வாக்குமூலம் – அத்தியாயம் 5

அவள்

“முடிஞ்சா கூட ஒண்ணோ, ரெண்டோ கூடத் தேர்ந்தெடுக்கலாம்னா, ஒரு ஆம்பள ரெண்டு, மூணு பொண்டாட்டி கட்டிக்கிட முடியுமா?” இப்படி நான் கேட்டதுக்கு ரவியோட அப்பா, “ராமாயணத்துல தசரதருக்கு நாலு பொண்டாட்டி இல்லையா, கிருஷ்ணருக்கு, முருகனுக்கெல்லாம் ரெண்டு பொண்டாட்டிதானே?”ன்னு குறுக்குக் கேள்வி கேக்கறாங்க.

“அப்போ நீங்க எத்தனை பொண்டாட்டி வச்சிருக்கீக?”ன்னு கேட்டேன்.

“என்னை மாதிரி ஏகபத்தினி விரதனா எவன் இருப்பான்?”

“ஏன் ஒங்க அப்பா, தாத்தா… எங்க அப்பா, தாத்தா எல்லாம் பல பொம்பளைகளைக் கட்டிக்கிட்டவங்களா?”

“கடவுளே ரெண்டு பொண்டாட்டி கட்டியிருக்கிறப்போ மனுஷன் அப்பிடி இருந்துட்டா என்ன தப்புன்னு கேக்கறேன்?”

“அப்பம் ஒரு பொம்பள பல புருஷங்க கூட வாழ்ந்தா தப்பில்லையா?”

“மகாபாரதக் கதையிலே பாஞ்சாலி அப்படி இருந்திருக்காளே. அஞ்சு பேருக்குப் பொண்டாட்டியா அவ வாழலையா?”

“அதெல்லாம் கதை, கற்பனை. ஆணோ, பொண்ணோ ஒண்ணுக்கு மேல ஒண்ணுன்னு வச்சுக்கிட்டா கொழப்பம் வரும். சீக்கும் வரும்.”

ரவியோட அப்பா சிரிச்சாங்க. எனக்கு காவேரி அத்தையோட ஞாபகம்தான் வந்துச்சு. காவேரி அத்தை வீட்டு மாமா வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோவில் தெருவுல இன்னொரு குடும்பம் வச்சிருந்தாங்க. காவேரி அத்தை மூக்கும் முளியுமா நல்லாத்தான் இருப்பா. சமையல் எல்லாம் நல்லா பண்ணுவா. மாமாவுக்குத் தொண்டர் சன்னதியில் புரோக்கர் வேலை. வத்தல், வெங்காயம், சிமெண்ட் இன்னதுன்னு இல்ல. எல்லாத்தையும் லாரி பிடிச்சி வெளியூருக்கு அனுப்புவா மாமா. அதுல கமிஷன் கெடைக்கும். அத்தை – மாமாவுக்கு ஆண் ஒண்ணு பொண்ணு ஒண்ணுன்னு ரெண்டு பிள்ளைக. காவேரி அத்தையைக் குத்தம் சொல்ல முடியாது. கட்டாத்தான் குடும்பம் நடத்துனா.

தொண்டர் சன்னதியில மாமாவோட கமிஷன் கடைக்கிப் பக்கத்துல இருந்த டெய்லர் கடைக்கி வரப்போக இருந்த ஒரு மலையாளத்துக்காரி, மாமாவ எப்பிடியோ வளைச்சுப் போட்டுட்டா. வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோவில் தெருவுல தனி வீடு எடுத்து அவளைக் குடி வச்சிட்டா மாமா. பல வருஷமா போக்குவரத்து இருந்திருக்கு. மூணு நாலு வருஷங் கழிச்சு அந்தத் தெருவுல வீட்டு வேல பாக்குற சம்முகம் சொல்லித்தான் அத்தைக்கி சமாச்சாரம் தெரியும். “லாரி லோடு ஏத்துதேன், லோடு ஏத்துதேன்”ன்னு மாமா பல நாள் வீட்டுக்கே வாரதில்லை. விஷயம் தெரிஞ்ச பொறவு அத்தை தொண்டர் சன்னதிக்கே போயி மாமாகிட்டே சண்டை போட்டா. பக்கத்துல பேட்டை ராவுத்தரோட கமிஷன் மண்டி. ராவுத்தர், “நீ வூட்டுக்குப் போம்மா… நான் அவெங் கிட்டே வெசாரிக்கேன். பொம்பளப் புள்ள கடத் தெருவுல வந்து சத்தம் போட்டா நாலு பேரு என்ன நெனப்பாவ?” என்று சமாதானம் பண்ணி அத்தைய அனுப்பி வச்சாரு.

அதுக்கப்புறமும் மாமா வீட்டுக்கு வரலைன்னதும், அத்தை வீட்டைப் பூட்டி, வளவுல இருந்த கார்சேரி ஆச்சி கிட்டச் சாவியக் குடுத்துட்டு, பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு அவ அப்பா வீட்டுக்கு, பசுவந்தனைக்கிப் போயிட்டா. இன்னொருத்தி வந்து உள்ள புகுந்ததால குடும்பமே நாசமாப் போச்சு.

ஆம்பளைகளே கொஞ்சம் சபலம் உள்ளவங்கதான். திருநவேலியில வயக் காட்டையும், கடை கண்ணிகளையும் விட்டா வேற தொழில் ஏது? திருநவேலிப் பிள்ளமாருங்களுக்கு வயலும், வீடும் இருக்கும். ரொம்ப நொடிச்சுப் போன ஆட்கள், கடைகள்ள வேலை பாத்துக் காலத்த ஓட்டுவாங்க. வயலு, வீடுன்னு வசதியா இருக்கிறவங்க மலையாளத்துக்காரிகளோட தொடுப்பு வச்சுக்கிடுவாங்க. மலையாளத்துப் பொம்பளைக எல்லாம் மோசம்ன்னு அர்த்தமில்ல. எங்க சம்பந்த மூர்த்தி கோயில் தெருவுல இருந்த பங்கஜத்து அக்காவுக்கு மலையாளந்தான். புனலூரு. அந்த அக்காவோட புருஷன் முனிஸிபாலிட்டியில இன்ஸ்பெக்டரா வேலை பார்த்தாரு.

புருஷன், பொஞ்சாதி ரெண்டு பேருமே தங்கமான ஆளுங்க. பங்கஜத்தக்கா கூட பாப்புலர் டாக்கீசிலே எத்தனையோ சினிமா பார்த்திருக்கேன். மலையாள சினிமாப் பாட்டெல்லாம் அக்கா அழகாப் பாடுவா.

ஆனா சொக்கலிங்க முடுக்குத் தெரு, கனகராய முடுக்குத் தெருவுல இருந்த மலையாளப் பொம்பளைக எல்லாம் மோசம்னு தாயம்மக்கா தான் சொல்லுவா. “அப்பிடியே தெருவுல போற ஆம்பளைகளை இழுத்து வீட்டுக்குள்ள கூப்புட்டு கதவச் சாத்திக்கிடுவாளுவோ”னு தாயம்மக்கா சொல்லுவா. அவளுக கிட்ட பணத்த வாரி இறைச்சு நடுத் தெருவுக்கு வந்த ஆட்கள் நெறையன்னு தாயம்மக்கா சொல்லுவா.

பொம்பளைகளுக்குப் பொழைக்கவா வழியில்ல? பீடி சுத்திப் பொழைக்கலாம். இட்லி வித்து, நாலு வீட்டுல வேல பாத்துப் பொழைக்கலாம். ஆம்பளைகளைக் கெடுத்துத்தான் உயிர் வாழணும்னு இல்ல. எங்க அத்தைக்கு, ரவி அப்பாவோட அம்மாவுக்கு சினிமாவுல நடிக்கிற பொம்பளைகளைப் புடிக்காது. கண்டவங்களையும் தொட்டு நடிக்கிறாளுங்க.

எவன் எவன் கூடயோ பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடுதாளுவோ… ச்சி… அப்பிடிம்பாங்க. ரவியோட அப்பா கூட வேலை பார்க்கிற பெண்கள் வீட்டுக்கு வந்தால், அத்தை எந்திரிச்சு வீட்டுக்குள்ள போயிருவாங்க. கீதா தடிதடியா இங்லீஷ் புத்தகங்கள் படிக்கிறதெல்லாம் அத்தைக்குப் புடிக்காது. எதுக்கு கீதா இம்புட்டும் படிக்கணும்னே கேப்பாங்க. “நாளைக்கி ஒருத்தன் வீட்டுல போயி சமச்சு, சட்டி சொரண்டப் போறதுக்கு எதுக்கு இம்புட்டுப் பணத்தச் செலவளிச்சுப் படிக்கணும்”ன்னு அத்தை சொல்வாங்க. இதைக் கேக்கதுக்கு ஒரு மாதிரியா இருந்தாலும், அதுதான நெஜம்? என்ன படிப்புப் படிச்சாலும், கடைசியிலே அடுப்படிதானே பொகலிடம். பெரிய அம்பானி மாதிரி பணக்கார வீட்டுல வேணும்னா எல்லா வேலைக்கும் ஆள் இருக்கும். நம்மள மாதிரி ஆட்களுக்கு, நம்ம வீட்டுப் பொம்பளப் பிள்ளைகளுக்கு அடுப்படிதான கதி. சமையல், துணி துவைக்கிறது, வீடு பெருக்குறது, பாத்திரங் கழுவுதது இதுதான வேலை. அத்தை சொல்லுதது சரிதான்னு தோணும்.

ஆனா, ரவியோட அப்பா அத்தையை, கன்ஸர்வேட்டிவ் அப்படிம்பாங்க. பியூடல் மனப்பான்மைம்பாங்க. “கீதா படிச்சு, வேலைக்குப் போனா வீட்டு வேலைக்கு ஆள் வச்சுக்கிட முடியாதா? இப்பதான் எல்லாத்துக்கும் மிஷின் வந்துட்டுதே. பாத்திரங் கழுவ, வீடு பெருக்க எல்லாம் கூட மிஷின் இருக்கு. எங்க அம்மா அவ காலத்துல சட்டி கழுவி, வீட்டைத் தூத்துப் பெருக்கினதையே நெனச்சுக்கிட்டு இருக்கா… நீ என்ன இப்பம் அம்மியிலயா அறைக்கிறே? கையாலேயா துணி துவைக்கிறே? பொம்பளைகளோட வேலையத்தான் மிஷின் செஞ்சு, வேலையச் சுளுவாக்கிட்டுதே… பெறவு என்ன?”ன்னு இவங்க சொல்லுததும் சரின்னுதான் தோணும். “ஆனா மிசினுக்குக் கொளம்பு வைக்க, பொரியல், கூட்டு வைக்கத் தெரியாதே”ன்னு கேப்பேன். “அதை மிஷின் பண்ணுனா நல்லா இருக்காது”ன்னு ஒத்துக்கிடுவாங்க.

இப்பிடியெல்லாம் இவங்க சொன்னாலும் அம்மியில அறைச்சு கொழம்பு வச்சா இவங்களுக்கு ரொம்பப் புடிக்கும். இவங்கள மாதிரி நெறைய ஆம்பளைகளுக்கு மிக்ஸியிலே அறைக்காம சமையல் பண்ணினா பிடிக்கத்தான் செய்யிது. நானாவது இன்னைக்கும் இந்த மெட்ராஸ் ஊர்ல அம்மி வாங்கி வீட்டுல வச்சிருக்கேன். இந்தக் காலத்துல யார் வீட்டுல அம்மியும், மாவு ஆட்டுற ஆட்டுரலும் இருக்குது? என் வீட்டிலே அம்மிதான் இருக்கு. ஆட்டு உரல் இல்லை. ஆட்டு உரல்ல தோசைக்கு அறைச்சு, எல்லாருக்கும் இட்லி அவிச்சு, தோசை சுட்டுக் குடுக்கணும்னு எனக்கு ஆசைதான். ஆட்டு உரல் வாங்கினா அந்தக் குழவியை இழுத்துச் சுத்தி ஆட்ட முடியுமான்னு தெரியலை. டாக்டருங்க என்ன சொல்றாங்க? பொம்பளைங்க அம்மி, ஆட்டுரல் அறைக்கிறது, கையால் அடிச்சுத் துவைக்கிறதை எல்லாம் விட்ட பிறகுதான் தோள்வலி, கைவலி எல்லாம் வர ஆரம்பிச்சுதுன்னு டாக்டர் சொல்றாரு.

இப்போ என்னென்னமோ வலி நிவாரண மாத்திரை, தைலங்கள் வந்திருக்கு. எங்க பாத்தாலும் பிஸியோ தெரப்பி சென்டர்கள். ஏகப்பட்ட மருந்து, மாத்திரைகள். தெருவுக்கு நாலு மருந்துக் கடை. கிளினிக்குகள். எங்கே பார்த்தாலும் கூட்டம். டாக்டரப் பாக்கணுன்னா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கணுமாம்.

திருநவேலியில தெப்பக்கொளத் தெருவுல சுப்ரமணிய ஐயர்ன்னு ஒரு டாக்டர். அவரை விட்டா தேரடியிலே நாயுடு டாக்டர். பேறு காலத்துக்கு கிட்டி ஜோசப். அவ்வளவு பெரிய ஊருக்கு இவங்க மூணு பேருதான் டாக்டர், டவுன் ஆர்ச் பக்கத்துல ராமய்யர்ன்னு ஒருத்தர் உண்டு. இப்பம் எங்கே பார்த்தாலும் கிளினிக். பெரிய பெரிய ஆஸ்பத்திரிகள். உலகம் எங்க போகுதுன்னே தெரியலை. இதெல்லாம் நல்லதுக்கா, கெடுதலுக்கான்னு தெரியலை.

ஊருக்கு ரயில்ல போகும்போது, ரெண்டு பக்கமும் எங்க பார்த்தாலும் நீர்க்கருவை மரமா வளந்து கெடக்க மாதிரில்லா, ஊர் பூரா கிளினிக்களா, ஆஸ்பத்திரிகளா ஆயிப் போச்சு. என்னத்தைச் சொல்லுதது?

Series Navigation<< வாக்குமூலம் – அத்தியாயம் 4வாக்குமூலம் – அத்தியாயம் 6 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.