எட்டு கவிதைகள்

அக்கரைக்குப்
போக
அழகாகக்
கட்டுவித்த படகும்,
துடுப்பும்,
அநேகப் பொருட்களும்.
அவற்றையும், பிறதையும்
விட்டு விட்டால் போதும்.
இங்கேயே
இகம் பரமாகும்.


எரி தின்னும்
அன்றிப் புவி தின்னும்
இன்னும் இன்னும்
எனுமிப்
பசி மன உடலை.


மேகம் மறைப்பதனால்
மேரு இல்லையென்றாகிடுமா?
காகம் கரைவதொன்றே
கானமழை என்றிடவோ?
சோகம், போகம் என்றுச்
சொல்லித் திரிவோரே
சொல்லுகின்ற அப்பொருள்தாம்
இரண்டு மென்றறியீரோ?


விதை இருப்பது கனிக்குள்தான்.
வெளியிலல்ல.
கனியும் விதைக்குள்தான்.


காற்றும், நூலும் நீயென்று முன்னமே
அறிவேன்;
நான், எனதென்றிருந்த
காற்றாடியும், வாலும் கூட
நீதானெனத்
தெரிந்து கொண்டேன்.


அமைதியான வேளையில்
கொடியில் துணி உலர்த்துகையில்
காகத்தின் அழைப்பு காதுக்கு இனிமை.
குளிர்ச்சிக்காய் கொடி மீது வந்தமரும்
ஈயும் நண்பன்.
சற்று தூரத்தில் நிலவும் வெயிலும்
இந்த நிழலும்.
குடும்பக் குறைகளையும் பகிர்ந்து கொள்ளும்
அண்டை வீட்டுப் பெண்மணிகள்.
இரும்புக் குழாய்கள், பிவிசி பைப்புகள்,
சுவர்கள், தளங்கள்,
கருப்பு நெகிழி குடிநீர்த் தொட்டிகள்,
ஓடுகள், தார்பாலின் உறைகள்
அனைத்திற்கும் உயிர் இருப்பது
தெரியும்.
சூரியனின் தேசத்தில் சடமேது ?


கொடுத்து விட்ட
கழுத்தை
எடுக்க முடியாது
திரும்ப
வெட்டு ஒண்ணு
துண்டு ரெண்டு
மட்டும் நிச்சயம்


எத்தனை கரிசனமும் அக்கறையுமாய்
ஆயிரம் கவிதை எழுதியாச்சு.
அன்பென்ற வெளிச்சமாமே – அது
என்றென்றும் எட்டியே பார்க்காத அந்தகாரம் ‘நான்’.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.