மலையோதிகள் 

ஈன்ஜிபுராவிலிருந்து, சிவன்கோவிலை தாண்டி நடந்து வந்தால், நிறைய மொசைக்கடைகள் இருக்கும். ஒவ்வொரு மொசைக் கடைகளிலும், என்னைப்பாருங்கள், என் அழகைப்பாருங்கள் என்பதைப்போல ஒவ்வொரு கலரிலும், ஒரு மொசைக் சிலேப்பை நடைபாதையில் வைத்திருந்தார்கள். அதன் வழியாக இடது புறம் நடந்து வந்தால், டெய்ரி சர்க்கிள்.  பெரிய மேம்பாலம். 

தமிழ்நாடு பஸ்கள் மெஜெஸ்டிக்கிலிருந்து, இதன் வழியாகத்தான் தமிழ்நாடு செல்ல வேண்டும். அதையும் தாண்டி,  பன்னேர்க்கட்டா ரோட்டில்,  நடந்தால், அக்சென்சர் என்ற போர்டு போட்ட கம்பெனிக்கு இடப்பக்கத்தில்,  அவன் கம்பெனி. டேட்டா அனலிஸ்ட் வேலை. 

ப்ளக்ஸி டைமிங்ஸ். வேலையை முடித்தால், கிளம்பி விடலாம். இன்றைய டார்கெட் இன்னும் சற்று நேரத்தில் முடிந்துவிடும். அவன் அலைபேசி அலறியது. மதியம் 12.30 மணி.

“என்னங், சோறு உண்டிங்களா?” லட்சுமியின் தெய்வீகக்குரல். 

“உம்”. 

“அவிடத்தால ஆராவது இருக்காங்களா? ஒன்னு சொல்லனுங்.. அப்பா ரெண்டுநாளா சாப்பிட கஸ்டப்படறாரு”. குரலில் ஒரு  கவலையன்பு தெரிந்தது. 

“போடி. அய்ஸ் தண்ணில ஒரு குவாட்டர் போட்டு  குடிச்சுருப்பாரு. 

தொண்டை, கிண்டை கட்டியிருக்கும். வேறு எப்படி தொண்டை கட்டும்? 

டாக்டருகிட்டே கூட்டிட்டுப்போடி. 

சும்மா. ஆபிஸ் நேரத்தில கூப்டாதேன்னு எத்தனை முறை சொல்றது? 

லூஸு. வைடி போனை”. 

“சரிங் சாமியோவ்” – சிரித்துக்கொண்டு அலைபேசியை அணைத்தாள்.  

அலைபேசி துண்டிக்கப்பட்டதும், 

பக்கத்திலிருந்தவன், “டேய்.  மெல்ல பேசுடா, இங்க எல்லாருக்கும் தமிழ் தெரியும்டா” 

சாப்டலாமா? கைவிரல்களால், “டீ” என்று  சைகை காட்டினான். வெளியே நடந்தார்கள்.  மனம் பரபரவென்றது.

சிக்கனுடன் ஜொன்னரொட்டியை சாப்பிட்டார்கள். 

“ஊருக்கு போய்டு வாடா”. என்றான்.

“இல்லடா. என் டார்கெட்டு முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கு. முடிச்சுட்டன்னா, அடுத்த மாடூயுள் வர்ற வரைக்கும், நான் ப்ரீ தானே. அப்ப போயிக்கறேன்”. 

மீண்டும் மனம் ஏதோ ஒன்றுக்கு ஏங்கியது. சுற்றும் முற்றும் பார்த்தான. இடம் சரியில்லை. ரூமுக்கு போய் பார்த்துக்கொள்ளலாம். அதை பாக்கெட்டுக்குள் வைத்துவிட்டான்.

“உம்.. அதுவும் சரி”

ஒரு வாரத்திற்குள், லட்சுமியின் போனும், இவன் பேசும் சத்தமும் ஆபிஸில் சத்தமாகக் கேட்டன. எல்லோருக்கும் அவன் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்பது  தெரிந்து விட்டது.

எல்லோரின் பார்வைக்கும் பயந்து, வெள்ளிக்கிழமை மெஜெஸ்டிக்கிலிருந்து கோபி  வந்து,  சத்தி வழியாக பெத்திக்குட்டைக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். 

அட. நம்ம ஓதிமலை. பவானிசாகர் வந்துட்டுமா? மனதிற்குள் நினைத்தான். பெரியகள்ளிப்பட்டி, சின்னக்கள்ளிப்பட்டியையும் கடந்து, மேலே, ஓதிமலை, என்னை தொடுங்கடா என்பதைப்போல ஓங்கி நிமிர்ந்து நின்றது. காட்சியளித்தது. அதில்,  தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் பலனும் பச்சை பசலென்று தெரிந்தது. 

இயற்கை செதுக்கிய ஓதிமலை.  மனிதர்கள் இது வரைக்கும் தன்னை எதுவும் செய்யாமல் விட்டதற்கு நன்றி – என்பதைபோல – இளவெயிலில்  மின்னியது. அந்த மினுப்பில் “எத்தனை முறை நான் பகைகளைப் பார்த்தவன்”  “நான் கடவுள்- கடவுள் மோதலைப் பார்த்தவன் மட்டுமல்ல, கடவுள்-அசுரன் பகை மோதலையும் பார்த்தவன்” என்கின்ற நயதொனியில்,

“கடவுள் கடவுள் வேதத்தை ஓதியதைப் பார்த்தவன். கடவுள் சாத்தனின் வேதத்தை ஓதியதையும் பார்த்தவன். சாத்தான் கடவுள் வேதத்தை ஓதியதையும் பார்த்தவன் மட்டுமல்ல, சாத்தான் வேதத்தை சாத்தான் ஓதுவதையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று சிலிர்த்து சொல்லியபடி, நின்றது. 

அவன் நினைத்தபடி, தஞ்சைகோபுரம் வெறும் மனிதர்கள் செஞ்சது. ஊர்ப்பெருமையும், ஊரும் வந்தது. 

தெற்கே இரும்பறை ரோடும், கிழக்கே சத்தி ரோடும், மேற்கே சிறுமுகை ரோடும் சந்திக்கின்ற ஒரு முச்சந்தியில் உள்ள வெறும் காலி ரோடு தான் பெத்திக்குட்டை பஸ்டேண்டு. 

“நகர வளர்ச்சியே வளர்ச்சி” – அரசின்  வளர்ச்சித்தத்துவத்தால், சிறுமுகை ரோட்டில் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக வீடுகள் தனித்தீவுகளைப் போல வளர்கின்றன. இருக்கின்றன. 

இவைகள் அனைத்தும் அரசுப்பள்ளியை சுற்றியுள்ளன. இன்னுமும் இருபது வருடத்தில், சிறுமுகையும் பெத்திக்குட்டையும், நறுமுகையும், குறுஞ்சிரிப்பும் போல கலந்திருக்கும். அதற்கும், நியாயம் கட்டுவார்கள் ஆட்சியாளர்கள். 

  வடக்கே பார்த்தபடி இரு கடைகள். கிழக்கே பார்த்தபடி, டெய்லர் நடராஜர். தெற்கே பார்த்தபடி, ஏழு கடைகள். அதில் ஒரு கடைதான், சுப்பைய்யா டீக்கடை. காற்றும் அவரும் டீயை ஆற்றுவார்கள். போர்டு இல்லாத டீக்கடை என்றாலும், கயிறும், மாட்டுத்தீவனங்களும் விற்பார். 

இவருடைய ஜாதிக்கார பெண்ணைத்தான் அவனின் அப்பா, பெரியார் தலைமையில் 1958-இல் சென்னையில் வைத்து ரகசியமாக -எல்லோர் முன்னிலையிலும் – திருமணம் செய்து கொண்டார் .  

அப்போதிருந்து, இன்று வரை “ஓடிப்போனவர்கள் ஓடிப்போனவர்கள்”, “துக்கமில்லை, தொயரமுமில்லை”, “வெட்டு வெட்டுதான்பா”, “சான்ஸேயில்லை, வாய்ப்பேயில்லை ராஜா” போல,  நிஜக்கண்ணால் அவனையும், கணபதியையும் வறுப்பார். பக்கத்தில் கூட நிற்கமாட்டார். டீயும் தரமாட்டார் – கணபதி கேட்டாலும் – “ஒரு டீக்கு ஆயிரம் தர்ரே” – ன்னு சொன்னாலும்.

கணபதி இரும்பறை ரோட்டிலும், சுப்பையா சக்தி ரோட்டிலும் தனிதனியாக வாழத் தொடங்கி, பாலுவின் தற்போதைய வயது வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.   

இந்த அனாதையான ஆளில்லாத, காலி ரோட்டில் தான், பஸ்ஸிருந்து கீழே  அவன் இறங்கினான். சிறுமுகை வழியாக, மேட்டுப்பாளையத்திற்கு போக, 5-ஆம் நெம்பர் பஸ்ஸுக்காக அம்மா வழி உறவினர்கள் காத்திருந்தனர். இவனைப்பார்த்ததும், 

“என்ன சாமி நல்லாயிருக்கியா?  இன்னும் ஒரு சிலர்,  “எப்ப வந்தே” வேலையெல்லாம் பரவாயில்லையா? 

நல்லாயிருக்கேன், இப்பதான், வேலை பரவாயில்லை -பதில்கள்.  

ஓரம்பரைக்கு, ஊட்டி போகுலையா, சாமி? அவன் அம்மாவைப்போல, மனைவியும் வெளியாள் என்பதால், குத்தலாக கேட்டார்கள்.

“இல்லீங்”

சுப்பையா, இதைப்பார்த்துவிட்டு, எச்சில் டம்ளரைக் கழுவி, தண்ணீரை கடைக்கு வெளியே வேகமாக வீசினார். ரோட்டில் பல புள்ளிகளாக அது தெரித்தது. 

அந்த தண்ணீர் புள்ளிகளின் மேல், சத்தியிலிருந்து வந்த மேட்டுப்பாளைய சுக்குட்டுப்பன் லாரி சர்வீஸ் சக்கரங்கள் ஏறின. காய்ந்து மறையும் வரை, தண்ணீரின் புதுவழிப்பயணம் அதுதான். 

கடிகாரத்தைப்பார்த்தான். காலை எட்டு மணி.  இரும்பறையிலிருந்து 5-ஆம் நெம்பர் பஸ் தனக்கே உரிய ஒலியடன் வேகமாக வந்தது. டிரைவர். எம்.ஏஸ்.வி. ரசிகன்.  

பேசியதும் கேட்டதும் போதும் என்பதைப்போல, சொந்தக்காரர்கள் எல்லோரும் பஸ்ஸில் ஏறி சென்றார்கள்.  

மீண்டும் மனம் ஏதோ ஒன்றுக்கு ஏங்கியது. சுற்றும் முற்றும் பார்த்தான். சொந்த ஊர் வேறு. இடம் சரியில்லை என்றும் சொல்லமுடியாது. யார் போட்டுக்கொடுப்பார்கள் என்றும் தெரியாது. வீட்டுக்கு போனால், செருப்படி விழும் என்பதால் பாக்கெட்டுக்குள் வைத்துவிட்டான்.15 வருடங்களாக கட்டிக்காத்து வருகிறான். லட்சுமிக்கு அவன் செய்வது தெரியும். மறைக்கவில்லை.  

இரும்பறை ரோட்டில் நடந்தான். இடப்புறம், ஒரு குட்டை. குட்டைக்குரிய எல்லா அம்சங்களும் உண்டு. கல்லும் மண்ணும் எடுத்து, குட்டையை ஏரியாக்க, அனுப்பியிருக்கிறார்கள். 

ஒரு நூறு அடிதூரத்தில், பூவரசம் மரம் உள்ள வீடு, வலப்புறமாக தெரிந்தது.பூவரசம் மரத்திற்கு எதிரில் மற்றொரு பூவரச மரமும், போஸ்டாபீசும் இருந்தன. இந்த போஸ்ட் ஆபிசில் தான், அவன் மாமக்களின் ஒருவரான சுந்தரம் வேலை செய்து கொண்டிருந்தார். இப்போது, போஸ்ட் ஆபிஸ் வேறு கைக்கு மாற்றிவிட்டார்கள். 

ஏன் மாறியது? யார் மாற்றியது? என்றால், மலையோதிகளைப்போல மனதில் தோன்றிய அனைத்தையும், “சரி”, “அநியாயம்”, “அதர்மம்”, “கிரலாறு”, “கீரம்பரியம்”, “சொம்பிராதயம்”, “குட்ரம்”, “லொசனம்”, “நொம்பிக்கை”, “பகலாச்சாரம்”, “புண்பாடு”, “ஆத்தா சொல்லை தட்டாதே, தாண்டாதே”, “பேய்குணம்”, “சாத்தான்”, குருபை, ஹர்ரம், அரக்கன், மூதோரின் முப்பரிமாணத்தை யாரும் மாற்றக்கூடாது, விடமாட்டோம் போன்ற குட்டிக்கரணம் அடித்து சத்தியம் செய்து, ஆளுக்கொரு காரணம் சொல்வார்கள். 

ஒரு டிவிஸ் பிப்டியில், 20 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால், இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாங்காத தூரம் உள்ள இந்த ஊரில், மூன்று பிரிவுகள். முதல் பிரிவு. நிலம் உள்ளவர்கள். இதில் முதல் வீடு ஆறுமுகத்தின் வீடு. அவன் அப்பாவின் சொந்த அக்கா.  கணக்குப்பிள்ளையாக இருந்தவர். அவனுக்கு படிக்க எப்போதும் பேனா தந்தவர். கிணத்துக்கடவில் தன் மூத்த மகன் மணி வீட்டில் இருக்கிறார். 

இந்த வீட்டை கணக்குப்பிள்ளை வீடு என்பார்கள். வெள்ளை வெளேரென்று சுண்ணாம்பு அடித்து படு சுத்தமாக இருக்கும் – ராக்காயி என்ற சின்னப்புள்ளை இருந்த வரை. ராக்காயி அவன் பாட்டி அங்காத்தாள் வைத்த பேர். அவிநாசி சிவன் கோவிலுக்குப் பக்கத்தில், பாண்டிய மன்னன் புலியின் சின்னத்தோடு கட்டப்பட்ட ஆகாயராயர் இவனுடைய குலதெய்வம். 

இந்த சுத்த சைவ சிவக்குடும்பத்தில் பிறந்த கணபதி தான் பெரியார் தலைமையில் திருமணம் செய்தார். 

அவனுடைய அப்பாவின் கல்யாணத்திற்கு, மிச்சமுள்ள அத்தைகள், கருணையம்மாள், கருப்பாத்தாள், பெரியப்பா அவிநாசியப்பன், ‘மன’-வாழ்த்து மட்டுமே தரமுடிந்தது – இன்னமும் சொல்லு வார்கள். சிரிப்பார்கள். 

அவனை பார்க்கும் போதெல்லாம், கண்ணீர் கண்களால், “சாமி, பார்க்க, அச்சு அச்சு எங்கப்பா மாதிரியே இருக்கே. ஒங்கப்பா, பெரிய புரச்ச்சி பண்ணான்டோய். சேரனோட வாரிசில்லே, பாண்டியனை எதிர்த்த பரம்பரைடா, நம்முது”   – மனதிற்குள் உச்சி முகர்ந்தார்களாம்- 1968 வரை. சொல்லக்கேள்வி பிறகு காலம் மாறியதே. சந்தித்தபோது, சொல்லிச்சிரித்தார்கள். இது 2024. 

இரும்பறை ரோட்டில் நடந்தால், ஒரு வளைவு வரும். அந்த வளைவுக்கு அந்தப் பக்கத்தில், “ஏய் இந்தா, வீட்டைக் கட்டு” என்பவர்களும், இந்தப் பக்கத்தில் “சொன்ன வீட்டைக் கட்டித் தருபவர்களும்” உள்ளனர். பார்த்தாலே தெரியும். நடுவில் ஒரு சின்ன பெட்டிக்கடை. காளிமார்க் சோடா இன்னமும் கிடைக்கும். 

இந்த இரும்பறை ரோட்டில் செல்லச் செல்ல, அப்பா, என்று கத்திக்கொண்டு, வெங்கடேசும், ஸ்வேதாவும், ஓடிவந்தார்கள். ஜிம்மியும் ஓடி வந்தது. மகளை கையில் எடுத்துக்கொண்டு, மகனை ஒரு கையால் அரவணைத்துக்கொண்டு, மெல்ல நடந்தான் – வீட்டிற்கு. ஜிம்மி அவனை தொடர்ந்தது. 

டார்ச்வீடு. உள்ளே நுழைந்தவுடன், வலப்புறமாக ஒரு கொய்யாமரம். இதன் பின்னால், மிகப் பெரிய காலியிடம்.  குழந்தைகள் விளையாடுவதற்கு என்று விட்டிருப்பார்களோ என்னவோ. 

கேட்டைத்தாண்டி, ஒரு இருபது அடி நடந்தால், 20 அடி நீள பெரிய திண்ணை. சிவப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தது. திண்ணைக்கு மேல், வடக்கு, தெற்கில் இரு கதவுகள். மூன்று மூன்று ரூம்களாக ஆறு ரூம்கள். இரு போர்சனலாக இருந்தன. முதல் அறை 10-க்கு 5 சைஜிலும், இரண்டாவது அறை, 10-க்கு 12லும், கடைசியாக 10-க்கு 10 ஆக சமையல் அறையுமிருந்தன.  ஒரே அளவு. 

சென்றவுடன் அப்பாவைப்பார்த்தான். 

“என்னப்பா, எப்படீயிருக்கு”?

படுத்திருந்தவர், எழுந்து “தொண்டைக்கட்டிகிச்சு. கொஞ்சம் சிரமாம இருக்கு. டாக்டரைப்பார்த்தா சரியா போய்டும்”  மெல்லிய குரலில் சொன்னார்.  

இங்க டாக்டர்கிட்ட போனியா? என்ன சொன்னாரு?

லோக்கல் டாக்டர் எழுதிய மருந்து சீட்டைக் காட்டினார். அதில் ஒரு சில டானிக்களும், பெயின் கில்லர் மருந்துகளும் எழுதியிருந்தன. 

சரிப்பா. நான் பார்த்துக்கறேன். தைரியமாக இரு. ஒண்ணும் ஆகாது. மேட்டுப்பாளைய ஆஸ்பத்திரிக்கு போகலாமா என்றான். 

உம். சரி. 

மேட்டுப்பாளைய ஆஸ்பத்திரியில், ஒரு டோக்கன் தந்தார்கள். 18-ஆம் நம்பர். ஒரு ஆளுக்கு கால்மணி நேரம் என்றாலும், மத்தியானமாகிவிடும்.  நினைத்ததைப்போலவே, பன்னிரெண்டு மணிக்கு, கணபதி உள்ள வாங்க என்றார்கள். உள்ளே சென்றதும், டாக்டருக்கு அப்பா, “வணக்கம், சார்” என்றார். கையால் அப்பாவை உட்காரச்சொல்லிவிடு, அப்பாவைப்பார்த்து, “பின்னாடி திரும்புங்க. மூச்சை நல்லா இழுத்துவிடுங்க”. மறுபடியும் ஸ்டெதெஸ்கோப்பையை முதுகிலும், நெஞ்சிலும் வைத்துப்பார்த்து விட்டு, நர்சிடம் “கொஞ்சம் பீபி செக் பண்ணுங்க” –  சைகையால காட்டினார்.  

“நார்மலாச்சே. என்ன பிரச்சனை”? மெல்லமாக தலையை குனிந்துக்கொண்டு கேட்டார்.  

தொண்டையக்காட்டி, மிக மெல்லமாக தனக்குள்ளதை சொன்னார். தொண்டைக்குள் டார்ச் அடித்துப் பார்த்துவிட்டு, 

‘ஏதோ தொண்டைக்குள்ள வளர்ந்திருக்கு. என்ன சாப்டீங்க? அடைக்கிற மாதிரி? அந்த அடைப்பினால தான் சாப்பிடமுடியல, எதுக்கும் ப்ளெட் டெஸ்டு பண்ணி பார்க்கனும், யூரின் டெஸ்ட்டும் பண்ணிடுங்க”  – சொல்லிவிட்டு, ஒரு சில டெஸ்டுகளை எழுதினார்.  அப்பாவின் முகத்தில் ஒரு திருப்தி. 

வீட்டுக்கு வந்துவிட்டு, “சரிப்பா, நான் ஊருக்கு போகட்டுமா”?. 

பஸ் ஏறி மீண்டும் பெங்களூர் வந்து விட்டான். நைட் போனில் பேசும்போது, அப்பாவைப்பற்றி கேட்டால், “நல்லாத்தானே இருக்கார். எந்த பிரச்சனையுமில்லை “- பதிலே  பத்து நாளாக வந்தது. 

உண்மையா என்பதைப்போல், “அப்பாருகிட்ட போனைக் கொடு”. அவரிடமே கேட்டான்.

“இல்லப்பா, நல்லாயிருக்கேன் .நல்லா சாப்பிடமுடியுது”.  

குரலில் நம்பிக்கை தெரிந்தது.  மருந்து வேலை செய்கிறது போல. நல்ல டாக்டர்.  

சம்பளம் போட ஒரு நாள் இருக்கும் போது, மறுபடியும் லட்சுமி ஆபிஸ் நேரத்தில் போன் செய்து, “என்னங்க, மாமா மறுபடியும் சாப்பிட கஸ்டப்படராறு. காலையிலிருந்து, ஒரு வாய் இட்லி, ஒரு சொம்பு தண்ணின்னு மெல்லமா கஸ்டப்பட்டு முழுங்கறாறு. ஒரு மணி நேரமா ஒரு இட்டலியை தண்ணியை வைச்சு தள்ளித்தள்ளி சாப்பிட்டுயிருக்காரு” .  மௌனமாகக் கேட்டான்.   

ஆபிசில் யாரிடமும் சொல்லாமல், எச்-ஆரு க்கு ஒரு இ-மெயில் தட்டிவிட்டு, மறுபடியும் வீட்டுக்கு வந்த போது, மைசூர், ஊட்டி, மேட்டுப்பாளையம், சிறுமுகை, கணேசபுரம், ரெயான் நகர், அன்னதாசம்பாளையப்பிரிவு, கூத்தாமண்டிப்பிரிவு, அம்மன்புதூர், சம்பரவள்ளி, பால்காரன் சாலை, மோதூர், சிட்டேபாளையம் – ஊர் பேர்களை கண்டக்டர்கள் திரும்பதிரும்பச் சொல்வதைக் கேட்டுக் கொண்டு,  அப்பாவைப் பார்க்க வந்தான். வழிநெடுக, ஓதிமலையை எதிர்பார்த்தான். 

சிறுமுகையிலிருந்து சம்பரவள்ளி தாண்டிய போது, “டேய், என்னை தெரியுதா” என்ற ஓதிமலை. “நான் கல், வெறும் கல்லென்றா நினைக்கிறாய்? நான் பேசமாட்டேனா? நினைக்காதே. பேசுவேன். எனக்கு பிண பாஸையும். மனித பாஸையும், கடவுள் பாஸையும், சாத்தான்பாஸையும், ஏன், உயிர் பாஸையும்,  தெரியும். புரியும். நான் காலங்காலமாக கேட்டுக்கொண்டே தான் இருக்கிறேன் “- காற்றின் ஊடே ஜிவ்வென்று சொல்லியது உங்களுக்கும் காதில் விழுந்திருக்காதே.

சிட்டேபாளையம் வந்தபிறகுதான், “நம்ம ஊரு வந்துருச்சு” – மனதிற்குள் சொல்லிக்கொண்டான். பலபேருக்கு ஊரைச்சொல்ல, காட்ட, அடைய பல அடையாளங்கள் இருக்கும். இவனுக்கு எப்போதும் ஓதிமலை. ஓதிமலையும் இவனும் அவ்வளவு நெருங்கியவர்கள் – கல்லும் மண்ணும்போல.

வீட்டிற்குள் வந்ததும், “என்னப்பா, உடம்பெல்லாம் இளைச்சுருக்கு. என்னாச்சு” என்பதைப்போல சட்டயைக்கழட்டச் சொன்னான். 

“ஒண்ணுமில்லைடா. நான் நல்லாத்தான் இருக்கேன்”. இவனொருத்தன்!’  – சிணுங்கியபடி, ஒரு செல்ல கோபத்துடன், சட்டையைக் கழட்டினார்.

உடம்பு உண்மையிலே இளைத்திருந்தது. “அப்பா, நான் சொல்றதை கேளுங்க.  டாக்டருகிட்ட போகலாம்” வெயிட் மெசின்லே ஏறி நில்லுப்பா? 

வெங்கடேஸ் உடனே ஓடிப்போய் ஒரு சின்ன வெயிட் மெசினை கொண்டு வந்து ஸ்விட்சை ஆன் செய்தான். 

“தாத்தா, இது மேல ஏறி நில்லு, சென்டர்ல்ல நில்லு. ஆடாதே” 

யார் பேச்சையும் கேட்காத கணபதி, அவன் பேச்சுக்கு மட்டும், “சரி சாமி” என்பதைத் தவிர எதையும் காட்டாமல், மேலே ஏறி நின்றார். சிவப்புக் கலரில், 48 கிலோ என்று காட்டியது. 100 கிலோவிலிருந்து, எப்படி, தீடிரென வெயிட் கம்மியானது? -யோசித்தான்.  

அக்கறையுடன், “அப்பா, டாக்டர்கிட்டே போகலாம்”

“போடா. டாக்டர்கிட்டா போனா, காசு காசுன்னு புடுங்கிடுவானுங்க. தொண்டை கட்டனதுக் கெல்லாமா டாக்டர் கிட்ட போவாங்க. போடா. போய். வேலையப் பாரு.  நல்லாத்தானே இருக்கேன். காசுயிருக்குன்னு பவுசு காட்டாதே. இந்த ஜம்பமயிரெல்லாம் வேறு யார்கிட்டயாவது காட்டு”

கோவத்தில் கத்தினார். அவர் அப்படித்தான். 

இல்லப்பா, வெயிட் ரொம்ப கம்மியா இருக்கே. எனக்கு பயமா …

இங்கிருந்து, இருவருக்கும் இடையில் வார்த்தை போர் வெடித்தது.  

“சரி என்னமோ பண்ணித்தொலைங்க. நல்லதுன்னு சொன்னா கேட்கமாட்டீங்க”. 

“சனியன். என்னா சொன்னாலும் கேட்க மாட்டேங்குது.  என் உசுரை வாங்குது” 

 இருவரும் சப்தமாக பேசிக்கொண்டார்கள். 

லட்சுமி, மெளனமாக, தடித்த வார்த்தைகளின் அளவையும், வாளிப்பையும், கோபத்தையும், நேரத்தையும், வழக்கம் போல, கவனித்துக் கொண்டாள்.  

நான் உங்கப்பாவை டாக்டர்கிட்டே கூட்டிட்டு போறங்க – பாருங்க”  வெங்கடேஸ் பக்கத்தில் படுத்துக்கொண்டு – லட்சுமி சொன்னாள்.  

“நான் எப்போதும் உங்களுக்கு நடுவில் தான் படுப்பேன், பிரிப்பேன்” ஸ்வேதா சொல்லிக்கொண்டு, அவன் வயிற்றின் மீது கால் போட்டபோது, “என்னோட அப்பா, டேய், கருப்பாச்சான், தொடாதே, டேய், டஸ்ட்பின்” என்று புது சண்டையை ஆரம்பித்தாள். 

“தூங்கித்தொலையுதுங்களா, சனியனுங்க. எப்ப பார்த்தாலும்.. ஓரியாட்டம்.  சித்த நேரம் சத்தம் போடாம இருங்க, அப்படியே கம்முன்னு கிடங்க உங்கப்ப மாதிரி” – பாலுவை ரசித்துப் பார்த்தாள். 

இரு ஆண்களின் வார்த்தைப்போரை பார்த்தவளுக்கு, குழந்தைகளின் புரிதலன்புச்சண்டையை ரசிக்க மனமில்லை.  இரு உளவுப்பிளவுகளை,  சமமாக ஏற்றுக்கொள்ள எப்படி ஒரு பெண்ணால் முடியாமல் போகிறது? நினைத்துக்கொண்டே  

“என்ன சொன்னே”? – என்றான் அவன்  

‘கம்முனு கிடங்க. அதுக்குதான் ஊருக்கு வந்தீக…” என்று இழுத்தாள். “சும்மா இருக்க தானே வந்தீங்க. எங்க மாடு பெங்களூர் வெய்யில காஞ்சு வந்திருக்கு.உடம்பு சுடுதல்ல… “

தூங்க ஆரம்பித்த வெங்கடேசை எக்கித்தாண்டி அவன் தலையைத் தொட்டாள். சிலிப்பி விட்டாள். வெங்கடேஸும், ஸ்வேதாவும் அடுத்தடுத்து தூங்க ஆரம்பித்தனர்.  குழந்தைகளுக்கு பெட்சீட்டை எடுத்துப்போர்த்தினாள். நால்வரும் ஒரு போர்வைக்குள் ஒரு தூக்கம் போட்டார்கள்.  ஓதிமலையிலிருந்து ஒரு சமிக்ஞை வந்தது. 

காலையில், அப்பாவிடம் சொல்லாமல், அம்மாவிடமும், லட்சுமியிடமும் சொல்லிவிட்டு கிளம்பினான். குழந்தைகள் அசந்து தூங்கிக்கொண்டிருந்தன. அவன் சத்தி பஸ் ஏறுவதை தூரத்திலிருந்து கணபதி பார்த்துக்கொண்டிருந்தார். சுப்பைய்யாவும் பார்த்தார். 

“அவன் சாப்டானா, லெட்சுமி” – கணபதி. 

தலைக்கு குளித்திருந்தால் என்னவோ, தலையை காய வைத்துக்கொண்டே, சிரித்துக்கொண்டு தலையை ஆட்டினாள்.. 

சேவல்சண்டையை யார் கோழிச்சண்டையாக்கினாங்க, மாமா? வாய் வரைக்கும் வந்ததை அடக்கிக்கொண்டாள். 

படித்தும், படிக்காதவர்கள் உள்ள ஒரு வீட்டில், ஆண்கள் சண்டை போட்டுத்தானே,  முடிவு நிலையை அறிகிறார்கள் என்பதை புரிந்துகொண்டதைப்போல,  “பவுசு” தான் கோழிச்சண்டையின் ஆரம்பம் என்று சொல்லத்துடித்தார்.  

என்ன மாயமந்திரம் போட்டாளோ, தெரியவில்லை. கணபதி மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு வந்தார். 

“அம்மா, டாக்டருங்க, காசு புடுங்குவானுங்கம்மா” – பிணாத்திக்கொண்டே, ஒவ்வொரு டெஸ்டாக எடுத்தார். ஒத்துழைப்பும் தந்தார். 

பில்லை மட்டும் லட்சுமி வைத்துக்கொண்டாள். அவருக்கு காட்டவில்லை. 

வாயிற்குள் ஒரு நீடிலை விட்டு உள்ளே உள்ள ஒருசதை மாதிரியை எடுத்தபோது மட்டும், கணபதி கொஞ்சம் கஸ்டப்பட்டார். ரத்தம் வந்தது. 

பஞ்சை எடுத்து, வாயை துடைத்து விட்டு, அதை தூரம் வீசியபோது, அதிலுள்ள ரத்தக்கறையைப் பார்த்த, லட்சுமிக்கு என்னமோ மாதிரி இருந்தது. 

ரத்தத்தை பார்த்து, கொடுத்து, அதோடு வாழ்ந்து வளர்ந்தவளுக்கு, மற்றவர்களின் ரத்தத்தை பார்க்கும் போது ஏன் படபடப்பு ஏற்படுகிறது? 

யூரின், ப்ள்ட் ரிப்போர்ட்டும் வந்தபின்பு, டாக்டர் உள்ளே வரச்சொன்னார். 

“தொண்டைக்குள்ள ஏதோ வளருது. அந்த சாம்பிளை லேப்புக்கு அனுப்பனும். கல்ச்சர் டெஸ்ட் பண்ணுவாங்க. அதுக்குப்பேரு “பை-ஆப்ஸி”. 

அதுக்கு பின்னாடி தான் என்ன பண்ணனும்? முடிவு செய்வொம். ஒரு வாரம் கழித்து ரிப்போர்ட் வருகிற போது, என்னைப்பாருங்கள்.” சொல்லிவிட்டு பெல்லை அமுக்கினார். 

நர்ஸ் “ராதாமணி – டோக்கன் நெம்பர் 19 என்ற சொல்ல ஆரம்பித்தாள். 

வீட்டிற்கு வந்ததும், இட்லியை எடுத்து தட்டில் வைத்துவிட்டு, கட்டிய பில்களைக் கணக்கு பார்க்க ஆரம்பித்தாள். 8,000 ஆயிரம். கார்செலவு 1,200. தலையைத்தூக்கி, , 

“என்ன மாமா. சாப்பிட கஸ்டமா? 

“இல்லைம்மா, சரியா போய்டும். மத்தியான உச்சி வெய்யில, தார்ரோட்டில கம்பளிப்பூச்சி போர்ற மாதிரி சாப்ட வேண்டியிருக்கு. இட்லியைக்கூட முழுங்க முடியல. கஸ்டமாயிருக்கு ”  

அவர் சாப்பிட்ட இடமெல்லாம், தண்ணீரும், இட்லியின் துகள்களும், அவருடைய முயற்சியும்,  சிதறிக்கிடந்தன. இட்லிக்கம்பளிகள் சிரமப்பட்டு ஒரு மணிநேரத்தில், அவர் வயிற்றுக்குள் கடந்திருக்க வேண்டும்.

ஒரு வாரம் கழித்து ஆஸ்பத்திரிலியிருந்து போன் வந்தது. லட்சுமியும், ஜெகனும் போனார்கள். 

ஜெகன் ரிப்போர்ட்டை கையில் வைத்துக்கொண்டு, அவனுக்கு போன் செய்தான். 

“சார்.  ரிப்போர்ட்டை படிச்சுப்பார்த்தேன். அப்பாவுக்கு கேன்சர். பாஸிட்டிவ்”. என்றான். அவனுக்கு பாலுவுக்கு,  தலையில் இடிவிழுந்தது. மனம் பரபரவென்றது. ஆபிஸ்ஸை விட்டு வெளியே வந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக்கொண்டு, ஒரு இழுப்பு இழுத்தான். என்ன செய்யலாம்?  

அவருக்கு இன்சூரன்ஸ் எடுக்கவில்லை. எடுங்கள் என்ற சொன்னபோது, ஜம்பசெலவு, அதை பண்ணாதே. காசை கரியாக்கறடா. சம்பாதிக்கற திமிரு. எனக்கெல்லாம் ஒன்னும் ஆகாது, வராது. அந்தக்காலத்து சாப்பாட்டோட உடம்பு, வேலையப்பாரு. ஞாபகத்திலுள்ள சொற்கள். 

அவரை பொறுத்த வரைக்கும், இன்சூரன்ஸ் ஒரு வெட்டி செலவு. காசை கரியாக்கும் முதலீடு.   தட்டிக்கழித்தார்.  இப்போது, அவரை, கேன்சர் ஒரு தட்டு தட்டி, கழிக்கவந்துள்ளேன் என்றது. 

இந்த முறை அவன் சுற்றி வரவில்லை. நேரடியாக – கிருஸ்ணகிரி, மேச்சரி,  மேட்டூர், கரட்டூர், அத்தானி, காளப்பட்டி, ந. புளியம்பட்டி, கொடிவேரி, அக்கரை நெகமம், அரியப்பம்பாளையம் வழியாக பெத்திக்குட்டை வந்தான். 

அங்கு வருகின்ற போது,  அவனைக் கண்டவுடன், அவனை ஒரு வித கவலையுடன், ஓதிமலை அவனைப் பார்த்து, “உள்ளே வா” என்றது. மனைவி ரெடியாக இருந்தாள். 

கோவையில் புது ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். கேன்சர் ஆஸ்பத்திரி. டார்ச்காட்டிலுள்ள ஒரு ஆவாரம்பூவைப்போல அழகாக காட்சியளித்தது. டாக்டரின் படிப்பு எம்.எஸ். ஆன்காலஜி, மருத்துவம் என்று போர்டு சொன்னது. 

ஆறுமாத குழந்தையிலிருந்து கணபதி வயது வரை இருந்தார்கள்.  இந்த கருமப்பழக்கத்தை என்ன பண்றது என்று நினைத்துக்கொண்டு இருவரும் டாக்டர்  அறைக்குள் நுழைந்தார்கள். 

  வெள்ளை டேபிள். ஒழுங்கான அழகு. ராமனின் கடைசித்தம்பியின் பெயர் கொண்டவர். நடந்துதான் வருவார். காரெல்லாம் இல்லை. எளிமையானவர். வளரவேண்டும் என்று சொல்கிற உலகில், வளரக்கூடாது என்று சொல்லும் டாக்டர். வளருவதை தடுப்பது எப்படி என்று தெரிந்த கைவித்தக்காரர். அறிவும், ஆற்றலும் உள்ளவர்.  

இவர்கள் நுழைந்த போது, கணபதியின் எக்ஸ்-ரே, ப்ளட், யூரின் ரிப்போர்ட் எல்லாம் அவருடைய டேபிளில். எக்ஸ்-ரே-வை எடுத்துக்கொண்டு,

          “இங்க பாருங்க, தொண்டையிலே, இப்ப தான் வளர ஆரம்பிக்குது. ரேடியேசன் – நாற்பது நாள், கீமோதெரப்பி 21 நாளைக்கு ஒரு முறையாக ஆறு முறை. முடிகொட்டும். ரேடியேசனில், எக்ஸ்-வொய் சிஸ்டம் பாலோபண்றோம். கரெடக்டா படும். கொஞ்சம் கஸ்டமாயிருக்கும். வேற வழியில்லை.  கீமோதெரப்பி டைமில, கொஞ்சம் சாப்பிட முடியாது. பயப்படக்கூடாது. மற்றபடி, எந்தபிரச்சனையும் கிடையாது”. மிகச்சுருக்கமான டாக்டரின் பேச்சு. ரசித்தான்.  

பணம்கட்டிவிட்டு, “நாளைக்கு சிகிச்சை ஆரம்பித்து விடலாங்க”.  நம்பிக்கை வந்தது. டாக்டர் நல்லவர் என்று கூட்டமும், அவருடைய பில்களும் சொல்லின. 

சுற்றியும் பார்த்தான். எலும்பில், ரத்தத்தில், கர்ப்பப்பையில், மார்பகத்தில், தோலில், கணையத்தில், குடலில் ஒரு ஸ்விட்ச்-ஆன். ஒரு ஸ்விட்ச்-ஆப் செய்த புரோட்டினின் விளையாட்டு ஒரு நூறு பேரிடமாவது இங்கேயே, இந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறேன் என்பதைப்போல், எல்லா உறுப்புகளிலும் வருவேன், கண்ணிலும் வருவேன், ஏன், விந்துவிலும் வருவேன் – உலகுக்கு கேன்சர் காட்டியது. கணபதிக்கு தொண்டையில். புரிந்துகொண்டான். 

சிகரெட்டை நிறுத்திவிட வேண்டும் – உறுதி எடுத்தான். 

ஊருக்குள், கேன்சர் செல்களை விட மிக மிக வேகமாக – கணபதிக்கு கேன்சர் என்ற தகவல் பரவி வீரீட்டது. 

ஆளுக்கு ஆள் -என்ன பாவம் கணபதி செய்தாரோ என்பதிலிருந்து,  சாபமா, வீட்டு ராசியா, பாலுவின் திமிருக்கானதா – பேசினார்கள். 

சுப்பையாவிடம் தகவல் போனபோது, வேணும், நல்லா வேணும். எங்க சாதி பொண்ணை கட்டிக்கிட்டானில்லையா. எங்க ஜாதி சாமி அவனுக்கு தந்த தண்டனை – மகிழ்ச்சியாக சொன்னாம்.  

தன் அப்பாவைப்பற்றி சுப்பையா பேசியது பாலுவின் காதில் விழுந்ததும், சுப்பையா கடைக்கு போய், டென்சனைக் குறைக்க ஒரு சிகரெட்டை பற்ற வைத்துவிட்டு, ஒரு டீ என்றான். 

அவருடைய கடையிலும், முகத்திலும் முதல் முறையாக புகையும், பகையும்  பரவியது. அந்த பகைப்புகை மெல்ல மெல்ல ஒவ்வொரு வீடாக மாறி மாறி,  முச்சந்தியுலும் வீசியது. அந்த ஊரில் எல்லோரும் பிணவாயை திறந்து காட்டினார்கள்.பயந்து ஓடினார்கள். 

மலையோதிகள் மலையோதிகளின் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்  என்று ஓதிமலை கனித்தது. கவனித்தது. அதைச்சுற்றியும் புகைகள். 

“என்ன கருமம் பிடித்த மனிதர்கள்” இருமிக்கொண்டே, “அசுரசாத்தான் – அசுரசாத்தான் மோதல்”  “நல்ல வேளை, நான் கல்களாலான மலை, என்மீது இருந்து கொண்டு, ஓதுவதையும் பிண வாடைவீசுவதை மட்டும் தான் மனிதர்கள் செய்வார்கள்” – நினைத்துக்கொண்டிருந்த போது,  

“பிணங்கள்  ஓதுமா? பிணங்களுக்குத் தானே ஓத வேண்டும்” ஓதிமலையை கேட்டார்கள், பாலுவும், கணபதியும், கணபதியின் மனைவியும்.   . 

“பிண பாஸை, புரியவில்லையா? – மறுபடியும் ஓதிமலையை கேட்டார்கள்

ஏராளமான பிணங்கள் மிக அழுகிய நிலையில் மீட்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராணுவம் குவிப்பு,  “அவர்களை அழிப்பது எங்கள் வேலை”, “எல்லைகளை கடப்போம்” “எந்த எல்லைக்கும் போவோம்” –  செய்திகள் வர ஆரம்பித்தன. 

லெபனானும், இஸ்ரேலும்  தெரியவில்லையா? அங்கே, பிணங்கள், மனிதர்களைப் பார்த்து,  வாழ்வதற்காக மனிதர்களாக உட்கார்ந்து யோசியுங்கள் என்று சொல்லிக் கொண்டுள்ளன. 

ஓதிமலை, நல்லா கேளு. பாரு. மனுசுங்க கொத்து கொத்தா சாகறாங்க… 

“அதை விடுங்க, இங்க பாருங்க. நீங்க எப்போதிருந்து பிண பாஸையை பேச ஆரம்பித்தீர்கள் என்று உங்களுக்கு புரிகிறதா? ஓதிமலை – கேட்டது. 


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.