நேரம் சரியாக… – 1

clock_Time_Break_Seconds_Alarm_Shatter_Glass_Photo

அது ஒரு வழக்கமான வட அமெரிக்க நாள்.

காலையானதைக் கடிகார அலாரம் அறிவித்ததில் நாள் ஆரம்பமானது. அலுவலகம் கிளம்புவதற்கு இன்னும் 1.5 மணி நேரமே உள்ளது. அதற்குள், செய்ய வேண்டியவை ஏராளம். ஒரு வழியாக, காலை வேலைகளை (அதாவது ஒரு 30 நிமிட தேகப் பயிற்சி, 45 நிமிட காலைக் கடன்கள்,, 15 நிமிட சிற்றுண்டி தயாரிப்பு மற்றும் உண்பது) முடித்து காரை விரட்டி, அலுவலத்திற்கு பயணம்.

முதலில் இந்த சிக்னலை யாராவது சரி செய்ய மாட்டார்களா என்று அலுத்துக் கொள்ளும் அளவிற்கு, 30 செகண்டுகள் எவ்வளவு மெதுவாக நகர்ந்து பச்சையானவுடன், அடுத்த சிக்னலுக்கு விரைய வேண்டும். ஒரு வேளை, சிக்னலில் 30 செகண்டுகள் படிப்படியாகக் குறைவதை காட்டாவிட்டால், அவ்வளவு அலுத்துக் கொள்ள மாட்டோமா?

என்னுடைய அலுவலகப் பயணத்தில் எல்லா வித ஊர்திகளும் உண்டு. முதலில் கார், பிறகு புறநகர் ரயில், கடைசியாக, அலுவலக பஸ். புறநகர் ரயில் நிலையத்தில் காரை நிறுத்திவிட்டு ரயிலுக்காக விரைகையில் வழக்கமாகச் செல்லும் ரயில் (7:37) 7 நிமிடம் தாமதம் என்று அறிவிப்பு. சென்ற தேர்தலில், உள்ளூர் அரசியல்வாதி, புறநகர் ரயில்கள் சரியான நேரத்திற்கு பயணிக்கும் என்று வாக்குறுதி வீசுகையில், 10 நிமிடம் தாமதமாக வந்தால், கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று பெரிதாக அறிவித்தார். புறநகர் ரயில் கம்பெனிகள் 7, 8 அல்லது 9 நிமிட தாமதத்திலேயே, காலத்தைத் தள்ளுகிறார்கள். இதன் விளைவை பயணிகள் தானே அனுபவிக்க வேண்டும். புறநகர் ரயில் பயணம் 30 நிமிடம். மின்புத்தகக் கருவி மூலம் ஒரு பத்து பக்கங்களாவது படித்து விடவேண்டும் என்று பல வருடங்களாக முயன்று, ஓரளவிற்கு நேரத்தோடு வெற்றி அடைந்ததை இங்கே பதிவு செய்ய எண்ணம். இருக்கும் 15 நிமிடத்தில்,. செல்பேசியில், அலுவலக மின்னஞ்சல்களை மேல்வாரியாக (யாரையோ வேலையை விட்டு தூக்கினால், நம்முடைய புதிய வேலைகளை தெரிந்து கொள்ளும் உத்தி) படிக்க ஒரு 7 முதல் 10 நிமிடம். இதற்கிடையில், காதில் இளையராஜா.

அடித்துப் பிடித்து ரயிலை விட்டு அலுவலக பஸ் நிலையத்தை அடைந்தால், வழக்கமான என்னுடைய பஸ்ஸை 3 நிமிட தாமதத்தில் விட வேண்டிய கட்டாயம். அடுத்த பஸ்ஸைப் பிடித்து, அலுவலக கட்டிடத்தை அடைய வழக்கத்தைவிட 12 நிமிட தாமதம். 47 மாடியில் இருக்கும் அலுவலகத்தை அடைய ஒரு மின்தூக்கிப் (elevator) பரீட்சையே எழுத வேண்டும். சில தூக்கிகள் 25 மாடிகள் வரைதான் போகும், இன்னும் சில 40 –துடன் நின்று விடும். கடைசியாக வேண்டிய மின்தூக்கி பட்டனை அழுத்தியவுடன், 47 நொடிகள் கழித்து வந்தது. உள்ளே நுழைந்தால், அங்கு எனக்கு மட்டுமே அவசரம். கதவை மூடும் பட்டனை விரைவாக அழுத்தி, மேலே பயணிக்கக் காத்திருக்கையில், ஓடி வரும் ஒருவருக்காக மின்தூக்கியில் இருந்த ஒரு புண்ணியவான் கதவை திறக்கும் பட்டனை அழுத்தி, மொத்தத்தில் 1 நிமிடம், 57 நொடிகள் விரயம். மின்தூக்கிகளை இன்னும் விரைவாக்க வேண்டும்.

bulova-women-mother-of-pearl-36ct-diamond-strap-watch-Clocks_Wrist_Time

ஒரு வழியாக, அலுவலகத்தை அடைந்து, முதல் மீட்டிங்கிற்கு போவதற்கு முன் ஒரு காப்பி அருந்தினால் என்ன என்று காப்பி மெஷினை அணுகினால், காப்பி உருவாக, மொத்தம் 2 நிமிடம். இந்த காப்பி எந்திரத்தை எப்படியாக இன்னும் வேகப்படுத்த வேண்டும் (ஏன் இத்தனை தண்ணீர் கொதிக்க இத்தனை நொடிகள் தேவை என்ற அடிப்படை பெளதிகம் இடையே வர மறுக்கிறது?). மீட்டிங்கிற்கு சொன்றால், புலோவா கடிகாரம் (Bulova) அணிந்த அந்தப் பெண், நான் 2 நிமிடம் லேட் என்று சொல்லிக் காட்டினாள். என்னுடைய செல்பேசியில் 1 நிமிட தாமதமே என்று மறுத்ததை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அன்றைய மீட்டிங் ஒரு வங்கியுடன். எங்கள் குழு எழுதிய நிரலை (computer program) அலசும் மீட்டிங். 500 ஊழியர்கள் உபயோகிக்கும் நிரல் க்ளிக்கினால், 17 நொடிகள் ஆகிறது என்று வங்கிக்காரர்கள் அழுதார்கள். 10 நொடிகளுக்குள் வேலை செய்ய வேண்டும் என்பதே ஒப்பந்தம் என்று தாளித்து விட்டார்கள். இதைச் செய்ய எத்தனை நாட்களாகும் என்று (7 நொடிகளைக் குறைக்க எத்தனை நாட்கள் – நல்ல கூத்து சார் இது) குடைந்தவுடன் இன்னும் இரண்டு நாட்களில் தீவிர ஆராய்ச்சிக்குப் பின் சொல்கிறோம் என்று ஒரு வழியாகச் சமாளித்தோம். அன்று நாள் முழுவதும் 7 நொடிப் பேச்சுதான். இதை, விஜய் டிவியில் ‘நொடிப் பேச்சு, எங்கள் உயிர் மூச்சு’ என்று சீரியலாகக் கூட போட்டு விடலாம்! முழுக் கட்டமைப்பையும் மாற்றினால் கூட, 3 நொடிகள்தான் குறைக்க முடியும் என்று ஒரு கணினி நிரலர் (programmer?) சொல்ல, மற்றொருவர், என்னால் கட்டமைப்பை மாற்றாமல் 5 நொடிகள் குறைக்க முடியும் – ஆனால், அதற்கு 4 வாரங்கள் தேவை என்றார். 7 நொடிகளைக் குறைக்காவிட்டால் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று மிரட்டிப் பார்த்தார் எங்கள் மேலாளர். அவர் எந்த வகையில் மேல் என்று தெரியவில்லை! எதுவும் பலிக்காததால், அவர், “என்ன செய்வீர்களோ தெரியாது. இன்று இரவு முழுவதும் யோசித்து, காலையில் 9 நொடிக்குள் நிரல் வேலை செய்யும் வழியைக் கண்டுபிடியுங்கள்” என்று சொல்லி விட்டு அடுத்த மீட்டிங்கிற்குச் சென்று விட்டார். அதாவது, 15 மணி நேரத்திற்குள், 8 நொடிகளை குறைக்க வழி வகுக்க வேண்டும். இல்லயேல் நீதிமன்றம்! 10 நொடி நிரல் தேவையை 9 நொடியாக்கி தன்னுடைய அடுத்த பதவி உயர்வையும் பார்த்துக் கொண்டு விட்டார் மேலாளர். எல்லாம் நேரம்தான்

time-Spiral_Cyclical_Sink_Hole_Warp_Infinite_loop_Circles_Going_in_Clocks

மாலையில் பஸ்ஸை பிடித்து புறநகர் ரயில் நிலயத்தில் பழைய நண்பர் ஒருவரை சந்தித்த பொழுது இருவருக்கும் கருத்து வேறுபாடு – சந்தித்து 7 வருடமா அல்லது 5 வருமாகிறதா என்று. ரயிலில் ஏறியவுடன் மனைவி அமேஸானிலிருந்து வந்த ஒரு பொட்டலத்தைக் கூரியர் கம்பெனி சென்று வீடு வரும் வழியில் வாங்கி வருமாறு சொன்னாள். கூரியர்காரர்கள் 9 மணிக்கு மூடுவதற்குள் சென்றுவிடலாம் என்று கணக்கிட்டுக் கொண்டேன். அடுத்த 30 நிமிட ரயில் பயணம், காலத்தைக் கடந்த மொட்ஸார்ட்டின் 40 –வது சிம்ஃபொனிக்கு ஒதுக்க வேண்டும். அப்பொழுது தான் ஆபீஸில் 7 நொடியைக் குறைக்கப் புதிதாக ஏதாவது ஐடியா வரும்! மொஸார்ட் கேட்கையில், இந்த பாடாவதி ரயிலில் தான் இதை கேட்க வேண்டுமா என்று தோன்றியது. போன நான்கு வருடமாக தள்ளிப் போட்டு வரும் அலாஸ்காவில், எந்த அழுத்தமும் இல்லாமல், இதை கேட்டால் மோட்சம்தான் என்று மனசு அலுத்துக் கொண்டது! 7 நொடிகளைக் குறைக்க 300 ஆண்டுகள் பழைய சங்கீதத்தை 30 நிமிடம் கேட்டாலும் மனசு என்னவோ 4 வருடமாக தள்ளிப் போட்ட பயணத்திற்காக ஏங்குகிறது. எல்லாம் நேரம்தான்

ரயிலிலிருந்து காருக்கு வந்து ஜி.பி.எஸ் –ஸில் (இதைப் பற்றி அடுத்த பகுதிகளில் விரிவாகப் பார்ப்போம்) கூரியர் கம்பெனியைத் தேடி ஒரு வழியாக இரவு 8:45 மணிக்கு கூரியரை அடைந்து பொட்டலத்தை வாங்கி வீடு சேருவதற்குள் 9:30 ஆகிவிட்டது. இதன் பிறகு, சாப்பிட்டுப் படுத்தால், அடுத்த நாள் ஓட்டத்திற்கு 6 மணி நேரமே பாக்கி இருக்கும். அதற்குள் 7 நொடி குறையும் வழியை வேறு கண்டுபிடிக்க வேண்டும்.

எல்லாம் நேரம்தான்

(தொடரும்)

3 Replies to “நேரம் சரியாக… – 1”

  1. நன்றாக இருக்கிறது திரு. ரவி நடராஜன் அவர்களே! இது முதல் அத்தியாயம் தான் என்றாலும், வரவிருக்கும் பல அத்தியாயங்களில் சுவாரசியம் மிக்க அறிவியல் செய்திகள்/உண்மைகள் அலசப்படும் என்ற அச்சாரம் முதல் அத்தியாயத்தில் தொக்கி நிற்கிறது. ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் அவற்றை!
    //போன நான்கு வருடமாக தள்ளிப் போட்டு வரும் அலாஸ்காவில், எந்த அழுத்தமும் இல்லாமல்//… இந்த இடம் புரியவில்லை, சார்.
    மேலை நாடுகளில் காலந்தவறாமை/கால தாமதம் எவ்வளவு முக்கியமான விஷயம் என்று புலப்படுகிறது. 7 நிமிடங்கள் ரயில் தாமதம், 7 நொடிகளுக்காக நிரல் உபயோகிப்பாளர்களின் அழுத்தம் இவையல்லாம் மேலை நாட்டுச் சூழலை நன்கு விளக்குகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.