நேரம் எனும் கள்வன்

Better three hours too soon than a minute too late.

Shakespeare

சுயத் தொழில் செய்பவர்களுக்கும், வாழ்வில் பொறுப்புகள் அதிகமாக இல்லாதவர்களுக்கும் நேரம் என்பது நண்பன். மற்றவர்களுக்கு? நேரம் என்பது நீங்கள் இருக்கும் இடத்துடன் கால வெளியில் தொடர்புடைய ஒன்று என்று ஐன்ஸ்டெய்ன் சொல்கிறார்.

நேரத்தை கால அளவுக் கருவியாக நினைக்கிறோம். அது எப்படித் தோன்றியது? பெரு வெடிப்புடன் பிறந்த உடன் பிறப்பா? அதற்கு முன்னர் எங்கிருந்தது? 24 மணி, ஒரு நாளின் பகல் மற்றும் இரவும் சேர்ந்தது என உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. நேரத்தை அண்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகச் சொல்லலாமா? அண்டத்தின் ஒரு பரிணாமமாக நேரம் கருதப்படுகிறது.

இக்கட்டுரை பௌதீக அறிவியலை, அல்லது தத்துவத்தைப் பற்றி அல்ல. மாறாக, இந்த 21ம் நூற்றாண்டிலும் நேரம் போதாமை எனும் சிக்கலை நாம் சந்திப்பதைப் பற்றிய ஒன்று. ‘ஒரு நாளைக்கு ஏன் 24 மணி நேரம்? அது 48 மணியாக இருக்கக்கூடாதா?’ என்று பலரும் ஆதங்கப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். இப்படி ஒரு நிலையை நாம் சந்திப்போம் என்று முன்னர் யாரும் எதிர்பார்க்கவில்லை.

முன்னாள் அறிஞர்கள் கணித்தது

1923-ல், அதாவது சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஜெர்மானிய அமெரிக்கரும், கணிதவியல் மற்றும் மின்சாரப் பொறியியல் நிபுணருமான சார்லஸ் ப்ரோடியஸ் ஸ்டெய்ன்மெட்ஸ் (Charles Proteus Steinmetz) சொன்னார்: “இன்னும் 100 ஆண்டுகளில் மனிதர்கள் அலுப்புத் தரும் தொடர் வேலைகளைச் செய்யத் தேவையிருக்காது. ஒரு நாளில் நான்கு மணி நேரம் உழைத்தாலே போதுமானதாக இருக்கும்.”

கிட்டத்தட்ட இதே கருத்தை, 1930ல் ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் (John Maynard Keynes) தனது  Economic Possibilities for our Grandchildren என்ற கட்டுரையில் சொன்னார். “வரும் நூறு ஆண்டுகளில், மனிதன் நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் அல்லது ஒரு வாரத்தில் 15 மணி நேரம் மட்டுமே வேலை செய்வான். அறிவியலின் கொடையால் அதிகரிக்கும் தன் ஓய்வு நேரத்தை திறமையாக, நல்லவிதமாக எப்படிப் பயன்படுத்துவது என்று நினைப்பான்.”

20ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அறிஞர்கள், 21ம் நூற்றாண்டின் மனிதனுக்கு நேரம் மிகுதியாகக் கிடைக்கும் என எப்படிச் சொன்னார்கள்? மனிதனுக்கு அத்தியாவசியமான பொருட்கள், சேவைகள், தொழில் நுட்பம் போன்றவை எளிதில் கிடைக்கும் சாத்தியங்கள் அதிகரிப்பதால், குறைந்த நேரத்தில் அவன் தேவைகள் பூர்த்தியாகும் என அவர்கள் நினைத்தார்கள்; இதன் விளைவாக அவனுக்கு உபரி நேரம் கிடைக்கும், அவன் விரும்பும் விதத்தில் நேரத்தைப் பயன்படுத்தமுடியும் என எதிர்பார்த்தார்கள்.

வீட்டுக் குழாயில் தண்ணீர்

நம் வீட்டுக் குழாயில் நாம் பெறும் தண்ணீர் இவைகளில் ஒன்று. இன்று நாம் குழாயைத் திறந்து பயன்படுத்தும் நீரை, 19ம் நூற்றாண்டில், 20ம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் அவ்வளவு எளிதாகப் பெற முடியவில்லை. உலகின் செழிப்பான நாடுகளிலும் அப்போது இதுதான் நிலை. அந்தக் காலத்தில், வீட்டிற்குத் தேவையான நீரைக் கொணர்வதும், சேமிப்பதும், மீண்டும் நிரப்புவதுமே ஒரு தனித்த வேலையாகிப் போனது. இந்தக் கருத்தை, ‘அமெரிக்க வளர்ச்சியின் ஏற்றமும், இறக்கமும்’ (The rise and fall of American Growth) என்ற நூலில் பொருளியலாளர் ராபர்ட் ஜெ கோர்டன் (Robert J Gordon) சொல்லியிருக்கிறார். “1886ல் செய்த ஒரு கணக்கீட்டின் படி வடகரோலினாவிலுள்ள இல்லத்தரசிகள், ஒவ்வொரு நாளும் எட்டு முதல் 10 முறை தண்ணீர் எடுத்து வந்திருக்கிறார்கள். குளிக்க, குடிக்க, சமைக்க, துணிகள் துவைக்க என்று 50 கேலன் நீர் தேவைப்பட்டிருக்கிறது. ஒரு வருடத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் இதற்காக 138 மைல்கள் நடந்திருக்கிறார்கள்; 36 டன்னிற்கும் மேலான எடையைச் சுமந்திருக்கிறார்கள். நல்ல தண்ணீரைக் கொண்டு வருவது மட்டுமல்ல, அழுக்கடைந்த நீரையும் சுமந்து சென்று அதற்கானப் பகுதியில் கொட்ட வேண்டிய வேலையும் இருந்திருக்கிறது.

குழாய்களின் மூலம் வீட்டிற்குள்ளே நீர் வந்ததும் இந்தப் பிரச்சனை தீர்ந்தது. வீட்டிற்கு வீடு இணைப்புகள் பெறப்பட்டன. நம் வீட்டிற்குள்ளே ஒடி வரும் குழாய் நீர், பெண்களுக்கு ஒரு சஞ்சீவியைப் போன்றது. அது அவர்களை பெரும் பணிச் சுமையிலிருந்து விடுவித்தது. ‘அமெரிக்காவின் வளர்ச்சி முடிந்துவிட்டதா? தள்ளாடும் புதுமை, சிக்கல்களை எதிர் கொள்கிறது’ (Is US Economic growth over? Faltering Innovation Confronts the Six Headwinds) என்று கோர்டன் இந்தச் செய்தியை தனது ஆய்வுக் கட்டுரையில் விளக்கமாகச் சொல்கிறார்.

பொருளியலாரான ஹா ஜூன் சாங் ,(Ha-Joon Chang)  23 Things They Don’t Tell You About Capitalism, என்ற நூலில், வீட்டினுள்ளே வரும் நீர் பெண்களின் வேலைப் பளுவை எப்படிக் குறைத்தது என்பதைக் காட்டுகிறார். ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி அமைப்பு சொல்கிறது: “வளரும் நாடுகளின் மகளிர் தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் இதற்கான உடலுழைப்பை நல்கினர்.”

வீட்டிற்குள் வரும் நீர், துணிகளைத் துவைத்து உலர்த்தும் இயந்திரத்தைக் கொண்டு வந்தது. இது பல மணி நேரங்களை உபரியாக மனிதனுக்குக் கொடுத்தது. 1940களில், அமெரிக்கக் கிராமப்புற மின்னமைப்பு, அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி,17.2 கிலோ துணிகளைத் துவைக்கப் பயன்பட்ட மின்சாரத் துவைக்கும் இயந்திரம், 4 மணி நேர வேலையை 41 நிமிடங்களாகக் குறைத்தது.

சமையல் எரிவாயு, மேற்கூறியவற்றைப் போலவே மனித வாழ்வை அதிக உடலுழைப்பு இல்லாமல் எளிதாகப் பணிகளைச் செய்ய உதவியது. சுள்ளிகள், விறகுகள் ஆகியவற்றைச் சேகரிப்பது, தீ மூட்டுவது, அதை வேலை முடியும் வரை அணையாமல் காப்பது, பிறகு அதைச் சுத்தம் செய்வது போன்ற பல வேலைகள் செய்யத் தேவையற்றுப் போய் விட்டது.

மனித வாழ்க்கையை மேம்படுத்திய, குறிப்பாகப் பெண்களின் நேரத்தைக் களவு கொண்ட வேலைச் சுமை குறைந்ததால், அவர்கள், வெளி உலகிற்கு வர முடிந்தது, வேலை பார்த்து சம்பாதிக்க முடிந்தது.

இப்படி இருக்கையில், எப்படி நமக்கு நேரமில்லாமல் போய் விடுகிறது?

இந்தப் புதுமைகளும், புதுத் தொழில் நுட்பங்களும் வாழ்வை எளிதாக்க வந்தவைகளே. விரைவாக வேலைகள் முடிய, நமக்கென்று நேரம் கிடைக்கும் என்ற ஆவலை விதைத்தவையே. இதை தீர்க்கதரிசனமாகக் கண்ட அறிஞர்கள் தான் 2020,2030 களில் மனிதன் மூன்று அல்லது நான்கு மணி நேரம் மட்டுமே உழைப்பான் என்று சொன்னார்கள். ஆனால், நிஜத்தில் அவ்வாறாக இல்லை அல்லவா? என்ன நடந்தது?

தர எதிர்பார்ப்புகள்

தர மேம்பாடு தாரக மந்திரமானது. ஆலிவர் பர்க்மேன் (Oliver Burkeman) தனது  Four Thousand Weeks—Time Management for Mortals என்ற கட்டுரையில் சொல்கிறார்: “அமெரிக்க வரலாற்றியலாளர் ரூத் ஷ்வார்ட்ஸ் கோவான் (Ruth Schwartz Cowan) சுட்டுவதைப் போல, அதிக உடலுழைப்புத் தேவையை, துவைக்கும் இயந்திரம், சமையல் எரிவாயு மற்றும் அடுப்பு, வீட்டினுள்ளே குழாயில் கிடைக்கும் நீர் என்பவை போக்கின என்பதென்னவோ உண்மைதான். ஆனால், எதிர்பார்த்த உபரி நேரம் கிடைக்கவில்லை. ஏனெனில், சமுதாயம் சுத்தத்தின் அளவு கோலை மாற்றிக் கொண்டது. இதனால், நேரசேமிப்பு என்பது அவ்வளவு உதவிகரமாக இல்லை. ஒரு முறையே அணிந்து கொண்ட கணவனின் சட்டைகளை அழுக்கு, கறை போன்றவற்றின் சுவடே இல்லாமல் துவைக்கும் நிலை ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் ஏற்பட்டது. அவர் தன் கணவனை ஆழமாக நேசிக்கிறார் என்று காட்ட அது உதவியது. அந்த எதிர்பார்ப்பும் ஆண்களிடம் இருந்தது.

இப்பொழுதோ, இந்தத் தர நிர்ணயங்கள் பல மாறுதலுக்கு ஆட்பட்டுவிட்டன. அது நாம் சேமிக்கும் நேரத்தைப் பாதிக்கிறது.

எங்கும் அலுவலகம்

நமது முந்தைய தலைமுறையினர், அலுவலக வேலையை வீட்டிற்குக் கொண்டு வரவில்லை. வீட்டிற்கு வேலை முடிந்து ஒரு குடும்பத் தலைவர் அல்லது தலைவி வந்துவிட்டாரென்றால், அவருக்கு தொலை பேசி அழைப்புகள் வராது. 1990கள் வரை அலைபேசிகளும் கிடையாது. அவைகள் முதலில் வந்த போது யானை விலை, குதிரை விலை என இருந்ததால், தங்கள் குடும்பத்திற்கான ஒன்றாகத் தான் தொலைபேசிகள், அலைபேசிகள் செயல்பட்டன. அலுவலக வேலையை முடித்து வீட்டிற்கு வந்தான பிறகு, மறு நாள் தான் அந்த வேலை தொடங்கும். இப்போது அப்படியா?

அலைபேசிகளின் விலை குறைந்தது; தொலை பேசி இணைப்புகள் விரைவாகக் கிடைத்தன. எந்நேரமும் முதலாளிகள் தொடர்பு கொள்ளத் தொடங்கினர். ஈமெயில், குறுஞ்செய்தி போன்றவை தொடக்கத்தில் வரம்பிற்குள் இருந்தன. அழைப்பதற்கும், குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் செலவுகள் செய்ய வேண்டி இருந்தது; ஆனால், ஈ-மெயில் பயன்பாட்டிற்கு வந்த பிறகு யாரும் யாரோடும் எப்போதும் தொடர்பில் இருக்கத் தொடங்கினார்கள். அதுவும் பெரும் நிறுவனங்களில், வெவ்வேறு துறைகளிலிருந்து ஈ மெயில் வந்து குவிந்த வண்ணமிருக்கும். பர்க்மேன் சொல்கிறார்: “இந்த மின் சாதனத் தொடர்புகள் இரு வேறு எல்லைகளைக் கொண்டிருக்கின்றன- எண்ணிக்கையில் அடங்காத முடிவிலிகளாக மின் கடிதங்கள் வரும்- ஆனால், நாம் படித்து, புரிந்து கொண்டு வினையாற்றவோ, அழிக்கவோ செய்ய முடிவது குறுகிய எல்லையில் இருக்கும். உள்ளே வருவது கட்டுப்பாடற்ற மிகுதி- வெளியே செல்வது அத்தகையதானதல்ல. இதையும் மீறி இதில் உங்களைத் ‘திறமை வலைக்குள்’ கொண்டு வருவதில் தான் இதன் வெற்றி அடங்கியுள்ளது. நீங்கள் விரைவாக மின் கடிதங்களுக்கு பதிலளித்தால், நீங்கள் பெறும் கடிதங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இப்போது மின் கடிதங்களின் இடத்தை வாட்ஸப் பிடித்துள்ளது.

விரிந்துள்ள தொழில் நுட்பம், நமது நேரத்தை அதிகமாக எடுத்துக் கொண்டு விடுகிறது. திறன்பேசிகள் கைக்குள் உலகத்தைக் கொண்டு வருவதால், நாமும் புலனம், (Whatsapp) பற்றியம், (Messenger) இயங்கலை, (Online) காயலை, (Skype) படவரி, (instagram) கீச்சகம், (Twitter) வலையொளி, (Youtube) முகநூல், (Facebook) அளாவி (Chat) என்று தாவிக் கொண்டும், மேய்ந்து கொண்டும் இருக்கிறோம். உபரி நேரம் எங்கிருந்து வரும்?

என்னதான் செய்வது?

நேர மேலாண்மை என்னும் அமுதத்தை பலர் தேடுகிறார்கள். கேலிப்பட சித்திரக்காரரும், தத்துவ வாதியுமான ஸ்காட் ஆடம்ஸ் (Scott Adams) ஒரு தீர்வு தருகிறார். “ஏறக்குறைய அனைத்திலும் தோற்றாலும், பெரிய வெற்றியைப் பெறுவது எப்படி?”- சாதாரண வளங்கள் கொண்டுள்ள ஒருவர், நெகிழ்வான அட்டவணையால், செல்வந்தராக மகிழ்வுடன் இருப்பார்; ஆனால், பல வளங்கள் இருந்தாலும், நெகிழும் அட்டவணை இல்லாத பணக்காரர் மகிழ்ச்சியுடன் இருப்பது கடினம். நிம்மதியும், மகிழ்ச்சியும் வேண்டுமென்றால், நம் அட்டவணையைக் கட்டுப்படுத்துவதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். இதை அவர் ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்குகிறார். “நான் இன்று நல்ல உடற்பயிற்சி செய்தேன். அதனால், மனம் அமைதியாக இருக்கிறது. எழுதும் மன நிலைக்கு வந்துள்ளேன். என் பிரிய நாயுடன், சூடான காஃபியுடன், வசதியான நாற்காலியில் அமர்ந்து சிரித்துக் கொண்டு மகிழ்வாக இருக்கிறேன். எழுதுவதும் ஒரு அலுவல் தான். ஆனால், அதில் நான் கட்டுப்படுத்தப்பட்ட அட்டவணையை மேற்கொள்ளவில்லை. நான் ஒன்றை எப்போது செய்ய வேண்டும் என்ற தீர்மானம் என் கையில் இருப்பதால், அலுவல் என்பது ஆனந்தமாகிவிட்டது.

ஆடம்ஸ் மற்றும் நேர மேலாண்மை அறிஞர்கள் சொல்வதெல்லாம் இதுதான்- உங்களுக்கு எதைச் செய்ய விருப்பம் இருக்கிறது? அதைக் கண்டுபிடியுங்கள்; அதை ஒரு நிறுவன வேலையில் சேராமல் செய்யுங்கள்; அப்படியும் நீங்கள் ஒரு நிறுவன வேலையில் இருந்தால், அவர்கள் உங்களை மதிக்க வேண்டும்- உங்கள் நெகிழ்வான அட்டவணை விதிமுறைகளை ஏற்று உங்கள் உழைப்பை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலே சொன்ன தீர்வு சிலருக்கு மட்டுமே பொருந்தும். சுயத் தொழில் அல்லது நம் விதிமுறைகளுக்கேற்ப செயல்படும் வசதிக்கான திறமைகள் அனைவரிடமும் இருக்காது. திறமைகள் இருந்தாலும் இதற்கான மனநிலை வாய்க்காது. கட்டுரையாளர் விவேக் கௌல், (Vivek Kaul) 11 ஆண்டுகளாக சுய எழுத்தாளராக இருந்த போதிலும், அதை இப்போது விரும்பினாலும், கஷ்ட காலங்களில் தான் செய்வது சரிதானா என்று சந்தேகப்பட்டிருக்கிறார். மேலும் நம் வாழ்க்கைச் சூழலும், நிர்ப்பந்தங்களும் நாம் விரும்புவதைத் தேர்வு செய்ய முடியாத நிலைகளைக் கொண்டு வரும். உலகில் சாதாரண வேலைகளும், சாதாரண மனிதர்களும் அதிகம்.

நான் விரும்புவதும், அதற்கான என் செயல்பாடுகளும், எனக்கான நேரத்தைத் தந்து விடும். ஆனால், பலருக்கு இது ஒத்துவரக் கூடிய ஒன்றல்ல. சுய விருப்பத்தின் படி வேலை செய்பவர்களுக்கும் சில சிக்கல்கள் உண்டு- நிரந்தர வருமானமின்மை, வாழ்வில் அமைதலில்லாமல் போவது என அவற்றைச் சொல்லலாம். அத்தகு மனிதரின் சமூக அந்தஸ்தும் ஒரு கேள்விக்குறியாகும்.

சிறந்த நேர நிர்வாகத்திற்காக, தன் பணித்திறனை மேம்படுத்தி நேரத்தைச் சேமிப்பதற்காக, சிலர் சுய உதவி நூல்களைப் படிக்கின்றனர்.

ஸ்டீபென் கோவி (Stephen Covey) என்ற சுய உதவி ஆசான் இதையே தன் தொழிலாகச் செய்தார். பானைக்குள் கற்கள் என்ற ஒரு கேள்வியை தனது ‘ஃபர்ஸ்ட் திங்கஸ் ஃபர்ஸ்ட்’ (First Things First) என்ற நூலில் கேட்டு விளக்கவும் செய்கிறார். ஒரு குடுவையையும், கையளவிலுள்ள கற்களையும் ஒரு பயிற்சியாளர் வகுப்பிற்கு எடுத்து வருகிறார். “இந்தக் குடுவைக்குள் எத்தனை கற்களைப் போட முடியும்?” என்று கேட்டவர் சில கற்களை குடுவையுள் போட்டுவிட்டு வகுப்பைப் பார்த்து குடுவை நிரம்பியுள்ளாதா எனக் கேட்கிறார். ஆம் என்று மாணவர்கள் சொல்கையில், உடைந்த ஜல்லிக் கற்களை அந்தக் குடுவையில் போட்டு குலுக்கி விட்டு, ‘குடுவை நிறைந்துள்ளதா? என்று கேட்கிறார். ‘அப்படிச் சொல்ல முடியாது’ என்று பதில் வருகிறது. பிறகு மணற்துகள்களை அந்தக் குடுவையில் போட்டு “இப்போது?” என்று வினவுகிறார். வகுப்பு ‘இல்லை’ என்று கூட்டாகச் சொல்கிறது. பிறகு அந்தக் குடுவையுள் நீரூற்றி, “இதன் பொருள் என்ன?” என்று கேட்கிறார்.

ஒருவர் சொல்கிறார் “இடைவெளிகள் இருக்கின்றன. அதைக் கண்டுபிடித்துவிட்டால், வாழ்வை மேம்படுத்த முடியும்.”

பயிற்சியாளர் சொல்கிறார் “அதுவல்ல செய்தி. முதலில் அந்தக் கற்களை போடாமல், மற்றப் பொருட்களைப் போட்டிருந்தால், இவ்வளவு கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?”

மிகவும் முக்கியமானவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து செயல் செய்ய வேண்டும் என்பது இதன் குறிப்பு. மற்றவற்றைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த வாதத்திலும் பிழை உண்டு. இது திறன் பேசி, குறைந்த செலவு பிடிக்கும் இணையத் தொடர்பு இவைகளின் வருகைக்கு முன்னரே எழுதப்பட்ட ஒரு நூல். ‘பழையன கழிதல்’ என்ற சொல்லை முடிப்பதற்கு முன்பாகவே புதியன புகுந்து நம் கவனத்தைத் திருடுகின்றனவே.

பர்க்மேன் சொல்கிறார் “ இந்த ஆசிரியர் தன் கருத்திற்கேற்ற வண்ணம், குடுவையினுள் போடப்படக்கூடிய அளவுள்ள கற்களைக் கொண்டு வந்து தன் தத்துவத்தை வரையறுத்துள்ளார். இன்றைய நேர மேலாண்மையில், பெரிய கற்களுக்கு நாம் முன்னுரிமை கொடுக்கத் தவறுவதில்லை; ஆனால், கற்களின் அளவு அதிகம். அதை நாம் குடுவையினுள் இடமுடியாத நிலையில் இருக்கிறோம்.

எதையெதைச் செய்ய வேண்டுமெனப் பட்டியலிட்டு, அதைச் செய்துவிட முடியும் என்று நினைப்பவர்கள் நேரம் எனும் கள்ளன் மறைவாகச் சிரிப்பதை அறிய மாட்டார்கள். செய்ய வேண்டியவை கூடிக் கொண்டே போய், மலைப்புதான் மிஞ்சும். ஆண்டாள் சொல்வதைப் போல் ‘செய்யாதனச் செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்’ என்றிருந்தால் நேரம் கிடைக்கலாம்.

இது நம்மை எங்கே நிறுத்துகிறது?

நேரம் பொன் போன்றது மட்டுமல்ல, ஒவ்வொரு விநாடியும் நழுவிச் சென்று விடுகிறது. அது அரிதான ஒரு பொருள். பர்க்மேன் சொல்கிறார் “நீங்கள் செய்ய எண்ணியவற்றிற்கு ‘வேண்டாம்’ என்று சொல்ல நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் வாழ்வு என்பது ஒரு முறைதான் கிட்டுகிறது. குடுவையின் அளவு மாறவில்லை, ஆனால் பெருங்கற்கள் இருக்கின்றன.” எனவே, செய்ய நினைத்த அனைத்தையும் செய்ய முடியாது என்ற புரிதல் வேண்டும். எதற்கு முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டும் எனவும், அதில், முதலில் செய்ய வேண்டுவது எது எனவும் தெளிவு வேண்டும்.

கீச்சக அலுவலகத்தில் ஒரு பணியாளர் தரையில் படுத்து உறங்கியதையும், பயண நேரத்தைக் குறைத்து உடனடியாகப் பணி செய்ய முடியும் என அதற்கு அவர் விளக்கம் தந்ததையும், அதை மஸ்க் பாராட்டியதையும் உலகம் அறியும். குடும்பம், நண்பர்கள், நல்ல சங்கீதம், நல்ல பொழுது போக்கு, இனிய மாலை நடை அனைத்தையும் காவு வாங்கும் பணம் என்னும் ஆட்சியாளன். நேரம் நம்மை இரு புறமும் பார்க்கச் சொல்கிறது. முக்காலங்களையும் கணக்கில் எடுத்துக் கொள் என்று மௌனமாகப் பேசுகிறது. கனடாவில் ஒரு கணக்காளர் தன் அலுவல் நேரத்தில் காணொளியைப் பார்த்துக் கொண்டிருந்தார் எனவும், அவர் கம்பெனிக்கு $2500 இழப்பீடு தர வேண்டும் எனவும் அவர் பணிபுரியும் நிறுவனம் அறிக்கை அனுப்பியிருக்கிறது, தங்களிடம் பணி செய்பவர்களின் கணினியில் நிறுவனங்கள் ‘இயங்கலை மேற்பார்வை’ எனும் செயலியை பொதித்துள்ளன. 21-ம் நூற்றாண்டின் அடிமை முறை இது. இன்னும் சில நிறுவனங்கள், தங்கள் பணியாளர்கள் ஓய்வறைக்கு எவ்வளவு முறை செல்கிறார்கள், அவர்கள் அங்கே எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு என்பதையெல்லாம் பதியச் சொல்கிறார்கள். அதைச் செய்யாவிட்டால், ஓய்வறையின் கதவு திறக்காது. மூளை வேலைகளோ, உடல் உழைப்புகளோ இடைவெளியற்று செய்யும் போது செயற்திறன் குறையும் என நிறுவனங்கள் அறிவதில்லை.

இந்தியா

இந்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தால், 49%க்கும் அதிகமான கிராமப்புற வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 16/01/2023 அன்று அது வெளியிட்டுள்ள விவரங்கள் பின் வருமாறு

மானிலம்/யூனியன்வீடுகள்(இலட்சத்தில்)குழாய் நீர் இணைப்புசதவீதம்
கோவா2.632.63100
அந்தமான்0.620.62100
தாத்ரா0.850.85100
ஹரியானா30.4130.41100
குஜராத்91.1891.18100
புதுச்சேரி1.151.15100
தெலுங்கானா53.9853.9799.99
பஞ்சாப்34.2534.2499.99
இமாசலம்17.0916.6897.6
பீகார்161.16154.1495.6
சிக்கிம்1.321.0176.6
மணிப்பூர்4.513.4175.6
மிஸோரம்1.330.9873.4
மகாராஷ்ட்ரா146.73106.0172.3
லடாக்0.420.3171.8
உத்திரகாந்த்14.9310.6371.21
அருணாசல்2.211.5569.9
ஆந்திரா95.2064.9668.2
கர்நாடகா100.8360.8960.4
நாகாலந்து3.662.1859.5
தமிழ்நாடு125.573.558.6
ஜம்மு, காஷ்மீர்18.1610.5458
திரிபுரா7.44.357.9
ஒரிஸ்ஸா88.349.656
மத்தியப் பிரதேசம்119.955.846.6
கேரளா70.732.245.6
மேகாலயா6.32.841.8
அஸ்ஸாம்67.22841.8
சட்டீஸ்கர்50.0718.536.9
ராஜஸ்தான்105.332.530.9
மேற்கு வங்காளம்182.453.729.4
ஜார்கண்ட்61.217.728.9
உத்திரப் பிரதேசம்212.771.327.1
லக்ஷதீப்0.100

56.2 கோடி இந்தியர்கள் தங்கள் வீடுகளில் சமையல் எரிவாயுவை பயன்படுத்துகின்றனர்.

ஏறத்தாழ 74% இந்திய மக்களிடம் தொலைபேசி அல்லது அலை பேசி உள்ளது. திறன் பேசி சுமார் 22% இந்தியர்களிடம் உள்ளது.

இந்த மூன்றும், இன்னமும் நீர் கொண்டு வர பல கி மீ நடக்கும் பெண்களையும், சமையல் எரி வாயு பயன்படுத்தாத குடும்பங்களையும், அதே நேரத்தில் பேசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதையும் சொல்கிறது. நாம் வெகு தூரம் செல்ல வேண்டும், மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுதும் நிறைவேற்றுவதற்கு.

பானுமதியின் ஒரு கவிதை இவ்வாறு வரும்:

கால நிழல்
அங்கே பார் முதலை என்றாள். திடுக்கிட கை கொட்டி சிரித்தாள். பயந்தாயா, இப்போது பார் யானை என்றாள்.
யானைக்கும் முதலைக்கும் ஒரே நேரம் முக்தி அவள் பேச்சில்
விரியத் திறந்த கண்களில், மடித்துக் கட்டிய பின்னலில் இவளைப் போல நானிருந்த காலம் நிழலாட நெருஞ்சியாக ஒன்று பூத்தது
இவள் மகள் இவளுக்குக் காட்டும் வரை
நீலவானின் மேகக் கோலங்களை வரும் வருடங்களில் இவள் பார்ப்பாளா?

உசாவி:

https://www.livemint.com/mint-top-newsletter/easynomics11012023.html by Vivek Kaul.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.