ஏ பெண்ணே

This entry is part 1 of 10 in the series ஏ பெண்ணே

தமிழில்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

இந்தியில் மூல நாவலை எழுதியவர் கிருஷ்ணா ஸோப்தி . இவர் ஹிந்திமொழியில், நாவல்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். ‘ஜிந்தகி நாமா” என்கிற புதினத்துக்காக, 1970 இல், சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இந்திய இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் வகையில், 2017 இல் இவருக்கு ஞான பீட விருது வழங்கப்பட்டது.

1966 இல் எழுதப்பட்ட “மித்ரோன் மர்ஜானி” என்கிற நாவல் வாயிலாக இவர் பரவலாக அறியப்பட்டார். 1999ல் வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான கதா சூடாமணியின் முதல் விருதையும் பெற்றார். இவரது படைப்புகள் பல்வேறு இந்திய மற்றும் உலக மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி 1925இல் ஒன்றுபட்ட இந்தியாவின் குஜராத் (பஞ்சாப்) மாநிலத்தில் பிறந்த இவர், தனது 93வது வயதில் (ஜனவரி 2019) புதுதில்லியில் காலமானார்.

தற்போது மொழிபெயர்ப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவரது குறுநாவல் “ஏ லட்கீ” ( ஏ பெண்ணே) தாய் மகளுக்கிடையே இருக்கும் அழகான உறவின், நழுவிச் செல்லும் ஆழங்களைக் கண்டடைய முயற்சிக்கிறது. பொதுவாக, உலகெங்கிலும், தாய்மார்கள், தங்கள் மகள்களுக்காக பரம்பரை நகைகள் மற்றும் உடைகளோடு கூட, பரம்பரை கதைகளையும் விட்டுச் செல்கின்றார்கள். மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் தாய், விரிந்து கிடக்கும் தன் மொத்த வாழ்க்கையின் கதையையும் மகளுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறார். நிகழ்வுகளும், நினைவுகளும், படிமங்களும், சித்திரங்களும் நிறைந்த தனது வாழ்க்கை பாதையை, தனது கடைசி மூச்சுக்குமுன் மகளுடன் பகிர்த் துடிக்கிறார்.

நெருங்கிக்கொண்டிருக்கும் மரணம் குறித்த பயம் இல்லை அவருக்கு. எனினும், சன்னியாசி மனநிலை வாய்த்த வரும் அல்ல. தன் எல்லாக் குறை நிறைகளோடும், தான் வாழ்ந்த வாழ்க்கையை, அவர் மீண்டும் நினைவு கூர்கிறார்.

கிருஷ்ணா சோப்தியின் இக்குறு நாவலின் மையப் பாத்திரமான அம்மா, முதுமையையும் நோயையும் ஆரத் தழுவிக் கொண்டு சோர்ந்து கிடக்காமல், அவற்றை ஒரே வீச்சில், ஒதுக்கிவைத்து, மீதமிருக்கும் நாட்களை தன் விருப்பப்படி வாழ முயல்கிறார்.

தாயிடமிருந்து முழு குடும்பம், உற்றார், உறவினர், அனுபவங்கள், நினைவுகள் போன்றவற்றை அறியத் துடிக்கும் மகளின் பாத்திரமும் வசீகரமானது.

தாய்-மகள் உறவு வெறும் இரத்தத்தாலும் சதையாலும் ஆனதல்ல. தாய், மகளைத் தன் நீட்சியாகவே பார்க்கிறாள். ஆனால் இருவரும் வெவ்வேறாக இயங்க வேண்டி இருப்பது உலக நியதி. இக் குறுநாவலில் வரும் தாயும், மகள் தன்னிலிருந்து வேறுபட்டு நிற்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்கிறார். பலமுறை மகளில் தன்னையும் காண்கிறார்.

இந்நாவலில் தாய் மகள் உறவு இடம் மாறி இருக்கின்றன. ஆதரவு கோரும் தாய், மகளாகவும், பொறுப்போடு பாதுகாக்கும் மகள், தாயாகவும்.

இருவருக்குமிடையே கண்ணுக்குப் புலப்படாத மாய இழையொன்று, அவர்களை இணைத்துப் பிணைக்கிறது.

பூக்கடையில் மேலே தொங்கிக் கொண்டிருக்கும் வண்ணவண்ண நூல்களையும் ஜரிகை இழைகளையும் கோர்த்து, பூ கட்டுபவர் மனமும் வண்ணங்களும்ம் நிறைந்த மாலையைக் கட்டுவது போல, இந்நாவலில் வரும் தாயும், தன் நினைவுகளிலிருந்து, சரிகையை இழுத்து, மாலை கட்ட முயற்சித்து அம்முயற்சியில் பெரும் வெற்றியும் பெறுகிறார்.

வாருங்கள். நாவலுக்குள்ளே நுழையலாம்.

அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

ஏ பெண்ணே – அத்தியாயம் – 1

– ஏ பெண்ணே, ஏன் இந்த அறையை இருட்டாக்கி வைத்திருக்கிறாய்? மின்சார கட்டணத்தை குறைப்பதற்காக வா? உண்மையிலேயே அப்படியொரு மோசமான நிலைமை வந்து விட்டதா!

– அம்மா, வீட்டின் எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டுதானிருக்கின்றன. டேபிள் லேம்ப் உட்பட.

– அப்படியானால் என்னை சுற்றி இருக்கும் வெளிச்சத்தை நான் இருட்டென சொல்ல ஆரம்பித்து விட்டேனா! இல்லை. இல்லை. இன்னமும் என் புலன்களெல்லாம் சரியாகத்தான் வேலை செய்து கொண்டிருக்கின்றன. இருட்டு அறையில் வெள்ளி பாம்பு உன் கண்களுக்கு மட்டும் தெரியும் என்றால், அது வேறு விஷயம்!

ஏன் மௌனமா கிவிட்டாய்? வாயைத் திறந்து பேச பயமா? போதாததற்கு, இந்த சூசனின் கண்களும் கூட ஊமையாகி விட்டன.என்னதான் குறை உங்களுக்கு?

– நிம்மதியாக இருங்கள் அம்மா. உங்களுக்கு நோயினால் ஏற்படுகிற கஷ்டம் போதாதா?

– நீ சரியாகத்தான் சொல்கிறாய். ஆனால் நான் நோயை என் னுள்ளே நுழைய அனுமதிக்கவில்லை என்பதை ஞாபகம் வைத்துக் கொள். விட்டிருந்தால் இதற்குள் எல்லாவற்றையும் வழித்து சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கும்.அது சரி, நீ ஏன் நீலப் பறவையைப் போல சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்?

– அம்மா!

– என் வீட்டு வாயிற் கதவின் சங்கிலிகள் திறந்து விட்டன. கதவைத் தட்டும் சத்தம் கேட்ப தற்கு முன்பாகவே நான் வெளியே சென்றிருக்க வேண்டும்! ஆனால், நான்தான் பிடிவாதமாக நின்று கொண்டிருக்கிறேன் பெண்ணே! வியாதி வெக்கை தான் மனிதனின் மிகப்பெரிய எதிரிகள்! உடலையும் மனதையும், குயவன் சக்கரத்தை சுழற்றி மண்பானையை வனைந்து எடுப்பதைப்போல சுழற்றி விடும். உடலுக்கும் மனதுக்கும் இடையேயான உறவை சுக்குநூறாக உடைத்து போடும். ஏன், உடலுக்கே உரித்தான இயற்கையான மணத்தைக் கூட அவை விட்டு வைப்பதில்லை. மருந்துகள் ரத்தத்தில் கலக்கும்போது, உடல் காய்ந்த சருகைப் போல இளைத்து விடுகிறது. என் தலைக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறதென்று எனக்கே தெரியவில்லை.

பெண்ணே, இந்த அறை முழுக்க யாரோ நோயைத் தெளித்துவிட்டி ருப்பதைப்போல நோய் வாசம் அடிக்கிறது. முன்பு நான் செய்திருந்த ஏற்பாடுகளெ ல்லாம் இப்போது காணாமல் போய்விட்டிருக்கின்றன.

– ஊதுபத்தி ஏற்றி வைக்கட்டுமா அம்மா?

– வேண்டாம். உன் புத்திக்கு என்ன கேடு வந்தது? இது நோயாளியின் அறை. பூஜை அறையா என்ன? வேண்டுமானால், பூச்சாடியில் பூக்களை வை. மணம் வீசிக் கொண்டிருக்கட்டும்.

எங்கே பார்த்தேன் பெரிய பெரிய ரோஜாப் பூக்களை? ஞாபகம் வரவில்லை.என் மூளையும் சுருங்கிக் காய்ந்து உதிர ஆரம்பித்து விட்டதா என்ன?

– அம்மா, இது ஒன்றும் கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை. பூக்களை நாம் தினமும் தான் பார்த்துக் கொண்டி ருக்கிறோம். எந்த இடத்தில் எந்தப் பூவை பார்த்தோம் என்றெல்லாம் நினைவு வைத்திருக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை.

– மருந்து உள்ளுக்குள் ஏதோ களேபரம் செய்து கொண்டிருக்கிறது. எனக்குத் தான் ஏதேதோ குழப்பம். ஆனால் நீ ஏன் இப்படி மாறிவிட்டாய் பெண்ணே? உன்னுடைய குரல், பழைய மாதிரி இல்லை. மென்மை குறைந்து கொண்டே வருகிறது.

– அம்மா, குடிக்க ஜில்லென்று ஏதாவது கொண்டு வரட்டுமா?

– சாமர்த்தியமாக பேச்சை மாற்றி விட்டாய் பார்த்தாயா? சரி, போகட்டும். உன் களஞ்சியத்தில் என்ன இருக்கிறதோ அதைக் கொடு.

-நான் சொல்வதைக் கேள் பெண்ணே! இப்போது நமக்கிடையே இருக்கும் உறவு மாறிவிட்டது. மகளாக இருந்தபோதிலும், நீ எனக்குத் தாயாக இருக்கிறாய். ஆனால் நானோ…சரி…என்னை விடு..

– என்னுடைய நோயாளி இருக்கிறானே…

– யார் அம்மா அது?

– அதான் அந்த டாக்டர்

(அம்மா சிரிக்கிறார்)

-எனக்கு என்ன வியாதி என்று எனக்கு தெரியும். ஆனால் அவனுக்கு தான் ஒன்றும் தெரிவதில்லை. உடலிலிருந்து உயிர் ஏதேனும் ஒரு சாக்கு சொல்லிவிட்டுத்தானே பிரிய வேண்டும்?

(அம்மா கண்ணயர்கிறார்)

(தொலைபேசி ஒலிக்கிறது)

அம்மா, துணுக்குற்று எழுந்து –

– யாருடைய ஃபோன்?

-சிற்றப்பாவிடமிருந்து

“தெளிவாகச் சொல் பெண்ணே, என்னுடைய சிற்றப்பாவா, உன்னுடைய சிற்றப்பாவா?”

– என் சின்ன சிற்றப்பாதான் அழைத்திருந்தார்.

– என்னுடைய கொழுந்தன் தானே? என்னிடம் பேச வைத்திருக்கலாமே? இப்போது அவன் உனக்கு மட்டும் சித்தப்பா. எனக்கு கொழுந்தன் இல் லையோ? நான் ஏதோ அந்நியம் போலப் பேசுகிறாய். இன்னும் நான் உயிரோடுதான் இருக்கிறேன்!

– உங்கள் உடல்நிலையை பற்றி தான்

சிற்றப்பா விசாரித்தார்.

என் உடல்நிலை குறித்து எதுவும் பெரிதுபடுத்திக் கூறவிடவில்லை தானே. நான் திருமணமாகி வந்த போது அவன் சிறுவன். நாலைந்து வயதிருக்கலாம். யாரோ ஒரு குறும்புக்கார பெண், அவனை என் மடியில் உட்கார வைத்து விட்டு போய் விட்டாள்.

– உங்களுக்கு வெட்கமாக இருந்ததா?

-நான் புது மணப்பெண். ஆனால் அவனோ குழந்தை. என் சின்னஞ்சிறு கொழுந்தன். நான் அவனை கட்டி அணைத்து முத்தமிட்டேன். மிக அழகான தருணம் அது! அதைப்பார்த்து, கூடியிருந்த அக்கம்பக்கத்து பெண்களும், வயதான பெண்களும் சிரித்தார்கள். எல்லோரும் கொண்டுவந்திருந்த பரிசுகளால் என் மடி நிரம்பியிருந்தது.. தேங்காய், பாதாம் பருப்பு, உலர்ந்த பேரிச்சம்பழம். வயதான நோயாளிகள் எப்படி இருக்கிறார்கள் என்று வாரத்திற்கு ஒரு முறை கேட்டால் கூடப் போதுமானது! நான் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடுதான் இருப்பேன்.

உழைத்துப் பாடுபட்டு சம்பாதித்த உடல். கரைவதற்கு நாள் பிடிக்கும். பெண்ணே, நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டி ருக்கிறாய் தானே?

– ஆமாம் அம்மா.

– பெண்ணே வயதானவர்களுக்கு, அடுத்தவர் மனதில் இடமிருப்பதில்லை. வீட்டிலும் இடம் இருப்பதில்லை. நான் இந்த முழு அறையையும் ஆக்கிரமித்திருக்கிறேன். நான் போன பிறகு, இங்கு விரிப்பை விரித்து உன் சங்கீதக் கருவிகளை வைத்துக்கொள்.

– அம்மா இப்படியெல்லாம் பேசுவது தேவைதானா?

– ஒன்றுமில்லை. ஏதோ புலம்பிக் கொண்டிருக்கிறேன்.

என் கடைசி நாட்களில், நீ என்னை கரையேற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டாய். நல்ல காரியம் செய்தாய். நான் உனக்குத் தாயாகி முலைப்பால் தருவதும், நீ என் மகளாக அதை பருகுவதும் விதித்திருந்தது.

பெண்ணே, இந்தப் பிணைப்பு, வெறும் எலும்பாலும் சதையாலுமா னதல்ல. ஒருவரோடொருவரை இறுகப் பிணைத்துக் கோர்க்கப்பட்ட பந்தம். ஆனால், நீ ஏன் எண்ணிலிருந்து வித்யாசமாக இருக்கிறாய் என்று எனக்கு தெரியவில்லை!

ஏன் எழுந்து விட்டாய்? இங்கே என்னருகேயே உட்கார்ந்திரேன் கொஞ்ச நேரம்.

(அம்மா கண்ணயர்கிறார்)

கோழித் தூக்கத்திலிருந்து எழுந்து….

கொஞ்சம் தூங்கி விட்டேன் போலிருக்கிறது. கண்களுக்கெ திரே உன் பாட்டியின் முகம் நிழலாடிக் கொண்டிருந்தது. எவ்வளவு வருடங்களுக்கு பிறகு அம்மா என் கனவில் வருகிறாள். அதே பாசிப் பச்சை நிற ஆடையில், மேலாடையிலிருந்து வெளியே தெரியும் முலைகளுடன்.

(அம்மா லேசாக சிரிக்கிறாள்)

நான் கண்டு கொண்டிருப்பதென்னவோ கனவுதான். ஆனாலும், இன்னும் கொஞ்சம் பால் குடித்தி ருக்கலாமே என மனதில் எண்ணிக்கொள்கிறேன். நான் குழந்தையாக இருக்கும்போதே, எனக்கு அடுத்த தங்கை பிறந்துவிட்டாள். அம்மா தங்கைக்கு பால் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஏக்கமாக இருக்கும். கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரு நாள் அம்மா கேட்டே விட்டாள் – என்னடி பெண்ணே, அப்படி என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்? நீ குழந்தையாக இருந்தபோது நீயுந்தான் என் மடியில் படுத்து பால் குடிப்பாய். நான் அம்மாவிடம் ஒரே ஒருமுறை பால் குடிக்கட்டுமா என்று கேட்டேன். என் பேச்சை கேட்ட அம்மாவுக்கு கோபம் வரவில்லை. என் மோவாயைப் பிடித்துக்கொண்டே, இதோ பார் முன்னி, தாய்ப்பால் ஒருமுறை விட்டு போய்விட்டதென்றால் மறுபடியும் குடிக்க முடியாது. இப்போது இது உன் தங்கையின் பங்கைச் சேர்ந்தது. இதைப் பார்த்து நீ ஏங்கக் கூடாது. இது இயற்கை நியதி. பெரியவளான பிறகு எல்லாவற்றையும் நீயே புரிந்துகொள்வாய் என்றாள்.

தங்கையை மடியில் கிடத்தி அம்மா பால் கொடுத்துக் கொண்டிருந்தது இன்று தான் போலிருக்கிறது. குழந்தையை மார்போடணைத்து பால் கொடுக்கும்போது, மூவுலகும் அமிர்தத்தில் மூழ்கியது போல இருக்கும். ஆம், தாயார் சத்தான உணவு சாப்பிடவேண்டும். குழந்தை அனைத்தையும் உறிஞ்சிக்கொள்ளும்.

திடீரென மகளை உற்றுப் பார்த்தவாறே-

இந்த அதிசயத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியப்போகிறது! இதைப் பற்றிய விவரங்கள் புத்தகங்களில் கிடைக்காது. சுவரை வெறுமனே பார்த்துக் கொண்டு நின்றால் படம் வரைந்து விட முடியுமா? அப்படி முடியும் என்றால், நீ என்னென்னவெல்லாமோ சாதித்தி ருப்பாயே. பருத்தி செடியில் ஆப்பிள் காய்க்க முடியுமா பெண்ணே?

(மகள் கோபத்துடன் எழுந்து நின்று கொள்கிறாள்)

நான் ஒன்றும் உன்னை குத்திக் காட்டுவதற்காக இதையெல்லாம் சொல்லவில்லை. உன் தோழிகள் கூடத்தான் இம்மாதிரி பேசுவார்கள், இல்லையா?

நான் யாரிடமும் இம்மாதிரியான விஷயங்களை ஒரு போதும் பேசுவதும் இல்லை, கேட்பதும் இல்லை.

எப்படி கேட்பாய்? வெறுந் தரையில் தானே நின்று கொண்டிருக்கிறாய்? இங்கிருந்து எனக்கு ஒன்றும் தெரியவில்லை. உனக்கு ஏதேனும் தெரிகிறதா?

(மகள் கோபத்துடன் அறையை விட்டு வெளியேறுகிறாள்)

அம்மா, தனக்குத் தானே –

ஆதியில் மனிதன் படைக்கிறான். சேர்த்து வைக்கிறான். இது என்னுடையது. இதுவும் என்னுடையது. பிறகு மெல்ல மெல்ல பிடி தளர்கிறது. மூடிய கை திறக்கிறது. எல்லாம் வெளியே நழுவ ஆரம்பிக்கிறது. உடல் என்பது ஒரு ஆடையைப் போன்றது. முதலில் இந்த உலகத்தில் பிறந்தோம். ஆடையைக் கழற்றிவிட்டால் பரலோகம். பர லோகம். அடுத்தவர்களின் உலகம். நம்முடையது இல்லை. இந்த பிரம்மாண்டத்தில் எத்தனை கிரகங்கள், நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ. சில உயிர் வாழ்பவர்களுடையவை. சில இறந்தவர்களுடையவை. சில என்னைப் போன்ற வியாதிக்காரர்களுக்கானவை. சூசன், நான் சொல்வதை கவனமாகக் கேள். முதுமை மனிதனின் எல்லா மான மரியாதையையும் கௌரவத்தையும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு விடுகிறது. இது எல்லா முதியவர்களுக்குமே மிகவும் கடினமானத தான்.

(தனக்குள்ளேயே முணுமுணுத்தபடி)

ஆபரேஷன்… டாக்டர்… மருந்து… மாத்திரை…

பேன்டேஜ்… இன்ஜக்ஷன்… க்ளுகோஸ்… ஆக்சிஜன்… டாக்டர் உடலை பரிசோதிக்கிறார். ஆயிரமாயிரம் ஊசிகளைக் குத்துகிறார். இந்த உடலில் இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது. வெறும் குரல் மட்டும் தான் மீதி. கூரையை வெறித்துக் கொண்டிருப்பதா அல்லது கண்களை மூடிக்கொண்டு கடந்த காலத்தை நினைத்து கொண்டிருப்பதா? சில சமயம் இப்படி நினைவுகளிலேயே ஆழ்ந்து கிடந்தால் என்ன என்று தோன்றுகிறது. பழையதிலும் பழைய நினைவுகள் கண் முன்னே சுழல்கின்றன. யோசித்துப் பார்த்தால், இறந்த காலத்தை நினைத்து ஏன் பயப்பட வேண்டும்? அது நெருப்புக்கு முந்திய புகை.

இயற்கை இந்த உடலை நூறு ஆண்டுகள் வாழும் படியாகத்தான் படைத்திருக்கிறது. கீழே விழுந்து இந்தக் கால் எலும்பு மட்டும் முறியாதி ருந்தால் நானும் நன்றாக தான் இருந்தேன்.

(சூசன், மருந்தை கொடுத்துவிட்டு, விளக்கு வெளிச்சத்தைக் குறைக்கிறாள்)

அம்மா, கொஞ்ச நேரம் தூங்குங்கள்.

சூசன், நீ எனக்கு நிறைய பணிவிடை செய்தி ருக்கிறாய். நான் உனக்கு எப்படி கைமாறு செய்யப்போகிறேன்? சில சமயம், நான் ஒரு குற்றவாளியைப் போல உணர்கிறேன்.

(மகள் உள்ளே எட்டிப் பார்ப்பதை பார்த்து)

வா. உள்ளே வா. இங்கே வந்து கொஞ்ச நேரம் என்னருகே உட்கார்ந்துகொள். மலைப்பகுதிகளில் வளரும் அடர்ந்த செடிகளின் நடுவே செல்வது போல நான் உணர்கிறேன். மலைப்பாதையில் சிறிய முட்செடிகளை நீ பார்த்திருக்கிறாயா அல்லவா? என் தலையிலும் அவை வளர்ந்துவிட்டிருக்கின்றன.

அம்மா, தூக்க மாத்திரை சாப்பிடுகிறீர்கள் இல்லையா, அதன் விளைவு தான் உங்களுக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது.

பெண்ணே, தலைக்குள் உலர்ந்த இலைகள் மழையாகப் பொழிவது போலத் தோன்றுகிறது. ஈரம் நிறைந்த மழையில்லை.

பெண்ணே, ஆரம்பத்தில் பெற்றோர் குழந்தையின் விரலை பிடித்துக் கொண்டு நடக்க கற்று கொடுக்கிறார்கள். பிறகு அவர்கள் முதுமையடைந்து, தங்கள் குழந்தைகளின் குழந்தைகளாக மாறி விடுகிறார்கள். நான் உன் சுமையை அறிவேன். மிகவும் களைத்துப்போய் விட்டாயா? இரண்டொரு நாட்கள் எங்கேயாவது வெளியே போய்விட்டு வாயேன்!

களைத்துப் போகவில்லை அம்மா. இறுக்கமான பிடியில் சிக்கிக் கொண்டது போல உணர்கிறேன்.

பெண்ணே, எல்லாம் என்னுடைய வியாதி தருகிற பயம் தான். உன்னைப் பற்றி நன்றாக அறிவேன். உற்சாகமோ அல்லது கவலையோ, இரண்டுமே உனக்குப் பொருந்துவதில்லை. உன் வாழ்வில் அடுத்த திருப்பம் சீக்கிரமே நிகழட்டும். உன் அம்மாவுக்கும் முக்தி கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்.

அம்மா, என்னவெல்லாம் யோசிக்கிறீர்கள்? உங்கள் மனோதைரியத்தின் துணையோடு, தேறி வாருங்கள். வாழ்தலின் மீதான உங்கள் நம்பிக்கையை, விருப்பத்தை டாக்டர்கள் கூட பாராட்டுகிறார்கள் இல்லையா?

நீ சொல்வது என்னவோ சரிதான். சிறிய வயதில் நான் என்னால் முடிந்ததைக் காட்டிலும், இன்னும் மேலே உயர பறக்க விரும்புவேன். அப்போது உடலும் உறுதியாக இருந்தது. நமக்குள்ளே ஒரு நெருப்பு எப்போதும் கனன்றுகொண்டிருக்கிறது. நம் உடல் அதிலிருந்தே தனக்குத் தேவையான சக்தியை உறிஞ்சிக் கொள்கிறது. ஆனால் பெண்ணே, எனக்கு வாய்த்த இரு டாக்டர்களுமே அதைக் அணையச் செய்வதிலேயே கருத்தாக இருக்கிறார்கள்!

– சற்றுநேரம் கண்ணயர்ந்த பின்

நீங்களெல்லாம் என்னை ஆரம்பத்திலிருந்தே வயதானவளாகவே பார்த்திருக்கிறீர்கள். நான் உங்களுக்கெல்லாம் தாயாவதற்கு முன்பிருந்த அந்த இளம் பெண்ணை நீங்கள் பார்த்ததில்லை. எவ்வளவு பழைய சம்பவம். ஏதோ வேறொரு யுகத்து சம்பவம் போல தோன்றுகிறது. இரண்டாம் உலகத்து சம்பவம். வானமும் முடிவதில்லை. பூமியும் அழிவதில்லை. கால் படைத்தவர்களின் ஓட்டம் மட்டுமே முடிவுறுகிறது.

(திடீரென, மிகுந்த கவனத்துடன்)

பெண்ணே நான் ஏதேனும் அபத்தமாக உளறிக்கொண்டு இருக்கிறேனா? அப்படி ஏதாவது பேச ஆரம்பித்தால் உடனே என்னை நிறுத்தி விடு!

(மகள் நாற்காலியிலிருந்து எழுந்து நிற்கிறாள்)

இப்போது போகாதே. கொஞ்ச நேரம் உட்கார்ந்திரு. அந்த அறையில் உனக்கு வேலை ஏதாவது இருக்கிறதா? அங்கே அப்படி என்ன இருக்கிறது? ஏதாவது இருந்தால் எனக்கு சொல். நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இல்லை, அப்படி எதுவும் இல்லை அம்மா.

( அம்மா தனக்குள்ளாகவே)

தலை, நெற்றி, முகம், கண்கள், மூக்கு , காதுகள், மண்டை, கைகள், கால்கள். இடுப்பு. படைப்பவன் தான் எத்தனை அற்புதமான படைப்பை படைத்திருக்கிறான்! உள்ளே ஒவ்வொரு நொடியும் துடிக்கிற ஒரு கடிகாரத்தையும் வைத்திருக்கிறான். ஒரு மூச்சு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இல்லை. மாட மாளிகைகளை கட்டிக் கொண்டு இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் கூட ஒருநாள் இல்லையேல் ஒருநாள் நகரத்தான் வேண்டியிருக்கிறது.

அம்மா, வேறு எதைப்பற்றியாவது பேசலாமே!

விரக்தியடைந்துவிட்டாய் போலிருக்கிறது. உன் கட்டுப்பாட்டிற்கு வெளியே நடப்பதை குறித்து ஏன் சோர்ந்து போக வேண்டும்? ஏன் எரிச்சலுற வேண்டும்? நோயாளி நோய்வாய்ப் பட்டிருந்தால், இருக்கட்டுமே! கூப்பிட்டால் போய் எதிரே நில். எதையாவது கேட்டால் கொடு.

அம்மா நீங்கள் மிகக் கடுமையான பரிட்சைகளை வைக்கிறீர்கள்!

இல்லை பெண்ணே! யாரையும் பரிட்சிப்பதோ எடை போடுவதோ என் குணம் இல்லை. உன்னிடமிருந்து கொஞ்சம் சக்தியை உறிஞ்சி கொள்வதற்காகத்தான் உன்னை அடிக்கடி கூப்பிட்டுக் கொண்டே யிருக்கிறேன். உன்னை பார்க்கும் போது நான் இன்னமும் உயிரோடு தான் இருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிகிறது.

அம்மா, எம்மாதிரியான நினைவுகள் உங்களை சூழ்ந்து கொண்டு தொந்தரவு செய்கின்றன?

பெண்ணே, இது வெளியில் எளிதாக சொல்லி புரிய வைத்துவிடக் கூடிய விஷயம் இல்லை. இந்த வேதனையை தனியாகத்தான் அனுபவித்து தீர்க்க வேண்டும்.

– அம்மா, வலி வேதனை அதிகமாக இருக்கிறதா?

இல்லை. அவ்வளவாக இல்லை. பழைய நிகழ்வுகளும் நினைவுகளும் என் கண்முன்னே மறுபடியும் மேலெழும்பி வருகின்றன. பெண்ணே, என் கவனத்தை அவ்வப்போது அவற்லிருந்து அகற்றிவிடு. என் புலன்கள் சரியாக வேலை செய்யவில்லையோ என்று சில சமயம் எனக்கே சந்தேகம் வருகிறது. வினோதமான பூதங்கள், இரவும் பகலும், இந்த அறையையே சுற்றிச்சுற்றி வருகின்றன.

அம்மா, நாம் மலைகளைப் பற்றி பேசலாமே. சிம்லாவிலிருந்து ஆரம்பிக்கலாமா?

என் முதல் மலைப்பயணம் கால்களிலிருந்து சிம்லாவுக்கு தான். திருமணமானதும் முதலில் அங்குதான் சென்றேன். மனம் உற்சாகத்திலும் குதூகலத்திலும் தளும்பிக் கொண்டிருந்தது. கால்காவி லிருந்து மீட்டர்கேஜ் வண்டியில் ஏறியதிலிருந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டேதான் இருந்தேன். மலை வரிசைகளையும் உயர்ந்து அடர்ந்த மரங்களையும். கொடிகளைப் போல பட்டொளி வீசிப் பறக்கும் பிரஷ் மரப்பூக்களையும்.

( அம்மா, ஏக்கம் நிறைந்த குரலில்)

பெண்ணே அந்த இடங்களை மறுபடியும் ஒரு முறை என்னால் பார்க்க முடியுமா? என்னை அங்கே கூட்டிச் செல்வாயா?

கண்டிப்பாக அம்மா! உங்கள் உடல்நிலை கொஞ்சம் தேறியதும் அங்கு போவதைக் குறித்து கட்டாயம் யோசிக்கலாம்.

என்னை சமாதானப்படுத்துவதற்காக சொல்கிறாய். எனினும் இது கூட கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.

***

(தொடரும்)

Series Navigationஏ பெண்ணே – அத்தியாயம் இரண்டு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.