வேதாந்த் வேதாந்தம்

சத்யா மங்கலத்தின் தகவலைப் படித்து வேதாந்த் தயங்கினான். 

 – அண்மையில் இயற்றப்பட்ட ஒரு மாநிலச் சட்டத்தின் பாதிப்பைப் பற்றி விவாதிக்க இயலுமா? 

‘அதீனா ரீடரி’ல் சத்யா மங்கலம் எழுதும் உயர்கல்வி பற்றிய அறிக்கைகளை அவன் தவறாமல் வாசிப்பது வழக்கம். நேர்காணலுக்காக அவளைச் சந்திப்பது பெருமையாக இருந்தாலும் அதன் வழியாக  வேலையை இழக்க அவனுக்கு விருப்பம் இல்லை.

அச்சட்டம் எதுவானால் அதை சத்யாவுடன் மனம்விட்டுப் பேசுவது ஆபத்தில் முடியலாம். அதனால் ஒரு நீண்ட பதில். 

– சமூக ஊடகம் பக்கமே நான் போவது கிடையாது. யோசிக்காமல் சொன்ன என் வார்த்தைகள் எனக்கே பகை ஆகலாம். என் வகுப்பில் சராசரியைவிட அதிக ஆர்வம் காட்டிய நடுநிலை மாணவர்கள். பொது விஞ்ஞானமும், கால்குலஸுக்கு முந்தைய கணிதமும் என் பாடங்கள். கற்றுக்கொடுப்பதில் எனக்கும், கற்றுக்கொள்வதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி. என் துணைவி வித்யா சின்ன கல்லூரியில் பேராசிரியர். அவளுக்கும் வேலை சந்தோஷமாகப் போகிறது. கோடையில் மற்றும் வாரக்கடைசியில் வேர்வை சிந்த இங்கிருந்து பத்து மைலில் ஒரு பண்ணை. வேலை மாற்றி இருவரும் வேறு இடம் போவதில் பல சிரமங்கள். தயவுசெய்து மன்னிக்கவும்!  – 

சத்யாவிடமிருந்து, 

 – உன் நிலைமை எனக்குப் புரிகிறது. உன்னுடைய நிஜமான எண்ணங்களை செய்தியாளர் என்ற முறையில் தெரிந்து கொள்ளத்தான் அழைக்கிறேன், நம் உரையாடல் என் கணினியைத் தாண்டிப் போகாது. ‘உயர்கல்வியில் அரசியல்’ பற்றி புத்தகம் எழுதினால் – அப்படி ஒரு ஆசை இருக்கிறது – உன் கருத்துகளை மட்டுமே பயன்டுத்துவேன். பெயர் குறிப்பிடாமல் நன்றி தெரிவிப்பேன். –  

அவள் வாக்குறுதியை மதித்து வேதாந்த் சம்மதித்தான். 

ஞாயிறு காலை இருவருக்கும் ஒத்துப்போனது. 

“நமஸ்கார், மிஸ்டர் வேதாந்த்!”

“மிஸ்டர் எதற்கு?” 

“ஆசிரியருக்குத் தரும் மரியாதை.” 

“ஒரு தடவை போதும்.” 

“முதலிலேயே சொல்லிவிடுகிறேன், வேதாந்த்! எனக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி!”

“சட்டத்தை விவாதிக்க என்னைத் தேர்ந்தெடுத்ததன் காரணம்…” 

“என் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து இங்கே குடியேறியவர்கள். இல்லத்தில் பூஜைக்கு ஒரு தனி அறை, கோவிலுக்கு வாரம் தவறாமல் போவது, முக்கியமான ஐந்தாறு பண்டிகைகள் கொண்டாடுவது என ஹிந்து மரபை ஓரளவு பின்பற்றுகிறவர்கள். எனக்கு ஹிந்து என்றால் என் பெற்றோர்களின் நண்பர்கள் மற்றும் என்னைப்போல சத்யா, (புன்னகையுடன்) வித்யா என்று ஹிந்துப்பெயர்கள். வேதாந்த் வால்ட் ஒரு ஹிந்து என நினைக்கத் தோன்றவில்லை.”

“என் பெற்றோர்கள் ஜெர்மெனியில் பிறந்தவர்கள். சமஸ்க்ருதத்திலும் கிழக்கு மதங்களிலும் அவர்களுக்கு ஆர்வம். அதன் தூண்டுதலில் இந்தியா சென்று ஒரு ஆசிரமத்தில் தங்கியபோது சந்தித்தார்கள். திருமணத்துக்குப் பின் அங்கேயே சில ஆண்டுகள். நானும் என் தங்கையும் பாண்டிசேரியில் பிறந்து வளர்ந்தோம். அவளுக்கும் ஹிந்துப் பெயர் – ஷாரதா.” 

“உனக்கு ஹிந்து மதம் பற்றி என்னைவிட அதிகம் தெரிந்திருந்தால் ஆச்சரியம் இல்லை.” 

அறிமுகக் கட்டம் முடிந்தது.  

“எந்த சட்டத்தைப் பற்றி?” 

“எல்லா வகுப்பறைகளிலும் பத்துக்கட்டளைகள் கொண்ட பலகைகள் வைக்கப்பட வேண்டும்.” 

நான் உன்னைப் படைத்த சர்வ வல்லமைகொண்ட கடவுள் 

1. என்னைத்தவிர வேறு கடவுளை வணங்கக் கூடாது! 

2. சிலை உருவங்கள் செய்து அவற்றை வணங்கலாகாது! 

3. என் நாமத்தை வீணில் இழுக்காதே!

4. ஏழாவது புனித நாளில் வேலை செய்யாதே! 

5. தந்தையும் தாயையும் மதித்து நட! 

6. உயிர்க்கொலை செய்யாதே! 

7. மற்றவன் மனைவியுடன் உறவுகொள்ளாதே!  

8. களவு செய்யாதே!

9. பொய்சாட்சி சொல்லாதே! 

10. பிறர் சொத்தின்மேல் ஆசை வைக்காதே! 

“கிறித்துவன் அல்லாத நீ அதை எப்படி எடுத்துக்கொள்கிறாய்?”  

சிறு யோசனைக்குப் பின் வேதாந்த்,  

“அந்த சட்டத்தை உருவாக்கியவர்கள் சுயநல அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் தேர்தல் வெற்றிக்கு உதவும் அதிகாரக் கிறித்துவர்கள். இவர்களில் யாரும் இயேசு வாழ்ந்து காட்டிய ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவது கிடையாது. இளையவர்களின் நேர்மையிலும் சிந்திக்கும் திறனிலும் அவர்களுக்கு அக்கறை இல்லை. இந்த சட்டத்தின் நோக்கம்: மற்ற மதத்தைச் சேர்ந்த, கடவுள் நம்பிக்கை இல்லாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாங்கள் ஒரு படி மட்டம் என நினைக்க வேண்டும். தன்னம்பிக்கை இழந்து சரிவரப் பணி செய்யாவிட்டால் அவர்களை ஒடுக்கவும் வழி செய்கிறது.”    

“ஏன் அப்படி நினைக்கிறாய்?”  

“பத்துக் கட்டளைகளில் முதல் நான்கும் யாவே தன்னை மதிக்காதவர்களுக்குத் தரும் கடும் எச்சரிக்கை. அவரைப் போல பைபிளை ஏற்காதவர்களைப் பழி வாங்குவது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பம்.”  

“நான் அப்படி யோசித்தது இல்லை.” 

“நிஜமாகவே நல்ல அறிவுரைகள் மாணவர் கண்ணில் தினம் படவேண்டும் என விரும்பினால், ‘அடுத்தவரை உன்னைப்போல நேசி!’ ‘தேவைகள் வேறு விருப்பங்கள் வேறு.’ ‘காரியங்களை முழு கவனத்துடன் செய்!’ போன்ற நேர்மறை வாக்கியங்களை வரிசைப்படுத்தி இருக்கலாம். ஐந்தாவது கட்டளை தவிர மற்றவை எதிர்மறை ஆணைகள்.” 

“அதில் என்ன தவறு?”  

“தீய செயல்களைத் தவிர்ப்பதால் மட்டுமே ஒருவன் நல்லவன் ஆகமுடியாது. உயிர்க்கொலை செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது. உயிர்களிடம் கருணை காட்ட வேண்டும். மனிதர்களிடம் இனிய வார்த்தைகள் பேச வேண்டும். பிறர் மனைவியை மட்டுமல்ல, அபலைகளையும், ஆதரவற்ற பெண்களையும் மதிப்புடன் நடத்த வேண்டும்.”   

“நீ அப்படி நினைத்தால் சட்டத்தை ஏன் எதிர்க்கவில்லை?” 

“இப்போதைய சூழ்நிலையில் என் நேரம் வீண். போலிஸ் வன்முறையில் அது பிசுபிசுத்துப் போகும். அத்துடன், மணிக்கு ஐநூறு டாலர் வாங்கும் வக்கீல்களின் உதவியுடன் மாநில அரசு ஒரு புதிய சட்டம் இயற்றி இருக்கிறது. அதன் பிரகாரம் பொதுமக்களின் நடமாட்டத்துக்கு எவ்விதத்திலாவது தடங்கல் உண்டாக்குவது குற்றம். என் எதிர்ப்பினால் சிலர் மெக்டானால்ட் போக முடியாவிட்டால், அதற்கு அபராதம் என் ஆறு மாத சம்பளம்.”  

“அதனால்…”  

“சட்டத்தை உருவாக்கியவர்களின் எதிர்பார்ப்பை எதிர்க்க வேண்டும்.”  

“அதற்கு?”  

“அதை அலட்சியம் செய்ய வேண்டும்.” 

“எப்படி முடியும்? வகுப்பறையின் பிரதானமான இடத்தில் பலகை தொங்கும்போது…”  

“நான் யோசித்துப் பார்த்தேன். மூல பைபிளில் இருந்து ‘இடப்பெயற்சி’ அத்தியாயம் 20 முழுவதையும் அச்சிட்டு அதன் மேல் ஒட்டிவிட்டேன். யாருக்காவது அக்கறை இருந்தால் பக்கத்தில் நின்று படிக்கலாம். சிறிய எழுத்துக்கள் என்பதால் மற்றவர்கள் பார்வை அதில் நிலைக்காது.”  

“நல்ல திட்டம். நடைமுறையில்?” 

“வெற்றி. யாரும் அதில் கவனம் செலுத்துவது கிடையாது. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் மட்டுமல்ல வரலாறும் மாணவர்களின் அநாவசியக் குறுக்கீடு இல்லாமல் நடக்கிறது.”  

“நன்றி மிஸ்-” 

“வெறும் வேதாந்த். என் நிபந்தனை ஞாபகம் இருக்கட்டும்!”   

கதை முடிந்தது என்று வேதாந்த் நினைத்தபோது இன்னொரு முறை அவன் அச்சட்டம் பற்றிப் பேச நேரிட்டது – கட்டாயத்தினால். 

ஆளும் கட்சியை முழுமையாக ஆதரிக்கும் ‘ஃப்ராங்க்லின் ரிபோர்ட்டரி’ன் நிருபர்,  

“மாவட்டப்பள்ளிகளின் நிர்வாகக் குழுவின் சார்பில் உன்னை அழைக்கிறேன். உன் எண்ணங்களை பலரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பது குழுவின் புதிய அங்கத்தினர் டெபரா ரைமனின் விருப்பம்.” 

அவன் பெயரில் இருந்து அவனுடைய கருத்துக்கள் அவள் கொள்கைகளுக்கு எதிரானவை என்று அவளுக்குத் தெரிந்திருந்திருக்கும். தன்னுடன் ஒத்துப்போகாதவர்களை அவள் கீழே தள்ளி மிதிப்பதையும் அவன் அறிவான். அதனால், ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்துப் பேச வேண்டும். 

“‘மாத் அன்ட் சயன்ஸ் அகடெமி ஆசிரியர் வேதாந்த் வால்டுடன் புதிய சட்டம் பற்றி ஒரு சிறு உரையாடல்’ என்ற தலைப்பில் நம் வார்த்தைகள் வெளியாகும்.”  

வேறுவழி இல்லையென ஒப்புதல் தெரிவித்தான். 

சாதாரண கேள்விகளுக்கும் ஆபத்து இல்லாத பதில்களுக்கும் பிறகு,  

“பத்துக்கட்டளைகள் பலகையின் மேல் நீ இடப்பெயற்சியின் அத்தியாயம் 20 முழுவதையும் அச்சிட்டு ஒட்டி இருப்பதாக அறிகிறேன்.”  

“ரொம்ப சரி.”   

“காரணம்?”  

“எந்தத் தகவலுக்கும் அது நிஜமா என்று நிச்சயம் செய்ய அதன் மூலத்தை ஆராய வேண்டும் என்பது மாணவர்களுக்கு நான் தரும் அறிவுரை.”  

“என்னுடைய தகவல் தொழிலில் அது மிக மிக அவசியம்.” 

“அப்படியா?” என்ற வார்த்தை வேதாந்த்தின் கட்டுப்பாட்டை மீறி வெளிவந்துவிட்டது. அதன் தொனியில், ‘எங்கே ஒன்று சொல் பார்க்கலாம்?’ 

“ஜியார்ஜியா, மிஷிகன் மாநிலங்களை பைடன் ஜெயித்தார் என்பது ஊடகத்தின் செய்தி. உண்மையில் தலைவர் ட்ரம்ப் அவற்றை வென்றார் என்று உனக்கே தெரியும்.” 

‘எனக்கு அது தெரியாதே’ என்று சொல்லி மாட்டிக்கொள்ளாமல், 

“அரசு கொடுத்த பலகையில் எழுதி இருப்பது 57இல் வந்த ‘பத்துக்கட்டளைகள்’ திரைப்படத்துக்காக எளிதாக்கிய வரிகள். அத்தியாயம் முழுவதையும் தெரிந்து கொள்வது மாணவர்களுக்கு நல்லது என்ற எண்ணத்தில் அப்படிச் செய்தேன்.”   

“அதனால் பலன்…”  

“கடந்த ஒரு வாரத்தில் என் மாணவி ஒருத்தி பலமுறை அதன் முன் நெடுநேரம் நின்று ஆர்வத்துடன் அதை வாசித்தாள்.”  

“மற்றவர்களும் அவளைப் பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கலாமா?”  

“என் நம்பிக்கையும் அது தான்.”  

“நன்றி, மிஸ்டர் வால்ட்!” 

டெபரா ரைமன் வீசிய வலையில் இருந்து தப்பியதாக வேதாந்த் நினைத்தான். அவளுக்கும் நேர்காணலின் விவரங்களில் ஏமாற்றம். 

நேர்காணல் வெளியான மறுநாள். 

‘ஃப்ராங்க்லின் ரிபோர்ட்டரி’ன் ஆன்மீகப் பகுதியில் தெரஸா ரைமன் (மாத் அன்ட் சயன்ஸ் அகடெமி மாணவி) எழுதிய ஒரு கருத்துக் கட்டுரை. 

பத்துக்கட்டளைகள் 

நான் ஆறாம் வகுப்பு மாணவி. விசுவாசமான கிறித்துவக் குடும்பத்தில் வளர்ந்தவள். பத்துக்கட்டளைகள் பற்றி ஞாயிறு போதனைகளில் சொல்லப்பட்ட மேலோட்டமான தகவல்கள் எனக்கு ஏற்கனவே தெரியும். அதனால், அரசின் ஆணைப்படி வகுப்பில் மாட்டிய பத்துக் கட்டளைகள் பொறித்த பலகை என் கவனத்தை ஆரம்பத்தில் கவரவில்லை. 

என் வகுப்பு ஆசிரியர் ‘வெளிப்பெயற்சி’ அத்தியாயம் 20 முழுவதையும் அச்சடித்து அப்பலகையின் மேல் ஒட்டினார். அது என் ஆர்வத்தைக் கிளற அதன் முன்னால் நின்று வாசித்தேன். எனக்குத் தெரியாத எத்தனை விவரங்கள்! முதன்முறை படித்து முடித்ததும் எனக்குள் எழுந்த கேள்வி. பல்லுயிர்களும் பல உலகங்களும் படைத்துக் காக்கும் கடவுள் அவ்வார்த்தைகளை மொழிந்து இருப்பாரா? இல்லை என்று தான் எனக்குத் தோன்றியது. பலமுறை திரும்பப் படித்ததும் அந்த எண்ணம் உறுதியானது.  

அதற்குக் காரணங்கள். 

1. பத்தாவது கட்டளையில் பெண் அவள் கணவனின் சொத்து, அவனுடைய பிற உடைமைகளுக்கு சமானம். எல்லா உயிரினங்களிலும் ஆண் பெண் உறுப்பினர்களைச் சமமாக வைத்த இறைவன் மனிதர்களில் மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை காட்ட வேண்டும்?  

2. நான்காவது மற்றும் பத்தாவது கட்டளைகள் அடிமைத்தனத்தைத் தினசரி நியதியாக, ஒப்புக்கொள்ளப்பட்ட மரபாக எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் குறிப்பிடுகின்றன. மனித குலம் முழுவதையும் உருவாக்கிய இறைவன் ஒரு குறிப்பிட்ட இனத்தவரை உயர்வாகவும் மற்றவர்களை – போரில் தோல்வியுற்றவர்கள் என்றாலும் – அவர்களுக்கு அடிமைகளாகவும் வைப்பார் என நான் நினைக்கவில்லை.  

3 என் முப்பாட்டனார் செய்த சிறு தவறுக்கு நான் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதையும் நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை. 

பத்துடன் மோசஸுக்கு யாவே கொடுத்த இன்னும் இரண்டு ஆணைகளும் எனக்குத் தெரியவந்தன. 

11. எனக்குப் போட்டியாக வெள்ளியிலும் தங்கத்திலும் சிலைகள் செய்யக்கூடாது. 

12. ஆடு மாடுகளை எனக்குப் பலிகொடுக்கும் பீடம் ஒரே கல்லில் கட்டப்பட வேண்டும். அங்கே வந்து நான் உன்னை ஆசீர்வதிப்பேன். 

இவையும் கடவுளின் பெருமைக்கு, பெருந்தன்மைக்குப் பொருந்தவில்லை. 

கடவுள் வழங்கவில்லை யென்றால் இந்தக் கட்டளைகளை எழுதியது யார்? 

ஆண் ஆதிக்க சமுதாயத்தில், அடிமை வழக்கம் பரவி இருந்த காலத்தில் மேல் மட்டத்தைச் சேர்ந்தவர்(கள்) என நினைப்பது தவறாகாது. தங்கள் ஆசைகளை, கொள்கைகளை கடவுளின் வார்த்தைகளாக மாற்றியதில் ஆச்சரியம் இல்லை. முதல் நான்கு கட்டளைகளை ஊன்றிப் படிக்கும்போது ஒரு அரசனின் ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்த அவை எழுதப்பட்டனவோ என்ற எண்ணம் எழுகிறது. யாவேயைத் தவிர வேறொரு கடவுளை வணங்குகிறார்கள், சிலை உருவங்கள் செய்து தொழுகிறார்கள், புனித நாளில் தொழில் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டி அரசனின் எதிரிகளைக் கொல்வதற்கு அவை நான்கும் அதிகாரம் கொடுத்து இருக்கும்.  

அப்படி யென்றால்…  

பத்துக்கட்டளைகள் முன்னொரு காலத்தில் மனிதர்கள் எவற்றை நம்பினார்கள், உலகை எப்படி புரிந்துகொண்டார்கள் என்பதை அறிய உதவும் வரலாற்று ஆவணம். இன்றைய சூழலில்…  

உயர்வு தாழ்வு குறைவான சமுதாயத்தை உருவாக்கல், பெண்ணுரிமையை நிலைநிறுத்தல் – இவற்றை பல்வேறு மக்கள் கொண்ட குடியரசின் குறிக்கோள்களாக ஏற்றுக்கொண்டால் அவை முக்கியத்துவம் இழக்கின்றன. 

இது தான் அரசியல்வாதிகளின் திட்டமா? 

பன்னிரண்டு கட்டளைகள் அத்துடன் முடியவில்லை. 

அடுத்த நாள் அதே பகுதியில் இன்னொரு கடிதம். 

என் மகளின் கட்டுரையைப் படித்து நான் அடைந்த அதிர்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. செய்தித்தாளின் ஆசிரியர் வெளியிடுமுன் அதை என் கவனத்திற்குக் கொண்டுவராதது சரியில்லை. 

பன்னிரண்டு ஆண்டுகள் நாங்கள் பொறுப்பெடுத்துக் கட்டிய இல்லம் ஒரே வாரத்தில் இடிக்கப்பட்டுவிட்டது. காரணம் ஆசிரியர் வேதாந்த் வால்ட்.

அரசாங்க அங்கீகாரத்துடன் வைக்கப்பட்ட பலகையின் மீது காகிதத்தை ஒட்டி மறைத்தது பெருந்தவறு. பைபிள் பகுதி அச்சிட்ட பக்கம் தானே என்றாலும் அதை அவமதித்தது அரசியல் குற்றம். பைபிளை சமய அறிஞர்களின் விளக்கங்களுடன் வாசிப்பது தான் இளைஞர்களுக்கு நல்லது. தாங்களாகவே கடவுள் வார்த்தைகளுக்கு அர்த்தம் கற்பிப்பது சரி இல்லை. அத்தவறை என் மகள் செய்ததற்கு ஆசிரியர் தான் பொறுப்பு. 

என் பெண்ணை நான் திரும்ப அடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வால்ட் செய்ததை மற்ற ஆசிரியர்களும் வேறு வழிகளில் செய்யலாம், என் மகளுக்கு நேர்ந்தது மற்ற விசுவாசமான கிறித்துவ மாணவர்களுக்கும் நடக்கலாம் என்பதால் அவரை வேலையில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்கிற என் வேண்டுகோளை நிர்வாகக்குழு ஏற்றுக்கொண்டுவிட்டது. 

டெபரா ரைமன்

செய்தி தெரிந்ததும் வருத்தம் தெரிவிக்க சத்யா அழைத்தாள். 

“விதியை யாரால் வெல்லமுடியும்” என்று வேதாந்த் வேதாந்தமாகச் சொன்னான்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “வேதாந்த் வேதாந்தம்”

  1. பெரும்பாலான கிறித்தவ நாடுகளில் உள்ள பள்ளிகளில் இப்படித்தான் கிறித்தவ மத வெறியோடு நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.