டேய் தரங்கெட்டவனே!

இந்தி மூலம்: பீஷ்ம சாஹ்நி

தமிழாக்கம்: முனைவர் ரா. கோபாலகிருஷ்ணன்

(1)

யாத்திரையின் போது நான் எங்கே, எந்தக் கரையில் ஒதுங்குவேன் என்று எனக்குத் தெரியாது. மத்திய தரைக்கடலில் ஏதாவது பாழடைந்த கலாச்சார சின்னத்தை பார்த்துக் கொண்டிருக்கலாம் அல்லது ஐரோப்பாவின் மக்கள் அடர்த்தியுள்ள ஏதாவது சாலையில் சுற்றிக் கொண்டு இருக்கலாம்;. உலகம் மிகவும் விசித்திரமானது. ஆனால் இது புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அப்பாவித்தனமானதும் கூட.

ஒரு முறை இப்படித்தான் ஐரோப்பாவின் ஒரு தொலைதூர இடத்தை சென்று சேர்ந்தேன். ஒரு மதிய வேளை நான் என்னுடைய ஓட்டல் அறையிலிருந்து கிளம்பி கடற்கரையோரம் இருந்த இருக்கையில் அமர்ந்தவாறு வந்து போய்க்கொண்டிருந்த படகுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என்னைக் கடந்து சென்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி என்னைக் கண்டதும் அப்படியே அசையாமல் நின்று விட்டார். நான் யாரோ என்று நினைத்து என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார் என எண்ணலானேன். ஆனால் என்னருகில் வந்தார்.

‘இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்களா,’ என்று வினவினார்.

நான் புன்னகைத்தவாறே தலையசைத்தேன்.

“பார்த்தவுடனேயே நீங்கள் இந்தியராகத் தான் இருக்க வேண்டும் என நான் தெரிந்து கொண்டேன்.” என்று கூறியவாறு தான் கொண்டு வந்த பெரிய பையை அந்த இருக்கையில் வைத்தவாறே எனக்கருகில் அமர்ந்து கொண்டார்.

(2)

உயரம் குறைவுள்ள பருமனான பெண்மணி கடைத்தெருவிலிருந்து சாமான்கள் வாங்கிக்கொண்டு திரும்பிக் கொண்டு இருந்தார். நீலக்கடல் போன்று அவருடைய கண்கள். இது போன்ற நீல நிறக் கண்கள் குழந்தைகளுக்கே உரித்தானது. சிவந்த மேனி. ஆனால் கேசம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. முகத்தில்; சிறிது சுருக்கங்கள் தென்பட்டன. பசுமையான பிரதேசமாக இருந்தாலும் வரண்ட பாலைவனமாக இருந்தாலும் முதுமையின் பிடியிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது. தான் கொண்டு வந்த பையை இருக்கையில் வைத்துவிட்டு சிறிது இளைப்பாறினார். அவர் ஆங்கிலேயரல்லர், ஆனால் தான் நினைப்பதை தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சிறப்பாக உரையாடினார்.

“என்னுடைய கணவரும் இந்தியர் தான். தற்சமயம் வீட்டில் தான் உள்ளார். உங்களை சந்தித்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவார்.”

நான் சிறிது துணுக்குற்றேன். இங்கிலாந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் குடியேறி விட்டனர், ஆனால் ஐரோப்பாவின் தொலைதூர நாடான இங்கு வந்து இந்தியர்கள் ஏன் குடியேறினர்?  ஆர்வம் அதிகமாயிற்று. நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் உத்தேசத்தில் கூறலானேன் –

“வாருங்கள், சந்திக்க ஆர்வமாக உள்ளேன்.” நாங்கள் இருவரும் எழுந்து செல்ல தயாரானோம்.

சாலையில் சென்றவாறே என்னுடைய கவனம் அவருடைய உருண்டையான உடல்வாகின் மீது சென்றது. அந்த இந்தியருக்கு இந்த பெண்மணி மீது அப்படி என்ன ஈர்ப்பு இருந்திருக்கும் ? இவருக்காக தன்னுடைய வீடு மற்றும் சொந்தங்களை விட்டு இங்கே இவருடன் வந்நு குடியேறி விட்டார். இளமையின் வேகம் காரணமாக இருந்திருக்கலாம். இவருடைய நீல நிறக் கண்கள் அவரை கவர்ந்திருக்கலாம். இந்தியர்களுக்கு சிவப்புத் தோல் மற்றும் நீல கண்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் இப்பொழுது நேரம் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறது. அவருடைய வயது ஐம்பது ஐம்பத்தைந்து இருக்கலாம். பைகளை தூக்கிக்கொண்டு நடந்ததில் அவருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. இரு கைகளுக்கும் சுமையை மாற்றிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார். அவருடைய கைகளிலிருந்து பையை வாங்கிக் கொண்டேன். இருவரும் வீட்டை நோக்கி நடக்கலானோம்.

“நீங்கள் என்றாவது இந்தியா சென்றிருக்கிறீர்களா ?” என்றேன்.

“லாலுடன் ஒரு முறை சென்றிருக்கிறேன். இருபது வருடங்கள் ஆகிறது.”

‘லால் ஐயா அவர்கள் சென்று கொண்டு தான் இருப்பார் அல்லவா?”

அந்தப் பெண்மணி தன்னுடைய நரை நிறைந்த தலையை ஆட்டியவாறே “இல்லை, அவரும் செல்லவில்லை. ஆகையால் உன்னைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைவார். இங்கே இந்தியர்கள் வருவது மிகக் குறைவு,” என்றார்.

மிக சிரமப்பட்டு மாடிப்படிகள் ஏறி ஒரு ஃபிளாட்டை சென்றடைந்தோம். உள்ளே வெளிச்சம் நிறைந்த அறை. அதில் நான்கு சுவர்களை ஒட்டி புத்தகங்கள் நிறைந்த அலமாரிகள் வைக்கப்பட்டிருந்தன. சுவற்றில் எதுவுமில்லாத காலி இடங்களில் வித-விதமான ஓவியங்கள் மாட்டிவைக்கப் பட்டிருந்தன. அதே அறையில் ஒரு ஓரத்தில் ஜன்னல் அருகில் இருந்த அறையில் கருப்பு சூட் அணிந்த சிவந்த மேனி மற்றும் நரைத்த தலைமுடி கொண்ட ஒரு இந்தியர் உட்கார்ந்து நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தார்.

‘லால், யார் வந்திருக்கிறார், பாருங்கள் ? உங்களுடைய நாட்டினத்தவர் ஒருவரை கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருக்கிறேன், பாருங்கள்.” என்று அந்தப் பெண்மணி சிரித்துக் கொண்டே கூறினார்.

அவர் எழுந்து நின்று மிகுந்த ஆர்வம் மேலிட என்னைப் பார்த்தவாறே முன்னேறி வந்தார்.

“வாங்க-வாங்க ! ரொம்ப சந்தோஷம். என்னை லால்ன்னு கூப்பிடுவாங்க. நான் இங்கே என்ஜினீயர். என்னோட மனைவி என்மேல இருக்கிற அக்கறையில உங்கள இங்க கூப்பிட்டு வந்துட்டாங்க.”

வாட்ட சாட்டமான ஒரு மனிதர் வருவதைப் பார்த்தேன். இந்தியாவில் எந்தப் பகுதியைச் சார்ந்தவர் எனக் கூறுவது கடினம். பருத்த உடல் சிறிது தளர்ந்து காணப்பட்டது. இரண்டு காதோரங்களில் நரைத்த முடிக்கற்றைகள் பார்க்க முடிந்தது. ஆனால், தலையில் சிறிதுதான் நரை முடி காணப்பட்டது. 

ஒருவருக்கொருவர் அறிமுகமான பிறகு நாங்கள் அமர்ந்தது தான் தாமதம், அவர் கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்தார். “டெல்லி நகரம் ரொம்ப மாறிடுச்சா ?” என்றார் குழந்தை போல ஆர்வத்துடன்.

“ஆம், மிகவம் மாறிவிட்டது. நீங்கள் கடைசியாக எப்பொழுது டெல்லி வந்தீர்கள்?”

“நான் டெல்லிவாசி இல்லை. சின்ன வயசுல பலமுறை டெல்லி போயிருக்கேன். பஞ்சாப்ல ஜலந்தர் தான் எங்க ஊரு. ஜலந்தரை நீங்க எங்க பார்த்திருக்கப் போறீங்க.”

“நானும் பஞ்சாப்காரன் தான். ஒரு காலத்துல நானும் ஜலந்தர்ல தான் வசித்து வந்தேன்.” என்று நான் சொன்னவுடனேயே அவர் எழுந்து நின்று விட்டார். என்னை கட்டிப்பிடித்துக் கொண்டார்.

“ஓ அப்படியா ! நீங்களும் பஞ்சாபி தான்னு சொல்லவேயில்லையே. ?”

எனக்கு சங்கடமாகப் போய்விட்டது. முதியவரின் உற்சாகத்தைப் பார்த்து எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரோ மிகுந்த உற்சாகமாகக் காணப்பட்டார். ஆர்வமிகுதியில் என்னை விட்டுவிட்டு வேகமாக நடந்து பின்பக்கமுள்ள அறைக்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து மனைவியுடன் திரும்பி வந்தார்.

“ஹெலன், இந்த மனிதர் என்னுடைய கிராமத்திலிருந்து வந்திருக்கிறார் என்று நீ எனக்கு சொல்லவேயில்லையே,” உத்வேகத்தில் அவருடைய முகம் மிகவும் பிரகாசமடைந்து கண்கள் ஈரமானது.

“நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா ?” என்றவாறே அந்தப் பெண்மணி உள்ளே வந்தார். இதற்குள்ளாக அவர் ஏப்ரன் அணிந்து சமையலறையில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டிருந்தார். மிகவும் கனிவான பார்வையுடன் பணிவாக என்னைப் பார்த்தார். அவருடைய முகத்திலிருந்த கனிவு பல வருடங்களாக அநுஷ்டித்ததால் அது அவருடைய சுபாவமாகவே மாறி விட்டிருந்தது. அவர் புன்னகைத்தவாறே என்னருகே வந்து அமர்ந்து கொண்டார்.

“லால், என்னை அழைத்துக்கொண்டு இந்தியாவில் பல இடங்களை சுற்றிக் காட்டியிருக்கிறார். ஆக்ரா, பனாரஸ், கல்கத்தா என நாங்கள் நிறைய சுற்றியிருக்கிறோம். 

அந்த முதியவர் இதற்கிடையில் என்னை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தார். தன் தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் கண்களில் தன் தாய்நாட்டைச் சார்ந்த ஒருவரை சந்திக்க நேர்ந்தால் ஏற்படும் நாட்டுப்பற்று மற்றும் தாய்நாட்டின் மீதான காதலை இந்த முதியவரின் கண்களிலும் நான் கண்டேன். இந்தியன் முதலில் தன் நாட்டை விட்டு ஓடி விடுகிறான்.  பிறகு, அவன் தன் தாய் நாட்டிற்காக ஏங்க ஆரம்பித்து விடுகிறான். 

“இந்தியாவை விட்டு வந்ததும் நீங்கள் மீண்டும் இந்தியாவிற்கு செல்லவில்லை என உங்களுடைய மனைவி கூறினார்கள். இந்தியாவுடன் உறவு இல்லாமல் போகுமா ?”

என்னுடைய பார்வை புத்தகங்கள் நிறைந்த அலமாரிகள் பக்கம் சென்றது. சுவர்களில் தொங்கவிடப்பட்ட படங்கள் பெரும்பாலானவை இந்திய வரைபடங்கள் தான். அவருடைய மனைவி தன்னுடைய இந்திய சுற்றுலாவை நினைத்து-நினைத்து உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருந்தார். அதனுடைய நினைவுகள் அவருடைய முகத்தில் நிழலாடிக்கொண்டிருந்தது. 

“லாலுடைய சில நண்பர்கள் ஜலந்தரில் வசிக்கிறார்கள். சில நேரங்களில் அவர்களுடைய கடிதம் வருவதுண்டு,” என்றார் சிரித்தவாறே. “அவருக்கு வரும் கடிதங்களை எனக்குக் கொடுப்பதில்லை. கதவை உள்ளிருந்து தாளிட்டவாறு அவைகளை படிப்பார்.”

“அந்த கடிதங்களிலிருந்து எனக்கு என்ன கிடைக்கிறதென்று உனக்கு என்ன தெரியும் !” லால் உணர்ச்சி பெருக்கில் பேசலானார்.

இதைக் கேட்டவுடன் அவருடைய மனைவி எழுந்து நின்று கொண்டார்.

“நீங்கள் ஜலந்தர் தெருக்களைச் சுற்றி வாருங்கள். நான் தேநீர் எடுத்து வருகிறேன்.” என்று சிரித்துக்கொண்டே கூறியவாறு வந்த வேகத்தில் சமையலறைக்கு திரும்ப செல்லலானார்.

இந்தியாவின் மீது அவருக்கு இருந்த பற்றைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பல வருடங்களாக தன் நாட்டை விட்டு இருந்த பிறகு யாராவது இவ்வாறு குழந்தை போல உணர்ச்சிவசப்படுவார் என்பது எனக்கு வித்தியாசமாக இருந்தது. 

“என்னுடைய ஒரு நண்பனுக்கும் உங்களைப் போலவே இந்தியா மீது மிகுந்த பற்று உண்டு”, என சிறிது கிண்டல் கலந்த தொனியில் கூறினேன், “அவனும் பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்தான். எப்பொழுது தான் தன் தாய்நாட்டிற்கு செல்வோம் என ஏங்க ஆரம்பித்து விட்டான்.”

சிறிது நேரம் தயங்கி நின்றேன். நான் அவ்வாறு கூறியிருக்கக் கூடாது. இருந்தாலும் மேலும் தொடர்ந்து கூறலானேன், “சில வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் அவன் உண்மையிலேயே வானூர்தி மூலம் டெல்லி சென்றடைந்தான். அவனே பின்னர் எனக்கு இந்த விஷயத்தைக் கூறினான். வானூர்தியிலிருந்து இறங்கி வெளியில் வந்தான். விமான நிலையத்தில் கூட்டத்திற்கிடையே நின்றவாறே குனிந்து மிகுந்த மரியாதையுடன் பூமித்தாயைத் தொட்டு வணங்கிய பின் நிமிர்ந்து பார்த்தால் அவனுடைய பணப்பை காணாமல் போயிருந்தது…”

அந்த முதியவர் இப்பொழுதும் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய கண்களில் சிறிது மாற்றத்தை காண நேர்ந்தது. கடந்த காலத்து இருண்ட குகையிலிருந்து இரண்டு கண்கள் என் மேல் நிலைகுத்தி நின்று கொண்டிருந்தது போல் இருந்தது.

‘அவர் குனிந்து தாய்மண்ணை தொட்டதே பெரிய விஷயம்,’ அவர் மெதுவாகக் கூறலானார், ‘மனத்தின் ஆதங்கத்தை இவ்வாறு போக்கிக்கொண்டார் அல்லவா!’

எனக்கு தயக்கமாக இருந்தது. எனக்கே என்னுடைய நடவடிக்கை மோசமாகப் பட்டது. ஆனால் அவருடைய எண்ணத்தின் மீது எந்த ஒரு பரிதாபமும் எனக்கு ஏற்பட்டதாகக் கூறமுடியாது.

இன்னும் அவர் என்னை மிகுந்த பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு எழுந்து நின்ற அவர், ‘இது போன்ற வாய்ப்பு அடிக்கடி வாய்க்காது. இதை நாம் கொண்டாடியே தீர வேண்டும்.’ பின்புறமாக சென்று அலமாரியிலிருந்து கோன்யாக் சாராய பாட்டிலும் இரண்டு கண்ணாடி டம்ளரும் அவர் எடுத்து வந்தார்.

டம்ளரில் கோன்யாக் ஊற்றப் பட்டது. என்னருகே வந்தார். நாங்கள் இருவரும் இந்த விலைமதிக்க முடியாத நேரத்தின் பெயரில் சியர்ஸ் செய்து கொண்டோம்.

‘நீங்கள் ஒவ்வொரு மூன்றாவது அல்லது நான்காவது வருடம் இந்தியாவிற்கு பயணம் சென்று வாருங்கள். இதனால் உங்கள் மனம் நிறையும்.’ என்றேன் நான். 

அவர் தலையாட்டியவாறே, ‘ஒரு முறை சென்றிருந்தேன், ஆனால் அப்பொழுதே இனிமேல் மீண்டும் இந்தியா வருவதில்லை என முடிவெடுத்து விட்டேன்.’ இரண்டு மூன்று ரவுண்டு சாராயம் உள்ளே இறங்கிய பிறகு அவர் மனம் திறந்தார். அவருடைய உணர்ச்சியின் வெளிப்பாட்டில் ஒருவித நெருக்கத்தை உணர முடிந்தது. என்னுடைய முழங்காலில் கை வைத்தவாறே, ‘நான் வீட்டை விட்டு ஓடி வந்தேன். அப்பொழுது எனக்கு சிறிய வயது. இது நடந்து நாற்பது வருடங்கள் ஓடி விட்டது.’ அவர் சிறிது நேரம் பழைய நினைவுகளில் காணாமல் போய் விட்டார். பிறகு, சிறிது உலுக்கி தன்னைத் தானே நிகழ்காலத்திற்கு அழைத்துக்கொண்டு வந்தார். ‘வாழ்க்கையில் பெரிய நிகழ்வுகளால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. சிறிய-சிறிய நிகழ்ச்சிகள் வாழ்க்கைப் பாதையை மாற்றி விடுகிறது. என்னுடைய சகோதரர் என்னை சரியாக படிப்பதில்லை என்றும் வீணாக சுற்றிக் கொண்டு அப்பாவுடைய பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறாய் என்றும் சாதாரணமாக திட்டினார்…. அதே நாள் இரவு நான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன்.’

பேசிக்கொண்டே அவர் மீண்டும் என்னுடைய முழங்கால்களை தொட்டு மிகவும் ஆத்மார்த்தமாக கூறலானார், ‘இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். அவர் ஒரு முறையல்ல, எத்தனை முறை வேண்டுமானாலும் திட்டட்டும். அதை நான் என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். என்னை திட்டுவதற்கு ஒருத்தர் இருந்தாரே.’

பேசிக்கொண்டிருக்கும்போதே அவருடைய குரல் நடுங்க ஆரம்பித்திருந்தது. ‘என்னுடைய அம்மா வாழ்க்கையின் கடைசி நாட்களில் என்னுடைய வருகைக்காக காத்திருந்தார் என பின்னாட்களில் நான் அறிய நேர்ந்தது. என்னுடைய அப்பா தினமும் காலை பதினோறு மணி ஆனால் போதும், திண்ணையில் வந்து நின்று கொண்டு தபால்காரரிடமிருந்து என்னுடைய கடிதத்தை எதிர்பார்த்து காத்திருந்தாராம். நானோ வாழ்க்கையில் எதையும் சாதிக்காமல் வீட்டாருக்கு கடிதம் எழுதுவதில்லை என்று உறுதியுடன் இருந்தேன்.’

அவருடைய முகத்தில் ஒரு வெறுமையான சிரிப்பு வந்து அடங்கியது. ‘பிறகு நான் இந்தியா சென்றேன். அதற்குள் பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டிருந்தது. நான் நிறைய கனவுகளுடன் சென்றிருந்தேன்…’

அவர் மீண்டும் கிளாஸை நிரப்பியவாறே தன்னுடைய கதையை தொடர அரம்பிக்கும்போது தேநீர் வந்து விட்டது. குள்ளமான உருண்டை உருவமுடைய அவருடைய மனைவி தேநீர் எடுத்துக்கொண்டு சிரித்தவாறே வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் என்னுடைய மனத்தில் மீண்டும் அதே எண்ணம் எழுந்தது. இவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு இந்தப் பெண்மணி காரணமாக இருக்கலாமோ?

தேநீர் வந்தவுடன் பேச்சுவார்த்தையில் சம்பிரதாயம் வந்து சேர்ந்தது. 

‘ஜாலந்தரில் நாங்கள் ஹீரா மாயி கோயிலருகே வசித்து வந்தோம். அப்பொழுது ஜாலந்தர் ஒரு மோசமான நகரமாக இருந்தது. ஏம்மா, ஜாலந்தரில் நாங்கள் எங்கே வசித்து வந்தோம் என்று தெரியுமா?’

‘லால், எனக்கு தெருவின் பெயரெல்லாம் தெரியாது. தெருவில் அதிகமாக நாய்கள் சுற்றியது மட்டும் நினைவிருக்கிறது. சாக்கடைகள் மிகவும் அசுத்தமாக இருந்தது. என்னுடைய பெரிய பெண், அப்பொழுது அவளுக்கு ஒன்றரை வயது, ஈக்களைக் கண்டு பயந்து விட்டாள். அதற்கு முன் ஈக்களை நாங்கள் கண்டதில்லை. அங்கே தான் நாங்கள் முதன் முதலில் அணிலையும் பார்த்தோம். அணில் ஒன்று அவள் முன்னால் ஓடிப் போய் ஒரு மரத்தில் ஏறியதைக் கண்டு பயந்து என்னிடம் ஓடி வந்தாள்…. வேறு என்ன இருந்தது அங்கே?’

‘…நாங்கள் அங்கே லாலுடைய மூதாதையர் வீட்டில் தங்கினோம்…’

தேநீர் அருந்தியவாறே பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தோம். இந்தியாவின் நிதிநிலை, புதிய தொழில்கள், மேலும் அவர் தன்னுடைய நாட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்தும் தன் நாட்டைப் பற்றிய பல தகவல்களை தெரிந்து வைத்திருந்ததைப் பற்றி அறிந்து கொண்டேன்.

‘நான் இந்தியாவிலே இருந்தாலும் இந்தியாவைப் பற்றி சிறிதளவே தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் இந்தியாவை விட்டு இவ்வளவு தூரம் இருந்தாலும் இந்தியாவைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.’

அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தவாறே, ‘நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள். இதுவே பெரிய விஷயம்’ என்றார்.

அனைத்தும் இருந்தும் இந்த மனிதரின் மனத்துக்குள்ளே ஒரு வெறுமை இருப்பது தெளிவாக தெரிந்தது. அவருடைய குற்ற மனப்பான்மை அவரை உள்ளுக்குள்ளேயே காயப்படுத்தி எதையும் அனுபவிக்க முடியாமல் செய்து கொண்டிருக்கிறது.

திடீரென அவருடைய மனைவி, ‘லால் என்னை திருமணம் செய்த தன் தவற்றை மட்டும் மன்னிக்கத் தயாராக இல்லை’ என்றார்.

‘ஹெலன்…’

எனக்கு தர்ம சங்கடமாக போய் விட்டது. இந்தியாவை மையமாக வைத்து கணவன் மனைவி இருவருக்குமிடையே சண்டை வருவதுண்டு என எனக்குப் பட்டது. மேலும் இவர்கள் இவ்வாறு சண்டையிட்டவாறே முதுமையை அடைந்து விட்டார்கள். நான் இந்தியாவைப் பற்றி அவதூறாக பேசுவதன் மூலம் இவருடைய மனத்திலுள்ள பாரத்தை குறைக்க உதவும் என எண்ணினேன், ஆனால் இந்த முயற்சி பயனற்றது.

‘உண்மையை சொல்லப் போனால் இவர் இந்தியாவில் திருமணம் செய்திருக்க வேண்டும். அப்பொழுது இவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். நான் இப்பொழுதும் இவரிடம் சொல்லிக்கொள்வது என்னவென்றால் அவர் தாராளமாக இந்தியாவிற்கு செல்லட்டும், நான் இங்கு தனியாக இருந்து கொள்கிறேன். எங்களுடைய இரண்டு மகள்களும் வளர்ந்து விட்டார்கள். நான் என்னைப் பார்த்துக் கொள்ள முடியும்…’

அந்தப் பெண்மணி மிகவும் தெளிவாக நிதானமாக பேசிக்கொண்டிருந்தார். அவருடைய குரலில் எந்தவொரு குறை சொல்லும் எண்ணமோ அல்லது வருத்தமோ இருக்கவில்லை. தன்னுடைய கணவரின் நலன் தான் மேலோங்கி நின்றது.

‘ஆனால், அங்கேயும் இவர் நிம்மதியாக இருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. இப்பொழுது அங்கே உள்ள வெயிலைக் கூட அவரால் சமாளிக்க முடியாது. இது மட்டுமல்லாமல் அங்கே இவருக்காக யார் இருக்கிறார்கள்? அம்மாவோ அப்பாவோ யாருமில்லை. இவருடைய சகோதரரும் இறப்பதற்கு முன் பழைய பாரம்பரியமான வீட்டை விற்று விட்டார்.’

‘ஹெலென், ப்ளீஸ்…’ முதியவர் இடைமறித்தவாறு கூறினார்.

நான் இப்பொழுது கவனத்தை திசை திருப்பும் நோக்கில் வேறு விஷயங்களை பேசலானேன். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருப்பது தெரிய வந்தது. இருவரும் இந்த நேரத்தில் வீட்டில் இல்லை. பெரிய மகள் தன் அப்பாவைப் போலவே இன்ஜினியர் ஆகியிருந்தாள். சிறிய மகள் பலகலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்தாள். இருவரும் சிறந்த அறிவாளிகளாக திறமை மிகுந்தவர்களாக இருந்தனர். இளம் பிராயத்தினர்.

உணர்ச்சிவசப்பட்டு இவர்கள் பேசுவதை கண்டுகொள்ளக் கூடாது என ஒரு நிமிடம் எனக்குத் தோன்றியது. தன்னுடைய நாட்டிலிருந்து வரும் உறவுகளைக் கண்டால் இவருக்கு ஏற்படும் ஒரு வித உணர்ச்சிப் பெருக்காகத்தான் இதைக் கொள்ள வேண்டும். இது தான் அவரை படுத்திக்கொண்டிருக்கிறது. நான் சென்று விட்டால் இவர் இதிலிருந்து வெளி வந்து தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவார்.

தேநீர் அருந்திவிட்டு புகைப்பிடிக்க ஆரம்பித்தோம். சிறிது இடைவெளி விட்டு கோன்யாக்கும் அருந்திக்கொண்டிருந்தோம். சிறிது நேரம் புகைபிடித்துக்கொண்டு இருந்தோம். இதற்கிடையில் அவருடைய மனைவி தேநீர் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு சமையலறைப் பக்கம் சென்றார்.

‘ஆங், நீங்கள் ஏதோ சிறிய நிகழ்வைப் பற்றி கூறிக்கொண்டிருந்தீர்கள்…’

சிறிது தயங்கிய பின் தலையை சாய்த்து புன்னகை புரிந்தார், ‘நீங்கள் உங்கள் நாட்டை விட்டு வெளியே அதிகமாக இருந்ததில்லை என்று தெரிகிறது. ஆகையால் தான் வெளிநாட்டில் இருப்பதால் ஏற்படும் மனவலி உங்களுக்குப் புரியவில்லை. முதலில் சில வருடங்கள் நான் எதைப் பற்றிய சிந்தனையுமில்லாமல் இருந்து வந்தேன். ஆனால், பத்து-பதினைந்து வருடங்கள ஆனதும் இந்தியாவைப் பற்றிய நினைவு படுத்த ஆரம்பித்தது. எனக்குள் வெறி பிடிக்க ஆரம்பித்திருந்தது. என்னுடைய நடவடிக்கையிலும் ஒருவித குழந்தைத்தனம் வந்து விட்டிருந்தது.  இதைப் பார்த்தாவது நான் இந்தியன் என்று அனைவரும் நினைக்கட்டும் என்று சில நேரத்தில் நான் குர்தா பாய்ஜாம் அணிந்து வீதியில் சுற்றுவதுண்டு. எப்பொழுதாவது லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்ட ஜோத்புர் செருப்பு அணிவதுண்டு. மக்கள் என் செருப்பை ஆவலுடன் பார்ப்பதைக் கண்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். வேட்டி அணிந்து வாயில் வெற்றிலையை உதப்பிக்கொண்டு செல்ல வேண்டும் என ஆவலாக இருக்கும். நான் கூட்டத்தில் தொலைந்து போன முகவரியற்ற மனிதன் இல்லை, எனக்கென்று ஒரு நாடு இருக்கிறது என்று உண்மையிலேயே காட்ட விரும்புவேன்.

வெளி நாட்டிலுள்ள இந்தியனின் மனத்தை வருத்தம் கொள்ள செய்யக் கூடிய ஒன்று என்னவென்றால் வெளிநாட்டில் அவனை அடையாளம் கண்டுகொள்ளவோ விசாரிக்கவோ யாரும் இருப்பதில்லை என்பது தான். ஆனால் இந்தியாவில் அனைவரும் அவனுடைய சொந்தங்கள் மற்றும் அறிமுகமானவர்கள். தீபாவளி நாளன்று வீட்டில் தீபம் ஏற்றி வைத்து ஹெலனின் நெற்றியில் திலகமிட்டு உச்சி வகிட்டிலும் குங்குமம் வைப்பதுண்டு. ரக்ஷா பந்தன் அன்று என்னுடைய சகோதரியின் கையில் ராக்கி கட்டிக்கொண்டு வாழ்த்து பெற வேண்டும் என்ற ஏக்கம், அதுவும்
‘வீரா’ என்ற அந்த வார்த்தையை கேட்க மிகவும் ஏங்கியதுண்டு. கடைசியில் இந்தியா செல்ல முடிவெடுத்து விட்டேன். ஹெலெனையும் ஒன்றரை வயது மகளையும் உடன் அழைத்துச் செல்லலாம் என எண்ணினேன். ஹெலெனை அழைத்துக் கொண்டு இந்தியாவை சுற்றிக் காட்டுவதாகவும் அவளுக்கு இந்தியா பிடித்து விட்டதென்றால் அங்கேயே ஏதாவது வேலை பார்த்து தங்கி விடும் எண்ணத்தோடும் சென்றேன்.’

‘முதலில் நாங்கள் இந்தியாவை சுற்றி வந்தோம். டெல்லி, ஆக்ரா, பனாரஸ்… ஒவ்வொரு இடத்தை சுற்றி காட்டும் போதும் அவளுடைய கண்ணில் தெரிந்த எதிர்வினையை காணத் தவறவில்லை. இவளுக்கு ஏதாவது இடம் பிடித்து விட்டதென்றால் எனக்கு இருப்புக் கொள்ளாது.’

‘பிறகு நாங்கள் ஜாலந்தர் சென்றோம்’ என்று கூறும்பொழுது ஒரு பிடிப்பு இல்லாமல் அமைதியாக குனிந்து கொண்டார். அவர் ஏதோ நினைவுகளில் தன்னை இழந்துவிட்டார் அல்லது இழந்து கொண்டிருக்கிறார் என எனக்குத் தோன்றியது. திடீரென தன் தோள்களை குலுக்கி கீழே பார்த்தவாறே, ‘ஜாலந்தர் சென்றவுடன் ஏமாற்றமே மிஞ்சியது. தளவாடம் போன்ற நகரம், தேவைக்கதிகமாக கருத்த ஒல்லியான தேகம் கொண்ட மக்கள். பெயர்ந்து போன சாலைகள். அனைத்தும் அறிமுகமானது தான். ஆனால், சிதிலமடைந்து இருந்தது. இந்த நகரத்தைக் காட்டத்தான் நான் ஹெலனை அழைத்து வந்தேனா. குழந்தைப் பருவத்தில் எனக்கு பெரிதாகவும் பிரமாண்டமானதாகவும் தெரிந்த என்னுடைய பாரம்பரிய இல்லம் இப்பொழுது பழையதாகவும் சுருங்கிப் போயும் காட்சியளித்தது. அம்மாவும் அப்பாவும் பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டனர். சகோதரர் ஆவலுடன் வரவேற்றார். ஆனால், நான் என்னவோ சொத்தில் பங்கு கேட்க வந்து விட்டேன் என்பது போல என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை. தங்கையின் திருமணம் பத்து வருடங்கள் முன்பு முடிந்து விட்டிருந்தது. அவள் முராதாபாத்தில் வசித்து வந்தாள். நான் வெளி நாட்டில் இருந்தவாறே இந்த நகரத்தைக் காணவா கனவு கண்டு கொண்டிருந்தேன். இதைக் காணவா துடித்துக் கொண்டிருந்தேன். தெரிந்தவர்கள் அனைவருக்கும் வயதாகி விட்டிருந்தது. தெரு ஓரத்தில் அல்வா விற்பவன் அமர்ந்திருப்பான். அவன் இப்பொழுது கடை நாற்காலியில் அமருவதற்கு பதில் வெளியில் கட்டிலில் அமர்ந்திருக்கிறான். தெருக்கள் களையிழந்து சுறு-சுறுப்பில்லாமல் காணப்பட்டன. எதைக் காட்டுவதற்கு நான் ஹெலனை அழைத்து வந்திருக்கிறேன். இவ்வாறாக இரண்டு மூன்று நாட்கள் நகர்ந்தன. சில நேரங்களில் நான் நகரை விட்டு வயல் வெளிகளில் சுற்றிக் கொண்டிருப்பேன் என்றால் சில நேரங்களில் கடைத்தெருக்களில். மனத்தில் எந்த வித உற்சாகமோ மகிழ்ச்சியோ இருக்கவில்லை. ஏதோவொரு அன்னிய தேசத்தில் நுழைந்து விட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.’

ஒரு நாள் கடைத்தெருவில் சென்று கொண்டிருந்த பொழுது சத்தமான குரல் ஒன்று கேட்டது, ‘டேய் தரங்கெட்டவனே !’. நான் கண்டுகொள்ளவில்லை. இது எங்களுடைய ஊரில் இருபத்து நான்கு மணி நேரமும் யாராவது திட்டுவதற்கு பயன்படுத்தும் பரம்பரையான வசவு. ஊர் பழமையாகி விட்டாலும் பண்பாடு அப்படியே இருப்பதாக மனத்திற்கு பட்டது.

‘டேய் தரங்கெட்டவனே! உன்னோட அப்பன மாதிரியே கண்டுக்கவே மாட்டேங்கற ?’

என்னைத் தான் யாரோ குறிப்பிட்டு பேசுவது போல பட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். சாலைக்கு அப்பால் சைக்கிள் கடையிலிருந்து யாரோ ஒருவன் என்னைத் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

நான் நிதானமாக கவனித்தேன். பெரிய கரிய மீசை, வழுக்கைத் தலை, கண்களில் பெரிய கண்ணாடி அணிந்து ஒரு உருவம் முன்னால் தெரிந்தது. நான் உடனே அடையாளம் கண்டு கொண்டேன். அவன் திலக்ராஜ், என்னுடைய பால்ய நண்பன்.

‘டேய் ! இப்போ உன்னோட அப்பனக்கூட கண்டுக்க மாட்ட போலிருக்கே !’ அடுத்த நிமிடம் நாங்கள் இருவரும் அணைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தோம். 

‘அடேய் ! வெளியூருக்கு போனதும் பெரிய ஆளாயிட்டியா ? நீ எவ்வளவு பெரிய ஆளாயிருந்தா எனக்கென்ன…’ என்று கூறியவாறே என்னை தூக்கி விட்டான். என்னை கீழே தூக்கி போட்டுவிடுவானோ என்ற பயம் எனக்கிருந்தது. அடுத்த நிமிடம் நாங்கள் ஒருவரையொருவர் கெட்ட வார்த்தைகளால் வசைபாட அரம்பித்திருந்தோம்.

எனக்கு என்னுடைய பால்ய நண்பன் கிடைத்து விட்டான். அந்த நிமிடம் தான் மீண்டும் எனக்கு ஜாலந்தர் அதாவது என்னுடைய தாய்நாடு கிடைத்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. இது வரை நான் ஒரு அந்நியனைப் போல சுற்றிக்கொண்டு இருந்தேன். திலக்ராஜை சந்தித்த அந்த நொடியில் என்னுடைய அனைத்து அந்நியத்தனமும் போய்விட்டது. நான் இந்த ஊரை சேர்ந்தவன் தான் என்ற உணர்வு ஏற்பட்டது. நான் சாலையில் செல்லும் எந்த மனிதனிடமும் பேசவோ சண்டை போடவோ முடியும். ஓவ்வொரு மனிதனும் இவ்வாறு தான் இருக்க ஆசைப்படுகிறான். இந்த நிமிடம் வரை நான் என்னுடைய ஊருக்கு வந்தும் அந்நியனாகத் தான் சுற்றிக் கொண்டிருந்தேன். யாரும் என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. சொந்தம் கொண்டாடவில்லை. இந்த வசவு எனக்கு மந்திரம் போல, தங்க வளையம் போல என்னை என்னுடைய நாட்டோடு, என்னுடைய மனிதர்களோடு, என்னுடைய குழந்தைப் பருவத்தோடு இணைத்து விட்டது.

(3)

திலக்ராஜைக் கண்டதும் என்னுடைய நடவடிக்கைகளில் குழந்தைத்தனமும் முட்டாள்தனமும் கலந்து விட்டது போல இருந்தது. அந்த நேரத்தில் அது தான் சரியாகப் பட்டது. இது நாள் வரை இதை நான் மறுக்கவில்லை. 

‘வா, எங்கேயாவது உக்காந்து டீ குடிக்கலாம்’, என்றான் திலக்ராஜ் அதே கெட்ட வார்த்தையை பிரயோகித்தவாறு. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு ஹீரா மாயி கோவிலை நோக்கி செல்ல ஆரம்பித்தோம். என்னுடைய நடையில் பழைய சோம்பேறித்தனம் வந்து ஒட்டிக்கொண்டது. நான் அந்த ஜாலந்தர் வீதிகளில் ஒரு சிற்றரசன் தன் நாட்டை சுற்றி பார்ப்பது போல சுற்றத் தொடங்கினேன். நான் புளங்காகிதம் அடைந்தேன். நான் இந்த பிரதேசத்தைச் சேர்ந்தவன் அல்லன் என்றும் அந்நியன், வெளிநாட்டில் வசிப்பவன் என்றும் ஒரு குரல் மனத்தில் கூறிக்கொண்டே இருந்தது. இருந்தாலும் இன்னும் அதிகமாக கால்களால் சத்தம் எழுப்பியவாறு நடக்கலானேன்.

‘அல்வா கடைக்காரன் சுச்சா அதே இடத்தில் அமர்ந்திருக்கிறானா ?’

‘வேறென்ன, நீ தானே எங்களை ஏமாற்றினாய். வேறு யாரும் ஏமாற்றவில்லையல்லவா.’

இதே போன்று துடுக்குத்தனமாக பேசிக்கொண்டே ஒரு காலத்;தில் நாங்கள் இருவரும் கை கோர்த்தவாறு இதே தெருக்களில் சுற்றி வந்திருக்கிறோம். திலக்ராஜுடன் சேர்ந்தவாறு நான் சிறு பருவத்திற்கே சென்று விட்டேன். அந்த நாட்களில் இருந்த போக்கிரித்தனத்தை உணர ஆரம்பித்தேன்.

நாங்கள் ஒரு சிதைந்து போன அழுக்கடைந்த உணவகத்தில் சென்று அமர்ந்தோம். ஈக்கள் சுற்றும் அழுக்கடைந்த அதே மேஜை, ஆனால் அதைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. என்னுடைய ஜாலந்தர் டாபே (ஓட்டல்) அல்லவா. அந்த நேரத்தில் ஹெலன் நான் அமர்ந்திருப்பதைக் கண்டால் நான் யார், எப்படிப்பட்டவன் என்பதை புரிந்துகொண்டு விடுவாள் என எனக்குத் தோன்றியது. இந்த உலகில் எனக்கென்று ஒரு பிரதேசம் இந்த அழுக்கடைந்த, தூசிகள் நிறைந்த டாபா இருக்கிறதென்று சொல்ல முடியும். 

டாபே (உணவகம்) யிலிருந்து கிளம்பி வெகு நேரம் வரை சாலைகளில் சுற்றி-சுற்றி களைப்படைந்து சோர்ந்து விட்டோம். அப்படியே அவன் என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். சிறு வயதில் நான் அவனுடன் பேசியவாறே அவனை அவன் வீட்டிற்கு சென்று விட்டு வர செல்வேன். அது போலவே என்னை அவன் என்னுடைய வீடு வரை வந்து விட்டு விட்டு செல்வான்.

அப்பொழுது தான் அவன், ‘நாளைக்கி நீ என் வீட்டுக்கு சாப்பிட வரணும். வரமாட்டேன்னு சொன்ன, மவனே இங்கேயே கழுத்தப் பிடிச்சு சாக்கடையில அமுத்தி விட்டுடுவேன்.’ என்றான்.

‘வந்துடறேன்,’ என்றேன் நான் உடனே.

‘உங்க மேடமையும் அழைச்சுட்டு வந்துடு. எட்டு மணிக்கு நான் உன்ன எதிர்பாப்பேன். வரலை மடப்பயலே…’

என்று கூறியவாறு முன்பு போலவே அவன் எனக்கு கை கொடுத்துவிட்டு தன்னுடைய முழங்காலால் என்னுடைய தொடையை உதைத்தான். இவ்வாறு தான் நாங்கள் விடைபெறுவது வழக்கம். முதலில் யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். நான் அவனுடைய கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி விடுவது போல கேலியாக பாசாங்கு செய்தேன். என்னுடைய ஜாலந்தர் பயணம் முழுவதும் மாயைப் போலத்தான் பட்டது. நான் இந்த மாயையின் பிடியில் இருக்கவே விரும்பினேன். 

மறு நாள் எட்டு மணிக்கு முன்னதாகவே நானும் ஹெலனும் அவனுடைய வீட்டை சென்றடைந்தோம். குழந்தைக்கு சீக்கிரமாகவே உணவளித்து உறங்க செய்து விட்டோம். ஹெலன் சிறந்த ஆடைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அணிந்திருந்தாள். கருப்பு நிற ஃப்ராக், அதில் தங்க எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தலை பிண்ணி ஆரஞ்சு நிற ஸ்டோல் அணிந்திருந்தாள். 

‘உன்னுடைய பழைய நண்பன் இல்லையா, அப்படியென்றால் நான் அலங்கரித்துக் கொண்டு தான் வரவேண்டுமல்லவா’ என்றாள்.

‘ஆம்’ என்றேன். ஆனால், அவள் அலங்கரித்துக் கொண்டு வருவதன் மூலம் என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. அவளுடைய கருப்பு ஃப்ராக்கோ, ஸ்டோலோ, அலங்காரமோ, வாசனை திரவியங்களோ எதுவும் ஜாலந்தருக்கு ஏற்புடையதாக தெரியவில்லை. உண்மையை சொல்லப் போனால் ஹெலென் என்னுடன் வருவதை நான் விரும்பவேயில்லை. இரண்டொரு தடவை அவளை தவிர்ப்பதற்கு முயன்றேன். இதனால் ஆத்திரப்பட்டு அவள், ‘சபாஷ், உன்னுடைய நண்பனை நான் சந்திக்கக் கூடாது. அப்படித்தானே? அப்படியென்றால் என்னை ஏன் அழைத்து வந்தாய்?’ என்றாள்.

நாங்கள் சரியாக எட்டு மணிக்கு அவனுடைய வீட்டிற்கு சென்று விட்டோம். ஆனால், அந்த முட்டாள்; என்னை ஏமாற்றி விட்டான். நானும் என்னுடைய மனைவியும் மட்டும் தான் அவனுடைய வீட்டிற்கு விருந்துக்குப் போகிறோம் என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் நாங்கள் அங்கே சென்று பார்த்தபொழுது தான் ஜாலந்தரில் உள்ள அனைவருக்கும் அவன் அழைப்பு விடுத்திருந்தது தெரிந்தது. வீடே விருந்தாளிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பல விதமான மனிதர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். எனக்கு கூச்சமாக இருந்தது. என்னை ஆடம்பரமாக அதுவும் பஞ்சாபி கலாசாரத்தின் படி வரவேற்க விரும்பினான், நண்பன் வெளியிலிருந்து வந்தான். தன்னுடைய நில புலன்களை விற்றாவது என்னை கவனிப்பதை பொறுப்பாக நினைப்பவன் தான் என்னுடைய நண்பன். முடிந்தால் பேண்ட் வாத்தியங்களுடன் என்னை வரவேற்கவும் தயங்க மாட்டான். ஆனால் எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. நாங்கள் செல்லும்போது வீடே விருந்தாளிகளால் நிரம்பி இருந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு முன்பே பரிச்சயமானவர்கள். என்னுடைய மனம் குழம்ப ஆரம்பித்திருந்தது.

அவன் தன் மனைவியை அறிமுகப்படுத்துவதற்காக என்னை சமையல்கட்டு வரை அழைத்துச் சென்றான். அவர் அடுப்படியில் உட்கார்ந்தவாறு ஏதோ சமைத்துக் கொண்டிருந்தார். படக்கென்று எழுந்து துப்பட்டாவினால் கைகளை துடைத்தவாறு முன்னேறி வந்தார். முகம் சிவந்து மயிற் கற்றை முகத்தில் வந்து விழுந்திருந்தது. அவர் சுத்த பஞ்சாபி, தன் சொந்தம் தன் நட்பு என்பதில் கர்வம் கொண்டவர் மற்றும் சிரித்த முகத்துடன் இனிமையாக பழகக்கூடியவராக தெரிந்தார். அவர் சட்டென்று எழுந்து வருவதைப் பார்த்ததும் என்னுடைய உடலில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தேன். என்னுடைய மைத்துனி, என்னுடைய சகோதரிகள் இன்னும் என்னுடைய அம்மாவும் சமையலறையிலிருந்து துப்பட்டாவால் கையை துடைத்தவாறு இப்படித்தான் எழுந்து வருவார்கள். பஞசாபி பெண்களுக்கே உரிய நளினம், ஆத்மார்த்தமாக பழகுவது என்பன போன்ற குணங்கள் நிரம்பிய பெண்மணி. ஏதாவது பஞ்சாபிப் பெண்களை சந்திப்பதாக இருந்தால் சமையலறையில் சந்திக்க வேண்டும். நான் வெடவெடத்துப் போனேன். அவர் தலையில் போர்த்தியிருந்த முக்காடை சரி செய்தவாறு வெட்கப்பட்டுக் கொண்டே முன்னால் வந்து நின்றார். 

‘அண்ணி, உங்களோட வீட்டுக்காரரு சரியான வடிகட்டின முட்டாளுங்க. அவரு சொல்றதக் கேட்டு இவ்வளவு பண்ணிக்கிட்டிருக்கீங்களே ? இவ்வளவு ஆடம்பரம் தேவை தானா. நாங்க உங்கள பாக்க வந்தோம், அவ்வளவு தான் ….’

பிறகு நான் திலக்ராஜைப் பார்த்து, ‘முட்டாப் பயலே, விருந்து வைக்கச் சொல்லி எவண்டா கேட்டான். லூசு, நான் என்ன உன்னோட விருந்தாளியா ? … நான் உன்னை கவனிச்சுக்கிறேன்’ என்றேன்.

அவனுடைய மனைவி என்னையும் தன் கணவனையும் மாறி மாறிப் பார்த்து, ‘நீங்க வந்திருக்கீங்க. உங்களுக்கு சாப்பாடு கூட போடலைன்னா எப்படி? உங்களோட பாதம் பட்டதுல எங்க வீடு புனிதமாயிடுச்சு’ என்றார்.

இந்த வாக்கியம் தான் பல நூறு வருடங்களாக எங்கள் வீட்டுப் பெண்கள் விருந்தினர்களை உபசரிக்கும் விதமாக கூறி வருகின்றனர்.

பின்னர் அவர் எங்களை விட்டு நேராக என்னுடைய மனைவியை சந்திக்க சென்று விட்டார். சென்றதும் அவர் கையைப் பிடித்துக்கொண்டு நெருக்கமாக ஒரு நாற்காலியின் பக்கம் அழைத்துச் சென்றார். ஏதோ அதிர்ஷ்டம் வந்து விட்டது போல அவருடைய நடவடிக்கை இருந்தது. ஹெலனை நாற்காலியில் அமர வைத்துவிட்டு அவர் கீழே தரையில் அமர்ந்து கொண்டார். அவர் தனக்கு தெரிந்த கொஞ்சம் ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு தைரியமாக பேசிக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறை கண்கள் சந்திக்கும்போதும் புன்னகைத்தார். அவர் தன்னுடைய எண்ணங்களை ஹெலன் வரை சென்று சேர்ப்பதில் சிரமப்பட்டார், ஆனால் தன்னுடைய ஆத்மார்த்தமான அன்பை வெளிப்படுத்துவதில் அவருக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை. 

அன்று மாலை திலக்ராஜின் மனைவி ஹெலெனுக்கு பின்னாலேயே சுற்றிக்கொண்டு இருந்தார். அவர் எம்பிராய்டரி வேலைப்பாடுகளமைந்த துணிகளை எடுத்து வந்து ஹெலனுக்கு காட்டிக்கொண்டு இருந்தார். பின்பு அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு சமையலறைக்கு அழைத்துச் சென்று தயாராய் இருந்த ஒவ்வொரு உணவுப் பதார்த்தத்தையும் காட்டி செய்த விதத்தையும் விளக்கிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் தன்னுடைய மகள் குல்லுவினுடைய ஷாலை எடுத்து வந்தார். ஹெலனுக்கு பிடித்துவிட்டதைப் பார்த்து அதை அவர் ஹெலனுக்கு அணிவித்து மகிழ்ந்தார். 

இந்த வரவேற்பு தடபுடல்களால் ஹெலன் களைப்புற்றாள். மொழிக் கஷ்டம் இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் மிகவும் நாகரிமாக சமாளித்தாள். ஆனால், முன்-பின் தெரியாதவர்களிடம் எவ்வளவு நேரம் தான் சமாளிப்பது. டீரிங்க்ஸ் தான் போய்க் கொண்டிருந்தது. அதற்குள்ளாகவே களைத்துப் போய் நாற்காலியில் அமர்ந்து விட்டாள். நான் அவளை பார்க்கிறேன் என்றதும் அவள் கீழே குனிந்து கொண்டாள். அவள் அவ்வாறு செய்தது ‘என்னை சீக்கிரம் இங்கிருந்து அழைத்துப் போ’ என்று கூறுவது போல் இருந்தது. 

இரவு கிட்டத்தட்ட 12 மணிக்கு விருந்து முடிந்தது. போதையில் திளைத்த திலக்ராஜின் நண்பர்கள் அனைவரும் ஒவ்வொருவராக விடைபெற்று செல்லலாயினர். அந்த நிமிடம் வரை சப்தமிட்டுக் கொண்டிருந்தனர். சிலர் உளறிக் கொண்டிருந்தனர். ஒருவருடைய கையிலிருந்து கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து உடைந்தது.

நாங்களும் எழுந்து செல்லத் தயாரானோம். ஹெலன் எழுந்தது தான் தாமதம், உடனே திலக்ராஜ் பஞ்சாபி உபசரணையுடன், ‘ஒக்காரு, ஒக்காரு, யாரும் போகக் கூடாது.’ என்றான்.

‘இல்லப்பா, நேரமாயிடுச்சு. நாங்க கிளம்பறோம்’ என்றேன்.

அவன் என்னை ஒரு தள்ளு தள்ளி நாற்காலியின் மீது விசிவிட்டான். மகிழ்ச்சி, பழைய நினைவுகள், திலக்ராஜின் அன்பு, அவனுடைய மனைவியின் பரிவான உபசரிப்பு என எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சல்வார் கமீஜ் அணிந்து, பின்னலிட்டு, கை வளையல் குலுங்க ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு வந்து செல்லும் திலக்ராஜின் மனைவி எனது தாயகத்தின் அடையாளம் மட்டுமல்ல, எனது நாட்டினுடைய பண்பாட்டின் மொத்த உருவம் ஆவார். என்னுடைய வீட்டிலும் இது போலவே பண்பாட்டின் அடையாளம் இருந்தது நினைவிற்கு வந்தது. அவருடைய சிரிப்பு வீடு முழுவதும் எதிரொலித்தது மட்டுமல்லாமல் இந்தியப் பாடலையும் முணு-முணுத்துக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தேன். பல வருடங்களாக நான் சிறிய வயதில் கேட்டுப் பழக்கப்பட்ட அந்த குரலைக் கேட்க ஏங்கிக் கொண்டிருந்தேன்.

ஹெலனிடம் எந்த குறையும் சொல்ல முடியாது. எனக்காக அவள் எது தான் செய்யவில்லை. சப்பாத்தி சுட கற்றுக் கொண்டாள். பருப்பு செய்ய தெரிந்து கொண்டாள். எங்களது திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் நான் பாடிய பாடலை முணு முணுக்க ஆரம்பித்து விட்டாள். சில நேரத்தில் சல்வார் கமீஜ் அணிந்து என்னுடன் வெளியே சுற்ற கிளம்பி விடுவதுண்டு. சமையலறையின் சுவற்றில் அவள் இந்திய வரைபடத்தை மாட்டி அதில் சிவப்பு மையினால் ஜாலந்தர், டெல்லி மற்றும் என்னுடைய சகோதரி வசிக்கும் அமிர்தசரஸ் போன்ற இடங்களை குறித்து வைத்திருக்கிறாள். இந்தியா தொடர்பான புத்தகம் கிடைத்தால் எடுத்து வந்து தருவது மட்டுமல்லாமல் யாராவது இந்தியர்களை சந்திக்க நேர்ந்தால் வேண்டி-மன்றாடி வீட்டிற்கு என்னை சந்திக்க அழைத்து வந்து விடுவாள். ஆனால் இவை அனைத்தும் நடிப்பாகப் பட்டது. மனிதன் அறிவை அடிப்படையாக வைத்து வாழ்க்கையை ஏன் வாழ முடிவதில்லை ? எப்பொழுது பார்த்தாலும் அவனுடைய மனத்தில் ஏதாவது ஆசைகள் ஏழுவது எதனால் ?

‘பிறகு ?’ ஆர்வத்துடன் நான் கேட்டேன்.

அவர் என்னைப் பார்த்தார். அவருடைய முகத்தில் சிறிய நடுக்கம் தெரிந்தது. அவர் சிரித்தவாறே, ‘உங்களுக்கு என்னவென்று சொல்வது. அப்பொழுது தான் நான் ஒரு தவறு செய்தேன். ஒவ்வொரு மனிதனும் சில நேரத்தில் பைத்தியம் போல ஆகி விடுகிறான். மேலும் பைத்தியமாகவே இருக்க விரும்புகிறான்…. நான் விடை பெறத் தயாராக இருந்த வேளையில் திலக்ராஜ் என்னை திட்டி பலவந்தமாக நாற்காலியில் உட்கார வைத்தான். ஹெலன் முதலிலேயே வாசலுக்கு சென்று நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது பார்த்து திலக்ராஜின் மனைவி சமையலறையிலிருந்து ஓடி வந்து, ‘ஐயோ, நீங்க கிளம்பறீங்களா ? இது என்ன கூத்து ? நான் உங்களுக்காவென்றே கடுகுக் கீரை சப்ஜியும் சோளமாவு ரொட்டியும் செய்திருக்கிறேன்’ என்றாள். 

நான் திடுக்கி;ட்டேன். கடுகுக் கீரை சப்ஜியும் சோளமாவு ரொட்டியும் பஞ்சாபிகளுக்கே பிடித்த மனம் விரும்பும் உணவு. 

‘அண்ணி, நீங்களும் சொல்லிக்கிட்டே இருக்கீங்க. முதலிலிருந்தே நிறைய கொடுத்திட்டீங்க. இப்போ நாங்க கிளம்பிட்டோம்…’

‘நான் இத்தனை பேருக்கு மக்கி ரொட்டி எப்படி செய்யறது ? தனியா பண்ணிக்கிட்டிருந்தேனில்ல. உங்களுக்காக கொஞ்சம் செஞ்சேன். உங்களுக்கு கடுகுக் கீரை சப்ஜியும் சோளமாவு ரொட்டியும் ரொம்ப பிடிக்குமுன்னு அவர் சொன்னார்…’

கடுகுக் கீரை சப்ஜியும் சோளமாவு ரொட்டியுமா. நான் ஆர்வத்துடன் திலக்ராஜைப் பார்த்து, ‘டேய் மடையா, எனக்கு ஏண்டா சொல்லல ?’ என்றேன். அதே வேகத்தோடு ஹெலனைப் பார்த்து, ‘வா ஹெலன், அண்ணி கடுகுக் கீரை சப்ஜியும் சோளமாவு ரொட்டியும் பண்ணியிருக்காங்க. சாப்பிட்டுவிட்டு போவோம்.’ என்றேன். 

ஹெலன் எரிச்சலடைந்து விட்டாள். ஆனால், தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, ‘எனக்கு வேண்டாம். உங்களுக்கு வேண்டுமானால் சாப்பிடுங்கள்’ என்றாள். பிறகு, ‘நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன். நாளை இந்த கீரையை சாப்பிடக்கூடாதா?’ என்றாள் மெதுவாக.

கடுகுக் கீரை பேரைக் கேட்டதும் எனக்கு ஆவல் அதிகமாகியது. இன்னொரு புறம் இன்னும் டிரிங்க்ஸ்; போய்க் கொண்டிருந்தது. 

‘அண்ணி நமக்காகவே செய்திருக்கிறார். உனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்றேன்.

பிறகு ஹெலனின் பதிலுக்கு காத்திராமல் சமையலறையிலேயே சாப்பிடும் உத்தேசத்தில் குழந்தையைப் போல ஆர்வம் மேலிட, ‘வாடி, வீணாப் போனவளே. செருப்ப கழட்டி போட்டுட்டு கை கழுவிட்டு வந்து தட்டு பக்கத்துல உட்காரு. ஒரே தட்டுல சாப்பிடலாம்’ என்றேன்.

சுமையலறை சிறிதாக இருந்தது. எங்களுடைய வீட்டிலும் இப்படித்தான் இருக்கும். அம்மா அடுப்படியில் ரொட்டி செய்து கொண்டிருக்க, குழந்தைகள் நாங்கள் பரிமாறப்பட்ட தட்டுகளில் ரொட்டியை பிய்த்துக் கொண்டிருப்போம். 

இருந்தும் இருந்தார் போல மிகவும் பழக்கப்பட்ட ஒரு நிகழ்வ என்னுடைய கண்களுக்கு முன்னே நடந்து கொண்டிருந்தது. நான் மெய் மறந்து அதை பார்த்துக் கொண்டிருந்தேன். அடுப்பிலிருந்து கிளம்பிய நெருப்புக் கனலில் திலக்ராஜின் மனைவியின் காதுகளிலிருந்த ஜிமிக்கி மின்னிக் கொண்டிருந்தது. தங்க முட்களால் ஆன சிவப்பு நாகம் பஞ்சாபிக்களுக்கு அட்டகாசமாக இருக்கும். தவாவில் ஒவ்வொரு முறை ரொட்டி செய்யும்போதும் அவருடைய கை வளைகள் சப்தம் எழுப்புகிறது. மேலும் அவர் தன் இரு கைகளால் சுடச்சுட ரொட்டி செய்து எங்களது தட்டுக்களில் பரிமாறிக்கொண்டிருந்தார்.

இந்த காட்சி பல வருடங்களுக்குப் பிறகு காண நேர்ந்தது. இது கனவை விட மிக அழகான மனதைக் கவர்ந்த காட்சி. நான் ஹெலன் இருப்பதையே மறந்து விட்டேன். வாசற்கதவு பக்கத்தில் தனியாக எனக்காக காத்துக்கொண்டு இருந்தாள். நான் எழுந்து விட்டேனென்றால் கிடைப்பதற்கரிய இந்த இனிய காட்சி தடைப்பட்டு விடும். இந்த அழகான ஓவியம் சுக்கு நூறாக கிழிந்து விடும். ஆனால் திலக்ராஜின் மனைவி அவளை மறக்கவில்லை. அவர் முதல் வேலையாக ஒரு தட்டில் சோளமாவு ரொட்டியும் சிறிது கீரையும் அதன் மேல் சிறிதளவு வெண்ணெயும் வைத்து ஹெலனுக்கு எடுத்துக் கொண்டு போய் தந்து விட்டு வந்தாள். அதன் பிறகும் இடை இடையே ஏதாவது எடுத்து போய்க்கொண்டு இருந்தார்.

உணவு உண்டு முடித்ததும் நாங்கள் சமையலறையிலிருந்து வெளியே வந்து பார்த்தால் ஹெலன் ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு உறங்கிக் கொண்டு இருந்தாள். முன்னாலிருந்த டீபாயில் ரொட்டி அப்படியே இருந்தது. நாங்கள் வரும் சத்தம் கேட்டு கண்கள் திறந்தாள். மேலும் அதே நாகரிகப் புன்னகை பூத்தவாறு எழுந்து நின்றாள். 

விடை பெற்று நாங்கள் வெளியே வந்தோம். நாலாபுறமும் கும்மிருட்டு. தெருக்கோடியில் எங்களுக்கு ஒரு (தாங்கா) குதிரை வண்டி கிடைத்தது. தாங்காவில் சென்று பல வருடங்களாகி விட்டது. ஹெலனுக்கும் தாங்காவில் செல்வது பிடிக்கும் என்று நினைத்தேன். நாங்கள் தாங்காவில் அமர்ந்து வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும்பொழுது வழியில் ஹெலன், ‘இன்னும் எவ்வளவு நாள் ஜாலந்தரில் இருப்பதாக உத்தேசம்.’ என்று கேட்டாள். 

‘ஏன், இப்பொழுதே வெறுப்பு தட்டி விட்டதா என்ன ? இன்று உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடு’ என்றேன். ஹெலன் அமைதியாக இருந்தாள். ஆம் – இல்லை என எதையும் வெளிப்படுத்தவில்லை.

‘பஞ்சாபிகளாகிய நாங்கள் கடுகுக் கீரை சப்ஜிக்காக ஏங்குவோம். இன்று கிடைத்தவுடன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என நினைத்தேன். உனக்கு எப்படி இருந்தது ?’

‘இதோ பாருங்க, நான் திரும்பிப் போகலாம்னு நினைக்கிறேன். உங்களுக்கு எப்ப விருப்பமோ வந்து சேருங்க.’

‘என்ன சொல்கிறாய் ஹெலன். உனக்கு இந்த மக்களை பிடிக்கவில்லையா?’

இந்தியாவிற்கு சென்ற பிறகு ஹெலனும் குழந்தையும் உடன் இல்லையென்றால் நன்றாக சுற்றி இருக்கலாம் என பலமுறை நான் நினைத்ததுண்டு. விடுமுறையை நன்றாக கழித்திருக்க முடியும். ஆனால் நான் தான் மிகவும் வற்புறுத்தி இவர்களை அழைத்துச் சென்றேன். ஹெலன் என்னுடைய நாட்டைப் பார்க்க வேண்டும், என்னுடைய மக்களை சந்திக்க வேண்டும், எங்களுடைய குட்டிப் பெண்ணின் சிந்தனையில் இந்திய கலாச்சாரம் கலக்க வேண்டும் என நான் விரும்பினேன். முடிந்தால் இங்கேயே ஏதாவது வேலை செய்யலாம் என்றும் எண்ணினேன்.

ஹெலனின் நாகரிகம் மிகுந்த இந்த பணிவான குரலில் எனக்கு அழுகைத் தொனி தென்பட்டது. நான் அன்போடு அவளை ஆரத்தழுவ முயன்றேன். அவள் என்னுடைய கைகளை தள்ளி விட்டாள். மீண்டும் அவளை அணைக்க முயற்சி செய்திருக்க வேண்டும், ஆனால் நான் துணுக்குற்றேன். 

‘”நான் எதையும் தவறாகவே நினைக்க மாட்டேன்”- ன்னு பெருமை பீற்றிக்கொள்வாயே. இப்போ ஒரு மணி நேரத்திற்குள்ளே குட்டு வெளிப்பட்டுடுச்சா’ என்றேன்.

(தாங்கா) குதிரை வண்டியிலிருந்து அதிகமாக சத்தம் வந்து கொண்டிருந்தது. பழைய வண்டியாகையால் அதன் அத்தனை பாகங்களும் தளர்ந்து இருந்தன. வண்டியிலிருந்து கிளம்பிய சத்தம் ஹெலனை தொந்தரவு படுத்தியது. கரடு முரடான பள்ளங்கள் நிறைந்த சாலையில் ஹெலன் சமாளித்து உடகார சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.

‘குழந்தையை அழைத்துக் கொண்டு நான் செல்லலாம் என நினைக்கிறேன். நான் இங்கு இருக்கும் வரையிலும் நீங்கள் சுதந்திரமாக இந்த மக்களிடம் பழக முடியாது’ என்ற அவளுடைய குரலில் ஒருவித நடிப்பு தெரிந்தது. கடுகுக் கீரையை புகழ்ந்த பொய்யான அணுகுமுறையை இந்தக் குரலிலும் நான் உணர்ந்தேன்.

‘நீ எப்போ பார்த்தாலும் உம்முன்னு உட்கார்ந்துகிட்டிருக்கே. நான் எவ்வளவு ஆசையா உன்னை என்னுடைய நாட்டை சுற்றிக் காட்ட அழைத்து வந்திருக்கிறேன்.’

‘நீங்கள் உங்களுடைய மனத்தின் பசியைப் போக்க வந்திருக்கிறீhகள். உங்களுடைய நாட்டைக் காட்ட ஒன்றும் என்னை நீங்கள் அழைத்து வரவில்லை’ என உறுதியாக, நிதானமாக, சாந்தமான குரலில் கூறினாள், ‘நானும் உங்களுடைய நாட்டை பார்த்து விட்டேன்.’

எனக்கு சவுக்கைக் கொண்டு அடித்தது போல இருந்தது. 

‘நீ இவ்வளவு வெறுப்பாக பேசுவதற்கு என்னுடைய நாட்டில் அப்படி என்ன கண்டாய் ? எங்கள் நாடு ஏழையாக இருந்தால் என்ன, அது எங்களுடையது.’

‘நான் உங்களுடைய நாட்டைப் பற்றி எதுவும் கூறவில்லை.’

‘உன்னுடைய அமைதியே அத்தனையும் சொல்லி விடுகிறது. எவ்வளவுக்கெவ்வளவு அமைதியாக இருக்கிறாயோ. அத்தனைக்கு விஷமாகப் படுகிறது’ என்றேன்.

அவள் அமைதியாகி விட்டாள். எல்லா இந்தியர்களும் எந்த தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ளனரோ அதே உணர்வால் நான் கூனிக் குறுகலானேன். என்னுடைய கோபத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்த முடியாக விதத்தில் என்னை உள்ளிருந்து யாரோ தடுத்து, ‘போதும், வார்த்தையை வளர்க்காதே. பிறகு வருத்தப்பட வேண்டியதாகிவிடும்’ எனக் கூற முயல்வது போல இருந்தது. ஆனால், என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தேன். இருட்டில் ஹெலன் அழுவதைக் கூட நான் கவனிக்க தவறிவிட்டேன். குதிரை வண்டியின் அதிகரிக்கும் கீச்சு சத்தத்தைப் போலவே என்னுடைய கோபமும் அதிகரித்துக் கொண்டிருந்தது. கடைசியில் வண்டி எங்கள் வீட்டைச் சென்றடைந்தது. வீட்டு விளக்குகளை எரியவிட்டு விட்டு அனைவரும் அவரவர் அறைகளில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். அறைக்கு சென்றதும் ஹெலன் மீண்டும் ஒரு முறை, ‘நீங்கள் ஏதாவது இந்தியப் பெண்ணை திருமணம் செய்திருக்க வேண்டும். என்னிடம் நீங்கள் அடிமைப் போல உணருவதாக நான் நினைக்கிறேன்.’ என்றாள்.

ஹெலன் பார்வையை உயர்த்தி என்னைப் பார்த்தாள். அவளுடைய நீல நிறக் கண்கள் குளிர்ந்த, கடுமையான, உணர்ச்சியற்ற பீங்கானால் செய்யப்பட்டிருப்பதாக நான் உணர்ந்தேன். ‘நீ ஒரு இந்தியனை திருமணம் செய்திருக்கக் கூடாது என ஏன் நேரடியாக சொல்ல மாட்டேன் என்கிறாய் ?’ என்றேன்.

‘என்னை ஏன் குறை கூறுகிறீர்கள் ? நான் அப்படி ஒன்றும் தவறாகக் கூறவில்லை,’ என்று அவள் கூறிக்கொண்டே தடுப்புக்கு அந்தப்புறம் உடை மாற்றிக் கொள்ள சென்று விட்டாள்.

சுவற்றின் ஒரு பக்கத்தில் எங்களுடைய மகள் தூளியில் உறங்கிக் கொண்டிருந்தாள். என்னுடைய பேச்சு சத்தத்தை கேட்டு முனக ஆரம்பித்தாள். ஹெலன் உடனே தடுப்புச் சுவரிலிருந்து வெளிப்பட்டு வேகமாக தூளியினருகில் வந்து குழந்தையை தட்டி தூங்கச் செய்தாள். குழந்தை மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டாள். ஹெலன் மீண்டும் தடுப்புச் சுவரை நோக்கி சென்றாள். அதே நேரத்தில் அந்த தடுப்புச் சுவர் அருகில் சென்ற நான், ‘இந்தியா வந்து இத்தனை நாளில் இன்று தான் சில நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அது உனக்கு பிடிக்கவில்லை. இது போன்ற திருமணம் நாசமாய் போனது’ என்றேன்.

தடுப்புச் சுவருக்கு அந்த பக்கத்திலிருந்து எந்த பதிலும் வராது என்று எனக்குத் தெரியும். குழந்தை தூங்கிக்கொண்டிருந்தால் ஹெலன் சப்தமிடாமல் பதுங்கித்தான் நடப்பாள். இப்பொழுது எங்கே பேசுவாள்.

ஆனால், அவள் அதே சாந்தமான குரலில், ‘உங்களுக்கு என்னைப் பற்றி என்ன கவலை. நீங்கள் உங்களுடைய நண்பனின் மனைவியோடு உல்லாசமாக இருந்தீர்களே.’ என்றாள்.

‘ஹெலன்!’ நெருப்பு வைத்தாற்போல் இருந்தது, ‘என்ன உளறுகிறாய்.’

மிகவும் புனிதமான, மிருதுவான மற்றும் அழகான பொருளை அவள் உடைத்து போட்டாற் போன்ற ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது.

‘நான் என்னுடைய நண்பனின் மனைவியுடன் உல்லாசமாக இருந்ததாகவா நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய் ?’

‘நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என எனக்கு என்ன தெரியும். நீங்கள் அந்தப் பெண்ணைப் பார்த்த விதத்தில்….’

அடுத்த நிமிடம் தடுப்பைத் தாண்டிச் சென்று ஹெலனுடைய முகத்தில் ஒரு அறை விட்டேன். அவள் இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள். ஒரு முறை அவள் என்னை பக்கவாட்டில் கவனித்தாள். ஆனால் அவள் கூப்பாடு போடவில்லை. அறைந்ததில் அவளுடைய தலை தடுப்பில் மோதியது. அவளுடைய நெற்றிப் பொட்டில் காயமேற்பட்டது.

‘கொன்று விடுங்கள். நீங்கள் உங்களுடைய நாட்டிற்கு அழைத்து வந்து இது போன்று என்னிடம் நடந்து கொளவீர்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.’

அவளுடைய வாயிலிருந்து கிளம்பிய இந்த வார்த்தைகள் என்னை நிலை குலையச் செய்தது. ஹெலன் முகத்திலிருந்து கைகளை அப்புறப்படுத்திக் கொண்டாள். அவளுடைய கண்ணத்தில் அடி ஆழமாக விழுந்திருந்தது. ஃப்ராக்கை கழட்டி விட்டு ஷமீஸ் அணிந்து கொள்வதற்காக குனிந்தவாறு நின்று கொண்டிருந்தாள். அவளுடைய தங்க நிற முடிக்கற்றைகள் கலைந்து அவளுடைய முகத்தை மறைத்துக் கொண்டிருந்தன.

நான் என்ன இப்படி செய்து விட்டேன் ? எனக்கு என்னவாயிற்று ? நான் கண்களை அகற்றி அவளைப் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தேன். என்னுடைய உடல் சக்தியற்று இருப்பது போல் உணர்ந்தேன். மன வருத்தத்தையும் வலியையும் வெளிப்படுத்த சரியான வார்த்தைகள் கிடைக்காமல் அழுகையை வெளிக்கொணரும் விதமாக என்னுடைய வாயிலிருந்து கேவல் சத்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது. நான் தடுப்பைத் தாண்டி வெளியில் முற்றத்திற்கு வந்து விட்டேன்.  

இது நடந்து மூன்று நாட்களில் நாங்கள் இந்தியாவை விட்டு கிளம்பி விட்டோம். இனிமேல் திரும்பி வரக்கூடாது என்று மனத்திற்குள்ளே ஒரு வைராக்கியம் தோன்றியது. அன்று வந்தது தான், மீண்டும் செல்லவேயில்லை…

மாடிப்படிகளில் காலடி சத்தம் வந்தது. அதே நேரத்தில் ஹெலனும் சமையலறையிலிருந்து ஏப்ரன் அணிந்தவாறு வந்து சேர்ந்தார். மாடிப்படிகள் இருந்த பக்கத்திலிருந்து சிரிப்பு சத்தத்துடன் படிகள் ஏறி வரும் காலடிச் சத்தமும் வந்தது. வேகமாக கதவு திறக்கப்பட்டு இரண்டு இளம் பெண்கள், லால் ஐயாவினுடைய மகள்கள், மூச்சிறைத்தவாறு அறைக்குள் பிரவேசித்தார்கள். பெரிய பெண் நல்ல உயரம், கரிய கூந்தல் மற்றும் கருஞ்சிவப்பு நிறக் கண்கள். சிறியவளுடைய கைகளில் புத்தகங்கள், மாநிறம் மற்றும் நீலநிறக் கண்கள். இருவரும் மாறி-மாறி அப்பா-அம்மாவிற்கு முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். பிறகு மேஜை மீதிருந்த கேக் துண்டுகளை எடுத்து சாப்பிட்டனர். அவர்களுடைய அம்மாவும் நாற்காலியில் அமர்ந்ததும் இரு மகள்களும் நாள் முழுவதும் நடந்த சிறு-சிறு நிகழ்ச்சிகளை தன் மொழியில் விவரிக்கலாயினர். வீடு முழுவதும் அவர்களுடைய சிரிப்பொலி நிரம்பியிருந்தது. நான் லாலைப் பார்த்தேன். அவருடைய கண்களில் உணர்வுகள் இருந்த இடத்தை அன்பு ஆக்கிரமித்திருந்தது.

‘இந்த மனிதர் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார். இவரும் ஜாலந்தரைச் சேர்ந்தவர்.’

பெரிய மகள் புன்னகை புரிந்தவாறே என்னை நமஸ்கரித்தாள். பிறகு செல்லமாக, ‘ஜாலந்தர் ரொம்ப மாறிப்போயிருக்குமில்ல. நான் அங்க போயிருக்கும்போது மிகவும் பழமையானதா இருந்தது, இல்லம்மா ?’ என்றவாறு சத்தமாக சிரித்தாள். 

லாலுடைய கடந்த காலம் எப்படி இருந்ததோ, அவருடைய நிகழ்காலம் மிகவும் சிறப்பானதாக அழகாக அமைந்து விட்டது. 

அவர் என்னை என்னுடைய ஓட்டல் வரை விட வந்திருந்தார். கடற்கரையோரம் இனிய மாலை நேரத்தில் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே நீண்ட நேரம் நடந்து கொண்டிருந்தோம். அவர் தன்னுடைய நகரத்தைப் பற்றி, தன்னுடைய தொழிலைப் பற்றி, இந்த நகரத்தில் அவர் அடைந்த இலட்சியங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தார். அவர் திறமையான புத்திசாலியான மனிதராக மாறியிருந்தார். வரும் வழியில் பல பேர் அவரைப் பார்த்து மரியாதையோடு வணங்கிச் சென்றனர். அவருக்கு ஊரில் நல்ல மரியாதை எனத் தெரிந்தது. இவருடைய உண்மையான ஆளுமையைப் பற்றி எனக்கு மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. ஒரு புறம் இவருடைய மனத்தில் தன் நாட்டைப் பற்றிய மிக உயர்ந்த எண்ணம் இருந்தது என்றால் மறுபுறத்தில் ஒரு வெற்றிகரமான மற்றும் புகழ்வாய்ந்த என்ஜினியராக தன் நாட்டை விட்டு இவ்வளவு தூரம் வந்து இந்த ஊரில் இவர் தன் சொந்த உழைப்பில் சாதித்தது மிக அருமையானது. 

விடை பெறும்போது அவர் மீண்டும் என்னை அணைத்துக் கொண்டார். நீண்ட நேரம் என்னை அவர் அணைத்தவாறே இருந்தார். மீண்டும் அவர் உணர்ச்சிகளின் வசம் சென்று கொண்டிருக்கிறார் எனத் தெரிந்தது. அவர் மீண்டும் புழங்காகித நிலையை அடைந்து கொண்டிருந்தார்.

‘எனக்கு எந்த ஒரு குறையும் இல்லை. வாழ்க்கை என் மீது மிகுந்த கருணை காட்டியிருக்கிறது. அப்படி குறை இருக்கிறது என்றால் அது என்னிடம் தான்…’ பிறகு சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர் சிரித்தவாறே, ‘ஆம், ஒரு ஆசை மட்டும் என்னுடைய மனதிலிருந்து அகலவேயில்லை. இந்த முதிய வயதிலும் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது எங்கிருந்தாவது ‘டேய் தரங்கெட்டவனே’ என்று குரல் வராதா, நான் போய் அவனை கட்டிப்பிடித்துக்கொள்ள மாட்டேனா’ என்று கூறிக் கொண்டிருந்த அவருடைய குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது.

***

குறிப்பு: பீஷ்ம சாஹ்நியின் வாழ்க்கை பற்றிய ஓர் ஆவணப் படம் ப்ரசார் பாரதியின் ஒளிபரப்பில் கிட்டுகிறது. அது இங்கே: https://www.youtube.com/watch?v=OFYvcY1yhck

Series Navigation<< இருள்தபால் பெட்டி >>

4 Replies to “டேய் தரங்கெட்டவனே!”

  1. பீஷ்ம் சஹானியின் அற்புதமான கதை. நல்ல மொழிபெயர்ப்பு. கதாசிரியரின் ‘தமஸ்’ கோவிந்த் நிஹலானியின் கைவண்ணத்தில் தொலைக்காட்சிப் படமாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது நினைவு வருகிறது,,

  2. நம் குடும்பம், தாய் தந்தை, சகோதர உறவுகள் மற்றும் நம் நண்பர்கள் என்றும் மறவா நம் இளமைப் பருவ நினைவுகள் யாவுமே என்றென்றும் நினைத்தாலே இனிக்கும். வாலிப ஓட்டங்கள் மற்றும் இல்லற வாழ்வின் இன்பங்களும் கடமைகளும் கனிந்து ஓடும்போது முதுமை நரையின் சோகம் நம்மை தனிமைகளில் கொல்லும் போது நம் ஆறுதல் என்பதே நம் கிராம், பெற்றோர், உறவுகள், இளம்பருவ கபடமற்ற நண்பர்களின் நினைவுகளே. அதுவும் நம் நாடு தாண்டி எங்கோ நிலைத்துவிட்டால் நம் நாட்டுப் பற்றும் மண்வாசமும் பேராவல் கொண்டேங்கும் பெரும் ஏக்கங்கள் என்பதை இக்கதையின் மூலம் உணர்வுபூர்வமாக வடித்துள்ளார் எழுத்தாளர். ஜாலந்தரின் மண்வாசம் அதன் ஆழ்ந்த பண்பாடுகளுடன் பின்னிப்பிணைந்து உள்ளதை படம்பிடித்துக் காட்டியுள்ளார். தமிழிலான சவாலான, தரமான மொழிபெயர்ப்பு மிக நேர்த்தியாக அமைந்துள்ளது மனமார்ந்த பாராட்டுக்குரியது. தமிழ் எழுத்துலகம் முனைவர் இரா. கோபாலக்கிருஷ்ணன் அவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பைத் தருவதாகவே இம்மொழி பெயர்ப்பு அமைந்தது பாராட்டுக்குரியது. வாழ்க… வளர்க…
    அன்பு சால்
    சுந்தர இரவிக்குமார்
    உயிரியல் துறைத்தலைவர்
    அரசு கல்வியியல் கல்லூரி
    வேலூர், தமிழ்நாடு.

Leave a Reply to BamaraniCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.