மேரி வோல்ஸ்ரன்கிராப்ட்: பெண்களின் உரிமைக்கான நியாயப்பாடுகள்

உலகலாவிய ரீதியில் பெண்ணியத்தின் முன்னோடியாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்க பெண்ணியலாளர் மேரி வோல்ஸ்ரன்கிராப்ட் ( Mary Wollastonescraft ) என்பவராகும். இவரை  ‘பெண்ணியத்தின் தாய்’ ( Mother of Feminism ) எனவும் அழைப்பர். இவர் 1759 – 1797 காலப்பகுதியில் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழ்ந்தார். ஏறக்குறைய 200 வருடங்களுக்கு முன்னரே  சமூகத்தில் பெண்களது கீழான நிலை குறித்து அவரது கவனத்தை குவித்து பெண்கள் முகம் கொடுத்த ஒடுக்குமுறைகளையும், அதற்கான காரணங்களையும் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேரி வோல்ஸ்ரன்கிராப்ட் 1784 இல் அவரது 25 வயதினில் பெண்களுக்கான பாடசாலையை ஆரம்பித்தார். அவரது இரு சகோதரிகளும் நண்பி பிரான்ஸ் பிளட்டும் (France Blood) உதவினார்கள். ஆயினும் சில நெருக்கடியினால் தொடர்ந்து நடாத்த முடியவில்லை. இவரின் முதலாவது நூல் 1787 இல் ‘Thought on the Education of Daughters’ வெளியிடப்பட்டது. இந்நூல் பெண்களின் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு கட்டாயக்கல்வி, மற்றும் பொருளாதார சுதந்திரத்தின் அவசியம் பற்றி வலியுறுத்தியது.

1789 இல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து.1790 இல் எட்மண்ட் பர்க் (Edmand Burke) என்பவர் பிரெஞ்சு புரட்சியை விமர்சிக்கும் விதத்தில் பிரான்சில் புரட்சியின் பிரதிபலிப்பு (‘Reflection On Revolution in France’) என்ற நூலை வெளியிட்டார். அதில் அவர் முடியாட்சி, மற்றும் பிரபுத்துவ வர்க்கத்தின் பரம்பரை ரீதியான தனிச்சலுகை போன்றவை அரசு மற்றும் மத ஒழுங்கின் அடித்தளமாகும்  என்று குறிப்பிட்டார். அத்துடன் அவை தலைமுறையாக கடத்தப்படும் இயற்கையான உரிமைகள் என்ற கருத்தையும் கொண்டிருந்தார். புரட்சியின்போது அந்தஸ்தையும், செல்வத்தையும், சொத்துகளையும் இழந்தவர்கள் மீது அனுதாபம் கொண்டிருந்தார். இத்தகைய கருத்துக்களை தோமஸ் பெயின் (Thomas Paine ), Mary Wollstonecraft போன்றோர் கண்டித்தனர். எட்மன்ட் பர்க்கின் பிரெஞ்சு புரட்சிக்கு எதிரான கருத்துக்களை மறுத்தே  1790 இல் மேரி வோல்ஸ்ரன்கிராவ்ட்  ‘A Vindication of the right of woman’ என்ற நூலையும், தோமஸ் பெயின்  ‘Right of man’ என்ற நூலையும் வெளியிட்டனர். மேரி வோல்ரன்கிராவ்ட் அந்நூலில் பரம்பரை கெளரவம், செல்வங்கள், முடியாட்சி போன்ற தொடர்பான எட்மன்ட் பர்க்கின் மோசமான கருத்துகளை எதிர்த்தார். மரபுரிமை, வழக்குகள், சட்டங்கள் மற்றும்அரசியலமைப்பு கொள்கைகள் போன்றவற்றை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது அறிவுபூர்வமற்ற, பகுத்தறிவற்ற செயல் என்று மேரி வோல்டன்ஸ்கிராப்ட் வாதிட்டார். மேலும் பாரம்பரியம் மற்றும் வழக்கத்தை நம்புவதன் மூலம் ஆண்களின் மேலாதிக்கத்தை ஆதரித்தும், பெண்களின் செயலற்ற தன்மையை ஊக்குவிக்கும் சமத்துவமற்ற சமுதாயத்தை எட்மன்ட் பர்க் நியாயப்படுத்துவதையும் எதிர்த்தார். அதனைத்தொடர்ந்து பிரெஞ்சு புரட்சியின் பின்னர் 1791 இல் பிரெஞ்சு அரசியல்வாதியாகிய “Charles-Maurice de Talleyrand-Périgord’s” என்பவரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெண்கள் மனையியல் கல்வியை மாத்திரமே கற்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த கருத்தை விமர்சிக்கும் விதமாகவே மேரி வோல்ரன்கிராப்ட் ‘A Vindication of the Rights of Women’ என்ற நூலை 1792 இல் எழுதினார்.

அந்த காலகட்டத்தில் ஐரோப்பிய சமூக கட்டமைப்பில் பெண்கள் பற்றி பலவிதமான  தப்பெண்ணங்கள் (prejudice) நிலவி வந்தன. திருமணத்தில் மூலமாக நல்லதொரு கணவனைப் பெற்று அவனை மகிழ்விப்பதும், அவனுக்கான வாரிசை பெற்றுக்கொடுப்பதுமே பெண்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதற்கு உகந்த விதத்தில் அழகானவர்களாக, அடக்கமானவர்களாக, கீழ்ப்படிவானவர்களாக, கவரச்சியானவர்களாக உருவாகும் விதத்தில் பெண்களை சிறுவயதில் இருந்தே பயிற்றுவிக்கப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.18 ம் நூற்றாண்டின் சட்டத்தின் பார்வையில் திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை, வாக்குரிமை, சுதந்திரமாக செயற்படும் உரிமை என எல்லா வகையான உரிமைகளும்  மறுக்கப்பட்டதுடன், அவர்கள் கணவரின் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டவராகவும் இருக்கும் நிலையே காணப்பட்டது. இவ்வாறு ஏன் சமூகத்தில் பெண்களது நிலை உள்ளது என மேரி வோல்ஸ்ரன்கிராப்ட் ஆய்வு செய்தபோது ;

  1. பெண்களைப் பற்றிய தப்பெண்ணங்கள் ( prejudice )
  2. பெண்களிடம் கல்வி அறிவு பற்றாக்குறை
  3. பெண்கள் உயர் தொழில்களை பெற்றுக்கொள்வதற்கான திறன் குறைந்தவராக கருதப்பட்டமை.
  4. அரச கட்டமைப்பானது பெண்களுக்குரிய அதிகாரத்தை அளிக்காமை.
  5. இரு பாலினருக்கும் சமவுரிமை, திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான காரணங்கள் இருந்தபோதிலும் பெண்கள் புறக்கணிக்கப் பட்டமை.

போன்றவற்றை காரணங்களாக கண்டறிந்தார். பெண்களை கீழ்நிலைப் படுத்துவதில் அக்கால தத்துவ, இலக்கிய எழுத்துக்களுக்கு முக்கிய பங்களிப்பு  உண்டு என்பதை மேரி வோல்ரன்கிராப்ட் உணர்ந்தார். அந்த வகையில் அக்காலத்தில் பிரபலமாக இருந்த தத்துவ அறிஞர்கள், இலக்கியவாதிகள் போன்றவர்களை தனது நூலில் கடுமையாக விமர்சனம் செய்தார். 

Charles Maurice de Talleyrand என்பவர் 1754 – 1838 காலப்பகுதியில் பிரான்சில் வாழ்ந்தார். இவர் பிஷப் (Bishop) ஆகவும் இருந்தார். பிரஞ்சு புரட்சிக்கு பின்னர் 1791 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அரசியலமைப்பை திருத்துவதற்காக கூடிய பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில் (French National Assembly) தனது அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை ஆண்களுக்கு மட்டும் பொதுக்கல்வியும், பெண்களுக்கு மனையியற் கல்வியும் போதுமானது என பரிந்துரைக்கப்பட்டது.

அறிவொளிகால தத்துவவாதிகளில் ஒருவரான ரூசோ (Jean-Jacques Rousseau) (1712 – 1778) அவர் எழுதிய ‘சமுதாய ஒப்பந்தம்’ (‘Social Contract’) என்ற நூலின் மூலமாக நன்கு அறியப்பட்டவராவார். இந்த நூலானது அறிவுசார் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த நூல் தவிர இவர் ‘எமிலி அல்லது கல்வி குறித்து’ (Emile,or on education’) என்றொரு நூலையும் எழுதியுள்ளார். வெளியில் அதிகம் பிரபலமாகாத இந்த நூலில் ரூசோ பெண்களின் கல்வியின் நோக்கம் பற்றி விரிவாக பேசுகிறார். தனது ‘சமுதாய ஒப்பந்தம்’ என்ற நூலில் மனிதர்களிடையே (ஆண்களிடையே) சமத்தவத்தை வலியுறுத்திய ரூசோ, ஆண் – பெண் சமத்துவம் குறித்து வேறு விதமான கண்ணோட்டத்தை கொண்டிருந்தார்.

இயற்கையிலேயே ஆண்களும், பெண்களும் வெவ்வேறு பண்புகளுடனேயே படைக்கப்பட்டுள்ளார்கள். ஆண்கள் உடல்ரீதியாக பலமானவர்களாகவும், அறிவார்ந்தவர்களாகவும் இருக்க, பெண்கள் உடல்ரீதியில் பலவீனமானவர்களாகவும், உணர்ச்சிமயப்படுபவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். இதற்கமையவே ஆண்களுக்கு பொதுவாழ்வும், பெண்களுக்கு குடும்ப வாழ்வும் என்று சமூகத்தில் ஒரு விதமான வேலைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடமைகளுக்கு ஏற்ப இவர்களை தயார்படுத்தும் விதத்தில் ஆண்களுக்கு பொதுக்கல்வியும், பெண்களுக்கு மனையியற் கல்வியும் இளம் பராயத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்பது ரூசோவின் கருத்தாகும். 

பெண்கள் இயற்கையாகவே தாய்மைக்குறிய பண்புகளுடன் படைக்கப்பட்டுள்ளதால், அவர்களது இந்த இயற்கையான தாய்மைப் பண்பை பலப்படுத்தும் விதத்தில் பெண்களுக்கான கல்வி அமைய வேண்டும் என்கிறார் ரூசோ. பெண்கள் சிறுமிகளாக இருக்கும்போதே இச்சைகளுக்கு (caprices) ஆட்படாமல், அடக்கமாகவும் (modest), சுயகட்டுப்பாட்டுடனும் (temperance) வாழ்வதற்கு கற்பிக்க வேண்டும் என்பதுடன், இவ்வாறான பழக்கப்வழக்கங்களினால் வாழ்நாள் முழுவதும் வழிநடத்தப்படும் பெண்கள், சமூக(ஆண்கள்) கருத்துக்களுக்கு அடிபணிபவர்களாக இருப்பார்கள் என்கிறார். இளம் பராயத்திலேயே பெண்கள், தமது வருங்கால கணவனை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கும் கவனித்து கொள்வதற்குமான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆண்களின் கருத்துக்களுக்கு மேலாக தமது கருத்துக்களை தெரிவிக்க மாட்டார்கள். அத்துடன் கணவரின் தவறுகளையும், அநீதிகளையும் புகார் இன்றி பெண்கள் சகித்துக் கொள்பவர்களாக இருப்பார்கள். பெண்களது பிடிவாதமும், எதிர்ப்பும் கணவனையும், அதனூடாக சமூக ஒழுங்கினையும் பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்றார்.

பெண்களது கடமைகள் என பின்வருவனவற்றை ரூசோ கூறுகின்றார். 

  1. ஆண்களை மகிழ்ச்சியாக வைத்திருத்தல். (Please us)
  2. ஆண்களுக்கு பயனுள்ளதாக இருத்தல்.( Be useful to us )
  3. ஆண்கள் மீது விருப்பமாக இருத்தல், ஆண்களை  மதிப்புடன் நடத்தல். (Make us love and esteem) 
  4. குழந்தைகளாக இருக்கும்போது ஆண்களுக்கு கற்றுக்கொடுத்தல். (Educate us when we are young)
  5. வளர்ந்த பருவத்தில் ஆண்களை நன்றாக கவனித்துக்கொள்ளல்.(Take care of us when we are grownup )
  6. ஆண்களை ஆறுதல் படுத்து (Console us) 
  7. ஆண்களது வாழ்க்கையை இலகுவாக்கும் விதத்தில் எம்மை அனுசரித்து நடத்தல். (Make our lives easy and agreeable). 

எனவே பெண்ணிற்கான கல்வியானது ஆணுக்கு சேவை செய்யும் விதத்திலும், அவனுக்கு கீழ்ப்படிவானவளாகவும், அவனை எதிர்த்து பேசுவதற்கு சுதந்திரம் அற்றவளாகவும் இருப்பதற்கு ஏற்ப பயிற்றுவிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. ஆண்கள் இயற்கையாகவே அறம் சார்ந்த சிந்தனை உடையவர்கள் (sense of morality) எனவும், பெண்களிடம் இந்த அறம் சார்ந்த உணர்வு கிடையாது எனவும் வாதிட்டார். எனவே பெண்கள்,ஆண்களால் வாழ்நாள் முழுதும் கண்காணித்து, பராமறித்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற வகையில் ரூசோவின் கருத்துக்கள் அமைந்திருந்தது. 

மனிதர்கள் இயற்கையில் மகிழ்ச்சியாகவும், நல்லவர்களாகவுமே உருவாக்கப்படுகிறார்கள்: சமூகமே அவர்களை சிதைக்கின்றது என்றார் ரூசோ. அதேசமயம் பெண்களின் அழகு என்பது அவர்களது உடையில் மட்டும் அல்லாமல், காலம், இடம் என்பவற்றிற்கு பொருத்தமான விதத்தில் அன்பு, மகிழ்ச்சி, கருணை, இணங்கிப்போதல் போன்றவற்றை வெளிப்படுத்தும் திறனிலேயே பெண்களின் உண்மையான அழகு வெளிப்படுவதாகவும் ரூசோ குறிப்பிடுகிறார். ஆணின் பேச்சானது அறிவார்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் அதே சமயத்தில், பெண்ணின் பேச்சானது மற்றவரை திருப்திப் படுத்துவதாகவும், அனுசரித்துப் போவதாகவும் இருக்கும் என்கிறார் ரூசோ. ஆண்கள், பெண்களை விரும்பலாம், ஆனால் ஆண்கள் உயிர்வாழ்வதற்கு பெண்கள் தேவையில்லை. பெண்கள் ஆண்களை விரும்புவதுடன் அவர்களது தேவைகளுக்கு ஆண்களையே சார்ந்திருக்க வேண்டும் என்றார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த (1724 – 1773) டொக்டர் ஜோன் கிரகோரி (Dr. John Gregory) என்பவர் அறிவொளிகாலத்து வைத்தியராகவும், தத்துவவியலாளராகவும் இருந்தார். இவரது துணைவராகியஎலிசபெத் போர்பெஸ் (Elizabeth Forbes) உடைய மரணத்தின் பின்னர், அவரது நினைவாக 1774 இல் ‘ஒரு தந்தை தனது மகள்களுக்காக விட்டுச்செல்லும் மரபு’ ( ‘A father’s legacy to his Daughters’) என்ற நூலை வெளியிட்டார். அந்நூலானது, ஒரு தந்தை  இளம் பெண்களுக்கு கூறும் அறிவுரைகளின் தொகுப்பு போல அமைந்திருந்தது. திருமணமே பெண்களது இலட்சியம் என்ற வகையில், அந்த நோக்கில் ஆண்களை எவ்வாறு கவர்ந்துகொள்வது என்ற வகையில் அவர் தனது கருத்துக்களை அந்த நூலில் வெளியிட்டார். கிரிகோரி தமது நூலில் பெண்களை உடைகள் மீதான விருப்பத்தை வளர்த்துக் கொள்ள அறிவுருத்துகிறார். ஏனெனில் உடைகள் மீதான விருப்பம் அவர்களுக்கு இயற்கையானது என்பதுடன், பெண்கள் தங்கள் நல்ல ரசனைக்கேற்ப ஆடைகளை அணிவது அலர்களது கறைகளை மறைக்கவல்லது என்றும் கூறுகிறார்.

மேலும் அவர் தனது அறிவுரைகளில் பெண்கள் தம்மிடமுள்ள அறிவுத்திறனை ஆண்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என எச்சரிக்கிறார். வெளிப்படையாக ஆண்கள், பெண்களிடமுள்ள அறிவுத்திறனை பாராட்டுவதாக காட்டிக்கொண்டாலும், அது உண்மையல்ல என கூறுகிறார். பெண்களிடமுள்ள அறிவாற்றலும், திறனும் ஆண்களிடம் எரிச்சலையும், பொறாமையையும் தூண்டிவிடுகிறது. இது பல பெண்களுக்கு தெரியாத ஆண்கள் பற்றிய இரகசியமாகும். இப்படிப்பட்ட ஒரு பெண்ணை, ஒரு ஆண் தனது நண்பியாக (companion) வேண்டுமானால் ஏற்றுக்கொள்வான். ஆனால் ஒருபோதும் தனது காதலியாக (lover) ஏற்கமாட்டான் என்றும் எச்சரிக்கிறார். 

அமைச்சரும் கவிஞருமான ஜேம்ஸ் போர்ட்யே (James Fordyce) என்பவர் 1720 – 1796 காலப்பகுதியில் வாழ்ந்தார். இவர் இளம் பெண்களை வளர்ப்பது தொடர்பாக ‘இளம் பெண்களுக்கான பிரசங்கம்’ ( ‘Sermons to young women’) என்ற நூலை 1796 இல் எழுதியுள்ளார். அதில் பெண் பாலினத்திற்கான ஆடைகளின் அடக்கம், குடும்பத்தில் பெண்களின் நல்லொழுக்கம், பெண்களின் சாந்தம் என பல விடயங்களை பிரசங்கம் போல் எழுதியுள்ளார். இவரின் முக்கிய கருத்து ஆண்களுக்கு கீழ்ப்படிதல், அவர்களது தவறுகளை பொறுத்துக்கொள்ளல், மென்மை, சாந்தம் போன்றவற்றை கடைப்பிடித்தல் என்பதாகவே அமைந்திருந்தது. சமூகத்தின் பல பாதிப்புகளுக்கு பெண்களே காரணம் என்கிறார். ஆண்கள், பெண்களின் பாதுகாவலராக இருந்தாலும் இளைஞர்களை வழிதவற செய்வதற்கு பெண்களே பொறுப்பு எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 18 ம் நூற்றாண்டை சேர்ந்த Milton என்பவர் பெண்களை ‘women are formed for softness and sweet attractive grace’என குறிப்பிடுகிறார். பெண்கள் மென்மையானவராகவும், இனிமையான கவரும் கருணயுடனும் உருவாகிறார்கள் என்கிறார். அதேபோல் வேறுபல எழுத்தாளர்களும் இதையொத்த கருத்துக்களை கொண்டிருந்தார்கள் என அறியப்படுகிறது.

மேரி வோல்ரன்கிராப்ட் பெண்களுடைய கீழானநிலையினை தொடர்ச்சியாக தக்கவைக்கும் வகையில் அமைந்திருந்த  எழுத்துக்களை கடுமையாக அவரது நூலில் ( A vindication of the rights of women) விமர்சித்தார். அறிஞர்களான  ரூசோ, Jean-Jacques Rousseau),  கிரிகோரி (Dr. Gregory) போன்றோர் பெண்களை வீட்டின் புனிதர்களாகவும், மேலும் அவர்கள் அடக்கமானவர்கள், கற்புடையவர்கள், அழகானவர்கள் ( modest, chaste, beautiful ) வீட்டுக்குறியவர்கள் என்பதாகவே கருத்துக்களை கொண்டிருந்தார்கள். அதேவேளை ஆண்கள் பற்றி உயர்ந்த நற்பண்புகளை இயற்கையிலேயே கொண்டவர்கள்  எனவும் கருதினார்கள். இதனை மேரி வோல்ரன்கிராப்ட் கடுமையாக எதிர்த்தார். நற்பண்பானது virtue பாலினத்துடன் ( Gender ) தொடர்புடையதாக இருக்க முடியாது. ஆண், பெண் கடவுளால் படைக்கப்பட்டுள்ளார்கள். மற்றும் இருவரும் ஆத்மாவை கொண்டுள்ளார்கள். அவர்கள் நற்பண்புகளை வளர்ப்பதற்கும், செயற்படுத்துவதற்கும் ஒரே முனைப்பையும் உரிமையையும் கொண்டுள்ளார்கள். பெண்கள் வீட்டிற்குள் சிறைப்பட்டு இருப்பதும், பொதுவெளியில் செயற்பட, பங்கேற்க முடியாமல் இருப்பதுவுமே அவர்களது கீழ்நிலைக்கு காரணம் என்றார். 

மேரி வோல்ஸ்ரன்கிராப்ட்  ரூசோவின், கருத்துக்களை விமர்சிக்கும்போது மனிதர்களின் சமத்துவத்திற்காக பாராட்டப்பட்ட ரூசோ பெண்கள் சமத்துவத்திற்கு உரியவர்கள் என்பதையும், திறன்களை கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நம்பவில்லை. ஆனால் ஆண்களின் சிந்தனையையும், தர்க்கத்தையும் மட்டுமே நம்புகிறார். ஆண்கள் தமது எழுத்துக்களில் பெண்களை பாசமுள்ள மனைவி, பகுத்தறிவுள்ள தாய்மார் என்பதைவிட கவர்ச்சியான எஜமானிகளாக உருவாக்குவதில் அதிகளவு அக்கறை கொண்டிருந்தனர் என கூறுகிறார். ரூசோவின் கருத்துப்படி அழகான, கவர்ச்சியான பெண்ணுடன் வாழ்வதில் திருப்தியுறும் ஒருவர் நுட்பமான விடயத்தை இழக்கிறார். அறிவார்ந்த ரீதியாக புரிந்துகொள்வதற்கு இடமளிக்கவில்லை. அஃதே உணவு, தங்குதல், உணர்ச்சி(sex) என மிருகங்கள் போல் வாழ்வதையே குறிப்பிடுகிறார். வெறும் உடல் கவர்ச்சி, அழகு, கீழ்படிவு முதன்மைப்படுத்தும்  உறவு அதிக காலம் நீடிக்காது என்பதுடன்  மேற்குறிப்பிடப்படும் பண்புகள், பெண்களை சிந்திக்கவோ சுயகட்டுப்பாட்டுடனோ இருக்கவும் வழியமைக்காது. மனிதரின் உயர்ந்த சிந்தனை மற்றவரை புரிந்துகொண்டு வாழ்வதாகும் என மேரி வோல்ரன்கிராப்ட் குறிப்பிடுகிறார். ரூசோ, பெண்களின் கல்வியானது ஆண்களுடன் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும். எவ்வாறெனில் அவர்கள் ஆண்களை பிரியப்படுத்துபவராகவும், நேசிப்பவர்களாகவும் மட்டுமே இருக்கும் வகையில் இளம் வயதில் கல்வி கற்பிக்க வேண்டும் என கூறுகிறார். மேரி வோல்ஸ்ரன்கிராப்ட்  இதனை விமர்சிக்கையில், ஆண்களின் மகிழ்ச்சிக்காகவே பெண்கள் உருவாக்கப்பட்டாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார். ஆண்களை பிரியப்படுத்தல் என்பது அவனை தூண்டிவிடுவதில் பெண் தன்னை  மகிழ்விக்க வேண்டுமா? அதாவது அவளது வலிமை அவளின் வசீகரத்தில் உள்ளது என்பதாகவே கூறப்படுகிறது என மறுதலித்தார்.

ரூசோ, கிரகோரி, போர்ட்யே போன்றோர் ஆண்கள் உடல் ரீதியாக பலம் வாய்ந்தவராக இருப்பதால் தாம் அறிவு, திறன், செயல் என எல்லாவற்றிலும் சிறந்தவர்களாகவும், பெண்கள் உடல் ரீதியான பலவீனத்தை கொண்டிருப்பதால் எல்லாவித்த்திலும் கீழானவர்கள் தகுதியற்றவர்கள் என்ற வகையிலுமே கருத்துக்களை கொண்டிருந்தனர். மேரி வோல்ரனஸ்கிராப்ட் பெண்களை விட  ஆண்கள் உடலமைப்பு ரீதியாக பலமானவராக இருக்கலாம் ஆனால் மனரீதியாக இல்லை என்பதை வலியுறுத்துகிறார். “ men are physically stronger than women not mentally” பெண்களது உடலமைப்பு காரணமாக அவர்களை பலவீனமானவர்கள், மென்மையானவர்கள், சாந்தமானவர்கள் என பொய்யான  போலியான தப்பெண்ண (prejudice) வார்த்தைகளினால் அவர்களை மழுங்கிட செய்கிறார்கள். ஆனால் உண்மையில் பெண்களிடம் அறிவும் ஆற்றலும் இயல்பாகவே உண்டு. அவற்றை நற்பண்புகளாக வளர்த்தெடுப்பதற்கான வழிகளை திறந்து விடாமல் அடைத்து வைத்துவிட்டு அறிவுத்தரத்தில் குறைந்தவர்கள் என கூறுவது மடமையானது என மேரி வோல்ஸ்ரன்கிராப்ட் குறிப்பிடுகிறார்.

அன்றைய சமூகத்தில் ( 18ம் நூற்றாண்டில்) ஆண்களுக்கு பொதுக்கல்வி (public – education) எனவும்  பெண்களுக்கு மனையியல்கல்வி( Domestic education ) எனவும் பாகுபாடு காணப்பட்டது. ரூசோ, Charles Maurice Talleyrand போன்றோர் எழுத்துக்களில் பெண்களுக்கு வீடு தொடர்பான கல்விமுறை போதுமானது என கூறப்பட்டுள்ளது. ஆனால் பெண்களுக்கான அக்கல்வியானது பல குறைபாடுகளை கொண்டிருந்தது எனப்படுகிறது. 

  1. முறைமையற்றது.
  2. பகுத்தறிவை வளர்க்கவில்லை. 
  3. அழகு, அடக்கம், கவர்ச்சி, சாந்தம் போன்ற போலிப் புனைவுகள் கொண்டது  
  4. வீடு, தாய்மை, போன்ற கடமைகளை வலியுறுத்துவது 
  5. ஆணை சார்ந்த வாழ்கை 

எனவே  பெண்கள் பொதுக்கல்வியறிவை பெறாவிட்டால் அவர்களின் அறிவு, சிந்தனை வளர்ச்சி முன்னேற்றம் தடைப்படுவதோடு, ஏன் நற்பண்புகளை கொண்டிருத்தல் வேண்டும் என்று கூட தெரிந்து கொள்ள மாட்டார்கள். பெண்கள் சுதந்திரமாக அவர்களது கடமைகளை புரிந்து கொள்ளாதவரை அதன் காரணத்தை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என மேரி வோல்ரன்கிராப்ட் குறிப்பிடுகிறார்.

மேரி வோல்ஸ்ரன்கிராப்ட்  அன்றைய சமூகத்தில் பெண்களினது கீழான புறக்கணிப்பு நிலைமைக்கு தப்பெண்ணங்களும் காரணமாக உள்ளது என்றார். மனிதர்கள் அவர்களின் நலன்களில் முரண்படுகிறார்கள். ஒருவரின் ஆற்றல், மகிழ்ச்சி என்பது எவ்வளவு நற்பண்புகளை பெற்றிருக்கிறோம் என்பதைப் பொறுத்தே உண்டாகும். ஆனால் இது ஆழமான தப்பெண்ணங்கள் மூலமாக பகுத்தறிவுடன் முரண்படுகிறது. இந்த தப்பெண்ணங்களை (பாதகமான) சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்துவதால் நற்பண்பு, அறிவு போன்றவற்றின் உண்மையான அர்த்தங்கள் மறைந்து விடுகிறது. அன்றைய காலத்தில் நிலவிய தப்பெண்ணங்கள் பற்றி கூறும்போது அறிவொளிப் பார்வையில் தப்பெண்ணங்கள் எதிர்க்கப்படுகிறது. ஏனெனில் அவை பகுத்தறிவின் அடிப்படையில் நிறுவப்படவில்லை என மேரி வோல்ரன்கிராப்ட் குறிப்பிடுகிறார். 

நடைமுறையில் பெண்களுக்கு  தப்பெண்ணங்களை (prejudice) விமர்சனரீதியாக பார்க்க கற்பிக்கப்படவில்லை. அவர்களது வெளிபுற உடலழகைப் பற்றி கவலைப்படும் வகையிலே அழுத்தம் கொடுக்கப்படுகிறது. “ அழகு என்பது பெண்ணின் செங்கோல் என்பதாக குழந்தைப்பருவத்தில் இருந்தே கற்பிக்கப்படுகிறது. அதனால் அவர்களது மனம் உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அவர்கள் கூண்டிற்குள் இருந்து கொண்டு சிறைக்கூண்டை மட்டுமே  அலங்கரிக்கிறார்கள். பெண்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்கள் என்பதே அவர்களை ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும், அந்த பலவீனத்தையே விரும்பத்தக்க பண்பாக மாற்றுவதற்கும்  ஊக்குவிக்கப்படுகிறார்கள். பெண்கள் அவர்களது  அறிவையும் நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப் படவில்லை. வெறும் உணர்ச்சிகளால் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு எதிர்மறையான விடயத்தை பாராட்டத்தக்க ஒன்றாக மாற்றுவது முட்டாள்தனமே என மேரி வோல்ரன்கிராப்ட் குறிப்பிடுகிறார்.

பெண்குழந்தைகளின் இயங்குதளத்தை வீட்டுக்குள்ளாக சுருக்கிவிட்டு, அவர்களுக்கு பொம்மை போன்ற பொருட்களை கொடுத்து பெண்கள் மீது தப்பெண்ங்களை விதைத்து விட்டால் அவர்கள் பொம்மை, ஆடை போன்ற செயலற்ற உரையாடலை விரும்புவதில் ஆச்சரியமில்லை. ஆனால் இந்த ஆர்வங்கள் இயற்கையானவை என்ற முடிவிற்கு வருவது   தத்துவ ரீதியாக நியாயப்படுத்தவில்லை என மேரி வோல்ஸ்ரன்கிராப்ட் குறிப்பிடுகிறார். குழந்தையின் கவனம் பொதுவாக புலன்களை கூர்மைப்படுத்துகிறது. அவர்களது உடல் முழுவளர்ச்சி (maturity) அடையும் முன்னரே பெண்குழந்தைகளுக்கு தனிப்பட்டரீதியாகவும், வீடு தொடர்பாகவுமே (Individual education and Domestic education) வழங்கப்படுவது, தவறான தப்பெண்ணங்களால் வழிநடத்தவே செய்கிறது. இவ்வாறு பொருத்தமற்ற, பாகுபாடான கல்வியை பெண்குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களது பகுத்தறிவு ஆற்றலை மழுங்கச் செய்துவிட்டு ரூசோ,கிரிகோரி போன்றோர் தமது எழுத்துக்களில் பெண்களை பலவீனமானவர்கள், சமூகத்திற்கு பயனற்றவர்கள்  என்று கூறுவது அபத்தமானதாகும். இது மனிதகுலத்தின் அரைப்பகுதியினரை இழிவுபடுத்துவதாகவே அமையும் என மேரி வோல்ஸ்ரன்கிராப்ட் கூறுகிறார்.

திருமணஉறவு என்பது அதிகாரபடிநிலையை கொண்டதாக இருந்தது. சமுதாயத்தில் பெண்களின் முக்கிய நோக்கம் ஒரு வம்சத்தை தொடர மகன்களைப் பெறுவதே ஆகும். இது பெண்ணின் மதிப்பை (value) வெறும்  கருப்பையாக குறுக்கி விடுகிறது. பெண்கள் தமது கணவர்மார்களினால் கையாளுதலுக்கு (manipulative ) உள்ளாகும் பல்வேறு அனுபவங்களை கொண்டுள்ளார்கள். பெண்களை கீழ் நிலைக்கு கொண்டுவரும் அல்லது சிதைக்கும் போக்கானது அவர்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதாகவும் அதனை அளவுக்கதிகமாக, நிபந்தனையற்ற வகையில் ஆண்கள் வழங்குவதாகவும் சொல்லப்படுகிறது. இதனை “அரசனின் தெய்வீக உரிமை” யை (“divines right of king”)  ஒத்ததாக “கணவனது தெய்வீக உரிமை” (“divine right to husband”) எனக் கொள்ளும் வகையில்ஆண்களின் அதிகாரவரம்பு  உள்ளது. இவ்வாறு ஒரு அதிகாரவமைப்புக்குள் ஒடுக்கப்படும் பெண்கள் அந்த அதிகாரத்தை (male power) தகர்த்துக்கொண்டு வெளியே வருவது, அன்றைய சூழலில் மிகவும் கடினமாகவே இருந்தது. ஆனால் இங்கு பெண்களில் ஆளுமை சிதைக்கப்படுகிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பெண்கள் அழகுப்பொம்மைகளாக, கவர்ச்சிக்குறியவர்களாக, வாரிசுகளை பெற்றுக் கொடுக்கும் இயந்திரங்களாக, ஆண்களை மகிழ்ச்சியூட்டும் மகளீர்களாக இருப்பதைக் கூட அவர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அந்தளவிற்கு பெண்கள் அறியாமையை கொண்டிருப்பதானது, அவர்கள் வீடு என்கிற சிறைக்கூண்டில் சிந்திக்க, அவர்களது பகுத்தறிவை பயன்படுத்த முடியாதபடி பரிதாப நிலையில் இருப்பதாகும். எனவே பெண்களிடையே காணப்படும் இந்த அவலமான நிலமையை மாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த மேரி வோல்ரன்கிராப்ட் கூறுவது ; பெண்களுக்கு கல்வியில் சம வாய்ப்புகளையும் சுதந்திரத்தையும் அளித்தால் அவர்கள் அறிவொளியைப் பெற்று குடும்பத்திலும், சமூகத்திலும் சம பங்காளிகளாக இருப்பதற்கான திறன்களை  வளர்த்துக் கொள்வார்கள் என்பதாகும் .

பெண்களது பிறவிப்பயன் திருமணத்தில் நிறைவு பெறுவதாகவே அன்றைய எழுத்துக்கள் கருத்துக்களை கொண்டிருந்தன. பெண்கள் அழகானவர்கள், மென்மையானவர்கள் கீழ்படிபவர்கள் (obedience), தந்திரமானவர்கள் ( cunning ) கவர்ந்து ஈர்பவர்கள் போன்ற குணங்களினால் ஆண்களை மணந்து கொள்கிறார்கள். இதனை மேரி வோல்ரன்கிராப்ட் அழகாக இருப்பதென்பது குறைந்தது இருபது வருடங்களுக்கு சாத்தியமாகஇருக்கும். ஆனால் இத்தகைய பொய்யான கருத்துகள் நன்மையை விட தீமையையே விளைவிக்கும் என்கிறார். மேன்மையான மனதையுடையவர், தந்திரமானவருடன் சேர்ந்து வாழமுடியாது. அந்த வார்த்தை உண்மையில் நேர்மையற்ற தன்மையையும், பொய்யையுமே குறிக்கிறது. கணவர் நல்லவர், நற்பண்பு மிக்கவர், அறிவானவர், நியாயமானர் என சொல்லப்படுகிறது. இவ்வாறு உயர்ந்த குணங்களைக் கொண்டவர் தமது மனைவியாக இருப்பவரை நற்பண்புள்றவராக உருவாக்குவதற்கு தயாராக இருப்பதில்லை. அதேசமயம் பெண்கள் முதலில் ஆண்கள், சமூகம், அரசியல் ஆகியவற்றால் தாம் சிதைக்கப்படுவதற்குகான காரணத்தையும் உணர்ந்து கொள்வதில்லை. அதற்கான ஒரே வழி பொதுக்கல்வியினை அளிப்பதேயாகும். பெண்கள் கல்வி கற்பதன் மூலம் தமது அறிவை விரிவுபடுத்துவதுடன் குருட்டுத்தனமான கீழ்படிதலுக்கு முடிவு கட்டுதல் வேண்டும். பெண்களின் குருட்டுத்தனமான கீழ்படிதலே அவர்களை அடிமைகளாக சிற்றின்பத்திற்கு உரியவர்களாக கருதுவதற்கு காரணமாக உள்ளது. ஆண்களும் பெண்களும் நற்பண்பு உடையவர்களாக இருந்தால் அவர்களது உறவில் நெருக்கம் உடைவர்களாகவும்,  திருமணவாழ்க்கை சிறப்பாகவும் அமையும் என மேரி வோல்ரன்கிராப்ட்  கருதினார்.

மேரி வோல்ரன்கிராப்ட் பெண்களது பலவீனமாக உணர்ச்சிவயப்படும் நிலைமையை (Sentiment) குறிப்பிடுகிறார். பெண்கள் தங்கள் உணர்ச்சிகளின் அறியாமையினால், அன்பில் மகிழ்ச்சியை தேடுவதற்கும்; சிற்றின்ப உணர்வுகளை செம்மைப்படுத்துவதற்கும்; என அந்த ஆர்வத்தை உருவாக்கும் மனநிலையை ஏற்றுக்கொள்வதற்கு மட்டுமே கற்பிக்கப்படுகிறார்கள். இது அவர்களது வாழ்கையின் கடமைகளை புறக்கணிக்கச் செய்கிறது. பெண்கள் உணர்ச்சியூட்டும் நாவல்களை வாசித்து கொண்டாடுவதையும் மேரி வோல்ரன்கிராப்ட் எதிர்த்தார். சில நாவலாசிரியர் உணர்ச்சிபூர்வமான வாசகங்களை எழுதி விற்பனை செய்கிறார்கள். பெண்கள் இந்த தவறான வாசிப்புகளானால் அவர்களது அன்றாட  கடமைகள் மழுங்கடிக்கப்படுகிறது என்றார். இத்தகைய வாசிப்புக்கள் பெண்களது சிந்தனையை, அறிவை வளர்க்க பயன்பட வில்லை என்றார். 

இவ்வாறு சமூகத்தில் பெண்களது கடமையாக திருமணம், குடும்பம், தாய்மை என்றளவில் சுருங்கியதாகவே இருந்தமை, பெண்கள் தாம் பலவீனமானவர்கள் ஆண்களை சார்ந்து வாழவேண்டியவர்கள் என்ற தப்பெண்ணங்களை உள்வாங்கியவர்களாக இருந்தனர். அவர்கள் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டு தமது எதிர்காலத்தை அறிவதில் போலியான தீர்க்கதரிசிகளை நம்பினார்கள். பெண்களின் முட்டாள்தனமான செயற்பாட்டிற்கு அறியாமையும், தப்பெண்ணங்களுமே காரணம் என மேரிவோல்ரன்கிராப்ட் குறிப்பிடுகிறார். மதம் பகுத்தறிவு காரணத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமே அன்றி பிசாசின் நோக்கில் அல்ல என மேரி வாதிட்டார். ஆண்கள் பல்வேறு காரணங்களுக்காக பெண்களின் மனம், உடல்பலவீனத்தை நிலையாக வைத்திருப்பதில் முயற்சிப்பதால் அவர்களது பாலினத்தின் மீது திணிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக உள்ளது. பெண்கள் அவர்களது அந்தஸ்து, அதிஷ்டம் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். மோசமான தப்பெண்ணங்களுக்கு மேலாக அவர்களது அறிவை வளர்த்துக் கொள்ளவில்லை என பெண்களது அறியாமையின் செயற்பாடுகளையும் மேரி வோல்ரன்கிராப்ட் சுட்டிக் காட்டுகிறார்.

மேரி வோல்ரன்ஸ்கிராப்ட் குழந்தைகளுக்கான கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறார். குழந்தைகளுக்கு கல்வி அளிக்காமைமே இன்று வளர்ந்தவர்களில் வெளித்தெரிகின்றது எனவும் பெண்கள் கல்வி கற்பது அவர்களது நியாயமான உரிமையாகும். விலங்கு உலகில் இருந்து மனிதரை பிரிப்பது அவர்களது அறிவும், நற்பண்புகளுமே ஆகும். எனவே பெண்களும் ஆண்களைப் போன்று அறிவை வழங்கக்கூடிய பொதுக்கல்வியை (public education) பெறுவதற்கு உரிமை உடையவர்கள் என்றார். மேரி வோல்ரன்கிராப்ட் குழந்தைகளுக்கான கல்வியானது தேசியகல்வியாக (National Education) இருப்பதுடன் ஆண்- பெண் வேறுபாடின்றி குழந்தைகள் ஒன்றாக சேர்ந்திருந்து கல்வி கற்க வேண்டும். இதனால் ஆண், பெண் குழந்தைகளிடையே தோழமை உணர்வு வளர்ச்சியடையும் என்றார். இவ்வாறு சிறுமிகள் சிறுவயதில் இருந்து அறிவை வளர்த்துக் கொள்வதற்கு ஊக்குவிக்கப்பட்டால் அவர்கள் நற்பண்பு உடையவர்களாகவும், பகுத்தறிவுடையவர்களாயும் மேன்மையடைவர். அதுவே பெண்களை குடும்பத்தில் புரிந்துணர்வுள்ளவராகவும், புத்திசாலித்துவமான குடிமக்க்களாகவும் (citizens) பொதுவெளியில் பங்கேற்பவராகவும் உருவாக்கும் என்றார்.

இவ்வாறு மேரி வோல்ரன்கிராப்ட், அவர்களின் பெண்களுடைய முன்னேற்றம் குறித்த முன்னெடுப்பானது வரலாற்று முக்கியத்துவம் மிக்கது எனலாம். இவருடைய கருத்துக்கள்  மத்தியதர வர்க்கபெண்களை கருத்திற்கு கொண்டே எழுதப்பட்டது. ஏனெனில் அவர்களே பெருமளவு பாதிப்பிற்கு உட்பட்டிருந்தார்கள். மனித இனத்தின் சரிபாதியே பெண்ணினம். அந்த சரிபாதியான பெண்ணினத்திற்கு மறுக்கப்பட்டிருக்கும் நீதியை நிலை நாட்டுவதே பெண்களுக்கான உரிமைக்கான நியாயம் ஆகும். மனிதர்கள் பிறக்கும்போது எந்தவித அறிவும் (knowledge ) இன்றியே (blank slate – a tabula rasa) பிறக்கிறார்கள். பின்னர் கல்வியினாலும் பழக்கத்தினாலும் அறிவு விருத்தியடைகிறது என்கின்ற அறிஞர் John-Locke உடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறார். எனவே மனித இனம் தன்னில் பாதியை பின்தள்ளிவிட்டால், மனிதர்கள் முழுமையான மேன்மையை எவ்வாறு அடைவார்? என்ற பகுத்தறிவுமிக்க  தமது கருத்துக்களை முன்வைத்தார். 18 ம் நூற்றாண்டில் பெண்களது குருட்டுத்தனமான கீழ்படிவு, தப்பெண்ணங்களை கொண்டிருப்பது, உடல் அழகில் கூடிய கவனம் கொண்டிருத்தல் போன்றவற்றை களைவதற்கான ஒரே வழி அவர்களுக்கு பொதுக்கல்வியை (public education) கற்பதற்கான உரிமையை வழங்குவதே என மேரி வோல்ஸ்ரன்கிராப்ட் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். சுதந்திரம் என்பது நற்பண்பின் தாய்  (‘Liberty is the mother of virtue’). கல்வி என்னும் சுதந்திரகாற்றை பெண்கள் சுவாசிக்காவிட்டால் என்றும் அவர்கள் குறைபாடு உடையவர்களாகவே இருப்பர். பெண்கள் அறிவை வளர்த்துக் கொள்ளும்போதே சமுகமும் முன்னேற்றத்துடன் வளர்ச்சியை காணமுடியும். இவ்வாறு பெண்களது பொதுக்கல்விக்கான உரிமையை வலியுருத்தியும், அதனை தொடர்ந்து ஆண்களோடு சரிநிகராக, எல்லாவித உரிமைகளையும் பெண்கள் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுத்துக் கொடுத்த வரலாற்றுக் கலங்கரைவிளக்கமே மேரி வோல்ஸ்ரன்கிராப்ட் என்றால் மிகப் பொருத்தமானதே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.