வேர்முள்

அனுபமா காப்பியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்த போது மணி பதினொன்றை தாண்டி இருந்தது. செழியன் மதிய சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு கம்பெனிக்கு சென்று விடுவதால் எல்லா வேலையையும் பத்து மணிக்குள்ளாகவே முடித்து விடுவாள். கோவில்பட்டியில் இருந்தவரை கூட்டுக்குடும்பமாக வசித்து வந்ததால் பிள்ளைகளும் கணவனும் பள்ளிக்கும் கம்பெனிக்கும் சென்றுவிட்ட பிறகும் வீடு இத்தனை வெறுமையாக இருந்ததில்லை. ஏதாவது ஒரு வேலை ஒரு குடும்ப நிகழ்ச்சி என்று இருந்து கொண்டே இருக்கும்.

      செழியனின் வீடு மிகவும் வசதியான குடும்பம் தான் எங்கே அசந்தார்களோ தெரியவில்லை, விழித்துக் கொள்ளும் முன்னரே தொழிலில் பல கோடி கடன். வணிகத்தில் பல தலைமுறை சிறந்த விளங்கிய குடும்பம் என்பதால் ஏதோ ஓரளவாவது சுதாரித்து எழ முடிந்தது. ஆனால் மூன்று சகோதரர்களும் ஒரே வீட்டில் வாழ்ந்த அந்தக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதைக்கப்பட்டு விட்டது மூத்த மகன் இளங்கோ கோவில்பட்டியிலேயே இருந்து கம்பெனியை நிர்வகிக்கவும் செழியனை தூத்துக்குடிக்கும் அதியனை மதுரைக்குமாக கிளை நிறுவனங்களுக்கு அனுப்பிவிட்டார் அனுபமாவின் மாமனார்.

      தன் சொந்த ஊருக்கு வருவது என்பது அனுபமாவிற்கு முதலில் சந்தோஷம் என்றாலும் தான் தொழிலதிபர் மாணிக்கத்தின் மருமகளாக பெருமையாக வலம் வந்தது போல இனியும் வலம் வர முடியாது என அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது ஆனாலும் உறவுகள் நட்புகள் என்று அத்தனையையும் யோசித்து தூத்துக்குடிக்கு குடி வர சம்மதித்தாள். 

      இப்போதும் ஒன்றும் குறைவில்லை பெரிய வீட்டில் தான் வாடகைக்கு குடியிருக்கிறாள். இந்த சூழ்நிலையில் செழியனுக்கு சொந்த வீடு வாங்க யோசனை கூறவோ, வலியுறுத்தவோ அவளுக்கு விருப்பமில்லை. சாதாரணமாகவே மனம் விட்டு பேசமாட்டான். தொழிலில் சரிவு ஏற்பட்ட பிறகு அனுபமா மட்டுமல்லாமல் குழந்தைகளும் இரண்டாம் பட்சமாகவே போய் விட்டார்கள். ஏதேனும் கேட்டால் “எல்லாம் உங்களுக்காக தான் இப்படி உழைக்கிறேன்” என்று சிடுசிடுப்பான். சரி எப்படி ஆனாலும் வீடு என்று சொல்லிக்கொள்ள கோவில்பட்டியில் ஒரு வீடு உண்டு என்று தன்னைத்தானே தேற்றி கொள்வாள் அனுபமா.

       ‘தூத்துக்குடிக்கு குடி வருகிறேன்’ என்று அனுபமா சொன்னபோது அவளின் அம்மா கலையரசியிடம் இருந்து அத்தனை உற்சாகமான வார்த்தை வரவில்லை. ‘பிரயன்ட் நகரில் வீடு பார்த்து இருக்கிறோம்’ என்ற போது கலையரசி பேசியதை நினைத்து நினைத்து அனுபமா வேதனைப்பட்டிருக்கிறாள் .

     “உனக்கு நான் 100 பவுன் போட்டேன்  மாப்பிள்ளைக்கு 15 பவுன், ரேகாவுக்கு அஞ்சு பவுன் காப்புன்னு கிட்டத்தட்ட ஒரு கிலோ நகை போட்டு கட்டிக் கொடுத்தேன். அது நீ இந்த மாதிரி வாடகை வீட்டில குடியிருந்து என்னை அசிங்கப்படுத்துவதற்கு இல்ல” என்றாள்.           

     “அம்மா நாங்க ஒன்னும் வீடு இல்லாம இல்ல. தூத்துக்குடி பிரான்சில் கண்டிப்பாக ஒருத்தர் இருக்கனும்னு மாமா சொல்லிட்டதனால அங்க வர்றோம், இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை” என்றாள் அனுபமா. 

     “எனக்கு தெரியாது, உங்க வீட்டு மூவேந்தர்கள்ல மூன்றாவது வேந்தன் அதியனை தூத்துக்குடிக்கு வர சொல்லிட்டு நீ மதுரைக்கு போ” என்றாள் கலையரசி. அனுபமாவின் பிற சொந்த பந்தங்கள் கூட இந்த வகையில் யோசித்ததில்லை. அவளை இன்றளவும் மாணிக்கத்தின் மருமகளாகவே நடத்துகின்றனர்.

       வார்த்தைகளை விஷபாணமாக ஏவுவதற்கு கலையரசிக்கு நன்றாகவே தெரியும். எல்லா பொருட்களும் எல்லா உறவுகளும் கலையரசியின் விருப்பத்தின் பெயரிலேயே கணவருக்கும் பிள்ளைகளுக்கும் திணிக்கப்பட்டன. வேறு ஏதேனும் யாருக்காவது குறிப்பாக குமரேசனின் தாய்க்கோ, அக்கா தங்கைகளுக்கோ சார்பாக யாரேனும் பேசி விட்டால் வந்து விழும் வார்த்தை அமிலங்களை அனுபமாவால் தாங்கிக் கொள்ளவே முடியாது. பெற்ற பெண் என்று கூட பாராமல் வந்து விழும் வசவுகளை குமரேசன் சற்று தடுத்து பார்ப்பார் பின்பு அடங்கி போய்விடுவார்.

       கலையரசி சற்று கருப்பு .அதனாலேயே குமரேசனின் வீடு வசதி வாய்ப்பில்லாதிருந்தும் தபால் துறையில் அரசு வேலை என்பதனாலும் படிப்பு  நிறம் என்று இருப்பதாலுமே கலையரசியின் தந்தை பெருத்த நகை சொத்துக்களோடு தன் மகளை திருமணம் முடித்துக் கொடுத்தார்.  திருமணமான நாளில் புகுந்த வீடு வந்து தன் அறைக்குள் கலையரசி சென்றபோது அங்கே கீழே பாயில் கிடந்த நாத்தனார் சுகந்தியின் பட்டுப்புடவையை காலாலேயே நகட்டி அறைக்கு வெளியே தள்ளி விட்டது இன்றளவும் குடும்பத்தில் வெகு பிரபலமாக பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்று. இன்றைய தேதியில் கலையரசிக்கு சொந்தமாக மட்டும் பத்து வீடுகள் உண்டு. அண்மையில் முல்லை நகரில் வாங்கிய வீட்டிற்க்கு பால் காய்ப்பு வைபவம் அத்தனை ஆடம்பரமாக நடைபெற்றது. 

           வந்திருந்த சொந்தங்களிடம் இவள் காது படவே கலையரசி அனுபமா இருக்கும் வீட்டுக்கு ஏதோ செழியன் சொந்தமாக வாங்குவதற்கு ரொக்கம் கொடுத்து விட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். திருமணத்திற்கு முன்பே அனுபமாவுக்கு தன் தாயை தன் தாயின் குணத்தை நன்கு தெரியும். எந்த காரணத்தை முன்னிட்டும் தன் திருமணத்திற்கு பிறகு தன் பெற்றோரிடம் உதவி கேட்டு வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

    “கொஞ்சம் சிகப்பா இருக்க அந்த திமிர்ல ஓடி கீடி போயிடாத, அப்படியே போனாலும் காதுல, கழுத்துல கிடக்கிறத கழட்டி வச்சிட்டு ஓடு” என்று எத்தனையோ முறை சொல்லி இருப்பாள் கலையரசி. 

    இந்த வார்த்தைகளுக்கு பயந்தே அவளை மிகவும் நேசித்த சுந்தரை ஏறெடுத்தும் பார்த்ததில்லை அனுபமா. சுந்தரின் அப்பா ஒரு விவசாயி. கஷ்டப்பட்டு தன் பிள்ளைகள் மூவரையும் நன்கு படிக்க வைத்தார். அதிலும் மூன்று பிள்ளைகளும் நல்லொழுக்கத்திற்கும் பேர் போனவர்கள். கல்லூரி நாட்களில் எல்லோருக்கும் சுந்தரை அத்தனை பிடிக்கும். அழகன், திறமைசாலி மட்டுமல்ல கொஞ்சம் கர்வியும் கூட. 

      அனுபமாவின் தோழி பவித்ரா தான் எப்போதும் “அடியே அவன் உன்னை தாண்டி பார்க்கிறான். நீயும் அவனை பார்க்க மாட்டேன் என்கிறாய், அவனும் மத்தவங்கள பாக்க மாட்டேங்கிறான், என்னதான் நெனச்சிட்டு இருக்கீங்க இரண்டு பேரும் “என்பாள். அத்தனை சந்தோஷமாக இருக்கும்.சிலிர்த்து போய்விடுவாள். அத்தனை பிரியம் இருந்தாலும் ஒருபோதும் நேருக்கு நேர் பார்த்ததில்லை, ஒரு வார்த்தை பேசியதில்லை. “தூய்மையான ஒரு மலரை போல் இருக்கிறான், இவனை போய் வசவுகளுக்கு உள்ளாக்குவதா? மாட்டவே மாட்டேன். சுந்தர் நன்றாக இருக்கட்டும்” என்று மனப்பூர்வமாய் வேண்டிக் கொள்வாள் அனுபமா.

      கல்லூரி படிப்பு எல்லாம் முடிந்து அனுபமா MPhil படித்து கொண்டிருந்த பொழுது சுந்தரிடமிருந்து தொலைபேசி வந்தது. யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி எல்லாம் எழுதி இருக்கிறேன், எப்படியும் நல்ல போஸ்ட் கிடைக்கும். உங்க வீட்ல எனக்கு தருவாங்களா அனு” என்று பதற்றமில்லாமல் சுருக்கமாக கேட்டான்.

      “எனக்கு தெரியல சுந்தர், ஆனா எங்க அப்பா அம்மா கிட்ட இதைப்பத்தி பேசவே முடியாது”என்று அழுகையை அடக்கிக் கொண்டே சொன்னாள் அனுபமா.

      “நீ பேச வேண்டாம்மா,நான் வந்து பேசுறேன்” என்றான் அவன்.       

      “எனக்கு ரொம்ப பயமா இருக்கு சுந்தர், உன்னை ரொம்ப அசிங்கப்படுத்திடுவாங்களோனு ரொம்ப பயமா இருக்கு “என்று கேவிக் கொண்டே சொன்னாள் இவள். 

     ஒரு மாலை வேளையில் சுந்தர் வந்தான்,வந்து பேசினான் .அந்த நேரத்தில் தான் செழியனின் வரன் வந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரம். முடிவு ஏதும் ஆகி இருக்கவில்லை. ஆனாலும் கலையரசி “அச்சச்சோ இப்பதான் என் மகளுக்கு மாணிக்கராஜ் வீட்ல பேசி முடிச்சோம், நீ அப்பவே வந்திருக்கக் கூடாதா” என்று ஏதோ சோப்பு விற்க வந்தவனிடம் பேசி அனுப்புவது போல் பேசினாள். அந்த வரன் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததால் ஏதும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அனுபமா உள்ளே அழுது கொண்டிருந்தாள் எதுவுமே நடக்காதது போல் அந்த நேரத்தில் நடந்திருந்த ரெட்டை கோபுர தாக்குதலை பற்றி பேச தொடங்கினாள் கலையரசி.  

      அதற்குப் பிறகு சுந்தரை அனுபமா பார்த்தது கடந்த வருடத்தில் தான். இப்போது அவன் வரி துறையில் அதிகாரி.  டேக்ஸ் சம்பந்தமாக செழியனுக்கு பெரிதும் உதவியாக இருந்தான்

..       ஒரு நாள் ஒரு கட்டு ரசீதை கொண்டு வந்தவன் வாசலோடு நின்று விட்டான். “உள்ள வா சுந்தர், கொஞ்சம் மோராவது குடிச்சிட்டு போ” என்றாள் அனுபமா. “இப்போ இல்ல அனு சொந்த வீடு கட்டி பால் காய்ப்பு வைக்கும் போது தான் ஃபுல் சாப்பாடு சாப்பிடுவேன். அனு சீக்கிரம் பால் காய்ப்பு வைக்கணும்” என்று சிரித்தவாறு சொல்லி சென்றான்.  ஹாலில் அமர்ந்து. இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவள் இன்று தனக்கும் தன் தாய்க்குமான உரையாடலைப் நினைக்கையில் ஏதோ ஒரு உறவு அறிந்தது போல் இருந்தது. 

      இன்று காலை கலையரசி தொலைபேசியில் “அனு உன் நாத்தனா ரேகாவுடைய வீடு சும்மா தானே கிடக்கு திருநெல்வேலில, அவ மாமியார் கீழே ஒரு ரூம்ல கிடக்குது. ரேகா இருக்கிறது பெங்களூர்ல, நீ அங்க இருந்தா வீட்டுக்கும் காவலா இருக்குமேன்னு இன்னைக்கு காலைல யோசிச்சிட்டு இருந்தேன்,இந்த பிள்ள கொஞ்சமாவது யோசிக்குதா பாரு ” என்று ஆரம்பித்தவள் முடிக்கும் முன்பாக அனுபமா குறிக்கிட்டு ‘என்னம்மா பேசுறீங்க, வீட்டில் இருந்துக்கோ அண்ணான்னு ரேகா சொன்னாலும் எங்க வீட்ல  ஒத்துப்பாங்களா. இவர் நீங்க இப்படி சொன்னதை கேட்டாலே தாங்க மாட்டார்” என்றாள்.

     “ஒரு ஆத்திர அவசரத்துக்கு கஷ்டப்படுற நேரத்துல தங்கச்சி வீட்டில் தங்குவதில் என்னம்மா தப்பு இருக்கு’என்ற கலையரசியிடம்     

     “இங்கே யாரும் கஷ்டப்படல ,யாரோட வீட்லயும் போய் நிக்கணும் என்கிற அவசியமும் வரல, வரும்போது நாங்க பார்த்துக்கிறோம். உனக்கும் தான் பத்து வீடு இருக்கு, அதுல ஒரு வீட்ல வந்து இருண்ணு சொல்லலாம்ல, வேற யாரையோ பத்தி பேசுற, என்ன யாரும் உன்கிட்ட கேட்டாங்களா” என்றாள் அனுபமா. 

      “உனக்கு வாடகை மிச்சமாகும் என்று நல்ல வார்த்தை சொன்னா நீ என் மடியிலேயே கை வைக்கிற, கோவில்பட்டி வீட்டை உன் மாமனார் இளங்கோக்கு தான் எழுதி வைக்கப் போறாரு, அதான் உங்களை இங்கே துரத்தி இருக்கிறார். இதுல நான் உன்னை என் வீட்டில் கூட்டி குடி வெச்சா நாளைக்கு என் வீட்டை கேக்குறதுக்குகா? இந்த நினைப்பபெல்லாம் வச்சுக்காதீங்க, சொல்லி வச்சுரு உன் மாமனார் மாமியார் கிட்ட” என பெருங்குரலெடுத்தாள் கலையரசி

        “யாரும் உன் வீட்டுக்கு வந்து நிக்கல, நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுததாம்” என்றவாறு தொலைபேசியை ஓங்கி அறைந்து வைத்து விட்டாள்.                            

     அனுபமாவிற்க்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தான் ஏன் அழுகிறோம் எதை தொலைத்தோம் என்று எத்தனையோ முறை யோசித்து இருக்கிறாள். இன்று தான் புரிந்தது தான் அழுவதெல்லாம் தன் இயலாமையை நினைத்து தன் வாழ்க்கையை குறித்த முடிவை தான் எடுக்க முடியாத கோழைத்தனத்தை குறித்து என்று.காபியோடு சேர்ந்து கண்ணீரையும் விழுங்கி கொண்டாள் அனுபமா. அனுபாமாவின் கைகள் வெகுநேரத்திற்க்கு நடுங்கி கொண்டிருந்தன. உதட்டை கடித்து அடக்கினாலும் விழிகளை தாண்டி கண்ணீர் வழிந்தது. இவர்களுக்காகவா என் வெறுப்பு வெறுப்புகளை தியாகம் செய்தேன் என்று யோசித்துக் கொண்டிருந்தவள் மனதில் சட்டென்று மின்னல் போல ஒரு எண்ணம் வெட்டியது. ஆம் சுந்தரை நினைக்கும் போது கூட ஒழுக்கம் மறந்ததில்லை அனுபமா. எந்த சலனமும் இல்லாமல் ஓடுவது தான் தன் இயல்பு. அதினின்று மாறாக தன் வாழ்க்கை தன் விருப்பத்தை மறைத்து மறந்து வழ்வதென்று. நினைக்கும் போது தான் வீண் பச்சோதாபம் தன் மீது வருகிறது.  ஒரு முடிவை எந்த உறவாலும் தடுக்க முடியாது. பெண்ணுக்கு மாத்திரம் அல்ல ஆணுக்கும் அதுவே… நூற்றில் தொண்ணூறு மனிதர்கள் மனதின் அலைகளை மௌனமாகவே கடந்து செல்கின்றார்கள்.. காலம் அவ்வப்போது சில நினைவுகளை பரிசாக வீசிச் செல்கிறது.அதை பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்காமர் வருடிச் செல்வது சாலச்சிறந்தது என புரிந்தது.  

    அனுபமாவிற்க்கு ஏனோ இனம் தெரியாத சந்தோசம் வந்தது. வழி விலகாது விட்டு வந்த சுவடுகள் தான் எத்துணை ஆசுவாசம் அளிப்பவை. தெருவில் “.மீன்” என்று சத்தம் கேட்டது.செழியனுக்கு மிகவும் பிடித்த நெத்திலி மீன் வாங்கி கூட ஒரு குழம்பு வைக்க வேண்டும் என எண்ணியவாறு வாசலை நோக்கி நடந்தாள் அனுபமா

3 Replies to “வேர்முள்”

  1. “ஒரு முடிவை எந்த உறவாலும் தடுக்க முடியாது. பெண்ணுக்கு மாத்திரம் அல்ல ஆணுக்கும் அதுவே… நூற்றில் தொண்ணூறு மனிதர்கள் மனதின் அலைகளை மௌனமாகவே கடந்து செல்கின்றார்கள்.. காலம் அவ்வப்போது சில நினைவுகளை பரிசாக வீசிச் செல்கிறது.அதை பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்காமர் வருடிச் செல்வது சாலச்சிறந்தது என புரிந்தது”

    அரீமையான வரிகள். எழுத்தாளருக்கு‌நன்றிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.