதமான உசாத்துணைகளை கொடுப்பார். ஆனால் இந்தக் கோட்பாடுகளை உருவாக்க்கிக் கொண்டிருக்கையில், ஒரு முன்மொழிவை உருவாக்கினேன்: தொலைநோக்கு என்று பார்த்தால் அவரது பெயரைக் கொண்டிருக்கும் எந்த விளைவுமே இருக்காது. இப்போது பெல் லாப்ஸில் இருந்து ஓய்வு பெற்று துணைப் பேராசிரியராக இருக்கிறார். மிகவுமே மதிப்புமிக்கவர், அதை நான் கேள்விக்கு உட்படுத்தவில்லை. Physical Review-இல் சில நல்ல கட்டுரைகள் எழுதினார்; ஆனால் அவர் பெயர் வைத்த கோட்பாடேதும் கிடையாது, ஏனெனில் அவர் அளவுக்கதிகமாகப் படித்தார். மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் எப்போதும் படித்துக் கொண்டிருந்தால், அவர்கள் நினைத்த மாதிரியே நீங்களும் நினைப்பீர்கள். வித்தியாசமான புதிய எண்ணங்களை நீங்கள் சிந்திக்க விரும்பினால், பல படைப்பாளிகள் செய்வதைப் போல் நீங்களும் செய்யுங்கள் – புதிரை ஓரளவிற்குத் தெளிவுபடுத்திக்கொண்டு, அதற்கான தீர்வை நீங்கள் எப்படி அணுகுவீர்கள், அதை சரியானதாக்க எப்படி அதைச் சிறிது மாற்றி அமைப்பீர்கள் என்பதையெல்லாம் கவனமாகச் சிந்தித்துப் பார்க்கும்வரை பிறரது பதில்களைப் பார்க்க மறுத்துவிடுங்கள். எனவே ஆம், தொடர்ந்து உங்களை இற்றைப்படுக்கிக் கொள்ள வேண்டும், தீர்வுகளைக் கண்டறிவதைவிட, பிரச்சினைகள் என்ன என்பதைக் கண்டறிவதற்காகவே நீங்கள் அதிகமாகப் படிக்க வேண்டும். என்ன நடந்து கொண்டிருக்கிறது எது சாத்தியம் என்பதை அறிந்துகொள்ளவே படிப்பு தேவைப்படுகிறது. ஆனால் தீர்வுகளைக் கண்டறிவதற்காகப் படிப்பதென்பது சிறந்த ஆராய்ச்சியைச் செய்வதற்கான வழி இல்லை என்றே தோன்றுகிறது. எனவே இரண்டு விடைகளைத் தருகிறேன்: படியுங்கள்; ஆனால் எவ்வளவு படிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல எப்படிப் படிக்கிறீர்கள என்பதே முக்கியம். 

கேள்வி: அறிவியல் விஷயங்களோடு நம் பெயர்களை எப்படி இணைத்து கொள்வது? 

ஹாமிங்: மகத்தான வேலைகளைச் செய்வதன் மூலம். ஹாமிங் ஜன்னலைப் பற்றி சற்று கூறுகிறேன். ஜான் டூகியை நான் கடுமையாக, பல முறை கடுமையாக நடத்திக் கொண்டிருந்த காலத்தில் பிரின்ஸ்டனிலிருந்து மரே ஹில்லில் இருந்த எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பவர் ஸ்பெக்ட்ரா (power spectra) குறித்து அவர் எழுதிக்கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியும். அதில் ஒரு ஜன்னலை ஹாமிங் ஜன்னல் என்று அழைத்தால் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லையே என்று அவர் கேட்டார். 

நான் அவரிடம் “விளையாடாதீர்கள் ஜான், அதில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நான் செய்தேன், நீங்கள்தான் நிறைய செய்தீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று குறுக்கிட்டேன். “ஆமாம், ஹாமிங், ஆனால் நீ நிறைய சின்னச் சின்ன விஷயங்களைச் செய்து பங்களித்திருக்கிறாய்; உனக்கும் அது சிறிது கடன்பட்டிருக்கிறது” என்று பதிலளித்தார். ஆக, அவர் அதற்கு ஹாமிங் விண்டோ என்று பெயர் வைத்தார். சரி, விஷயத்துக்கு வருகிறேன். அசலான மகத்துவத்தைச் சுட்டிக்காட்டி நான் அடிக்கடி ஜானைக் குத்திக் காட்டிக்கொண்டிருப்பேன். உங்கள் பெயரின் முதலெழுத்து ampere, watt, fourier போல் அறிவியலில் சிற்றெழுத்துடன் (lower case) தொடங்குகையில்தான் நீங்கள் உண்மையான மகத்துவத்தை எய்துகிறீர்கள் என்று அவரிடம் கூறுவேன். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த hamming window-வும் வந்து சேர்ந்தது.

கேள்வி: டிக், ஒப்பீட்டளவில் பேச்சு கொடுப்பதற்கும், பேப்பர்களை எழுதுவதற்கும், புத்தகங்களை எழுதுவதற்கும் இடையே உள்ள செயல்திறன் வேறுபாடுகளைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா? 

ஹாமிங்: குறுகிய கால வரையறைக்கு பேப்பர்கள் மிக முக்கியமானவை, அதாவது நாளைக்கே எவரையாவது நீங்கள் உந்துவிக்க வேண்டுமானால் என்ற அர்த்தத்தில். தொலைநோக்கில் அங்கீகாரத்தைப் பற்றி யோசித்தால் புத்தகங்களே அதிகம் பங்களிக்கின்றன என்று தோன்றுகிறது, ஏனெனில் நம்மில் பெரும்பாலோருக்கு வழிநடத்தல் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட எல்லையற்ற அறிவு கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் இந்நாளில் சரியான வழியைக் கண்டடைய கொஞ்சம் வழிநடத்தல் தேவையாக இருக்கிறது. எல்லையற்ற அறிவு என்றால் என்ன என்பதையும் சொல்லி விடுகிறேன். நியூட்டன் காலத்திலிருந்து இன்றுவரை, 17 வருடங்களுக்கு ஒருமுறை, சற்றுக் கூடக்குறைய இருந்தாலும், அறிவை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்குகிறோம். நிபுணத்துவம் மூலம் இவ்வதிகரிப்பை நாம் சமாளிக்கிறோம். அந்த விகிதத்தில் அடுத்த 340 ஆண்டுகளில், 20 இரட்டிப்புகள் என்று வைத்துக்கொண்டால் அதைச் சமாளிப்பதற்கு இப்போதுள்ள ஒவ்வொரு துறைக்கும் ஒரு மில்லியன் சிறப்பு நிபுணத்துவத் துறைகளாவது தேவைப்படும். இது சாத்தியமில்லை. நாம் வேறு புதிய உத்திகளையும் கருவிகளையும் உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் அறிவின் தற்போதைய வளர்ச்சி தன்னைத்தானே நெரித்துக் கொள்ளும். ஜீரணித்து, ஒருங்கிணைத்து, நகல்களையும் குறைபயனளிக்கும் முறைகளையும் அகற்றி, இப்போது நாம் அறிந்தவற்றின் அடிப்படைக் கருத்துக்களை தெளிவாக முன்வைக்க முனையும் புத்தகங்களே எதிர்கால சந்ததியினர் மதிக்கும் விஷயங்களாக இருக்கும் என்று நம்புகிறேன். பொதுச் சொற்பொழிவுகள், தனிப்பட்ட பேச்சுக்கள், எழுத்து வடிவிலிருக்கும் ஆய்வுப் பேப்பர்கள் இவை எல்லாவற்றுக்கும் அவசியம் இருக்கிறது. தொலைநோக்கில், நாம் அனைத்தையும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்பதால், அனைத்தையும் உங்களிடம் சொல்ல முயலும் புத்தங்களைவிட அத்தியாவசியமில்லாதவற்றை விட்டுவிடும் புத்தகங்களே முக்கியம் என்று சொல்லத் தோன்றுகிறது. பெங்குவின்கள் பற்றி அவ்வளவு தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்பதே வழக்கமான பதில். சாரம்சத்தை மட்டும் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.

கேள்வி: நோபெல் பரிசால் உண்டாகும் பிரச்சினை, அதை வென்ற சிலரது பணிவாழ்வுகளை அது பாதித்த விதமும் அவலமும் பற்றிக் குறிப்பிட்டீர்கள். இது ஒரு விதத்தில் புகழ்சார்ந்த பரந்த பிரச்சினை தானே? நாம் என்ன செய்ய முடியும்? 

ஹாமிங்: நீங்கள் செய்யக் கூடிய விஷயங்கள் பின்வருமாறு. ஒவ்வொரு ஏழு வருட கால இடைவெளிக்குப் பிறகு உங்கள் துறையை முழுதாகவோ முக்கியமான வகையிலோ மாற்றிக் கொள்ளுங்கள். நான் எண்ணியல் பகுப்பாய்விலிருந்து, வன்பொருள், மென்பொருள் என்று அவ்வப்போது மாறிக்கொண்டே இருந்தேன். ஏனெனில் உங்கள் துறைக்கான உங்கள் யோசனைகளை நீங்கள் முழுதும் பயன்படுத்திவிடுகிறீர்கள். ஒரு புது துறைக்குச் செல்லுகையில் நீங்கள் ஒரு குழந்தையாகத் தொடங்க வேண்டியிருக்கிறது. நீங்கள் இப்போது ஒரு ஜாம்பவானல்ல என்பதால் பிறகாலத்தில் பெரும் கருவாலிகளாக வளரக்கூடிய அந்த ஏகார்ன்களை விதைப்பதிலிருந்து மீண்டும் தொடங்க முடியும். என்னைப் பொறுத்தவரையில் ஷானன் தன்னையே பாழ்படுத்திக் கொண்டார். சொல்லப்போனால் அவர் பெல் லாப்ஸை விட்டு வெளியேறியபோது, “இதுதான் ஷானனின் அறிவியல் வாழ்க்கையின் முடிவு” என்று கூறினேன். அதற்காக நண்பர்களிடமிருந்து நிறையவே வாங்கிக்கட்டிக் கொண்டேன். அவர்கள் ஷானன் எப்போதும் போல் இன்னமும் புத்திசாலியாகவே இருக்கிறார் என்று மறுத்தார்கள். “ஆமாம் புத்திசாலியாக இருப்பார், ஆனால் அவர் அறிவியல் வாழ்வு முடிந்திருக்கும்” என்று கூறினேன். அதை உண்மையிலேயே நம்பவும் செய்தேன்.

நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும். சிறிது காலத்துக்குப் பிறகு நீங்கள் சோர்வடைந்து விடுகிறீர்கள்; ஒரு துறையில் உங்களுக்கு இருந்த தனித்துவத்தை முழுதாக உபயோகித்துவிடுகிறீர்கள். அப்போது தொழில்நுட்பத்தில் உங்கள் துறைக்கு ஒத்த ஒரு துறைக்கு நீங்கள் மாற வேண்டும். இசையிலிருந்து கோட்பாட்டு-இயற்பியலுக்கும் அங்கிருந்து ஆங்கில இலக்கியத்திற்கும் நீங்கள் மாறவேண்டும் என்று கூற வரவில்லை; பழுதடையாமல் இருக்க விரும்பினால் உங்கள் புலத்தின் வேறொரு பகுதிக்கு நீங்கள் மாற முயற்சிக்க வேண்டும். ஏழு வருடத்திற்கு ஒருமுறை மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஆகாத காரியமாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்ய முடிந்தால் ஆராய்ச்சி செய்வதற்கு நான் ஒரு நிபந்தனையை விதிப்பேன்: ஏழு வருடங்களுக்கு ஒருமுறை உங்கள் ஆராய்ச்சித் துறையை ஒரு நியாயமான வரையறைக்கு உட்பட்டு, நீங்களே மாற்றிக் கொள்வீர்கள், அல்லது 10 ஆண்டுகளின் முடிவில், உங்களை மாற்றும்படி கட்டாயப்படுத்த நிர்வாகத்திற்கு உரிமை இருக்க வேண்டும். இதை நான் தீவிரமாக நம்புவதால்தான் இம்மாதிரியான மாற்றங்களை வலியுறுத்துகிறேன். பழைய ஆசாமிகளுக்கு என்ன நடக்கிறது என்றால், அவர்கள் ஒரு நுட்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறார்கள் அதன்பின் அதை வைத்துக் கொண்டே காலத்தை ஒட்டுகிறார்கள். அத்திசையில் அணிவகுத்தது அந்தக் காலத்திற்குச் சரியாக இருந்திருக்கலாம், ஆனால் உலகம் மாறுகிறது. புது திசைகள் உருவாகுகின்றன, ஆனால் பழைய ஆசாமிகள் பழைய திசையிலேயே இன்னமும் அணிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய கண்ணோட்டங்களைப் பெற, பழையவற்றைத் தீர்த்து முடிப்பதற்குள், நீங்கள் புதிய துறையில் இறங்க வேண்டும். இதை உங்களால் செய்ய முடியும் ஆனால் அதற்கு முயற்சியும் ஆற்றலும் தேவைப்படுகிறது. “ஆமாம், நான் என் பெரும் புகழைத் துறக்கப் போகிறேன்” என்று சொல்வதற்குத் துணிவு வேண்டும். பிழைதிருத்திக்கொள்ளும் நிரல்கள் நன்றாகப் போய்க்கொண்டிருந்த போது, மேலே கூறிய கோட்பாட்டின் தாக்கத்தில் நான் “ஹாமிங் அந்தத் துறையின் பேப்பர்களைப் படிப்பதை விட்டுவிட்டு அவற்றை முற்றிலும் துறக்கப் போகிறாய்; அதை வைத்து ஓட்டிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக வேறு எதையாவது செய்ய முயற்சிப்பாய்” என்று எனக்கே கூறிக்கொண்டேன். கவனத்துடன், வேண்டுமென்றே, அந்தத் துறையில் மேலும் வேலை செய்ய மறுத்துவிட்டேன். வேறு ஏதாவது செய்ய வாய்ப்பு வேண்டும் என்பதற்காகக் கட்டாயமாக அத்துறையின் பேப்பர்களைப் படிப்பதை நிறுத்தினேன். நான் என்னையே சமாளித்துக்கொண்டேன், இதைத்தான் இந்த முழுப் பேச்சிலும் பிரசங்கித்திருக்கிறேன். எனது பல தவறுகளை அறிந்து, என்னை நானே சமாளித்துக் கொள்கிறேன். என்னிடம் பல குறைகள் உள்ளன, ஆகவே பல சிக்கல்களும், அதாவது சமாளிப்பதற்கான பல சாத்தியங்களும் உள்ளன.

கேள்வி: ஆராய்ச்சியையும் நிர்வாகத்தையும் ஒப்பிட முடியுமா?

ஹாமிங்: நீங்கள் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராக விரும்பினால், ஒரு நிறுவனத்தின் தலைவராக ஆக மாட்டீர்கள். நிறுவனத்தின் தலைவராக இருக்க விரும்பினால், அது வேறு விஷயம். நிறுவனத்தின் ப்ரெஸிடெண்டாக இருப்பதற்கு நான் எதிரானவன் அல்ல. எனக்கு அது வேண்டாம். பெல் லாப்ஸின் தலைவராக இயன் ராஸ் சிறப்பாகவே பணியாற்றுகிறார் என்றே நினைக்கிறேன். நான் அதை எதிர்க்கவில்லை, ஆனால் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் ஒரு இளைஞராக இருந்தபோது நீங்கள் ஒரு சிறந்த விஞ்ஞானியாக வேண்டும் என்று தேர்வு செய்திருக்கலாம். ஆனால் வயசாகுகையில், உங்கள் மனதை மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக, நான் ஒருநாள் என் முதலாளி போடிடம் சென்று, “நீங்கள் ஏன் துறைத் தலைவராக ஆனீர்கள்? ஒரு நல்ல விஞ்ஞானியாக ஆகியிருக்கலாமே, ஏன் ஆகவில்லை?” என்று கேட்டேன். அவர் கூறினார், “ஹாமிங், பெல் லாப்ஸில் கணிதம் என்னவாக இருக்க வேண்டும் என்று எனக்கு ஒரு கனவு இருந்தது. அந்தக் கனவை நனவாக்க வேண்டுமானால், நான்தான் அதைச் செய்தாக வேண்டும் என்று உணர்ந்து கொண்டேன்; அதற்கு நான் துறைத் தலைவராக இருக்க வேண்டும் என்பதையும். “என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்த கனவு உங்களை மட்டுமே சார்ந்திருந்தால், ஒற்றை ஆளாக நீங்களே அதை செய்து முடிக்கலாமானால் நீங்கள் அதை ஆராய்ச்சியாளனாகப் பின்தொடர வேண்டும்; உங்கள் கனவு எப்போது நீங்கள் தனித்து நனவாக்க முடியாது என்று ஆகிறதோ அன்று நீங்கள் நிர்வாகத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். கனவு பெரிதாகப் பெரிதாக நிர்வாகப் படிநிலையில் நீங்கள் செல்ல வேண்டிய உயரமும் அதிரிக்கும். முழு ஆய்வகமும் அல்லது முழு பெல் லாப்ஸும் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு உங்களுக்கு இருந்தால், அதை நனவாக்க நீங்கள் அந்த உயரங்களுக்குச் செல்ல வேண்டும். கீழ்ப் படிகளில் உட்கார்ந்து கொண்டு அதையெல்லாம் எளிதாக நிறைவேற்ற முடியாது. நான் நிர்வாகத்தைத் தவிர்ப்பதைத் தேர்ந்தெடுத்தேன், ஏனென்றால் என்னால் செய்ய முடிந்ததைத் தனியொருவனாகச் செய்ய விரும்பினேன். ஆனால் அது என் தேர்வு, என் விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தது. ஒவ்வொருவருக்கும் நேர்வு செய்ய உரிமையுண்டு. மனதை திறந்து வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் பாதையைத் தேர்ந்ததெடுக்கையில் தயவுசெய்து என்ன செய்கிறோம், எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்ற பிரக்ஞையுடன் தேர்வு செய்யுங்கள். கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்படாதீர்கள்.
 

கேள்வி: ஒருவருடைய சொந்த எதிர்பார்ப்பு எவ்வளவு முக்கியமானது அல்லது உங்களிடமிருந்து சிறந்த வேலையை எதிர்பார்க்கும் குழுவில் அல்லது மக்கள் சூழ இருப்பது எவ்வளவு முக்கியம்?  

ஹாமிங்: பெல் லாப்ஸில் எல்லோரும் என்னிடமிருந்து சிறந்த பணியை எதிர்பார்த்தார்கள் – அது ஒரு பெரிய உதவியாக இருந்தது. எல்லோரும் உங்களிடமிருந்து சிறப்பானவற்றை எதிர்பார்ப்பதால் நீங்களும் அப்படிச் செயலாற்ற விரும்புவீர்கள், உங்களுக்குத் தன்மானம் என்று ஒன்றிருந்தால். முதல்தர மக்களால் சூழப்பட்டிருப்பது ஒரு வரப்பிரசாதம். நான் தலைசிறந்தவர்களைத் தேடிச் சென்றேன். இயற்பியல் மேஜை சிறந்தவர்களை இழந்த தருணத்தில், நான் அதைவிட்டு வெளியேறினேன். வேதியியல் மேஜைக்கும் இது பொருந்தும் என்று நான் உணர்ந்தபோது, அதையும் துறந்தேன். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்காகவும், என்னிடமிருந்து அபாரமான விளைவுகளை எதிர்பார்ப்பார்கள் என்பதற்காகவும் சிறந்த திறன் படைத்தவர்களுடன் செல்ல முயற்சித்தேன், என்னை நானே கவனமாக நிர்வகித்துக் கொண்டதால், laissez faire-இன் தலையிடாமையைவிட சிறப்பாகச் செய்தேன் என்றே நினைக்கிறேன்.

கேள்வி: உங்கள் பேச்சின் தொடக்கத்தில், அதிர்ஷ்டத்தின் பங்கைக் குறைத்து மதிப்பிட்டீர்கள் அல்லது அதிர்ஷ்டத்தையே மட்டம் தட்டினீர்கள். ஆனால் உங்களை லாஸ் அலமோஸுக்கு அழைத்துச் சென்றது, சிகாகோவுக்கு அழைத்துச் சென்றது, பெல் ஆய்வகங்களுக்கு அழைத்துச் சென்றது போன்ற சூழ்நிலைகளை நீங்கள் மேம்போக்காகப் பேசித் தவிர்ப்பது போலிருந்தது. 

ஹாமிங்: கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. மேலும் எனக்கு மாற்று துறைகளைப் பற்றித் தெரியாது. மற்ற துறைகளில் சமமாகவோ அதிகமாகவோ வெற்றி பெற்றிருக்க மாட்டேன் என்று நிச்சயமாகத் தெரியும் வரை, அதைப் பற்றி எதுவும் சொல்ல இயலாது. நீங்கள் செய்யும் குறிப்பிட்ட காரியம் அதிர்ஷ்டமா? உதாரணமாக, லாஸ் அலமோஸில் ஃபெய்ன்மேனைச் சந்தித்தபோது, அவர் நோபல் பரிசு பெறப் போகிறார் என்று எனக்குத் தெரிந்திருந்தது. எதற்காகப் பெறுவார் என்று சரியாகத் தெரியவில்லை. அடித்துச் சத்தியம் செய்யும் அளவிற்கு அவர் மாபெரும் காரியங்களைச் செய்யப் போகிறார் என்று எனக்குத் தெரிந்திருந்தது. எதிர்காலம் எந்த் திசையில் சென்றாலும் அவர் மகத்தானவற்றைச் செய்து முடிப்பார். சொல்லி வைத்ததுபோல் அவர் செய்யவும் செய்தார். அதிர்ஷ்டத்தால் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் மட்டுமே நீங்கள் சிறப்பான வேலைகளைச் செய்கிறீர்கள் என்றல்ல, இப்போதோ எப்போதோ பல வாய்ப்புகள் வந்தபடிதான் இருக்கும். கூடை நிறைய வாய்ப்புகள், அதிலிருந்து, இந்தச் சந்தர்ப்பத்தில் ஒன்றைப் பற்றிக் கொண்டதால் இங்கில்லாமல் அங்கு சிறந்து விளங்குகிறீர்கள். ஒரு சொட்டு அதிர்ஷ்டமும் இருக்கிறதா என்று கேட்டால் ஆமாம், இல்லை என்றுதான் பதிலளிப்பேன். ஆயத்தமாக இருக்கும் மனதை அதிர்ஷ்டம் ஆதரிக்கிறது, தயாராக இருப்பவரை அதிர்ஷ்டம் ஆதரிக்கிறது. ஆனால் அதற்கு உத்தரவாதம் இல்லை; வெற்றி நிச்சயம் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கவில்லை. அதிர்ஷ்டம் சாதக் பாதக விகிதத்தை மாற்றுகிறது, ஆனால் தனிநபரிடமும் ஓரளவிற்கு நிச்சயமாக அதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. 

எனவே முன் செல்லுங்கள், மகத்தான பணியை செய்வதற்காக!

மூலநூல்கள் / மேலும் படிக்க: 

  • Hamming, Richard,  You and Your Research,  Talk at Bellcore, 1986


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “நீங்களும் உங்கள் ஆராய்ச்சியும் – ரிச்சர்ட் ஹாமிங்”

  1. Interesting and Inspiring article presented in a beautiful way.
    There is a saying “Science, Research and Serendipity.”
    I am just giving the portions and sentences which I liked most. Thanks to the Author of this essay.
    “சிக்கலைச் சற்றே மாற்றி அமைப்பதன் மூலம், அதை வேறு விதமாக எதிர்கொள்வதன் மூலம், உங்களால் உங்களது இறுதி உற்பத்தித் திறனில் பெரும் மாற்றத்தை விளைவிக்க முடியும். ஏனெனில் நீங்கள் செய்ததின் மீது பிறர் கட்டமைக்கும் வகையில் நீங்கள் அதைச் செய்து முடிக்கலாம் அல்லது அடுத்தவரும் நீங்கள் செய்ததனைத்தையும் திரும்பிச் செய்ய வேண்டிய வகையில் நீங்கள் அதைச் செய்து முடிக்கலாம்”

    “பழுதடையாமல் இருக்க விரும்பினால் உங்கள் புலத்தின் வேறொரு பகுதிக்கு நீங்கள் மாற முயற்சிக்க வேண்டும்.”

    “எப்போதுமே எதிர்மறையானதைக் கண்டெடுப்பதைவிட நேற்மறையானதைப் பார்க்கப் பழகிக்கொள்ளுங்கள்”

    “இப்போது இதுவரை பேசியதைச் சற்று தொகுத்துக் கொள்வோம். முக்கியமான புதிர்களில் வேலை செய்யவேண்டும். எல்லாமே அதிர்ஷ்டத்தை பொறுத்தது என்பதை மறுத்தாலும், ஓரளவிற்கு அதிர்ஷ்டத்திற்கும் பங்கிருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். “தயாராக இருப்பவர்களை அதிர்ஷ்டம் ஆதரிக்கிறது” என்ற பாஸ்டரின் கூற்றையும். நான் செய்ததை மிகவுமே ஆமோதிக்கின்றேன். பல ஆண்டுகளாக வெள்ளி மதியம் தோரும் – மகத்தான சிந்தனைகள் மட்டுமே என்ற கட்டுப்பாடு. அதாவது, என் பணி நேரத்தில் பத்து சதவீதத்தைத் துறையின் பெரும் புதிர்களுக்காக (அதாவது எவை முக்கியம் அவை முக்கியமல்ல என்ற அர்த்தத்தில்) அர்ப்பணித்தேன். ஆக, என் செயற்பாட்டை மாற்றி நான் முக்கியம் என்று நினைத்ததை நோக்கி என் சிந்தனைகளை அணிவகுத்தேன். உண்மையிலே இது இவ்வளவு சுலபமானதுதான்.”

  2. சொல்வனம் வாசகர்களில் எத்தனைபேர் இந்த தமிழாக்கத்தை முழுவதும் படித்தார்கள் என்று தெரியவில்லை. ஹாமிங்கின் 45 நிமிட உரையை யூட்யூபில் இங்கே பார்க்கலாம்.
    https://www.youtube.com/watch?v=a1zDuOPkMSw
    அழியாத கோலங்கள் படம் போல், நான் முன்பே பார்த்திருக்கும் அந்த உரை பற்றிய இந்தக் கட்டுரை ஒரு ட்ரிகராக (Trigger) அமைந்து என் பழைய நினைவுகளை கிளறியது!

    பல பத்தாண்டுகளுக்கு முன் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கையில் ஹாமிங், ஷானன் பற்றி எல்லாம் கேள்விப்பட்ட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர்களைப் போன்றவர்கள், ஐன்ஸ்டைனைப் போலவே, வேறு ஏதோ கிரகத்தை/காலத்தை சேர்ந்தவர்கள் என்று தோன்றும். பின்னால் 90களில் ஏதோ ஆராய்ச்சிகளை முடித்து ஒரு முனைவர் பட்டம் பெற்றபின், 2001 ஜனவரி 2ஆம் தேதி லூசென்ட் பெல் லாப்ஸ்சில்தான் வேலைக்கு சேர்ந்தேன். கடந்த 24 வருடங்களில் நான் ஒன்றும் கம்பெனி கம்பெனியாய் குதித்து வேலை மாறவில்லை என்றாலும், கம்பெனிகள் தங்களை மாற்றிக் கொண்டதில், இது வரை வேலையே மாறாமல் ஐந்து முறை விசிட்டிங் கார்ட் அடிக்க வேண்டி இருந்திருக்கிறது. இப்போது இன்டெல் கார்ப்பரேஷனில் குப்பை கொட்டிக்கொண்டிருந்தாலும், 2001 வருட பெல் லாப்ஸ் நினைவுகள் பல பசுமையாய் இன்றும் மனதில் ஓடுகின்றன.

    நான் சேருவதற்கு பல வருடங்கள் முன்பே ஹாமிங், ஷானன் எல்லாம் ஓய்வு பெற்று விட்டார்கள் என்றாலும், அந்த பெல் லாப்ஸ் கேம்பஸ்சில் அவர்களை போன்றவர்களை நினைவுறுத்த பல விஷயங்கள் இருந்தன. சக ஊழியர்கள் இந்தப் பாதையில்தான் ஷானன் ஒற்றை சக்கர சைக்கிளை ஒட்டிக் கொண்டே பந்துகளை juggling செய்வது வழக்கம் என்று சொல்லி இருக்கிறார்கள். வளாகத்துக்குள் இருந்த ஒரு ஆப்பிள் மரத்தின் அருகே இருந்த ஒரு பலகை, அந்த ஆப்பிள் மரம் ஐரோப்பாவில் நியூட்டன் தலைமீது சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு ஆப்பிளைப் போட்ட மரத்தின் வாரிசு என்று அறிவித்தது! பெல் லாப்ஸ் விஞ்ஞானிகள் அப்போது மொத்தம் ஆறு நோபல் பரிகளை வாங்கி இருந்தார்கள் என்று ஞாபகம். (இப்போது மொத்தம் 9). இப்படி பல குட்டி மகிழ்ச்சி தரும் வேடிக்கையான விஷயங்கள் அடிக்கடி தெரியவரும்போது, வேறு ஏதோ கிரகம் எல்லாம் இல்லை, இதே கட்டிடத்தில்தான் சில வருடங்கள் முன்பு வரை இந்த பிரம்மாக்கள் உலவிக் கொண்டிருந்தார்கள் என்று தோன்ற வைக்கும் அருகாமை என்னை வியக்க வைக்கும்!

    காலப்போக்கில் லூசெண்ட் காணாமல் போய், இப்போது பெல் லாப்ஸ், நோக்கியாவின் (Nokia) வசம் உள்ளது. இரண்டு வருடங்கள் முன்பு அந்தப் பக்கம் போனபோது, என் குழந்தைகள் இருவருக்கும் நான் எங்கே வேலை செய்து கொண்டிருந்தேன், அந்த இடத்தின் வரலாறு என்ன, என்று கூட்டிக் கொண்டுபோய் காட்டினேன். அப்போது நான் எடுத்த சில படங்களை நீங்கள் இந்த லிங்க்கில் பார்க்கலாம்.
    https://photos.app.goo.gl/9KTuTiAY9a6i9heN8
    வருபவர்கள் புரிந்துகொள்ள ஒரு அழகான மியூசியம் கட்டிடத்தின் முன் பகுதியில் அன்றும் இன்றும் இருந்து வருகிறது. நியூ ஜெர்ஸி போனீர்களானால் ஒரு நடை அங்கே போய் வாருங்கள். இந்த விவரங்களில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், Idea Factory – Bell Labs and the Great Age of American Innovation என்கிற Jon Gertner எழுதியிருக்கும் அருமையான புத்தகத்தை படிக்கலாம்.
    https://sundarvedantham.blogspot.com/2023/07/book-review-idea-factory-by-jon-gertner.html
    இல்லாமல் போய்விட்ட எங்கள் பழைய கம்பெனியின் மிகவும் சுவையான புராதன வரலாறு உங்களை பிரமிக்க வைக்கும்!
    -சுந்தர் வேதாந்தம்.

Leave a Reply to Sundar VedanthamCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.