இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்

This entry is part 5 of 9 in the series பயணங்கள்- லண்டன்

ஒவ்வொரு நாட்டின் தனித்துவமே பயணிகளை அதன் பால் ஈர்க்கிறது. இந்தியாவிற்கு விரும்பி வரும் வெளிநாட்டினர் பலரும், பல்வேறு கலாச்சார பின்னணி கொண்ட மக்கள் வாழும் நாட்டில் அவர்களின் விருந்தோம்பல், கோவில்கள், திருவிழாக்கள், சுற்றுலாத்தலங்கள், வாழ்வியல் முறை, உணவுகளை விரும்புவதாகக் கூறுகின்றனர். அந்த ஈர்ப்பில் மயங்கியவர்கள் மீண்டும் மீண்டும் வந்து செல்கின்றனர். என்னதான் குப்பையும் இரைச்சலும் ஏமாற்றுக்காரர்கள் சிலர் இருந்தாலும் மேற்கூறிய சில முக்கிய அம்சங்களால் கவரப்படுவதை வெளிநாட்டுநண்பர்களும் கூறகேட்டிருக்கிறேன்.

ஸ்காட்லாண்டிற்கு வருகை தரும் மக்களின் அனுபவமும் அவ்வாறே இருக்கிறது. இயற்கை வளம் , வரலாறு, மனிதர்கள், மொழி, இசை, கலாச்சாரம் என்று ஸ்காட்லாண்டில் ஒவ்வொன்றும் பார்வையாளர்களைக் கவர தவறவில்லை. அந்த நாட்டிற்குச் செல்லும் அனைவரும் அதன் பரந்த நிலப்பரப்பு, ஆறுகள், ஏரிகள், வளைந்து செல்லும் சாலைகள், இயற்கைக் காட்சிகள், அழகான கோட்டைகளில் மனம் மயங்குவது உறுதி.

பார்க்கும் இடங்கள் அனைத்துமே அழகான புகைப்படக்காட்சிகளாகக் கண்களை நிறைக்கிறது. அங்குச் சந்தித்த வெளிநாட்டுப் பிரயாணிகளிடம் பேசிய பொழுது கண்கள் விரிய இதனை ஆமோதித்தார்கள்.

‘செயின்ட் ஆண்ட்ரூஸ் – இன்வெர்னஸ்’ செல்லும் சாலையைப் பயணம் முழுவதும் இயற்கைக் காட்சிகளுடன் உலா வருகிறது. வழியெங்கும் மூடு பனி மேகங்கள் மலைகளின் பைன் மரங்களைத் தழுவியபடி காட்சிதர, சுகமானபயணம். அவ்வப்பொழுது மழைத்தூறல்.

நாங்கள் சென்ற வழித்தடத்தில் பல அழகிய இடங்கள் இருக்கிறது என்பதை முன்பே அறிந்து வைத்திருந்தோம். ஆவலுடன் முதலில் நாங்கள் சென்ற இடம் ‘Queen’s View’. நெடுஞ்சாலையிலிருந்து உள்ளே செல்லும் வழியெங்கும் வரிசையாக ஓங்கி உயர்ந்து அணிவகுத்து நின்றிருந்த மரங்களின் காட்சியே அத்தனை அழகாக இருந்தது. கலிஃபோர்னியாவில் மவுண்ட்சாஸ்தாவிற்குச் செல்லும் வழியைநினைவூட்டியது. ‘குயின்ஸ்வியூ’ இடத்தைப் பற்றின அறிமுகம் இல்லையென்பதால் எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே சென்றது. ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயர்மலைகளில்அமைந்துள்ள ‘குயின்ஸ்வியூ’, வருகை தரும் அனைவரின் இதயத்தையும் கவரும் ஒரு பொக்கிஷம் என்றே கூறலாம்.

ஸ்காட்லாந்தின் நிலப்பரப்புகளை ‘பானோராமிக்’ காட்சியாக, விவரிக்க இயலாத அழகுடன் அனைவரின் மனங்களையும் கவரும் இந்த இடத்தைப் பயணிகள் தவறவிடக்கூடாது.

‘Loch Tummel’ என்னும் நன்னீர் ஏரி , சுற்றியுள்ள மலைகள் என்று கண்கொள்ளாக் காட்சியாகப் பிரமிப்பை ஏற்படுத்தும் இயற்கை அழகு அங்கு குடிகொண்டிருக்கிறது. அங்கு வருபவர்கள் இயற்கைக் காட்சிகள் தந்த பிரமிப்புடன் அங்கிருந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்களும் சிறிது நேரம் அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தோம். மாலைச் சூரியன் கருமேகங்களின் பிடியிலிருந்து வெளியே வர எத்தனித்துக் கொண்டிருந்தான். Loch Tummelன் மின்னும் நீர் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும். வானத்தைப் பிரதிபலிக்க, பசுமையும் அமைதியும் எழிலும் சூழ்ந்த அந்த இடத்திலேயே தங்கிவிட வேண்டும் போல் இருந்தது.

ஸ்காட்லாந்து அரசி அங்கு வந்து அற்புதக் காட்சியை ரசித்துவிட்டுச் சென்றதால் “குயின்ஸ்வியூ” என்று பெயர் பெற்றிருக்கிறது. பெயர்க்காரணத்திற்கு வேறு பல கதைகளும் இருக்கிறது😃.

பல நூற்றாண்டுகளாக அரசகுடும்பத்தாரையும் சாமானியர்களையும் கவர்ந்த இடம். சிறிது நேரத்தில் அங்கே சிறு குழந்தைகளுடன் இரு குடும்பங்கள் சேர்ந்துகொண்டது. சரியான ‘ரெட்டை வால் ரெங்குடுகள்’. பாறையில் சறுக்கி விளையாடுவதும் கீழே விழுந்து புரள்வதும் என்று கலகலப்பாகஇருந்த குழந்தைகள் கொள்ளைஅழகு💖பெற்றோர்கள் கட்டியணைத்தபடி கைப்பேசியில் புகைப்படங்களை எடுப்பதில் மூழ்கியிருந்தார்கள். அந்தக் குழந்தைகளோ பாறைகளில் தாவுவதும் ஓடுவதுமாய் எனக்குத்தான் பயமாக இருந்தது. “இளங்கன்றுபயமறியாது” என்பதை அவர்களிடத்தில் கண்டேன்.

மிடுக்கான பாரம்பரிய உடையில் வனக் காவலர் ஒருவருடன் இரு பயணியர்வர, பேச்சு களைகட்டியது. மலைகளில் மரங்களை வளர்த்து வெட்டி இங்கிலாந்திற்கு அனுப்புவதால் நல்ல வருமானம் கிடைக்கிறது என்று கூறினார். அங்கிருந்து தெரியும் தீவுகளைப் பற்றியும் விரிவாகப் பேசினார். நிறைய தகவல்கள். வனக்காவலருக்கு நன்றி கூறி விட்டு மீண்டும் தொடர்ந்தது எங்கள் பயணம்.

“மலைகளில் எங்கு சென்றாலும், நாம் தேடுவதை விட நமக்கு அதிகமாகவே கிடைக்கும்.” இயற்கை ஆர்வலர் ஜான் முய்ர்-ன் கூற்று. மெய்ப்பித்துக் கொண்டே இருந்தது ஸ்காட்லாந்து.

தொடர்ந்த பயணத்தில் இப்பொழுது இருபுறமும் பரந்து விரிந்தமலைகள். நடுவே நீண்டசாலை. கலிஃபோர்னியாவின் ‘Death Valley National Park’ ஐ நினைத்துக் கொண்டோம். நிலப்பரப்பு மாறிக்கொண்டே வர, “Welcome to the Highlands” பலகை வரவேற்க, மூடுபனி தழுவிச் செல்லும் மலைமுகடுகள், மழையில் நனைந்த சாலைகள், மலையடிவாரத்தில் சீறிச் செல்லும் ரயில் என்று அழகுக்காட்சிகளுக்குக் குறைவில்லை.

ஸ்காட்லாந்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹைலேண்ட்ஸ்ன் கரடுமுரடான அழகு, காலத்தால் அழியாத வசீகரம். பரந்து விரிந்த நிலப்பரப்பில் விரவியிருந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்க, ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தும் வசதிகள் வழியெங்கும் இருக்கிறது. கோடைக்காலத்தில்அழகு மேலும் மெருகேறியிருக்கலாம். நாங்கள் சென்ற மழைக்காலத்தில் அப்பொழுதுதான் மரங்கள் துளிர் விட ஆரம்பித்திருந்தது. இங்கிலாந்து அரச குடும்பம் விடுமுறையில் வேட்டையாட, இயற்கையை ரசிக்க வந்து செல்லுமிடம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தொடர்ந்த அழகுப் பயணத்தில் வண்டியைப் பல இடங்களில் நிறுத்தி இயற்கையை, மலைகளை ரசித்துப் படமெடுத்துக் கொண்டோம்.

இயற்கையுடனே பயணிப்பதாலோ என்னவோ களைப்பே ஏற்படுவதில்லை. கூட்டம், போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணம். இருட்டுவதற்குள் ஊருக்குச் சென்று விட வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஒருவழியாக ‘இன்வெர்னஸ்’ நகரை வந்தடையும் பொழுது மணிஏழரை ஆகிவிட்டிருந்தது. நல்லவேளை இன்னும் இருட்டவில்லை.

நாங்கள் முன்பதிவு செய்திருந்த விடுதியில் சிறிது நேரம் ஓய்வுஎடுத்துக் கொண்டோம். நல்ல பெரிய விடுதி. அழகான ஆங்கிலத்தில் மிகவும் பணிவாக வரவேற்ற அலுவலர்கள் இனிமையாகப் பேசினார்கள். அங்கிருந்த வரவேற்பாளரிடம் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றித் தெரிந்துகொண்டோம். அரைமணி நேர தூரத்தில் உணவு விடுதிகளும் நகரின் மையப்பகுதியில் அழகான ஆறும் பழமையான கட்டடங்களும் இருப்பதைக் காண வாடகை வண்டியில் சென்றோம். ஈஷ்வருக்கும் கொஞ்சம் ஓய்வு வேண்டுமே. அதுவுமில்லாமல் அவர் மட்டுமேவண்டியை ஓட்டுவதால்
‘ஸ்காட்டிஷ் விஸ்கி’யைச் சுவைத்துக் கூட பார்க்கமுடியவில்லை என்று வருத்தம்.

வாடகை வண்டியை ஓட்டி வந்தவர் ஒரு பஞ்சாபி. அட! இங்குமா? பதிமூன்றரை வருடங்களாக இங்கிலாந்திலும் கடந்த மூன்று வருடங்களாக ஸ்காட்லாந்தின் இயற்கையும் அமைதியும் தன்மையான மனிதர்களும் பிடித்துப்போய் ஸ்காட்லாந்தில் தங்கிவிட்டதாகக் கூறினார். அந்தப் பகுதியில் இருக்கும் சில இந்திய உணவகங்களையும் பரிந்துரைத்தார். தேவை என்றால் மறுநாளும் வருவதாகக் கூறி விடைபெற்றார்.

எங்கள் பயணத் திட்டத்தில் ‘இன்வெர்னஸ்’ என்ற இந்த ஊருக்கு முதலில் வருவதாக இல்லை. வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று கூகிள் செய்து பார்த்தால் பழமையும்,புதுமையும் கலந்த இயற்கை எழில் சூழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் என்றுஅறிந்துகொண்டோம். அப்புறம் எப்படி விடமுடியும்? எங்கள் பாதையிலிருந்து சற்று விலகி வடக்கே கொஞ்சம் பயணிக்க வேண்டியிருந்தாலும் பார்த்து விடுவது என்று முடிவெடுத்துதான்அங்குச் சென்றோம். எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை😇

ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸின் மையத்தில் அமைந்திருக்கும் இன்வெர்னஸ், செழுமையான வரலாறு, பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் மற்றும் துடிப்பான கலாச்சாரத்தைக் கொண்ட ஒருஅழகிய நகரமாக இருக்கிறது. “ஹைலேண்ட்ஸின் தலைநகரம்” என்று அழைக்கப்படும் இன்வெர்னஸ், ஹைலேண்ட் கவுன்சிலின் நிர்வாக மையமாகவும் சுற்றியுள்ள கிராமப்புறங்களின் அழகுக்கான நுழைவாயிலாகவும் செயல்படுகிறது.

ஸ்காட்லாந்தின் வடகிழக்கு கடற்கரையில் இயற்கைக் காட்சிகளால் சூழப்பட்டுள்ள இந்நகரத்தின் பெயர் கேலிக்மொழியில் “இன்பீர்நிஸ்”(அதாவது, ‘நெஸ் நதி’யின் முகத்துவாரம்) என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது. நெஸ் மற்றும் மோரேஃபிர்த் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் வர்த்தகம் மற்றும் பாதுகாப்புக்கான மையமாகவும் விளங்கி வருகிறது. அயர்லாந்தைப் போலவே ஸ்காட்லாந்திலும் இங்கிலாந்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடும் போர்களும் எழுச்சியும் நிகழ்ந்துள்ளன. ஜாகோபைட் எழுச்சிகளின் போர்கள் முதல் சுதந்திரப் போர்கள் வரை பல்வேறு வரலாற்று நிகழ்வுகளில் இன்வெர்னஸ் முக்கிய பங்குவகித்துள்ளது.

இன்வெர்னெஸ்ஸில் உள்ள மிகவும் பிரபலமான வரலாற்றுத் தளங்களில் ஒன்று ‘இன்வெர்னஸ் கோட்டை’ ஆகும். ‘நெஸ்’ நதியை நோக்கி அமைந்துள்ள இந்தக் கோட்டை 19ஆம் நூற்றாண்டின் கட்டுமானமாக இருந்தாலும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இன்று, ‘இன்வெர்னஸ் ஷெரிஃப் நீதிமன்றமாக’ செயல்பட்டு வருகிறது. இந்தக் கோட்டையில் ‘மேக்பெத்’  கதாபாத்திரம் அரசரைக்  கொல்வதாக ஷேக்ஸ்பியர் தன்னுடைய நாடகத்தில் இன்வெர்னெஸ்ஸைக் குறிப்பிட்டுள்ளார். 

நகரின் மையப் பகுதியில் ‘நெஸ்’ நதி செல்கிறது. கரையின் இருபுறமும் அழகான வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்கள் ,பார்வையாளர்களை ஈர்க்கும் விக்டோரியன் கட்டிடக் கலை, சிறு மலையின்மீது ‘இன்வெர்னஸ் கோட்டை’ என கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒன்றாக இணைத்து பார்வையாளர்களின் இதயங்களைக் கவரும் எழில் மிகு நகரம். ஆற்றங்கரைகளில் அழகான கடைகள், கஃபேக்கள் மற்றும் பப்கள். நாங்கள் சென்ற வேளை மாலை நேரம் என்பதால் கற்கள் பதித்த தெருக்கள் அமைதியாக இருக்க, உணவு விடுதிகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் இசையை ரசித்துக் கொண்டே மதுபானங்களை அருந்தியபடி அமர்ந்திருந்த கூட்டத்தைக் கண்டதும் நாங்களும் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தோம்.

துள்ளலான இசையை தன்னுடைய வயலினில் அசாத்தியமாக இசைத்துக் கொண்டிருந்த கலைஞன் அங்கிருந்த ஆண்களையும் தன்னுடைய இசையால் வசீகரித்துக் கொண்டிருந்தார்😍.பாரம்பரிய உடையில் இருந்தவரின் வயலின் இசையுடன் கிட்டாரும் சேர்ந்து கொள்ள, கொண்டாட்டமாக இருந்தது. ரசனையுடன் இருக்கிறார்கள் மனிதர்கள்! ஐரிஷ் இசையைப் போலவே துள்ளலான இசை. கேட்பதற்கு இனிமை. 

ஆசை யாரை விட்டது? ஈஷ்வருக்கும் ஸ்காட்டிஷ் விஸ்கியை சுவைக்கும் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. விடுவாரா மனிதர்? இரவு உணவை முடித்து விட்டு அங்கிருந்த கடையில் சில பழங்களை வாங்கிக்கொண்டு விடுதிக்குத் திரும்ப வாடகை வண்டிக்காகக் காத்திருந்தோம்.

அந்தக் கடை வாசலில் போதைக்கு அடிமையான பெண்ணை வயதான இன்னொரு போதை ஆசாமி ஆசை வார்த்தைகள் கூறி அழைக்க, அந்தப் பெண்ணும் அவருடன் சேர்ந்து செல்ல கிளம்புகையில் அவளுடைய நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ வேகமாக வந்து அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். போதை மருந்து ஸ்காட்லாந்தையும் விட்டு வைக்கவில்லை! அந்தப் பெண்ணை நினைத்து வருந்தியபடி விடுதி வந்து சேர்ந்தோம்.

விடுதியில் சந்தித்த நபர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் மேலும் சில விஷயங்களை அறிந்து கொண்டோம். உள்ளூர் நிகழ்வுகள் அனைத்தும் ஹைலேண்ட் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ‘கேலிக்’ மரபுகளை கொண்டாடுகின்றன. நட்புக்குப் பெயர் பெற்ற இன்வெர்னெஸ் மக்கள், பார்வையாளர்களை இருகரங்களுடன் வரவேற்கிறார்கள். மெல்லிசையும், இயற்கை அழகும், நெஸ்நதியும், பொலிவுடன் நிமிர்ந்து நிற்கும் கட்டடங்களும் மனதை நிறைக்க, நகரின் பெயரைப் போலவே அன்றைய அனுபவமும் புதுமையாகஇருந்தது.

நகரின் தெற்கே இருக்கும் ‘Loch Ness’ நதியில் ‘மான்ஸ்டர்’ ஒன்று மறைந்துள்ளதாக மர்மகதை ஒன்று அங்கே நிலவுகிறது. சரியான ‘புரூடா பார்ட்டிகள்’ போலிருக்கே என்று நினைத்துக் கொண்டேன். படங்களில் குட்டி டைனோசர் போன்ற உருவத்தை வரைந்திருக்கிறார்கள். செல்லமாக ‘நெஸ்ஸி’ என்றும் அழைப்பார்களாம். என்னவோ போடா மாதவா😐இந்தக் கதை உனக்குத் தெரியாதா? ஸ்காட்டிஷ் மக்கள் அப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று இவர் வேறு கூற, காலையில் எழுந்தவுடன் முதலில் அங்குதான் செல்கிறோம். நெஸ்ஸியைப் பார்க்கிறோம் என்று அடுத்த நாள் பயணத்திற்கான திட்டத்தைக் குறித்துக் கொண்டோம்.

மேற்கிலும் ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’ தொடரும் என்று அப்பொழுது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

Series Navigation<< எடின்புரஃஹ் – செயின்ட் ஆண்ட்ரூஸ் பயணக்குறிப்புகள்ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள் >>

2 Replies to “இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்”

  1. அருமை லதா!
    என்னவோ போடா மாதவா😊!
    தமிழ்வாணன் மற்றும் லேனா தமிழ்வாணனின் பயணக்கட்டுரைகளை விடிய விடிய படித்த பள்ளிப் பருவ நாட்களையும், ஆங்கிலப் பாடத்தில் படித்த மேக்பெத்தையும் நினைவூட்ட, அருமையான இலவச Scotland பயணம், எனக்கு!👌👌😊😊

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.