”பலகை, டிவி எல்லாம் வருதுன்னு கேள்விப்பட்டேன்”

This entry is part 10 of 10 in the series கணினி நிலாக்காலம்

80-களில், கணினியை இயக்கவோ, நிரல் எழுதவோ, ஏராளமாக படித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இந்திய வணிகயுலகத்தில் இருந்தது என்று சொல்லியிருந்தேன். இதற்கு, ஐ.பி.எம். ஒரு முக்கிய காரணம். இந்தியாவில ஐ.பி.எம். பயன்படுத்திய மென்பொருட்களுக்கு, சத்தியமாக ஐஐடி படிப்பு எல்லாம் தேவையில்லை என்பது உண்மை. இந்திய கணினி தனியார் துறையில் மேல் மட்டத்தில் இயங்கியவர்கள், முன்னாளைய ஐ.பி.எம். ஆசாமிகள். இதனாலோ என்னவோ, இந்த எண்ணம் தொடர்ந்தது.

90-களில், எனக்கு நிகழ்ந்த ஒரு சுவாரசியமான அனுபவம், இது எத்தனை அபத்தமானது என்பதைப் புரிய வைத்தது.

அது நகரத்தில் மிகவும் பிரபலமான கார்/லாரி சர்வீஸ் ஸ்டேஷன். அப்துல் என்ற துடியான இளைஞன் , ஒரு சின்ன 15 x 15 கண்ணாடி மற்றும் உலோக ஷெட் அமைப்பில், நாளுக்கு 12 மணி நேரம் உழைத்தான். எப்பொழுதும் சிரித்த முகமாய், அந்த ஸ்டேஷனுக்கு வரும் நூற்றுக் கணக்கான வாடிக்கையாளரிடம் சகஜமாக உரையாடுவான். அவர்களது கார் சார்ந்த ஜாதகம் அவனுக்கு அத்துபடி. கார் வாஷுக்கு வந்த வாடிக்கையாளரிடம், எப்படியோ வேறு ஒரு பொருளையும் விற்று விடுவான். “உங்களது கார் வாசனை திரவியம் தீர்ந்திருக்குமே. 3 மாதம் முன்னால் வாங்கினீர்கள். சர்வீஸ் பில்லுடன் சேர்த்து கொடுக்கவா?” என்று இவன் சொல்லை மறுப்பவர்கள் சிலரே.

பிடி கொடுக்காமல், சர்வீஸ் ஸ்டேஷனில் எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருப்பான். காருக்கு எண்ணெய் மாற்றும் மெக்கானிக்குடன் பேச்சு, வாடிக்கையாளருடன் விசாரிப்பு என்று இரண்டு சுற்று வந்தால், அப்துலால் அன்றைய காலை கலெக்‌ஷன் எவ்வளவு என்று ஒரு 5% அளவிற்கு சரியாகச் சொல்ல முடியும்! இத்தனைக்கும், சர்வீஸ் ஸ்டேஷனில், ஒரு சாதாரண நாளில், குறைந்த பட்சம் 45 முதல் 50 வண்டிகள் ஒரு ஷிஃப்டில் சர்வீஸ் செய்யப்படும். அவன் ஒரு இயங்கும் கணினி என்றே சொல்ல வேண்டும். 

அப்துலின் பின்னணி, இதற்கு முற்றிலும் எதிரானது. அவன் படித்தது என்னவோ 6 -ஆம் வகுப்பு வரையில் தான். கணக்கில் சுட்டியாக இருந்தாலும், அவனுக்கு ஆங்கிலம் சற்றும் வராது.

சர்வீஸ் ஸ்டேஷனில் ஒரு கணினி அமைப்பு உருவாக்கலாம் என்று அப்துலின் மேலாண்மை முடிவெடுத்து, நான் பணியாற்றும் நிறுவனத்திடம் மென்பொருளை உருவாக்கி நிறுவுமாறு ஒப்பந்தம் ஆகியது. இந்த அமைப்பின் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது. எங்கு போனாலும், இவ்வகை சவால்கள் எனக்காகவே காத்திருக்குமோ என்று தோன்றும். சர்வீஸ் ஸ்டேஷன் மேலாண்மை செய்த இன்னொரு முக்கிய முடிவு, அப்துல்லை ஸ்டேஷன் பொறுப்பிலிருந்து மாற்றாமல், அவனது வியாபார அறிவைப் பயன்படுத்தி, மேலும் வியாபாரத்தைப் பெருக்குவது. 

ஆரம்பத்திலிருந்து கடைசிவரை தமிழிலேயே நான் வேலை செய்த ப்ராஜக்ட் இதுதான் என்று சொல்ல வேண்டும். ஆரம்ப நாட்களில், அப்துல்லுடன் நடந்த உரையாடல்கள் வேடிக்கையானவை.

அ: நான் இந்த ரிஜிஸ்டரை வச்சு ஓட்டிக்கிட்டிருக்கிறேன். என்னமோ பலகை, டிவி எல்லாம் வருதுன்னு கேள்விப்பட்டேன்.

நான்: அப்துல், பலகை இல்லை, கீபோர்டு. உன்னோட காஷ் ரிஜிஸ்டர் போலத்தான் இருக்கும், எழுத்துக்களும் இருக்கும். டிவி இல்லை. அதை மானிடர்னு சொல்லுவோம்.

அ: என்ன சார் அநியாயம். நான் ஆறாம் க்ளாஸ். இங்கிலீஷ் சுட்டுப் போட்டாலும் வராதுன்னு உங்களுக்கே தெரியும். எதுக்கு சார் இந்த கொடுமை எல்லாம்?

நான்: அப்துல், ஊரிலிருந்து கிளம்பும் போது, உனக்கு காஷ் ரிஜிஸ்டர் எப்படி வேலை செய்யும்னு தெரியுமா? பழகிக்கில்ல. அது போலத்தான் இதுவும். பழகிடும்.

அ: விளங்கிருச்சு சார். அந்த டிவில இங்கிலீஷ்காரி வந்து ஏதோ சொல்ல, நான் பேந்தப் பேந்த முழிக்கப் போறேன். நல்லாத்தானே போய்கிட்டிருக்கு.

நான்: டிவில இங்கிலீஷ்காரியோட நீ ஒன்னும் பேச வேண்டாம். நான் சொன்னேன் இல்லையா – அது டிவியே இல்லை. இங்க நிலவரம் பத்தி அழகாக திரைல வரும்.

அ: என்ன சார் புரியாம பேசறீங்க. நீங்க சொல்ற நிலவரம் இங்கிலீஷ்ல தானே இருக்கும். எப்படி சார் எனக்கு இது ஒத்து வரும்?

அப்துல்லின் பிரச்சினை ஆங்கிலம் என்று தெரிய வந்தவுடன், எப்படியோ அந்த அச்சத்தை நீக்க பல முயற்சிகள் எடுக்க வேண்டி வந்தது. கடைசிவரை அவனுக்கு கணினி சார்ந்த ஆங்கிலம் ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று விளக்குவதே என் வேலையானது!

அப்துல்லுடன், அந்த மென்பொருள் அமைப்பிற்கான தேவைகளை புரிந்து கொள்வதற்குள் பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது! எப்பொழுதும் வாடிக்கையாளருடன் பேசிக் கொண்டும், சில கார் உபரிகளை விற்றுக் கொண்டும், மெக்கானிக்குடன் பேசுவதற்கே அப்துல்லுக்கு நேரம் போதவில்லை. ஒரு 4 மணி நேரம் ஒதுக்கினால், எனக்கு கிடைக்கும் நேரம் 15 முதல் 20 நிமிடங்கள் தான். அத்துடன், எல்லா விஷயமும் அப்துல்லின் மூளைக்குள் இருந்தது. வாடிக்கையாளருக்கு கைப்பட எழுத்தித் தரும் இன்வாய்ஸ் தவிர எதுவும் காகிதத்தில் இல்லை. அந்நாட்களில், அனைத்து பரிவர்த்தனைகளும், இரண்டு முறைகளில் மட்டுமே அந்த சர்வீஸ் ஸ்டேஷனில் நடந்தது:

  1. ரொக்கப் பரிவர்த்தனை
  2. வவுச்சர் – இது சில பெரிய அடிக்கடி சர்வீஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்

அப்துல் அடிக்கடி, அவனது சின்ன கண்ணாடி அறையிலிருந்து வெளியே போய் விடுவான். நானோ அங்கு, பல கார் வஸ்துக்களுடன் அவற்றை வாங்க வந்த மற்ற வாடிக்கையாளர்களுக்கு இடைஞ்சலாக நிற்க வேண்டிய சூழல். மற்ற வாடிக்கையாளர்கள் நான் ஏதோ கார் உபரிப் பொருள் வாங்குவதாக நினைத்து பொருமையாக காத்திருப்பார்கள்!

ஒரு உதாரணம், எப்படி என் 4 மணி நேர மென்பொருள் தேவை பற்றிய உரையாடல், அப்துல்லுடன் நிகழும் என்பதை தெளிவாக்கலாம்.

அ: என்ன சார், நலமா? கொஞசம் பொறுங்களேன். இந்த ரெண்டு கஸ்டமரை கவனித்து விட்டு உங்களிடம் வருகிறேன்.

நான்: ம்

ஒரு 20 நிமிடத்திற்குப் பிறகு…

அ: என்ன கேள்வி சார், கேளுங்க. நீங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்க. உங்களுக்கு மத்த சர்வீஸ் ஸ்டேஷன் எல்லாம், அமெரிக்காவுல எப்படி வேல செய்யும்னு தெரிஞ்சிறுக்கும்…

நான்: அமெரிக்காவை விடு அப்துல். இப்ப ஒரு இன்வாய்ஸ் பண்ணினயே. எதுக்காக 25% தள்ளுபடி குடுத்த?

அ: சார், நம்ம ஸ்டேஷனின் இரண்டாவது பெரிய கஸ்டமர். இவங்களுக்கு 25% தள்ளுபடின்னு 10 வருஷம் முன்னாடி முடிவு செஞ்சுட்டாங்க. அதுக்குதான இந்த அப்துல் வேணும். உங்க கம்ப்யூட்டருக்கு இதெல்லாம் எப்ப தெரியுமோ?

நான்: போன முறை வந்தப்ப ஒரு கஸ்டமருக்கு 25% பொருள்களுக்கு மட்டும் தள்ளுபடி செஞ்ச. இது போல வேற எத்தனை கஸ்டமர் இருக்காங்க?

அ: சார், ரவுண்ட்ஸ் போற நேரம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ஒரு 30 நிமிஷத்துல வந்துற்றேன்.

இன்னொரு 40 நிமிடத்திற்குப் பிறகு….

அ: எங்க சார் விட்டோம்?

நான்: அப்துல், 25% தள்ளுபடி செய்யும் கஸ்டமர் பட்டியல் வேணும்னு கேட்டேன்.

அ: அதெல்லாம் நீங்க உள்ள கேளுங்க. அகவுண்ட்ஸ்ல சொல்லுவாங்க. கொஞ்ச இருங்க சார். 5 கஸ்டமர் வெயிட் பண்றாங்க பாருங்க…

உபரி பொருட்களை விற்று, இன்னும் சில இன்வாய்ஸ் என்று இன்னொரு 40 நிமிடம் எனக்கு விரயம்.

அ: இந்த எடத்துல பலகை, டிவி எல்லாம் வந்துருமா சார்?

நான்: அதைப் பத்தி நீ கவலைப்படாதே. நான் பாத்துக்கறேன். சரி, இப்ப ஒரு கஸ்டமர் வவுச்சர் கொடுத்தும், ஏன் நீ தள்ளுபடி எதுவும் தரவில்லை?

அ: புது பார்ட்டி சார். மாசம், 5 வண்டிதான் இங்க கொண்டு வராங்க. தள்ளுபடிக்கெல்லாம் சில சட்ட திட்டங்கள் இருக்கு சார். லஞ்ச் டைம் ஆச்சு சார். நாளை வரீங்களா? விவரமா சொல்றேன்…

எப்படி 4 மணி நேரத்தில் 3.5 மணி நேரம் சாதாரணமாக விரயமாகிறது என்று புரிந்திருக்கலாம். உபரி சாமான்களின் கையிருப்பும் சரியாக பதிவு செய்வதில்லை என்று அறிந்தேன். இந்த சர்வீஸ் ஸ்டேஷன் அப்துல் என்ற தனிநபரை நம்பி செயல்படுகிறது. அவன் சில வாரங்கள் ஊருக்குப் போனால், எல்லாம் குளருபடிதான். மேலும், அவன் ஏன் இரவு 9 மணி வரை உழைக்கிறான்?

எல்லா வாடிக்கையாளர்களும் எல்லா வண்டிகளும் அங்கிருந்து போகவே 6:30 முதல் 7:30 வரை ஆகிவிடும். அதன் பிறகு, அன்றைய தினம் என்ன விற்றது, எத்தனை கார்கள், எத்தனை உபரிகள் என்று விவரமான பட்டியல் தயாரித்து, காசு கையிருப்பு மற்றும் வவுச்சர் எல்லாவற்றையும் சரி பார்க்க ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் ஆகிவிடும். இதை அவனிடமிருந்து பெற்றுக் கொள்ள அக்கவுண்ட்ஸ் பகுதியிலும் ஒருவர் இருக்க வேண்டும், சரி பார்க்க வேண்டும்.

இந்த கடைசி விஷயம் தெரிந்ததுதான் இந்த ப்ராஜக்ட்டை வழிக்கு கொண்டுவர உதவியது. என் வழக்கம் போல, அந்த நிறுவனத் தலைவருடன் ஒரு சந்திப்பைக் கோரினேன். 

த: உங்கள சர்வீஸ் ஸ்டேஷனில் பார்த்தேன். அப்துல் எல்லாத்தையும் துடியாய் செஞ்சு முடிச்சுறுவான். போன ஞாயிறு கூட வேல பார்த்தான்னு கேள்விப்பட்டேன்

நான்: எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருக்கு. அப்ப எதுக்க சார், இந்த கம்ப்யூட்டர் சிஸ்டம் எல்லாம் உங்களுக்குத் தேவை?

த: அதெப்படி நீங்க சொல்லலாம். உங்க வேல, அந்த சிஸ்டத்தை செஞ்சு கொடுக்கறது. நீங்க கேக்கர கேள்வியே சரியில்லை

நான்: புரியுது. மன்னிச்சுறுங்க – நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லல. எல்லாம் நல்லா போய்கிட்டிருக்கறப்ப எதுக்கு இந்த கம்ப்யூட்டர் சமாச்சாரம் எல்லாம்?

த: விட மாட்டீங்க போல. உங்களுக்கெல்லாம் சம்பளம் கொடுத்து எதுக்குத்தான் வச்சிருக்காங்களோ! நான் ஒரு செமினாருக்குப் போனேன். அங்க நம்ம சைஸ் சர்வீஸ் ஸ்டேஷன் நம்மைவிட திறனாக மூன்று மடங்கு கார்களை சர்வீஸ் செய்யறாங்கன்னு கேள்விப் பட்டேன்

நான்: கடைசியா பதில் சொன்னதற்கு நன்றி. அப்துல், மிகவும் திறனானவன். அதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆனால், அவனது முறைகளால், உங்களது வியாபாரம் இரட்டிப்பாவதற்கு சாத்தியமே இல்லை. ஒருவன் தினம் 9 மணிக்கு வீட்டிற்கு கிளம்புகிறான் என்றால், அதுவே உங்களது திறனின் எல்லை. இதற்கு மேல முடியாது.

த: புரியுது தம்பி. என்ன செய்யணும்னு சொல்றீங்க? கம்ப்யூட்டர் வாங்கினால் எல்லாம் சரியாயிரும்னு நெனச்சேன்.

நான்: கம்ப்யூட்டர் ஒரு மெஷின். அதை சரிவர பயன்படுத்துவது நம் கையில் உள்ளது. அதன் திறனையும், தேவையையும் புரிந்து கொள்வதும் நம் வேலை. உதாரணத்திற்கு, உங்க சர்வீஸ் ஸ்டேஷன்ல, கார்களின் சக்கரங்களை அலைன் செய்வதற்கு இரண்டு மெஷின்கள் உள்ளது. ஒரு ஷிஃப்டில், 10 கார்களை அலைன் செய்ய முடியும் என்று வைத்துக் கொண்டால், இருபது வண்டிகளை மட்டுமே ஒரு நாளில் அலைன் செய்ய முடியும். அதற்கு மேல் வாடிக்கையாளர்கள் வந்தால், அவர்களை அடுத்த நாள் வரச் சொல்கிறீர்கள் இல்லையா? இதை எப்படி செய்கிறீர்கள்? உங்களுக்கு அந்த மெஷினுடைய திறன், உங்களது ஷிஃப்ட் மற்றும் தொழிலாளர்களின் திறமை எல்லாம் தெரியும். அதைப் போலத்தான் இதுவும்.

த: கார் உதாரணம் சொன்னவுடன் புரிஞ்சிறுச்சு. சும்மாவா நீங்க எல்லாம் பெரிய படிப்பெல்லாம் படிக்கிறீங்க! இப்ப என்ன நாங்க செய்யணும்னு சொல்லுங்க, செஞ்சுறலாம்…

நான்: சில சின்ன விஷயங்களைச் செய்தால், உங்களது வியாபாரம் பெருக இந்த கம்பூட்டர் ப்ராஜக்ட் உதவும். (போகிற போக்கில் சொன்னதுதான் இது. அப்பொழுது எனக்கு இது சாத்தியம் என்று முழு நம்பிக்கை இல்லை).

  1. ஒவ்வொரு நாளும் உங்களது ஆபீஸில், அப்துல் 1 மணி நேரம் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். சர்வீஸ் ஸ்டேஷனுக்கு எந்தக் காரணம் கொண்டும் போகக் கூடாது. உங்களது பொது அறிவிப்பு ஸ்பீக்கர் இல்லாத ஒரு அறை இதற்காக தேவை. இது ஒரு மாதம் நீடிக்கலாம்
  2. அப்துல்லுடன், சர்வீஸ் ஸ்டேஷன் விஷயங்கள் தெரிந்த அக்கவுண்ட்ஸ் ஆசாமி ஒருவரும் அங்கு இருக்க வேண்டும்
  3. நான் எந்த கேள்வி கேட்டாலும், அதற்கான ஃபைல்களைக் காட்ட வேண்டும்

இந்த மூணு விஷம் நீங்க செஞ்சா போது. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

த: நாளை அக்கவுண்ட்ஸ் மேனேஜருடன் பேசிவிட்டு உங்களுக்கு ஃபோன் செய்கிறேன்.

அவர் சொன்னபடி அப்துல்லையும் அக்கவுண்ட்ஸ் ஆசாமியையும் இணைத்து, கையிருப்பு குளருபடிகள், விலை மற்றும் தள்ளுபடி சட்டங்கள் என்று எல்லாவற்றையும் தெளிவாக பதிவு செய்து அந்த மென்பொருள் அமைப்பை உருவாக்கப்பட்டது.

எல்லா புது அமைப்பையும் போல, இதில் ஏராளமான ஆரம்பத் தடைக்கற்கள். அப்துல் தடுமாறினான். அவனுக்கு திரையில் வரும் ஒவ்வொரு பகுதியையும் தமிழில் எழுதிக் கொடுத்து அவனுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டியிருந்தது. இப்படியும், சில நாட்கள் ஏதோ ஒரு கால் வரும்:

அப்துல்: சார், ஏதோ இங்களீஷுல வருது சார். கஸ்டமர் வெயிட்டிங், உடனே வர முடியுமா?

அந்நாட்களில், இன்று ப் போல, உட்கார்ந்த இடத்தில் பயனாளரின் திரையைப் பார்க்க முடியாது. சர்வீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்து, “அப்துல், ஸ்டாக் இல்லைனு சொல்லுது கம்ப்யூட்டர். உங்க EDP ஆட்களிடம் பேசி, இதைச் சரி செய்யலாம். நான் பேசி சரி செய்து விட்டு கிளம்பப் பார்த்தவுடன், அப்துல்:

“சார், நீங்க ஈடிபியோட பேசினத தமிழ்ல எளுதிக் குடுங்க. அடுத்த தப இந்த மாதிரி இங்கிலீஷல ஏதாச்சும் வந்தா அப்படியே சொல்லிடறேன்”

எனக்கு அழவா, சிரிக்கவா என்று புரியவில்லை. ”அப்துல், எல்லா பிரச்சினைகளும் ஒரே போல இருக்காது. இங்க ERR2032 அப்படின்னு வந்துச்சுன்னா ஈடிபியைக் கூப்பிட்டு, இப்படிப் பேசலாம். எல்லாத்துக்கும் அவங்கள கூப்பிடக் கூடாது”

அப்துல்: புரியுது சார். எனக்கு அந்த அளவுக்கு இங்கிலீசு தெரியும். இந்த கம்ப்யூட்டர் விஷயத்த ரொம்ப பெரிசு பண்றீங்க சார்!

இப்படி அப்துல்லுக்கு ஒவ்வொரு விஷமாக சொல்லிக் கொடுக்க சில மாதங்கள் ஆகியது. மெதுவாக, அப்துல் அந்த ஸிஸ்டத்துடன் தானே இயங்கப் பழகத் தொடங்கினான்.

சில வருடங்களுக்குப் பிறகு, ஒரு வார நாள், அவனை ஒரு பொது இடத்தில் இரவு 8 மணிக்கு சந்திக்க நேர்ந்தது. அவனுடன் அன்று நடந்த உரையாடல் இன்னும் நினைவில் இருக்கிறது.

“சார், 7 மணிக்கு டே எண்ட் ரிப்போர்ட் ஓட்டிருவேன் சார். வவுச்சர், பணம் எல்லாம் சரி பார்த்து, 7:30 மணிக்கு கிளம்பிடறேன் சார். எல்லாம் உங்க புண்ணியம். இப்ப நாள் ஒண்ணுக்கு 150 லிருந்து 200 வண்டி வரை சர்வீஸ் செய்யறோம். உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா?”

“கேளு, தாராளமாக”

“அதென்ன சார், ஆரகிள். நான் கத்துக்க முடியுமா?”

”ஏன் முடியாது? தாராளமாக!”

கணினி நிலாக்காலம்

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 9

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.